World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

"Bye-bye Aristide, Chavez you're next!"

Venezuela: Right-wing opposition clamours for another US-backed coup

"அரிஸ்ட்டைட் பை- பை, சாவேஸ் அடுத்தது நீ தான்! "

வெனிசூலா: மற்றொரு அமெரிக்க ஆதரவு ஆட்சிக் கவிழ்ப்பிற்கு வலதுசாரி எதிர்ப்பாளர்கள் கிளர்ச்சி

By Mauricio Saavedra
9 March 2004

Back to screen version

தற்போது வெனிசூலா நாட்டில் விரிந்து பரவிவரும் அரசியல் கிளர்ச்சி அலை மற்றும் வன்முறை ''வாஷிங்டனில் தயாரிக்கப்பட்டது'' என்ற எல்லா முத்திரைகளோடு ஸ்திரமற்றதாக்கும் பிரச்சாரமாக காட்சியளிக்கிறது. ஹைட்டியின் ஜோன் பெர்ட்ராண்ட் அரிஸ்டைட் அமெரிக்கா ஏற்பாடு செய்த ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு இலக்கானதை தொடர்ந்து, தென் அமெரிக்காவின் எண்ணெய் வளமிக்க நாட்டில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்குவதற்கு தற்போது பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது, இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பயங்கர நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு களம் அமைக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் தேசிய தேர்தல் குழு (CNE), வெனிசூலா ஜனாதிபதி ஹீகோ சாவேசை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு 3.1-மில்லியன் மக்கள் கையெழுத்திட்ட மனுக்களை சேகரித்திருப்பதாக வலதுசாரி கூட்டணிக்கட்சிகள் கூறியதில் 1.8 "மில்லியன் கையெழுத்துக்களை மட்டுமே சரிபார்க்க முடிந்ததென்று அறவித்தபொழுது, மிக அண்மைய கிளர்ச்சி ஏற்பட்டது. சாவேஸ் ஜனாதிபதி பதவி தொடர்பாக பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவதற்கு மொத்தம் 2.4-மில்லியன் கையெழுத்துக்கள் தேவை.

மேலும் சரிபார்ப்பதற்கு 1.1 மில்லியன் கையெழுத்துக்கள் தேவையென்று தேசிய தேர்தல் குழு கட்டளையிட்டது. திரும்பத்திரும்ப கையெழுத்திட்டவர்கள் மற்றும் நீண்டநாட்களுக்கு முன்னரே இறந்துவிட்டவர்களின் பெயர்கள். குடிமக்கள் அல்லாதவர்கள்; குழந்தைகள் மற்றும் ஆயுதப்படைகளை சேர்ந்தவர்கள் ஆகியோரது பெயர்கள் உட்பட 1,40,000 கையெழுத்துக்களை தள்ளுபடி செய்துவிட்டது. சர்ச்சைக்குரியவற்றுள் பலரது விவரங்கள் ஒரேகையெழுத்தில் குறிபிடப்பட்டுள்ள மனுக்களும் உள்ளடங்கும்.

உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடுகளில் ஐந்தாவது இடத்திலுள்ள வெனிசூலாவில் கலவரம் மூண்ட செய்தி உலகச்சந்தைகளில் பீதி உணர்வை உண்டாக்கி சர்வதேச கச்சா எண்ணெயின் விலையை பீப்பாய்க்கு 33.44 டாலர்களாக உயர்த்திவிட்டது. சென்ற ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர்தொடுத்த பின்னர் நிலவிய மிக அதிகமான விலையாகும். சென்ற ஆண்டு நிர்வாகத்தால் தூண்டிவிடப்பட்ட கலவரங்களின் காரணமாக மூன்று மாதங்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டதைப்போல் இப்போதும் நடக்கலாமென்ற அச்சத்தின் காரணமாக எண்ணெய் விலை உயர்ந்தது. அப்போது எண்ணெய் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டதால் ஏறத்தாழ வெனிசூலாவில் வருமானம் 80 சதவீதம் பாதிக்கப்பட்டு அந்நாட்டில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. 2002-ல் GDP- 8.9-சதவீதம் குறைந்ததன் பின்னர், சென்ற ஆண்டு 9.2-சதவீதம் குறைந்தது.

