World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Why Israel boycotted the International Court hearing on West Bank wall

மேற்குக்கரை சுவர் தொடர்பான சர்வதேச நீதிமன்ற விசாரணையை இஸ்ரேல் புறக்கணித்தது ஏன்

By Jean Shaoul
28 February 2004

Use this version to print | Send this link by email | Email the author

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICJ) மேற்குக்கரை பாதுகாப்புச்சுவர் தொடர்பான விசாரணையில் இஸ்ரேல் கலந்து கொள்ளாமல் மறுத்ததானது, நீண்ட நெடுங்காலமாக இஸ்ரேல் ஐ.நா-வை அவமதித்து வருவதையும் சர்வதேச சட்டத்தை ஏளனம் செய்து வருவதையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை, எதற்கும் "போக்கிரி அரசாக" செயல்பட்டுவரும் இஸ்ரேலை உண்மை நிலையை வெளிக்கொண்டுவரும் வகையில் கண்டிப்பதற்கு பதிலாக மற்றும் எதிர் நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தவதற்கு பதிலாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் ஐ.நாவும் முன் கூட்டிய உடன்பாடு எதுவுமில்லாமல் இஸ்ரேல் விவகாரங்களில் தலையிடுவதற்கு உரிமையில்லை என்று இஸ்ரேல் வலுயுறுத்திக்கூறிவருவதை ஆதரிக்கின்றன.

வாஷிங்டன், லண்டன் மற்றும் பிரஸ்ஸல்ஸ் சர்வதேச சட்ட பாரம்பரியத்தை முன்மாதிரி கருத்தில் கொண்டுதான் இஸ்ரேலின் இந்த நிலைப்பாட்டை ஆதரிப்பதாக அரசியலில் அப்பாவிகள் மட்டுமே ஏற்றுக்கொள்வர். இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் சர்வதேச தகராறை தீர்த்து வைக்கின்ற ஒரு நுண்ணொழுங்கமைவாகவே சர்வதேச நீதிமன்றம் ஐ.நா-வால் உருவாக்கப்பட்டது. அதன் செயல்பாட்டில் உண்மையிலேயே நிலவுகின்ற மட்டுப்பாடுகளை இஸ்ரேல் பயன்படுத்திக்கொள்ள முயன்றுவருகிறது. குற்றம் சாட்டப்படுகின்ற நாடு அதன் (ICJ)-ன் அதிகார வரம்பை ஏற்றுக்கொண்டால்தான் அந்த வழக்கை விசாரிக்க முடியும். தீர்ப்புகளை செயல்படுத்துவதற்கு எந்தவித அதிகாரமும் இல்லை. ஆயினும், சம்மந்தப்பட்ட ஐ.நா. அமைப்புக்கள் கேட்டுக்கொண்டால் கட்டுப்படுத்திட முடியாத சட்டக் கருத்துக்களை அந்த நீதிமன்றம் வழங்கும். ஐ.நா-வில் தீர்மானங்களை கொண்டுவருவதற்கு அந்தக்கருத்துக்கள் அடிப்படையாக இருக்க முடியும்.

பாலஸ்தீனியர்கள் சென்ற ஆண்டு டிசம்பரில் பாலஸ்தீனநிர்வாகத்தின் நிலத்தில் இஸ்ரேலின் தடுப்புச்சுவர் கட்டப்படுவதாக ஐ.நா பொதுசபைக்கு முறையிட்டதை, விசாரிக்க ICJ-விடம் ஐ.நா ஒப்படைத்தது. ICJ- ல் சுவர் பற்றிய சட்ட விளைவுகள் தொடர்பாக வாய்மொழி விசாரணைகள் தொடங்கின. பாலஸ்தீன ஆணையத்தின் ஐ.நா பிரதிநிதி நாசர் கிட்வா விசாரணையில் கலந்து கொண்டார். ''சுவர் பாதுகாப்பு சம்மந்தப்பட்டதல்ல, பாலஸ்தீனத்தின் ஏராளமான நிலத்தை பிடித்துக்கொள்ளவும், ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்தவும் தான் இந்தச் சுவற்றை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அது கட்டி முடிக்கப்பட்டுவிட்டால், சுவர்களால் சூழப்பட்ட சுற்றிவளைப்பிற்குள், தொடர்பில்லாத, தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்குள்ளே, மேற்குக்கரையில் பாதி இடத்துடன்தான் பாலஸ்தீன மக்கள் விடப்படுவர்'' என்று குறிப்பிட்டார்.

இஸ்ரேல் எல்லைகளுக்கு வெளியில் உள்ள நிலத்தில் குடிமக்கள் வீடுகளையும் சொத்துக்களையும் அழித்துவிட்டு அவர்களது வாழ்வைப் பறிக்கும் வகையில் சுவர் கட்டப்பட்டு வருவது ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைச் சார்ந்த மக்களை மனிதநேய அடிப்படையில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் நான்காவது ஜெனிவா மாநாட்டின் ஒப்பந்தத்தை மீறுவதாக பாலஸ்தீனியர்கள் வாதிடுகின்றனர். அந்த ஒப்பந்தத்தின் 147-வது பிரிவு இராணுவ நடவடிக்கைக்கு அவசியம் என்று நியாயப்படுத்த முடியாத அளவிற்கு விரிவான ஆக்கிரமிப்பு மற்றும் பேரழிவு வேலைகளை அந்தப்பிரிவு விளக்குகிறது. அத்தகைய நடவடிக்கைகள் கடுமையான சட்டமீறல் மற்றும் வேண்டுமென்றே கடைபிடிக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கையென்றும் விவரிக்கிறது. சென்ற செப்டம்பரில் ஐ.நா- ''இஸ்ரேலின் இந்த நடவடிக்கை ''சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமிப்பு செயல்தான் இந்தச்சுவர்'' என்று கண்டிக்கும் அறிக்கையை வெளியிட்டது.

எவ்வாறாயினும், இஸ்ரேல் தொடர்ந்து ஐ.நா- தீர்மானங்களை புறக்கணித்தே வருகிறது. அது தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவோ, ஐ.நா-வின் ஆணையை ஏற்றுக்கொள்ளவோ அல்லது ஐ.நா-வின் துணை அமைப்புகளோடு ஒத்துழைக்கவோ விரும்பவில்லை. 1967-போரில் இஸ்ரேல் ஜோர்டானிடமிருந்து மேற்குக்கரையையும், எகிப்திடமிருந்து காசா பகுதியையும் பிடித்துக்கொண்டது முதல் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக பிடித்துக்கொள்வது கூட்டாக பாலஸ்தீன மக்களை தண்டிப்பது, நாடுகடத்துவது, வீடுகளை இடிப்பது, விசாரணையின்றி காவலில் வைத்திருப்பது, சித்திரவதை நடவடிக்கைகளை மேற்கொள்வது, ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிப்பது, சாலைத்தடைகளை உருவாக்குவது, மற்றும் அரசியல் படுகொலைகளை செய்வது ஆகிய கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்துவருகிறது. இது நான்காவது ஜெனீவா ஒப்பந்தத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மீறுகின்ற செயலாகும்.

ஆக்கிரமித்த எல்லைப்பகுதிகளிலிருந்து படைகளை விலகிக்கொள்ள வேண்டுமென்றும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கண்டித்தும், ஐ.நா- இயற்றிய தீர்மானங்களை இஸ்ரேல் அரசாங்கங்கள் புறக்கணித்து வருகின்றன. சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் கடுமையாக மீறிவருவதாகவும், ஜெனீவா ஒப்பந்தங்களுக்கு புறம்பாக நடத்துகொண்டு வருவதாகவும், ஐ.நா- பாதுகாப்பு சபை தீர்மானங்களை செயல்படுத்த மறுத்து வருவதாகவும், ஐ.நா தெரிவிக்கிறது. ஐ.நா- உறுப்பு நாடுகள் எதுவும் ஐ.நா-வை புறக்கணித்து நடந்து கொள்ளாத அளவுக்கு இஸ்ரேல் சாதனை படைத்திருக்கிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளை பிடித்துக் கொண்டதிலிருந்து இஸ்ரேல் ஐ.நா-வையும் சர்வதேச சட்டத்தையும் அலட்சியப்படுத்தும் போக்கை தொடங்கிவிடவில்லை. 1947- நவம்பரில் பாலஸ்தீனத்தை இரண்டு நாடுகளாக பிரிப்பதென்று ஐ.நா-வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் ஒரு பகுதி யூத மக்களுக்கும் மற்றொரு பகுதி பாலஸ்தீன மக்களுக்குமென்று முடிவுசெய்யப்பட்டது. ஜெருசலேத்திற்கு சர்வதேச அந்தஸ்து தரப்பட்டது. அதைத்தொடர்ந்து பாலஸ்தீனத்திலுள்ள யூத சமுதாயத்திற்கும் பக்கத்து அரபு நாடுகளுக்கும் இடையில் போர் மூண்டது; அரபு இராணுவங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் சியோனிச படைகளின் உயர்ந்த ஆயுதங்கள் மற்றும் சிறந்த பயிற்சிகளின் காரணமாகவும் புதிதாக உருவாக்கப்பட்ட சியோனிச அரசாங்கம் அரபு இராணுவங்களை முறியடித்து ஐ.நா பிரிவினை தீர்மானத்தில் கண்டிருந்ததைவிட 21-சதவீத நிலத்தை கைப்பற்றி விரிவாக்க முடிந்தது. அந்தப் போரில் 700,000 பாலஸ்தீன மக்கள் அவர்களது தாய் நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறிச்சென்றனர் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர், 1,50,000-பாலஸ்தீன மக்கள் மட்டுமே இஸ்ரேலில் இருந்தனர்.

1948-மற்றும் 1967-க்கு இடைப்பட்ட காலத்தில் இஸ்ரேல் பக்கத்து நாடுகளான காசா, ஜோர்டான் சிரியா, மீது நடத்திய திடீர் தாக்குதல்களைக் கண்டித்து ஐ.நா ஆறு முறை தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. ''ஜெருசலேமில் ஆளில்லா மண்டலம்'' உருவாக்கப்பட்டிருப்பதை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும் என்றும் ஐ.நா தீர்மானங்களை ஏற்றுச்செயல்படுத்த வேண்டும் என்றும் ஐ.நா கேட்டுக்கொண்டது.

1967 போருக்கும் 2000-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐ.நா பாதுகாப்பு சபை இஸ்ரேல்/ பாலஸ்தீன மோதல் தொடர்பாக 138 தீர்மானங்களை நிறைவேற்றியது, அவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன:

* 1967-ஜூன் 14-ல் பாதுகாப்பு சபையில் ''மக்களது பாதுகாப்பு, நலன்புரி, குடியிருப்பு மக்களுக்கு பாதுகாப்பு ஆகியவற்றிற்கு இஸ்ரேல் உத்திரவாதம் செய்துதரவேண்டும்; மோதல்கள் தொடங்கிய பின்னர் வெளியேறிச் சென்ற மக்கள் திரும்பி வருவதற்கு வகை செய்ய வேண்டும் 1949-ஆகஸ்ட் 12-ல் உருவாக்கப்பட்ட ஜெனீவா ஒப்பந்தங்களின் கண்டுள்ள மனிதநேயக் கொள்கைகளை தீவிரமாக மதித்து செயல்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்கிறது'' (தீர்மானம் எண்-237).

* 1967-நவம்பர் 22-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 242 போரில் நிலத்தை பிடித்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே "இஸ்ரேல் படைகள் மோதலில் தாங்கள் ஆக்கிரமித்துக்கொண்ட இடங்களிலிருந்து வெளியேற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டது.

* 1968- மே 21-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 252, ஜெருசலேத்தின் சட்டபூர்வமான அந்தஸ்தை மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ரத்துசெய்ய வேண்டுமென்றும் நிலத்தையும் சொத்துக்களையும் அபகரித்துக்கொள்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் இஸ்ரேலைக் கேட்டுக்கொண்டது.

* 1979-மார்ச் 22-ல் பாதுகாப்பு சபை தீர்மானம் 446, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சியோனிஸ்டுகள் குடியிருப்புக்களை உருவாக்குகின்ற கொள்கைகளுக்கு ''சட்டபூர்வமான அடிப்படை'' ஏதுமில்லை என்று கூறியது மற்றும் 1967-க்கு பின்னர் ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரபு பகுதிகளின் சட்ட அந்தஸ்தை மற்றும் பூகோள தன்மைகளை மற்றும் மக்கள் சேர்க்கைகளின் தன்மைகளை மாற்றுகின்ற எந்த நடவடிக்கையையும் கைவிட வேண்டும், குறிப்பாக தனது சொந்த மக்களை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரபு பகுதிகளுக்கு மாற்றக்கூடாது என்றும் பாதுகாப்புசபை கேட்டுக்கொண்டது.

ஐ.நா- தீர்மானங்களை இஸ்ரேல் மீறி நடந்துகொண்டதாக விமர்சிக்கும் பதினான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஐ.நா- சாசன நெறிமுறைகளையே இஸ்ரேல் மீறிவருவதாக நான்கு தீர்மானங்கள் குற்றம்சாட்டின. ஏழு தீர்மானங்கள் இஸ்ரேலை கடுமையாக கண்டித்தன, பாலஸ்தீன மக்களை வெளியேற்றியதற்காக எச்சரிக்கை செய்தன. அல்லது கண்டித்தன. மேலும் 19 தீர்மானங்கள் நான்காவது ஜெனீவா ஒப்பந்த நிபந்தனைகளை மீறியதாக இஸ்ரேல் மீது குற்றம் சாட்டின. போரிலும், அதற்குப்பின்னர் ஆக்கிரமிப்புக்காலத்திலும் பொதுமக்களுக்கு தரவேண்டிய பாதுகாப்பு குறித்து அந்த ஒப்பந்த நிபந்தனைகள் விளக்குகின்றன.

ஐ.நா-வை இஸ்ரேல் மீறி நடந்து கொண்டதன் உண்மையான அளவை மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் கூட மிக்குறைந்தே மதிப்பிட்டிருக்கின்றன. ஏனென்றால் சியோனிஸ்ட் அரசாங்கத்தின் தலைமை ஆதரவாளர்களான அமெரிக்காவும், பிரிட்டனும், ஐ.நா- பாதுகாப்புசபை தீர்மானங்களை ரத்து செய்வதற்கு தங்களது ரத்து அதிகாரங்களை பயன்படுத்தி வருந்திருக்கின்றன. மொத்தமாக அமெரிக்கா இஸ்ரேல் தொடர்பாக ஐ.நா-வில் 35-க்கும் மேற்பட்ட நகல் தீர்மானங்களை வாக்கெடுப்பிற்கு வரவிடாமல் தடுத்திருக்கிறது.

உண்மையிலேயே இஸ்ரேல் பாலஸ்தீன மக்கள் மீது மேற்கொண்டுள்ள ஒடுக்குமுறைகளுக்கு பெருமளவில் அமெரிக்கா பண உதவி செய்து வருகிறது. நியூ ஜேர்ஸி மாகாணத்தைவிட சிறியதாக உள்ள இஸ்ரேல் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க வெளிநாட்டு உதவி பட்ஜெட் தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியை சுமார் 6-பில்லியன் டாலர்களை பொருளாதார, இராணுவ உதவியாகவும், மற்றும் கடனுக்கான உத்திரவாதத் தொகையாகவும் வழங்கி வருகிறது. இராணுவ உதவியாக 2-பில்லியன் டாலர்கள் இஸ்ரேலுக்கு ஒதுக்கி வைக்கப்படுகின்றன.

இந்தத் தீர்மானங்களில் பொதிந்துள்ள வரலாற்று நிலைச்சான்றை ஆராய்ந்தால் தொடர்ந்து வந்த இஸ்ரேலிய அரசாங்கங்களின் குற்றவியல் தன்மைகளை விளக்கிக்காட்டும் மற்றும் சர்வதேச நீதிமன்றத்துக்கு இஸ்ரேல் ஏன் கட்டுப்படாது என்பதற்கான உண்மையான காரணமும் புலனாகும். அப்படிச்செய்தால் சர்வதேச சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். அப்படி ஏற்றுக்கொண்டால் 1949-ல் ஐ.நா ஏற்றுக்கொண்ட நான்காவது ஜெனீவா ஒப்பந்தத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மீறுகின்ற வகையில் செயல்பட்டதாக ஒப்புக்கொள்ள வேண்டிவரும் அதற்கெல்லாம் மேலாக அடிப்படைரீதியாக, மேற்க்குகரையின் பெரும்பாலான பகுதியை கட்டாயமாக ஆக்கிரமித்து சியோனிச அரசில் இணைத்து அகண்ட இஸ்ரேலை உருவாக்க வேண்டும் என்ற அதன் கொள்கையை கைவிட வேண்டி வரும்.

அமெரிக்க, ஐரோப்பிய பொய்களும் பாசாங்கும்

அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இஸ்ரேல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை புறக்கணித்ததை ஆதரிக்கின்றன. தடுப்புச்சுவர் மிகவும் சிக்கல் நிறைந்த அரசியல் பிரச்சனையாக இருப்பதால் அதில் நீதிமன்றம் தலையிடக்கூடாதென்று கூறிவருகின்றன. டிசம்பர் 2003-ல் ஐரோப்பிய ஒன்றியம் ஐ.நா- பொதுசபையின் தீர்மானத்தை ஆரம்பத்தில் ஆதரித்தது. இப்போது இந்த இரண்டு நாடுகளும் நடந்து கொள்ளுகின்ற முறையை ஈராக் ஐ.நா- தீர்மானங்களை மீறுகின்ற வகையில் செயல்பட்டதாக குற்றம்சாட்டி வந்ததை ஒப்பிட்டுப்பார்த்தால் அந்தத்தீர்மானங்கள் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களைவிட மிகக்குறைவானவைதான். மிகவும் சிக்கல் நிறைந்தவைதான். 2000-செப்டம்பரில் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் ஐ.நா-பொதுசபையில் உரையாற்றும்போது ''பாதுகாப்பு சபை தீர்மானங்களை மதிக்கவேண்டுமா? செயல்படுத்த வேண்டுமா? அல்லது எந்தவிதமான பின்விளைவும் இல்லாமல் தூக்கி எறிந்துவிடலாமா? ஐக்கிய நாடுகள் சபை அதன் ஸ்தாபித நோக்கத்திற்கு பயன்படுமா அல்லது அது பொருந்தாததாகப் போய்விடுமா?'' என்று கூறியது நினைவிற்கு வருகிறது.

புஷ் மற்றும் அவரது முக்கிய கூட்டாளியான பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேயரும் ஐ.நா- ஈராக் தொடர்பாக நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிவிட்டால் அது ஐ.நா-வின் கீர்த்தியையே குலைத்துவிடுமென்று கூறினர். அவர்களின்படி, ஐ.நா தீர்மானத்தை மீறி ஈராக் நடந்துகொண்டது அந்த நாட்டின் மீது குண்டுவீசி தாக்குதல்களை தொடுப்பதற்கு, அதன் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மற்றும் அடுத்து அந்நாட்டையே ஆக்கிரமிப்பதற்கு நியாயமான காரணத்தை கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டன. ஆனால் இஸ்ரேல் ஒவ்வொரு தீர்மானத்திற்கு தீர்மானம் மீறியே வருகிறது. இந்த நடவடிக்கை இன்றைய சிக்கலுக்கு பொருத்தமானதல்ல என்று இரு நாடுகளும் கூறி வருகின்றன.

ஐ.நா-வின் ஆணையில்லாமல் புஷ் மற்றும் பிளேயர் போருக்கு சென்றார்கள். அப்போது சிராக்கும் ஷ்ரோடரும் ஐ.நா- ஆணையில்லாமல் போர் தொடுக்கப்பட்டால் அதில் கலந்து கொள்ள முடியாது என அறிவித்தனர். தற்போது இவர்கள் அனைவரும் ஒன்றாகச்சேர்ந்து கொண்டு ஐ.நா-வின் சர்வதேச நீதிமன்றத்தை இஸ்ரேல் புறக்கணிப்பதை ஆதரித்து வருகின்றனர்.

இத்தகைய புறக்கணிப்பு இது முதல் தடவையும் அல்ல, இரண்டாவது உலகப்போருக்கு பின்னர் சர்வதேச மோதல்களை தீர்த்துவைப்பதற்கு நிர்வாகம் உருவாக்கப்பட்டது. அதன் அதிகாரத்தை நிலைநாட்டுவதாக கூறிக்கொண்டே பிரதான ஏகாதிபத்திய வல்லரசுகள் தங்களது சொந்த மூலோபாய நலன்களுக்கு விரோதமாக அமையும்போது அந்த நீதிமன்றத்தையே ஏற்றுக்கொள்ள மறுத்துவருகின்றன. எடுத்துக்காட்டாக:

* 1974-ல், பிரான்சு அணுகுண்டு சோதனைகளை பசுபிக் மகாசமுத்திரத்தில் நடத்தியது தொடர்பாக ஆஸ்திரேலியா வழக்கு தொடர்ந்தபொழுது அதற்கு வருகை தர பிரான்சு மறுத்துவிட்டது.

* 1977TM Beagle- கால்வாய் பகுதியிலுள்ள தீவுகளை சிலி நாட்டிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற ICJ- தீர்ப்பை அர்ஜண்டினா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. போப்பரசர் தலையிட்டதால்தான் அப்போது போர் தவிர்க்கப்பட்டது.

* அமெரிக்க ஆதரவு பெற்ற கான்ட்ரா கிளர்ச்சிக்காரர்கள் நடவடிக்கைகள் தொடர்பாக நிகரகுவா நாடு அமெரிக்கா மீது 1984-ல் புகார் தாக்கல் செய்தது. அப்போது அமெரிக்கா தனது நலன்களுக்கு முரணாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எந்தத் தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துவிட்டது.

* சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வந்த எந்த வழக்கிலும் தங்களை ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ள சீனாவும், ரஷ்யாவும் எப்போதுமே சம்மதம் கொடுத்தது இல்லை.

ஆக, எல்லா பெரிய வல்லரசுகளுமே தங்களது நலன்களுக்காக ஏற்றதாக இருந்தால் மட்டுமே தவிர ICJ-ன் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இந்த வகையில் சர்வதேச சட்ட முறை என்பது மிக வலுவான அரசாங்கங்கள் தங்களது சொந்த வசதிக்காக உருவாக்கிக்கொண்டது தான் என்று ஆகிறது. இந்த வகையில் தனக்கு பச்சை விளக்கு காட்டப்பட்டுவிட்டதாகக் கருதி இஸ்ரேல் ஒரு முடிவிற்கு வந்து அதையே பின்பற்றி வருகிறது.

அமெரிக்காவை பொறுத்தவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பது எல்லா வகையிலும் தனது எல்லைக்குள் அதிகாரவரம்பின் காலடியின் கீழ் வருவதுதான், தனது செல்வாக்கு நிலைநாட்டப்படும் வட்டாரங்களில் தலையிடுவதற்கு எந்தவிதமான உரிமையும் அதற்கு இல்லை என்று எடுத்துக்காட்டி வருகிறது. ஈராக் மீது போர்ப்பிரகடனம் செய்த நேரத்தில், தனது சர்வதேச அபிலாஷைகளை ஐ.நா மற்றும் இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் சர்வதேச உறவுகளை நெறிமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட எந்த அமைப்பின் கட்டுப்பாட்டிற்குள்ளும் வர தயாராகயில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டது. ஐரோப்பிய அரசுகள் இந்த போக்கை எதிர்ப்பதற்கு உத்தேசிக்கவில்லை. அந்த நாடுகள் இஸ்ரேலுக்கு தந்துவரும் ஆதரவு விளக்கிக் காட்டுவதுபோல் தேவைப்படுகின்ற அளவிற்கு அமெரிக்காவை சரிக்கட்டிச் செல்லவும், அதே நேரத்தில் உலகம் முழுவதிலும் எந்தவிதமான சட்ட கட்டுப்பாடும் இல்லாமல் தங்களது சொந்த சூறையாடும் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு சுதந்திரமாக செயல்படவும் விரும்புகின்றன.

சர்வதேச சட்டத்திடம் முறையிடுவதன்மூலம் அடிப்படை ஜனநாயக உரிமைகளை தற்காத்து நிற்பதற்கு உத்தரவாதம் தர முடியாது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் பல தலைமுறைகளாக அரசியல் தலைவர்கள், ஊடகங்கள் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்திய பிரச்சாரங்களால் கிடைத்த ஞானம் என்னவென்றால் இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் கண்ட போர் மற்றும் காட்டு மிராண்டித்தனம் கடந்த காலத்தோடு முடிந்துவிட்டன என்பதுதான். உலகின் அமைதிக்கும் செல்வசெழிப்பிற்கும் வழி அமைத்துத்தருவது ஐ.நா- தலையிடும் சர்வதேச மாநாடுகள் உட்பட சட்டத்தின் ஆட்சியும் தேசிய சுயநிர்ணய உரிமைக்கு மதிப்பும் அறிவொளிக் கொள்கைகளால் உருவாகுமென்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அந்த எதிர்பார்ப்புக்கள் சிதைந்து வலிமையுள்ளவன் செய்வதெல்லாம் சரி என்ற நிலைக்கு உலகம் சென்று கொண்டிருக்கிறது. சர்வதேச சட்டம் மற்றும் அதன் நிர்வாக அமைப்புக்களை புறக்கணிக்கின்ற போக்கு ஒரு புதிய இராணுவவாத யுகத்திற்கும், காலனி ஆதிக்க முயற்சிகளுக்கும், வெளிநாடுகளில் ஒடுக்கு முறைகளை கட்டவிழ்த்தவிடுவதற்கும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தினது ஜனநாயக உரிமைகள் மீது கொடூரமான தாக்குதல்களை தொடுப்பதற்குமான ஒரு புதிய சகாப்தத்தை முன்அறிவிக்கிறது.

See Also :

மேற்குக்கரை தடுப்புச்சுவர் ஏன் எழுப்பப்படுகிறது: சர்வதேச நீதிமன்றத்தை இஸ்ரேல் புறக்கணிக்கிறது.

Top of page