World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் : உலக பொருளாதாரம் Marxism and the political economy of Paul Sweezy Part 2: The Theory of Capitalist Development மார்க்சிசமும் போல் ஸ்வீசியின்அரசியல் பொருளாதாரமும் பகுதி 2 : முதலாளித்துவ அபிவிருத்தியின் தத்துவம் By Nick Beams இக்கட்டுரை உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவைச் சேர்ந்த நிக் பீம்ஸ், தீவிரவாத அரசியல் பொருளாதார நிபுணர் போல் ஸ்வீசியின் வாழ்வு, படைப்புக்கள் பற்றி எழுதியுள்ள தொடர் கட்டுரைகளில் இரண்டாவது ஆகும். போல் ஸ்வீசி Monthly Review உடைய நிறுவனர்-ஆசிரியராக இருந்து, 2004 பெப்ரவரி 27 அன்று, நியூயோர்க், லார்ஷ்மன்டில் காலமானார். இத்தொடரின் முதல் பகுதி (ஆங்கிலத்தில்) ஏப்ரல் 6ம் தேதியன்று வெளியிடப்பட்டது. அரசியல் பொருளாதாரத்தின் போல் ஸ்வீசியின் கருத்துக்கள், Monthly Review வழிமுறை என்று பின்னர் அழைக்கப்பட்ட வகையில் மத்திய பகுதியாக இருந்தன. இவை 1930களின் பிந்தைய பகுதிகளின் ஆரம்பத்தில், மார்க்சின் ஆய்வை புரிந்துகொண்ட நிலையில் உருவாக்கப்பட்ட கருத்துக்கள் ஆகும். ஸ்வீசியின் முதலாவதும், பலவிதங்களில் மிக முக்கியமானதுமான நூலும் ஆகிய, முதலாளித்துவ அபிவிருத்தியின் தத்துவம் தனக்கே தெளிவை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் இயற்றப்பட்ட வகையைச் சேர்ந்ததாகும். சோசலிசத்தின் பொருளாதாரம் பற்றி அவர் நடத்திய வகுப்புக்களில் இதன் ஆரம்பம் இருந்தது; இதில் பல சோசலிச எழுத்தாளர்களுடைய படைப்புக்களைப் பற்றிய கருத்தாய்வுகளும் அடங்கியிருந்தன. பின்னர் ஸ்வீசி நினைவுகூர்ந்தபடி, பட்டப்படிப்பு கருத்தரங்குகளில் மார்க்சின் சிந்தனை பற்றிய தரத்தை உயர்த்த விரும்பியதில், "அது நீண்ட, கடினமான, போராட்டங்களை மரபுவழி, புதிய உயர்நூல்களின் பயிற்சியின் உட்தடுப்புக்கள், இவற்றுடன் கொள்ளும். ...மார்க்சிச உழைப்பின் மதிப்பு தத்துவத்தை நான் ஏற்பதற்கு மிக மிக அதிக காலம் பிடித்தது; ஏனெனில், இறுதிநிலைப் பயன்பாட்டு விலைக் கோட்பாட்டில்தான் (Marxist labor value theory) பலகாலமும் சிந்திக்க நான் முற்றியும் பழக்கமுற்றிருந்தேன். எனவே ... பலகாலமும் என்னால் வேறு ஒரு தத்துவம் எப்படி மதிப்புக் கோட்பாட்டிலிருந்து வேறுபட்டிருக்க முடியம் என்பதையும் அதற்கு முற்றிலும் வேறு காரணங்கள் இருந்தன என்பதையும் உணரவே முடியவில்லை." [4] ஆனால், முதலாளித்துவ அபிவிருத்தியின் தத்துவம் என்பது மார்க்சின் கருத்துக்கள் எளிதாக வழங்கப்பட்டவையல்ல. இதில் ஸ்வீசி, மார்க்சின் "இலாப விகிதங்களின் வீழ்ச்சி" விதியையைப் பற்றிய ஆய்வுடனும் பெரிதும் மாறுபட்ட கருத்துக்களைக் கூறியுள்ளார். இவருடைய இந்த பிரச்சினை பற்றிய ஆய்வு, அவருடைய அரசியல் நிலைநோக்கு, மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தைப் பற்றிய ஆய்வு ஏகபோக மூலதனம் (Monopoly Capital) என்ற நூலோடு மிகவும் நெருங்கிப் பிணைந்துள்ளது; இந்த நூல் 1960 களின் கடைசிப்பகுதியிலும், 1970 களின் முற்பகுதிகளும் அரசியல் தீவிரமயப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் மிக அதிக அளவில் படிக்கப்பட்டது- மிகுந்த கவனத்துடன் ஆராயப்படவேண்டும். இலாபவிகித வீழ்ச்சியின் போக்கு இலாபவிகித வீழ்ச்சி போக்கு மார்க்ஸ் காலத்திற்கு முன்னரே முதலாளித்துவத்தில் அறியக்கூடிய இயல்நிகழ்வாகத்தான் இருந்தது. ஸ்கொட்லாந்தின் அரசியல் பொருளாதார மற்றும் தத்துவ சிந்தனையாளருமான அடம் ஸ்மித் (Adam Smith 1723-1790) இதற்கு காரணம் பெருகும் போட்டி என்றார்: அதாவது, மூலதன இருப்பு அதிகரிக்கும்பொழுது, உற்பத்தி அதிகரித்து கூடுதலான வினியோகத்திற்கு இட்டுச்சென்று, போட்டி பெருகுவதுடன் விலைகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தி, இதன் விளைவாக இலாபங்களில் வீழ்ச்சி ஏற்படுகிறது என்றார். டேவின் ரிகார்டோ (David Ricardo-1772-1823) வின் கருத்தின்படி, மூலதனம் விரிவடைந்து, உழைப்பு சக்தி எண்ணிக்கையும் பெருகும்போது விவசாயமும் விரிவடைகிறது. இதனால் அதிகரிக்கும் உழைப்போரின் எண்ணிகை அதிகரிப்பின் தேவைக்காக வளம் குறைந்த நிலத்தில் உணவு உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. வளம்குறைந்த நிலத்தில் உற்பத்திசெய்வது உணவின் விலையை அதிகரிக்கும். இதனால் ஊதியங்கள் உயர்வதால் இலாபம் குறைகிறது. இந்த இரு விளக்கங்களையுமே மார்க்ஸ் நிராகரித்தார். கூடுதலான போட்டியை ஒட்டியோ (ஸ்மித்), அல்லது விவசாயத்தின் உற்பத்தித் திறன் குறைவதாலோ (ரிக்கார்டோ) இலாபவிகிதத்தின் வீழ்ச்சிப் போக்கு ஏற்படுவதில்லை. இது முதலாளித்துவத்தின் கீழ் உழைப்பின் உற்பத்தித்திறனின் அதிகரிப்பின் வெளிப்பாடாகும் என்றார் அவர். மார்க்சின் மகத்தான நூலான மூலதனத்தின் முதற்பாகத்தில், இலாபம், வாடகை, வட்டி போன்றவற்றின் அடிப்படையான உபரி மதிப்பின் ஒரேயொரு மூலம், உற்பத்தியின்போது தொழிலாளி ஒரு பண்டத்தில் சேர்க்கும் புதிய மதிப்பிற்கும், ஆரம்பத்தில் அவர் முதலாளிக்கு விற்ற பண்டமான அவரின் உழைப்புசக்தியின் அல்லது வேலைசெய்வதற்கான தகமையின் மதிப்பிற்கும் இடையிலான வேறுபாடுதான் என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தொழிலாளரையும் அவர் குடும்பத்தையும் காப்பாற்ற தேவையான (உணவு, உடை, உறைவிடம் போன்றவை) பண்டங்கள் உற்பத்திக்கு நான்கு மணி நேர உழைப்பு போதும் என்றாலும், தொழிலாளி, 8, 10 அல்லது 12 மணி நேரம் வேலைவாங்கப்படுகிறார். இந்த வித்தியாசம்தான் உபரி மதிப்பிற்கு ஆதாரம் ஆகும். ஆனால், திரட்டும் நிகழ்வுப்போக்கில் ஒரு முரண்பாடு உள்ளது என்று மார்க்ஸ் விளக்கினார். முதலாளித்துவ உற்பத்தி விரிவடையும்போது, உழைப்பின் சமூக உற்பத்தி திறனும் பெருகும்போது, ஒவ்வொரு தொழிலாளியும் அதேயளவான நேரத்தின் உற்பத்தி சாதனங்களால் கூடுதலான அளவு பண்டங்களாக மாற்றும் தன்மை வளர்கிறது. இந்த உற்பத்திச் சாதனத்தின் மதிப்பு (மாறா மூலதனம்), உற்பத்தி முறைகளினால் பொருட்களின் உற்பத்தியில் தேக்கிவைக்கப்படுகிறது; அதேநேரத்தில், உயிருள்ள உழைப்பு (மாறும் மூலதனம்) உண்மையில் மதிப்பைக் கூட்டுகிறது. இந்த உயிருள்ள உழைப்புத்தான் உபரி மதிப்பிற்கு அடிப்படை ஆதாரமாகும். ஆனால் இதையொட்டி, உழைப்பின் உற்பத்தித்திறன் அபிவிருத்தியடையும்போது, மாறா மூலதனம், மாறும் மூலதனத்துடன் கொண்டிருக்கும் விகிதம் (மூலதனத்தின் உள்ளடக்கமான கூட்டு) உயரும் போக்கைக் கொள்ளுகிறது. உழைப்பின் உற்பத்தித்திறன் வளர்ச்சி அடையும்போது, அதே அளவு உயிருள்ள உழைப்பு கூடுதலான மூலதன திரட்சிக்கு வகை செய்கிறது; இதன் பொருள், உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் கறந்தெடுக்கப்பட்ட உபரி மதிப்பு, இன்னும் பெரிய மூலதன திரட்சியை அதிகரிக்கவேண்டும் என்பது ஆகும். இதுதான் இலாபவிகிதம் வீழ்ச்சி போக்கிற்கு ஆரம்ப நிலைப்பாடு ஆகும். "உயிருள்ள உழைப்பின் அளவு தொடர்ச்சியாக பிரயோகிக்கையில், செயற்படுத்தப்பட்ட உழைப்புடன் ஒப்பிடுகையில் தொடர்ச்சியாக குறைகின்றது: அதாவது, உற்பத்திசாதனங்களால் பயன்படுத்தப்பட்டிருந்த உற்பத்தித்திறன், அதாவது இந்த உயிருள்ள உழைப்பின் பகுதி கூலி கொடுக்கப்படாமல் இருப்பதுடன், உபரி மதிப்பாக்கப்பட்டு எப்போதும் குறைந்துவரும் விகிதத்தில் பிரயோகிக்கப்பட்ட மொத்த மூலதனச் செலவின் மதிப்பில் உள்ளடக்கப்படும். ஆனால் இந்த உபரி மதிப்பின் அளவிற்கும் மொத்த பயன்படுத்தப்பட்ட மூலதனத்திற்கும் உள்ள விகிதம், உண்மையில் இலாப விகிதமாக அமைவதால், தவிர்க்கமுடியாமல் வீழ்ச்சியடையும்." [5]. இலாப விகிதத்தின் வீழ்ச்சிப் போக்கை விளக்குகையில், முதலாளித்துவத்தின் வளர்ச்சியிலேயே பல மாறுபட்ட, எதிர்மறைப் போக்குகள் ஒரே நேரத்தில் செயல்படும் என்ற நிலையைக் கூறினார். உழைப்பின் உற்பத்தித்திறன் மாபெரும் வளர்ச்சி உடையக்கூடியது ஆகையால், "முந்தைய பொருளாதார நிபுணர்களை ஈர்த்த கவனத்திற்குப் பதிலாக, இப்பொழுது இலாபவிகித வீழ்ச்சியை விளக்கும் பிரச்சினையில் இருக்கிறோம், மற்றும் இந்த விகிதம் ஏன் கூடுதலாகவும், விரைவாகவும் இல்லை என்பதையும் விளக்கவேண்டியுள்ளது." என மார்க்ஸ் குறிப்பிட்டார். [6] ஒரே நேரத்தில் செயல்படும் எதிர்மறைக் காரணிகளில் ஒன்று, உபரி மதிப்பு விகிதத்தின் (கூலிகொடுக்கப்படாத உழைப்புக்கும், கொடுக்கப்படும் உழைப்பிற்கும், எந்த வேலைநாளிலும் உள்ள விகிதத்தால் அளக்கப்படுவது) போக்கு, உழைப்பின் உற்பத்தித் திறுனுடைய அபிவிருத்தியுடன் உயரும் தன்மையுடையது ஆகும். அதாவது, மாறா மூலதனத்தின் அளவு, மாறும் மூலதனத்தின் விகிதத்துடன் அதிகரிக்கக் கூடும், இதனால் இலாப விகிதத்தில் குறைவு ஏற்படலாம்; உபரி மதிப்பு பெருகுவது இலாபவிகிதத்தை அதிகரிக்கச் செய்யும் போக்கை உடையது. இந்தப் பிரச்சினையில்தான், ஸ்வீசி, மார்க்சின் ஆய்விற்கு எதிராக தன் கருத்தைக் கொண்டிருந்தார். ஸ்வீசியின் விமர்சனம் மார்க்ஸ், முதலாளித்துவ உற்பத்தி முறையின் வரலாற்று வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளும்போது, இலாப விகித வீழ்ச்சிற்கு முக்கியத்துவம் கொடுப்பதைச் சுட்டிக்காட்டி, ஸ்வீசி தன்னுடைய திறனாய்வைத் தொடங்குகிறார். "அவருக்கு'' (மார்க்சிற்கு) இது மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. முதலாளித்துவ உற்பத்தி, தான் வரம்பிலா விரிவைக் கொள்ளமுடியாமல், சில உட்தடைகளைக் கொண்டுள்ளது என்பதை அது நிரூபித்ததாக அவர் கருதினார்." என ஸ்வீசி எழுதுகிறார், ''[7] ஸ்வீசியால் மேற்கோளிடப்பட்ட ஒரு பகுதியில் மார்க்ஸ், இலாபவிகிதத்தின் வீழ்ச்சிப்போக்கு, முதலாளித்துவ கட்டமைப்பினுள்ளான ஒரு வெளிப்பாடு ஆகும் என்றும், வரலாற்று ரீதியாக இந்த உற்பத்தி முறைகளின் கட்டுப்படுத்தப்பட்ட தன்மையும் என தெளிவாக்கி இருந்தார். மூலதன உற்பத்திக்கு உந்துதல் கொடுத்து, மூலதன திரட்சிக்கு காரணமாகவும் தேவையான நிலையாகவும் இருக்கும் இலாபவிகிதம், உற்பத்தி வளருதலில் ஆபத்திற்கு உட்படுகிறது என்பது ரிக்கார்டோவிற்கு கவலை அளிக்கிறது. மேலும், பண்புரீதியான உறவு இங்கு காணப்படுகின்றது. உண்மையில், அடிப்படைக் காரணம் இன்னும் ஆழ்ந்து உள்ளது; இதைப்பற்றி அவருக்கு ஒரு சிறு சந்தேகம்தான் உள்ளது. இங்கு முற்றிலும் பொருளாதார முறையில் காணப்படுவது, அதாவது முதலாளித்துவ நிலைப்பாட்டில், முதலாளித்துவத்தின் புரிந்து கொள்ளும் தன்மையில், முதலாளித்துவ உற்பத்தியுடைய நிலைப்பாட்டிலிருந்து, அவற்றின் தடைகளும் அதன் தொடர்புகளும் இறுதியானது அல்ல. ஆனால், வரலாற்றுரீதியாக உற்பத்தி முறையில் இருப்பது ஆகும்; இது ஒரு குறிப்பிட்ட, வரம்புடைய சகாப்தத்தில், உற்பத்தியின் சடத்துவ நிலையின் வளர்ச்சியை ஒத்திருக்கும். [8] உபரி மதிப்பு மாறா விகிதத்தில் இருக்கும் என்ற கருத்தில் மார்க்ஸ் தன்னுடைய கோட்பாட்டைக் கொண்டிருந்தார் என்று ஸ்வீசி உறுதியாகக் கூறுகிறார். இது மார்க்சின் வழிவகையை முற்றிலும் பொருட்படுத்தாத தன்மையைக் கொண்டுள்ளது; ஏனெனில் மார்க்சின் முறை ஒவ்வொரு வழிவகையையும் தனித்துப் பிரித்து மூலதன திரட்சியில் அதன் விளவு எப்படி இருக்கும் என்பதை ஆராய்ந்திருந்ததாகும். உபரி மதிப்பு மாறாமால் இருக்கும் என்று கொண்டால்தான், இலாபவிகிதத்தில், மூலதனக்குவிப்பின் ஒவ்வொரு உட்கூறான பகுதியின் பெருக்கத்தின் தாக்கத்தையும் தனித்தனியே ஆராய முடியும். இத்தகைய விஞ்ஞானமுறை, முந்தைய பொருளாதார வல்லுனர்கள் உபரி மதிப்பின் விகிதத்தையும், இலாப விகிதத்தையும் குழப்பியிருந்த நிலையில் நிச்சயமாகத் தேவைப்பட்டது. மாறா மூலதனம், மாறும் மூலதனம், உபரி மதிப்பின் விகிதம், மூலதனத்தின் உட்கூறான பகுதியமைப்புக்கள் அனைத்துமே மார்க்சினால் கண்டறியப்பட்ட புது வகைகள் ஆகும்; இவற்றின் உதவியால், அவர் "உபரி மதிப்பின் இரகசியத்தை" வெளிப்படுத்த முடிந்தது. எனவே, வழிவகை நிலைப்பாட்டிற்கு தேவையாக, மாறுதல்களில் விளைவுகள் பற்றி ஆய்வு, ஒவ்வொன்றையும் தனித்து, பிரித்து அவர் கவனாக ஆராய்ந்திருத்தார். இந்த மிக முக்கியமான பிரச்சினைகளின் வழிவகையை ஒதுக்கித் தள்ளி, ஸ்வீசி தன்னுடைய விமர்சனத்தை பின்வருமாறு தொடர்கிறார்: "மார்க்ஸ், தன்னுடைய தத்துவார்த்த முறையில்கூட, மாறாதவீதத்திலுள்ள உபரி மதிப்பை, மூலதனத்தின் உட்கூறான கூட்டின் (அங்கக சேர்க்கையின்) (organic composition) அதிகரிப்போடு ஒரே நேரத்தில் இணைத்துக் கொள்ளுவது சரியாகாது என்று தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார். மூலதனத்தின் உட்கூறான கூட்டின் (அங்கக சேர்க்கையின்) அதிகரிப்பு என்பது, உழைப்பின் உற்பத்தித் திறனை பெருக்க வேண்டும் என்பது பொருள்; அதிக உற்பத்தி, தவிர்க்கமுடியாதபடி அதிக உபரி மதிப்பையும் கொண்டு வரும் என்பதற்கு மார்க்சின் கூற்றுதான் ஆதாரம். எனவே, அதிகமாகும் மூலதனத்தின் உட்கூறான கூட்டு (அங்கக சேர்க்கை) உபரி மதிப்பின் உயரும் விகிதத்துடன் தானும் உயரும் என்று பொதுவாகக் கொள்ளவேண்டும். மூலதனத்தின் உட்கூறான உள்ளடக்கமும், உபரி மதிப்பின் விகிதமும் மாறுதலுக்கு உட்பட்டவை என்று கொண்டோமானால்... இலாப விகிதம் செல்லும் முறை கணிக்கமுடியாததாகப் போய்விடும். எஞ்சிய மதிப்பின் சதவிகித உயர்வு, மொத்த மூலதனத்திற்கு, மாறும் மூலதனத்தின் சதவிகிதத்தைவிட குறைவாக இருந்தால் இலாபவிகிதம் சரியும் என்று மட்டும்தான் நாம் கூறமுடியும்."[9] "ஸ்வீசியின் கருத்துப்படி, மூலதனத்தின் உட்கூறான கூட்டில் (அங்கக சேர்க்கையில்) ஏற்படும் மாற்றங்கள், உபரி மதிப்பில் ஏற்படும் மாற்றங்களைக் காட்டிலும் கூடுதலான தாக்கத்தைக் கொள்ளும் என்ற "பொது முன் நினைப்பு" தேவையில்லை. "மாறாக, இந்த இரண்டு மாறுதலுக்கு உட்படும் கூறுபாடுகளையும் இணைந்த முக்கியத்துவம் கொண்டவை என்றே நாம் கொள்ளவேண்டும். இக்காரணத்தை ஒட்டி, மார்க்ஸ் இயற்றியுள்ள இலாபவிகிதத்தின் வீழ்ச்சிப் போக்கு நம்பத்தகுந்ததாக இல்லை." [10] ஆனால் மார்க்சின் ஆய்வை நன்கு ஆராய்ந்தால், உபரி மதிப்பின் விகித உயர்வு எவ்வாறு காலவரையற்று, மூலதனத்தின் உட்கூறான கூட்டின் (அங்கக சேர்க்கையின்) உயர்வைக் காட்டிலும் கூடுதலாக செல்ல முடியாது என்பது தெளிவாகக் காட்டப்படுகிறது. உபரி மதிப்பின் விகிதத் தன்மை மாறாது இருக்கும் அடிப்படையில் மார்க்ஸ் தன்னுடைய முடிவகளுக்கு வந்துள்ளார் என்று ஸ்வீசி கூறியதற்கு முற்றிலும் மாறாக, மார்க்ஸ் குறிப்பிட்டு, ஸ்வீசி எழுப்பியுள்ள பிரச்சினனைகளின் அடிப்படையில் துல்லியமாக அவற்றை ஆய்ந்துள்ளார். உழைப்பின் உற்பத்தித் திறன் வளர்ச்சி ஒரு "இரட்டை வடிவைக் கொள்ளும்" என்று அவர் குறித்துள்ளார். ஒருபுறம், உபரி உழைப்பு (அதையொட்டி உபரி மதிப்பு), குறுகிய காலத்தின் தொழிலாளி தன்னுடைய உழைப்புச் சக்தியை அளித்தால் பெருகும். மறுபுறம், ஒரு குறிப்பிட்ட மூலதனத்திற்கு வேலைசெய்யும் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்தால் அதன் விளைவாக உபரி மதிப்பு குறைந்து விடும். "இந்த இரண்டு இயக்கங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து செல்வது மட்டும் அல்ல; அவை ஒன்றுக்கொன்று தேவையான காரணிகளும் கூட ஆகும்; ஒரே விதியை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் ஆகும். ஆனால் அவை இலாபவிகிதத்தை வேறு திசைகளில் செயல் விளைவு உண்டுபண்ணுபவை" அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்தால், உபரி மதிப்பின் அளவும், இலாபவிகிதமும் குறையும், ஆனால் உபரி மதிப்பின் பெருகிய விகிதம் அதன் சரிவைக் குறைக்கும் போக்கை உடையது. ஆனால் இந்த வழிவகையில் உறுதியான வரம்புகள் உள்ளன; அதைப் பற்றி மார்க்ஸ் கூறுகையில்: "இரண்டு தொழிலாளர்கள், நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் உழைத்தால், 24 தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு 2 மணிநேரம் உழைத்துக் கொடுக்கும் அளவு உபரி மதிப்பைக் கொடுக்க முடியாது; அவர்கள் காற்றை உட்கொண்டு வாழ்ந்தாலும் அது முடியாது; எனவே தங்களுக்காக அவர்கள் உழைக்கத் தேவையில்லை." இதையே வேறுவிதமாகக் கூறினால், உபரி மதிப்பின் உயர்வு அளிக்கும் தொகையிலிருந்து, குறைந்த தொழிலாளர்களுக்காக கொடுக்கப்படும் ஊதியம் சில வரம்புகளுக்கு உட்பட்டுள்ளது. அது இலாப விகித வீழ்ச்சியை தடுக்கக் கூடும், ஆனால் அதை முற்றிலும் ஈடுசெய்துவிடமுடியாது. [11] மார்க்ஸ் இந்தப் பிரச்சினை பற்றி தன்னுடைய மூலதனத்திற்கு ஆரம்பபணி போன்ற நூலில் 1858ல் எழுதியுள்ளார். ஒரு நாளில் தேவைப்படும் உழைப்பிற்கு ஏற்ப பகுப்புக்களுக்கும், எஞ்சிய மதிப்புக்கும் தொடர்பை ஏற்படுத்தும்போது, (அதாவது தன்னுடைய உழைக்கும் சக்தியை அளிப்பதற்கு தொழிலாளர் எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் கணக்கில் எடுக்கப்படும்போது), உழைப்பின் அதிகமான உற்பத்தித்திறன், உபரி உழைப்பின் விரிவில் குறைதல் என்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் காட்டியுள்ளார். உதாரணமாக, 8 மணிநேரம் உள்ள வேலைநாளில், முதலில் 4 மணி, 4 மணி என்ற விகிதத்தில் பிரித்தும், பின்னர் உற்பத்தித்திறன் இருமடங்காகப் போகும், இதையொட்டி தேவையான உழைப்பில், 2 மணி நேரம் குறைப்பு ஏற்படும்; பின்னர் உபரி உழைப்பு 6 மணி நேரத்திற்குச் செல்லும் அல்லது 50 சதவிகிதம் ஆகும். மீண்டும் உற்பத்தித்திறன் இருமடங்கு ஆக்கப்பட்டால், தேவையான உழைப்பை 1 மணி நேரத்திற்குக் குறைத்தால், உபரி உழைப்பு 6 லிருந்து 7 மணி நேரத்திற்கு அதிகரிக்கும், அதாவது 16.67 சதவிகிதம் என்ற முறையில். ஒவ்வொரு உழைப்பு உற்பத்தித்திறனுடைய உயர்விற்கும், ஒரு சிறிய அளவில் உபரி உழைப்பு சிறிய அளவில் கூடும். இந்த முடிவைக் கொள்ளுவதற்கு மார்க்ஸ், உபரி மதிப்பு உயரும்போது, அது "உற்பத்தி சக்தியின் அபிவிருத்தியில் மிகச்சிறிய விகிதத்தில்தான் உயரும்" என்றும் அதன் விளைவாக, "மூலதனம் மிகுந்த அபிவிருத்தியுற்று ஏற்கனவே விளங்கினால்... அது இன்னும் கடுமையாக உற்பத்தி சக்தியை வளர்த்தால்தான், தனக்கே மிகக் குறைவான விகிதத்தைப் பெற முடியும்.[12] கணிசமான அளவு ஆராய்ச்சி இப்பகுப்பாய்வை பற்றிக் கிடைத்துள்ளபோதிலும், ஸ்வீசி அதைப்பற்றி The Theory of Capitalist Development அல்லது அதற்குப்பின் வந்த நூல்களிலோ முழுமையாக ஆய்வு செய்யாததை அறிவுஜீவித முறையில் கவனிக்கப்படவில்லை என்றோ, ஏதோ காரணத்தால் விடப்பட்டுள்ளது என்றோ கூறுவதற்கில்லை. அவர் வேறு ஒரு நோக்கத்தை தயாரித்துக் கொண்டிருந்தார். தொடரும்.... Notes: |