பெப்ரவரி 28-முதல் அரசியல் வன்முறைகளால் 10-பேர் இறந்து விட்டனர், டஜன் கணக்கில் காயமடைந்தனர் மற்றும் பலநூறு பேர் கைது செய்யப்பட்டனர். சாவேஸ் எதிர்ப்பினர் ஆயிரக்கணக்கானோர் காராகாசின் பணக்கார புறநகர்ப்பகுதியிலிருந்து திரண்டு வந்து காரகாஸ் நகரின் மையப்பகுதிக்கு திரண்டனர். அப்பகுதியின் பணக்காரர்கள் வாழும் இடங்களிலிருந்து சாவேசுக்கு எதிரான ஆயிரக்கணக்கான படைவீரர்கள் தலைநகரின் பிரதான நெடுஞ்சாலைகளில் குப்பைகளை கொட்டிவைத்தும், பழைய டயர்களை தீ வைத்துக்கொளுத்தியும் ஏழ்மை நிறைந்த பகுதியிலிருந்து வந்து அரசாங்கத்திற்கு ஆதரவாகத் திரண்டவர்களுடன் மோதினர்.

எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவந்த போலீஸ் படையை நம்பமுடியாமல் அரசாங்கம் தேசிய காவலர்களையும், இராணுவத்துருப்புக்களையும், ஆயுந்தாங்கிய கவசவாகனங்களையும், கண்ணீர்புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகள் இவற்றுடன் அணிதிரட்டியது. AFP- தந்துள்ள தகவலின்படி ''ஆர்ப்பாட்டக்காரர்கள், குப்பை கூளங்களுக்கு தீ வைத்து கொளுத்தும் போதும் மொலோடோவ் குண்டுகளை வீசும்போதும் சில நேரங்களில் கைத்துப்பாக்கிகளால் சுட்டபோதும் ரோந்து போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் ஒதுங்கி நின்றனர்.'' அதற்குப் பின்னர் பல போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். ரத்தக்களரியை தடுப்பதற்காக மார்ச் 14-வரை பொதுமக்கள் ஆயுதம் வைத்திருக்கின்ற உரிமையை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கிறது.

சென்றவாரம், பல கட்சிகள் சேர்ந்த ஜனநாயக எதிர்கட்சி ஒருங்கிணைப்புக்குழு முன்னணி உறுப்பினர்கள், தேசிய தேர்தல் குழு அரசாங்க அதிகாரிகள் மற்றும் சர்வதேச தேர்தல் பார்வையாளர்களோடு கையெழுத்துக்களை சரிபார்க்கும் நடைமுறை குறித்து கலந்துரையாடல்களை நடத்தினர்.

அவர்கள் பேச்சு வார்த்தைகள் நடத்தி கொண்டிருக்கும்போது, பொதுவாக்கெடுப்பிற்கு அப்பால் சென்று இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை தூண்டிவிடும் வகையில் கலவர சூழ்நிலையை உருவாக்குவதற்குரிய சாத்தியக்கூறுகளை எதிர்ப்பாளர்கள் தள்ளிவிடவில்லை. வெனிசூலா ஜனாதிபதி, பாராசூட்படை முன்னாள் வீரரான அவர், 2002-ஏப்ரலில் சிவிலியன் இராணுவக்குழு தற்காலிகமாக அமெரிக்க ஆதரவு ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் பதவிக்கு வந்ததைத் தொடர்ந்து அந்த ஆட்சி கவிழ்ந்ததும் தனக்கு வேண்டியவர்களை இராணுவ அதிகாரிகளாக நியமித்தார். காரக்காஸ் புறநகர் பகுதிகளில் ஏழைகள் திரண்டு வந்து சவாஸ் அரசிற்கு ஆதரவாக கலவரங்களில் ஈடுபட்டனர் பேரணிகள் நடத்தினர். அதைத் தொடர்ந்து அந்த ஆட்சிக் கவிழ்ப்பு பொறிந்தது. இன்றுவரை இராணுவம் அமைதியாகத்தான் இருக்கிறது. தங்களது முயற்சிகள் மூலம் தளபதிகளாகவுள்ள அதிகாரிகளின் ஆதரவை திரட்டிவிட முடியுமென்று எதிர்கட்சிகள் நம்புகின்றன.

சென்ற வாரக்கடைசியில் எதிர்கட்சிகளின் ஜனநாயக ஒருங்கிணைப்புக்குழு நடத்திய பேரணிகளில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தகராறுக்குரிய மனுக்களை மறு உறுதி செய்வதற்கு தேசிய தேர்தல் குழு தந்துள்ள ஆலோசனையை மாற்ற வேண்டும் என்று கோரினர். மார்ச் 18-முதல் 22-வரை 1,000 வாக்குச்சாவடிகளை உருவாக்கி அவற்றில் மனுதாரர்கள் தங்களது கையெழுத்துக்களை சரிபார்க்க வழிசெய்வதற்கு தேசிய தேர்தல் குழு விரும்புகிறது. அதற்கு பதிலாக CNE- "புள்ளியியல் அடிப்படையில் மாதிரிகளை" எடுத்து கையெழுத்துக்களை சரிபார்க்கலாம் என்று எதிர்கட்சி கோரியது. அமெரிக்க நாடுகள் அமைப்பானது (OAS) முதலில் இந்த ஆலோசனையை தெரிவித்தது.

''இது சரியளவு பொருத்தமுடைய கோர கனாக்காட்சியாகி விடப்போகிறது. நாம் 10-லட்சத்திற்கு மேற்பட்ட மக்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். அதைச்செய்ய முடியுமா என்பதுகூட நமக்குத் தெரியாது''- என்று ஒரு தேர்தல் பார்வையாளர் தெரிவித்தார். எவ்வாறாயினும், சென்றாண்டு இறுதியில் எதிர்ப்பாளர்கள் நான்கே நாட்களில் 30-லட்சம் கையெழுத்துக்களை திரட்டிவிட்டதாக பெருமையடித்துக்கொண்டனர். அப்படி நிகழ்ச்சி போக்கு நடத்தப்பட்டது தொடர்பாக எக்னாமிஸ்ட் தனது பெப்ரவரி 28-ல் இதழில், ''இந்த கையெழுத்து இயக்கம் பரபரப்பில்லாமல் அரசாங்க அதிகாரிகள் எதிர்ப்பாளர்கள் மற்றும் தேசிய தேர்தல் குழுவின் நேரடி பார்வையில் நடைபெற்றது'' என்று எழுதியிருந்தது.

எதிர்ப்பாளர்கள் வெனிசூலாவின் பாரம்பரிய அரசியல் கட்சிகள், வர்த்தக சபைகள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் அதேபோல நாட்டின் அதிகாரத்துவ மயமாக்கப்பட்ட வெனிசுலா தொழிலாளர் கூட்டமைப்பு ஆகியவை அடங்கியுள்ளன. எந்த வழியில் செல்வது என்பதில் எதிர்ப்பாளர்களிடையே பிளவு ஏற்பட்டிருக்கிறது. ஒரு பிரிவு தேர்தல் கமிஷனுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கிற அதேவேளை, மற்றொரு பிரிவு தேர்தல் கமிஷன் சர்வாதிகார அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அமைப்பு என்று கண்டனம் செய்து வருகிறது. இந்த கண்டன நிலைப்பாட்டை அமெரிக்க நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

''இந்த மனுக்களில் கையெழுத்திட்டிருக்கும் வெனிசூலா குடிமக்களின் உரிமைகளை மதிக்கவேண்டியது, அவசியமென்று நாங்கள் எப்போதுமே கூறிவருகிறோம் மற்றும் அரசியலமைப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்" என அமெரிக்க அரசுத்துறை பேச்சாளர் ரிச்சர்ட் பெளச்சர். "வெனிசூலா அரசாங்கம் சில நேரங்களில் இந்த உரிமைகளை ஏற்றுக்கொள்கிறது ஆனால் அதன் நடவடிக்கைகள் அடிக்கடி அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை என்பதை நாம் பார்த்திருக்கிறோம்" என்றார்.

''பல்வேறு திரும்ப அழைப்பு மனுக்களில் கையெழுத்திட்டுள்ள வெனிசூலா குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளை மதிக்கவேண்டும் மற்றும் அவர்கள் பக்கெடுத்துக்கொள்ள வகை செய்கின்ற தேர்தல் நடைமுறையை உரிய நேரத்தில் உருவாக்க வேண்டுமென்று நாங்கள் வற்புறுத்துகிறோம்'' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சாவேஸ் திரும்ப அழைப்பு தேர்தல் கிளர்ச்சியில் எத்தகைய தடைக்கற்களை உருவாக்கியிருந்தாலும், புஷ் நிர்வாகம் இப்போது ஜனநாயக நடைமுறைகளுக்கு வழிகாட்டிபோல் நாடகமாடி வருகிறது. அமெரிக்காவில் 2000-த்தில் நடைபெற்ற தேர்தலில் புளோரிடா வாக்குகளை மீண்டும் எண்ணுவதைத் தடுத்து நிறுத்தி அந்த நிர்வாகம் ஆட்சிக்கு வந்தது மற்றும் 2002-ல் சாவேஸ் வன்முறையில் ஆட்சியிலிருந்து தூக்கி எறிவதற்கு ஆதரவு தந்தது.

எதிர்ப்பாளர்களின் ஜனநாயக உரிமைகளை சாவேஸ் அரசாங்கம் ஒடுக்கி வருகின்றது. என்ற நிலைப்பாட்டில் OAS- மற்றும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரால் ஏற்படுத்தப்பட்ட சிந்தனைக் குழுவான- கார்ட்டர் மையம் ஆகியவை ஒரு கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: ''தேசிய தேர்தல் சபையின் கவலைகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் குடிமக்களின் நல்ல நம்பிக்கையை சர்வதேச கொள்கையாக எடுத்துக்கொண்டு அந்த அடிப்படையில்தான் மதிப்பீடுகள் செய்யப்படவேண்டும்'' இந்த அறிக்கை இதற்கு முந்திய வேண்டுதல்களான, தேசிய தேர்தல் சபை ''சிறிய சட்ட நுட்பங்களில் சிக்கி முடங்கிவிடாமல் மக்களது கட்டளைகளை மிதிக்க வேண்டும்'' என்பதை வழிகாட்டியாகக் கொண்டுள்ளது.

ஐந்து உறுப்பினர் தேர்தல் கமிஷனில் இரண்டுபேர் சாவேஸ் ஆதரவாளர்கள், இரண்டுபேர் எதிரானவர்கள், ஐந்தாவது உறுப்பினர் தேர்தல் கமிஷனின் தலைவர் Francisco Carrasquero அவர் நடுநிலை வகிப்பவர். முடிவு ஏற்படமுடியாமல் முட்டுக்கட்டை நிலை தோன்றினால் மட்டுமே தனது வாக்களிப்பு அதிகாரத்தை பயன்படுத்துவார்.

நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகள் மூலம் சாவேஸை பதவியிலிருந்து இறக்க முடியவில்லை என்று தெரிந்து கொண்டதும், ''தேர்தல் தீர்வு'' மூலம் அவரை நீக்குகின்ற முயற்சியை தேர்ந்தெடுத்த பின்னர், ஜனநாயக ஒருங்கிணைப்புக் குழுவும், கார்டர் மையமும் OAS- ம் அரசாங்கமும், 2003-மே 29-ல் திரும்ப அழைப்பதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்துவது குறித்து உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டன. சாவேஸ் நிர்வாகத்தால் 1999-ம் ஆண்டு உருவாக்கிய அரசியல் சட்டத்தில் கண்டுள்ள ஒரு பிரிவை பயன்படுத்திக் கொள்ள சம்மதித்தனர். ஜனாதிபதியாக இருப்பவர் பதவி விலகக்கோரும் பொது வாக்கெடுப்பு நடத்த வாக்காளர்களில் 20-சதவீதம் பேர் மனுச்செய்வார்களானால், அதற்கு அந்த ஜனாதிபதி தனது பதவியின் பாதிகாலத்தில் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது அந்த விதி.

இத்தகைய வாக்கெடுப்பு நடந்துவதற்கான சாத்தியக்கூறு எதுவுமில்லை என்று தெரிந்து கொண்டு, எதிர்க்கட்சியில் மற்றொரு குழுவும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் வலதுசாரிகளோடு சம்மந்தப்பட்ட குழுக்களும் நாட்டில் நாசத்தை விளைவிப்பதற்கு முயன்று கொண்டிருக்கின்றன.

San Francisco Chronicle- தனது மார்ச் 4-வெளியீட்டில், எதிர்கட்சி கண்டன ஆர்ப்பாட்டக்காரர்கள் எடுத்துச் சென்ற பதாகைகளின் ''அரிஸ்டைட்டிற்கு குட் பை!- Chavez-தான் அடுத்த குறி'' என்பது போன்ற வாசகங்கள் அடங்கியிருந்ததையும் இராணுவம் தலையிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டதையும் குறிப்பிட்டது. Venezuelanalysis.com இணைய தளத்தைச் சேர்ந்த Dario Azzelini" வெனிசூலா நாட்டின் எதிர்கட்சிகளிடையில் முன்னணி பிரிவினர் மீண்டும் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை தூண்டிவிட முடியுமென்று நம்புகின்றனர் அல்லது அமெரிக்க தலையீடே நடைபெறுமென்று நம்புகின்றனர். சில நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் காரகாஸிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியில் அமெரிக்க தலையீட்டை ஆதரிக்கும் முழக்கங்களை எழுப்பினர். '1-ஹூசேன், 2.அரிஸ்டைட் 3. சாவேஸ்' என்ற வாசகம் அடங்கிய தட்டிகளை பிடித்துக் கொண்டு நின்றனர்".

மிராண்டா மாநில கவர்னர் Enrique Mendoza மற்றும் அவரது போலீஸ் தலைவர் Hermes Rojas Peralta ஆகியோருக்கு பின்னால் சிலர் அணிவகுத்து நிற்கின்றனர். கியூபாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு CIA- ஆதரவு இயக்கியாக பணியாற்றி வந்த Luis Posada Carriles 1976-ல் கியூபா பயணிகள் விமானத்தில் குண்டு வைத்து வெடித்ததில் 73-பேர் மாண்டது தொடர்பான வழக்கில் வெனிசூலாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர், இப்போது பனாமாவில் பிடல் காஸ்ட்ரோவை கொலைசெய்ய முயன்றதாக குற்றம் சாட்டும் வழக்குகளை சந்தித்துக் கொண்டிருப்பவர். இவருக்கு ரோஜாவுடன் வலுவான தொடர்புகள் உண்டு. வெனிசூலா தேசபக்தி முன்னணி என்று அழைக்கப்படும் வலதுசாரி பயங்கரவாத குழுவும் மற்றும் மியாமியிலிருந்து செயல்பட்டுவரும் கியூபாவிலிருந்து வெளியேறிய கமண்டோஸ் F-4 என்றழைக்கப்படும் பயங்கரவாத குழுவும் இதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன. கமாண்டோ F-4 பெப்ரவரி 28-ல் அப்பட்டமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டதில் "லத்தீன் அமெரிக்க சிவில் இராணுவ கூட்டணியை" திரும்பவும் இயங்கச்செய்து விட்டதாகவும் லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரிகள் மீது "உளவுத்தகவல்கள் பரிமாற்றத்திற்கு மற்றும் இராணுவ நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தில் ஒருங்கிணைப்பிற்கு" பாடுபடப்போவதாக அறிவித்தது.

இந்த பாசிச அமைப்புக்கள் எதிர்ப்பாளர்களின் ஓர் அங்கமாக வாஷிங்டனிலிருந்து நேரடியாகவும் மறைமுகவமாகவும், நிதிகளைப் பெற்று வருகின்றன. தகவல் சுதந்திர சட்டப்படி அண்மையில் பெறப்பட்ட ஆவணங்களில் அமெரிக்க முகவாண்மைகள் 2002 ஏப்ரலில் ஒரு மில்லியன் டாலருக்குமேல் பணம் கொடுத்தன மற்றும் அந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வெனிசூலா எதிர்க்கட்சிகளோடு தொடர்புடைய அமைப்புகளுக்கு மேலும் 8,00,000 டாலர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதில் மிகப்பெரும்பாலான தொகையை பெற்ற அமைப்புக்களில் ஊழல்மிக்க வெனிசூலா தொழிலாளர் அமைப்பு (CTV) 1998 முதல் 2003-மார்ச் வரை சர்வதேச தொழிலாளர் ஐக்கியத்திற்கான அமெரிக்க மையத்தின் மூலம் 6,31,000 டாலர்களைப் பெற்றிருக்கிறது. இது அமெரிக்க அரசாங்க நிதியில் நடந்து வரும் ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளையின் அங்கமாகும். இந்த அறக்கட்டளையை அமெரிக்காவின் AFL-CIO- தொழிலாளர் அதிகாரத்துவம் கூட்டாக நடத்துகின்றது. CTV- அதிகாரத்துவம் 2002-ல் ஆட்சிக்கவிழ்ப்பை வெனிசூலா வர்த்தக அமைப்போடு சேர்ந்து திட்டமிடுவதில் உதவியது மற்றும் சாவேஸ் ராஜிநாமா செய்யக்கோரி வங்கிகள் சிறிய தொழிற்சாலைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை மூடி 12-மணி நேர கதவடைப்பு/ வேலை நிறுத்தத்தை நடத்தியது.

இந்த சக்திகள் லத்தீன் அமெரிக்க கொள்கைகளை வகுக்கின்ற புஷ்ஷின் தலைமை அதிகாரிகளோடு நெருக்கமாக உறவு கொண்டிருக்கின்றன. இவர்களில் ஜனாதிபதியின் தூதரான Otto Reich, வெனிசூலாவிலுள்ள அமெரிக்க தூதர் Charles Shapiro ஆகியோர் அடங்குவர். இரண்டாண்டுகளுக்கு முன்னர் இராணுவம் சாவேஸ் ஆட்சியை கவிழ்த்தபோதும் அதற்கு முன்னரும் ஆட்சிக்கவிழ்ப்பு கிளர்ச்சிக்காரர்களுடன் இந்த இருவரும் நெருக்கமாக விவாதங்களை நடத்தினர் மற்றும் சென்ற செப்டம்பர் மாதம் ரீச்சிற்கு பதிலாக மேற்கு மண்டல விவகாரங்கள் தொடர்பான துணைச் செயலாளராக பதவியேற்றுக்கொண்டுள்ள ரோஜர் நோரிக்காவுடனும் நெருக்கமான உறவு கொண்டிருக்கின்றனர்.

ஷாப்பிரோவும் ரிச்சும், எல் சல்வடார் நாட்டில் இராணுவ ஆதரவில் இயங்கிவரும் கொலைப்படைகளால் நடாத்தப்பட்ட படுகொலைகள் மற்றும் சதிக்கொலைகளுடன் தொடர்புள்ளவர்களாக இருக்கின்றன, அதேபோல லெப்டினென்ட் கேர்னல் ஒலிவர் நோத்தின் சட்டவிரோத அமைப்பு 1980-களில் நிகரகுவா நாட்டிற்கெதிரான "கான்ட்ரா" போருக்கு நிதியளித்த விவகாரத்திலும் தொடர்பு கொண்டிருந்தவர்கள் ஆவர். குடியரசுக் கட்சிக்கு புதிய வரவான நோரிக்கா, நோர்த் கரோலினாவின் தீவிர கம்யூனிச எதிர்ப்பு செனட்டர் Jesse Helms- ன் உதவியாளராக பணியாற்றி தனது பணியை தொடக்கினார். அதற்குப்பின்னர் OAS- ல் வாஷிங்டனின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

இந்த அதிகாரிகள் அனைவரையும் பண்பிட்டுக் காட்டுவது சோசலிசம், ஜனநாயகம், மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை கட்டோடு எதிர்க்கும் பண்பாகும். பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு செல்வந்த ஒரு சிலர் ஆட்சி ஆகியவற்றிடமிருந்து செல்வத்தையும் அதிகாரத்தையும் சிறிதளவிற்கு மாற்றுகின்ற நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற எந்த முயற்சியையும் ஒழித்துக்கட்டுகின்ற வெளிநாட்டுக் கொள்கையில் கருத்தியல் அடிப்படையில் உறுதியாக நிற்பவர்கள்.

இதில் சாவேஸ் அனுபவம் குறிப்பிடத்தக்கது. வெனிசூலா நாட்டு வரலாற்றிலேயே இரண்டுமுறை மக்களது மகத்தான ஆதரவைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், வறுமையை குறைப்பதாகவும் விவசாய சீர்திருத்தங்களை கொண்டு வருவதாகவும் உறுதிமொழிகளை அளித்தார். பொதுமக்களுக்கு ஆதரவாக அவர் ஆற்றுகின்ற உரைகள், கியூபாவின் பிடல் காஸ்ட்ரோவுடன் அவர் கொண்டுள்ள நட்புறவு, அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை காண்பதற்கு, தெரிவிக்கின்ற எதிர்ப்பு மற்றும் வெனிசூலாவின் அரசிற்கு சொந்தமான மிக பிரமாண்டமான PDVSA எண்ணெய் நிறுவனத்தை தனியார்மயமாக்க அவர் மறுத்து வருவது ஆகியவற்றால் அவர் வாஷிங்டனின் கோபத்திற்கு இலக்கானார்.

அப்படியிருந்தும் "உருவாகிவரும் பங்குசந்தை பத்திர முதலீட்டாளர்கள் சாவேஸ் போன்றவர்கள் பதவியில் நீடிப்பதற்கு காரணம், அவர் தொடர்ந்து நாட்டின் கடன்களை அடைப்பாரென்று தெரிந்து கொண்டதால்தான்" என்று ஜேர்மன் வங்கி (Deutsche Bank) பொருளாதார ஆய்வாளர் ஒருவர் அண்மையில் கருத்துத் தெரிவித்தார். மேலும் 2000-ம் ஆண்டில் தனது நாட்டு அரசியல் சட்டத்தை திருத்தி எழுதினார். அதில் "முதலாளித்துவ அடிப்படையில் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், வெளிநாட்டு முதலீட்டு சட்டங்களை தளர்த்தவும்" வகைசெய்தார். அதாவது, புதிய தாராளவாத தத்துவங்களுக்கு எதிராக அவர் கண்டன முழக்கங்களை எழுப்பி வந்தாலும், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் சர்வதேச நிதிநிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்தி வருகிறார்.

அப்படியிருந்தும், அமெரிக்க ஆதரவுடன் செயல்பட்டுவரும் வெனிசூலாவின் ஆட்சி கவிழ்ப்பு கிளர்ச்சியாளர்கள் வாஷிங்டன் தலையிட வேண்டுமென்று தீவிரமாக முயன்றுவருகின்றனர். ஏனெனில் அவர்கள் ஹைட்டியில் அரிஸ்டைட்டை பதவி நீக்கம் செய்யும் நேரத்தில் நிலவியது போன்ற ஒரு சூழ்நிலையை வெனிசூலாவில் உருவாக்குவதற்கு முயன்று வருவதனால் ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved