World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bush campaign ads provoke protests from families of September 11 victims

புஷ் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் செப்டம்பர் 11 இல் பாதிக்கப்பட்டோரது குடும்பங்களிலிருந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தூண்டிவிட்டுள்ளது

By Patrick Martin
8 March 2004

Back to screen version

செப்டம்பர் 11 பயங்கரவாதிகள் தாக்குதலை விசாரித்துவரும் சுதந்திர கமிஷனின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு ஜனாதிபதி புஷ் ஒதுக்குகின்ற நேரத்தைவிட கூடுதலான நேரத்தை தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக விளம்பர சினிமா தயாரிப்பதற்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். நியூயோர்க்கிலும், வாஷிங்டனிலும் 9/11 தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த பலருக்கு புஷ் பிரச்சாரத்தின் வணிக விளம்பரங்கள் மிகப்பெரிய ஆத்திரத்தை உருவாக்கியுள்ளதற்குப் பின்னால் அந்த நிகழ்ச்சிகளை சுற்றியுள்ள உண்மைகள் மீதான அவரது மூடி மறைப்பு ஒரு பிரதாரன காரணியாக இருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தலில் புஷ் வெளியிட்டுள்ள விளம்பர படங்கள் வியாழனன்று பல மாநிலங்களில் ஒளிபரப்பப்பட்டன. இந்த மாநிலங்களில் நவம்பர் தேர்தலின்போது போட்டி கடுமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. நான்கு வர்த்தக விளம்பர படங்களில் மூன்று உலக வர்த்தக மையத்தின் இரட்டைக்கோபுரங்கள் சிதைவதை படம் பிடித்துக்காட்டுகின்றன. இரண்டு படங்கள் அந்த படுநாசம் ஏற்பட்ட இடத்திலிருந்து தீயணைப்புபடை வீரர்கள் ''மிச்சமிருந்த பகுதிகளை'' தேசியக்கொடி போர்த்து எடுத்துச் செல்வதை படம்பிடித்து காட்டுகின்றன. இந்தத் துயரத்தை புஷ் தலைமைக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்காக இந்த விளம்பர படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் விளம்பர திரைப்படங்களில் 9/11- காட்சிகளைத் சித்தரிப்பதை உலக வர்த்தகமைய கட்டடம் சிதைந்ததால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒரு குழு, நியூயார்க் நகர தீயணைப்பு படை வீரர்களோடு சேர்ந்து கண்டனம் தெரிவித்தனர். மேலும் புஷ் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த வர்த்தக படங்களை ஒளிபரப்புவதை நிறுத்திவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.

குடும்பங்களின் அமைதிநிறைந்த எதிர்காலத்திற்கான என்ற தலைப்பிடப்பட்ட கட்டுரை செப்டம்பர் 11ல் வலைதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் புஷ் விளம்பரங்களுக்கு பல குடும்ப உறுப்பினர்களும், தீயணைப்பு படைவீரர்களும் எதிர்த்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வர்த்தகமையம் விழுந்ததில் தனது சகோதரனை பலிகொடுத்த ஆன்ட்ரூ ரைஸ் இத்தகைய பேரழிவு மற்றும் கொலைக்காட்சிகளை அரசியல் பிரச்சாரத்தில் பயன்படுத்திக் கொள்வது சரியான நடவடிக்கையாகாது. இத்தகைய ஆத்திரமூட்டும் வகையில் அதை அரசியல் வாதிகள் பயன்படுத்திக்கொள்வது 9/11 பாதிக்கப்பட்ட குடும்பங்களது வெறுப்பை கிளறியிருக்கிறதென்று கூறியிருக்கிறார்.

உலக வர்த்தக மைய கட்டடங்கள் இடிந்ததில், தனது சகோதரன் வில்லியம் கெல்லி ஜீனியரை பறிகொடுத்த கோலின் கெல்லி கூறினார் '' இந்த விளம்பரங்கள் மற்றும் இவற்றை தொடர்ந்து வருபவை அரசியல்கட்சி வேட்பாளர்களுக்கு இடையே அருவருக்கத்தக்க மோதல் போக்குகளுக்கு இடமளித்துவிடுமென்று நான் பயப்படுகிறேன். அன்றைய பயங்கரத்தைக் கண்டு ஒருதரப்பு அலட்சியமாக இருந்ததாக மற்றொரு தரப்பு குற்றம்சாட்டவே செய்யும்.'' கெல்லி போர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் செயலூக்கமாக ஈடுபடுபவர் 2003- துவக்கத்தில் ஈராக் மீது அமெரிக்கா படையெடுக்க உத்தேசித்திருப்பதை எதிர்க்கும் வகையில் அவர் ஈராக்கிற்கு சென்று கண்டனப்பேரணியில் பங்கெடுத்துக்கொண்டவர். செப்டம்பர் 11-தாக்குதலுக்கு போர் நியாயமான பதிலாக அமைய முடியாது என்று கருத்துத்தெரிவித்தவர்.

மன்ஹாடன் புறநகர் செல்ஸியா பகுதியில் பணியாற்றிவருகிற தீயணைப்பு படைவீரர் டிம் ரியான் ''பல மாதங்கள் WTC- கட்டடம் தரைமட்டமான பகுதியில் பணியாற்றிய தீயணைப்புப்படையைச் சேர்ந்தவன் என்ற முறையில் அமெரிக்காவின் வரலாறு காணாத துயரத்தை புஷ் பிரச்சாரமாக பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டு நான் வெறுப்படைகிறேன்'' என்று கூறினார்.

செப்டம்பர் 11-பாதிப்பிற்கு இலக்கான குடும்பங்களைச் சார்ந்தவர்கள் நடத்துகிற எதிர்கால சமாதான இயக்கத்தின் (செப்டம்பர் 11-Families for Peaceful Tomorrows) துணை இயக்குநரான கெல்லி கேம்பல் கருத்துத்தெரிவிக்கும்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவுவதாதக் குறிப்பிட்டார். ''இதைச்சுற்றி எந்த கருத்து ஒற்றுமையுமில்லை. ஆனால் மிகப்பெரும்பாலான 9/11 துயரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பலியான தங்களது நேசத்திற்குரியவர்களை அவர்கள் மாண்ட படங்களை யாரோ ஒருவர் பயன்படுத்திக் கொள்கிறார், என்பதில் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டிருக்கின்றனர் அதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது'' என்று குறிப்பிட்டார்.

செப்டம்பர் 11-தாக்குதல்களில் தப்பிப்பிழைத்த பலர் புஷ் தொடர்பாக மிகக்கடுமையான கண்டனங்களை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர். திருமதி கிரீஸ்டன் பிரேத் ஒய்சரின் கணவர் ரோனால்டு உலக வர்த்தக மையத்தில் மாண்டுவிட்டார். அவர் கூறினார் ''எவ்வளவு துணிச்சலோடு புஷ் இந்த சம்பவத்தை அரசியல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியிருக்கிறார்!'' என்று குறிப்பிட்டார். நியூஜெர்ஸியைச் சேர்ந்த 48-வயதான லோரி வான் ஆக்கன் அந்தத்தாக்குதலில் தனது கணவரை பலிகொடுத்தவர். அவர் கூறினார் ''நான் பேசிய அனைவருமே முழுமையாக ஆத்திரம் கொண்டிருக்கின்றனர்.'' உலக வர்த்தக மையகட்டடத்தில் பணியாற்றிய தனது 29-வயதான மகன் ஜோன் சார்லசை பலிகொடுத்த ரான் வில்லட் Reuters-க்கு அளித்த பேட்டியில் ''புஷ்ஷிற்கு வாக்களிக்கும் முன்னர் நான் சதாம் ஹூசைனுக்குத்தான் ஓட்டுப்போடுவேன்'' என்று குறிப்பிட்டார்.

வெள்ளை மாளிகையிலும் புஷ் மறுதேர்தல் பிரச்சாரத்திலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டது சரிதான் என்று வாதிட்டனர். செப்டம்பர் 11-தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சார்ந்தவர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள் என்பதற்காக விளம்பர திரைப்படங்கள் எதுவும் ஒளிபரப்பிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவித்தனர். பல குடியரசுக்கட்சி பிரதிநிதிகள் தொலைக்காட்சிக்கு படையெடுத்து ஞாயிற்றுக்கிழமை பேட்டி நிகழ்சிகளில் விளம்பர பிரச்சாரத்தை நியாயப்படுத்தினர்.

புஷ் இந்த கருத்துவேறுபாடு தொடர்பான கேள்விகளுக்கு சனிக்கிழமையன்று பதிலளித்தபோது தனது விளம்பரங்களை விலக்கிக்கொள்ளப் போவதில்லை என்று தானே அறிவித்தார். ''முதலாவதாக, நான் தொடர்ந்து 9/11 நிகழ்ச்சிகளின் தாக்கங்களை நமது நாட்டிற்கும் எனது ஜனாதிபதி பதவிக்கும் ஏற்படுத்திய தாக்கங்களை விளக்கிக்கொண்டே இருப்பேன். ''அன்றைய தினம் இந்த நிர்வாகம் அந்த நெருக்கடியை சமாளித்த முறையும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரும் விவாதம் நடத்துவற்கு ஏற்றவைதான், மேலும் நான் அமெரிக்க மக்களோடு அதைப்பற்றி விவாதிக்கும் நாட்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்று புஷ் பதிலளித்தார்.

தாக்குதல் நடந்த அன்று புஷ் நடந்து கொண்டவிதம் உலக வர்த்தகமையம் மற்றும் பென்டகன் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட காலத்திற்கு முந்திய நடவடிக்கைகள் ஆகியவற்றில் எந்தவிதமான கணிப்பீடினையும் எடுப்பதனை தட்டிக்கழிப்பதற்கே புஷ் நிர்வாகம் உண்மையில் முயன்று வருகிறது என்பதை செப்டம்பர் 11-தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சார்ந்தவர்கள் மிக நன்றாக அறிவார்கள்.

WTC தகர்ந்ததில் பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் ஒருவர், புஷ் இனது தேர்தல் பிரச்சார தலைவர்களில் ஒருவரான கரேன் ஹூக்ஸ், 9/11 தொடர்பான விளம்பரங்கள் ''சுவையானவை'' மற்றும் பயன்படுத்தும் நோக்கு இல்லாதவை என்று தொலைக் காட்சிவழியாக வர்ணித்ததுடன் முரண்பட்டு நின்றார்.

Bob McIlvaine, இவரது மகன் Bobby இரட்டை கோபுரத்தில் பணியாற்றியவர், அவர் கூறினார் ''எனது மகன் செப்டம்பர் 11 தாக்குதலில் கொலைசெய்யப்பட்டான். அந்தக் கோபுரங்கள் சிதைந்து விழுந்த தொலைக்காட்சி படத்தை யாரோ ஒருவரது அரசியல் வாழ்வை உயர்த்துவற்காக பயன்படுத்திக்கொள்வது சுவையானது என்று சொன்னால் அந்தக் கருத்தை அப்பட்டமாக மறுத்தாக வேண்டும். நான் அதை கண்டிக்கிறேன். அன்றைய காட்சிகளை பயன்படுத்தி மக்களது உணர்வுகளோடு விளையாடுவதற்கு பதிலாக ஜனாதிபதி 9/11-தாக்குதல்கள் தொடர்பாக சுதந்திரமாக விசாரணை நடத்திவரும் கமிஷனோடு அதிக அளவில் ஒத்துழைத்தால் அது சரியான செயலாக இருக்கும். ஏனென்றால் அன்றைய தினம் என்ன நடந்தது? ஏன் நடந்தது? என்பதை நாங்கள் அறிந்து கொள்ளமுடியும்''.

செப்டம்பர் 11- தாக்குல்களை விசாரிப்பதற்கு சுதந்திரமான கமிஷனை நியமிப்பதற்கு வெள்ளை மாளிகை பல மாதங்கள் மறுத்துவந்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கொடுத்துவந்த அழுத்தங்களை இனியும் சமாளிக்க முடியாது என்று தெரிந்து கொண்டு அந்த குழுவிற்கு அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்ரி கிஸிங்கரை நியமித்தது. விசாரணையை மூடிமறைப்பதில் அவர் ஒரு நிபுணர், ஆனால் அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏனெனில் சவுதி அரேபியாவுடனும், இதர மத்திய கிழக்கு வாடிக்கையாளர்களுடனும் நெருக்கமான வியாபாரத் தொடர்புகளை இன்னமும் வைத்துக் கொண்டிருப்பவர். அவருக்கு பதிலாக நியூஜெர்ஸி முன்னாள் கவர்னரும் குடியரசுக்கட்சிக்காரருமான தாமஸ் கீன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

கீனும் அவரது துணைத்தலைவரான ஜனநாயக்கட்சியை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் உறுப்பினருமான லீ ஹாமில்டனும் வெள்ளை மாளிகைக்கு இடம் கொடுக்க முயன்றாலும் விசாரணை கமிஷனுக்கு புஷ் நிர்வாகத்திற்கும் இடையே பல்வேறு கடுமையான தகராறுகள் உருவாயின. புஷ் நிர்வாகம் ஆவணங்களை தர மறுத்தது. அல்லது சாட்சிகள் பட்டியலையும் தரவில்லை.

அமெரிக்கா மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குல்கள் தொடர்பான தேசிய கமிஷன் இந்த ஆண்டு மே 27-ல் தனது அறிக்கையை பகிரங்கமாக வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால் நிர்வாகம் தடுத்து நிறுத்தும் தந்திரங்களை கையாண்டுவந்தால் கமிஷன் மேலும் அவகாசம் கோரியது. முன்னணி குடியரசுக்கட்சிக்காரர்கள் இந்தக் கோரிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மிகவும் சிக்கலுக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் இடமளிக்கும் சில விஷயங்களை விசாரணையிலிருந்து கைவிட்டுவிட்டு நிர்வாகத்தின் நடவடிக்கைகளை மூடிமறைக்கின்ற வகையில் ஒரு அறிக்கையை தருமாறு நிர்பந்திக்க முயன்றனர்.

இது தொடர்பாக நீண்ட கருத்துவேறுபாடுகள் நீடித்தன. அமெரிக்கா கீழ்சபை சபாநாயகர் J.டென்னிஸ் ஆஸ்டேர்ட் கமிஷனுக்கு எந்த விதமான காலநீடிப்பையும் தரவிடாமல் தடுக்கப்போவதாக அச்சுறுத்தினர். அதற்குப் பின்னர் கமிஷனும் நிர்வாகமும் ஜூலை 26 இறுதி கெடுநாள் என்பதற்கு இணங்கின.

இறுதி காலகெடு சம்மந்தமாக நிலவிய கருத்து வேறுபாடுகளில் ஒரு உண்மை தெளிவாக புலனாகிறது. ஜூலை 26- ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டின் முதல் நாளாகும். முழுமையான தேர்தல் பிரச்சாரம் துவங்குவதற்கு முன்னர் அறிக்கை வெளியிடப்பட்டால் அந்த அறிக்கையில் செப்டம்பர் 11- அன்றும் அதற்கு முன்னரும் புஷ் நிர்வாகம் நடந்து கொண்ட முறையை விமர்சிக்கின்ற கடுமையான பகுதிகள் இடம்பெறும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதால் புஷ் தேர்தல் பிரச்சார அதிகாரிகள் கமிஷன் அறிக்கை தொடர்பாக கவலையடைந்தனர். இதற்கு மாற்றாக குடியரசுக்கட்சி செனட்டர் John McCain மற்றும் ஜனநாயகக்கட்சி செனட்டர் ஜோசப் லைபர்மேனும் அடுத்த ஆண்டு துவக்கத்தில், தேர்தல் நன்கு முடிந்தபின் அறிக்கையை வெளியிடலாம் என்று ஆலோசனை தெரிவித்தனர்.

அறிக்கை வெளியிடுவதற்கான காலக்கெடு தொடர்பாக நடைபெற்ற மோதல்களைவிட புஷ், செனி மற்றும் இதர தலைமை அதிகாரிகள் கமிஷன் முன் நேரில் ஆஜராகிறார்களா? அவர்கள் எவ்வளவு நேரம் விசாரிக்கப்படுவார்கள்? அவர்கள் அளிக்கும் சாட்சியம் பகிரங்கமாக நடைபெறுமா? என்பது தொடர்பாக அதிக கருத்து வேறுபாடுகள் நிலவின. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலிசாரைஸ் பகிரங்க சாட்சியமளிக்க மறுத்துவிட்டார். தனிப்பட்ட முறையில் ஒரு மணிநேர இடைவெளியில் இரண்டு விசாரணை குழு உறுப்பினர்களான கீனும், ஹேமில்டனும் மட்டுமே புஷ்ஷையும் செனியையும் விசாரிக்க வேண்டுமென்று வெள்ளை மாளிகை பரிந்துரை கூறியது.

வெள்ளை மாளிகையின் கிரிமினல் நடவடிக்கையை ஒரு சுதந்திரமான வழக்கறிஞர் விசாரிப்பதைப் போன்றுதான் இந்த விசாரணை கமிஷனை நிர்வாகத்தின் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தியவர்கள், நடத்திக்கொண்டு வருகிறார்கள். ஜனாதிபதிக்கும், துணை ஜனாதிபதிக்கும் மிகக்குறுகலான அளவிற்கு விசாரணை வரம்பை சுருக்க வலியுறுத்தி வருகிறார்கள். இதில் உண்மை என்னவென்றால் எல்லா விராணைக்குழு உறுப்பினர்களையும் புஷ்தான் நியமித்தார். குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் சரிசமமாக இடம் பெற்றிருக்கின்றனர். ஜனநாயகக்கட்சியின் சார்பில் அந்தக்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரையும் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போரையும்'' ஈராக் படையெடுப்பையுமிட்டு எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்காத பிற்போக்கு சக்திகளிலிருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved