World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைNew Sri Lankan parliament descends into chaos இலங்கையின் புதிய பாராளுமன்றம் பெருங்குழப்பத்தில் மூழ்கியது By K. Ratnayake இலங்கையில் கடந்த வியாழன் அன்று ஆரம்பமான புதிய பாராளுமன்றம், ஆழும் செல்வந்தத்தட்டுக்களை சிதைக்கும் ஆழமான பிளவுகளை மீண்டும் அம்பலப்படுத்தியது. வழமைபோல் சபாநாயகரைத் தெரிவு செய்யக் கூடிய பாராளுமன்றம், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பையும் (ஐ.ம.சு.கூ) எதிர் கட்சியான ஐக்கிய தேசிய முன்னணியும் (ஐ.தே.மு) பதவிக்காக போராடியதால் பெருங்குழப்பத்தில் மூழ்கியது. ஒன்பது மணித்தியாலத்திற்கு அதிகமாகவும் மூன்று சுற்றுக்களாகவும் நடந்த வாக்களிப்பில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளருமான டீ.ஈ.டபிள்யூ. குணசேகர, ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் டபிள்யூ.ஜே.எம் லொக்குபண்டாரவிடம், ஒரு வாக்கால் தோல்வியுற்றார். இந்த வாக்களிப்பு, பெப்ரவரியில் முன்னைய ஐ.தே.மு அரசாங்கத்தை எதேச்சதிகாரமான முறையில் பதவி விலக்கிய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு ஒரு தீர்க்கமான பரீட்சையாக இருந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது (ஐ.ம.சு.கூ) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் பல சிறு கட்சிகளின் கூட்டணியாகும். இக்கூட்டமைப்பு ஏப்பிரல் 2 தேர்தலில், 225 பாராளுமன்ற ஆசனங்களில் 105 ஆசனங்களை மாத்திரமே வென்றது. முதலாவது பாராளுமன்றக் கூட்டத்திற்கு முன்னதாக, அரசாங்க மற்றும் எதிர்க் கட்சிகள் இரண்டும் பெரும்பான்மையை தக்கவைத்துக் கொள்வதற்காக வெறித்தனமான பேரம் பேசல்களில் ஈடுபட்டிருந்தன. ஜனாதிபதியும் மற்றும் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஸ்ரீ.ல.மு.கா) மற்றும் ஜாதிக ஹெல உறுமய (ஜே.எச்.யூ) உட்பட பல சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற முயற்சித்தனர். எவ்வாறெனினும், நாட்டின் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அடிப்படையாகக் கொண்ட இ.தொ.கா மற்றும் ஸ்ரீ.ல.மு.கா வும் சிங்களப் பேரினவாத ஜே.வி.பி யை உள்ளடக்கிய கூட்டமைப்பில் சேர்வதை விரும்பவில்லை. பெளத்த பிக்குகளை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்த மற்றும் சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசுக்காக பகிரங்கமாக வக்காலத்து வாங்கிய ஜாதிக ஹெல உறுமய (ஜே.எச்.யூ), சுதந்திரக் கூட்டமைப்பில் சேர மறுத்த போதிலும், அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆரவளிக்க உடன்பட்டது. ஹெல உறுமய கட்சியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் "காணாமல் போனமை," ஏற்பாடுகளுக்கு பின்னால் இருந்த இரக்கமற்ற சூழ்ச்சிகளுக்கு அறிகுறியாக இருந்தது. கடந்த புதன் கிழமை, ஹெல உறுமய தலைவர்களை சாந்தப்படுத்துவதற்காக கட்சியின் அலுவலகத்திற்கு தானாகவே விஜயம் செய்த குமாரதுங்க, காணாமல் போன இருவரையும் ஸ்ரீ.ல.சு.க தலைவர்களில் ஒருவர் வைத்திருப்பதாக கூறும் வதந்திகளை மறுதலித்தார். சரிசமமாக பிரிபட்டிருந்த பாராளுமன்றத்திற்கான சபாநாயகரை தெரிவு செய்யும் தேர்தலில், குறிப்பிடத்தக்க விடயங்கள் இடரார்ந்த நிலையில் இருந்தன. இரு சாராரும் சமமான வாக்குகளை பெற்றிருக்கும்போது சபாநாயகர் தனது வாக்கை பயன்படுத்த முடியும். குறிப்பாக, ஜனாதிபதிக்கு எதிரான ஒரு குற்றப் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், அதை செல்லுபடியானதாக்குவதற்காக உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புவது பற்றி தீர்மானிப்பது சபாநாயகரேயாகும். அவர், பொலிஸ், பொதுத்துறை, நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் காரியாலயத்தையும் மேற்பார்வை செய்யும் ஒரு தொகை அதிகாரம் படைத்த ஆணையகங்களுக்கு நியமனங்களை வழங்கும் அரசியலமைப்புச் சபையின் தலைவராகவும் இருப்பார். குமாரதுங்க, சிறுபான்மைக் கட்சிகளுக்கு சாதகமாக விளங்கும் தற்போதைய விகிதாசார தேர்தல் முறை உட்பட அரசியலமைப்பை திருத்த முயற்சிக்கின்றார். சக்திவாய்ந்த மற்றும் பொதுமக்களால் வெறுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஓழிக்கும் போர்வையின் கீழ், அவர் தன்னை பிரதமராக்கிக்கொள்ளவும் முயற்சிக்கின்றார். பாராளுமன்றம் ஒரு அரசியலமைப்பு சபையாக மாற்றம் பெறுமாயின், சபாநாயகர் அதன் தலைவராவதோடு, நடவடிக்கைகளுக்கு கட்டளையிடும் பரந்த அதிகாரங்களையும் அவர் கொண்டிருப்பார். ஐ.தே.மு மற்றும் பல சிறுபான்மைக் கட்சிகளும் அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்க்கின்றன. இந்த பதட்டங்கள் வியாழக்கிழமை பாராளுமன்றக் கூட்டத்தில் தலைநீட்டின. சபாநாயகருக்கான முதல் சுற்று வாக்கெடுப்பு வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததை அடுத்து பாராளுமன்றத்தில் பெருங்கூச்சல் ஏற்பட்டது. "காணாமல் போயிருந்த" இரு ஹெல உறுமய பிக்குகளும் பாராளுமன்றத்தில் மீண்டும் தோன்றி அரசாங்கத்துடன் சேர்ந்து வெளிப்படையாக வாக்களித்தனர். அரசாங்கத்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், எஞ்சியிருந்த ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்களின் நடுநிலை நிலைப்பாட்டை கைவிடுமாறு வற்புறுத்தினர். இம்முயற்சி தோல்வியடைந்தவுடன், ஹெல உறுமய பிக்குகளை திட்டிய சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்கள் மீது புத்தகங்களை வீசியெறிந்ததோடு, எதிர்க் கட்சியினர் வாக்களிப்பதை தடுப்பதற்காக வாக்குப்பெட்டியை சூழ்ந்துகொண்டனர். இரண்டாவது சுற்று, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களின் குறியிடப்பட்ட வாக்குச்சீட்டுக்களை ஐ.தே.மு தலைவர்களுக்கு காட்டியதை சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்த்ததை அடுத்து பெறுமதியற்றதாக பிரகடனம் செய்யப்பட்டது. மூன்றாவதும் இறுதியுமான சுற்றில், ஹெல உறுமய அதன் இரண்டு ஓடுகாலிகளின் வாக்குகளை "பயனற்றதாக்குவதற்காக", தனது இரு உறுப்பினர்களை எதிர்க்கட்சிக்கு வாக்களிக்குமாறு பணித்தது. ஸ்ரீ.ல.மு.கா, இ.தொ.கா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பும், லொக்கு பண்டாரவை பதவியில் இருத்துவதற்காக ஐ.தே.மு விற்கு வாக்களித்தன. வெள்ளிக்கிழமை த ஐலண்ட் பத்திரிகையில் "லஜ்ஜா" (வெட்கம்) எனத் தலைப்பிடப்பட்டிருந்த ஆசிரிய தலையங்கம், ஆளும் வட்டாரத்திற்குள்ளேயான பெரும் எரிச்சலை பிரதிபலித்தது. பாராளுமன்ற ஒழுங்கீனத்தைப் பற்றி புலம்பிய அது, "ஒழுக்கமான முறையில் தமது சபாநாயகரை தேர்வுசெய்ய முடியாத சட்ட வகுப்பாளர்களின் குழுவிடம் மக்களின் முடிவை கட்டுப்படுத்தும் பணியை எவ்வாறு நம்பி ஒப்படைக்க முடியும்?... மூன்று வாரங்களுக்கு முன்னர் புதிய அரசியல் கலாச்சாரத்தை பின்பற்றுவதாக உறுதியாக வாக்குறுதியளித்த இதே அரசியல்வாதிகளால், இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் அருவருக்கத்தக்க நிகழ்வுகளுடன் ஒரு புதிய வழக்கம் ஆரம்பித்துவைக்கப்பட்டமை மிகப்பெரும் மோசடியாகும்," என பிரகடனம் செய்துள்ளது. எவ்வாறெனினும், பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை, எளிய வழிவகைகளுக்கும் மேலானவற்றை பிரதிபலித்தது. பெரு வர்த்தகர்கள் மற்றும் பெரும் வல்லரசுகளின் அழுத்தத்தின் கீழ், முன்னைய ஐ.தே.மு அரசாங்கம், தீவை வெளிநாட்டு மூலதனத்திற்காக ஒரு புதிய மலிவு உழைப்பு மேடையாக மாற்றும் இலக்குடன் விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தது. ஆயினும், "சமாதான முன்னெடுப்புகள்", கொழும்பில் உள்ள முழு அரசியல் நிறுவனத்தையும் ஆழமான ஸ்திரமற்ற நிலைமைக்குள் தள்ளியது. கொழும்பு அரசியல் நிறுவனம், உழைக்கும் மக்களை இனவாத அடைப்படையில் பிளவுபடுத்துவதன் மூலம் தமது ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக தசாப்த காலங்களாக சிங்களப் பேரினவாதத்துடன் அணிதிரண்டு வந்துள்ளது. ஐ.தே.மு, விடுதலைப் புலிகளுக்கு அளவுக்கு மிஞ்சிய சலுகைகளை வழங்குவதன் மூலம் தேசியப் பாதுகாப்பை கீழறுப்பதாக அவர்கள் மீது குற்றம் சாட்டிய குமாரதுங்க, கடந்த நவம்பரில், ஜே.வி.பி மற்றும் இராணுவத்தின் தூண்டுதலால், பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று அமைச்சுக்களின் கட்டுப்பாட்டை அபகரித்தார். சமரசத்திற்கான முயற்சிகள் தோல்விகண்டதை அடுத்து, அவர் அரசாங்கத்தை பதவி விலக்கினார். ஆனால் இப்போது, முன்னைய அரசாங்கத்தைப் போலவே, கையாளமுடியாத தர்மசங்கடங்களை ஜனாதிபதி எதிர்கொண்டுள்ளார்: தான் தங்கியிருக்கும் சிங்களப் பேரினவாத அமைப்புக்களின் எதிர்ப்புகளின்றி விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்துவது எப்படி? மக்களால் கடுமையாக வெறுக்கப்பட்ட பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்தை அமுல்படுத்துவது எப்படி? எல்லாவற்றுக்கும் மேலாக, சுதந்திரக் கூட்டமைப்பின் நிலைமை பலவீனமாக உள்ளது. சபாநாயகருக்கான வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து, ஒரு துணிவுமிக்க முகத்தை காட்ட முயற்சித்த ஸ்ரீ.ல.சு.க பொதுச் செயலாளர் மைத்ரிபால சிறிசேன, "அது அரசாங்கத்தின் ஸ்திரநிலைமைக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது" என பிரகடனம் செய்தார். அவரும் ஜே.வி.பி தலைவர் விமல் வீரவன்சவும், ஐ.தே.மு விடுதலைப் புலிகளுக்கு சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளில் தங்கியிருப்பதாக ஐ.தே.மு வை இனவாத வசனங்களில் கண்டனம் செய்ததோடு, ஹெல உறுமய கட்சியை "ஐ.தே.மு ஏஜன்டுகள்" எனவும் முத்திரை குத்தினார். அரசாங்கம், ஹெல உறுமய கட்சியை தாக்குவதன் மூலம், நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாகவும் அவ்வண்ணம் நம்பிக்கையில்லா பிரேரணைகளில் வாக்களிப்பதை தவிர்ப்பதாகவும் வாக்குறுதியளித்த ஒரு பாராளுமன்றக் குழுவை கீழறுக்கின்றது. நேற்றைய பத்திரிகையாளர் மாநாட்டில், சுதந்திரக் கூட்டமைப்பு தம்மை பணத்திற்கு இணங்கச் செய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய ஹெல உறுமய தலைவர்கள், தமது அமைப்பு மீதான அவர்களின் "முறைகேடான போக்கின்" விளைவு, அரசாங்கத்திற்கான எமது ஆதரவை இழப்பதாக அமையும் என எச்சரிக்கை செய்தனர். ஹெல உறுமய அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆதரித்தாலும் கூட, கடந்த இரண்டு வாரகால சம்பவங்கள் பெருமளவில் ஸ்திரமற்ற அமைப்பையே வெளிப்படுத்துகின்றன. ஹெல உறுமய கட்சியின் நிர்வாகக் குழு, கட்சியின் ஒழுங்கைப் பின்பற்றத் தவறிய இரு பிக்குகளையும் வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. சுதந்திரக் கூட்டமைப்பும் பிளவடைந்துள்ளது. தேர்தலை அடுத்து உடனடியாக ஜே.வி.பி க்கும் ஸ்ரீ.ல.சு.க வுக்கும் இடையில் அமைச்சுக்களை வழங்குவது சம்பந்தமாக கூர்மையான வேறுபாடுகள் தோன்றின. குமாரதுங்க, ஒரு மிகப்பெரும் அமைச்சரவையை நியமித்து, ஜே.வி.பி க்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் இருந்து முக்கிய பொறுப்புக்களை அகற்றியதன் மூலம் ஜே.வி.பி யை ஓரங்கட்ட முனைந்தார். ஜே.வி.பி அமைச்சரவையில் இணையப்போவதில்லை என பிரகடனப்படுத்தியதன் மூலம் பிரதிபலித்தது. உடன்பாடுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் ஜே.வி.பி அமைச்சர்கள் யாரும் பதவிப் பிரமானம் செய்துகொள்ளவில்லை. ஐ.தே.மு வைப் பொறுத்தவரையில், சமரசத்திற்கான மனப்பாங்கு கிடையாது. தாம் இப்போது அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் நிலையில் இருப்பதாக பிரகடனம் செய்த அதன் தலைரவகள், வியாழக்கிழமை வெற்றியைக் கொண்டாடுவதில் ஈடுபட்டனர். முன்னாள் ஐ.தே.மு அமைச்சர், "அவர்கள் எங்கள் தயவில்தான் இருக்கிறார்கள்... கூட்டணி தலைவர்கள் எங்களோடு ஒத்துழைக்க வேண்டும் வேறு வழி இல்லை என்றனர்." அதன் நம்பிக்கையிழந்த தலையங்கத்தின் முடிவில், ஐலண்ட் செய்தித்தாளானது, தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள ஒரே வழி பிரதான கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற அதன் நீண்ட நாளைய வேண்டுகோளை திரும்பக் கூறியது. பாராளுமன்ற நடவடிக்கைகளை கண்டித்த பின்னர், அது குறிப்பிட்டது, இன்னும் சொல்லப்போனால் குறிப்பாக சுட்டிக்காட்டியது: "ஐ.ம.சு.கூ மற்றும் ஐ.தே.மு ஏதாவது கற்றுக்கொள்ள விரும்பினால் ஒரு படிப்பினை இருக்கிறது: அது நாட்டிற்காக ஒத்துழைப்பது ஆகும்." ஆயினும், தொழிலாள வர்க்கத்தை பொறுத்தவரை, செய்தியானது மிகவும் கொடுமை வாய்ந்தது. பாராளுமன்ற ஆட்சிமுறை வடிவங்களின் உடைவானது ஆளும் வர்க்கத்தின் செயற்பட்டியலை திணிப்பதற்கான எதேச்சாதிகார வழிமுறைகளுக்கு வழி அமைப்பதாகும். அமைச்சகங்களை கைப்பற்றி அரசாங்கத்தை நீக்குதலில், ஜனநாயக விதிமுறைகளை விலக்குவதற்கான தனது விருப்பத்தை குமாரதுங்க ஏற்கனவே எடுத்துக்காட்டியுள்ளார். ஒரு நீண்ட பாராளுமன்ற நெருக்கடியானது ஆளும் செல்வந்தத்தட்டுக்கள், இராணுவ மற்றும் அரசு எந்திரத்தின் அடிப்படையில், எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாளர்களுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் எதிராக திருப்பிவிடப்படும் பாராளுமன்றத்திற்கு புறம்பான நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை மட்டுமே காணும். |