World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் : உலக பொருளாதாரம் Marxism and the political economy of Paul Sweezy Part 3: The breakdown theory மார்க்சியமும், போல் ஸ்வீசியின் அரசியல் பொருளாதாரமும் பகுதி-3 : தத்துவத்தின் நிலைமுறிவு By Nick Beams இக்கட்டுரை உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவைச் சேர்ந்த, நிக் பீம்ஸ், தீவிர அரசியல் பொருளாதார நிபுணர் போல் ஸ்வீசியின் வாழ்வு, படைப்புக்கள் பற்றி எழுதியுள்ள தொடர் கட்டுரைகளில் மூன்றாவது ஆகும். போல் ஸ்வீசி Monthly Review இன் நிறுவனர்-ஆசிரியராக இருந்து, 2004 பெப்ரவரி 27 அன்று, நியூயோர்க், லார்ஷ்மன்டில் காலமானார். 1930 களில் பொருளாதாரத் துறையின் அறிவுஜீவித சூழ்நிலை, எல்லாவற்றிற்கும் மேலாகப் பெரு மந்தநிலையின் (Great Depression) பேரழிவு, அதன்பின் அதை விவரித்து ஜோன் மேனார்ட் கீன்ஸ், (John Maynard Keynes) எழுதி 1936ல் வெளியிட்ட நூலான பணம், வட்டி மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய பொதுக் கோட்பாடு என்ற இரண்டினாலும் பெரிதும் உருவமைக்கப்பட்டது. அப்பொழுதுதான் நடந்து முடிந்திருந்த நிலைமுறிவு கோட்பாட்டை நிராகரித்த பொருளாதார மரபுத்தன்மை போன்றவற்றை கீன்ஸ் கவனத்திற்கு எடுத்திருந்தார். தாக்கம்மிக்க தேவை (Demand) போதாமல் இருந்தால், பொருளாதாரம் முழுவேலையை வழங்குவதற்கு குறைந்த மட்டத்தில் இயக்கும் நிலைமைகள் அபிவிருத்தியடையும் என்று அவர் விளக்கியிருந்தார். கீன்சிய பொருளாதாரக் கோட்பாட்டின் அதிகரிக்கும் கவர்ச்சி, முதலாளித்துவ முறையின் நெருக்கடிகளுக்கு காரணம் "குறை நுகர்வு முறை" என்று அழைக்கப்பட்ட விளக்கங்கள்பால் மீண்டும் கவனம் அதிகரிப்பதை கண்டுகொண்டது. இந்த தத்துவங்கள், முதலில் பிரெஞ்சு வரலாற்றாசிரியர் சிஸ்மொண்டியினால் (1773-1842) நெப்போலிய போர்களின்போது, வர்த்தக வட்டத்தில் முதல் பெரும் சரிவுநிலை தோன்றியபோது முன் வைக்கப்பட்டதுடன், இலாபத் திரட்சி என்றால், முதலாளித்துவ தொழிற்துறையின் உற்பத்திப் பொருட்களால் உருவாக்கப்படும் இறுதிச் சந்தையில் உள்ள ஊதியம் பெறும் தொழிலாளர்களின் நுகர்வினால் கட்டுப்படுத்தப்படுவதால் பொருளாதாரம் நெருக்கடிகளுக்கு உட்படும் என்று கூறிய கருத்துக்கள் அவ்வப்பொழுது தலைதூக்கின. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், 19ம் நூற்றாண்டின் ஆங்கிலப் பொருளாதாரவாதி மால்தூஸ் (Malthus-1766-1834), அடம் ஸ்மித்தினால் பொருளாதார முறையில் உற்பத்தி செய்யாதவர்கள் என்று வரையறுக்கப்பட்ட நில உரிமையாளர்கள், தங்கள் வருமானத்தை வாடகையில் இருந்து பெற்றிருந்த சமய குருமார்கள், அல்லது எல்லா அரசாங்க அதிகாரிகள் போன்ற சமூக வர்க்கங்களை உற்பத்தியற்றவர்கள் என பாதுகாக்க முன்வந்தார். இந்த வர்க்கத்தினர் உற்பத்தி செய்யாமல் செலவழித்தாலும், முதலாளித்துவ பொருளாதாரத்தை தொடர்ந்து பராமரிப்பதற்கு முக்கியமான சமூக பங்கினை செய்து வந்தனர் என்பது மால்துஸின் கருத்து ஆகும். கீன்ஸின் கோட்பாடும் இந்த மரபில்தான் அடித்தளமிட்டிருந்தது. சுதந்திர சந்தை முறையினால் இயல்பாகவே உறுதியளிக்கமுடியாத முழுவேலை நிலையை அளிக்கும் பங்கை, அரசு கொள்ளவேண்டும் என்பதே அது. இவருடைய தத்துவங்கள், "இடது" பொருளாதாரவாதிகளுக்கும், தங்களைத் தாங்களே மார்க்சிசவாதிகள் என்று அழைத்துக் கொள்ளுபவர்களுக்கும் பெரும் கவர்ச்சிகரமாக இருந்தது; ஏனெனில் இத்தத்துவம், அரசு கூடுதலான பொருளாதராரப் பணிகளை பரந்து ஏற்றுக்கொள்ளுவது சீர்திருத்தவாத வேலைதிட்டங்களுக்கு வழிவகுத்து, இறுதியில் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் "உயர் நிலையை"க் கைப்பற்ற இட்டுச்செல்லும் என்பது அவர்கள் எண்ணம். இந்த அறிவுஜீவித சூழ்நிலை, ஸ்வீசியின் பார்வையை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்கை உறுதியாகக் கொண்டிருந்தது. பின்னர் அவர் விளக்குவதுபோல்: "கீன்ஸினாலும், அவருடைய பொதுதத்துவத்தினாலும் என்னுடைய தலைமுறையினர் அனைவரையும் போலவே நானும் பெரிதும் செல்வாக்கிற்கு ஆளானேன்."[13] எந்த அளவிற்கு, மார்க்சின் இலாபவிகித வீழ்ச்சி பற்றிய அவரது விமர்சனத்தை பொறுத்தவரையில் இந்தப் படர்ந்திருந்த செல்வாக்கு அவரைப் பாதித்தது என்பதைப் பற்றி நாம் நிச்சயமாகக் கூறமுடியாது. ஆனால் இந்தப்போக்கின் செயல்பட்டினால் முதலாளித்துவத்தின் "நிலைமுறிவு" (breakdown) பற்றிய எந்தவொரு ஆய்வையும் ஸ்வீசி எதிர்த்தார் என்பது பற்றி மட்டும் உறுதியாகக் கூறமுடியும். அடிப்படை முரண்பாடுகள் "நிலைமுறிவு" தத்துவம், கடந்த நூற்றாண்டு முழுவதும் வரலாற்று முன்னோக்கில் பல கருத்து வேறுபாடுகளின் மையத்தானமாக உள்ளது. 1890 களின் கடைசிப் பகுதியில், ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியுடைய (SPD) முக்கிய தலைவர்களில் ஒருவரான எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் மார்க்சின் நிலைமுறிவு தத்துவம் சம்பவங்களால் மறுக்கப்பட்டுள்ளது என்ற வாதத்தைக் கொண்டு மார்க்ஸ் மீதான தன்னுடைய தாக்குதலைத் தொடங்கினார். வணிகக் குழுமங்களின் (cartels) வளர்ச்சியும் கடன்முறையும், முதலாளித்துவத்திற்கு ஒரு புதிய ஸ்திரத்தன்மையை கொடுத்துள்ளன என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். சமூக ஜனநாயகக் கட்சியுடைய முன்னணி தத்துவவாதியான கார்ல் கவுட்ஸ்கி, மார்க்ஸ் அத்தகைய தத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை என வலியுறுத்திய முறையில் பேர்ன்ஸ்டைனுக்குப் பதில் அளித்தார். ஆனால் ரோசலக்ஸம்பேர்க் பேர்ன்ஸ்டைனுடைய அறைகூவலை நேருக்கு நேர் மோதத் தயாரானார். இவருடைய மிகச் சிறந்த துண்டுப் பிரசுரமான சீர்திருத்தமா புரட்சியா என்பதில், ஒன்றில் அதன் பொறிவிற்கு இட்டுச்செல்லும், முதலாளித்துவ அமைப்பின் உள் முரண்பாடுகளின் விளைவாக சோசலிச மாற்றம் இருக்கும் அல்லது பேர்ன்ஸ்டைன் குறிப்பிட்டுள்ள "ஏற்று இயைந்துபோகும் வழிவகைகள்" ஒரு நிலைமுறிவைத் தடுக்கக் கூடும் என்று வாதிட்டார். அதுதான் விடயம் எனில், முதலாளித்துவம் காலவரையின்றி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும், சோசலிசம் ஒரு வரலாற்றுத் தேவையாக இருக்காது. மூலதனத்தின் திரட்சி (The Accumulation of Capital) என்ற தன்னுடைய 1913 ல் வெளியிடப்பட்ட நூலில் ரோசலக்சம்பேர்க், உபரி மதிப்பை "அடையும் முறையில்" முதலாளித்துவ நிலைமுறிதலுக்கான அடிப்படை உள்ளது என்பதை ஸ்தாபிக்க முற்பட்டார். மூலதனம் இரண்டாம் பகுதியில் மூலதனத்தை பற்றி ஆராயும்போது, ஒரு சமுதாயம் முதலாளிகளையும், தொழிலாளர்களையும் மட்டுமே கொண்டிருக்கிறது என்ற கருத்தை மார்க்ஸ் கூறியது தவறு என்று வலியுறுத்தினார். ஏனெனில் அவ்வாறு இருக்குமேயாயின், உற்பத்திமுறையிலிருந்து வெளிவரும் பொருள்களிலிருந்து உபரிமதிப்பை அடைய முடியாது. பொருட்கள் விற்கப்படும் முதலாளித்துவமில்லாத சந்தைகளை நம்பி இருப்பதையும் கருத்திற்கொண்டுதான் உபரி மதிப்பு அடையப்பெறும் என்றும் அவர் கூறினார். ஆனால் உலகெங்கிலும் முதலாளித்துவம் பரவியதும், ஏகாதிபத்தியத்தின் அபிவிருத்தியும் முதலாளித்துவம் இல்லாத பிராந்தியங்கள் இறுதியில் முதலாளித்துவச் சந்தை முறையில் சேர்க்கப்பட்டுவிடும் ஆதலின், இது ஸ்திரமற்ற தன்மையினால் இறுதியில் ஏற்படும் நிலைமுறிவின் பாதிப்பினால் உபரி மதிப்பைப் பெற முடியாமல் செய்துவிடும். லக்சம்பேர்க்கின் தத்துவம் பற்றி முழுமையாக எழுத இந்த இடம் பொருத்தமற்றது; அதைப்பற்றி பல கண்ணோட்டங்களிலும் பலர் எதிர்த்துள்ளனர். அவருடைய ஆய்வில் அடிப்படைக் குறை, முதலாளித்துவ நிறுவனங்கள், ஏற்கனவே அடையப்பட்டுள்ள உபரி மதிப்பில் புதிய முதலீட்டின் பங்கைப் புறக்கணிப்பது ஆகும்; ஏனெனில் அத்தகைய புது முதலீடு முதலாளித்துவ விஸ்தரிப்பின் வாய்ப்பிற்கு வழிவகை செய்யும். நிலைமுறிவு தத்துவம் பற்றிய விவாதம், முதல் உலகப்போரின் வெடிப்பு, இரண்டாம் அகிலத்தின் உடைவு மற்றும் ரஷ்யப் புரட்சி இவற்றில் கரைந்து போயிற்று. 1929ல் இது மீண்டும் ஹென்ரிக் குரோஸ்மன் (Henryk Grossmann) என்பவர், தான் வெளியிட்ட, மூலதனத் திரட்சி மற்றும் முதலாளித்துவத்தின் நிலைமுறிவு பற்றிய விதி (The Law of Accumulation and the Breakdown of the Capitalist System) என்ற நூலில் பழையபடி விவாதத்தைத் தொடங்கி வைத்தார். மூலதனத்துடைய அடிப்படைப் படிப்பினையை உறுதியாகக் கொண்டு, "முதலாளித்துவத்தின் தொடர்ந்த அபிவிருத்தி முற்றிலுமான பொருளாதார வரம்புகளை எதிர்கொள்ளுகின்றது" என்று நிரூபிக்க முற்பட்டது, ரோசலக்சம்பேர்க்கின் "பெரும் வரலாற்றுப் பங்களிப்பு" என்று குரோஸ்மன் விளக்கினார்.[14] ஆனால், லக்சம்பேர்க்கின் ஆய்வில் இருந்த பிரச்சினை, முதலாளித்துவத்தின் முக்கியமான முரண்பாடுகளை உற்பத்தித்துறையிலிருந்து, மூலதனத்தின் சுழற்சி துறைக்கு மாற்றிவிட்டது என்பதுதான். முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை, அதன் நீண்டகால அபிவிருத்தியில், "கைகூடுதல்" என்பது பிரச்சினை அல்ல. மாறாக, மூலதனத் திரட்சி தளர்ந்துவிடாது இருக்க உபரி மதிப்பு போதுமான அளவு கறந்தெடுக்கப்படாமல் இருப்பதுதான்; இதுதான் இலாபவிகித வீழ்ச்சி வீழும் போக்கில் தானே வெளிப்படுகிறது. முதலாளித்துவ அபிவிருத்தி தத்துவத்தில், ஸ்வீசிதான் முதன்முதலில் குரோஸ்மன்னுடைய படைப்பை ஆங்கில மொழி அறிந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். ஆனால் அவர் குரோஸ்மன்னுடைய ஆய்வை, மற்ற பலவற்றோடு பிரச்சனைகளை உணர்ந்துகொள்ளுதலுக்கு அப்பால் செல்கின்றது என்று உதறிவிட்டார். ஸ்வீசியின் விமர்சனம் அவருடைய "குறைநுகர்வு" போக்கைத்தான் ஐயத்திற்கிடமின்றிப் பிரதிபலித்தது. ஆனால் மற்ற காரணிகளும் அவருடைய படைப்பில் பங்கு கொண்டிருந்தன. நிலைமுறிவு தத்துவம் கடந்த நூற்றாண்டு முழுவதும் பல எதிர்க்கருத்துக்களை ஈர்த்துள்ளது; ஏனென்றால், அது மார்க்சிஸ்டுகள் எடுக்கவேண்டிய பல அரசியல் பணிகளை நேரடியாகச் சுட்டிக்காட்டுகிறது. அதன் எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் கேலிச்சித்திரம் போல் அன்றி, தானே முதலாளித்துவம் சரிந்து விடும் என்றும், அதையொட்டி தொழிலாள வர்க்கம் இயல்பாகவே அதிகாரத்தை முதலாளித்துவத்திடம் இருந்து எடுத்துக்கொள்ளும் என்ற கருத்தாய்வை நிலைமுறிவு தத்துவம் முன்வைக்கவில்லை. மாறாக, சோசலிசப்புரட்சியின் புறநிலை அடிப்படையை எடுத்துக்காட்டும்போது, இது இலாபமுறையின் முரண்பாடுகள் தீவிரமாகும்போது ஒரு நெருக்கடியை தோற்றுவிக்கும் என்றும், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பணியை வெளிப்படையாய் தொழிலாள வர்க்கத்தின் முன்வைக்கும் என்றுதான் கூறுகிறது. வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் ஒவ்வொரு கட்டத்திலும், அபிவிருத்தியின் வேகம் எப்படி இருந்தாலும், மார்க்சிஸ்டுகள், மற்ற அனைத்து வர்க்கங்களிலிருந்தும் அதன் அரசியல் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கான விட்டுக்கொடுக்காத போராட்டத்தின் மூலம் தொழிலாள வர்க்கத்தை அதன் வரலாற்றுப் பணிக்காக அரசியல் ரீதியாக தயார் செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் ஸ்வீசியின் கண்ணோட்டம் அத்தகைய கருத்துரையிலிருந்து பெரும் தொலைவில்தான் இருக்கிறது. முதலாளித்துவ அபிவிருத்தி தத்துவம் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் நுழைந்த நேரத்தில் வெளியிடப்பட்டு, ஜேர்மனியில் இராணுவத் தோல்வி முடிந்து முதலாளித்துவம் வீழ்ச்சியடைந்து சோசலிசம் ஐரோப்பா கண்டம் முழுவதும் வெற்றி பெறும் என்ற காட்சியில் முடிவடைந்தது. மேலும் போர் முடிவடைந்த நிலைமைகளில், பிரிட்டன், அமெரிக்கா இரண்டிலுமே அமைதியான முறையில் பின்னர் சோசலிச மாற்றத்திற்கான நிலைமைகள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடரும்... |