World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US political elite engineers a Kerry-Bush election

அமெரிக்க அரசியல் செல்வந்தத் தட்டு ஒரு கெரி-புஷ் தேர்தலுக்கு வகைசெய்கிறது

By the Editorial Board
4 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பதவியின் தொடக்க நிலை தேர்தல் பிரச்சாரம் எவ்வாறு ஆளும் செல்வந்தத்தட்டின் கொள்கைகளுக்கு எதிரான உண்மையான மக்கள் எதிர்ப்பு இயக்கம் -ஈராக்கின் மீதான புஷ்ஷின் படையெடுப்பிற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு- இரண்டு கட்சிமுறைக்குள் மாற்றப்பட்டு, அரசியல் அளவில் செயலற்றதாகச் செய்யப்பட்டுவிடும் என்பதற்கு தக்க ஒரு பாடநூல் உதாரணமாக இருக்கிறது.

மாசாச்சுசெட்ஸின் செனட் உறுப்பினரான ஜோன் கெர்ரி, மார்ச் 2ம் தேதி நடந்துமுடிந்த பத்து மாநிலங்களின் உட்குழுத் தொடக்க தேர்தல்களில் ஒன்பதில் வெற்றிகண்டு, மாநாட்டுப் பிரதிநிதிகள் கூட்டத்தில் வேறு எவரும் போட்டியிடமுடியாதவகையில் முன்னேறியதால், அவருடைய கடைசி முக்கிய போட்டியாளரான வட கரோலினாவின் செனட் உறுப்பினர் ஜோன் எட்வார்ட்ஸ், ஜனநாயகக் கட்சியின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளருக்கான பந்தயத்திலிருந்து விலகநேரிட்டது.

இப்பொழுது ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்க அரசியல் நிறுவனத்தின் இரண்டு பிரதிநிதிகளான கெர்ரிக்கும், ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்ஷிற்கும் தேர்தல் போட்டி நடக்க அரங்கம் வடிவமைக்கப்பட்டுவிட்டது; இவர்கள் இருவருக்கும் இடையே அடிப்படையில் வேறுபாடு ஒன்றும் கிடையாது. 300 மில்லியன் மக்கள் இருக்கும் நாட்டில், சிக்கல்வாய்ந்த மற்றும் அதிகரித்த அளவில் துருவமுனைப்படுத்தப்பட்ட சமுதாய கட்டமைப்பு காணப்படும் நிலையில், நவம்பர் மாதம் அரசியலில், இறுதியாக முடிவு எடுக்க விருப்பம் கொடுக்கப்படுவது யேல் பல்கலைக் கழகத்தில் படித்த எந்த செல்வந்தக் குடும்பமும் நாட்டை ஆட்சி செய்யும் என்பதுதான்.

பற்றி எரியும் பிரச்சினைகளில் முக்கியமானதான ஈராக்கின்மீதான போரில், புஷ்ஷுடனான கெர்ரியின் கருத்து வேறுபாடுகள் முற்றிலும் தந்திரோபாயமானதுதான். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நாட்டிலிருந்து படைகளை திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கைகளை அவர் எதிர்க்கிறார் என்பதுடன் ஈராக்கிய எதிர்ப்பை நசுக்குவதற்குத் தேவையான இராணுவப் படைகளுக்கும் மற்ற ஆதாரங்களுக்கும் கடப்பாட்டுடன் இருக்கவேண்டும் என்றும் அழைப்புவிடுத்துள்ளார்.

ஒரு வலதுசாரிக் கட்டுரையாளர் செவ்வாயன்று Washington Post ல் இறுமாப்புடன் எழுதியுள்ளது போல், கெர்ரியின் நியமனம் போர் ஒரு பிரச்சினை என்பது மேசையிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது என்ற பொருளைக் கொண்டுள்ளது. கட்டுரையாளர் றொபர்ட் காகன் எழுதினார்: "ஜனாதிபதி புஷ்ஷின் அயலுறவுக் கொள்கையைப் பற்றி முக்கியமாகக் குறைகூறப்படப்போவது அவர் ஈராக்கின்மீது படைஎடுத்தார் என்பது இல்லை. பெரும் போர் எதிர்ப்பு வேட்பாளரான ஹோவர்ட் டீன் கதை முடிந்து விட்டது. எஞ்சியிருந்த மற்ற இரு ஜனநாயகக் கட்சி சார்பிலான நியமன வேட்பாளர்களுமே போருக்காக வாக்கு அளித்தவர்கள்."

கடந்த வாரம் அயலுறவுக் கொள்கை பற்றிய முக்கிய உரை ஒன்றில், தான் புஷ்ஷை இடதுபுறத்தில் இருந்து தாக்கும் அளவிற்கு வலதுபுறத்திலிருந்தும் தாக்குவேன் என்றும், உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் போதுமான அளவு செலவழிக்காததற்கும் அவரைக் குற்றஞ்சாட்டுவேன் என்றும், ஆப்கானிஸ்தானத்தில் இன்னும் கடுமையாப் போரிடாமல் இருப்பதற்கும், வடகொரியாவை அதனிடத்தில் இருப்பதாகக் கூறப்படும் அணுவாயுதங்களுக்காக மோதாமல் இருப்பதற்கும் குற்றஞ்சாட்டுவேன் என்று கெர்ரி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தேசபக்த சட்டத்திற்காக (USA Patriot Act) வாக்களித்திருந்த கெர்ரி, அதன் அடிப்படை விதிமுறைகளுக்கு அறைகூவல் விடமாட்டார்; அவரைப் பொறுத்தவரை அமெரிக்கா "பயங்கரவாதத்தின்மீது போர்" தொடுத்திருப்பதால், அது அரசியலமைப்பு வழிவகைகளை மீறி இருந்தாலும், சமுதாயத் தேவைகளைக் குறைத்துக் கொண்டு போலீசார், இராணுவம், மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு மிக அதிகமான அளவு வளங்கள் வழங்கப்படுவதையும், ஜனநாயக உரிமைகள் வெட்டிக்குறைக்கப்படுவதையும் நியாயப்படுத்துகிறது.

செய்தி ஊடகமும், அரசியல் நிறுவனமும், ஜனநாயக் கட்சியின் ஜனாதிபதி தேர்தலுக்கான நியமனப் பிரச்சாரத்தில், அப்பொழுது முன்னணியில் இருந்த, ஈராக்கில் போருக்கு எதிர்ப்புடன் நெருக்கமாகத் தொடர்புடையவராகக் கருதப்பட்ட, வெர்மான்டின் பழைய கவர்னர் ஹோவர்ட் டீனை அகற்றிவிட்டு, இன்னும் கூடுதலான நம்பிக்கைத்தன்மையும், புஷ்ஷிற்குப் பதிலாக ஏற்கத்தக்கவருமான வேட்பாளர், ஒருவேளை தேவையானால் கொண்டுவரப்படுவதற்கு முயன்றது.

இரண்டே மாதத்திற்குள், மிக புத்திசாலித்தனமாகவும், குறிப்பிடத் தகுந்த கஷ்டங்கள் இல்லாமலும் இந்த நடவடிக்கை சாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிப்போக்கில் முக்கிய காரணி எதுவெனில் அரசியல் ஆற்றல் குறைவாகவும் அனுபவம் அதிகமும் இல்லதவர்கள், டீனையும் அவருடைய ஜனநாயகக் கட்சியையும் தங்களுடைய போரின் எதிர்ப்பிற்கு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டதுதான்.

2003ம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், போரைத் தொடக்குவது என்ற புஷ்ஷின் தீர்மானத்தை எதிர்த்து மில்லியன் கணக்கில் மக்கள் ஆர்ப்பாட்டங்களிலும், எதிர்ப்பு அணிகளிலும் கலந்து கொண்டனர். இவர்களில் பலர் பின்னர் போருக்கு எதிரான போராட்டத்தை ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சாரத்தின் அமைப்பிற்குள் தொடரவேண்டும் என்றும் கருதினர்.

ஒரு மரபுவழி முதலாளித்துவ அரசியல்வாதியாகவும், அமெரிக்க ஏகாதிபத்திய கருத்தின் பாதுகாவலராகவும், நீண்டகாலம் மையக் கருத்துக்களைப் பின்பற்றி வெர்மான்டின் கவர்னராகவும் இருந்த டீன், போருக்கு மட்டும் இல்லாமல், ஜனநாயகக் கட்சி புஷ்ஷிற்கும், குடியரசு வலதுசாரிக்கும் காலில் விழுந்து வணங்குவதையும் எதிர்த்து வேட்பாளர் நியமனம் கோரினார். ஈராக் படையெடுப்பைத் தொடர்ந்து அவருடைய பிரச்சாரம் பெரும் வேகத்துடன் விளங்கி, ஜூலை மாதத்திற்குள் தேர்தல்நிதி திரட்டுவதிலும், கருத்துக்கணிப்புக்களிலும், முக்கிய மாநிலங்களில், தொடக்க கட்ட தேர்தல்களில் முன்னணியில் நின்றிருந்தார்.

ஜனநாயகக் கட்சியில் போர் பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் போர் எதிர்ப்பு தலைமையாய் இருந்தவர்களால் நடத்தப்பட்டது; இவர்களில் பலர், ஜனநாயகக் கட்சியில் 1960களின் தீவிர எதிர்ப்பு அரசியலில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர், அதுவும் கூட தேக்கமடைந்து நின்றுவிட்டது.

ஜனவரி மாதம் இரண்டாம் வாரம் வரைகூட, கெர்ரியின் பிரச்சாரம், செய்தி ஊடகத்தால் அதிக வாய்ப்பு இல்லை என்று தள்ளப்பட்டுவிட்டதுடன், கருத்துக்கணிப்புக்களும் அவர் பெரிதும் பின்தங்கிய நிலையில், ஜனவரி 19ம் தேதி அயோவாவில் நடைபெற்ற சிறுகுழுக்கள் தேர்வில் மட்டும் இல்லாமல், அருகிலுள்ள மாசாச்சுசெட்ஸின் நான்கு செனட்டுத் தேர்தல்களிலிருந்து நன்கு அறிமுகமாகியிருந்த, முதல் தொடக்க கட்ட மாநிலமான நியூ ஹாம்ப்ஷைரிலும் மிகவும் மோசமான முறையில் பின்தங்கியிருந்தார்.

டீனுடைய பிரச்சாரம் திடீரென செய்தி ஊடகத் தாக்குதல்களுக்கு பெரிதும் ஆளாகியது; அதே நேரத்தில் கெர்ரியும், எட்வர்ட்ஸும், நூறாயிரம் மக்கள் சம்பந்தப்பட்ட அமெரிக்காவின் சிறிய மாநிலங்களில் ஒன்றான இதில் இந்த அரசியல் நிகழ்ச்சியில், அயோவா உட்குழுக்களில் ஆதரிக்கப்பட்டனர். கெர்ரியும் எட்வர்ட்ஸும், புஷ்ஷின் ஈராக்கின் மீதான தாக்குதலுக்கு ஒப்புதலை இவர்கள் 2002 அக்டோபர் தீர்மானத்தில் அளித்திருந்தபோதிலும்கூட, டீனுடைய போரெதிர்ப்பு நிலைப்பாட்டைத் தாங்களும் கொண்டனர்.

அயோவாவில் கெர்ரி பெற்ற குறுகிய வெற்றி, 38 சதவிகித மொத்தம், பெரும் அதிசயமான அரசியலில் மீண்டும் வருதல் என்று போற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 30 மாநிலங்களில் தொடர்ந்து 27 மாநிலங்களில் வெற்றிபெறுவதற்கு அயோவா வெற்றி தொடக்கமாக அமைந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும், கெர்ரியின் முந்தைய வெற்றிகள், செய்தி ஊடகத்தால் பெருமளவு ஆரவாரத்துடன் பேசப்பட்டு அவர் "தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதற்கு" சான்று என முழக்கமிடப்பட்டு, மேலும் முதல் இடங்களில் முடிவதற்கு அடிப்படையாயிற்று.

இதே காலத்தில், போர் தவறான காரணங்கள் காட்டித் தொடுக்கப்பட்டது என்பதற்கான சான்றுகள் ஐயத்திற்கிடமில்லாத ஆதாரங்களுடன் வெளிவந்தது. ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் உள்ளன என்பதற்கான சான்றுகள் இல்லை என்பதை புஷ் நிர்வாகம் ஒப்புக் கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; தலைமை ஆயுத ஆய்வாளர், மார்ச் 23 அன்று போர்தொடுக்கப்பட்ட போது ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருக்கவில்லை என்று அறிவித்தார். இருந்தாலும்கூட ஈராக் பிரச்சினை கெர்ரி, மற்றும் அவருடைய போட்டியாளர்கள் ஜனநாயகக்கட்சியின் நியமனம் பெற உள்ள நேரத்தின் பிரச்சாரத்தின்போது விரைவில் பின்னணிக்குச் சென்றது.

இறுதிப் பகுப்பாய்வில், டீன் பிரச்சாரம் ஓர் அரசியலில் திசைதிருப்பும் முயற்சியாக, கடந்த வசந்தகாலத்தில், குறிப்பாக இளைஞர்களை பெரிதும் வளர்ந்திருந்த மக்களுடைய போர் எதிர்ப்பு உணர்வைக் கவர்ந்துகொள்ளும் முறையில், முதலாளித்துவமுறையின் இருகட்சி முறை கட்டமைப்பிற்குள் அடக்கிவிடவே பயன்பட்டது.

டீன் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார் என்றாலும், டென்னிஸ் குஷினிக், அல் ஷார்ப்டன் இருவரும் தொடர்ந்து இருந்த "நாயும் மட்டக்குதிரையும்" காட்சியும் தொடர்ந்தது; இவ்விருவரும் ஜனாதிபதி தொடக்கத்தேர்தல்களில், இதுவரை மிகக்குறைந்த பிரதிநிதிகள் ஆதரவு பெற்ற போதிலும், இன்னும் தொடர்ந்து இருக்கின்றனர். ஜனநாயகக் கட்சி தன்னுடைய நம்பிக்கைத் தன்மையை உயர்த்திக்கொள்ளவும், குடியரசுக் கட்சியின் கொள்கைகளுக்கு உண்மையான மாற்றத்தைத் தருவது போன்ற பொய்த்தோற்றத்தை உரமிட்டு வளர்க்கவும், தங்களுடைய இடது வாய்ச்சவடாலை வெளிப்படுத்தி இவர்கள் ஒவ்வொரு விவாதத்திலும் பங்குபெற்றதால், இவர்கள் கட்சி நடைமுறைப் பொறுப்பாளர்களாலும், செய்தி ஊடகத்தாலும், பொறுத்துக் கொள்ளப்பட்டனர் -- வரவேற்கக்கூடப்பட்டனர்.

உழைக்கும் மனிதனின் நிலையைப்பற்றிப் பிரச்சாரமுறையில் குரலெழுப்பப்பட்டாலும், புஷ்ஷின் வெளிநாட்டுக் கொள்கை போலவே, உள்நாட்டுக் கொள்கையைப் பொறுத்தவரையிலும் கெர்ரிக்குப் பெருத்த கருத்து வேறுபாடுகள் ஒன்றும் கிடையாது. கெர்ரியும், புஷ்ஷும் இலாபமுறையையும் அமெரிக்க வாழ்வு பல மில்லியன்களுடைய செல்வந்தரின் சிறுபான்மையின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருப்பதையும் பேணுகிறது, இக்குழுவில் அவர்களும் ஒரு பகுதியே ஆவர். இருவருமே மிகப்பெரிய நிறுவனங்கள், வங்கிகள் இவற்றின் இலாபத் தேவைகளுக்கு, பல பதின்மடங்கு மில்லியன் கணக்கான மக்களுடைய வாழ்க்கைத்தரம், சமுதாயத் தேவைகள் இவற்றையும் வேலைகளையும் கீழ்ப்படுத்தவே செய்வர்.

கெர்ரி திட்டமிட்டுள்ளவை எதுவுமே, மக்கள்தொகையின் செல்வம் கொழிக்கும் உயர் 1 சதவிகிதம், நாட்டின் 40 சதவிகிதச்செல்வத்தை கொண்டுள்ள, அமெரிக்காவின் மகத்தான சமுதாய நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக இல்லை. ஆனால் இவர் அடுத்த ஜனாதிபதியாக வந்தால், தான் கூறும் மிகக்குறைந்த நடவடிக்கைகளை கூட இவரால் செயல்படுத்தமுடியாது. நீண்டகாலத்திற்கு முன்னரே ஜனநாயகக் கட்சி சமுக சீர்திருத்தக் கொள்கைகளை கைவிட்டுவிட்டது; அந்த நிகழ்ச்சிப்போக்கு கிளின்டன் தன்னுடைய சுகாதாரத்திட்டத்தைக் கைவிட்டு, பொதுநலத்திட்டத்தையும் கைவிட்டபோதே உச்சகட்டத்தை அடைந்துவிட்டிருந்தது.

சமூக வளங்கள் இவற்றை பெருமளவு மறுபங்கீடு செய்யாமல் மற்றும் செல்வத்தையும் சலுகையையும் வளைத்துப் போட்டிருப்பதன் மீது தாக்குதல் நடத்தாமல், உழைக்கும் குடும்பங்களின் உடனடித்தேவைகள் ஒன்றைக் கூட நிறைவேற்ற முடியாது; இதற்கு புஷ்ஷும் குடியரசுக்கட்சிக்கும் சற்றும் குறையாத வகையில் கெர்ரியும் ஜனநாயகக் கட்சியும் கூடத்தான் எதிர்க்கும்.

இவை இந்த அனுபவத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படவேண்டிய முக்கியமான படிப்பினைகள் ஆகும். ஜனநாயகக் கட்சி, குடியரசுக்கட்சி இரண்டுமே அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டின் அரசியற் கருவிகள் ஆகும்; அது, ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்தி, அதன் நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெகு ஜன சமூக இயக்கங்ககைக் கைப்பற்றி, இறுதியில் அவற்றை அழிக்கவும் செய்வதில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டிருக்கிறது.

1890களின் ஜனரஞ்சகக் கொள்கையாளர்களிலிருந்து, 1930 களின் பரந்த தொழிற் சங்க இயக்கங்கள், பின்னர் 1960களின் குடிமை உரிமை மற்றும் போரெதிர்ப்பு போராட்டங்கள் வரையிலான சமுதாய எதிர்ப்பு இயக்கங்கள் ஜனநாயகக் கட்சிக்குப் பின்னே சென்று, அதனால் முற்றிலும் குடல் அறுக்கப்பட்டு மடிந்திருக்கின்றன. இரண்டு கட்சிமுறை நிதிப் பிரபுத்துவமுறையின் அரசியல் ஏகபோக உரிமையாக இருக்கிறது; இலாபமுறைக்கு ஏதேனும் தீவிர அறைகூவல் வந்தால், அது வளர்ச்சியுறாது தடுப்பதற்காக உள்ளது.

2004ம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் துவக்கப் பிரச்சாரங்கள், இப்பொழுதுள்ள அரசியல் கட்டமைப்புக்கள் மாற்றைத் தேடும் பெரும்பாலான மக்களுக்கு ஒரு பொறியே என்பதை நன்கு நிரூபித்துள்ளது. ஏகாதிபத்தியப் போர், வறுமை மற்றும் சமூக சமத்துவமற்ற நிலை இவற்றிற்கெதிரான இயக்கத்தின் வளர்ச்சிக்கு, இந்த அரசியல் இரும்புப்பிடியிலிருந்து ஒரு ஒரு முறிவு தேவைப்படுகிறது.

எனவேதான் சோசலிச சமத்துவக் கட்சி 2004-ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தன்னுடைய சொந்த வேட்பாளர்களை நிறுத்துகிறது. உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி இரண்டும் மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் மார்ச் 13-14ம் தேதிகளில், இரண்டு கட்சிகளின் போருக்கும் பிற்போக்குத்தனத்திற்கும், ஓர் உண்மையான மாற்றிற்கான அரசியல் அடிப்படையைப் பற்றி விவாதிக்க ஒரு மாநாட்டை கூட்டுகிறது. அத்தகைய மாற்றத்தை விழைவோர் அனைவரையும் இம்மாநாட்டிற்கு வருமாறு அழைக்கிறோம்.

Top of page