WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Peter Schwarz from the PSG in Germany addresses
WSWS-SEP conference
"Our party intervenes in the European election on an
internationalist socialist program"
ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியிலிருந்து பீட்டர் சுவார்ட்ஸ்,
WSWS-SEP
மாநாட்டில் பேருரையாற்றுகிறார்
"எமது கட்சி ஐரோப்பிய
தேர்தலில் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்து பங்கு கொள்ளுகின்றது"
23 March 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினுடைய ஜேர்மன் பிரிவான சோசலிச
சமத்துவக் கட்சியின் (Partei fur Soziale
Gleichheit) மத்திய குழு உறுப்பினரும்,
WSWS
ஆசிரியர் குழுவின் உறுப்பினருமான பீட்டர் சுவார்ட்ஸ், மார்ச் 13-14 தேதிகளில் மிச்சிகன் ஆன் ஆர்பரில்
உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக்
கட்சியும் இணைந்து "2004 அமெரிக்கத் தேர்தல்: ஒரு சோசலிச மாற்றத்திற்கான நிலைமை" என்ற தலைப்பில்
நடாத்திய மாநாட்டில் பேசிய உரையைக் கீழே பிரசுரம் செய்கிறோம்.
மாநாட்டு நிகழ்ச்சி பற்றிய சுருக்க விபரம் மார்ச் 15ல் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்டது;
WSWS
சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், அமெரிக்க
SEP-யின் தேசியச்
செயலாளருமான டேவிட் நோர்த் நிகழ்த்திய ஆரம்ப உரை, மார்ச் 17லும் (ஆங்கிலத்தில்), ஜனாதிபதி
வேட்பாளர் பில் வான் ஒகெனுடைய உரை மார்ச் 18-லும் (ஆங்கிலத்தில்), துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜிம்
லோரன்சின் உரை மார்ச் 19லும் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்டன. வரவிருக்கும் நாட்களில் நாங்கள் இந்த முக்கியமான
அரசியல் நிகழ்வின் செய்தித் தொகுப்பையும், மற்றைய சர்வதேச பிரதிநிதிகள் மாநாட்டிற்கு வழங்கிய உரைகளையும்
பிரசுரிக்க உள்ளோம்.
அன்புள்ள தோழர்களே,
முதலாவதாக, சோசலிச சமத்துவக் கட்சியின் சகோதரத்துவ நல்வாழ்த்துக்களை
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டிற்கு அளிக்க விரும்புகிறேன்.
எமது உறுப்பினர்களும்,
WSWS-ன் ஐரோப்பிய வாசகர்களும், இம்மாநாட்டின் நடவடிக்கைகளை,
மிகுந்த ஆர்வத்துடன் படித்தறிவர். அமெரிக்காவில், ஒரு சுயாதீனமான சோசலிச இயக்கத்தின் வளர்ச்சி, அதிலும்
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மையத்தானத்தில் என்பது, அமெரிக்காவில் மட்டும் அல்லாது, சர்வதேச ரீதியில்
அரசியல் நிலைமைக்கு திறவுகோலாக அமையும். உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுடைய சிந்தனையில் இது
ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஐரோப்பா மற்றும் சர்வதேச ரீதியாக உள்ள தொழிலாள வர்க்கத்தின் விதி
எவ்வாறு, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் விதியோடு நெருக்கமாகப் பிணைந்து உள்ளது என்பதை ஈராக்கியப்
போர் நிரூபித்துள்ளது. இந்தப் போர், முதலாளித்துவம் சமாதானத்துடனும் சமூக நீதியுடனும் சமரசமான உறவை
ஏற்படுத்தும் என்ற கருத்தை தூள்தூளாக்கிவிட்டது; இக் கருத்து அடிப்படையில்தான், ஐரோப்பாவில் தொழிலாளர்
இயக்கத்தின் மீது சமூக ஜனநாயகம் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
பெரும்பாலான மக்களுக்கு, போர் ஒரு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. தானோ
அல்லது தன் பெற்றோர்கள் அல்லது பெரிய பெற்றோர்களின் மூலமாகப் போரின் பேரச்சத்தை அனுபவிக்காத
ஐரோப்பியரோ, குறிப்பாக ஜேர்மனியரோ இல்லை என்றே கூறலாம். போருக்குத் தயாரிப்புசெய்வதற்காக,
புஷ் நிர்வாகம் கூறிய பொய்கள், ஏமாற்றுத்தனங்கள், அது வெளிப்படையாக சர்வதேச சட்டத்தை
நிராகரித்தமை, போருக்கு எதிர்ப்புத் தெரிவித்த அரசாங்கங்களை மிரட்டியமை என்பன பரந்தமுறையில்
கோபத்தையும், கடும் வெறுப்பையும் ஏற்படுத்தின. புஷ் தொலைக் காட்சியில் தோன்றி, பெருமிதத்துடன் தான்
ஒரு "போர்க்கால ஜனாதிபதி" என்று அறிவித்துக் கொள்ளும்போது, பெரும்பாலான ஐரோப்பிய மக்களுக்கு, இது
அவர் தன்னை குழந்தைகளைக் கெடுப்பவர் அல்லது பலரைக் கொலைசெய்பவர் என்று கூறிக் கொள்வது போன்ற
நினைப்பைத்தான் ஏற்படுத்தியது.
போருக்கு எதிராக மக்களின் எதிர்ப்பு பெப்ரவரி 15, 2003ல்
மிகப்பிரமாண்டமான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டதின் மூலம் வெளிப்பட்டது. ஐரோப்பாவில் மட்டும்
10 மில்லியன் மக்களுக்கு மேலாக கலந்துகொண்டனர்.
அமெரிக்க மார்க்சிஸ்டுகள் பல தசாப்தங்களாக எதிர்நோக்கிய முக்கிய பிரச்சினை,
ஜனநாயக் கட்சியிலிருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை அடைவதற்கான போராட்டம் என்று
நேற்று வலியுறுத்தப்பட்டது. இது ஐரோப்பாவில் சமூக ஜனநாயக கட்சியிலிருந்து முறித்துக் கொள்ளுதல், அல்லது
இத்தாலியிலும் பிரான்சிலும், ஸ்ராலினிசத்திலிருந்து முறித்துக் கொள்வது போலவாகும்.
1945ல் ஹிட்லரின் ஆட்சி வீழ்ச்சியுற்ற பின்னர், ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சி
(SPD)
பெருமளவு மதிப்பு இழந்தது. 1914ல் அது முதல் உலகப் போருக்கு ஆதரவு
கொடுத்ததாலும், வைமர் (Weimar)
குடியரசுக்காலத்தில், துயர்மிகுந்த பங்ககைக் கொண்டிருந்ததாலும் --
அப்பொழுது இது அனைத்துப் புரட்சிகர போராட்டங்களையும் எதிர்க்கவும், ஒடுக்கவும் செய்து,
ஒருவிதத்தில், ஹிட்லர் பதவிக்கு வரும் நிலைமையை உருவாக்க வகை செய்திருந்தது --மிகவும் வளர்ச்சியடைந்த
தொழிலாளர்கள் சமூக ஜனநாயக கட்சியிலிருந்து விலகிச் சென்று விட்டனர்.
போருக்குப் பிந்தைய SPD
மீண்டும் புத்துயிர் பெற்றதானது, ஒரு புறம் ஸ்ராலினிசத்தின் கிரிமினல்களாலும் மறுபுறம் அமெரிக்கா ஐரோப்பிய
விவகாரங்களில் தலையிட்டதன் விளைவினாலும் ஏற்பட்டதாகும். மார்ஷல் திட்டத்தினாலும், அமெரிக்கா
பிரான்சுடனான பழைய விரோதங்களைத் தீர்த்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியதாலும் மேற்கு ஜேர்மனி மிகக் குறுகிய
காலத்தில் பொருளாதார மறு எழுச்சி கண்டதுடன், இதையொட்டி, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரம்
பொதுவாக உயர்ந்ததுடன் SPD
னுடய சீர்திருத்த திட்டங்களுக்கு ஓரளவு செல்வாக்கு கிடைத்தது.
SPD தன்னுடைய பங்கிற்கு,
அமெரிக்கவாதத்தை தனது புதிய மதமாகவே உருவாக்கியது. அமெரிக்காவைவிட, வேறு ஏதேனும் ஒரு நாட்டில்
கென்னடி வழிபாட்டு முறை அதிகமாக இருக்குமேயானால், அது ஜேர்மனியாகத்தான் இருக்க முடியும். ஒரு
முக்கியமான கென்னடி சதுக்கமோ அல்லது கென்னடி தெருவோ இல்லாத ஜேர்மன் நகரம், அதுவும் சமூக
ஜனநாயக கட்சிகளின் ஆட்சிக்குட்பட்ட நகரம் என்பது காண்பதற்கு அரிது. இப்பொழுதும்கூட, சில மாதங்களுக்கு
முன்பு, ஒரு பெரிய களிப்புக் கூட்டம், பழைய மேற்கு பேர்லின் நகரமன்ற அறையில், கென்னடியின் "நான் ஒரு
பேர்லின் நகரவாசி'' (Ich bin ein
Berliner) என்று கூறிய உரையின் 40வது ஆண்டுவிழா
நடைபெற்றது.
SPD அமெரிக்காவை
நம்பியிருத்தலைக் கருத்திற்கொண்டால், ஈராக்கியப் போருக்கு ஜேர்மன் சான்ஸ்லர் ஹெகார்ட் ஷ்ரோடர் காட்டிய
எதிர்ப்பு ஒரு கொள்கை அடிப்படையில் இருந்திருக்க முடியாது. அவருடைய முதல் எதிர்ப்பு, பிரெஞ்சு ஜனாதிபதி
ஜாக் சிராக்குடையது போலவே, அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமிப்பது, ஜேர்மனியினதும், பிரான்சினதும் ஏகாதிபத்திய
நலன்கள் மத்திய கிழக்கில் ஆபத்திற்கு உட்பட்டு அப்பகுதிமுழுவதும் ஸ்திரமின்றி போய்விடும் என்பதுதான்.
ஆனால் இந்த எதிர்ப்பும் அரை-மனத்துடன்தான் இருந்தது. இராஜதந்திர வழிவகைகளைக்
கடந்து இது செல்லவில்லை. ஜேர்மனியில் இருந்த அமெரிக்க தளங்களை, ஜேர்மனிய அரசாங்கம் மூட மறுத்ததுடன்
ஜேர்மனியின் ஆகாய வழியும் அமெரிக்காவிற்குத் திறந்துவிடப்பட்டுத்தான் இருந்தது. போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலிருந்து,
தன்னைத் தானே தொலைவில் இருத்திக்கொண்டதுடன், அரசாங்க உறுப்பினர் ஒவ்வொருக்கும் வாய்ப்பூட்டுச் சட்டம்
போட்டு, அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளக்கூடாது எனவும் உத்தரவிட்டது. பாக்தாத் வெற்றியடையப்பட்ட
உடனேயே, ஜேர்மனியும், பிரான்சும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டு, ஐ.நாவில், அமெரிக்க-பிரிட்டிஷ்
படைகளின் ஈராக்கிய ஆக்கிரமிப்பை அங்கீகரித்தன.
சமீபத்தில் வெள்ளை மாளிகைக்கு ஷ்ரோடர் அழைக்கப்பட்டிருந்தார். புஷ்ஷுடன் ஒரு
விருந்திற்குப்பின், போரைப் பற்றிய மோதல்களை, "நண்பர்களுக்கிடையே கடந்த கால வேறுபாடுகள்'' என்று
அவர் விவரித்தார். மிகப் பரந்த அளவு பொய்களையும், தந்திரங்ளையும் போரை நடாத்துவற்கு
நியாயப்படுத்தியமை அம்பலப்படுத்தப்பட்ட பின்னர், அவர் இத்தகைய கருத்தை வெளியிட்டார். இதேவேளை,
பிரான்ஸ், கடுமையாக புஷ் நிர்வாகத்துடன் ஒத்துழைத்து, ஹைட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஜனாதிபதியைப்
பதவியிலிருந்து விலக்குவதற்குத் துணை நின்றது.
புஷ்ஷிடம் இப்படி அவமானகரமான முறையில் அடிபணிந்ததிற்கு இரண்டு காரணங்கள்
உண்டு.
முதலாவது வெளியுறவுக் கொள்கை தொடர்பு பற்றியது. ஜேர்மனி, பிரெஞ்சு
அரசாங்கங்கள், விரைவில் தாங்கள் அமெரிக்காவுடன் மோதலுக்குத் தயாராக இல்லை என்பதை உணர்ந்தன.
வாஷிங்டன் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி வலதுசாரி அரசாங்கமான ஸ்பெயின், இத்தாலி, இந்த ஆண்டு
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர இருக்கும் பெரும்பாலான நாடுகள் கொண்ட, ஒரு போர்-ஆதரவு கூட்டணியை,
பிரிட்டிஷ் பிரதம மந்திரி, டோனி பிளேயர், தலைமையில் உருவாக்கியது. இது கண்டத்தை, அமெரிக்கப்
பாதுகாப்பு செயலர் டோனால்ட் ரம்ஸ்பெல்டு கூறியது போல், "பழைய", "புதிய" ஐரோப்பாக்கள் என்று
பிரித்து, EU-வில்
ஜேர்மன், பிரான்ஸ் இவற்றின் ஆதிக்கத்தை இடர்ப்பாட்டுக்கு உட்படுத்தியது.
ஜேர்மனியும், பிரான்சும் வாஷிங்டனுக்கு ஏற்ப தங்களை சற்று மாற்றிக்கொள்வதன்
மூலம் இத்தகைய தூண்டிவிடும் முறைக்கு பதிலளித்தன. அதேநேரம் அவை தங்களின் தனித்த இராணுவத் திறனைக் கட்டி
எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஜேர்மனியப் பாதுகாப்பு மந்திரி, சமீபத்தில், ஜேர்மன் இராணுவம்
முற்றிலுமாக மறுகட்டமைப்பு செய்ய திட்டத்தை அறிவித்துள்ளார். இப்பொழுது அனுப்பக்கூடிய 10,000
வீரர்களுக்குப் பதிலாக, பூகோளம் முழுவதும் தலையீடுகளுக்காக அனுப்ப 150,000 இராணுவ வீரர்கள் தயார்
செய்யப்படுவர் என அவர் கூறியள்ளார். படையின் மற்ற பகுதிகள் அவ்வீரர்கள் செயல்படுவதற்கு உறுதுணையாக
அமைப்பு முறைகளின் வியூகத்தில் ஈடுபடுவர்.
வாஷிங்டனுக்கு ஏற்றபடி மாறியமை ஈராக் போரின்போது அமெரிக்க, ஜேர்மனிய
ஏகாதிபத்தியங்களுக்கு இடையே வெடித்த விரோதப்போக்கை எந்தவகையிலும் அகற்றிவிடவில்லை.
இந்த விரோதங்கள், உலக முதலாளித்துவத்தின்
நெருக்கடியில் வேரூன்றியுள்ளன, அத்துடன் தவிர்க்கமுடியாமல், இராணுவ மோதல் உட்பட, கூடுதலான
மோதல்களுக்கு வழிவகுக்கும்.
புஷ்ஷிடம் நிபந்தனையற்ற முறையில் அடிபணிந்ததற்கான இரண்டாம் காரணம்,
ஐரோப்பாவுக்குள்ளேயே நடைபெறும் வர்க்கப் போராட்டம் சம்பந்தப்பட்டதாகும்.
போருக்கு எதிராக நடத்தப்பெற்ற ஆர்ப்பாட்டங்கள், பாரம்பரிய அரசியல்
கட்சிகள், அமைப்புக்கள் இவற்றிற்கு அப்பால், பெரும்பாலும் சுயாதீனமாக அபிவிருத்தியானவையாகும். அவை
சமூகத்தில் பலதரப்பட்ட பிரிவினர், அரசியலில் குழம்பி இருப்பவர்களால் நடத்தப்பட்டன ஆனாலும், தங்களுடைய
மட்டுப்பாடுகள் ஒருபுறம் இருக்க, ஐரோப்பிய அரசாங்கங்களின் சமூகக் கொள்கைகளுக்கு எதிராக பெரிய
இயக்கங்களாக வளரக்கூடிய உண்மையான திறனைக் கொண்டவை ஆகும்.
சமீபத்திய ஆண்டுகள் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள்
மீது, "இடது சாரி", வலது-சாரி அரசாங்கங்கள் இரண்டுமே என்றுமிராது அதிகரித்த அளவில் நேரடியான
தாக்குதல்களால் பண்பிடப்படுகின்றன. உண்மையில், "இடது", "வலது" என்னும் சொற்கள்கூட, தங்களுடைய பழைய
அர்த்தத்தைத் தற்காலத்திய முதலாளித்துவ அரசியலில் இழந்துவிட்டன. ஜேர்மனியில் சமூக ஜனநாயகவாதிகளும்
பசுமைக் கட்சியினரும் கூட்டாக 1998-ல் ஆட்சி அமைத்ததிலிருந்து, நலன்புரி அரசின் கூறுபாடுகளை எல்லாம் தகர்த்து,
நாட்டை 120 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த பிஸ்மார்க் சகாப்தத்திற்கு பின்னோக்கிக் கொண்டு சென்றுவிட்டனர்.
2002 ஜேர்மன் தேர்தலில் ஷ்ரோடர் ஒரு அபாயகரமான விளையாட்டில்
ஈடுபட்டார். ஏற்கனவே தோற்றுவிடுவது போல் தெரிந்த தேர்தலில், பெரும்பாலான மக்களுடைய போர்
எதிர்ப்பு உணர்வுகளுக்கு முறையீடு செய்து, அத் தேர்தலில் வெற்றியும் பெற்றுவிட்டார். ஆனால் அவர்களுடைய சமூக
அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவேண்டும் என்ற நோக்கம் அவருக்கு அறவே இருந்ததில்லை. தேர்தலுக்குப் பிறகு,
அதிகாரத்துவ இறுமாப்பும், பெரிய முதலாளிகளுக்கு ஏற்ப நடந்துகொள்ளும் முறையையும் இணைந்து, அவருடைய
அரசாங்கம், கிட்டத்தட்ட நாளாந்த அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை நடத்தியது.
இது கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை விரைவில் அரித்து,
SPD-யுடைய தேர்தல் தளத்தையும் குறைத்து விட்டது. 1990-ல்
920,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்த கட்சி, 650,000 க்கு வந்துவிட்டது. கடந்த ஆண்டு மட்டும்
50,000 உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகினர். கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்களில்,
SPD-க்கான
ஆதரவு மிகக்குறைவாக 25 சதவிகிதத்தில்தான் உள்ளது, அதேவேளை எதிர்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக கட்சி (Christian
Democrats) 50 சதவிகிதம் என தங்கள் வலிமையை
உயர்த்திக் கொண்டுள்ளது.
வலதுபுற திருப்பமும், சமூக ஜனநாயக கட்சிகளின் சரிவும், முற்றிலும் ஜேர்மனிக்குரிய
இயல்நிகழ்ச்சி அல்ல. பிரிட்டனில், பிளேயரின் புதிய தொழிலாளர் கட்சி, மார்க்ரெட் தட்சரின் வேலை
திட்டங்களை அரவணத்துக் கொண்டது. பிரான்சில் சோசலிஸ்டுகள், 2002 தேர்தல்களில் பெரும் அழிவைத்
தந்திருந்த தோல்வியிலிருந்து மீளவே இல்லை. 1998, 15-ல் 11 அரசாங்கங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சமூக
ஜனநாயகவாதிகள் வசம் இருந்தன; 4 பழமைவாதிகளிடம் இருந்தன. இப்பொழுது சரியாக முற்றிலும்
எதிர்த்திசையில் இருக்கிறது.
இறுதி ஆய்வில், அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கிடையேயான கூர்மையான
மோதல், SPD
உடைய சீர்திருத்தக் கொள்கைகளின் அடிப்படைகளை அரித்து விட்டது.
பல தசாப்தங்களாக சமூக ஜனநாயகவாதிகளை ஆதரித்து வந்திருந்த அரசியல்
குழுக்கள், இந்த உண்மையை உணரக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்திய மாதங்களில், ஏதேனும் ஒருவிதத்தில்,
ஒரு புதிய இடதுசாரிக் கட்சியை ஏற்படுத்த, ஏராளமான ஆரம்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரிட்டனில், "ரெஸ்பெக்ட்" (Respect)
என்று அழைக்கப்பட்டுள்ள கூட்டணி ஒன்று நீண்டகால தொழிலாளர் கட்சித் தலைவரான ஜோர்ஜ் காலோவேயினால்
அமைக்கப்பட்டுள்ளது. பிரான்சில், பப்லோவாத LCR
(Ligue Communiste Revolutionnaire of Alain Krivine)
அமைப்பு, தொழிற்சங்க அதிகாரத்துவ பிரிவுகள், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட்
கட்சி, தீவிர குழுக்கள், பூகோளமயமாக்கல்-எதிர்ப்பு என்ற பலவற்றையும் அரவணைத்து, பரந்தமுறையில் ஒரு
"முதலாளித்துவ-எதிர்ப்பு இடது" கட்சியை அமைக்க அழைப்பு விடுத்துள்ளது. ஜேர்மனியில் ஒரு புதிய கட்சியின்
அறிக்கை, தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்குள்ளே சுற்றறிக்கைக்கு விடப்பட்டு, முதலாளித்துவ செய்தி ஊடகத்தின்
கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
இந்த முயற்சிகள் அனைத்துமே ஒன்றைப் பொதுவாகக் கொண்டுள்ளன. அவை
1960-கள், 1970-களின் சீர்திருத்தக் கொள்கைகளுக்கு திரும்பிச்செல்ல நினைக்கின்றன. தேசிய அரசு
கட்டமைப்பை பாதுகாக்கவேண்டும் என்ற கருத்தைக் கொண்டு, ஏதேனும் ஒரு விதத்தில் தேசியவாதத்தையும் அல்லது
பிராந்தியவாதத்தையும் மேலோங்க செய்கின்றனர். பொதுவாக, அவை அமெரிக்க எதிர்ப்புவாதத்திலிருந்து
விடுபடவில்லை. அவை அனைத்தும் அமெரிக்க தொழிலாள வர்க்கம் ஒரு அரசியல் சக்தியாகவும், கூட்டாளியாகவும்
இருக்கறது என்பதை ஒதுக்கி தள்ளுகின்றன.
அத்தகைய முன்னோக்கு நிலைத்திராதும் பிற்போக்கானதுமாகும். தொழிலாள
வர்க்கத்திற்கு இது ஒரு புதிய பொறியாகும். தொழிலாள வர்க்கம், சுதந்திரமான அரசியல் இயக்கத்தை
அபிவிருத்தி செய்வதற்கு இது ஒரு தடையாகும்.
இந்தப் போக்குகளுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், நம்முடைய கட்சி
ஐரோப்பியத் தேர்தலில், சர்வதேச சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில் தலையிடுகிறது. நாம் பழைய
சீர்திருத்தக் கணிப்புக்களை புதுப்பிக்க முயற்சி செய்யவில்லை; முற்றிலும் மாறுபட்ட முன்னோக்கின் பேரில்
தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கத்திற்காக முயற்சிக்கிறோம். ஐரோப்பிய ஒன்றியம், அதன் நிறுவன
அமைப்புக்கள், அதன் அரசியல் அமைப்பு ஆகியவற்றை நாம் நிராகரித்து, கீழ்மட்டத்திலிருந்து ஐக்கியப்படும் ஒரு
ஐரோப்பாவுக்கான முன்னோக்கை, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச ஒன்றியத்தை முன்வைக்கிறோம்.
ஐரோப்பாவில் இப்பொழுது ஒரு பொதுப் பாராளுமன்றம், கிட்டத்தட்ட எந்த அதிகாரமும்
இல்லாமல் உள்ளது; அது சட்டமியற்றவோ அல்லது, ஓர் அரசாங்கத்தை தேர்ந்து எடுக்கவோ முடியாதுள்ளது. இந்தப்
பாராளுமன்றம் நாட்டுக்குநாடு வித்தியாசமான தேர்தல் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சில நாடுகளில்
விகிதாசார வாக்கெடுப்பு உள்ளது, பெரும்பான்மை வாக்கெடுப்பு சில நாடுகளில் உள்ளது. சில நாடுகளில் சட்ட
அடிப்படையிலும், சில நாடுகளில் தேசிய அளவில் வாக்கெடுப்பும் நடைபெறுகிறது.
எமது கட்சி ஜேர்மனியில் தேசிய அளவில் 6 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மற்ற
நாடுகளில் தேர்தலில் நிற்கும் நிலையில் நாம் இப்பொழுது இல்லை. ஆனால் மற்ற நாடுகளிலும் பிரச்சாரத்தை மேற்கொள்வோம்,
நம்முடைய தேர்தல் அறிக்கை பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படும்.
ஜேர்மனியில் நமக்கு சட்டப்படி சரியான 4000 கையெழுத்துக்கள் தேர்தலில்
போட்டியிடத் தேவை ஆகும். அவற்றைச் சேகரிப்பது, இங்கு அமெரிக்காவில் இருப்பதைக் காட்டிலும் சிக்கல்
வாய்ந்தது. ஒவ்வொரு கையெழுத்தும், வேட்பாளர் பதிவு செய்திருக்கும் நகரமன்றத்தின் முத்திரையைக்
கொள்ளவேண்டும்; ஒவ்வொரு படிவமும் இரண்டு முறை கையெழுத்திடப்படவேண்டும். இரண்டாம் கையெழுத்தில்,
ஏதேனும் வடிவ முறையில் பிழையிருந்தால் வேட்பாளர் தண்டனைக்குரிய குற்றத்திற்காளாகின்றார் என்ற பொருளைக்
கொடுக்கும்.
இந்த இடையூறுகள் எல்லாம் இருந்தபோதிலும்கூட, கையெழுத்துச் சேகரிப்பு, முந்தைய
தேர்தல்களில் நாம் பங்குபெற்றபோது இருந்ததை விட நல்ல முறையில் நடந்தது.
SPD-க்கு மாற்றாக
நாங்கள் ஒரு கட்சியை கட்ட இருக்கிறோம் என்றவுடன், பெரும்பாலான மக்கள் கையெழுத்திட்டனர். சிலர் கூறினர்:
"SPD
க்கு எதிராக நான் எதிலும் கையெழுத்து இடுவேன்." அரசியல் சூழ்நிலை விரைவில் மாறிக்கொண்டிருக்கிறது, ஒரு
சோசலிச, சர்வதேச முன்னோக்கு பெருகிவரும் ஆதரவைக் கொண்டுள்ளது என்பதை இது தெளிவாக்குகிறது.
See Also :
போருக்கு
எதிரான போராட்டமும் 2004 அமெரிக்க தேர்தல்களும்
சோசலிச சமத்துவக்
கட்சி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கலந்து கொள்கின்றது
உலக சோசலிச
வலைத் தளம் - சோசலிச சமத்துவக் கட்சி மாநாட்டின் ஆரம்ப அறிக்கை
2004 அமெரிக்க தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் மூலோபாயம்
சோசலிச சமத்துவக்
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பில் வான் ஓகென்
WSWS-SEP மாநாட்டில் பேருரையாற்றுகிறார்
"2004 அமெரிக்கத்
தேர்தல்களில் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான குரல்"
சோசலிச சமத்துவக்
கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜிம் லோரன்ஸ், WSWS-SEP
மாநாட்டில் உரை நிகழ்த்துகிறார்
Top of page |