World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Coroner rejects inquest into death of Dr. David Kelly

பிரிட்டன்: டாக்டர் டேவிட் கெல்லி மரணம் குறித்து மீண்டும் பிரேத விசாரணை நடத்த மறுப்பு

By Chris Marsden
18 March 2004

Back to screen version

முன்னணி ஆயுதங்கள் ஆய்வாளரும் மோசடியை அம்பலப்படுத்தியவருமான டாக்டர் டேவிட் கெல்லியின் மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடத்துவதற்கு அசாதாரணமான முறையில் ஆக்ஸ்போர்ட் பிரேத விசாரணை அதிகாரியான நிக்கோலஸ் கார்டினர் மறுத்துவிட்டார்.

ஈராக்கிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் இருப்பதாக பிரதமர் டோனி பிளேயர் கூறியது தொடர்பான பரபரப்பின் மையமாக கெல்லி இருந்தார், ஏனெனில் அரசாங்கம் வெளியிட்ட புலனாய்வு ஆவணங்களில் காணப்பட்ட தகவல்களின் துல்லியம் தொடர்பாக பாதுகாப்பு சேவைகளில் நிலவிய அதிருப்தி குறித்து BBC- க்கு கெல்லி பேட்டியளித்திருந்தார்.

ஈராக்கிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் இருப்பதாக தவறான புலனாய்வு தகவல்களை அரசாங்கம் சேர்த்திருக்கிறது என்ற அவரது கூற்றைப் பகிரங்கமாக மறுத்து அறிக்கை வெளியிடுமாறு நிர்பந்திக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகே அவரது உடல் 2003-ஜூலை 17-ல் அவரது வீட்டிற்கு அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில், அவரது Oxford இல்லத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது இறப்பு தொடர்பான பிரேத விசாரணை ஜூலை 19-ல் நடத்தப்பட்டது, ஆனால் கார்டினரிடமிருந்து சுருக்கமான ஒரு அறிக்கைதான் வெளியிடப்பட்டது. மேலெழுந்த வாரியாக புலன்விசாரணை நடத்தப்பட்ட பின்னர், ஆகஸ்ட் 14-ல் பிரேத விசாரணை அதிகாரியின் விசாரணை முடித்து வைக்கப்பட்டது. அது பிரத்தியேகமாக உள்துறை அலுவலக மருத்துவ நிபுணர் டாக்டர் நிக்கோலஸ் ஹன்ட்டால் திருத்தப்பட்ட மருத்துவ அறிக்கை ஒன்று சான்றாக தாக்கல் செய்யப்பட்டதை சேர்க்கப்பெறாது இருந்தது.

கெல்லியின் இடது மணிக்கட்டில் பல ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்தன. அதன் காரணமாகத்தான் அவர் இறந்தார் என்று மருத்துவ அறிக்கை சுட்டிக்காட்டுவதாக கார்டினர் தெரிவித்தார். ரத்தப்போக்குத்தான் சாவிற்கு முக்கியமான காரணமாகும், இரண்டு ஆழமான காயங்கள் இருந்தன அவை உயிரை பறித்திருக்கலாம் என்று ஹன்ட் முடிவிற்கு வந்தார். இரண்டாம் நிலை காரணம் வலியை போக்குவதற்கு பயன்படுத்தப்படும் Co-Proxamol அந்த மாத்திரைதான் ரத்தத்தில் ஈர்க்கப்பட்டுவிட்டது என்று கூறப்பட்டது. ஆனால் அவரது ரத்தத்தில் கலந்திருந்த மாத்திரையின் நச்சுத்தன்மையின் அளவு அவரைக் கொன்றிருக்கப் போதுமானதாக இருக்காது என்று நச்சுத்தன்மை பற்றிய அறிக்கை கூறியது.

அதற்குப்பின்னர் ஹட்டன் பிரபு விசாரணைக்கு அரசாங்கம் உத்தரவிட்டதால் டாக்டர் கெல்லியின் மரணம் தொடர்பான மேல் விசாரணையை கார்டினர் கைவிட்டுவிட்டார். அவர் அவ்வாறு செய்ததற்கு காரணம் (அரசாங்க சட்ட ஆலோசகரான) Falconer பிரபு 1988- பிரேத விசாரணை சட்டத்தில் 17a பிரிவை சுட்டிக்காட்டி அரசாங்கம் நியமிக்கும் பொது விசாரணை அல்லது ஒரு நீதிபதி நடத்தும் விசாரணை ''பிரேத விசாரணைப் பணிகளை முழுமையாக நிறைவேற்றுமென்று'' அந்தக் கட்டளையில் கூறியிருக்கிறார்.

கார்டினர் மீண்டும் இப்போது பரவலாக அவநம்பிக்கைக்கு உள்ளாகியுள்ள ஹட்டன் விசாரணை முடிவுகளை சுட்டிக்காட்டி, அதிகாரபூர்வமான விசாரணையை மீண்டும் தொடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

ஹட்டன் பிரபு கெல்லி வலி நிவாரணி Co-Proxamol அளவிற்கதிகமாக சாப்பிட்டதாலும், அதற்குப்பின்னர் தனது மணிக்கட்டை வெட்டிக்கொண்டதாலும், தற்கொலை செய்து கொண்டார் என்று முடிவிற்கு வந்திருக்கிறார். ''அவரது மணிக்கட்டில் ஆழமான காயங்கள் ஏற்பட்டு அதிலிருந்து ரத்தம் வெளியேறியதால் மடிந்துவிட்டார்'' மற்றும் ''வேறு எந்த நபரும் சம்மந்தப்பட்டிருக்கவில்லை'' என்பதில் திருப்தியாக இருப்பதாகவும் அறிவித்துவிட்டார்.

ஆக்ஸ்போர்டில் உள்ள பழைய Assize நீதிமன்றத்தில், மார்ச் 16-ல் 15-நிமிடங்கள் அறைகுறையாக நடைபெற்ற விசாரணையில், ஹட்டன் பிரபுவின் முடிவில் தான் மன நிறைவு கொண்டிருப்பதாகவும் கெல்லி தற்கொலைதான் செய்து கொண்டார் என்றும் கார்டினர் குறிப்பிட்டார்.

தடயவியல் நிபுணர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உட்பட இந்த வழக்கில் "தொடர்புடைய தகவல்களை வழங்குவதற்கு வைத்திருப்பதாக தம்மைக் கருதிக்கொள்பவர்கள்" இடமிருந்து இந்த வழக்கு தொடர்பாக தமக்கு ஏராளமான கடிதங்கள் வந்தன மற்றும் அன்று காலையில் கூட தமக்கு மூன்று கடிதங்கள் வந்ததாகவும் பிரேத விசாரணை செய்பவர் தெரிவித்தார்.

ஆனால் மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள் கெல்லி மரணம் தொடர்பாக அதிகாரபூர்வமான விளக்கத்திற்கு மாறான தகவல்களை கூறியிருப்பதை அதிகாரபூர்வமாக விசாரிக்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டார். முழுமையான விசாரணை நடைபெற்றால் கூட நிபுணர்கள் வேறுபட்ட கருத்துக்களைத்தான் சொல்வார்கள் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார். ''இது போன்ற வழக்குகளில் நிபுணர்களிடையே கருத்து ஒற்றுமை ஏற்படுவதுதான் அசாதாரணமானது. கருத்து வேற்றுமைகள் சாதாரணமானதுதான்'' என்று தெரிவித்தார்.

தற்கொலை தீர்ப்பை ஆட்சேபிப்பவர்கள் ''சதி ஆலோசனை தத்துவவாதிகள்'' அவர்கள் ''முறையாக அக்கறைகொண்டவர்கள் அல்லர்'' தன்னை அந்த வகையில் முடிவை மாற்றிக்கொள்கிற அளவிற்கு எந்தவிதமான ஆதாரத்தையும் தரவில்லை என்று விளக்கினார்.

Thames Valley போலீஸ் தலைமை புலனாய்வு இன்ஸ்பெக்டர் அலன் யங் தனக்கு சிறப்பான அறிக்கையை பரிசீலனைக்கு தந்ததாகவும் அதில் புகைப்படங்கள்,நிலைச்சான்றுகள், பேட்டி குறிப்பு விவரங்கள் அறிக்கைகள் மற்றும் ஏராளமான விவரங்கள் இருந்ததாகவும், அதன் விளைவாக ''நடைபெற்ற விசாரணை போதுமானதென்று சான்சலர் பிரபுவின் நம்பிக்கை உறுதியான ஆதாரம் கொண்டது என்று நான் உணர்ந்தேன்'' என்று கார்டினர் சொன்னார்.

கார்டினரின் முடிவு சம்பிரதாயத்திற்கு முரணானது மற்றும் கெல்லி எப்படி இறந்தார் என்பது தொடர்பாக பொதுமக்களிடையே தொடர்ந்து ஊகங்கள் நிலவுகின்றன மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

பல மருத்துவ நிபுணர்களும் கெல்லியின் நண்பர்களும், கெல்லி தற்கொலை செய்து கொண்டதை நம்பவேயில்லை அல்லது அது சம்மந்தமான விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மற்றும் பொதுவாக ஹட்டன் முடிவுகளை ஏற்றுக்கொள்பவர்களே கூட பிரேத விசாரணை அதிகாரியின் புலன் விசாரணைக்கு ஹட்டன் விசாரணை போதுமான மாற்று என்று ஏற்றுக்கொள்ளவில்லை.

சவ விசாரணை அதிகாரியான டாக்டர் மைக்கேல் பவர்ஸ் பின்னர் பேட்டியளிக்கும்போது கூறியதாவது; ''சட்டப்படி நடைமுறைகள் பின்பற்றப்படாதது பற்றி நான் கவலைப்படுகிறேன். ஹட்டன் பிரபு முன்னர் சாட்சியளித்த நிபுணர்களிடம் முரண்பாடான கருத்துக்கள் தொடர்பாக தெளிவான விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.

இதன் விளைவாகவே சாதாரணமாக பிரேத விசாரணை அதிகாரியின் விசாரணையில் கடைபிடிக்கப்பட்டுவரும் கடுமையான நடைமுறைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

''இங்கே உண்மையான பிரச்சனை விசாரணை போதுமான அளவிற்கு நடைபெற்றதா என்பதுதான். அப்படி நடைபெற்றதாக நான் நினைக்கவில்லை. பிரேத விசாரணை மூலம்தான் மரணத்திற்கான ஆணிவேரைக் கண்டுபிடிக்க முடியும். அப்படி கண்டுபிடிப்பதற்கு அதுதான் சிறந்த வழி ஹட்டன் பிரபு எல்லாப் பிரச்சனைகளையும் முழுமையாக ஆராய்வதற்கு வாய்ப்பை எடுத்துக்கொள்ளவில்லை.''

மற்றொரு பிரேத விசாரணை அதிகாரியான பேராசிரியர் ராபர்ட் பாரஸ்ட் ''ஹட்டன் பிரபு விசாரித்ததைவிட விரிவான அடிப்படையில் டாக்டர் கெல்லி எப்படி மாண்டார்? என்பது குறித்து பிரேத விசாரணை அதிகாரி முழுமையாக துருவித்துருவி விசாரித்திருக்க முடியும்'' என்று கருத்துத்தெரிவித்தார்.

ஹட்டன் தீர்ப்பு தொடர்பாக தாம் தனிப்பட்ட முறையில் மனநிறைவு கொண்டிருந்தாலும், அதில் ''இன்னும் முன்னுக்குப் பின் முரணானதும் கஷ்டங்கள் சிலவும் நிலவுவதாக'' கூறப்படுவதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹட்டன் விசாரணையில் நிலவிய பலவீனம் தொடர்பாக குறிப்பிடும்போது புலன்விசாரணையில் போலீஸ்சார் 500-பேரை நேரில் பேட்டிகண்டனர் 300 சாட்சிகளின் அறிக்கைகளை பதிவு செய்தனர். மற்றும் 700-க்கு மேற்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அப்படியிருந்தும் 70-க்கும் குறைவான வாக்குமூலங்களைத்தான் ஹட்டன் முன் தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 27-ல் கார்டியனுக்கு ஏராளமான கடிதங்கள் எழுதப்பட்டன. அவரவர் துறையில் நிபுணர்களாக உள்ள மரியாதைக்குரிய நிபுணர்ககளை கார்டினர் ஏற்றுக்கொள்ளவில்லை, கெல்லி கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்ற தங்களது நம்பிக்கையை அவர்கள் கடிதங்களில் தெரிவித்தனர். பொது சுகாதாரத்துறை ஆலோசகர் Andrew Rouse, மயக்க மருந்தியல் நிபுணர் Searle Sennett, மயங்கிய நிலையில் கிடக்கும் நோயாளிகளை ஆராய்வதில் நிபுணரான டேவிட் ஹால்பின், ரேடியாலஜி நிபுணர் Stephen Frost, பேத்தாலஜி நிபுணர் Dr. Peter Fletcher மற்றும் Vascular Surgery நிபுணர் Martin Birnstingl ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனர்.

பெப்ரவரி12-ல் அவர்கள் எழுதியிருந்தார்கள்: ''ஹட்டன் அறிக்கையில் எங்களது கண்டனம் என்னவென்றால் தற்கொலை என்ற அதன் தீர்ப்பு பொருத்தமற்றது. வெட்டுப்பட்ட ரத்தக் குழாயிலிருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டு, வெட்டப்பட்டவர் மடிந்து விடுவார் என்பது அடிப்படை, மருத்துவக் கல்விக்கே முரணான முடிவாகும். வெட்டுப்பட்ட ரத்தக் குழாயில் உள்ளிழுத்துக்கொள்ளும்; குறுகலாகும்; ரத்தம் உறைந்துவிடும்; சில நிமிடங்களில் ரத்தக்கசிவு நின்றுவிடும். வெட்டுப்பட்ட மனிதனுக்கு தொடர்ந்து ரத்தக்கசிவு நீடித்துக்கொண்டே இருந்தாலும் கூட அவசியமற்ற ரத்தக் குழாய்கள் மூடிக்கொண்டு அந்த மனிதன் பலமணி நேரம், ஏன் பலநாட்கள் கூட உயிர்வாழ முடியும்.''

ஒரு விமர்சகருக்கு பதிலளிக்கும் வகையில் அவர்கள் எழுதியதாவது:

''ஹட்டன் விசாரணையில் தடயவியல் நிபுணரான டாக்டர் நிக்கோலஸ் ஹன்ட் ரத்தப்போக்கினால் மரணம் ஏற்பட்டது என்ற முடிவு போதுமானதல்ல என்பதால் பேராசிரியர் Milroy அதை விரிவுபடுத்துகின்ற வகையில் மருந்து நச்சியல் விளக்கத்திற்கு வருகிறார். நச்சுப்பொருள்கள் தொடர்பாக ஆராயப்பட்டதில், வலி நிவாரண மருந்து கணிசமான அளவிற்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்மந்தமான பாடநூல் விளக்கம் Baselt - ல் உள்ளது 1mg/1 செறிவு நச்சுத்தன்மை டாக்டர் கெல்லி வயிற்றில் இருந்தது. ஆனால் இந்த வழக்கில் டாக்ஸிகாலஜி நிபுணரான டாக்டர் ஆலன் இந்த அளவு சாவிற்கு காரணமாக அமையாது. கெல்லி வயிற்றில் காணப்பட்டது சாவு ஏற்படும் அளவில் மூன்றில் ஒரு பங்குதான் என்றார். அதற்குப்பின்னர் பேராசிரியர் Milroy 'ஐசாமிக் இதய நோய்' பற்றி கூறுகிறார். ஆனால் Dr. Hunt வெளிப்படையாகவே டாக்டர் கெல்லிக்கு மாரடைப்பு இல்லையென்று சொல்லிவிட்டார். ஆகவே பிரேத விசாரணை அறிக்கையில் எந்தவிதமான இதய நோய்பற்றிய குறிப்பும் இல்லையென்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்''

பெப்ரவரி19-ல் அவர்கள் எழுதினார்கள், ''டாக்டர் கெல்லியின் மணிக்கட்டு ரத்த குழாய் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருந்தால் கூட அந்த ரத்த குழாய் மிக சிறிது; மிக விரைவாக ஒட்டிக்கொள்ளும் குறுகலாகி விடும், ரத்தம் உறைந்துவிடும், எனவே உயிர் போவது சாத்தியமில்லை'' என்று.

அவர்கள் தொடர்ந்து எழுதினார்கள், ''ஹட்டன் விசாரணையில் உயிர்நாடியான தடயவியல் ஆதாரங்கள் காணப்படவில்லை. அவரது நுரையீரல்களில், ரத்தத்தில், இதயத்தில் மற்றும் கழிவுப்பொருட்களில் முழுமையான சோதனைகள் நடத்தப்படவில்லை அல்லது நடத்தப்பட்டதாக தெளிவான குறிப்புமில்லை. எடுத்துக்காட்டாக டாக்டர் ஹன்ட்டின் அறிக்கையில் உடலிலிருந்த மீதி ரத்தம் பற்றிய மதிப்பீடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. டாக்டர் கெல்லி ஐந்து பைன்டுகளுக்கு (Pints) குறைந்த அளவிற்கு ரத்தத்தை இழந்திருப்பாரானால் ரத்தக்கசிவு அவரது மரணத்திற்கு காரணமாக இருந்திருக்க முடியாது.''

மார்ச் 15-ல் டாக்டர் சி. ஸ்டீபன் புரோஸ்ட், கார்டினர் ''அவர்கள் முறையான அக்கறையுள்ள'' நபர்களல்ல என்று கூறியதற்கு பின்வருமாறு பதிலளித்தார்:

''நானும் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள சகாக்களும் கூறியவற்றிற்கு இதுவரை மிகக்கடுமையாக எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. மேலும் டாக்டர் கெல்லியின் மரணம் குறித்து முறையாக புலன்விசாரணை செய்ய வேண்டும் என்ற எங்களது கருத்துக்களுக்கு ஆதரவாக பல மருத்துவர்களும், வழக்கறிஞர்களும் அக்கறையுள்ள குடிமக்களும் திரண்டு வருகிறார்கள்.

''பிரேத விசாரணை அதிகாரி நடைபெற உள்ள விசாரணையில் 'முறையான அக்கறையுள்ள நபர்களல்ல' என்று முடிவு செய்து விட்டார்கள். அப்படி அவர் முடிவு செய்கிற நபர்கள்தான். அக்கறையுள்ளவர்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. டாக்டர்களும், வழகறிஞர்களுமாகிய நாங்கள் இறுதியாக பிரேத விசாரணை அதிகாரிக்கு ஒரு மனுவை அனுப்பினோம். அதில் ஹட்டன் பிரபுவின் தீர்ப்பில் எங்களுக்குள்ள சந்தேகங்கள், பிரேத விசாரணை அதிகாரி மீண்டும் விசாரணையை தொடங்குவதற்கு ''அசாதாரணமான காரணமாக'' அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தோம்.

''சென்ற செவ்வாயன்று Channel 4- செய்தி அறிக்கையில் கார்டியனுக்கு நாங்கள் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து எழுந்த விவாதம் பற்றி சிறப்புச் செய்தி அறிக்கை ஒளிபரப்பபப்பட்டது. எங்களது எதிரிகளான பேராசிரியர்கள் Milroy மற்றும் Forrest முறையே தடயவியல் நோய்க்குறி ஆய்வு வல்லுநர், மற்றும் தடயவியல் நஞ்சு ஆய்வு வல்லுநர் ஆவர். அவர்களே முழு விசாரணை மீண்டும் நடத்தப்படவேண்டும் என்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். எனவே இந்த சந்தேகங்கள் மக்களில் பலருக்கு இருப்பதால் முறையாக அவைபற்றி ஆராய வேண்டும்.

''மிக முக்கியமாக, தடயவியல் நோய்க்குறி ஆய்வு வல்லுநரும் ஹட்டன் விசாரணையில் சாட்சியமளித்தவரும், அவரது சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டுதான் மிகப்பெரும்பாலும் தற்கொலை என்ற முடிவு செய்யப்பட்ட, டாக்டர் நிக்கோலஸ் ஹன்ட், சேனல்-4-க்கு தொலைபேசி மூலம் ஒரு தகவலைக்கூறினார். அவரும் முழு விசாரணை மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று நினைப்பதாக கூறுவது அந்த செய்தி அறிக்கையில் காட்டப்பட்டது.''

விசாரணை ரத்து செய்யப்பட்ட நாளன்று, டாக்டர் டேவிட் ஹால்பின் BBC ரேடியோ டுடே நிகழ்ச்சியில், ஹட்டன் விசாரணை மரணத்திற்கான காரணம் பற்றியதில் "அதன் கேள்விகேட்கும் வரம்பை மட்டுப்படுத்திக் கொண்டது". "தற்கொலை என்பதற்கான சான்று தொடர்பாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன" என்றும் கூறினார்.

''ஒரு ரத்தக் குழாயை வெட்டிக்கொண்டதன் மூலம் ஒரு மனிதன் தனது உடலிலுள்ள ரத்தத்தில் பாதியை இழந்திருக்க முடியாது. கெல்லி மரணம் சம்பவிப்பதற்கு தேவைப்படுவதில் மூன்றில் ஒரு பங்கு மாத்திரைகளைத்தான் சாப்பிட்டிருக்கிறார். இதன்பொருள் என்னவென்றால் அந்த விஞ்ஞானி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற "சாத்தியக்கூறு தெளிவாகிறது".

பிரேத விசாரணை அதிகாரியின் முறையான விசாரணை முடிவை முன்கூட்டியே அனுமானிப்பதற்கு முயலவில்லை என்பதை அவர் வலியுறுத்தினார். ''இதுவரை நடந்த விசாரணை போதுமானதா என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் என்ன நடந்தது, எப்படி நடந்தது, என்பது பற்றிய தத்துவங்கள் எதையும் பிரகடனப்படுத்தவில்லை.'' என்று குறிப்பிட்டார்.

ஹட்டன் தீர்ப்பை கெல்லி குடும்பம் ஏற்றுக்கொண்டது. ஆனால் ஹட்டன், அரசாங்கம் அந்த விஞ்ஞானியை கேவலப்படுத்தவும், அம்பலப்படுத்தவும் திட்டமிட்டது என்பதற்கான ஆதாரத்தை விசாரிப்பதை ஹட்டன் புறக்கணித்துவிட்டார் என்று நம்புவதாக தெரிவித்தனர். அவர்களது குடும்ப சட்ட பிரதிநிதியான பாரிஸ்டர் Jeremy Gompertz, QC கார்டினரிடம் கருத்து தெரிவிக்கும் போது, ''டாக்டர் கெல்லி அந்த நேரத்தில் எத்தகையான மன உளைச்சலோடு இருந்தார் என்பதை முழுமையாக விசாரிக்க தவறியது பற்றி தாங்கள் ஏமாற்றமடைந்ததாகவும், தன்னை பணியில் அமர்த்தி வேலை வாங்கிய பாதுகாப்பு அமைச்சகம், கடமை செய்த அவருக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை என்பதால் அவர் அத்தகைய மனக் குழப்பத்திற்கு ஆட்பட்டிருக்கக்கூடும்'' என்று குறிப்பிட்டார். திருமதி. கெல்லி பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது இழப்பீடுகோரி வழக்குத்தொடரக்கூடும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved