World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan prime minister passively accepts his dismissal

பதவி நீக்கம் செய்யப்பட்டதை அமைதியாக ஏற்ற இலங்கைப் பிரதமர்

By Saman Gunadasa
28 February 2004

Back to screen version

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கரமசிங்க தனது அரசாங்கத்தை ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க பெப்ரவரி 7-ல் ஜனநாயகத்திற்கு புறம்பாக பதவிநீக்கம் செய்ததை எதிர்த்து அறைகூவல் விடுப்பார் என்று எதிர்ப்பார்த்தவர்கள் சென்ற ஞாயிற்று கிழமை அவர் நடந்து கொண்ட முறையைப்பார்த்து ஏமாற்றமடைந்தனர். மத்திய கொழும்பு பகுதியில் நடைபெற்ற தனது வலதுசாரி ஐக்கிய தேசியக்கட்சி (UNP) மாநாட்டில் அவர் உரையாற்றுகையில் ஜனாதிபதியின் நடவடிக்கைகளை மிதமாக கண்டித்தார். அதே நேரத்தில் கட்சி ஒன்றும் செய்ய முடியாது என்றும் ஆனால் ஏப்ரல் 2ந் தேதி நடைபெறும் திடீர் தேர்தலில் பங்கெடுத்துக் கொள்ளும் என்றும் அறிவித்தார்.

நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் செயல்பட்டு வந்த அரசாங்கத்தை பதவிநீக்கம் செய்வது என்று குமாரதுங்க முடிவு செய்தது முன்கண்டிராத நடவடிக்கையாகும். நாடாளுமன்றத்தை கலைத்ததுடன் ஜனாதிபதி தனது சொந்தக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) ன் இரண்டு தலைவர்களை காபந்து அமைச்சரவையில் நியமித்தார். மற்றும் 39 கபினட் அந்தஸ்து இல்லாத அமைச்சர்களை பதவி நீக்கம் செய்தார். சென்ற நவம்பர் மாதம் முக்கியமான மூன்று அமைச்சகங்களை தன்னிச்சையாக அவர் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அரசியலில் பல மாதங்கள் முட்டுக்கட்டை நிலை தோன்றியது. ஐக்கிய தேசிய முன்னணி (UNF) கூட்டணி அரசாங்கம் தமிழீழ விடுதலை புலிகளோடு (LTTE) சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதன் மூலம் ''தேசிய பாதுகாப்பிற்கு'' ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக அப்போது கூறி மூன்று முக்கிய அமைச்சகங்களையும் ஜனாதிபதி தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டார்.

ஒரு சுற்றுலா மையத்தின் விடுமுறைக்கால ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த விக்கிரமசிங்க தனது அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தியை கேள்விப்பட்டதும் ''அந்தப் பெண்ணுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்'' என்று கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அடுத்த 10-நாட்களுக்கு அவர் பகிரங்கமான அறிக்கை எதையும் வெளியிடவில்லை. சன்டே டைம்ஸ் அரசியல் விமர்சகர் குறிப்பிட்டிருப்பதைப்போல்: ''UNF இன்னமும் மந்திரி சபை நீக்கப்பட்டமை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பாக ஒருங்கிணைந்த அறிக்கை எதையும் வெளியிட முடியாத நிலையில் உள்ளது. இங்கொன்றும் அங்கொன்றுமாக சில அறிக்கைகள் விடப்பட்டு வருகின்றன. அதுவும் சில பத்திரிகை நிருபர்கள் இடைவிடாது நச்சரித்துக்கொண்டிருந்ததால் வந்தவை''.

இறுதியாக விக்கரமசிங்க பெப்ரவரி 17-ல் ஒரு தனியார் தொலைக்காட்சியில் தோன்றிய போதும் அதற்குப் பின்னர் பெப்ரவரி 22-ல் UNP- மாநாட்டில் கலந்து கொண்டபோதும் தனது மெளனத்தை கலைத்தார். தனது அரசாங்கம் டிசம்பர் 2001-ல் பதவி ஏற்றபின்னர் குமாரத்துங்காவுடன் ''சேர்ந்து ஆட்சி'' நடத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாக புகார் கூறினார். நவம்பரில் குமாரதுங்கா மூன்று அமைச்சகங்களை கைப்பற்றிக்கொண்ட நேரத்தில் அரசாங்க அமைச்சர்களை தன்பக்கம் கொண்டு செல்வதற்கு முயன்றார். அது நடக்கவில்லை என்று தெரிந்ததும் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டார் என்று குறிப்பிட்டார்.

''அது ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கை,'' "2001-தேர்தலில் மக்களது கட்டளையை பெற்று ஆட்சி புரிந்துவந்த அரசாங்கத்தை பதவிநீக்கம் செய்வதற்கு அவருக்கு ஜனநாயக உரிமைகள் எதுவும் இல்லை'' என்று பிரதமர் அறிவித்தார். ஆனால் விக்கரமசிங்க தெளிவாக ஒன்றை அறிவித்தார், குமாரதுங்கவின் நடவடிக்கைகளை நீதிமன்றங்கள் மூலமோ அல்லது தன்னை பதிவிநீக்கம் செய்ததற்கு எதிரான எந்த அரசியல் பிரச்சாரத்தின் மூலமோ அறைகூவல்விடப் போவதில்லை என்று குறிப்பிட்டார். தனது UNP கூட்டணிக்கு வாக்களித்து நிலையான அரசாங்கத்தை நிறுவ இன்னொரு ஆணையிடுமாறு வாக்காளர்களுக்கு மனம்தளர்ந்த நிலையில் வேண்டுகோள் விடுத்தார்.

இதில் எழக்கூடிய தெளிவான ஒரு கேள்விக்கு விக்கிரமசிங்க பதிலளிக்கவில்லை: ஏப்ரல்-2 வாக்குப்பதிவில் UNF- பெரும்பான்மை பெற்றாலும் குமாரதுங்க மீண்டும் அந்த அரசாங்கத்தையும் பதவி நீக்கம் செய்யாமல் தடுப்பதற்கு என்ன வழி இருக்கிறது? சமாதான நடவடிக்கைகள் என்று கூறப்படும் நடைமுறைகளுக்கு எதிராக குறுகிய மேலாண்மைவாத பிரச்சாரத்தை நடத்திவருகின்ற மற்றும் LTTE- அமைப்புடன் எந்தவிதமான பேரம் நடப்பதையும் எதிர்த்து வருகின்ற ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியுடன் முறையான கூட்டணியை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். மீண்டும் UNF பதவிக்கு வந்து முடங்கிக்கிடக்கும் பேச்சுவார்த்தைகளை LTTE- உடன் தொடங்குமானால் ''காட்டிக்கொடுப்பு'' என்ற அதே குற்றச்சாட்டுக்களையும் அந்த அரசாங்கத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அது சந்திக்க வேண்டியிருக்கும்.

சில ஊடக ஆய்வாளர்கள் கூறியிருப்பதைப் போல் குமாரதுங்காவின் நடவடிக்கைகளை விக்கரமசிங்க அமைதியாக ஏற்றுக்கொண்டது தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட தோல்வியல்ல. தீவிரமான சமூக மற்றும் அரசியல் பதட்டங்கள் நிலவுகின்ற சூழ்நிலையில் பழைய நாடாளுமன்ற நடைமுறைகள் பயனற்றவையாக ஆகிவிட்டன என்பதை ஆளும் வட்டாரங்கள் முழுவதும் உணர்ந்திருப்பதன் எதிரொலிதான் அது. குமாரதுங்காவிற்கு எதிராக எந்தப் பிரச்சாரம் நடத்தப்பட்டாலும் அதனால் கட்டவிழ்த்துவிடப்படுகின்ற சமூக சக்திகள் இரண்டு பிரதான கட்சிகளின் கட்டுப்பாட்டையும் மீறி மிக வேகமாக நழுவிச்சென்று விடும் என்று விக்கிரமசிங்க அஞ்சுகிறார்.

விக்கரமசிங்கவின் நிலைப்பாட்டை பாராட்டி வெளியிடப்பட்டுள்ள ஊடக விமர்சனங்களில் இந்தக் கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன. Daily Mirror ''பிரதமரின் முன்மாதிரியை பின்பற்ற வேண்டும்'' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில், ''தனது எதிரிகள் மீது கடும் தாக்குதல்களை'' தொடுக்காததற்காகவும் "அவரது பண்பாட்டு அரசியற் கொள்கை'' க்காகவும் அவரைப் பாராட்டி இருக்கிறது. ''நாட்டிற்கு அதன் அரசியல்வாதிகளிலிருந்து முதிர்ச்சியடைந்த சிறந்த திறமையான அரசியல் தலைமை அவசியம் தேவைப்படுகிறது. தலைவர்கள் அப்படி நடந்து கொண்டால்தான் அரசியலில் இடிமுழக்கங்களும் ஆவேசங்களும் இல்லாத சூழ்நிலை உருவாகும்'' என்று அந்தப் பத்திரிக்கை குறிப்பிட்டது.

குமாரதுங்க மற்றும் SLFP அளவிற்கு ஜனநாயக உரிமைகளில் UNP உறுதிப்பாடு கொண்டிருக்கவில்லை. J.R.ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக UNP- அரசாங்கத்திற்கு தலைமை வகித்தபோது 1978-ல் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தில் இடம்பெற்றிருக்கும் சர்வாதிகார அதிகாரங்களைத்தான் குமாரதுங்கா பயன்படுத்தியிருக்கிறார். SLFP மற்றும் JVP-யை போன்றுதான் UNF- யும் சிங்கள சோவினிச அரசியலில் ஊறிய அமைப்பாகும். இதன் விளைவாக பெரும் வர்த்தகர்கள் மற்றும் பெரிய வல்லரசுகள் நிர்பந்தங்களை ஏற்று UNF, LTTE-யுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தாலும் ''நாட்டை காட்டிக் கொடுத்துவிட்டார்கள்'' என்ற குற்றச்சாட்டுக்கு கடுமையாய் பாதிக்கப்பட்டது.

விக்கிரமசிங்க UNP- மாநாட்டில் தனது அரசாங்கம் ''நாட்டை பழைய நிலைக்கு'' கொண்டுவந்து ''சீரமைப்பை'' தொடங்குகின்ற நிலையில் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டுவிட்டதாக பெருமையுடன் கூறினார். மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆறு ஆண்டுகளில் ''புதிய இலங்கையை'' தன்னால் உருவாக்கிவிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். ''2004-ல் தனியார் துறையில் மட்டுமல்ல அரசு துறையிலும் புதிய வேலைவாய்ப்புக்களை நாங்கள் உருவாக்குவோம்... நாங்கள் விவசாயிகளுக்கும், கல்வி மேம்பாட்டிற்கும் உதவ விரும்புகிறோம்'' என்று குறிப்பிட்டார்.

பெரும்பாலான மக்கள் மீண்டும் போர் தொடங்கப்படுவதை விரும்பவில்லை என்பதை அறிந்து விக்கரமசிங்க UNF-ஐ ஒரு ''சமாதானக் கட்சி'' என்று வண்ணம் பூசுகிறார். எவ்வாறாயினும் UNP- கட்சியானது, இந்த மோதலின் உறைபடிவாய் அமைந்த 1983-ல் தமிழர்களுக்கு எதிரான அழித்தொழிப்புக்களை வளர்ப்பதற்கு நேரடியாகப் பொறுப்பு வகித்தது என்பது மட்டுமல்லாமல், பத்தாண்டுகளுக்கு மேலாக அந்தப்போரை தொடர்ந்து நடத்திவந்தது என்பதும் நினைவுபடுத்தத்தக்கது. சமாதானத்தை நிலைநாட்டுவதாகவும் மக்களது வாழ்க்கைத்தரத்தை உயர்துவதாகவும், UNP-ன் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவதாகவும் உறுதியளித்து குமாரதுங்க 1994- தேர்தலில் வெற்றி பெற்றார். எந்த உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை.

மேலும், சமாதான முயற்சி என்பது IMF- மற்றும் உலக வங்கி கோரியுள்ள தீவிரமான பொருளாதார மறுசீரமைப்போடு நெருக்கமாக பின்னிப்பிணைந்திருக்கிறது. 20- ஆண்டுகள் போருக்குப் பின்னர் பெரு வர்த்தக நிறுவனங்களும் வல்லரசுகளும் இலங்கையை பூகோள மூலதனத்திற்கு பயன்படும் மலிவுகூலி உழைப்பு மேடையாக மாற்றும் பொருட்டு சமாதானத்தை விரும்புகின்றன. இதற்கு முன்னர் குமாரதுங்க தலைமையில் நடைபெற்ற மக்கள் கூட்டணி அரசாங்கம் முன்னெடுத்துவந்த சந்தை சீர்திருத்தங்களை UNF- அரசாங்கமும், விரிவுபடுத்தியிருப்பதால் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமிடையே நிலவுகின்ற சமூக இடைவெளி ஆழமாவதற்கு இட்டுச்சென்றுள்ளது.

UNF- அரசாங்கம் அரசுதுறையை தனியார் உடைமையாக்குவதற்கும், அரசுத்துறையின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதால் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கின்றனர். பொது சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவு வெட்டப்பட்டிருக்கிறது, உரத்திற்கான மானியம் நிறுத்தப்பட்டது ஏழை விவசாயிகளை கடுமையாகப் பாதித்திருக்கிறது. விண்முட்ட உயர்ந்து கொண்டிருக்கும் பணவீக்கத்தால் சமுதாயத்தின் மிகவும் ஏழ்மையான பகுதியினர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசாங்கம் பணக்காரர்களுக்கு வரிசலுகைகளையும், வரிவிலக்குகளையும் தந்திருக்கிறது. அரசாங்க பொது மருத்துவமனைகள் மற்றும் ரயில்வே துறைகளில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களை முறியடிக்கும் வகையில் UNF- பொலீசாரையும் இராணுவத்தையும் திரட்டிவந்தது.

இந்தக் கொள்கைகளை இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் கடைபிடித்து வந்ததால் இலங்கையில் சமூக மற்றும் அரசியல் ரீதியாய் குறித்த நேரத்தில் வெடிக்கும் வெடிகுண்டை உருவாக்கி இருக்கிறது. குமாரதுங்க ஆயினும் அல்லது விக்கிரமசிங்க ஆயினும் சாதாரண உழைக்கும் மக்களின் அபிலாசைகளையும், அடிப்படைத்தேவைகளையும் திருப்திப்படுத்த முடியாது. மக்களிடையே இரண்டு கட்சிகளுக்கும் வளர்ந்துள்ள விரோத மனப்பான்மை, மீண்டும் வகுப்புவாத வெறுப்பை தூண்டவும், போருக்குத் திரும்பவும் ஜேவிபி-ன் ஜனரஞ்சக கிளர்ச்சிப் பேச்சாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நெருக்கடிச் சூழ்நிலையில், விக்கிரமசிங்க மற்றும் UNF உட்பட ஒட்டுமொத்த அரசியல் அமைப்புக்களின் ஆதரவுடன் குமாரதுங்க, நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு அப்பால் சென்று ஆட்சி நடத்த திரும்பி இருக்கிறார், எல்லாவற்றுக்கும் மேலாக அவை அத்தனையும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வழிநடத்தப்படும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved