World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான்Japan's fragile economic recovery ஜப்பானின் பலவீனமான பொருளாதார வளர்ச்சி By Joe Lopez கடந்த 13 ஆண்டுகளில் முதல் தடவையாக ஜப்பானிய பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. சென்ற மாதம் அரசாங்கம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள மதிப்பீடுகளின் படி, 2003- கடைசி மூன்று மாதங்களில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு (GDP) 1.7 சதவீதம் உயர்ந்துள்ளது அல்லது ஆண்டுவீதம் 7 சதவீதமாகும். இந்த வாரம் திருத்தப்பட்ட புள்ளி விவரத்தின்படி இது 6.4-சதவீதமாகும். அப்படியிருந்தும் இது, ஜப்பானில் ஊகபேர பொருளாதார குமிழி வீழ்ச்சியடைந்ததற்கு சற்று முன்னர் -1990-ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு காலத்தில் நிலவியதில் இது மிக உயர்ந்த அளவுதான். எதிர்பார்த்ததைவிட சிறப்பான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருப்பது ஜப்பானின் உள்ளார்ந்த பொருளாதார வலுவைக்காட்டவில்லை. மாறாக பக்கத்திலுள்ள சீனாவிற்கு, கணிசமான அளவிற்கு ஏற்றுமதிகள் பெருகிவருவதைக் காட்டுகின்றது. சீனா, அமெரிக்க ஏற்றுமதிகளை பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. 2003-ல் சீனாவிற்கு ஜப்பானின் ஏற்றுமதி புதிய சாதனை அளவான 44-சதவீதத்தை எட்டியது. அதன் மதிப்பு 60-பில்லியன் டாலர்கள்; குறிப்பாக எஃகு கனரக இயந்திரங்கள், கார்கள், மற்றும் மொபைல் டெலிபோன்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிகள் வலுவான அடிப்படையில் வளர்ந்தன. அமெரிக்காவிற்கு பதிலாக ஜப்பானின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக சீனா இப்போது மாறிவிட்டது. சென்ற ஆண்டு ஜப்பானின் உண்மை GDP வளர்ச்சி 2.7-சதவீதம். இதில் 3-ல் ஒரு பகுதிக்கு மேல் ஜப்பான் -சீன வர்த்தகம் பங்களிப்பு செய்திருக்கிறது. புதன் கிழமையன்று அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, ஜப்பானின் நடப்புக்கணக்கு உபரி ஜனவரியில் 135 சதவீதமாகும். ஏழாவது மாதமாக தொடர்ந்து நிலைநாட்டப்பட்டு வரும் வெளிவர்த்தக நடப்புக்கணக்கின் உபரி இது. இந்த வாரம் நாடாளுமன்ற குழு ஒன்றில் சாட்சியமளித்த பொருளாதார அமைச்சர் Heizo Takenaka குறிப்பிட்ட தகவல் "பொருளாதாரம் படிப்படியாக சீரடைந்து வருகிறது" என்பதாகும். இப்போது நுகர்வோரும், வர்த்தகர்களும் செலவிடும் அளவு உயர்ந்து கொண்டு வருவதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அரசாங்கம் ஊக்குவிப்புப் பொதிகளை சார்ந்திருத்தல் குறைந்து வருவது சாதகமான சமிக்கையாகும். ஆயினும், ஏற்றுமதிகளை அதிகம் சார்ந்திருப்பதன் காரணமாக, பலவீனமான பொருளாதார வளர்ச்சி இது என்று மற்ற ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஜப்பானிலுள்ள Merrill Lynch தலைமை பொருளாதார ஆய்வாளர் Jesper Koll, "சீனாவின் தேவை காரணமாக கடந்த 12-மாதங்களில் சீனாவுடன் ஏற்றுமதி வர்த்தகம் 80 சதவீதம் பெருகியுள்ளது. ஜப்பானில் எல்லோரது கவனமும் சீனா மீது திரும்பியுள்ளது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. சீனாவின் பொருளாதார வேகம் குறையுமானால் ஜப்பான் பொருளாதாரம் சரிந்துவிடும்'' என்று அவர் நியூயோர்க் டைம்ஸ்க்கு தெரிவித்தார். ''ஜப்பானுக்கு உண்மையான ஆபத்து சீனா அல்ல, அமெரிக்க பொருளாதாரம்தான் என ஆஸ்திரேலியன் பைனான்சியல் ரிவியு பத்திரிகையில் மேற்கோள்காட்டி, Morgan Stanley பொருளாதார நிபுணர் Takehiro Sato, சுட்டிக் காட்டினார். "2001-முதல் ஹாங்காங்கிற்கும் சீனாவிற்கும் எஃகு பொருள்கள் போன்ற சில விதி விலக்குகளைத் தவிர, ஏற்றுமதிகள் பேரளவு வளர்ந்து கொண்டே போவது இறுதியில் அமெரிக்கச் சந்தையோடு, முடிச்சு போடப்பட்டிருக்கிறது. சீனாவிற்கு ஜலதோஷம் ஏற்பட்டால் ஜப்பானுக்கும் தும்மல் வரும்.... அமெரிக்காவில் இறுதி தேவை வேகம் குறையுமானால், ஜப்பானிய பொருளாதாரம் மற்றொரு நிமோனியா காய்ச்சலில் விழுந்துவிடுமென்று'' அவர் தெரிவித்திருக்கிறார். பிஸினஸ் வீக் அண்மையில் ஒரு கட்டுரையை ''சீனாவின் கோட்டைப்பிடித்துக் கொண்டு ஜப்பான் உல்லாசப் பயணம்'' என்ற தலைப்பில் பிரசுரித்திருந்தது. அதில் நீண்டகால அடிப்படையிலான பிரச்சனைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. ''அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதார உற்பத்தியில் ஜப்பானை சீனா முந்திவிடுமென்று நிச்சயமான நிலை தோன்றியுள்ளது. ஜப்பானிய கம்பெனிகள் பலவற்றை உச்சியிலிருந்து சீனக்கம்பனிகள் வீழ்த்திவிடும் நிலை ஏற்படலாம். ஜப்பானின் பொருளாதார மீட்சி நிச்சயமற்றது: இன்னமும், ஜப்பானில் நொடிந்த வங்கிகள், உற்பத்தித்திறனில் மோசமான நிலை, மேலும் தொழில் வளர்ச்சிமிக்க 7-நாடுகள் குழுவில் மிகப்பெருமளவிற்கு அரசாங்க கடன்கள் சுமையுள்ள நாடாக ஜப்பான் இருக்கிறது.'' என்று அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. நேற்று ஆஸ்திரேலியன் பைனான்சியல் ரிவியு ''இரண்டு சிலிண்டர்களில் ஓடுகின்ற ஜப்பான்'' என்ற தலைப்பில் எழுதியிருந்த கட்டுரையில், அதேபோன்ற கருத்துக்களை கூறியுள்ளது. GDP-ல் ஜப்பானின் பொதுக்கடன் 160-சதவீதம், ஒப்பிடுகையில் அமெரிக்காவைப் பொறுத்தவரை 80-சதவீதம் மற்றும் வளர்ந்த நாடுகளில் சராசரியாக இது 24-சதவீதமாக உள்ளது என்பதை அந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. சில்லறை வர்த்தகத்தில், கட்டுமானத்தில், விவசாயத்தில் மற்றும் போக்குவரத்தில் உற்பத்தித்திறன் மிகக்குறைவு. "ஜப்பான் பொருளாதார வளர்ச்சி வேகம் படிப்படியாக தவிர்க்க முடியாத அளவிற்கு குறைந்து கொண்டுதான் வரும்," இந்த பிரச்சனைகளை திட்டவட்டமாக முடிவு செய்கிறவரை இது நீடிக்கும் என்றும் அந்தக் கட்டுரை முடிவுரைக்கிறது. உடனடி பிரச்சனை என்னவென்றால், ஜப்பான் யென் நாணய மதிப்பு உயருமானால் அது ஏற்றுமதிகளை வெட்டும், இவ்வாறு பொருளாதார வளர்ச்சியையும் நேரடியாக பாதிக்கும். அமெரிக்க டாலருக்கு எதிராக ஜப்பான் நாணயம் மதிப்பு உயர்வதைத் தடுப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் பெருமளவில் செலவிட்டு வருகிறது. சென்ற ஆண்டு நாணயச்சந்தையில் புகுந்து 172- பில்லியன் டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களை ஜப்பானிய அரசாங்கம் வாங்கி ஜப்பானிய ஏற்றுமதிகளின் போட்டியிடும் ஆற்றலை நிலைநாட்டியது. ஜனவரி மாதத்தில் மட்டும் மேலும் 67 பில்லியன் டாலர்களை வாங்கியிருக்கிறது. 2003-ல் அமெரிக்க கருவூல கடன் பத்திரங்களில் பாதியை ஜப்பான் முதலீட்டாளர்கள் வாங்கிக்கொண்டிருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்தது. இது முந்திய ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகமாகும். இப்படி பெரும் எடுப்பில் நாணயச்சந்தையில் ஜப்பான் அரசாங்கம் புகுந்து டாலர்களை வாங்கி குவித்தபின்னரும், ஒரு அமெரிக்க டாலருக்கு 105- யென் என்ற உயர்ந்த அளவே உள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத உயர்வு இது. மேலும் டோக்கியோ அதன் நாணய தலையீடுகளை நிறுத்துமாறும் யென் நாணயம் தனது இயல்பான போக்கில் சந்தையில் டாலருக்கு எதிராக வலுப்பெருமாறுவிட்டுவிட வேண்டுமென்றும் வளர்ந்து வரும் அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறது. இந்த ''பொருளாதார மீட்சி'' ஜப்பானிய தொழிலாளர்களுக்கு எந்தப் பயனையும் தரவில்லை. அதிகாரபூர்வமான புள்ளி விவரங்களின்படி சென்ற மாதம் 0.1 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக வேலையில்லாத் திண்டாட்டம் உயர்ந்துள்ளது. முந்திய மாதம் 0.2 சதவீதமாக இருந்த ஆண்களுக்கான வேலையில்லாதோர் எண்ணிக்கை இப்போது 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் மிகப்பெரும் பாதிப்பு உற்பத்தித் துறைப் பிரிவில்தான். அந்த பிரிவுதான் பொருளாதார மீட்சியின் பிரதான எந்திரம் என்று வர்ணிக்கப்படுகிறது. ஜப்பானின் GDPல் 60-சதவீதம் உள்நாட்டு நுகர்வோர் செலவினங்களைப் பிரதிநிதத்துவம் செய்கிறது. இது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் 0.8 சதவீதம் என்ற மிகக்குறைந்த அளவிற்குத்தான் வளர்ந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், குறைந்து கொண்டுவரும் ஊதியங்கள், பெருகிவரும் மருத்துவ செலவினங்கள் மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் பற்றி உழைக்கும் மக்களிடையே நிலவுகின்ற கவலைகளை எதிரொலிக்கின்ற வகையில்தான் நுகர்வோர் செலவினங்கள் மிகச்சிறிய அளவிற்கு உயர்ந்து வருகின்றன. 2002 அக்டோபர்- டிசம்பர் காலாண்டோடு ஒப்பிடும்போது ஊதிய விகிதங்கள் 0.2-சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன. ஆசியா டைம்ஸ் வலைத்தளத்தில் ''ஜப்பானின் இருண்ட பொருளாதார சுரங்கப்பாதை முடிவில் ஒளிவிளக்கு'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதில் சேமிப்பு மற்றும் வருமான விகிதங்கள் குறைந்து கொண்டுவருவது சுட்டிகாட்டப்பட்டிருக்கிறது. ''ஒரு காலத்தில் தனி நபர்கள் சேமிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது வீழ்ச்சியடைந்து விட்டது. தனிப்பட்ட வீடுகளில் சேமிக்கும் அளவு வருமானத்தில் 10-சதவீதமாக இருந்தது. இப்போது 3-அல்லது 4க்கும் குறைவான சதவீதமாக குறைந்துவிட்டது. பழைய சேமிப்புகளிலிருந்து பணத்தை எடுத்து செலவிடுகின்ற நிலைக்கு குடும்பங்கள் வந்துவிட்டதால் இப்போது சேமிப்பு விகிதம் எதிர்மறை நிலைக்குச் சென்றுவிட்டது'' என்று அந்தக் கட்டுரை விளக்குகிறது. சென்ற டிசம்பரில் நிலவரப்படி, அரசாங்க சுகாதார காப்பீட்டுத்திட்டங்களில் சந்தா செலுத்துகின்ற தொழிலாளர்கள் தற்போது 30-சதவீதம் வரை மருத்துவ சந்தாக்களை செலுத்தவேண்டி இருக்கிறது. இதற்கு முன்னர் 15-சதவீதத்தைதான் செலுத்தி வந்தார்கள். இதனால் இந்த காப்பீட்டுத்திட்டத்தில் வருகின்ற மக்களது எண்ணிக்கை டிசம்பரில் 1.6-சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டது. ஆகஸ்டிற்கு பின்னர் இது மிகப்பெரிய வீழ்ச்சியாகும். இந்த வீழ்ச்சி பொதுமக்களில் மிகப்பெரும்பாலோர் ஆழமான சமூக நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டும் சமிக்கையாகும். இப்படி சுகாதார சேவை, வேலை வாய்ப்பு, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் வீழ்ச்சி ஏற்பட்டுக்கொண்டிருப்பது ஜப்பானிய பொருளாதார வளர்ச்சியால் உழைக்கும் மக்களுக்கு பயனில்லை என்பது தெளிவாகிறது. மாறாக, உற்பத்தித்திறனை பெருக்கவும், ஜப்பானிய பொருளாதாரத்தின் போட்டியிடும் வல்லமையை வளர்க்கவும், அரசாங்கமும் பெரிய நிறுவனங்களும் தங்களது பொருளாதார சீரமைப்புத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும்போது அது நேரடியாக உழைக்கும் மக்களைத்தான் பாதிக்கும். |