World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The diplomacy of Imperialism: Iraq and US foreign policy

Part four: Iraq in the 1970s and the beginning of the Iran-Iraq War

ஏகாதிபத்தியத்தின் இராஜதந்திரம்: ஈராக்கும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும்

நான்காம் பகுதி: 1970 களில் ஈராக்கும், ஈரான்-ஈராக் போரின் ஆரம்பமும்

By Joseph Kay
17 March 2004

Back to screen version

ஈராக்கின் வரலாறு, அமெரிக்கவுடன் அதன் உறவுகள் பற்றிய தொடர் கட்டுரைகளில் இது நான்காவது ஆகும். முதல் மூன்று கட்டுரைகள் மார்ச் 12, 13, 16 (ஆங்கிலப்பதிப்பில்) வெளிவந்து, ஈராக்கின் சமூக அரசியல் வரலாற்றை, 1960 களின் கடைசிப்பகுதியில் பாத் கட்சி பதவிக்கு வரும் வரை விளக்கின. இந்தக் கட்டுரை 1980ல் ஈரான்-ஈராக் போர் வெடித்த பின்னணியையும், அமெரிக்கா இந்த இரு நாடுகளுடன் கொண்டிருந்த அணுகுமுறையின் மாற்றத்தையும் விளக்குகிறது. அடுத்துவர இருக்கும் கட்டுரைகள், ஏறத்தாழ பத்து ஆண்டுகள் நீடித்திருந்த போரில் அமெரிக்கா சதாம் ஹுசைனுக்குக் கொடுத்திருந்த ஆதரவுபற்றிய ஆவணங்களை ஆராயும்.

அமெரிக்க உளவுத்துறை, 1960களில் பாத் கட்சியின் எழுச்சிக்கு வழிவகுத்த நிகழ்வுகளில் தொடர்பு கொண்டிருந்தது என்றாலும், 1970களில் அமெரிக்க அரசாங்கத்திற்கும் பாத் ஆட்சிக்கும் இடையே உறவுகள் கசந்திருந்தன. நாட்டின் உள்நாடு, சர்வதேசக் கொள்கைகள் இரண்டும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு இடையூறாக அடிக்கடி இருந்தன.

1963ல் கடுமையான அடக்குமுறையை கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகக் கையாண்டு, பொதுவாகவே கம்யூனிச எதிர்ப்பைக் கொண்டிருந்தபோதிலும், பாத் கட்சியில் தலைமையில் அமைந்திருந்த அரசாங்கம் தேசியவாத பார்வையை கொண்டிருந்துடன், அதன் அமெரிக்க, மேற்கத்திய பெருநிறுவனங்களின் மீதான தயவில் இருப்பதைக் குறைக்கும் கொள்கைகளை தொடர்ந்திருந்தது. இதற்கு, அமெரிக்காவிற்கு எதிராக இயங்க சோவியத் ஒன்றியம் ஆதரவு கொடுத்தால் அந்நாட்டுடன் கூடுதலான நல்லெண்ண நட்பு தேவை என்ற நிலையும் ஈராக் செயல்பட்டது.

வெளிநாட்டினரின் உடைமையாக இருந்த ஈராக் பெட்ரோலிய நிறுவனத்தை 1972இல் அரசாங்க உடைமையாக்கியது, மாஸ்கோவின் ஆதரவுடன் பிணைந்திருந்தது; ரஷ்யா, ஈராக்கின் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு, எடுத்தல் இவற்றிற்கு உதவி செய்தது. அதே ஆண்டு இரு நாடுகளும் ஒரு 20 ஆண்டு நட்புறவு-ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு இரண்டும் "இருநாடுகளுக்கிடையே இருக்கும் பாதுகாப்பு திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் ஒத்துழைப்போம்" என்று உறுதியெடுத்துக் கொண்டன. சோவியத் ஒன்றியத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் இராணுவ தளவாடங்களை ஈராக் வாங்கியதுடன் விரைவில் சோவியத் ஒன்றியத்தின் முக்கிய ஆயுதங்கள் விற்பனை நாடாகவும் ஆயிற்று. மாஸ்கோவுடன் நெருங்கிய உறவுகளின் ஒரு பகுதியாக, ஈராக்கிய ஆட்சி, தற்காலிகமாக ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் தன்னுடைய வேறுபாடுகளை களைந்து கொண்டதுடன், 1972ல் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி பாத் கட்சியின் தேசிய பற்று முன்னணியின் ஆட்சியிலும் சேர்ந்து, அமைச்சர் குழுவிலும் அங்கம் வகித்தது.

எண்ணெய் தொழில் தேசியமயமாக்கப்பட்டமை மற்றும் OPEC-யுடைய உலகச் சந்தைக்கு எண்ணெய் வழங்குவதை கட்டுப்படுத்துவது என்பவை அரசாங்கத்தின் வருவாயை வியத்தகு அளவில் 1970களில் அதிகப்படுத்தி, அதை உள்நாட்டில் வளர்ச்சித் திட்டங்கள் வகுத்துத் தொடரவும், கஷ்டத்தில் இருந்த, ஆனால் மற்றபடி ஆட்சியின் மீழு விரோதப்போக்கை கொண்டிருந்த மக்களுக்கு சமூக நலச்சேவைகளைச் செய்யவும் முடிந்தது.

இஸ்ரேலுக்கு எதிர்ப்பு, பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்திற்கு (Palestine Liberation Organization PLO) ஆதரவு என்பவற்றாலும், ஈராக் அமெரிக்காவுடன் மோதல்களைக் கொண்டது. ஈராக்கின் சியோனிச எதிர்ப்பு வெறும் பேச்சளவில்தான் இருந்ததே ஒழிய நடைமுறையில் வேறு எதையும் மேற்கொண்டிருக்கவில்லை. பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தை ஜோர்டான் மன்னர் ஹுசைன் 1970இல் தன் நாட்டை விட்டு அகற்றியது, 1973 அரேபிய-இஸ்ரேலியப் போர், என்ற இரண்டு முக்கியமான விஷயங்களிலும், ஈராக் பாலஸ்தீனியர்களுக்கோ அல்லது அரேபிய நாடுகளுக்கோ எவ்விதத்திலும் அதிக உதவி செய்யவில்லை.

தன்னுடைய நலன்களை வலியுறுத்தும்போது, அமெரிக்கா இப்பகுதியில் தன்னுடைய முக்கிய நட்பு நாடுகளாகிய செளதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இவற்றைப் பெரிதும் நம்பி இருந்தது. மிகுந்த வெறுப்பிற்குட்பட்டிருந்த சர்வாதிகாரியான ஷா ஆண்டு வந்த ஈரான், ஈராக்கிற்கு அழுத்தம் கொடுப்பதற்கு அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டு வந்தது. அமெரிக்க ஜனாதிபதியான ரிச்சார்ட் நிக்சன், 1972 மே மாதம், அமெரிக்காவிடமிருந்து அணுவாயுதங்களை தவிர எந்த போர்க்கருவிகளையும் ஷா வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தார். இது முற்றிலும் முன்கண்டிராத வழங்கல், காட்டர் நிர்வாகத்தால் "அம்மண்டலத்தில் தூணாக" அமையும் செயல் என்று கருதியது.

அமெரிக்கா கொடுத்த ஆதரவு, பல நூற்றாண்டுகளாக நிலப்பகுதிகள பற்றிய மோதல்களைப் பற்றி தன்னுடைய அண்டை நாடான ஈராக்குடன் பேச்சுவார்த்தைகள் நடத்த ஈரானைத் தூண்டியது. சாட் அல் அராப் (Shatt al Arab) நீர்வழி (யூப்ரடிஸ்-டைக்ரிஸ் ஆறு சங்கம இடம்), இரு நாடுகளின் எல்லையாக இருந்து பாரசீக வளைகுடாவில் விழுவது, இம்மோதல்களில் முக்கியமானது ஆகும். ஷட் அல் ஆரப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் முக்கியத்துவம், பெருகி வந்த எண்ணெயின் முக்கியத்துவத்தால், அது ஆற்றின்வழியே வளைகுடாவிற்கு அனுப்பப்பட கூடுமாதலால் உயர்ந்தது. 1969ல், ஈரான் 1937ம் ஆண்டு நீர்வழிக்கட்டுப்பாட்டை ஈராக்கிற்குக் கொடுத்திருந்த உடன்படிக்கையை முறித்து, தனக்குத்தான் அவ்விடத்தின் கட்டுப்பாடு என வலியுறுத்தத் தொடங்கியது. இந்த மோதல் 1975ம் ஆண்டு, ஈராக்கிற்கு எதிராக முடிவாகும் வரை தீர்க்கப்படவில்லை.

1971ம் ஆண்டு, பாரசீக வளைகுடாவை, ஓமான் வளைகுடாவுடன் இணைக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழிக்குப் போக இன்றியமையாத வளைகுடா தீவுகள் மூன்றை, பிரிட்டிஷ் ஆதரவுடன் ஈரான் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டு விட்டது. இதை, கப்பல் மூலம் எண்ணெய் அனுப்புவதின்மீது கட்டுப்பாட்டை கொண்டு வருவதாக கருதிய ஈராக், ஈரானுடனும், பிரிட்டனுடனும் இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்டுவிட்டது. (1967 அரேபிய-இஸ்ரேல் போரின்போது, ஏற்கனவே அமெரிக்கவுடன் உறவுகளை முறித்திருந்தது.)

மற்ற வழிகளிலும் ஈராக்மீது ஈரான் பல அழுத்தங்களைக் கொண்டு வந்தது; இதில் குறிப்பாக நிதி, இராணுவ உதவிகளை இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள வட எல்லையில் கிளர்ச்சி எழுச்சி செய்திருந்த குர்திஸ்களுக்கு அது வழங்கியது. அரேபியர்கள் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த ஈராக்கிய அரசாங்கத்தினால் குர்திஸ் சிறுபான்மை பலகாலமாகவே துயரங்களை அனுபவித்தது வந்தது. 1970 மார்ச்சில், பாத் அரசாங்கம், குர்திஸ் ஜனநாயகக் கட்சியுடன் (KDP), வடபகுதியில் குர்திஸாரால் நடத்தப்படும் தன்னாட்சிப் பகுதி தோற்றுவிக்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்த உடன்படிக்கையை ஏற்படுத்தியிருந்தது. 1974ம் ஆண்டு, இந்தப்பகுதியில் கிர்குக், மற்றும் குர்திஷ் பெரும்பான்மை இருக்கும் எண்ணெய் வளம் மிகுந்த பகுதிகளைச் சேர்க்க மறுத்து விட்டதனால், இவ்வுடன்படிக்கை சாத்தியப்படாது போயிற்று. ஈராக்கின் எண்ணெய் வள வருவாயில் கிட்டத் தட்ட ஐந்தில் மூன்று பகுதி குர்திஸ் பகுதியிலிருந்து வந்தது ஆகும்.

குர்திஸ் பிரிவிற்கும், ஈராக்கிய அரசாங்கத்திற்கும் மீண்டும் விரோதங்கள் தோன்றியது, அமெரிக்காவினால், ஊக்குவிக்கப்பட்டு, CIA , இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுடன் ஒத்துழைத்து கிளர்ச்சி எழுச்சியாளர்களுக்கு தடையின்றி ஆயுதங்கள் கிடைக்க வழிவகுத்தனர். இந்த கிளர்ச்சி எழுச்சி, 1975ம் ஆண்டு, ஈராக் அல்ஜியர்ஸ் உடன்பாட்டில் கையெழுத்து இட்டு தல்வெக் (thalweg) கோட்பாட்டை ஏற்றவுடன்தான் நின்றது (இந்த கோட்பாட்டின்படி, ஈரான், ஈராக் எல்லை, சட் அல் அராப் ஜலசந்திகளில் ஆழமான கால்வாய் நடுவே ஈரான்-ஈராக்கிய எல்லை நிர்ணயிக்கப்படும் என்று கூறிற்று.)

ஈரானிய புரட்சியும், அமெரிக்கக் கொள்கையில் மாறுதலும்

அல்ஜியர் உடன்படிக்கை கையெழுத்திட்டப்பட்ட பின், ஈராக்கிய ஆட்சிக்கு முக்கியமான உள்நாட்டு எதிர்ப்பு, நாட்டில் பெரும்பான்மை கொண்டிருந்தாலும், எப்பொழுதும் அரசாங்கத்தில் குறைந்த பிரதிநிதித்துவத்தையே பெற்றிருந்த ஷியா முஸ்லிம்கள் மக்கட்தொகையிலிருந்து வந்தது. இதில் ஒரு வர்க்க கூறுபாடும் இருந்தது; ஏனெனில் பொதுவாகச் சமுதாயத்தில் மிகவும் சுரண்டலுக்கு உட்பட்டிருந்த பிரிவுகள் ஷியா பிரிவினர்தாம்.

1977 அல் ஷியா மக்களால் செய்யப்படிருந்த கலகங்கள், பாத் கட்சியல் பிளவைத் தோற்றுவித்தது; இது ஜனாதிபதி பக்கருக்கும், அப்பொழுது துணை ஜனாதிபதியாக இருந்த சதாம் ஹுசைனுக்கும் இடையே மோதலை உருவாக்கியது. ஷியா எதிர்ப்புக் குழுக்களை கடுமையாக, அதிலும் குறிப்பாக எதிர்ப்பிற்கு தலைமை தாங்கியிருந்த அல் தாவாக்களை (Al Daawa) அடக்கவேண்டும் என்று ஹுசைன் விரும்பியபோது, பக்கர் கூடுதலான சமரசப் போக்கை விரும்பினார்.

இந்தப் பிளவுகள், பெப்ரவரி 1979ல் நடந்த ஈரானியப் புரட்சியால் அதிகரித்து. இப்புரட்சி அப்பகுதியின் இயக்குமுறைகளில் அடிப்படை மாற்றத்தையும், அமெரிக்காவின் அணுகுமுறை போக்கிலும் மாற்றத்தைக் குறித்தது. அமெரிக்காவிற்கு, ஒருவேளை இஸ்லாமியப் புரட்சி பரவுவதால் மட்டும் ஆபத்து என்பதில்லை. இந்தப் புரட்சி எல்லா வளைகுடா நாடுகளிலும் அப்பொழுது படர்ந்திருந்த, இப்பொழுதும் படர்ந்துள்ள பாரிய சமூக சமத்துவமின்மையினால் தோற்றுவிக்கப்பட்டிருந்த வெடிப்பு மிக்க நிலைமைகளினால் வந்தது. இந்த சமூக பதட்டங்களை அயத்தொல்லா கோமேயினி சுரண்டுவதற்கு முடிந்ததுடன், கம்யூனிச டுடேக் கட்சி துரோகத் தன்மையினால் பஹ்லவி முடியாட்சி கவிழ்க்கப்பட்டு, இஸ்லாமிய அடிப்படைவாதம் (ஷாகியா-Shia) என்ற அரசியல் திட்டம் செயல்படுத்தப்பட்டது. எண்ணெய்க்காக அமெரிக்கா, குறிப்பாக சவுதி அரேபியாவை நம்பியிருந்தபோது, 1979 மற்றும் 1980ம் ஆண்டுகளில், மிகப்பரந்த அளவில் அங்கு ஷியாப்பகுதிகளில் கலவரங்கள் விளைந்து, முடியாட்சி நிலைக்குமா என்ற அச்சத்தையே ஏற்படுத்தியது. பஹ்ரைன், குவைத் ஆகியவையும் இத்தகைய உள்நாட்டு மோதல்களைக் கண்டன.

ஈரானியப் புரட்சியுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கும், பாத்திஸ்ட் அரசாங்கத்தின் நலன்களுக்கும் இடையேகூட ஒரு சங்கமம் ஏற்பட்டது. கொமெனியினுடைய ஆட்சி, ஹுசைனையும், பாத்திஸ்டு அரசாங்கத்தையும் தன்னுடைய முக்கிய விரோதிகளாகக் கருதியதால், ஈராக்கிற்குள் ஷியா எதிர்ப்புக்களுக்கு ஊக்கம் கொடுத்தது. அமெரிக்கா தனக்கு வந்து கொண்டிருந்த எண்ணெய் வழங்குதலுக்கு எந்த அச்சமும் வளர்ந்து பெருகக் கூடாது, முடிந்தால் மோதல்கள் உடனே அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தது. அமெரிக்க உளவுத்துறை கொமெய்னியின் ஆட்சியை சதித்திட்டத்தின் மூலம் அகற்றுவதில் தோல்வி அடைந்தவுடன், அதன் எதிரியான ஈராக் கவர்ச்சிகரமான மாற்றாக அதற்கு தென்பட்டது.

சதாம் ஹுசைன் அதிகாரம் வளர்ச்சியடைந்தமை பாத் கட்சியில் மீண்டும் ஒரு வலது பக்க திருப்பத்தை குறித்தது. 1979ல் ஜூலை மாதம் ஷியா ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற பின்னர், பக்கரை பதவியிலிருந்து விலகுமாறு கட்டாயப்படுத்தி ஹுசைன் தானே ஜனாதிபதிப் பதவியை எடுத்துக் கொண்டார். நாட்டின் போட்டியில்லாத் தலைவர் என்ற முறையில், ஹுசைன், எதிரிகளை எல்லாம் அழித்துக் கொலை செய்யும் முயற்சியைக் கொண்டு, அரசாங்கத்தில் இருந்த ஏராளமான கம்யூனிஸ்டுகளுக்கும் மரண தண்டனை விதித்தார்.

வரலாற்று ஆசிரியர் திலிம் ஹிரோ கூறுகிறார்: "உயர்ந்த மட்டத்திலிருந்த சந்தேகவாதிகள் அனைவரையும் தகர்த்தபின்னர், சதாம் ஹூசைன், தொழிற்சங்கங்கள், மக்கள் இராணுவம், மாணவர் தொழிற்சங்கங்கள், மாநில, வட்டார அரசாங்கங்களிலிருந்த எதிர்ப்பு பிரிவுகள் அனைத்தையும் பரந்த அளவில் கொன்று அழித்தார்." இந்த அழிப்பு, வாஷிங்டனுக்கு சமரசம் இயலும் என்ற தெளிவான குறிப்பைக் கொடுத்தது.

ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையே 1979 முழுவதும், பின் 1980ன் முதல் பகுதியில், பதட்டங்கள் அதிகரித்தன. குர்திஸ் கிளர்ச்சி எழுச்சிக்கு ஆதரவு கொடுக்கும் கொள்கையை ஈரான் மீண்டும் ஆரம்பித்தது. இதற்குப் பதிலடியாக, ஈரானிய மாநிலமான கஜுஸ்தானில் ஈரானிய குர்திஸ்களுக்கும், அரேபியர்களுக்கும் கொடுக்கும் உதவியை ஈராக் அதிகரித்தது. மார்ச் 1980ல் ஹுசைன் ஒருதலைப்பட்சமாக அல்ஜியர்ஸ் உடன்படிக்கையை முறித்தார்.

கார்ட்டர் நிர்வாகம் இந்த மோதலுக்கு ஊக்கம் கொடுத்தது; இறுதியில் இது முழுப் போராக 1980 செப்டம்பரில் வெடித்தது. ஹிரோ எழுதுகிறார்: "ஈரானிய ஜனாதிபதி, பனி-சதரின் (Bani-Sadr) கூற்றின்படி, ஆகஸ்ட் 1980ல் அவருடைய அரசாங்கம், பிரான்சில் சில பதவியிறக்கம் செய்யப்பட்டிருந்த ஈரானிய தளபதிகள், மற்றும் அரசியல்வாதிகளுக்கும், அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவ வல்லுனர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்களின் விரிவான தொகுப்பு அடங்கிய சில இரகசிய ஆவணங்களை தன் அரசாங்கம் விலைக்கு வாங்கியுள்ளதாக அறிவித்தார். அப்படியானால், ஜனாதிபதி ஜேம்ஸ் கார்ட்டர், ஈராக்கியத் திட்டங்களைப் பற்றிச் சற்று அறிந்தே இருக்கவேண்டும். இரகசிய தகவலைக் கொடுத்து, ஈரானின் இராணுவ வலுவற்ற தன்மையை சவுதி அரேபியாவிடம் மிகைப்படுத்தியதன் மூலம் பாக்தாத்திற்கு அது சென்று அடையும் என்ற கருத்தில், ஈராக் ஈரானை தாக்குவதற்கு வாஷிங்டன் ஊக்கம் அளித்தது." 2

எப்படியாயினும், ஹுசைனுக்கு CIA உந்துதல் அளித்திருந்த, ஈராக்கில் தஞ்சம் புகுந்திருந்த ஈரானிய இராணுவ அதிகாரிகளின் ஆதரவு கிடைந்திருந்தது. பொதுவாக சோவியத் ஒன்றியமும் அதனுடைய மத்திய ஆசிய மாநிலங்களில் இஸ்லாமிய புரட்சி பரவி விடுமோ என்ற அச்சத்தில், ஈரானிடம் விரோதப் போக்கைத்தான் காட்டியிருந்தது. இவ்வாறு இராஜதந்திர முறையில் நிலைமை தனக்கு ஆதரவாக இருந்ததைக் கண்ட ஹுசைன், கொமேய்னி மற்றும் ஷியா எதிர்ப்புக்களை தடுக்கும் வாய்ப்பாக மட்டும் நினைக்காமல், ஈரானின் பகுதிகள் சிலவற்றை இணைக்கவும், வளைகுடா பகுதியில் ஈராக்கின் நிலைமையை முன்னேற்றம் செய்துகொள்ளவும் போரை ஒரு வாய்ப்பாக கருதினார்.

இறுதியில் ஈரான்-ஈராக் போர், இரு நாடுகளின் முதலாளித்துவத்தின் போராக இருந்தது மட்டும் இன்றி, அம்மோதல் பெரும் வல்லரசுகளும் தங்கள் நலன்களை, குறிப்பாக அமெரிக்க நலன்களுக்காக செயல்பட்டிருந்த தன்மையையும் கொண்டிருந்தது. இப்போரில் வெற்றி கிடைத்தால், அப்பகுதியில் தன்னுடைய அதிகாரம் பெருமளவு பெருகும் என்று ஈரான் கருதியது.

ஹிரோ எழுதுகிறார்: "குறைந்த பட்சம் ஒரு வெற்றிபெற்ற ஈரான், வளைகுடா முடியரசுகளை தன்னுடைய கொள்கையான எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து, விலையை உயர்த்தி, அதன் மூலம் அப்பகுதியை பெரும் தொழிற்துறைகள், தொழில்நுட்ப வளர்ச்சி மிக்கதாக மாற்றி, வளைகுடா பொதுச் சந்தையை ஒரு இஸ்லாமிய பொதுச் சந்தையை ஏற்படுத்தி அதை வளர செய்திருக்கும். இந்த வெற்றி வாயப்பு மேற்கத்திய நாடுகளை பெரிதும் அச்சத்திற்கு உட்படுத்தியது; அதிலும் குறிப்பாக அமெரிக்கா, சவுதி அரேபியா மூலம் பெட்ரோலிய விலை, எண்ணெய் எடுத்தல் இவற்றின் விகிதத்தைக் கட்டுப்படுத்துவதை அச்சுறுத்தியது. "[3]

இந்த மோதல்கள், இரு அரசாங்கங்களின் பகடைக் காய்களாக இருந்த இரண்டு நாடுகளின் மக்களுக்கும் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்த இருந்தது.

ஒரு பரந்த பின்னணி

எதிர்கால ஈராக்கின் உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கையை பொறுத்த வரையில் ஈரான்-ஈராக் போரில் ஒரு ஆழ்ந்த புறநிலையான தர்க்கம் இருந்தது. 1970ன் கடைசிப் பகுதி, உலக அரங்கை பற்றி அமெரிக்கா கொண்டிருந்த அணுகுமுறையில் திடீர் வலதுசாரி மாற்றத்தைக் கண்டது. அமெரிக்க ஆளும் வர்க்கம் எதிர்நோக்கிய, பெருகியிருந்த பொருளாதார இடர்பாடுகள், அதை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஒரு முரட்டுத்தனமான கொள்கையை பின்பற்ற வைத்தது.

இந்த அமெரிக்க கொள்கையின் மாற்றம் கார்ட்டர் நிர்வாகத்தின் இரண்டாம் பாதியில் தொடங்கியது. 1979ல் கார்ட்டர் ஒரு புதிய கோட்பாட்டை (The Carter Doctrine), மத்திய கிழக்கில் அமெரிக்க நலன்களுக்கு எந்த அச்சம் ஏற்பட்டாலும், அமெரிக்க இராணுவத் தலையீடு கண்டிப்பாக இருக்கும் என்பதை அறிவித்தார். இவர் விரைவில் தாக்கும் பிரிவு (Rapid Development Force-(RDF) என்று அப்பகுதியில் இராணுவ நடவடிக்கைகளுக்காக குறுகிய காலத்தில் இயக்கப்படும் தன்மை உடைய இராணுவ பிரிவை தோற்றுவித்தார்.

1979ல் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் தலையிட்டதை தன்னுடைய போட்டி வல்லரசை நீண்ட போரில் ஈடுபடுத்தி, அதன் அடிப்படை இருப்புக்களைக் குறைத்து அதன் சக்தியை குறைப்பதற்கான வாய்ப்பாக அமெரிக்கா கருதியது. 1981ல் ஆட்சிக்கு வந்தவுடன் ரீகன் நிர்வாகம் பனிப்போர் முறையிலான ஆயுத வளர்ச்சியை கட்டி எழுப்ப தலைப்பட்டார்.

ஆயினும்கூட, அமெரிக்கப் படைகள் நேரடியாக தலையிடுவது இன்னும் ஆழமான பிரச்சனையானதாக இருந்தது. ஏனெனில் வியட்நாமால் நேர்ந்த அழிவு நடந்து சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தன, மேலும் சோவியத் ஒன்றியத்துடனும் போர்மூளக்கூடும் அபாயம் இருந்தது. லோரன்ஸ் பிரீட்மன் (Lawrence Freedman), எப்ரைம் கர்ஷ் (Efraim Karsh) என்ற இரு வரலாற்று ஆசிரியர்களும், "கம்யூனிச-எதிர்ப்பு குழுக்களுக்கு ஆதரவாக, குறிப்பாக ஆப்கானிஸ்தானில் முஜாஹீதின், அங்கோலாவில் UNITA, நிக்கரகுவாவில் கொன்ட்ராக்கள் போன்றவற்றிற்கு ஆதரவழிப்பது மூலம் ரீகன் நிர்வாகம் பாரிய மதிப்பிழந்திருந்தது, ஆனால் நேரடி இராணுவத்தலையீடு என்று வந்தால் அது கூடுதலான எச்சரிக்கையைக் கொண்டு இருந்தது. எதிர்ப்பு மிகமிகக் குறைவு என்ற பகுதிகளில்தான் அது படையைக் கொண்டு வந்தது, அதாவது 1983ல் ஒர் ஆட்சிக்கவழிப்பிற்குப் பின்னர் கரிபியத் தீவான கிரெனெடாவில் கொண்டிருந்தது போல அல்லது, 1986-ல் லிபியத் தலைநாகரான திரிபோலியில் செய்தது போல் வெறும் விமானத் தாக்குதல்களுடன் நிறுத்திக்கொண்டது." [4] (வலியுறுத்தி எழுதியது ஆசிரியர்)

வளைகுடாப்பகுதியில் அமெரிக்க கொள்கையின் முக்கிய பகுதி முன்பு ஷாவிற்கு ஆதரவு என்று இருந்தது. இப்பொழுது அதில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது: ஈரானின் மதிப்பைக் குறைக்கவேண்டும் என்றால் ஹுசைனுக்கு ஆதரவு கொடுப்பது ஒன்றுதான் வழி.

அமெரிக்காவிலிருந்து வந்த கூடுதலான அழுத்தம், சோவியத் அதிகாரத்தின் படிப்படியான சீரழிவுடனும் மத்தியகிழக்கிலும் மற்ற இடங்களிலும் தேசியவாத அரசாங்கங்களை ஓரளவு சுதந்திர கொள்கையை கொண்டிருக்கும் திறனையும் இல்லாதொழித்துடன் இணைந்தது. 1978ல் இஸ்ரேலுக்கும் எகிப்திற்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட (கார்ட்டர் நிர்வாகம் துணைநின்று காம்ப் டேவிட்டில் ஏற்கப்பட்டது) இந்த வகையில் ஒரு பெரிய நடவடிக்கை ஆகும். ஈரான்-ஈராக் போர் மற்றொரு நடவடிக்கை ஆகும்.

அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகள் என்றால், ஈராக் போன்ற தேசிய முதலாளித்துவ நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் ஆதரவைப் பெறுவதற்கான பல உள்நாட்டுத் வேலைதிட்டங்களில் கடுமையான வெட்டுக்கள் எனவே அர்த்தப்படும். ஈராக்கில், ஈரானுடனான இராணுவ மோதலால் ஏற்பட்ட இராணுவச் செலவினங்களின் அதிகரிப்பால் இப்போக்கு மிகப் பெரிய அளவில் அதிகரித்தது.

தொடரும்.......

Notes:
1. Dilip Hiro, The Longest War, Routledge, New York, 1991. p. 30
2. Ibid., pp. 71
3. Ibid., pp. 262-3
4. Lawrence Freedman and Efraim Karsh, The Gulf Conflict: 1990-1991, Princeton University Press, Princeton, 1993, pp. 5-6


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved