World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா : இலங்கைA split in the LTTE heightens danger of war in Sri Lanka LTTE- ல் பிளவு இலங்கையில் போர் அபாயத்தை உச்சநிலைக்கு கொண்டு செல்கிறதுBy K. Ratnayake தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் (LTTE) வடக்கு மற்றும், கிழக்கத்திய பிரிவுகளில் பெரிய பிளவு வெடித்திருப்பது, இலங்கையில் நடப்பு போர் நிறுத்தத்தைச் சீர்குலைகும், மீண்டும் நாட்டை உள்நாட்டுப் போரில் மூழ்கடிக்கும் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்தக் கட்டத்தில் போர் எதுவும் நடைபெறாவிட்டாலும், இரண்டு LTTE முகாம்களுக்கு இடையில் பதட்டம் மிக்க எதிர்நிலை தொடர்கையில், இலங்கை இராணுவம் தலையிட்டால் வன்செயல்கள் அதிகரிகக்கூடும். மார்ச் 13-ல் LTTE கிழக்கத்திய மாகாண இராணுவ தளபதியான கருணா என்றழைக்கப்படும் V. முரளிதரன் பிளவைப் பற்றி விளக்கி இரண்டு கடிதங்களை எழுதினார். முதல் கடிதத்தில் LTTE தலைவர் பிரபாகரனுக்கு, LTTE-யுடைய கிழக்கத்திய பிரிவு ''சுதந்திரமாக செயல்படுவதற்கு'' கோரிக்கை விடுத்திருந்தார் மற்றும் கிழக்கு அம்பாறை மாவட்டங்களுக்கு தனி நிர்வாக, அமைப்பை உருவாக்கப்பட வேண்டுமென்று கோரியிருந்தார். போர் நிறுத்தத்தை கண்காணித்து வரும் இலங்கை கண்காணிப்பு குழுவிற்கு (Sri Lanka Monitoring Mission-SLMM) கொழும்பு அரசாங்கத்துடன் தனி போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொள்ளக்கோரி, அவர் இரண்டாவது கடிதத்தை எழுதியிருந்தார். வடக்கத்தய வன்னி பகுதியை தளமாகக் கொண்டிருக்கும் LTTE மத்திய தலைமை, முதலில் இந்த நெருக்கடியை ''தற்காலிகமான'' நிகழ்ச்சி என்று மறைக்க முயற்சி செய்தது. ஆனால் மார்ச் 6-ல் அரசியல் பிரிவுத் தலைவர் S. தமிழ்ச் செல்வன், முரளிதரன் அவரது பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும், அவருக்கு பதிலாக அவரது துணைத் தளபதி T. ரமேஷ் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், கிழக்கத்திய பிராந்திய பதவிகளுக்கு பிரபாகரனின் இதர விசுவாசிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்தார். முரளிதரன் நகர்வுகள் ''சில தீய எண்ணம் கொண்ட சக்திகளால் தூண்டிவிடப்பட்டவை'' என்றும், அது ''தமிழ் விடுதலைப் போராட்டத்திற்கு'' எதிரானது என்றும், ''தமிழ் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கின்ற'' வகையில் செயல்பட்டார் என்றும் அவர் அறிவித்தார். தனது அரசியல் எதிரிகள் மீது வன்முறையை பயன்படுத்துவதில் பிரபலமானதாகக் கருதப்படும் ஒரு அமைப்பிலிருந்து, தமிழ்ச்செல்வன் விட்டிருக்கும் அறிக்கை மரண தண்டனைக்கு ஏறத்தாழ சமமானது. எவ்வாறாயினும், முரளிதரனிடம் 5,000 முதல் 6,000 கொரில்லா போராளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. LTTE-யுடைய மொத்த இராணுவப் படைகளில் மூன்றில் ஒரு பகுதியான இது, அவருடைய கட்டுப்பாட்டில் உள்ளது. பிளவுக்குப்பின்னர் வன்னிப்பகுதிக்கு தப்பி ஓடிய ரமேஷும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிறரும் தங்களது புதிய பதவிகளில் அமர்வதற்கு இன்னும் கிழக்குப் பகுதிக்கு திரும்பி வர முடியவில்லை. பின் வாங்குவதற்குப் பதிலாக, முரளிதரன் தனது மனக்குறைகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருப்பதுடன், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தனது அரசியல் ஆதரவை பலப்படுத்திக் கொள்ள முயன்று வருகிறார். அவர் அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை. சமரசம் என்ற கட்டத்தை தாண்டி அனைத்துமே சென்று விட்டன. எதிர்காலத்தில் முழுமையான சுய-நிர்வாகம்தான் (கிழக்குப் பகுதியில்) எங்களுக்கு வேண்டும்" என்று குறிப்பிட்டார். மார்ச் 11-ல் ராய்ஸ்டர்ஸ்க்கு பேட்டியளிக்கும் போது LTTE நீண்டகாலமாக தமிழ்மக்களின் ஒரே பிரதிநிதி என்று கூறி வருவதை மறுத்த அவர் பிரபாகரனிடம் ''ஆக்கபூர்வமான தலைமைக்கான பண்புகள்'' எதுவும் இல்லை என்று கூறினார். கடந்த இரண்டு வாரங்களாக, இரு தரப்பும் தங்களது பிடியை இறுக்கிக் கொள்ள முயன்று வருகின்றன. எதிராளி முகாம்களின் விசுவாசிகள் என்றுக் கருதப்படுகின்ற நூற்றுக் கணக்கான LTTE காரியாளர்கள் இரண்டு பகுதிகளிலுமே, இரண்டு தரப்பினராலும், கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. சென்ற வாரம் முரளிதரன் ஆதரவாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் பிரபாகரன் மற்றும் LTTE -ன் புலனாய்வு பிரிவு தலைவர் பொட்டு அம்மன் ஆகியோரது உருவ பொம்மைகளை கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வடக்கிலிருந்து வந்த பல பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையிலிருந்து தப்பி ஓடினர் அல்லது விரட்டப்பட்டனர். சென்ற வாரக் கடைசியில் சன்டே டைம்ஸ் பிரசுரித்த "நிலவர அறிக்கைப்படி", முரளிதரன் தனது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் நுழைவு வாயில்களை மூடிவிட்டார். ''திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு இடையிலான எல்லையில் மோதல் ஏற்படலாம், என்ற சாத்தியக்கூறு தோன்றியுள்ளது. தெற்கு திருகோணமலையில் பிரபாகரனுக்கு விசுவாசமான 1,500-க்கு மேற்பட்ட காரியாளர்கள் அவர்களே முன்வந்து திரண்டிருப்பதாக கூறப்படுகிறது''. கிழக்கத்திய தளபதி இதற்கு பதிலளிக்கிற வகையில் மேலும் 300 போராளிகளை வடக்கு மட்டக்களப்பிற்கு தனது சோதனைச் சாவடிகளை வலுப்படுத்துவதற்கும், புதிய பதுங்கு குழிகளை அமைப்பதற்கும் அனுப்பியிருக்கிறார். இதுவரை முரளிதரன், பிரபாகரனின் விசுவாசமான, இராணுவ துணை அதிகாரிகளில் ஒருவராக இருந்தார். 2002 ஏப்ரலில் வன்னியில் நடத்தப்பட்ட முதலாவது பொது பத்திரிகையாளர் மாநாட்டில் நீண்டகால கிழக்கத்திய தளபதி, LTTE தலைவருக்கருகில் அமர்ந்திருந்தார். கொழும்பு அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட சமாதான பேச்சு வார்த்தைகளில் LTTE பிரதிநிதியாக அவர் அங்கம் வகித்தார். முரளிதரன் ஊடகங்களில் தெரிவித்துள்ள மனக்குறைகளில் ஒன்று, வன்னிப்பகுதிக்கு 1,000 போராளிகளை அனுப்புமாறு கட்டளையிடப்பட்டதாகும். இப்படியான கோரிக்கையின் நகர்வுகள் மறுபடியும் யுத்தத்திற்கு தயார்படுத்துவதாக சுட்டிக்காட்டுகிறது. ஏப்ரல் 2-ல் நடைபெறவிருக்கும் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் (UNF) இரண்டு வேட்பாளர்கள் கொலைக்கு பொட்டு அம்மன்தான் காரணமாக இருந்தார் என்றும் குற்றம் சாட்டினார். இந்த இரண்டு கூற்றுக்களுக்கும் ஆதாரம் எதையும் அவர் தரவில்லை. UNF அரசாங்கத்தின் அனுதாபம் ஆதாயம் பெற வேண்டி, இந்த இரண்டு கூற்றுக்களையும் அவர் கூறியிருக்க கூடும் என்று தோன்றுகிறது. பிரபாகரன் தலைமை இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களையும் மறுத்திருக்கிறது. இந்தப் பூசல்களின் குறிப்பின் அடிப்படை LTTE கிழக்கத்திய பிரிவு (கன்னை) ''சமாதான முன்னெடுப்புகளால்'' உருவாகும் பயன்களிலிருந்து ஒதுக்கப்பட்டு விட்டது என்பதுதான். மார்ச் 4-ல் அரசியல் பிரிவு வெளியிட்டுள்ள ஒரு துண்டு அறிக்கையில், "மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களிலிருந்து சென்று வடக்குப் பகுதியில் சண்டையிட காரியாளர்கள் கலந்து கொண்டனர்... ஆனால் தங்களது சொந்த மாவட்டம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. LTTE உருவாக்கியுள்ள 30 நிர்வாக அங்கத்தின் தலைமையில் ஒருவர் கூட கிழக்குப் பகுதியை சார்ந்தவர்களல்லர் என்று அந்த துண்டு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தங்களது ''சொகுசு வாகனங்களில் சுற்றி வருகின்ற'' உயர் வடக்கு அதிகாரிகளுக்கு கிழக்கத்திய மாவட்ட காரியாளர்கள்தான் பாதுகாப்பு தந்து வருவதாகவும், "வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு LTTE உருவாக்க உள்ள இடைக்கால நிர்வாகத்தின் கீழ் நீதி கிடைக்குமா, என்பதில் எங்களது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது" என்று மேலும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. சென்றவாரக் கடைசியில் சன்டே டைம்ஸ்க்கு பேட்டியளித்த முரளிதரன், வன்னி தலைமை நிதி ''வளங்களை சமத்துவமற்ற நிலையில் விநியோகித்து'' வருவதாகவும், "கிழக்கத்திய போராளிகள் பீரங்கி ரவைகளாக பயன்படுத்தப்படுகின்றனர். கிழக்குப் பகுதியில் எங்களது அமைப்பை தொடர்ந்து செயல்படுத்தவும், மக்களது நலனுக்காக அபிவிருத்தி திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏற்கனவே நாம் சிரமப்படுகின்றோம். வன்னியிலுள்ள பணம் என்ன ஆகிறது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. 'வரிகள்' மூலம் மட்டுமே அவர்கள் மாதத்திற்கு 500 மில்லியன் ரூபாய் வரை பணம் சம்பாதிக்கின்றனர்" என்று அவர் கூறினார். LTTE -க்கு பெருகிவரும் விரோதம்LTTE தொடர்பாக வடக்கிலும், கிழக்கிலும் பரவலாக பொதுமக்களின் பரந்த தட்டினர் இடையே பெருகி வருகின்ற சீற்றத்தைதான் இத்தகைய உணர்வு வெளிப்பாடுகள் தெளிவாக எதிரொலிக்கின்றன. அரசாங்கத்திற்கும் LTTE-க்கும் இடையில் போர் நிறுத்தம் கையெழுத்தாகி, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் போர் மண்டலங்களில் வாழ்ந்து வருகிற பெரும்பாலான மக்களாகிய தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் ஆகிய அனைவருமே இன்னும் வறுமையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பல வீடுகள், வர்த்தகங்கள் அழிக்கப்பட்டு இருக்கின்றன. உயர் பாதுகாப்பு மண்டலங்கள் என்று இலங்கை இராணுவம் கட்டளையிட்டுள்ள, அதன் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் அமைந்துள்ள தங்களது வீடுகளுக்கும், நிலத்திற்கும் ஏனையோர் இன்னும் திரும்பிச் செல்ல இயலவில்லை. ''சமாதான முன்னெடுப்புகள்'' என்று அழைக்கப்படுகின்ற நடவடிக்கைகளால் LTTE தலைமையைச் சார்ந்த ஒரு சிறு தட்டினர் மட்டுமே பயனடைந்து வருகிறார்கள். அச்சுறுத்தல்கள், மற்றும் குண்டர் நடவடிக்கைகளை தங்களது எதிரிகள் மீது பயன்படுத்துவதற்கு இவர்கள் தயங்குவதில்லை. நீண்ட காலமாக, நடைபெற்று வருகின்ற அரசியல் வன்முறை மற்றும் படுகொலைகளின் தொடர்ச்சியாக அண்மையில் இரண்டு UNF வேட்பாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். மீனவர் கூட்டுறவு நிதியை LTTE-க்கு தர மறுத்ததால் 2002-ல் யாழ்தீபகற்பத்தில், ஊர்காவற்துறையில் பணியாற்றும் LTTE உள்ளூர் தலைவர்கள் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கொலை அச்சுறுத்தலை விடுத்தனர். இந்த உடைவு எந்த விதமான அடிப்படை சித்தாந்த வேறுபாட்டாலும் எழுந்தது அல்ல, முரளிதரன் பிளவு, மொத்தத்தில், LTTE-ன் பிரிவினை வேலைத்திட்டத்தின் அதே தர்க்க அடிப்படையை கொண்டதாகும். 1970-களில் கொழும்பு அரசாங்கங்கள், கொண்டு வந்த திட்டங்களால் ஏற்பட்ட, பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பாரபட்ச நடவடிக்கைகளால் தமிழ் இளைஞர்கள், தொழிலாளர்கள், மற்றும் விவசாயிகளிடையே உருவான நியாயமான சீற்றத்தை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிக்கு, தமிழ் ஈழம் தனி முதலாளித்துவ அரசு எனும் வகுப்புவாத கோரிக்கைபால் LTTE திசை திருப்பியது. தற்போது முரளிதரன் ''வடக்கத்திய தமிழர்களுக்கு'' எதிராக,'' கிழக்கத்திய தமிழர்களின்'' கடந்த கால மற்றும் நிகழ்கால மனக்குறைகளை பயன்படுத்தி மட்டக்களப்பு மற்றும் அம்பாறைக்கு அரசாங்கம் நடத்தும் பேச்சு வார்த்தைகளில் தனி நிர்வாகமும் தனது சொந்த இருக்கையையும் கோருகிறார். தமிழ் தொழிலாளர்கள் அல்லது ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நெருக்கடிகளுக்கு அவரிடமோ அல்லது பிரபாகரனிடமோ எந்தத் தீர்வுமில்லை. தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் பல்வேறு பகுதிகளின் நலன்களை முன்னிறுத்தி செயல்படுபவர்களாகவே அவர்கள் இருவரும் உள்ளனர். கொழும்புடன் உருவாகும் எந்த சமாதான பேரத்திலும் தமிழ் முதலாளித்துவ வர்க்கம் தனது நலன்களை காப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ''சமாதான முன்னெடுப்புகள்'' என்று கூறப்படுவது, பிளவில் கூறப்பட்ட பிற்போக்குத் தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற உள்நாட்டுப் போரின் அடிப்படையான அரசியல், சமூக பிரச்சனைகள் எதையும் கருத்தில் கொள்ளாமல், அமைதிப் பேச்சுவார்த்தைகள், தொழிலாள வர்க்கத்தை பரஸ்பரமாக சுரண்டுவதற்கான சிங்கள தமிழ் மற்றும் முஸ்லீம் செல்வந்த தட்டுகளுக்கு இடையிலான அதிகாரப் பங்கீட்டின் ஏற்பாடாகவே நோக்கங்கொண்டிருக்கின்றன. பல்வேறு திட்டங்கள், ஏற்கனவே வைக்கப்பட்ட திட்டங்கள் வகுப்புவாத பிளவுகளை உறுதிப்படுத்துவதை நாடுவதாகவே அமைந்திருக்கின்றன. இவ்வாறு அவை இனவாத, மதவாத தற்போது பிராந்தியவாத அடிப்படையில் முடிவற்ற புதிய பதட்டங்கள், பிளவுகள், மோதல்களுக்காக வழி அமைக்கின்றன. இந்தக் கட்டத்தில், LTTE கிழக்கத்திய பிரிவிற்கு, கொழும்பு அல்லது இலங்கை கண்காணிப்புக் குழு, (SLMM) அதிகாரபூர்வமாக அங்கீகாரம் தரவில்லை. முரளிதரன் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் நோர்வே நாட்டைச் சார்ந்த சமாதான கண்காணிப்பாளர்கள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருக்கின்றனர். மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு தனி யுத்த நிறுத்து உடன்படிக்கை என்ற முரளிதரன் கோரிக்கையை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் ஏற்க மறுத்துவிட்டது. இதற்கு முந்திய யுத்த நிறுத்த உடன்படிக்கை தங்களைக் கட்டுப்படுத்தாது என்று அவர் அறிவித்துள்ளார். LTTE பிளவு ஏற்கனவே அதிக கிளர்ச்சி வாய்ந்த அரசியல் நிலமைக்கு மற்றுமொரு கொழுந்துவிட்டு எரியும் காரணியாக அதிகரித்துவிடும். ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சிங்கள பேரினவாத ஜனதா விமுக்தி பெரமுனாவுடன் கூட்டணியை அமைத்து சென்ற மாதம் UNF அரசாங்கத்தை வெளியேற்றியது, அது சமாதான முன்னெடுப்புகளால் நாட்டின் பாதுகாப்பை அழிவுக்குள்ளாக்கியது என்றும் அதை குற்றம்சாட்டியது. இந்த அரசியல் சூழ்நிலைமையில், முரளிதரன் நகர்வு தொடர்பான கொழும்பு ஆளும் வட்டாரங்களில் எதிர்வினை வேறுபட்டு இருக்கிறது. LTTE பிளவு ''சமாதான முன்னெடுப்பு'' என்று அழைக்கப்படுவதை சீர்குலைக்கும் உள்ளாற்றலைக் கொண்டுள்ளது, அதனை UNF அரசாங்கம் பெரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பெரிய வல்லரசுகள் சார்பில் பூகோள முதலீடுகளுக்கு தீவைக் கதவு திறந்து விட முன்னிலைப்படுத்தி வருகிறது. முரளிதரனுடன் தனியாக பேச்சு வார்த்தைகள் எதையும் துவக்கினால் அதற்கான முயற்சியை மேற்கொண்டால், அது வன்னி தலைமைக்கு ஆத்திரமூட்டுவதாக அமைந்து விடும். ஏற்கனவே கொழும்பிற்கு, இதில் தலையிட வேண்டாமென்று வன்னித் தலைமை எச்சரித்துள்ளது. அப்படியிருந்தும், கிழக்குப் பகுதியில் முரளிதரன் தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்திக் கொள்வாரானால், அவரை எளிதாக புறக்கணித்து விட முடியாது. ஏப்ரல் தேர்தல்களில் LTTE உட்கட்சி போராட்டம், மற்றொரு குழப்பத்தை உருவாக்கியுள்ளது. தமிழ் கட்சிகள் ஒரு குழுவாகச் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டணி (TNA) என்ற பெயரால் LTTE-க்கு பதிலாளாக, தேர்தல் களத்தில் குதித்துள்ளது. இதற்கு முன்னர் TNA, UNF அரசாங்கத்தையும் LTTE உடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையையும் ஆதரித்தது. தற்போது TNA பிராந்திய அடிப்படையில் பிளவுபட்டு நிற்கிறது. இந்த வாரம், கிழக்கத்திய முரளிதரன் பிரிவு TNA வேட்பாளர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. வன்னித் தலைமையிலிருந்து பிரிந்து கிழக்குப் பகுதி பிரச்சனைகளில் கவனம் செலுத்துமாறு அது TNA-வை கேட்டுக்கொண்டது. ஆளும் செல்வந்த தட்டில் ஒரு பிரிவு LTTE -ன், பிளவை அலட்சியப்படுத்தி வருகிறது. சமாதான முன்னெடுப்பை நிலைநாட்டிவிட முடியுமென்று நம்புகிறது. LTTE பிளவு, அமைப்பிலுள்ள உள்கட்சி விவகாரம் பற்றியது என்று UNF அறிவித்துள்ளது. தற்போது ஜனாதிபதி குமாரதுங்கவும் அந்த உட்பூசலில் விலகியே நிற்கிறார். அவரது கட்டுப்பாட்டிலுள்ள, பாதுகாப்பு அமைச்சகம், கிழக்கத்திய மாகாணத்திலுள்ள ஆயுதப் படைகளை இரண்டு குழுக்களுக்குமிடையில், ''மோதல் நடப்பதைத் தடுப்பதற்கு'' ''முழு விழிப்புடன்'' இருக்குமாறு உஷார்படுத்தியுள்ளது. மார்ச் 14 சன்டே டைம்ஸ் ஆசிரியர் குழு வலியுறுத்திய எச்சரிக்கை வருமாறு: "மோதிக் கொண்டிருக்கும் இரண்டு குழுக்களும் தங்களது கருத்து வேறுபாடுகளை தங்களுக்குள், தங்களது சொந்த ஏற்பாடுகள் மூலமே தீர்த்துக் கொள்ள விட்டு விடலாம். இப்படிச் செய்வது கொழும்பு அலட்சியப் போக்கில் நடக்கிறதென்று கருதத்தேவையில்லை. ஆனால் ஒரு குழுவிற்கு எதிராக, மற்றொரு குழுவிற்கு ஆதரவு தந்தால், தேவையற்ற சூழ்நிலையை படியச்செய்துவிடும், அதாவது இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான கஷ்டமான நடைமுறைகளுக்கு தீங்கிழைத்து விடும்." LTTE-ன் கொழும்பு ஆளும் செல்வந்த தட்டுகளில் மற்றொரு பிரிவு, இந்தப் பிளவை, மிகப் பெருமளவிற்கு பயன்படுத்திக் கொள்ளலாமென்று கருத்து தெரிவித்துள்ளது. மார்ச் 5-ல் ஐலண்ட் பத்திரிகை, "முடிவின் ஆரம்பம்?" என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கம் வருமாறு. "இந்த நாட்டை 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது பயங்கரவாத பிடியில் இறுக்கமாக வைத்துக் கொண்டிருக்கும் LTTE -ல் ஒரு பிளவு ஏற்படுகிறதென்றால், எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒட்டு மொத்தமாக அதை ஒழித்துக் கட்டுவது, எல்லா சமுதாயங்களின் நலனுக்கும் ஏற்றது." விக்கிரமசிங்காவும், குமாரதுங்காவும் ஒன்று சேர்ந்து ''ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பை'' பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்று அது வேண்டிக் கேட்டுக் கொண்டது. JVP தலைவர் சோமவன்ச அமரசிங்க, முரளிதரன் ''நியாயத்திற்கு குரல்'' கொடுக்கிறார். அதையே ''அனைத்து தமிழ் சமுதாயத்தின் குரலாகவும்'' எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் UNF மற்றும் ''உள்நாட்டு மற்றும் சர்வதேச சதி ஆலோசனை சக்திகள்'' இரண்டு பிரிவுகளையும் (கன்னைகள்) சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதாக கண்டனம் செய்திருக்கிறார். ''அந்த முயற்சிகள் மக்களுக்கு குறிப்பாக ஜனாதிபதிக்கு எச்சரிக்கை சமிக்கைகளை தந்து கொண்டிருப்பதாக'' அவர் கூறியுள்ளார். அவரது விமர்சனங்கள் குறிப்பாக, குமாரதுங்க முரளிதரனை ஆதரிக்க வேண்டும், வன்னியில் பிரபாகரனின் பிரிவை ஒழித்துக் கட்டுவதற்கு இராணுவம் உட்பட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்வதாக அமைந்திருக்கின்றது. இந்த அறிக்கைகள் இராணுவம் மற்றும் அரசு இயந்திரத்தின் பகுதிகளின் சிந்தனையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இந்தப் பிளவில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, தலையிடும் எந்த முயற்சியும் இரண்டு LTTE பிரிவுகளுக்கு இடையில் மட்டுமல்லாமல், பகிரங்கமாக மீண்டும் உள்நாட்டுப் போரை உருவாக்கும் ஆபத்தை சுமந்து கொண்டிருக்கிறது. |