WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Socialist Equality Party to stand in Sri Lankan
elections
சோசலிச சமத்துவக் கட்சி இலங்கைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறது
By Socialist Equality Party
2 March 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க), ஏப்பிரல் 2ம் திகதி நடைபெறவுள்ள
பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திற்கு 23 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. கொழும்பு மாவட்டமானது
நாட்டின் மிகப் பெரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக மையமாகும்.
இந்த வேட்பாளர் குழுவுக்கு சோ.ச.க பொதுச் செயலாளரான விஜே டயஸ்
தலைமை வகிக்கின்றார். அவர் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினருமாவார்.
சோ.ச.க வேட்பாளர் குழுவில் தமிழ் மற்றும் சிங்களம் பேசும் தொழிற்துறை தொழிலாளர்கள், ஆசிரியர்கள்,
வங்கி ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களும் அடங்குவர்.
சோ.ச.க இந்தத் தேர்தல்களை தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கும் கடுமையான
ஆபத்துக்களை பற்றி எச்சரிப்பதற்காகவும், இந்தப் பிரச்சினைகளை எதிர்ப்பதற்கு சாத்தியமான அரசியல்
வேலைத்திட்டத்தைப் பற்றிய பரந்த கலந்துரையாடலை ஆரம்பித்து வைக்கவும் பயன்படுத்துகிறது.
தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் மையப் பிரச்சினை, நாட்டை மீண்டும் அழிவுகரமான
உள்நாட்டு யுத்தத்திற்குள் மூழ்கச்செய்வதற்கான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகும். இந்த யுத்தத்தில் ஏற்கனவே
60,000 பேர்களுக்கும் மேல் பலியாகியுள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கம் அதிகாரத்திற்கு
வந்து தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டு இரண்டு வருடங்களே கடந்துள்ள
நிலையில், பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகள் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பெரும் வியாபாரிகளும் பெரும் வல்லரசுகளும், தீவை ஒரு மலிவு உழைப்பு மேடையாக
மாற்றுவதன் பேரில் விடுதலைப் புலிகளுடனான ஒரு உடன்பாட்டுக்கு நெருக்கி வருகின்றனர். ஆனால், இந்த "சமாதான
முன்னெடுப்புகள்" கொழும்பில் உள்ள அரச மற்றும் அரசியல் நிறுவனத்தினுள் ஆழமான பிளவுகளைத் தோற்றுவித்துள்ளது.
கொழும்பில் உள்ள அரசியல் நிறுவனமானது சமூகப் பதட்ட நிலைமைகளை திசைதிருப்பவும், இன, மொழி மற்றும்
மத அடிப்படையில் தொழிலாளர்களை பிளவுபடுத்தவும் எப்பொழுதும் தமிழர் விரோத பேரினவாதத்தின் பின்னால்
அணிதிரண்டுவந்துள்ளது.
இந்த "சமாதான முன்னெடுப்புகள்" ஆரம்பத்தில் இருந்தே அரச இயந்திரத்தின் ஒரு
பகுதியினதும், குறிப்பாக இராணுவத்தினதும் மற்றும் விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு கொடுக்கல் வாங்கலையும்
ராஜ துரோகமாகக் கருதும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போன்ற சிங்களப் பேரினவாதக் கும்பல்களினதும்
தாக்குதல்களுக்கு உள்ளாகிவருகின்றது.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை, விடுதலைப்
புலிகளுடனான பேச்சுக்களில் கொடுக்கத் தகாத சலுகைகளை கொடுத்ததாகவும் "தேசியப் பாதுகாப்பை"
கீழறுப்பதாகவும் கண்டனம் செய்தபோது, அவர் மேலும் மேலும் இந்தத் தட்டுக்களிலேயே தங்கியிருந்தார். அவர்
கடந்த நவம்பரில் பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுக்களை சர்வாதிகாரமான முறையில் அபகரித்ததுடன்,
பெப்ரவரி 7 அன்று முன்னொருபோதும் இல்லாதவிதத்தில் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தை பதவி
விலக்கியது இந்தத் தட்டினரின் தூண்டுதலின் பேரிலேயே ஆகும்.
குமாரதுங்கவின் நடவடிக்கைகள், பலவிதமான சிங்கள தீவிரவாத கும்பல்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இப்போது, ஜனாதிபதியின் சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (ஸ்ரீ.ல.சு.க) உத்தியோகபூர்வமாக
கூட்டணி சேர்ந்துள்ள ஜே.வி.பி, சாதாரண உழைக்கும் மக்களை அவர்களின் சொந்த அவநம்பிக்கையான நிலைமைகளில்
இருந்து திசைதிருப்புவதன் பேரில் இனவாதத்தை தூண்டுவதற்காக இந்தச் சந்தர்ப்பத்தை சுரண்டிக்கொள்வதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது.
அதே சமயம் 200க்கும் மேற்பட்ட பெளத்த பிக்குகள், குறிப்பாக விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு
பேச்சுவார்த்தையையும் எதிர்க்கவும், நாட்டை பெளத்தமத அரசாக மாற்றுவதன் மூலம் "மக்களை
விடுவித்துக்கொள்ளவும்" அர்ப்பணித்துக்கொண்டுள்ளதாக கூறும், தேசிய ஹெல உறுமய என பெயர் மாற்றப்பட்டுள்ள
தீவிர வலதுசாரி சிஹல உறுமய கட்சியின் பதாகையின் கீழ் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
குமாரதுங்கவும் அவரது அரசியல் பங்காளிகளும் தற்போதைய யுத்த நிறுத்தத்துக்கு
மதிப்பளிப்பதாகவும், விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் குறிப்பிடுகின்றனர். ஆனால் "சமாதான
முன்னெடுப்புகளைப்" பற்றிய அவர்களின் கண்டனங்கள், அவற்றுக்கே சொந்தமான தவிர்க்கமுடியாத தர்க்கங்களைக்
கொண்டுள்ளன. தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்தாலும், சிங்களப் பேரினவாத வாய்வீச்சுக்களால் விஷமூட்டப்பட்ட,
அரசியல் ரீதியில் சூடேறியுள்ள சூழ்நிலை, ஆயுத மோதல் மீண்டும் வெடிப்பதற்கான நிலைமைகளை சிருஷ்டிக்கின்றது.
தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை பதவி விலக்குவதற்கான ஜனாதிபதியின்
முடிவு, புதிய சர்வாதிகார ஆட்சி முறைகள் தயாரிக்கப்பட்டு வரும் அதேவேளை பாராளுமன்ற ஜனநாயகம் மேலும்
மேலும் துடைத்துக்கட்டப்படுவதையே வெளிப்படுத்துகிறது என சோ.ச.க எச்சரிக்கின்றது. ஐ.தே.மு உட்பட
அரசியல் நிறுவனத்தின் எந்தவொரு பிரிவிடமிருந்தும் எந்தவொரு எதிர்ப்பும் வெளிப்படாமை, ஆளும் வட்டாரத்துக்குள்
அடிப்படை ஜனநாயக உரிமையை பாதுகாப்பதில் கடுமையாக அக்கறை காட்டும் எவரும் கிடையாது என்பதையே வெளிப்படுத்துகிறது.
ஜனாதிபதி, சர்வாதிகார வழிமுறைகளை நாடுவதானது எல்லாவற்றிற்கும் மேலாக
தொழிலாள வர்கக்த்தை இலக்காகக் கொண்டதாகும். மக்களில் பெருப்பான்மையானவர்களின் தேவைகளையும் அபிலாஷைகளையும்
திருப்திப்படுத்துவதில் எந்தவொரு பிரதானக் கட்சியும் இலாயக்கற்றுப் போயுள்ளது. ஜே.வி.பி உட்பட அவர்கள்
அனைவரும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியும் திணித்துள்ள பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்திற்கு
ஆதரவளிக்கின்றன. இந்தத் திட்டங்கள், வாழ்க்கை நிலைமைகளை சீரழித்துள்ளதோடு சமூக சமத்துவமின்மையை நாடகபாணியில்
அதிகரிக்கச் செய்துள்ளன.
யுத்தத்தை எதிர்! வடக்கு கிழக்கில் இருந்து துருப்புக்களை வாபஸ் பெறு!
சோ.ச.க ஏப்பிரல் 2 தேர்தல்களில் யுதத்திற்கு முடிவுகட்டவும் ஜனநாயக உரிமைகளைப்
பாதுகாக்கவும், சாதரண உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள ஆழமடைந்துவரும் சமூக நெருக்கடிகளை தீர்ப்பதற்கும்
ஒரு சோசலிச வேலைத் திட்டத்தை அபிவிருத்தி செய்கின்றது. சோ.ச.க வின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகத்தைப் போலவே, 1983ல் யுத்தம் வெடித்ததில் இருந்தே அதை சமரசமற்று எதிர்த்ததுடன், அடுத்தடுத்து
வந்த கொழும்பு அரசாங்கங்களுக்கு எதிராக சிங்கள தமிழ் மக்களின் ஐக்கியத்திற்காகப் போராடியது சோ.ச.க
மட்டுமேயாகும்.
முற்போக்கு அடிப்படையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் ஆளும் வர்க்கம்
முழுமையாக இலாயக்கற்று உள்ளது என்பதை தற்போதைய அரசியல் நெருக்கடி வெளிப்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக்
கட்சியும் (ஐ.தே.க), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க) யுத்தத்திற்கு காரணமாகிய சிங்கள இனவாதத்தில்
மூழ்கிப்போயுள்ளதுடன், யுத்தத்தை கொடூரமான முறையில் முன்னெடுத்தமைக்கும் பொறுப்பாளிகளாவர். பழைய
"தொழிலாளர் இயக்கங்களான லங்கா சமசமாஜக் கட்சியும் (ல.ச.ச.க) கம்யூனிஸ்ட் கட்சியும் பல தசாப்தங்களாக
பேரினவாத அரசியலுக்கு அடிபணிந்து போயிருந்ததோடு, தற்போது ஜே.வி.பி-ஸ்ரீ.ல.சு.க கூட்டணியிலும் அங்கம்
வகிக்கின்றன. முதலாளித்துவ அரசிடமிருந்தும், முதலாளித்துவ கட்சிகளிடமிருந்தும் மற்றும் அவர்களின் அரசியல் பரிந்துரையாளர்களிடம்
இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிர்மாணிப்பதே உண்மையான சமாதானத்துக்கும், இனவாத
மோதலையும் பகைமையையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்நிபந்தனைகளாகும்.
தொழிலாளர்கள் பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளிலோ அல்லது விக்கிரமசிங்கவினதும்
ஐ.தே.மு வினதும் வாக்குறுதிகளிலோ நம்பிக்கை வைக்க முடியாது. பெரு வியாபாரிகளதும் வல்லரசுகளினதும்
அழுத்தத்தின் நிமித்தம் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளுடன் ஒரு சமாதான கொடுக்கல் வாங்கலை
உருவாக்கிக்கொள்ள முயற்சிக்கின்றார். இது தொழிலாள வர்க்கத்தின் மீதான பரஸ்பரம் சுரண்டலை உக்கிரமாக்குவதை
இலக்காகக் கொண்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் ஆளும் கும்பல்களுக்கிடையில் அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொள்வதை
குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
நாட்டின் வட கிழக்கிற்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான பல்வேறு "சமாதான"
திட்டங்களும் இனவாதத்தினையும் வகுப்புவாதத்தினையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கு பதிலாக, தவிர்க்கமுடியாத வகையில்
எதிர்கால பதட்டநிலைமைகளுக்கும் மோதல்களுக்கும் வழிவகுக்கும் இனப்பிரிவினைகளையே ஸ்தாபனமயப்படுத்தும்.
அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் முன்வைத்துள்ள இடைக்கால நிர்வாக சபைகள், ஜனநாயகமற்ற முறையில் அமுல்படுத்தப்படவுள்ளதோடு,
கடும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை அதிகாரத்தில் இருத்தும். கொழும்பில் உள்ள ஆளும்
வர்க்கத்தைப் போலவே விடுதலைப் புலிகளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவித்து, நாட்டை "புலி
பொருளாதாரத்திற்கு" மாற்றுவதற்கு தயாராக உள்ளது.
மீண்டும் ஆயுத மோதலுக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக தொழிலாள வர்க்கம்
யுத்தத்திற்கான அதனுடைய சொந்தத் தீர்வை முன்வைக்க வேண்டும். தீவின் வடக்குக் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவம்
நிபந்தனையின்றி உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி கோருகின்றது. ஒற்றை
ஆட்சியை பலவந்தமாக நிர்வகிப்பதானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதோடு பின்னிப்பிணைந்துள்ளது
மட்டுமன்றி இராணுவவாதத்தின் செல்வாக்கிற்கும் மற்றும் தீவு பூராவும் ஜனநயாக உரிமைகளுக்கு எதிரான அடிப்படைத்
தாக்குதல்களுக்கும் வழிசமைத்துள்ளது.
ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசுகளுக்காக !
சோ.ச.க, எல்லா விதமான வகுப்புவாதம் மற்றும் பேரினவாதத்தையும் தீர்மானகரமாக
நிராகரிக்கவும், இன, மொழி அல்லது மத வேறுபாடுகளுக்கு அப்பால், அனைவரினதும் ஜனநாயக உரிமைகளை வெற்றிகொள்ளவும்
அழைப்புவிடுக்கிறது. 20 வருடகால யுத்தத்தை நிறுத்துவதற்கான எந்தவொரு தீர்வும் இலங்கையின் அரசியலமைப்பை
முழுமையாக நிராகரிப்பதையே கோருகிறது. இந்த அரசியலமைப்பு இனவாதத்தையும் மற்றும் இப்போது குமாரதுங்க
சுரண்டிக்கொண்டுள்ள எதேச்சதிகார அதிகாரங்களையும் வலுப்படுத்துகின்றது. சோ.ச.க, முதலாளித்துவ அரசியல்
கும்பல்களுக்குப் பதிலாக, சாதாரண உழைக்கும் மக்களுக்கு தீர்க்கப்படாத அனைத்து ஜனநாயக உரிமைகள் சம்பந்தமான
பிரச்சினைகள் பற்றித் தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும், நேர்மையான பிரதிநிதிகள் அடங்கிய அரசியலமைப்பு
சபையை நிறுவுவதை சிபாரிசு செய்கின்றது.
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதானது, தீவில் பெரும்பான்மையான மக்கள்
முகம்கொடுத்திருக்கும் பயங்கரமான சமூக நிலைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதோடு முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி, விடுதலைப் புலிகள் உட்பட எல்லா முதலாளித்துவக் கட்சிகளும், அனைத்து சமூக நெருக்கடிகளும் சர்வதேச
நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கோரிக்கைகளான திறந்த சந்தைக் கொள்கையை தழுவிக்கொள்வதன் மூலமே
தீர்க்கப்பட முடியும் என்ற மாயையை பரப்புகின்றன. இந்தத் திட்டமானது வாழ்க்கை நிலைமைகளை அபிவிருத்தி செய்வதற்குப்
பதிலாக செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான இடைவெளியை ஆழமடையச்செய்துள்ளதோடு, தற்போதிருக்கும்
சமூக சேவைகளின் அஸ்திவாரத்தை கீழறுத்து, அடிப்படைக் கட்டமைப்பை மேலும் சீரழிவிற்குள் தள்ளியுள்ளது.
இத்தகைய எரியும் சமூகப் பிரச்சினைகளில் எதுவும் இந்த இலாப அமைப்பு வரையறைக்குள்
தீர்க்கப்பட முடியாது என சோ.ச.க வலியுறுத்துகிறது. தொழலாள வர்க்கம், தமது போராட்டங்களை ஐக்கியப்படுத்தி,
அனைவரினதும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் வறுமையையும் இல்லாமையையும் முடிவுக்குக்
கொண்டுவரும், அதன் சொந்த சோசலிச பதிலீட்டை முன்வைப்பதன் மூலம், நகர்ப்புற ஏழைகளுக்கும் மற்றும் கிராமப்புற
மக்களுக்கும் சக்தி மிக்க கவர்ச்சி முனையாக உருவெடுத்து, தமது கைக்கு அரசியல் அதிகாரத்தை வெற்றிகொள்ள
அடித்தளமிடும். இந்த அடிப்படையில் செல்வம் படைத்த சிலரின் இலாபத் தேவைகளுக்குப் பதிலாக, உழைக்கும் மக்களின்
சமூகத் தேவைகளை நிறைவேற்றுவதன் பேரில், சமூதாயத்தை மேலிருந்து கீழ் வரை மறு ஒழுங்கமைக்கும் ஒரே
விதிமுறையாக ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசுக்காக சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது.
அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பிலிருந்தும், மற்றும் உலக மேலாதிக்கத்திற்கான
அதன் மூர்க்கத்தனமான நகர்வில் இருந்தும் மிகவும் கொள்ளையிடும் வெளிப்பாட்டைக் கண்ட ஏகாதிபத்திய
செல்வாக்குக்கு எதிரான போராட்டமின்றி இத்தகைய ஒரு வேலைத்திட்டத்தை நினைத்துப்பார்க்கவும் முடியாது. அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை அடைவதன் பேரில், தெற்காசியாவில்
பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களை மறுசீரமைப்பதை இலக்காகக் கொண்ட பரந்த மூலோபாயத்தின்
ஒரு பாகமாகவே, வாஷிங்டன் இலங்கை "சமாதான முன்னெடுப்புகளை" ஆதரிக்கின்றது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானை
ஆக்கிரமித்துள்ள வாஷிங்டன், இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகளை ஆதரிப்பதுடன் நேபாள அரசுக்கும்
ஆயுதம் வழங்குகிறது.
ஜே.வி.பி மற்றும் விடுதலைப் புலிகள் உட்பட இலங்கையின் அனைத்துக் கட்சிகளும்,
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்ப்பதை விடுத்து, ஏதாவதொரு வழியில் வாஷிங்டனின்
நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொண்டுள்ளன. சோ.ச.க, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை
சமரசமற்று எதிர்ப்பதோடு, இவ்விரு நாடுகளிலும் இருந்து வெளிநாட்டுப் படைகளும் அதிகாரிகளும் நிபந்தனையின்றி
உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும் என கோருகின்றது.
சோ.ச.க வின் அடிப்படை கொள்கை தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியமாகும்.
இந்திய துணைக்கண்டத்திலும் மற்றும் ஆசியா முழுவதிலும் உள்ள, உற்பத்தி நடவடிக்கைகளின் பூகோளமயமாக்கத்தால்
பரந்தளவில் அதிகரித்துள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒன்றிணைக்கப்பட்ட
போராட்டத்திற்காக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தமது வர்க்க சகோதரர்களுடன்
இணையவேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம். நாம் பொதுவான சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில்
சமகாலத் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ள எமது சகோதரக் கட்சிகளான அமெரிக்க சோசலிச சமத்துவக்
கட்சி மற்றும் ஜேர்மனிய சோசலிச சமத்துவக் கட்சியுடன் தோளோடு தோள் நிற்கிறோம்.
எதிர்வரும் நாட்களில் எமது வேலைத்திட்டத்தையும் கொள்கையையும் தெளிவுபடுத்தும்
தேர்தல் விஞ்ஞாபனத்தை சோசலிச சமத்துவக் கட்சி வெளியிடும். நாம் இலங்கையிலும் இந்தியாவிலும் மற்றும் உலகம்
பூராவும் உள்ள உலக சோசலிச வலைத் தள வாசகர்களை எமது பிரச்சாரத்திற்கு நடைமுறையில் ஆதரவு
தருமாறும் பங்குகொள்ளுமாறும் அழைப்புவிடுக்கிறோம். சிங்களத்திலும் தமிழிலும் மொழிபெயர்க்கப்படவுள்ள எமது
விஞ்ஞாபனத்தை விநியோகிக்க உதவுவதோடு, தங்களது வேலைத் தளங்களில் அல்லது பிரதேசங்களில் சோ.ச.க
பேச்சாளர்கள் உரையாற்றுவதற்காக கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறும், எமது தேர்தல் நிதிக்கு பங்களிப்பு செய்யுமாறும்,
எல்லாவற்றுக்கும் மேலாக எமது வேலைத் திட்டத்தையும் முன்னோக்கையும் படித்து சோ.ச.க வில் அங்கத்துவம் பெறுவதற்காக
வின்னப்பிக்குமாறும் நாம் வேண்டுகிறோம்.
See Also :
சோசலிச சமத்துவக்
கட்சி இலங்கை ஜனாதிபதியின் சர்வாதிகார நடவடிக்கைகளை கண்டனம் செய்கின்றது
இலங்கையின்
அரசியலமைப்பு சதி ஜே.வி.பி யை அரசியல் முக்கியத்துவத்தை நோக்கித் தள்ளியுள்ளது
இலங்கை ஜனாதிபதி அரசாங்கத்தை
பதவிவிலக்கியதை அடுத்து மெளனம் சாதிக்கிறார்.
இலங்கை
ஜனாதிபதி அரசியல் சதியில் அரசாங்கத்தை விலக்கினார்
ஜே.வி.பி-ஸ்ரீ.ல.சு.க
கூட்டணி இலங்கையின் அரசியல் பதட்டநிலையை அதிகரிக்கச்செய்கின்றது
Top of page |