World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்

As Marines occupy Port-au-Prince:

Reign of terror follows US-backed coup in Haiti

அமெரிக்க கடற்படை Port-au-Prince கைப்பற்றின

அமெரிக்கா ஆதரவு ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து ஹைட்டியில் பயங்கர நடவடிக்கைகள்

By Bill Van Auken
3 March 2004

Back to screen version

ஜனாதிபதி அரிஸ்டைட்டை அமெரிக்கா வெளியேற்றியதும் ஹைட்டி அமெரிக்கா தலைமையிலான இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டதும், வறுமையின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ள கரீபியன் தீவு நாட்டில் இரத்தம் சிந்தும் ஒடுக்கு முறைகள் தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்படுவதற்கு வழியமைத்து விட்டிருக்கிறது.

மறைமுக நாசவேலை மற்றும் நேரடி இராணுவ தலையீடு ஆகியவற்றால் புஷ் நிர்வாகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை கவிழ்த்தது. பல தலைமுறைகளாக சர்வாதிகாரம் மற்றும் எதிர்ப்புரட்சிகர பயங்கர நடவடிக்கைகளில் பங்கெடுத்துக்கொண்ட ஹைட்டியின் அரசியல் சக்திகளுக்கு புத்துயிர் தந்துவிட்டது.

பல நூறு கப்பற்படையின் நிலப்படை வீரர்களைக்கொண்ட முதலாவது பிரிவு இறங்கி அரிஸ்டைட்டை அமெரிக்க விமானத்தில் அவரது நாட்டை விட்டு கடத்திச் சென்றது, ''கிளர்ச்சிக்காரர்கள்'' தலைநகரில் நுழைவதற்கு சமிக்கையாக அமைந்தது மற்றும் அவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்பு படையில் இணைந்து கொள்ளவும் முடிந்திருக்கிறது.

முன்னாள் கொலைப்படையின் உறுப்பினர்களும், முந்திய ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளோடு சம்பந்தப்பட்ட துருப்புக்களும், நன்கு ஆயுதம் தரித்த முரடர்களும் மிக வேகமாக தேசிய மாளிகைக்கு எதிரிலுள்ள படைமுகாம்களை கைப்பற்றிக் கொண்டனர், அத்துடன் ஹைட்டி இராணுவத்தை மறுசீரமைக்கும் தங்கள் நோக்கத்தையும் அறிவித்தனர். இந்த ஊழல் மிக்க மற்றும் கொடூரமான படை 1915-முதல் 1934- வரை ஹைட்டியை அமெரிக்கா பிடித்துக்கொண்டதற்கு பின்னர் உருவாக்கப்பட்ட பாரம்பரியத்தைச் சார்ந்தவர்கள். இந்தப் படை அரிஸ்டைட்டால் 1995-ல் கலைக்கப்பட்டது. சில செய்திகளின் படி மியாமி பகுதியில் தஞ்சம் புகுந்துள்ள இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஹெரார்ட் ஆப்ரஹாம் திரும்பி வந்து மீண்டும் பொறுப்பேற்பதற்கு தயாராகி வருகிறார்.

இந்த வலதுசாரி ஆயுதம் தாங்கிய வீரர்கள் முதலில் நடத்திய திடீர் தாக்குதல் Port-au-Prince உள்ள சிறையில் புகுந்து சுமார் 2000-கைதிகளை விடுதலைசெய்ததுதான். 1988-முதல் 1990-வரை நாட்டை ஆண்ட இராணுவ குழுவின் தலைவரான பிரொஸ்பர் அவிரில் உட்பட முந்திய சர்வாதிகார ஆட்சியின்போது மிகக்கொடூரமான கொலைகளை செய்ததாக தண்டிக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்வதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகிறது. அரசியல் எதிர்பாளர்களை சட்டவிரோதமாக சிறையிலடைத்து சித்திரவதை செய்ததாக அவர்கள் தண்டிக்கப்பட்டவர்கள். இப்படி விடுதலை செய்யப்பட்டவர்களிலிருந்து பயங்கர தாக்குதல் குழுக்களுக்கு புதிய ஆட்களும் கிடைத்திருக்கிறார்கள்.

முன்னாள் இராணுவ அதிகாரி மற்றும் போலீஸ் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியவரும் போதைப்பொருட்களை கடத்தியதாகவும் அதிரடி விசாரணை நடத்தி மரண தண்டனைகள் விதித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டவருமான Guy Philppe ''கிளர்ச்சியாளர்களுக்கு'' தலைவர் ஆவார். செவ்வாயன்று அவர் ''இராணுவ தலைமை அதிகாரி'' என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்டார். பிரதமர் யுவான் நெப்டியூனை கைது செய்யப்போவதாக குறிப்பிட்டார். பிரதமர் அவரது அலுவலகத்திலேயே சிறை வைக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். அரிஸ்டைட் அமைச்சரவையின் இதர உறுப்பினர்கள் ஹைட்டியிலிருந்து தப்பிச்சென்று பக்கத்திலுள்ள டோமினிக்கன் குடியரசில் தஞ்சம் கோரியுள்ளனர்.

1986-முதல் பாரிசில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஹைட்டியின் முன்னாள் ''நிரந்தர ஜனாதிபதியான'' ஜோன் குளோட் ''பேபி டொக்'' டுவாலியர், முடிந்தவரை விரைவில் ஹைட்டி திரும்பப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அமெரிக்க ஆதரவு ஆட்சிக்கவிழ்ப்பு எத்தகைய அரசியல் சக்திகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

டுவாலியர் ஆட்சி, ஹைட்டியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்க பொறுப்பாக இருந்தது. அவர் அமெரிக்க கப்பற்படை வீரர்கள் இறங்கியதை வரவேற்றுள்ளார். மியாமியின் WFOR- தொலைக்காட்சி செய்திப்பிரிவின் சார்பில் பேட்டி கண்டவரிடம், தான் திரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் தோன்றி வருகிறது, "எனது நாட்டிற்கு திரும்பிக் செல்கிற வாய்ப்பு மிக அருகில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்'' கூறினார்.

திங்களன்று, அமெரிக்க ஊடகங்களில் பொதுவாக "கிளர்ச்சிக்காரர்கள்'' என்றும் ''ஜனநாயக எதிர்ப்பாளர்கள்'' என்றும் வர்ணிக்கப்படுகிற தலைவர்கள் Port-au-Prince-லுள்ள மிக ஆடம்பரமான ஹோட்டல் ஒன்றில் சந்தித்துப் பேசினர். இதற்கு முன்னர் "ஜனநாயக" அரசியல் எதிர்க் கட்சியினர் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியாளர்களோடு தமக்கு எந்தவிதமான தொடர்புமில்லை என்று கூறிவந்தனர்.

அமெரிக்க அரசுத் துறையிலுள்ள வலதுசாரி சிந்தனயாளர்கள் குழுவின் ஒத்துழைப்போடு இந்த சக்திகள் பணியாற்றி அரிஸ்டைட்டை வெளியேற்றினர். ''கிளர்ச்சியாளர்கள்'' 1980-களில் டுவாலியர் சர்வாதிகாரம் மங்கிக்கொண்டிருந்த ஆண்டுகளில் டான்டன்ஸ் மாக்கோட் கொலைப்படை குழுவிற்கு தலைமை வகித்த மற்றும் அதற்குப்பின்னர் FRAPH- அல்லது முன்னேற்றத்திற்கான ஹைட்டி அணிக்கு தலைவராக திரும்பிவந்த லூயி ஜோடல் சாம்பிளியன் போன்ற சக்திகளை உள்ளடக்கியுள்ளனர்.

1991-ல் அமெரிக்க ஆதரவோடு முதலில் அரிஸ்டைட் ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது FRAPH துணை இராணுவக்குழு இராணுவ ஆட்சியில் உருவாக்கப்பட்டது, அமெரிக்காவின் CIA நிதி ஆதரவு மற்றும் அரசியல் வழிகாட்டுதல்களைப் பெற்றது. இந்தக் குழுவினர் 3000 ஹைட்டி மக்களைப் படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.

டுவாலியர் சர்வாதிகாரத்திற்கும் அதற்குப் பிந்திய இராணுவ ஆட்சிக்கும் உண்மையான அடித்தளமாக இருந்த சலுகை மிக்க மிகச்சிறு செல்வந்தத் தட்டினை பிரிதிநிதத்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் வர்த்தக குழுக்களைப் பெரும்பாலும் ''ஜனநாயக எதிர்க்கட்சி" கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் ஜனநாயக தேசிய அறக்கட்டளை மற்றும் பிரான்சின் சிராக் அரசாங்கம் ஆகியவற்றின் நிதி மற்றும் அரசியல் உதவியோடு கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் குழுவினர் அரிஸ்டைட்டை பதவியிலிருந்து நீக்குவதற்கு சர்வதேச ஆதரவை அணிதிரட்டி வந்தனர்.

2000-தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டி அதையே அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை சட்டவிரோதமானது என்று அறிவித்தனர். தேர்தலில் நடைபெற்ற நடைமுறைகள் தொடர்பாக எத்தகைய பிரச்சனைகள் எழுந்திருந்தாலும் அரிஸ்டைட்டும் அவரது ஆதரவாளர்களும் மிகப்பெருமளவில் வெற்றி பெற்றிருப்பார்கள் என்பதில் சர்ச்சைக்கு இடமில்லை. வாஷிங்டன் ஏற்பாடு செய்த வாக்குப்பதிவுகூட ஹைட்டியின் வாக்காளர்களில் 20 சதவீதத்திற்கு மேல் எதிர்க்கட்சி ஆளும் செல்வந்த தட்டிற்கு ஆதரவுதரவில்லை என்பது காணக்கூடியதாகயிருந்தது.

அதே ஆண்டு அமெரிக்கத் தேர்தலையே திருடிக்கொண்ட புஷ் நிர்வாகமானது, மிகுந்த இறுமாப்போடு முறைகேடுகள் என்று கூறப்பட்டவற்றை அடிப்படையாகக்கொண்டு ஹைட்டிக்கு வழங்கப்படும் உதவித்திட்டங்களுக்கு தடைவிதித்தது. பல்வேறு அமெரிக்க மனிதநேய உதவிக்குழுக்களும் ஹைட்டிக்கு வழங்கிய 500 மில்லியன் டாலர்கள் உதவியை கிடைக்க முடியாதபடி முதலில் ஜனாதிபதி கிளிண்டன் தடைவிதித்தார். அந்த உதவியை திரும்ப வழங்குவதற்கு புதிய தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனைவிதித்தது. அரிஸ்டைட் மற்றொரு வாக்குப்பதிவு நடத்த சம்மதித்த அவேளை, எதிர்க்கட்சிக்காரர்கள் எல்லா ஆலோசனைகளையும் ஏற்க மறுத்து நாட்டிற்கு அவசியம் தேவைப்படும் நிதியுதவி கிடைக்காது தடுத்துவிட்டதானது, நாட்டின் பொருளாதார மற்றும் சமுதாய நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தியது.

அரிஸ்டைட் ஆதரவாளர்களைக் கொலை செய்தல்

சென்ற மாதம் ஆயுதந்தாங்கிய குழுவினர் கிளர்ச்சியை தொடக்கியதிலிருந்து, புஷ் நிர்வாகம் தனது நோக்கமான அமெரிக்க மற்றும் ஹைட்டியன் செல்வந்த தட்டினரின் நலன்களை காத்துநிற்பதற்கு உறுதிகொண்ட பொம்மை ஆட்சியை நிறுவும் தனது நோக்கு நிறைவேறுவதற்கு எதிர்ப்புரட்சி வன்முறைகள் தொடர்ந்து நடப்பது சகித்துக்கொள்ளப்படும் என்று சமிக்கை காட்டியது. டோரன்டோ குளோப் அன்ட் மெயில் பத்திரிகை செவ்வாயன்று கனடா ராஜ்ஜியத்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி, அமெரிக்கா அரிஸ்டைட்டுக்கும் அவரது அரசியல் எதிரிகளுக்குமிடையில் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்கான பேரத்தை முன்னின்று நடத்தி வந்த வாஷிங்டனின் அணுகுமுறையை சுட்டிக்காட்டியது. ''ஹைட்டியில் மேலும் ரத்தம் சிந்துகின்ற நிலையை 'அதிக அளவில் சகித்துக்கொள்ள' வாஷிங்டன் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் ஒட்டாவாவிலுள்ள தங்கள் அந்தஸ்துடைய அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதை தடுத்து நிறுத்துவதற்கு திரு. அரிஸ்டைட்டை பாதுகாக்க வாஷிங்டன் நிர்பந்தம் எதையும் தராது என்று தெளிவுபடுத்தினர்'' என்று அந்தப்பத்திரிகை கூறியது.

அரிஸ்டைட் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஆயுதந்தாங்கிய கிளர்ச்சி நடக்குமானால் அதை தடுத்து நிறுத்தவதற்கு எந்த இராணுவ தலையீடும் இல்லை என்று அமெரிக்கா கூறிவந்த அதேவேளை, ஆட்சிக்கவிழ்ப்பு பூர்த்தி அடைந்ததும் தயார் நிலையில் இருந்த அமெரிக்க அதிரடிப்படை ஹைட்டியின் சலுகைமிக்க செல்வந்த தட்டினர் உருவாக்கியுள்ள தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சியை பேணிக்காப்பதற்காக விரைந்து சென்றது.

திங்களன்று துப்பாக்கி ஏந்திய பிரதிநிதிகளுக்கும், ஹைட்டி அரசியல் செல்வந்த தட்டின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பற்றிய செய்தியை நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டது. அதில் ''கிளர்ச்சிக்காரர்கள்'' என்று அடையாளம் காட்டப்பட்ட ஒருவர் ''பாஸ்டின்'', "நன்றாகப் பேசக் கூடிய அவரது கழுத்தில் M-4 தாக்குதல் ஆயுதம் தொங்கியது" என விவரித்தது.

''இப்போது எல்லோரும் மிக உற்சாகமாக, மகிழ்ச்சியோடு உள்ளனர்", "ஆனால் மகிழ்ச்சிக்கு பின்னால் பாருங்கள்'' என்று அவர் டைம்ஸ்க்கு கூறினார். "அவர் அரிஸ்டைட் முன்னாள் ஆதரவாளர்களை Port-au-Prince தெருக்களில் சுட்டுக்கொன்றவர் என்று கூறினார். புதிய அரசாங்கம் கட்டளையிட்டால் மீண்டும் அவர் அதேபோன்று சுட்டுத்தள்ளுவார்" என்றும் டைம்ஸ் தெரிவித்திருந்தது.

புஷ் நிர்வாகத்தின் மறைமுக ஆதரவு மற்றும் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு படைகளின் தந்திரோபாய ரீதியான ஆதரவிலும் திட்டவட்டமாக இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஹைட்டியிலிருந்து வந்திருக்கும் பத்திரிகை செய்திகளின்படி வலதுசாரி துப்பாக்கி ஏந்திய குழுவினர் Port-au-Prince சேரிப்பகுதியான லா சாலின், சைய்ட் சோலேய்ல், பேலரி ஆகியவற்றில் அரிஸ்டைட்டின் ஆதரவாளர்களை தேடுதல் வேட்டை நடத்தி கண்டபடி சுட்டுத்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
திங்களன்று CNN, அரசுத்துறை செயலர் கொலின் பவலை பேட்டிகண்டது. வாஷிங்டன் கொலைப்படைக் கும்பல்களோடு நெருக்கமாக உறவு கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். ''பல்வேறு கிளர்ச்சித் தலைவர்களோடும் நாங்கள் பேசுவதற்குப் பல வழிகள் இருக்கின்றன, இனி வன்முறை எதிலும் ஈடுபடுவதில்லை மற்றும் ஆயுதங்களை ஒப்படைத்துவிடுகிறோம் என்று அவர்கள் இதுவரை கூறியிருக்கிறார்கள் என்பதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்'' என்று பவல் கூறினார்.

அமெரிக்க கடற்படைவீரர்கள் துப்பாக்கி முனையில் தன்னை ஹைட்டியிலிருந்து வெளியேற்றினார்கள் என்று அரிஸ்டைட் கூறிய குற்றச்சாட்டை ''முட்டாள்தனமானது'' என்று நிர்வாகம் தள்ளுபடி செய்தது நிர்வாகத்தின் மற்றொரு பொய் ஆகும். இப்போது கிளர்ச்சிக்காரர்கள் என்று அழைக்கப்படுபவர்களைப் பற்றி இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூட பவல் ''குண்டர்கள்'' என்று வர்ணித்தார், அவர்கள் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக இல்லை, மற்றும் ஹைட்டி தலைநகரில் பழிக்குபழி வன்முறை நடவடிக்கைகள் பரவலாக நடந்து கொண்டிருக்கின்றன.

Boston Globe செவ்வாயன்று அதன் நிருபர் ஸ்டீவன் டட்லி தந்திருக்கும் மிக முக்கியமான தகவலை வெளியிட்டிருக்கிறது. அவர் அதில் துணை ராணுவ கொலைக்குழுக்கள் தலைநகரின் சேரிப்பகுதியான Cite Soleil-யில் நடத்திவரும் தேடுதல் வேட்டைகளைப்பற்றி விவரித்திருக்கிறார். ''அவர்கள் மேல்தர வர்க்க, நகர்ப்புற துணை இராணுவ வீரர்கள், தாங்கள் தங்களது சொத்துக்கள், குடும்பங்கள் மற்றும் நாட்டைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். 20-க்கும் மேற்பட்ட அந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் குடிசைப்பகுதி நகரை "M-4s, M-14s, Teh-9s , 9mms-ஆயுதங்களோடு தயார்நிலையில்" சுற்றி வருகின்றனர்.

குளோப் கட்டுரையின்படி, ''இந்த துணை இராணுவ தொண்டர்கள் வர்த்தகர்கள் ஆவர்." "ஏறத்தாழ அனைவரும் ஆங்கிலம் பேசுகின்றனர், மியாமி அல்லது நியூ இங்கிலாந்தில் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஆங்கிலம் பேச கற்றுக்கொண்டனர். இவர்களில் மிகப்பெரும்பாலோர் ஹைட்டியின் வெளிர்நிற செல்வந்த தட்டினர். இவர்கள் மக்களில் மிகக்குறைந்த குழுவினர், இவர்களுக்கு சொத்து இருக்கிறது. சிலர் இராணுவ பயிற்சி பெற்றிருக்கின்றர். வேறுசிலர் இராணுவ ரிசர்வ் படை வீரர்களாக கல்லூரிகளில் படிக்கின்றனர். அனைவரிடமும் ஆயுதங்கள் உள்ளன'' என்று Globe கட்டுரை விளக்குகிறது. இவர்களில் மிகப்பெரும்பாலோர் பக்கத்திலுள்ள மலைப்பாங்கான குன்றுப்பகுதியிலுள்ள தங்களது மேல் வர்க்க வீடுகளிலிருந்து குடிசைப் பகுதிகளுக்கு வந்திருந்தனர்.

ஒரு துப்பாக்கி ஏந்திய வீரரை அவ்வறிக்கை மேற்கோள் காட்டியதாவது: ''ஒவ்வொரு குடிசைப்பகுதியின் சந்துபொந்து தெருக்களெல்லாம் துருவி புறநகர் பகுதியை சோதனையிட்டு வருகிறோம்''. அந்தப் பகுதியில் அரிஸ்டைட்டின் ஆதரவாளர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. துணை இராணுவத்தினர் போலீசாரோடு நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

ஹைட்டி தலைநகரின் பாதுகாப்பு மூலோபாய முனைகளை பிடித்து விட்ட, அமெரிக்க கடற்படையின் நிலப்படைப் பிரிவின் தலைவர் கேர்னல் டேவிட் பெர்ஜர் செவ்வாயன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, ''கிளர்ச்சிகாரர்களது ஆயுதங்களை களைவதற்கு எனக்கு எந்தவிதமான கட்டளையும் தரப்படவில்லை''என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், ஹைட்டி மக்களது துயரநிலை மேலும் படுமோசமாக சீர்குலைந்து கொண்டிருக்கிறது. உணவு கையிருப்பு தீர்ந்து விட்டது. மின்சாரம் மற்றும் குடிதண்ணீர் இல்லாததால் மருத்துவ மனைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. என்று பான் அமெரிக்கன் சுகாதார அமைப்பு அறிக்கை தெரிவித்தது. Port-au-Prince-லுள்ள மிக முக்கியமான எட்டு மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிப்பதை நிறுத்திவிட்டன.

சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தந்திருக்கின்ற தகவலின்படி, தலைநகரில் செயல்பட்டு வரும் ஒரே ஒரு மருத்துவமனையை கியூபாவைச் சேர்ந்த டாக்டர்கள் குழு நடத்தி வருகிறது. துப்பாக்கி குண்டுபாய்ந்த பல நோயாளிகளுக்கு அவர்கள் சிகிச்சைகளை தருகிறார்கள்.

ஆயுதந்தாங்கிய வன்முறையாளர்களிடமிருந்து ஹைட்டி குடிமக்களை காப்பது கடற்படைவீரர்களின் கடமையல்ல என்பதை வாஷிங்டனிலுள்ள அதிகாரிகள் கோடிட்டுக் காட்டியுள்ள அதேவேளை, கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டு மக்களை வெளியேறி விடாமல் தடுப்பதுதான் அமெரிக்க இரணுவத்தின் பிரதான பணியாகும்.

ஹைட்டி கடற்பகுதிகளில் கடற்காவல் கப்பல்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே 1,000 ''படகுகளில் கடக்க முயன்றவர்ளை" திருப்பி அனுப்பிவிட்டனர். அகதிகளுக்கான ஐ.நா கமிஷனர் சென்ற வாரம்தான் ஒரு சம்பிரதாயபூர்வமான அறிக்கையை வெளியிட்டார். ஹைட்டியில் நெருக்கடி நிலவுவதால் அங்கிருந்து தப்பி ஒடி வருகின்ற அகதிகளை மனிதநேய அடிப்படையில் கட்டாயமாக திருப்பி அனுப்பிவிட வேண்டாம் என்று அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டனர். வாஷிங்டன் அந்த கோரிக்கையை புறக்கணித்துவிட்டது.

''Port-au-Prince நிலவுகின்ற வன்முறை மற்றும் குழப்பத்தை கருத்தில் கொண்டு பார்க்கும்போது ஹைட்டியிலிருந்து வெளியேறியவர்கள் திரும்பி வரமாட்டார்கள்.'' "குற்றவாளிக் குண்டர்கள் தெருக்களில் மக்களை கொன்று குவிக்கும் போது, குடும்பங்கள் முழுவதையும் அந்த ஆபத்து மண்டலத்தில் திரும்பவும் கொண்டு வந்து தள்ளுவது அமெரிக்காவின் மனசாட்சியற்ற நடவடிக்கையாக அமைந்துவிடும்'' என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அமெரிக்கப்பிரிவின் துணை இயக்குநர் ஜோன் மெரினர் குறிப்பிட்டிருக்கிறார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved