World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Hundreds of thousands join in international protests against Iraq war

Demonstrations in more than 45 countries

ஈராக் போரை எதிர்த்து அனைத்துலக ரீதியாக நூறாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம்

45 ற்கு மேற்பட்ட நாடுகளில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடாத்தப்பட்டன

By Chris Marsden
22 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் பாரசீக வளைகுடா நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்காக, ஈராக் மீது படையெடுத்துச் சென்ற ஓராண்டு நிறைவையொட்டி உலகம் முழுவதிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ரோம் நகரில் மிகப் பெரிய கண்டனப்பேரணி முதலாண்டு யுத்த நிறவையொட்டி நடைபெற்றது. இதனைப் போன்று உலகின் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மாநகர மற்றும் நகரங்களில் நடந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் நூறாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

45 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ''அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது படையெடுத்து ஆக்கிரமித்துக்கொண்டுள்ள துருப்புக்கள் வெளியேற வேண்டுமென்று கோரிக்கை விடுத்து சனிக்கிழமை நடைபெற்ற ஒராண்டு நிறைவு கண்டனப் பேரணிகளில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் உலகம் முழுவதிலும், மாநகர தெருக்கள் வழியாக அணிவகுத்துச் சென்றனர்'' என்று ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. (நியூயோர்க், வெஸ்ட் கோஸ்ட், மிச்சிகன், கனடா, ரோம், ஸ்பெயின், லண்டன், ஜேர்மனி, மற்றும் ஆஸ்திரேலியா பற்றிய செய்திகளையும் பார்க்கவும் - See on-the-spot reports from New York, the West Coast and Michigan, Canada, Rome, Spain, London, Germany and Australia.)

அமெரிக்காவின் அமைதி செயலூக்கர்களின் தகவல்படி, போருக்கும், ஈராக் மீதான ஆக்கிரமிப்பிற்கும் எதிராக 575 க்கு மேற்பட்ட கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. புஷ் நிர்வாகத்திற்கு எதிராக நிலவுகின்ற ஆழமான விரோதப்போக்கை வெளிப்படுத்துகின்ற வகையில் நியூயோர்க் மாநகரில் 100,000 மக்கள் கலந்து கொண்டது உட்பட அமெரிக்காவில் மட்டும் 300 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளனர்.

உலக சோசலிச வலைத் தள மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள் வட அமெரிக்காவின் பல நகரங்களிலும் ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா நகரங்களிலும் நடைபெற்ற பேரணிகளில் ''ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் பிந்தைய ஒராண்டு'' (One year since the US invasion of Iraq) என்ற அறிக்கையின் ஆயிரக்கணக்கான பிரதிகளை விநியோகித்தனர்.

ஐரோப்பா

ரோம் நகரில், இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி போருக்கு ஆதரவு தெரிவித்ததைக் கண்டித்து குறைந்தபட்சம் ஒரு மில்லியன் மக்கள் (அமைப்பாளர்கள் 2 மில்லியன் என்று கூறுகின்றனர்) ஆர்ப்பாட்டம் செய்தனர். பெர்லுஸ்கோனியை ஜனாதிபதி புஷ்ஷின் செல்ல நாய்குட்டியாக சித்தரிக்கும் கேலிச்சித்திரமொன்று மிக பிரம்மாண்டமாக வரைந்து ஒரு லாரியில் இழுத்து வந்தனர். இத்தாலி முழுவதிலுமிருந்து 1500 க்கும் மேற்பட்ட வாகனங்களிலும் மற்றும் 12 தனி ரயில்களிலும் ரோம் நகருக்கு வந்தனர். ''சமாதானத்திற்கு இணைந்து நிற்கிறோம்'' என்ற பதாகைகளை ஏந்தியபடி மக்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

இத்தாலியில் நடைபெற்ற ஆர்பாட்டங்களுக்கு பலமாக அமைந்தது என்பதானது, ஸ்பெயின் நாட்டு மக்கள் போருக்கு ஆதரவான பாப்புலர் கட்சி அரசாங்கத்தை மார்ச் 14 தேர்தலில் தோற்கடித்த செயலாகும். மாட்ரிட்டில் மார்ச் 11 ல் நடைபெற்ற குண்டுவீச்சு தாக்குதல்களின்போது 202 பேர் மாண்டனர். இந்தத் தாக்குதலை இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்தியதாக நம்பப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரம் பெருகியதால் பாப்புலர் கட்சி தோல்வியடைந்தது.

மாட்ரிட்டில் மாலை நேரத்தில் நடைபெற்ற கண்டனப்பேரணியில் 100,000 மக்கள் திரண்டு ஈராக்கிற்கு அனுப்பப்பட்டுள்ள 1300 ஸ்பெயின் துருப்புக்களை திரும்ப அழைக்ககோரினர். பார்ஸிலோனாவில் 200,000 மக்கள் அணிவகுத்து சென்றனர். அதற்கு முன்னர் ஸ்பெயின் முழுவதிலும் ஈராக் ஆக்கிரமிப்புக்கு எதிராக கண்டனப்பேரணிகள் நடத்தப்பட்டன. பிற்பகலில் டசின் நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்து அது பகல் முழுவதும் நீடித்தது. மாட்ரிட்டில் பலியானவர்களை நினைவுபடுத்தும் வகையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

லண்டனில் 25,000 ற்கும் மேற்பட்ட மக்கள் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சுற்றுப்புற சூழல் இயக்கத்தைச் சேர்ந்த (Greenpeace) இரண்டு தொண்டர்கள் லண்டன் நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகில் அமைந்துள்ள மிக உயர்ந்த மணிக்கூண்டில் (Big Ben) ஏறி ''இதுதான் உண்மை வெளிவரும் நேரம்'' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கொடியைப் பறக்கவிட்டனர்.

ஹைட் பார்க்கிலிருந்து ட்ரேபல்கர் சதுக்கத்திற்கு அணிவகுத்து வந்த ஊர்வலத்தில் ''புஷ்ஷூக்கு எதிரான, பிளேயருக்கு எதிரான மற்றும் எல்லா இடங்களிலும் போருக்கு எதிரான'' வாசக முழக்கங்கள் நிறைந்து காணப்பட்டன. ஈராக்போர் மற்றும் மாட்ரிட் குண்டுவீச்சு அட்டூழியங்களில் மாண்டுவிட்டவர்கள் நினைவாக ஆயிரக்கணக்கான பலூன்கள் பறக்கவிடப்பட்டன. ஆரப்பாட்டக்காரர்கள் ட்ரைடன் (Triden) ஏவுகணை போன்று ஊதப்பட்ட பலூன் பொம்மைகளை தூக்கி வந்தனர். அவர்களுடன் செயலூக்கர்கள் (activists) ஆயுத சோதனையாளர்களைப் போன்று உடைகள் அணிந்து வந்தனர்.

ஸ்கொட்லாந்தில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜோர்ஜ் சதுக்கத்திலிருந்து செயின்ட் ஈநோக் சதுக்கத்திற்கு கிளாஸ்கோவில் அணிவகுத்து வந்தனர்.

ஜேர்மனியில் 70 மாநகர, நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பேர்லினில் நடைபெற்ற பேரணியில் 3000 ம் பேர் கலந்து கொண்டதுடன், ராம்ஸ்ரைன் பகுதியிலுள்ள அமெரிக்க விமானத் தளத்திற்கு வெளியில் ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்து வந்தனர்.

பிரான்சில் பாரிஸ், மார்ஸ்சேய், லியோன், துலூஸ் மற்றும் இதர நகரங்களில் போர் எதிர்ப்பு பேரணிகள் நடைபெற்றன. பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் 1000 பேர் பங்கெடுத்துக் கொண்டனர்.

கிரேக்கத்தில் 10,000 பேர் ஏதன்ஸ் நகரிலுள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி கண்ட ஊர்வலத்தை நடாத்தினர். அவர்களை கட்டுப்படுத்துவற்கு நூற்றுக்கணக்கான கலவர போலீசார் எதிர்த்து நின்றனர்.

அயர்லாந்தில் டப்ளினின் பர்னல் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிவிவகாரத்துறை அலுவலகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.

நெதர்லாந்தில் ஆயிரக்கணக்கானோர் ஆம்ஸ்ரடாமிலுள்ள டாம் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு, அரசியின் தயார் ஜீலியானா காலமாகி விட்டதால் அன்று ஒரு பகுதி விடுமுறை தினமாக இருந்தது.

சுவிட்சர்லாந்தின் தலைநகர் பேர்னில் 3,000 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

டென்மார்க்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில், நூற்றுக்கணக்கானோர் பிடித்து வந்த பதாகைகளில் ''ஸ்பெயினைப் போல் செயல்படுங்கள், துருப்புக்களை விலக்கிக்கொள்ளுங்கள்'' என்று எழுதப்பட்டிருந்தன.

துருக்கி தலைநகர் அங்காரவில் 1,000 ம் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்திற்கு அணி வகுத்துச்சென்று புஷ் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வதற்காக அடையாளச் சின்னமாக மிகப்பெரிய டிக்கட் ஒன்றை தூதரக அதிகாரிகளிடம் கையளித்தனர். ''அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக'' ''மத்திய கிழக்கில் காணாமல் போய்விட்ட அமெரிக்கா'' ''ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வை'' என்ற வாசகங்கள் பதாகைகளில் எழுதப்பட்டிருந்தன. இஸ்தான்புல்லில் ஆயிரக்கணக்கானோர் ஈராக் ஆக்கிரமிப்பை கண்டித்தும், ஜீனில் தங்களது நகரத்தில் நேட்டோ உச்சி மாநாடு நடத்தப்படுவதை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஹங்கேரியில் புடாபெஸ்ட் வீரர்கள் சதுக்கத்தில் தீவட்டி ஏந்திய மனிதச்சங்கிலி அணிவகுப்பு நடைபெற்றது.

பல்கேரியா தலைநகர் சோபியாவில் கலாச்சார தேசிய அரண்மனைக்கு முன்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டும், தேசிய படக்காட்சி அரங்கை நோக்கி அணிவகுத்தும் சென்றனர்.

செக் குடியரசில் 300 பேர் தலைநகர் பராக்கில் கண்டனப்பேரணி நடத்தினர். அமெரிக்க, அரபு மற்றும் செக் இனத்தவர்கள் அமெரிக்க தூதரகத்தை நோக்கி பலத்த போலீஸ் பாதுகாப்போடு அணுவகுத்து சென்றனர். போரில் மாண்டுவிட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகின்ற வகையில் சார்லஸ் பிரிட்ஜ் பகுதியில் கருப்பு உடையணிந்து மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. நாட்டின் பிற பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சுலோவேனியா தலைநகர் லிஜூபில்ஜனாவில் அமெரிக்க தூதரகத்திற்கு முன்னர் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பேரணியில் அணிவகுத்து சென்றவர்கள் ''இது உங்களது போர் பலியாவோர் நாங்கள்'' என்ற முழக்கங்களை எழுப்பினர்.

ரஷ்யாவில் அமெரிக்க ஆக்கிரமிப்பைக் கண்டித்து 11 மாநகர தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாஸ்கோவிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியிலும் திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஐக்கிய அரசும், அமெரிக்காவும்

நியூயோர்க் நகரத்தில் கண்டனப் பேரணிகளுக்கு ஏற்பாடு செய்தவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான அளவிற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிதிரண்டிருந்தனர். 45 வரிசைக் குடியிருப்புக்கள் வரை நீண்டு கொண்டுபோன பேரணியில் 100,000 மக்கள் கலந்து கொண்டனர். முன்னே சென்ற அணியினர் பேரணி நிறைவடையும் இடத்தில் சேர்வதற்கு முன்னர் 15 நிமிடங்கள் காத்திருந்து செல்ல வேண்டிய அளவிற்கு பின் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணி திரண்டு வந்தனர்.

சான்பிரான்சிஸ்கோவில் 50,000 பேர்களும், லாஸ் ஏஞ்சல்ஸில் 20,000 பேர்களும், சிக்காகோவில் 10,000 பேர்களும் கலந்துகொண்ட இதர பெரிய ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும் நடைபெற்றன.

சிலி, வெனிசுலா மற்றும் பிரேசில் உட்பட பல லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடைபெற்றன.

ஆசியா

உலக ரீதியாக ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியது போல் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இதர நாடுகளிலும் கண்டனப் பேரணிகள் நடைபெற்றன. ஆசியாவிலும் இது ஊடறுத்துச் சென்றது.

ஆஸ்திரேலியாவில் சிட்னியின் ஹைட் பார்க் பகுதியில் 5,000 பேர்கள் நகரின் மத்திய வர்த்தக மாவட்டத்தை நோக்கி அணிவகுத்து சென்றனர். மெல்போர்ன் நகரில் இரண்டாயிரம் பேரும், இதர பிரதான நகரங்களான பிரிஸ்பேன், பேர்த், அடிலைட்டு மற்றும் கன்பெராவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சிட்னி மற்றும் மெல்போர்ன் நகர்களில் கலந்துகொண்ட பேரணியினர் ஈராக்கிலிருந்து 850 ஆஸ்திரேலிய துருப்புக்கள் உட்பட அனைத்து துருப்புக்களும் வெளியேறி ஈராக் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கோரினர்.

சிட்னியில் பிரதமர் ஜோன் ஹோவார்டின் ஐந்த அடி உயர உருவப் பொம்மையை கூண்டில் அடைத்து தூக்கிச் சென்றனர். குவாண்டநாமோ சிறை முகாமில் அமெரிக்க இராணுவம் காவலில் வைத்துள்ள ஆஸ்திரேலிய கைதிகளை எடுத்துக்காட்டுகின்ற வகையில் இந்தக் காட்சி அமைந்தது.

மெல்போர்ன் பேரணியில், குவாண்டநோமோ சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கைதியான டேவிட் ஹிக்ஸின் தந்தை டெர்ரி ஹிக்ஸ் உரையாற்றினார்.

நியூஸ்லாந்தில் முக்கிய மையப் பகுதியான ஓக்லாண்ட், வெலிங்டன் மற்றும் கிரிஸ்ட்சர்ச் நகரங்களில் சுமார் 2,000 மக்கள் அணிவகுத்து சென்ற பேரணிகளும் நடைபெற்றன. நியூஸ்லாந்து தலைநகரமான, வெலிங்டனில் பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள மத்திய வர்த்தக மையத்திற்கு அருகில் 300 முதல் 400 மக்கள் பாண்டு வாத்தியங்களோடு, தாரை தப்பட்டைகள் அடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ''ஜோர்ஜ் புஷ்ஷூடைய போரிலிருந்து நியூஸ்லாந்து விலகிக்கொள்ள வேண்டும்'' என்ற பதாகை அணிவகுப்பின் முன்னே கொண்டு செல்லப்பட்டது.

ஜப்பானில் 1,20,000 பேர் கண்டப் பேரணிகளில் கலந்து கொண்டனர். இதில் டோக்கியோவில் நடைபெற்ற இரண்டு பேரணிகளில் ஒவ்வொன்றிலும் 30,000 பேர் வீதமும், ஒஸாகாவில் நடைபெற்ற இரண்டு ஆர்ப்பாட்டங்கள் ஒவ்வொன்றிலும் 10,000 பேர் வீதமும் கலந்து கொண்டனர். டோக்கியோ பேரணியில் கலந்து கொண்ட சிலர் மண்டை ஓடுகள் போன்று சித்திரம் வரையப்பட்ட முகமூடிகளை அணிந்து வந்தனர். ''புஷ்ஷை கீழே போடுங்கள், குண்டை போடாதீர்கள்!'' என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்தனர். மற்றவர்கள் ''ஈராக்கிலிருந்து ஜப்பானின் படைகள் வெளியேற வேண்டும்!'' என்று பாடியும் வந்தனர். ஈராக்கின் தென் பகுதியில் தற்போது 250 ஜப்பான் தரைப்படைகள் பணியாற்றி வருகின்றன. இறுதியில் இது 1,000 அளவிற்கு உயர்த்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஹோங்கொங்கில் சுமார் 100 ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க துணை தூதர் அலுவலகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். ''போர் வேண்டாம்'', ''அமைதிதான் வேண்டும்'', ''மத்திய கிழக்கில் போரை நிறுத்து'', ''அமைதியில் தான் நீதியை நிலைநிறுத்த முடியும்'' என்பது போன்ற பாட்டு முழக்கங்களை எழுப்பி வந்தனர்.

பிலிப்பைன்ஸில் சுமார் 500 கண்டன ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்தை நோக்கிச் செல்ல முயன்றபோது கலவரத் தடுப்பு போலீசாருடன் மோதிக்கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ''கூட்டணிப் படைகளின் பொய்யர்களுக்கு'' எதிராக முழக்கமிட்டு, பாதுகாப்பு அலுவலர்களை நோக்கி கல்லெறிந்தனர். பதிலுக்கு அவர்கள் மீது தண்ணீரைப் பீச்சியடித்து தாக்குதல் நடாத்தப்பட்டது. அதற்கு முந்திய நாளில் பயான் முனா (Nation First) என்ற கட்சியினர் மணிலாவிலுள்ள மாநகர கியூஸ்ஸான் நினைவு வட்டத்தில் திரண்டு ஈராக்கிலிருந்து படைகளை விலக்கிக்கொள்ள வேண்டுமென்று முழக்கமிட்டனர்.

தென்கொரியாவில் ஈராக் போருக்கெதிராக பல நகர்களில் பல்லாயிரக்கணக்கானோர் பேரணிகளில் கலந்து கொண்டனர். சியோலில் பத்தாயிரக்கணக்கானோர் பேரணியில் அணிதிரண்டிருந்தனர். இதர மூன்று நகரங்களான டாகு, புசன் மற்றும் குவாங்யூ (Taegu, Busan, Kwangju) ஆகியவற்றிலும் சிறிய பேரணிகள் நடைபெற்றன.

பாக்கிஸ்தானில் 20 நகரங்களில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. உடனடியாக ஈராக்கிலிருந்து அமெரிக்கா மற்றும் வெளிநாட்டுப் படைகள் வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வற்புறுத்தினர். கிழக்குப்பகுதி நகரான லாகூரில் 2000 ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு ''ஈராக்கிலிருந்தும், ஆப்கானிஸ்தானிலிருந்தும் அமெரிக்கர்கள் வெளியேறு'' மற்றும் ''ஈராக்கிலுள்ள வெளிநாட்டு துருப்புக்களே வெளியேறு'' என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தென்னிந்திய மாநிலமான கேரளத்தில் கொச்சி நகரிலுள்ள அமெரிக்க வங்கியான சிட்டி பாங்கில், பத்திரிகைகளில் இரும்புத்தடிகளை மறைத்துக்கொண்டு 10 ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே புகுந்து கம்பியூட்டர்களையும், ஜன்னல்களையும் தாக்கினர். அவர்கள் ஓடுவதற்கு முன்னர் ''அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக'' என்ற முழக்கங்களை எழுப்பினர்.

காஷ்மீரில் சுமார் 700 பேர், ஸ்ரீநகரில் அணிவகுத்து நடந்து ''ஈராக்கிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற வேண்டுமென்று'' முழக்கமிட்டனர்.

டாக்காவில் 100 ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியில் நாடகம் நடத்தி வங்கதேச அரசு அமெரிக்க தூதர் அரி தோமஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாதென்று முழக்கமிட்டனர்.

மத்திய கிழக்கு நாடுகள்

மத்திய கிழக்கு நாடுகளின் தலைநகரங்களில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் போருக்கெதிராக கண்டனப் பேரணிகளை நடத்தினர். ஈராக்கில் போருக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ எந்த ஆர்ப்பாட்டங்களும் நடக்கவில்லை. ஆனால் முந்திய தின மாலையில் ஈராக் சன்னிகளும், ஷியைட்டுகளும் இணைந்து தங்களது நாட்டிலிருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேற வேண்டுமென்று கண்டனப்பேரணி நடத்தினர். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர் 3.000 பேர் அமைதிப்பேரணி நடத்தி தங்கள் நாட்டில் அமெரிக்க இராணுவம் மற்றும் சதாம் ஹூசைன் ஆட்சி கூடாது என்று முழக்கமிட்டனர்.

''சதாம் ஹூசைனும் வேண்டாம், அமெரிக்கர்களும் வேண்டாம். இஸ்லாம்தான் வேண்டும்'' என்று காஸிமியா மசூதியிலிருந்து தொழுகை முடிந்து வெளியேவந்த பக்தர்கள் முழக்கமிட்டனர். ஷியைட்டுகளின் மிகப் புனிதமான பாக்தாத்தின் இமாம் மூஸா அல்-காசிமின் நினைவிடம் இந்த மசூதியில்தான் உள்ளது. டைகிரீஸ் ஆற்றுக்கு அப்பால் சன்னி ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது மசூதிகளில் திரண்டிருந்தார்கள். அவர்களோடு ஷியைட்டுகளும் இணைந்து அரபு மற்றும் ஆங்கில மொழி முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்தனர். அவற்றில் ''அமெரிக்க பயங்கரவாதத்தை'' கண்டித்தும், ''ஈராக்கை அழிப்பதை முற்றுப்புள்ளி'' வைக்குமாறும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அமெரிக்க துருப்புக்கள் ஈராக் மக்கள் மீது கண்டபடி சுடுவதையும் கண்டித்தனர்.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக்கரை பகுதியான மொதினில் (Modi'in) தடுப்புவேலி அமைப்பதை எதிர்த்து ஆர்பாட்டம் செய்த பாலஸ்தீன மக்களுக்கெதிராக இஸ்ரேலியப் படைகள் ரப்பர் குண்டுகளால் சுட்டதில் ஐந்து பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹிர்பாட்டா கிராமத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர். தடுப்புவேலி அமைக்கப்பட்ட பகுதியில் 500 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆப்பிரிக்கா

எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் 2000 முதல் 3000 மக்கள் வரை திரண்டிருந்தனர். தஹ்ரீர் சதுக்கத்தில் அமெரிக்காவும், பிரிட்டனும் ஈராக்கில் பேரழிவுகரமான ஆயுதங்கள் எதையும் கண்டுபிடிக்க தவறியதை கேலிசெய்யும் முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்தனர். ''மக்களைக் கொன்று குவிக்கும் பேரழிவுகரமான ஆயுதங்கள் எதுவுமில்லை. ஆனால் 20,000 ஈராக் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்... இதுதான் புஷ்ஷின் ஜனநாயகம்'' என்று ஒரு பதாகையில் எழுதப்பட்டிருந்தது. அதில் ஒன்றில் ''இன்சா அல்லாஹ், மிஸ்டர் புஷ்ஷும், மிஸ்டர் பிளேயரும், மிஸ்டர் அஸ்னாரைத் தொடர்ந்து வீட்டிற்கு செல்வார்கள்'' என்ற முழக்கம் அடங்கியிருந்தது. சிலர் அரபு மொழியில் ''பாக்தாத்தே வலுவாக நில், அமெரிக்காவை துன்பத்தில் ஆழ்த்து'' என்று முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை சுற்றிவளைத்துக் கொண்டு 5,000 கலவர தடுப்பு போலீசார் நின்றனர். போரை எதிர்க்க தவறிவிட்ட அரபு ஆட்சிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டித்தனர். ஒரு கறுப்பு ஆடையால் மூடப்பட்ட எழுத்துகள் பொறிக்கப்பட்ட சவப்பெட்டியை ஆர்ப்பாட்டக்காரர்கள் தூக்கி வந்தனர். அதற்கு மேல் ''இங்குதான் அரபு அரசாங்கங்கள் கிடக்கின்றன'' என்ற வாசகம் அடங்கியிருந்தது.

"Zio - அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான சர்வதேச பிரச்சாரம்'' என்று அழைத்துக் கொண்ட ஒரு அமைப்பு இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீனியர்களின் போராட்டத்திற்கு ஆதரவையும் இவர்கள் வழங்கி வருகின்றனர்.

Top of page