World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி German Chancellor Schröder comes to the aid of Bush புஷ்ஷிற்கு உதவுவதற்கு ஜேர்மன் அதிபர் ஷுரோடர் வருகிறார் By Ulrich Rippert இரண்டு ஆண்டுகளில் முதல் தடவையாக, ஜேர்மன் அதிபர் ஷுரோடருக்கு சென்ற வாரக் கடைசியில் வெள்ளை மாளிகையில் சிறந்த வரவேற்பளிக்கப்பட்டது. ஒரு மணி நேர உரையாடலுக்குப் பின்னர் ஜனாதிபதி புஷ் அவரை விருந்திற்கு அழைத்தார். நிருபர்கள் அவரை பேட்டி கண்டபோது, தானும் ஜனாதிபதியும் கடந்தகால வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டு நிகழ்கால நிலவரத்திலும், எதிர்காலத்திலும் கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக கூறினார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையானது, "உங்களுக்கும் ஜனாதிபதி புஷ்ஷிற்கும் இடையிலான போர் முடிந்து விட்டதா?" என்ற கேள்வியை எழுப்பியபோது "எங்களுக்குள் எப்போதுமே போர் நடந்ததில்லை. எங்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவியது... எங்கள் இருவரைப் பொறுத்தவரை ஸ்திரமான, ஜனநாயக அடிப்படையிலான ஈராக் உருவாவதில் அக்கறை கொண்டிருக்கிறோம்" என்று பதிலளித்தார். அதே பேட்டியில், ஷுரோடர் ஏற்கனவே பலமுனைகளில் ஈராக்கில் அமெரிக்கப் படைகள் இருப்பதற்கு ஜேர்மனி செயலூக்கத்துடன் ஆதரித்து வருகிறது என்று வலியுறுத்திக் கூறினார். "முதலில், நாங்கள் அந்த நாட்டை சீரமைப்பதில், உள்கட்டமைப்புக்களை உருவாக்கும் முதலீடுகளைச் செய்திருக்கிறோம். குடி தண்ணீர் வழங்குவதை சீரமைத்திருக்கிறோம். மார்ச்சில் ஈராக் போலீஸ் அதிகாரிகளுக்கு ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஒத்துழைப்போடு ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் பயிற்சி தருவதை தொடங்குவோம்" என்றும் அவர் குறிப்பிட்டார். இது தவிர ஷுரோடர், ஆப்கானிஸ்தானில் ஜேர்மனியின் பங்களிப்பு வலுவாக உள்ளது. இதை அமெரிக்க ஜனாதிபதி ''திட்டவட்டமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்'' என்று சுட்டிக்காட்டினார். இரண்டு தலைவர்களும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை ''ஏதாவது ஒரு வகையில் சர்வதேச அடிப்படையில் சுமையை பகிர்ந்து கொள்ள வேண்டும்'' என்பதில் உடன்பாடு கண்டனர். ''தனது விஜயம் தொடர்பாக அவர் மிகவும் திருப்தி அடைந்திருப்பதாகவும்'' ஷுரோடர் குறிப்பிட்டார். இரு நாட்டு உறவுகள் தொடர்பாக ''சகஜ நிலை திரும்பியிருப்பது'' பற்றியும் அட்லாண்டிக் சமுத்திரத்திற்கு அப்பால் உருவான தடை நீங்கிவிட்டதாகவும் ஜேர்மன் விமர்சகர்கள் அனைவரும் ஒரே வகையான கருத்துக்களை எழுதியுள்ளனர். அவர்கள் வாஷிங்டனுக்கு ஷுரோடர் மேற்கொண்ட கொத்தடிமை பயணத்தின் உண்மை உள்ளடக்கத்தை பார்க்கத் தவறிவிட்டனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்கள் நடப்பதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னர், ஜேர்மன் அதிபரின் நடவடிக்கை, அமெரிக்க அரசியலுக்குள் இடம் பெற்றுள்ள மிக பிற்போக்குத்தனமான கிரிமினல் சக்திகளை மீண்டும் தேர்ந்தெடுப்பதற்கு தீவிர ஆதரவைத் தருகிறார் என்று பொருள்படுகிறது. இது ஏன்? ஷுரோடர், புஷ், ரம்ஸ்பீல்டு மற்றும் அவர்களது கூட்டாளிகள் சில கசப்பான உண்மைகளை சொல்லியிருக்க முடியும். ஓராண்டிற்கு முன்னர் ஆக்கிரமிப்பதை நியாயப்படுத்துகின்ற வகையில் அவர்கள் சொன்ன எல்லாக் காரணங்களும் புலனாய்வு கற்பனைகளென்று அல்லது அப்பட்டமான பொய்கள் என்று அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஈராக்கிடம் எந்தவிதமான பேரழிவுகரமான ஆயுதங்கள் இல்லை. மற்றும் இராணுவ அச்சுறுத்தல் எதுவும் வரவில்லை. பாக்தாத், அல்கொய்தாவிற்கு ஆதரவு எதுவும் தந்ததாக எந்தவிதமான தடையமும் கிடைக்கவில்லை. போரின் போதும், அதற்கு பின்னரும்தான் அல்கொய்தா உறுப்பினர்கள் எல்லைகளைக் கடந்து, ஈராக்கிற்குள் நுழைந்து அங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளுக்கு உதவ முடிந்திருக்கிறது. ஜனநாயகமும், செல்வச் செழிப்பும் கொண்டு வந்து தருவதாக குண்டுகளும், டாங்கிகளும் ஈராக்கிற்கு வழங்கப்பட்டன. தற்போது அவை மேலும் எட்டமுடியாத தொலைவிற்கு சென்று கொண்டிருக்கின்றன. நாட்டின் உள்கட்டமைப்பு முழுவதும் நாசப்படுத்தப்பட்டுவிட்டது. பெருமளவிற்கு லாபம் ஈட்டித்தருகின்ற சீரமைப்பு ஒப்பந்தங்களை அமெரிக்க மற்றும் பிரிட்டன் நிறுவனங்களுக்கு வழங்குவதே இதன் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. இது தவிர, சென்ற தேசிய தேர்தல்கள் 2002 இளவேனிற்காலத்தில் நடைபெற்ற போது, ஜேர்மனியின் உள்நாட்டு அரசியலில் ஆத்திரமூட்டும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி தலையிட்டார். ரோலந்து கோச் (Roland Koch) தலைமையில் இயங்கிய பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சிக்காரர்கள் மிகத் தீவிரமான பிற்போக்கு வலதுசாரி பிரிவைச் சார்ந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு பகிரங்கமாக புஷ் சர்வதேச ராஜதந்திர நடவடிக்கைகளின் அடிப்படை சம்பிரதாயங்களை மீறுகின்ற வகையில் ஆதரவு தந்தார். எனவே ஷுரோடர் வாஷிங்டனுக்கு வருகின்றபோது, சில துருப்புச் சீட்டுக்களை சட்டைக் கை மடிப்பில் மறைத்து வைத்திருந்தார். ஜனாதிபதி புஷ் தனது பதவியின் கடைசி கட்டத்திலிருக்கிறார். வாஷிங்டனில் ''ஆட்சி மாற்றத்தை'' எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கூறியிருக்க வேண்டும். அதற்கு மாறாக ஷ்ரோடர் தன்னை எட்டி உதைத்த பூட்ஸ் காலையே நக்குவதற்கு முடிவு செய்துவிட்டார். அரசியலில் கண்ணியமும், ஆளுகின்ற தன்மையும் முக்கிய பங்கு பெறுகின்றன. ஹெகார்ட் ஷுரோடரும், பசுமைக் கட்சியை சார்ந்த அவரது வெளியுறவு அமைச்சரான பிஷ்ஷரும் ஒரு தலைமுறையைச் சார்ந்தவர்கள் ஆவர். இந்த தலைமுறை, அரசியல் கொள்கைகள் மற்றும் நெறி முறைகளில் உறுதியாக நிற்காத, அரசியலில் எதிர்ப்பு எதையும் சந்திக்காமல் ஒதுங்கிக் கொள்ளுகின்ற பரம்பரை ஆகும். அவர்கள் தமது அரசியலில் கடைப்பிடிக்கும் தாரக மந்திரம்; "வல்லானுக்கு முன் மண்டியிடு, நமக்கு கீழே இருப்பவனை மிரட்டு" என்பதாகும்.. அப்படியிருந்தாலும் சில அரசியல் மற்றும் சமூக வளர்ச்சிகள் சந்தர்ப்பவாதத்தை நோக்கி தீவிரமாக இழுத்துச் சென்றுவிடும். ஈராக் போர், அத்தகைய ஒரு வளர்ச்சி ஆகும். ஆரம்பத்தில் ஈராக் மீது இராணுவத் தலையீட்டிற்கு ஜேர்மன் அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இது கொள்கையடிப்படையில் அமைந்தது அல்ல. அப்படியிருந்தால், நவ-காலனித்துவ ஆக்கிரமிப்பு போரை நிறுத்திருக்க முடியும். அல்லது ஈராக் இறையாண்மையையும் தற்காத்து நின்றிருக்க முடியும். அதற்கு மாறாக பேர்லின் மற்றும் பாரிஸ் அரசாங்கங்கள் தங்களது சொந்த பொருளாதார நலன்களுக்காக பயந்தனர். முந்திய ஆண்டுகளில் இந்த நாடுகள் ஈராக்கின் இயற்கை வளம் தொடர்பாக பொருளாதார நலன்களை உருவாக்கி வந்திருக்கின்றன. எனவே ஆரம்பத்தில் போருக்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பானது அரைமனதோடு கூறப்பட்டதாகும். எந்தக் கட்டத்திலும் ஜேர்மனியிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு தடைவிதிப்பது குறித்து, பரிசீலனை கூட செய்யவில்லை. அல்லது ஜேர்மன் ஆகாயப் பகுதியில், அமெரிக்கப் போர் விமானங்கள் பறப்பதை தடுக்கவும் இல்லை. புஷ் நிர்வாகம், ஐ.நா தீர்மானங்கள் அல்லது ராஜியத்துறை முயற்சிகள் ஆகியவற்றால் தனது போக்குகளை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. மற்றும் அமெரிக்க அரசாங்கம் சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச அமைப்புக்களை துச்சமாக மதித்து செயல்பட தயாராகிவிட்டது என்று தெளிவாகத் தெரிந்ததும், ஐரோப்பிய நாடுகள் அரசியல் நெருக்கடியில் சிக்கியது. பாரிஸ் அல்லது பேர்லின் வாஷிங்டனின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்கு தயாராக இல்லை. அல்லது எதிர்த்து நிற்கின்ற வல்லமையுமில்லை. அத்தோடு, அமெரிக்காவின் சிற்றரசர்களாக தங்களது பங்களிப்பு குறைக்கப்படுவதையும் அவர்கள் அனுமதிக்க தயார் நிலையிலும் இல்லை. இந்த நெருக்கடி புஷ் நிர்வாகம் ஐரோப்பிய அரசியலில் தீவிரமாக தலையிட்டதும் முற்றியது. அமெரிக்கா தனது நட்பு நாடுகளை சேர்த்துக் கொண்டதுடன், விமர்சிப்பவர்களை தனிமைப்படுத்தியது. ஈராக் போரானது ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திவிட்ட தாக்கம் மேலெழுந்தவாரியாக தெரிந்ததைவிட மிக ஆழமானதாகும். இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய காலத்தில் ஐரோப்பாவில் அரசியல் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு உருவானது என்பது, நீண்டகால அடிப்படையில், மிக உயர்ந்த அளவிற்கு, குளிர்யுத்த உள்ளடக்கத்தில், சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக வலுவானதொரு தடுப்பு அரணை உருவாக்கும் நோக்கம் கொண்ட, ஒரு அமெரிக்க செயல்திட்டமாக இருந்தது. இந்தச் சூழ்நிலைகளில், ஐரோப்பிய ஒன்றிணைப்பு செயல்முறை என்பது சமுதாய சம நிலைப்படுத்தல் மற்றும் சீர்த்திருத்தங்களின் கொள்கையுடன் பிணைந்து இருந்தது. சமூக மற்றும் பிராந்திய அடிப்படையிலான பகைமைகள், ஐரோப்பிய சமுதாயத்தின் பல்வேறு பிராந்திய நிதிகள் மற்றும் கட்டமைப்பு ஒழுங்குகள் இவற்றால் ஓரளவிற்கு, சீர்செய்யப்பட்டது. சோவியத் யூனியனின் முடிவிற்குப் பின்னர், அட்லாண்டிக் இடையிலான பதட்டங்கள் தீவிரமடைந்தன. இதனால் ஐரோப்பிய சூழ்நிலையானது அடிப்படையிலேயே மாற்றமடைந்தன. அமெரிக்காவின் நிர்ப்பந்தங்கள் பெருகின. ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் நிலவிவந்த பழைய தீர்க்கப்படாத மோதல்கள், போட்டிகள் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தன. அதே நேரத்தில் சமூக பதட்டங்களும் வளர்ச்சியடைந்தன. தனது அமெரிக்கப் பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக சிக்காக்கோ வர்த்தகர்களிடையே ஷுரோடர் உரையாற்றினார். அப்போது வர்த்தகம், மற்றும் நாணய நிதிக் கொள்கைகள் தொடர்பாக, மேலும் மோதல்கள் தீவிரமடைவது குறித்து எச்சரித்தார். அதற்கு மறுநாள் ஐரோப்பிய பொருளாதார தடைகள் செயல்படத் தொடங்கின. அமெரிக்க அரசாங்கம், அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வரி விதிப்பு ஓட்டைகளை அடைப்பதற்கு தலையிடாவிட்டால் ஒவ்வொரு மாதமும் இந்தத் தடைகள் இறுக்கமாகும். அமெரிக்க வரி விதிப்பு சட்டங்களில் உள்ள, குறைபாடுகள் சர்வதேச நெறிமுறைகளுக்கு முரணாக உள்ளன. பொருளாதார மற்றும் வர்த்தக கொள்கையிலும் கூட புஷ் நிர்வாகம் சர்வதேச ஒத்துழைப்பை உதறித் தள்ளிவிட்டு தனது சொந்த தொழில்களுக்கே பாதுகாப்பு அளிக்கும் போக்கில் சாய்ந்து கொண்டிருக்கிறது என்பதை பல சம்பவங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. ஜேர்மனி உட்பட எல்லா ஐரோப்பிய அரசாங்கங்களும், இந்த பொருளாதார மற்றும் அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு பதிலளிக்கிற வகையில் தங்களது சொந்த மக்களது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தங்களது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. ஷுரோடர் புஷ்ஷிற்கு முன் மண்டியிட்டதற்கான அடிப்படையை புரிந்து கொள்வதற்கு இதுதான் திறவுகோல் ஆகும். வெளிநாட்டுக் கொள்கையை உள்நாட்டுக் கொள்கையிலிருந்து பிரித்துவிட முடியாது. சென்ற ஆண்டு கூட, பேர்லினுக்கும், வாஷிங்டனுக்கும் இடையிலான மோதல்கள் உச்சக் கட்டத்தில் இருந்த போது, போருக்கு எதிராக மிகப் பெருமளவில் ஆர்ப்பாட்டங்களும் வலுவான கண்டனப் பேரணிகளும் நடைபெற்றபோது, ஷ்ரோடர் மிக கவனமாக தன்னை அத்தகைய இயக்கங்களில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இதற்கிடையில் ஜேர்மன் அரசாங்கம் மற்ற பெரும்பாலான ஐரோப்பிய அரசுகளோடு இணைந்து தனது சொந்த மக்கள் மீது போர் தொடுத்தது. சமூக கொள்கைகளின் அனைத்து அம்சங்களிலும் 1930 களுக்கு பின்னர் நடைபெற்றிராத அளவிற்கு வெட்டுக்கள் கொண்டு வரப்பட்டன. அதே நேரத்தில் பெரிய நிறுவனங்கள் மற்றும் செல்வந்த தட்டினருக்கு சாதகமாக, ஒன்றன்பின் ஒன்றாக வரிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலைகளில், மிகப் பிற்கோக்கான ஊழல் நிறைந்த சக்திகள் ஐரோப்பிய அரசியலில் தங்களது செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருக்கின்றன. சமூக ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இன்னமும் அரசு அதிகாரத்தில் இருக்கும் நாடுகளில் முடிந்தவரை இந்த சக்திகளோடு ஒத்துழைத்து செல்வதற்கு வழி அமைக்கிறார்கள். இதுதான் ஷ்ரோடர் அமெரிக்கத் தலைநகருக்கு அனுப்பிய செய்தியாகும். ஷுரோடர் வெள்ளை மாளிகையில் கை குலுக்கினதால் அட்லாண்டிக்கில் ஸ்திரமான நிலை மாறும் என்று எதிர்பார்ப்பது தவறானது ஆகும். அதற்கு மாறாக புஷ் நிர்வாகம் ஷுரோடரின் ஆதரவினால் வலுவூட்டப்பட்டு புதிய எதிர்பாராத தாக்குதல்களை தொடுப்பதற்கு ஊக்குவிக்கப்படும். அத்தோடு, பூட்ஸ் காலை நக்குபவர்களுக்கு அவர்களது பற்களின் மீது உதைப்பது என்பது அமெரிக்காவில் முதல் தடவையாக நடப்பதும் அல்ல. |