World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

US-backed military offensive in Pakistan costs scores of lives

பாக்கிஸ்தானில் அமெரிக்க ஆதரவு இராணுவ தாக்குதல்களால் கடும் உயிரிழப்பு

By Peter Symonds
23 March 2004

Back to screen version

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பழங்குடியினர் பகுதிகளில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இஸ்லாமிய போராளிகளுக்கும் பலத்த ஆயுதந்தாங்கிய 6,000- பாக்கிஸ்தான் துருப்புக்களுக்குமிடையே நடைபெற்ற ஒருவாரகால கடுமையான சண்டையில் இருதரப்பிலும் கடுமையான உயிர்சேதம் ஏற்பட்டது. தெற்கு வஷீரிஸ்தான் பகுதியில் பல்வேறு செங்கற்களால் உருவாக்கப்பட்ட மண் வீடுகளில் புகுந்து கொண்டிருந்த 400 முதல் 500 போராளிகளை சுற்றிவளைத்து இராணுவம், பீரங்கி ஹெலிகாப்டர், குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் போர் விமானங்களை பயன்படுத்தி கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

யார் எதிர்த்து நிற்கிறார்கள் என்பது தெளிவாக இல்லை. சென்ற வாரக் கடைசியில் பாக்கிஸ்தானின் இராணுவ பலவான் பர்வேஷ் முஷாரஃப், பாக்கிஸ்தான் இராணுவம் ''உயர் மதிப்புள்ள'' இலக்கில் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்பதால்தான் எதிர்தாக்குதல் கடுமையாக உள்ளது என்று கருத்துரைத்தார். அமெரிக்க மாற்றும் பாக்கிஸ்தான் இராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட ஊடக ஊக செய்திகள் தொடக்கத்தில் இதற்கு முக்கியமாக அல்கொய்தா தலைவர் ஐமன் அல் ஜவாஹிரியை சுட்டிக்காட்டின. பின்னர், ஆப்கானிஸ்தானில் வெளியேற்றப்பட்ட தலிபன் ஆட்சியின் கூட்டு வைத்திருந்த உஸ்பெக் மதகுரு குவாரி தாஹிர் யால்டாஷை சுட்டிக்காட்டியது.

நூற்றுக்கு மேற்பட்ட அரபுகள், செச்சென்யா, உஸ்பெக் மற்றும் மேற்கத்திய சீனாவை சேர்ந்த உய்குர்ஸ் இனத்தை சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக இராணுவம் அறிவித்தது. தன்னாட்சி உரிமை கொண்ட எல்லைப்பகுதிகளில் பாக்கிஸ்தான் இராணுவம் தலையிடுவதற்கு விரோதமாக செயல்பட்டவர்களில், கைது செய்யப்பட்டுள்ள போராளிகளில் எத்தனை பேர் "அல்கொய்தா" வினர் மற்றும் எத்தனைபேர் உள்நாட்டு மலைவாழ் மக்கள் என்பதும் நிச்சயமாகத் தெரியவில்லை. மடிந்துவிட்ட பல போராளிகள் உடலில் இராணுவம் DNA சோதனை நடத்தி வருகிறது. ஜவாஹிரி அல்லது குவாரி தாஹீர் யால்தாஷ் பொறியில் சிக்கிக்கொண்டிருக்கலாம், அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கூற்றுக்கள் இப்போது அமுக்கி வாசிக்கப்படுகின்றன.

வாஷிங்டனுடனான தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்வதற்காக அல்கொய்தா தலைவரை பிடிப்பது அல்லது கொல்வது என்பதில் முஷாரஃப் ஆட்சிக்கு அக்கறை உண்டு. அமெரிக்காவின் வலுவான அழுத்தங்களின் காரணமாக பெப்ரவரி முதல் 70,000-க்கு மேற்பட்ட பாக்கிஸ்தான் துருப்புக்கள் பழங்குடியினர் எல்லைப்பகுதிகளில் தீவிரமாக தேடுதல் வேட்டைகளை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்கா தலைமையில் 10,000-க்கும் மேற்பட்ட துருப்புக்கள் அரசாங்கத்திற்கு எதிரான படைகளுடன் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.

ஒசாமா பின்லேடன் அல்லது இதர தலைமை அல்கொய்தா மற்றும் தலிபான் உயர் தலைவர்களை பிடிப்பதன் மூலம் தேர்தல் நேரத்தில் முன்னணி நிலையில் இருக்க பொது ஜனத் தொடர்புகள் வெற்றி நடவடிக்கையை உருவாக்குவதற்கு புஷ் நிர்வாகத்தால் எடுக்கப்படும் ஆற்றொணா முயற்சியாக முழு நடவடிக்கையும் இருக்கிறது. வழக்கமான அமெரிக்காவின் படைகளுடன் பென்டகன் சிறப்புப் படைப் பிரிவுகளையும் அந்தப் பகுதிக்கு அனுப்பியுள்ளது. ஈராக்கில் சதாம் ஹூசைனை பிடித்ததாக கூறப்படும் பணிப் படை 121 (Task Force 121) உள்பட அப்பகுதிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. சென்ற வாரம் பிரிட்டனின் 100 SAS துருப்புக்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

பாக்கிஸ்தானின் இராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவின் தலையீடு எதுவுமில்லை என்று அமெரிக்கா மற்றும் பாக்கிஸ்தான் அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஏனெனில் ஏற்கனவே முஷாரஃபின் ஆட்டம் கண்டு கொண்டுள்ள அரசியல் நிலைப்பாட்டை மேலும் கீழறுக்கின்ற வகையில் அச்சுறுத்தல்கள் மற்றும் கண்டனங்களைத் தோற்றுவித்துள்ளன. பாக்கிஸ்தானுக்குள் எந்த அமெரிக்க போர்வீரரும் இல்லையென்பதை வாஷிங்டனும் இஸ்லாமாபாத்தும் வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்காவின் ஒத்துழைப்பு புலனாய்வு செயற்கைகோள் தகவல்கள் மற்றும் வேவு விமானங்கள் இதர நுட்ப கருவிகள் மூலம் கிடைக்கின்ற தகவல்கள் ஆகிய அளவோடு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக வாஷிங்டன் மற்றும் இஸ்லாமாபாத் இருதரப்பும் வலியுறுத்திக் கூறி வருகின்றன.

எவ்வாறாயினும், இதர சான்று அமெரிக்க இராணுவம் சம்பவங்களை வழிநடத்தவில்லை என்றால், தாக்குதல்களில் நெருக்கமாக சம்மந்தப்பட்டிருக்கிறதாக சுட்டிக்காட்டுகிறது. டிசம்பர் மாதம் பிரிட்டனின் டெலிகிராப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், ஜவாஹிரி அடைக்கலம் புகுந்திருக்கக்கூடும் என்று CIA அடையாளம் காட்டிய தெற்கு வசீரிஸ்தான் கிராமங்களில்தான் தற்போது தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவுக்கத் சுல்தான் பாக்கிஸ்தான் துருப்புகளுடன் ''ஒரு டசின் அல்லது அதற்கு மேலும்'' புலனாய்வு பிரதிநிதிகள் இணைந்து கொண்டிருப்பதாக ஒப்புக்கொண்டார். நடப்பு தாக்குல்களின் மத்தியில், அமெரிக்க இராணுவத்தின் மத்திய ஆணையகத்தின் தலைவரான, படைத் தளபதி ஜோன் அபிசய்த், நேற்று முன் அறிவிப்பு எதுவுமில்லாமல் இஸ்லாமாபாத்திற்கு விஜயம் செய்தார். ''வழக்கமான'' பேச்சுவார்த்தைகள் நடத்தினார் என்று கூறப்பட்டது.

முஷாரஃப் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக புஷ் நிர்வாகத்தை மிகப்பெருமளவில் சார்ந்திருக்கிறார். சென்ற வாரம் பாக்கிஸ்தானுக்கு விஜயம் செய்த அமெரிக்க அரசுத்துறை செயலர் கொலின் பவல் ''நேட்டோ அல்லாத பிரதான நட்பு நாடு'' என்ற அந்தஸ்தை பாக்கிஸ்தானுக்கு வாஷிங்டன் வழங்கியிருப்பதாக அறிவித்து அவரை மேலும் ஊக்குவித்தார். இதன் மூலம் அமெரிக்க இராணுவ தொழில்நுட்பம், பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் பயிற்சியில் பாக்கிஸ்தான் கூடுதலாக வாய்ப்புகளுக்கு அணுகக் கூடும். ஆனால் வாஷிங்டனின் ''பயங்கரவாதத்திற்கு எதிரான பூகோள போர்'' மற்றும் அது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கை பிடித்துக்கொண்டதற்கும் முஷாரஃப் ஆதரவு அளித்து வருவது பாக்கிஸ்தானுக்குள் பரவலான எதிர்ப்பை தோற்றுவித்துள்ளது.

தற்போது நடைபெற்ற தாக்குதல்கள் பழங்குடி பகுதி மக்களிடையே மேலும் ஆத்திரத்தை வளர்த்துள்ளது. அந்தப்பகுதிகள் இஸ்லாமாபாத்திலிருந்து ஓரளவிற்கு தன்னாட்சி உரிமையைப் பாரம்பரியமாக கொண்டுள்ளன. அந்தப் பகுதி நடைமுறைப்படி இராணுவம் மற்றும் போலீஸ் அங்கு செல்ல முடியாது. தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக பாக்கிஸ்தான் இராணுவம் அந்தப் பகுகளில் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்து பாணியில் ஒட்டுமொத்தமாக ''கூட்டான தண்டனைகளை'' விதித்து வருகிறது. இப்போது நடைபெற்றுவருகின்ற இராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பு வகிக்கும் பாக்கிஸ்தானின் லெப்டினட் ஜெனரல் சப்தார் ஹூசைன், யார்குல் கேல் பழங்குடி மக்களை தனிமைப்படுத்தி அவர்கள்தான் ''வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு'' உதவிவருகிறார்கள் என்றும், ''பழங்குடி மக்களை தண்டிப்பதில் நான் உறுதியாகவும், மற்றவர்களுக்கு அவர்களை முன் மாதிரியாக இருக்கச்செய்வேன்'' என்று அவர் அறிவித்தார்.

தெற்கு வசீரிஸ்தானில் மிகக்கடுமையாக சண்டைகள் நடந்து வருகின்றன. சென்ற செவ்வாய் அன்று பாக்கிஸ்தான் படைகள் உள்ளூர் பழங்குடிமக்களை கைது செய்ய முயன்றபோது கடுமையான எதிர்ப்பு எழுந்தது. தொடக்கத்தில் நடைபெற்ற இந்த மோதலில் குறைந்த பட்சம் 15-போர் வீரர்களும், 26 எதிர்ப்பு போராளிகளும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் படைகள் ஒப்புக்கொள்கின்றன. ஆயிரக்கணக்கான துருப்புக்கள் சுற்றி வளைத்து பாக்கிஸ்தான் இராணுவத்தால் அப்பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. பீரங்கி தாக்குதல்கள் மற்றும் விமான குண்டுவீச்சு மூலம் கூட ஆயுதந்தாங்கிய எதிர்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியவில்லை.

பல்லாயிரக்கணக்கான குடிமக்கள் தங்களது வீடுகளிலிருந்து தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது, பல ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டு விட்டனர். வானா பகுதியைச் சார்ந்த 25-வயதான ரஹ்மான் வாசீர் பத்திரிகைக்கு பேட்டியளிக்குபோது ''என்னால் கற்பனை செய்துபார்க்க முடியாத அளவிற்கு ஏராளமான மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். ஆண்களும், பெண்களும், அலறித் துடிக்கின்றனர். அவர்களது வீடுகளை விட்டு வெளியேறிவிட்டார்கள், தோட்டங்களை துறந்து சென்றுவிட்டார்கள்'' என்று குறிப்பிட்டார்.

அசோசியேடட் பிரஸ் சென்ற வாரம் 12-வயது சிறுவன் டின் மொகம்மது குண்டுபாய்ந்து கொல்லப்பட்ட சம்பவத்தை தெரிவித்திருக்கிறது. அவனது இரண்டு சகோதரிகளான 10-வயது ஹசீனா 2-வயது அஸ்மினா இருவரும் வானாவிலுள்ள ரஹ்மான் மருத்துவ வளாகத்தில் துப்பாக்கி குண்டு காயங்களுக்காக சிகிச்சை பெற்றுவந்தனர். ''பகல் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தோம் திடீரென்று சுட ஆரம்பித்தார்கள் எங்களது முற்றத்தை அது தாக்கியது. நான் எனது சகோதரனை மிக அதிகமாக நேசித்தேன். இப்படிப்பட்ட நடவடிக்கைக்கு உள்ளாக நாங்கள் என்ன செய்தோம்?'' என்று ஹசீனா கேட்டார்.

பிரிட்டனிலிருந்து வெளிவரும் இன்டிபென்டன்ட் பத்திரிகை, சனிக்கிழமையன்று ஐந்து வாகனங்கள் மீது துப்பாக்கியால் சுட்டபொழுது இரண்டு டசின் உள்ளூர் மக்கள் கொல்லப்பட்டதாக அறிவித்தது. பேருந்து எதிரணிப் போராளிகளால் சுடப்பட்டதாக இராணுவம் கூறிய கூற்றை, உள்ளூர் மக்கள் மறுத்தனர், அந்த வாகனத்தில் பாக்கிஸ்தான் ஹெலிகாப்டர்கள் குண்டுவீசி தாக்கியதாகவும் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் ஐந்து பெண்கள் உட்பட தனது உறவினர்கள் 12 பேர் மாண்டுவிட்டதாக ஜயின் உல்லா தெரிவித்தார். எனது மாண்டுவிட்ட மைத்துனரின் மூன்று குழந்தைகள் காயமடைந்தனர் என்றும் அவர் கூறினார்.

சென்றவார கடைசியில் டேரா இஸ்மாயில்கான் நகரில் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக டசின் கணக்கில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ''அமெரிக்காவின் நன்மைக்காக அரசாங்கம் இந்த நாடகத்தை நடத்துகிறது'' என்று ஆர்பாட்டம் செய்த செர்பைஸ் அன்சாரி ஊடகங்களுக்கு தெரிவித்தார். ''இதன் விளைவாக பழங்குடிமக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எங்கள் பகுதியில் பயங்கரவாதிகள் எவருமில்லை. அல்-கொய்தாவும் இல்லை'' என்று அவர் கூறினார்.

வடமேற்கு எல்லைப்புற மாகாண தலைநகரான பெஷாவரில், நூற்றுக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக அணிவகுத்தும், இந்தப் போரில் குடிமக்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும் கண்டனம் தெரிவித்தனர். ''FBI வெளியேறு'' ''அல்கொய்தா என்ற பெயரால் பழங்குடிப் பகுதிகளில் நடத்தும் போரை நிறுத்து'' என்பது போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

1980-களில் ஆப்கானிஸ்தானை சோவியத் ஒன்றியம் பிடித்துக்கொண்டிருந்த போது அவர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் வாஷிங்டன் அல்கொய்தாவையும், இதர வெளிநாட்டு இஸ்லாமிய போராளிகளையும் ஆதரித்து வந்தது. என்று பழங்குடி மக்கள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மவுலன் கலீல்-உர்-ரெஹ்மான் குறிப்பிட்டிருந்தார். வானாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் 'வெளிநாட்டு போராளிகள்' சோவியத் யூனியனுக்கு எதிராக போரிட்டபோது அவர்கள் இஸ்லாத்தின் வீரர்களாக இருந்தார்கள், இப்போது முஷாரஃப்பாலும் அமெரிக்காவாலும் அவர்கள் பயங்கரவாதிகள் என்று நமக்கு கூறப்படுகிறார்கள்.

சென்ற ஞாயிறன்று, இஸ்லாமாபாத்தில் 70 முக்கியமான இஸ்லாமிய மதகுருமார்கள் திரண்டு, ஒரு மத ஆணையை வெளியிட்டனர், தெற்கு வசீரிஸ்தானில் நடவடிக்கையை பாக்கிஸ்தான் இராணுவத்தால் நடத்தப்படும் ''நீதியற்ற போர்'' என்று அறிவித்தனர்.

இப்படி வளர்ந்து வருகின்ற எதிர்ப்பை தடுத்து நிறுத்துகின்ற ஒரு முயற்சியாக, பாக்கிஸ்தான் இராணுவம் திங்களன்று ஒரு தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டது. யார்குர் கேல் பகுதி தலைவர்களோடு ஒரு பேரத்தை உருவாக்க பழங்குடி மக்கள் மூத்த தலைவர்களுக்கு தரகராக செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இந்த பிரமுகர்கள் மூன்று அரசாங்க கோரிக்கைகளை முன் வைக்கவிருக்கின்றனர்: 12 இராணுவ வீரர்களையும், 2 அரசாங்க அதிகாரிகளையும் விடுதலை செய்யவேண்டும்; போரில் சம்மந்தப்பட்ட பழங்குடியினரை ஒப்படைக்கவேண்டும்; வெளிநாட்டு போராளிகளை பிடிப்பதற்கு உதவ வேண்டும் மற்றும் அவர்களை வெளியேற்ற வேண்டும்.

இந்தக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் சாத்தியக்கூறு இல்லை, எனவே மேலும் போர் தொடங்குவது தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved