World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India's Hindu chauvinist-led coalition government calls early election

இந்தியாவின் இந்து குறுகிய மேலாண்மைவாத தலைமையிலான கூட்டணி அரசாங்கம் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு

By Sarath Kumara and Keith Jones
4 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

இந்தியாவின் தற்போதைய பாரதீய ஜனதாக்கட்சி (BJP) தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் ஆலோசனைப்படி இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம், நாடாளுமன்ற பதவிக்காலம் முடிவடைவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னரே பெப்ரவரி 6-ல் நாடாளுமன்றத்தை கலைத்தார். தேர்தல் நடத்துவதற்கு பொறுப்பு வகிக்கும் சுதந்திரமான தேர்தல் கமிஷன் ஏப்ரல் 20-ந்தேதி முதல் மே-10-ந்தேதி வரை நான்கு கட்டங்களில் இந்தியாவின் 670-மில்லியன் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதற்குரிய அறிவிப்புக்களை வெளியிட்டிருக்கிறது. மே-13-ல் தேர்தல் முடிவுகள் முழுவதும் அறிவிக்கப்பட்டுவிடும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஆதிக்கம் செலுத்தும் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா (BJP) முன்கூட்டியே தேர்தல் நடத்துவது சாதகமானது என்று கருதுகிறது. ஏனெனில் சென்ற டிசம்பரில் நடைபெற்ற மாநில சட்டசபைத்தேர்தல்களில் தொடர்ந்து பல்வேறு தோல்விகளை சந்தித்ததால் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் நிலைகுலைந்திருக்கிறது மற்றும் வெளிநாட்டு முதலீடுகள்வரவாலும் சென்ற கோடைக்கால நல்ல பருவமழையால் உருவான வேளாண்மை உற்பத்திப்பெருக்கத்தின் விளைவாலும் தற்போது இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. பாக்கிஸ்தானுடன் நல்ல உறவுகள் ஏற்பட்டிருப்பதை ஒட்டி, இந்தியாவின் பாரம்பரிய புவிசார் அரசியல் அடிப்படையிலான எதிரியை சமாதான முறையில் அணுகுவதற்கு அண்மையில் உருவாகியுள்ள ஒருங்கிணைந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு காரணம் தானே என்று கூறிக்கொள்வதன் மூலம் பொதுமக்களிடையே நிலவுகின்ற உணர்வுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் BJP- நம்புகிறது. ஜனவரி மாத தொடக்கத்தில் இஸ்லாமா பாத்திலிருந்து பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் திரும்பியதும் BJP- தனது தேர்தல் திட்டத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டுசென்றுவிட்டது.

பிஜேபியோ அல்லது காங்கிரசோ உண்மையிலேயே அகில இந்திய கட்சிகள் என்று கூறிக்கொள்ள முடியாது. பல்வேறு பிராந்திய மற்றும் ஜாதி அடிப்படையிலான அரசியல் அமைப்புகளது ஆதரவு இல்லாமல் இந்த இரண்டு கட்சிகளில் எதுவும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற முடியும் என்று நம்பமுடியாது. காங்கிரஸ் இந்தியா சுதந்திரம் பெற்று மூன்று ஆண்டுகள் நீங்கலாக 40- ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. இப்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அது ஒரு தீவிரமான அரசியல் கட்சியாகவே இல்லை. 1980-களின் இறுதியில் காங்கிரஸ் சிதைந்ததைப் பயன்படுத்தி இந்து குறுகியவாத நோக்கை வளர்த்து அதன் மூலம் பிஜேபி அரசியலில் முன்னணிக்கு வந்தது. அந்தக்கட்சிக்கு பெரும்பாலான ஆதரவு வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் இந்தி பேசுகின்ற பகுதிகளிலிருந்துதான் உள்ளது. அதன் தேசிய ஜனநாயக முன்னணியானது அடிக்கடி மாறுகின்ற 20-ற்கு மேற்பட்ட கட்சிகளின் பட்டியலை கொண்டதாகும்.

BJP-ன் பிரதான கூட்டணிக்கட்சிகள் பட்டியலில் பஞ்சாப்பில் சீக்கிய வகுப்புவாத அகாலிதளம், பாசிச, மராட்டியத்திலிருந்து செயல்படும் சிவசேனை (மராட்டிய அரசன் சிவாஜியின் சேனை என்று பொருள்), தனியார்மய கொள்கைகளை ஆதரிப்பதன் காரணமாக உலக வங்கியின் அன்பிற்குரிய கட்சியான, ஆந்திர மாநிலத்தைத் தளமாகக் கொண்ட தெலுங்கு தேசம் கட்சி (TDP), இந்தியாவின் சமூக ஜனநாயக் கட்சியின் மிச்சம்மீதமான ஜனதாதளம் (ஐக்கியம்) மற்றும் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை அடங்கும். அண்மை வாரங்களில் பிஜேபி தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தோடு (AIADMK) தேர்தல் கூட்டணி சேர்ந்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பல தமிழ் நாட்டுக்கட்சிகள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மிக முக்கியமாக திராவிட முன்னேற்றக் கழகம் (DMK). ஒரு காலத்தில் பிரபல திரைப்பட நட்சத்திரமாக இருந்த ஜெயலலிதா தலைமையிலான தமிழ் நாட்டின் AIADMK- அரசாங்கம் சென்ற கோடைக்காலத்தில் அரசாங்க ஊழியர்களின் மிகப்பெரும் வேலைநிறுத்தத்தை மிகக்கொடூரமாக ஒடுக்கியதற்காக இந்தியாவின் வர்த்தக குழுக்கள் அந்த அரசாங்கத்தை மிகப்பெருமளவில் பாராட்டின.

பாரம்பரியமாக, காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முன்னர் உடன்படிக்கை எதுவும் செய்வதை ஒதுக்கிதள்ளி வந்திருக்கிறது. இனி இந்தியாவின் ஆளும் கட்சியென்ற அந்தஸ்தை இயல்பாக பெறமுடியாது என்று தெரிந்து கொண்டதும், பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்ப்பதற்கு காங்கிரசும் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மஹாராஷ்ரத்தில் செயல்படும் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற குழுவான தேசிய காங்கிரஸ்கட்சி (NCP), பீகார் மாநிலத்தின் ராஷ்டிரிய ஜனதாதளம், தமிழ் நாட்டில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் தலைமையிலான அணியில் சேர்ந்து கொண்டன. ஆனால் இதுவரை இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகைகொண்ட உத்திரபிரதேசத்தை ஆண்டுகொண்டிருக்கின்ற சமாஜ்வாதிக்கட்சி மற்றும் இந்தியாவின் முன்னாள் தீண்டப்படாதவர்கள் அல்லது தலித்துக்களின் அரசியல் குரலாக இருப்பதாகக் கூறும் பகுஜன் சமாஜ்கட்சி (BSP) ஆகியவற்றோடு இதுவரை இரண்டு கட்சிகளுமே கூட்டணி சேரும் முயற்சியில் வெற்றி பெறவில்லை. இரண்டு பெரிய கட்சிகளின் தேர்தல் வெற்றிவாய்ப்புகளை முடிவு செய்கிற பெரிய மாகாணம் அது.

ஸ்ராலினிச இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகிய இரண்டும் எந்தவிதமான வெட்கமும் இல்லாமல் காங்கிரஸின் பக்கம் சேர்ந்துவிட்டன. மதச்சார்பற்ற சக்திகளை வளர்ப்பது என்ற பெயரால் ஸ்ராலினிசக் கட்சிகள் தங்களது பிரதான குறிக்கோள் பிஜேபி மற்றும் அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள இந்து குறுகிய மேலாண்மைவாத கட்சிகளை முறியடிப்பதுதான் என்றும் சூழ்நிலைகள் அனுமதிக்குமானால் காங்கிரஸ் தலைமையில் சிறுபான்மை அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு தங்களது ஆதரவை தரப்போவதாகவும் அறிவித்துள்ளன.

தொழிலாள வர்க்கத்தின் மீது புதிய தாக்குதலைத் தொடுக்க பிஜேபி தயாராகிறது.

பிஜேபி இந்திய பெரு வர்த்தக நிறுவனங்களின் பிரதான பிரிவின் ஆதரவை நம்பி உள்ளது, இந்த வகையில் தன்னை தனியார்மயமாக்கல், கட்டுப்பாட்டை தளர்த்தல் மற்றும் இதர தொழிலாளர்களுக்கு விரோதமான சீர்திருத்தங்களில மிகுந்த உறுதிகொண்டதாக காட்டிக்கொள்கிறது மற்றும் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே மிக தீவிரமான மூலோபாய ஒத்துழைப்புக்களை உருவாக்குவதிலும் உறுதி கொண்டிருக்கிறது. எனவே BJP-ன் பக்கம் இந்தியாவின் கம்பனி ஆதிக்கக்குழுக்கள் திரண்டு கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரத்திற்கு குறைவில்லை. India out look கூறியுள்ளபடி, ''காங்கிரஸ் கட்சி பணத்தட்டுப்பாட்டில் இருக்கிறது, ஆனால் பிஜேபி-க்கு அந்தத்தட்டுப்பாடு எதுவும் இல்லை'' இப்படி BJP- பொதுச்செயலாளர் ஒருவர் சொல்லுகிறார், "இது மிக எளிதான உண்மை நிலவரமாகும். எங்களுக்கு 10-கோடி ரூபாய் ($US2.2 million) தருகின்ற ஒரு பெரிய கம்பெனி காங்கிரஸிற்கு 2-கோடி ரூபாயை விட்டெறியும் அது இப்படித்தான் நடக்கிறது.''

1999-ல் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருந்த NDA- அரசாங்கம் தேசிய அளவில் நெறிமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை சீர்குலைப்பதை விரைவுபடுத்தியது, இது 1991-ல் காங்கிரசால் தொடங்கப்பட்டது. தனியார் மயமாக்கல் திட்டங்களை முன்னெடுத்தது, காப்பீட்டுத் (இன்சூரன்ஸ்) துறையில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதித்தது, பல்வேறு சிறப்பு பொருளாதார பிராந்தியங்களை அமைத்தது, அங்கு பாரம்பரிய தொழிலாளர் மற்றும் இதர சட்ட நெறிமுறைகள் செல்லுபடியாகாது. மிக முக்கியமாக நீண்டகாலமாக பெரு வர்த்தக் குழுக்கள் கோரிவந்த தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்களை செய்யத் தொடங்கியது. இந்த மாற்றங்கள் கம்பெனிகள் தொழிலாளர்களை கதவடைப்பு செய்வதற்கும் தொழிற்சாலைகளை மூடுவதற்கும் ஒப்பந்த தொழிலாளர்களை பயன்படுத்துவதற்கும் நிலவுகின்ற சட்டத்தடைகளை நீக்குகின்றன.

BJP- தலைமையிலான அரசாங்கம் வரலாறு காணாத அளவிற்கு இராணுவ வலிமையை பெருக்கிக்கொண்டு அதே நேரத்தில் வாஷிங்டன் உடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதற்கு மிகத்தீவிரமாக முயன்று வருகிறது. புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதம் மீதான போரை" -ஆப்கானிஸ்தானை அமெரிக்கா முறியடித்ததிலிருந்து அதனது சொந்த ஏவுகணை தற்காப்பு முயற்சிவரை அனைத்து நடவடிக்கைகளிலும் அமெரிக்காவை ஆதரித்து நிற்கிறது, ஈராக்கை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள அமெரிக்கத் துருப்புக்களுக்கு உதவும் வகையில் தனது துருப்புக்களை அனுப்புவது பற்றிக்கூட சற்று ஊசலாட்ட நிலையில் இருந்தது.

அமெரிக்க சிந்தனைக் குழாத்தினருடன் தொடர்புகள் வைத்திருக்கும் ஒரு முக்கிய இந்திய அரசியல் விமர்சகரான தீபக் லால், ஜனவரி 28, Business Standard, இதழில், பிஜேபி-ன் வெற்றி "அவசரமாகத் தேவைப்படும் இரண்டாம கட்ட பொருளாதார சீர்திருத்தங்களை நிறைவேற்ற" "துடிப்பாகவும் நேரடியாகவும் செல்லும் ஒரு தேசிய அரசியல் ஒருங்கிசைவை" பிரதிநிதித்துவம் செய்யும் என்று எழுதினார். பின்னர் அவர் "முன்னேறிய தொழில் நுட்பம் இந்தியாவிற்குள் நுழைவதற்கு (குறிப்பாக அமெரிக்கா போட்டியிட முடியாத அளவுக்கு முன்னிலை வகிக்கும் விண்வெளி மற்றும் ஆயுதத்தளவாடத் துறையில்) கதவு திறந்துவிட்டிருக்கிறது" அது எனக் கூறி, பிஜேபி ஆட்சிக்கு வாஷிங்டனின் ஊக்குவிப்புள்ளது என்று புகழ்ந்தார்.

BJP-தேர்தல் பிரச்சாரம் பொருளாதார வளர்ச்சியை இப்போது வலியுறுத்தி வருவது, 1999 அகில இந்திய தேர்தலிலும் 2002-டிசம்பர் குஜராத் மாநில தேர்தலிலும் அக்கட்சி மேற்கொண்ட அணுகுமுறையிலிருந்து கடுமையாய் வேறுபட்டது. 1999-ல் BJP- பாகிஸ்தானுக்கு எதிரான குறுகிய மேலாண்மை வாதத்தையே பிரச்சாரத்தின் உயிர்நாடியாக கொண்டிருந்தது. இந்தியாவை அணுவல்லரசு என்று அறிவித்த அதன் முடிவு, பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீரின் கார்கில் பிராந்தியத்தில் நுழைந்ததை முறியடித்தமை இவற்றை மகத்தான இந்திய வெற்றி என்று பிரகடனப்படுத்தியது. குஜராத்தில் 2002-பெப்ரவரியில் நடைபெற்ற வகுப்பு கலவரங்களுக்கு காரணம் பாகிஸ்தானும் இந்தியாவிலுள்ள சிறுபான்மை முஸ்லீம் சமுதாயமும்தான் என்று பிஜேபி குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் நடத்தி மீண்டும் வெற்றி பெற்றது. அந்தக் கலவரம் மாநில பிஜேபி அரசாங்கம் தூண்டிவிட்டதாகும், அதில் முஸ்லீம்கள் முக்கியமாக பாதிக்கப்பட்டனர்.

இப்படி BJP-யின் ஆவேச உரைகளில் மாற்றம் ஏற்பட்டதைக் குறித்து சில விமர்சகர்கள் BJP "மிதவாதப்போக்கிற்கு சென்று கொண்டிருப்பதாக" கூறுகின்றனர். இது முட்டாள் தனமான கருத்தாகும்.

BJP- தனது இந்து குறுகிய மேலாண்மைவாத செயல் பட்டியலை வலியுறுத்தாமல் இருப்பதற்கு காரணம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் முதலாளித்துவத்தின் சமூகப் பொருளாதார வேலைத் திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவோம் என பெரு வர்த்தக நிறுவனங்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்குத்தான். ஏனென்றால் BJP பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொண்ட குறுகிய நோக்க இயக்த்திற்கு முரணாக அராசங்கத்தின் கணிப்பு அமைந்திருக்கிறது. எனவேதான் இந்திய செல்வந்த தட்டினர் பாகிஸ்தானுடனான தங்களது உறவில் மாற்றத்தை செய்ய முயற்சித்து வரும் மூலோபாய மாற்றம் -2002-ல் ஒட்டுமொத்த போர் என்ற மிரட்டலால் பாகிஸ்தானை பணியவைக்க இயலாமை மற்றும் இந்தியா தலைமையில் இந்த துணைக்கண்டம் முழுவதிலும் சுதந்திர வர்த்தக அணியை உருவாக்க முடியும் என்ற அதன் கணிப்பு -இவற்றிலிருந்து பிறந்த மாற்றம்- பிஜேபி அதன் பிரச்சாரத்தின் குவிமையமாக இருந்த பாகிஸ்தான் எதிர்ப்பு குறுகிய மேலாண்மை வாதத்தை ஊடறுத்துச் செல்லும்.

அப்படியிருந்தாலும் பிஜேபி தனது நச்சுத்தன்மை வாய்ந்த இந்து குறுகிய மேலாண்மை வாத கொள்கை பரப்புதலை நீட்டி முழக்கவில்லையே தவிர அடக்கி வாசித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஏனென்றால் அந்தக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் பெரும்பாலும் இந்து தேசியவாத RSS ( ராஷ்ட்ரிய சுய சேவக் சங்க்) அமைப்பு அதன் துணை அமைப்புக்களிலிருந்து வருபவர்கள். எடுத்துக்காட்டாக BJP பொதுச் செயலாளரின் பிரமோத் மஹாஜன் தனது கட்சி பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துக் கோயிலைக் கட்டவேண்டும் என்ற பிரச்சனையைத் தொடர்ந்து எழுப்பும் என்று குறிப்பிட்டார். 1992-ல் இந்து வெறியர்கள் பாபர் மசூதியை இடித்ததால் 1947-பிரிவினைக்கு பின்னர் படுமோசமான வகுப்புக்கலவரங்கள் வெடித்தன. ''ஒரு மகத்தான கோயில் அயோத்தியில் கட்டப்படும் வரை ராமர் கோயில் பிரச்சனை தேர்தல்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தொடர்ந்து ஒரு பிரச்சனையாகவே இருந்து வரும்'' என்று அவர் பெப்ரவரி 11-ல் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

BJP- அடிக்கடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டில் பிறந்தவர் என்ற பிரச்சனையை எழுப்பிக்கொண்டே இருக்கிறது மற்றும் மறைமுகமாக அவரது கத்தோலிக்க மத நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கி சோனியா காந்தியின் பெற்றோர்கள் வெளிநாட்டவர் என்பதால் அவர் பிரதமராவதற்கு தகுதியில்லாதவர் என்றும் கூறி வருகிறார்கள்.

BJP-ன் தேர்தல் இயக்கம் வெற்றிபெற தவறுமானால் அக்கட்சி தற்போது இஸ்லாமாபாத்துடன் நடைபெற்றவரும் சமாதான பேச்சுவார்த்தைகளைப் பற்றி பொருட்படுத்தாமல் மீண்டும் தனது இந்து குறுகிய மேலாண்மைவாத பாக்கிஸ்தான் எதிர்ப்புக்கொள்கைகளுக்கு திரும்பிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

காங்கிரசின் சிதைவு

எதிர்வரும் தேர்தலில் இன்னொரு முக்கிய போட்டியாளரான காங்கிரஸ் கட்சி அழுகும் நிலையில் இழுக்கிறது. கடந்த அரை நூற்றண்டாக, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் நேரு - காந்தி குடும்பத்தின் நல்வாய்ப்புக்களில் இருந்து அதிகரித்த அளவில் பிரிக்க முடியாதிருந்தது. காங்கிரஸ் தலைமைக்கான சோனியா காந்தியின் ஒரே ஒரு தகுதி அவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் விதவை மனைவி, அவரும் கூட பிரதமர் இந்திரா காந்தியின் மகனும் நேருவின் பேரனும் ஆவார்.

காங்கிரஸ் கட்சியின் சிதைவு இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் தேசிய வளர்ச்சி திட்ட பொறிவில் அடங்கியிருக்கிறது. இந்தியாவின் ஆளும் செல்வந்தத் தட்டினர் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தை உயர்ந்த காப்பு வரித்தடுப்புச்சுவர்கள், இறக்குமதிக்குப் பதிலாக உள்நாட்டிலேயே முக்கிய பண்டங்களைத் தயாரிப்பது, முக்கிய தொழில் துறைகளில் அரசுடைமை மற்றும் சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகள் ஆகியவை மூலம் தடுத்து வந்தது. 1991-ல் இந்தியாவிற்கு வெளிச்செலாவணி நெருக்கடி ஏற்பட்ட போது, அன்றைய நரசிம்மராவின் காங்கிரஸ் அரசாங்கம் வரலாற்று அடிப்படையிலான தேசிய வளர்ச்சி மூலோபாயத்தை அடிப்படையிலேயே கைவிட்டு, உலக முதலாளித்துவ சந்தையில் முழுமையாக தன்னை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து அடிப்படை மாற்றத்தை செய்தது. இதன் மூலம் ஏற்றுமதி வளர்ச்சி அடிப்படிப்படையிலான மூலோபாயம் உருவாக்கப்பட்டது, அதன் கீழ், இந்தியாவின் மிகப்பரவலான குறைந்த ஊதிய உழைப்பு வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் இந்திய முதலீட்டாளர்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களோடு சேர்ந்து கொண்டனர்.

சென்ற டிசம்பரில் மாநில தேர்தல் தோல்விகளால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் ஒரு தேர்தல் மூலோபாயத்தைத் தேடிவந்தது. தனது தொண்டர்களின் உற்சாகத்தை அதிகரிப்பதற்காக மிகுந்த பரபரப்போடு சோனியா காந்தியின் புதல்வி பிரியங்காவும் புதல்வன் ராகுல் காந்தியும் காங்கிரஸின் உறுப்பினர்களாக ஆகிவிட்டதாக மிகுந்த ஆர்வத்தோடு அறிவித்தது. ''காந்தியின் குழந்தைகள் தங்களது கிழடுதட்டிய கட்சிக்கு ஒரு கவர்ச்சியை தருவார்களே தவிர அதன் வெற்றி வாய்ப்புக்களுக்கு உயிரூட்ட முடியாது'' என்று டைம்ஸ் ஆப் இந்தியா எழுதியிருக்கிறது.

மிச்சமீதமிருக்கும் இந்தியாவின் தேசிய ரீதியில் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தையும் குறைந்தபட்ச சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வெளிநாட்டு, உள்நாட்டு முதலீடுகளுக்கு சாதகமாக ரத்து செய்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி பிஜேபி- உடன் முழுமையாக கருத்து ஒற்றுமை கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியையும் பிரித்துப்பார்க்க முடியாத அளவிற்கு இந்த ஒற்றுமை நிலவுகிறது. காங்கிரஸ் தலைவரான எஸ். ஜெயபால் ரெட்டி ப்ரென்ட் லைன் பத்திரிகையிடம் கூறினார், ''BJP -க்கு இணையான முழக்கத்தை நாங்களும் இறுதியாக உருவாக்குவோம். ஒரே இரவில் பயனுள்ள முழக்கத்தை நீங்கள் உருவாக்கிவிட முடியாது''

காங்கிரஸ் கட்சி பொருளாதார சீர்திருத்தங்களால் ஏற்பட்டுள்ள பொதுமக்களது அதிருப்தியை பயன்படுத்திக்கொள்ள முயலுமென்று தெரிய வருகிறது. BJP- மற்றும் இந்திய முதலாளிகள் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை வெகுவாக புகழ்ந்து கொண்டிருக்கின்றனர். ''இந்தியா ஒளிர்கிறது'' என்ற ஆடம்பரமான விளம்பரங்கள் மிகப்பெருமளவில் தேர்தலையொட்டி பிரசுரிக்கப்படுகின்றன -உண்மையில் பொருளாதார சீர்திருத்தங்களால் ஏராளமான கதவடைப்புக்கள், தொழிற்சாலைகள் மூடல், கல்வி மற்றும் சுகாதார வசதிகளில் மேலும் தனியார்மயம் ஆகிய நடவடிக்கைகளால் சமூக துருவமுனைப்படல் வளர்ந்து கொண்டு வருகின்றது.

காங்கிரஸ் தேர்தல் ஆய்வாளர்கள் பொதுமக்களிடையே அடித்தளத்தில் மிகப்பெரிய அதிருப்தி நிலவிக்கொண்டிருப்பதை அறிந்திருக்கின்றனர், பெருகிக்கொண்டுள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிப்பதற்கு வாஜ்பாய் அரசாங்கத்தால் இயலாதநிலை மற்றும் கிராமப்பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு அதனால் கவனிக்க முடியாமை" இந்தியா முழுவதிலும் மிக முக்கியமான பிரச்சனையாக உருவாகி வருகின்றன, என்று Hindu எழுதியிருக்கிறது.

அதே நேரத்தில் பெரு வர்த்தகர்களுடன் அந்நியப்படுத்திக்கொள்ளவும் காங்கிரஸ் விரும்பவில்லை. எனவேதான் பிஜேபி-ன் பொருளாதார சீர்திருத்தங்களை கண்டிப்பதில் அது மிக கவனமாக செயல்பட்டுவருகிறது. இதற்கு முன்னர் ''மனித நேயத்துடன் சீர்திருத்தம்'' என்ற முழக்கத்தை காங்கிரஸ் எழுப்ப முயன்றது. இந்த வகையில் காங்கிரசோடு இணைந்துள்ள தொழிற்சங்க கூட்டமைப்பான INTUC- அரசாங்கத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கு எந்தவிதமான உரிமையுமில்லை என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பிற்கெதிராக சென்ற மாதம் நடைபெற்ற ஒருநாள் பொதுவேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றம் பயன் பயன்படுத்தியது போன்ற சொற்களை சேர்த்து வேலை நிறுத்தங்கள் இந்திய பொருளாதாரத்திற்கு கடுமையான சேதத்தை உண்டாக்கிவிட்டதாக INTUC அறிக்கைவிட்டு தான் புறக்கணித்ததை நியாயப்படுத்தியது.

காங்கிரஸ் தன்னை மதச்சார்பின்மைக்கு தலைமை வகிப்பதாகவும் கூட சித்தரிக்க முயலும். ஆயினும், காங்கிரஸ் சிதையத் தொடங்கியதே இன, மத, பிளவுகளை பயன்படுத்திக்கொள்ள அக்கட்சியின் தொடர்ந்த முயற்சிகளுடனும் இந்து குறுகி மேலாண்மைவாதத்தின் பக்கம் அதிகம் சாய்ந்ததுடனும் இணைந்திருக்கிறது. குஜராத், தேர்தலில் காங்கிரஸ் கட்சி நடத்திய தேர்தல் பிரச்சாரத்தை இந்திய பத்திரிகைகளில் பெரும்பாலானவை. ''மிதமான இந்துத்துவ'' (இந்து மேலாதிக்கவாதம்) போக்கு என்று எள்ளி நகையாடின. எனவே BJP- அதன் தலைவர் மீது வகுப்புவாத அடிப்படையில் தாக்குதல் தொடுத்தபோது காங்கிரஸ் கட்சி உறுதியாக நிற்கவில்லை. சோனியா காந்தியை பிரதமாருக்கான வேட்பாளர் என்று முறையாக அறிவிக்காது தவிர்த்து இருக்கிறது. ''தேர்தல் முடிவுகள் தெரிந்த பின்னர்தான் கூட்டணித்தலைவர் முடிவு செய்யப்படுவார். ஒன்றுபட்ட எதிர்க்கட்சிக்கு தலைவர் யார் என்று நாங்கள் இப்போது அறிவிக்கப் போவதில்லை.'' என்று காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

இரண்டு பெரிய கட்சிகளுமே -ஒரு காலத்தில் பொதுமக்கள் ஆதரவை அதிகம் பெற்றிருந்த காங்கிரஸ் மற்றும் ஒரு இந்து மேலாதிக்க வாத கட்சியான பிஜேபி இவை இரண்டுமே தொழிலாள வர்க்கத்திற்கும் சோசலிசத்துக்கும் மிகக்கடுமையான தீவிரமான எதிரிகளாக செயல்பட்டு, இந்திய உழைக்கும் மக்களிடமிருந்து பெருமளவிற்கு விலகிச்சென்று கொண்டிருக்கின்றன. இந்த அந்நியப்படலின் பின்னால் மிகப்பெரும்பாலான மக்களது அத்தியாவசிய சமுதாய தேவைகளை நிறைவேற்றுதற்கு அவற்றின் இயலாமை இருக்கிறது. இந்திய மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தினசரி ஒரு டாலருக்கும் குறைந்த வருமானத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தினசரி 350-கிராம் உணவு தானியங்கள்தான் ஒரு தனிமனிதனுக்கு கிடைக்கக் கூடியாக இருக்கின்றன, அரசாங்க மதிப்பீட்டின் படி தினசரி ஒரு மனிதனுக்கு 500-கிராம் உணவு தானியம் தேவை. ஆசியா டைம்ஸ் வலைதளம் குறிப்பிட்டிருப்பதைப்போல், இந்தியக் "குழந்தைகளில் பாதிப்பேர் சத்தூட்டம் குறைந்தவர்கள், மற்றும் 350-மில்லியன் பேர் இரவில் பசியோடு உறங்கச் செல்கின்றனர். இந்திய மக்கள் 100-கோடி பேரில் மூன்றில் ஒரு பகுதியினர் கல்வியறிவு இல்லாதவர்கள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பொருள்கள் உற்பத்தியளவில் (GDP) 1.9- சதவீதத்தை மட்டுமே இந்தியா கல்விக்காக செலவிடுகிறது, இது பெரும்பாலான கிழக்காசிய நாடுகள் கல்விக்கு செலவிடுவதில் பாதித்தொகைதான்."

இந்த சூழ்நிலைகளில் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் "மதச்சார்பற்ற" காங்கிரசோடு சேர்ந்திருக்கின்றன. தீங்குகளில் இது குறைந்த தீங்கு என்று அவர்கள் கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சி தனியார்மயம், பொருளாதார கட்டுப்பாடுகள் தளர்வு, வேளாண்மை விலை ஆதரவுகள் நீக்கம், பொது சேவைகள் ஆகியவற்றைத் தகர்க்க ஆதரவு கொடுப்பதை மட்டுப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துகொண்டிருக்கின்றன. மேற்கு வங்காளத்தில் சிபிஎம் முதலமைச்சராக பணியாற்றி வந்த ஜோதிபாசுதாமே சந்தை ஆதரவு சீர்திருத்தங்களை செயல்படுத்தியவர். அண்மை மாதங்களில் அவர் இதர CPI(M) தலைவர்களோடு சேர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டுக்கொண்டுள்ள தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தங்களை கைவிட வேண்டுமென்றும் உற்பத்திக்கு உத்திரவாதப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார், "மக்களது நலன்களை பாதுகாப்பதற்கு பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குவதற்கு" காங்கிரஸ் முன்வர வேண்டும் என்று இந்த வாரம் வலியுறுத்திக் கூறினார்.

CPI- மற்றும் CPI(M)- இரண்டும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சி அணியில் அதிகாரபூர்வமாக இடம்பெற்றது. நடுநிலையோடு செயல்படுவதைப்போன்ற பாசாங்கைக் காட்ட முடியும். ஏனென்றால் அவ்விரு கட்சிகளும் தங்களது செல்வாக்கு நிறைந்துள்ள கேரளம், மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் காங்கிரஸ் அவர்களுக்கு பிரதான போட்டிக்கட்சியாகும். ஆனால் ஸ்ராலினிஸ்டுகள் காங்கிரசுடன் தங்கள் தேர்தல் மூலோபாயத்தை நெருக்கமாக ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நோக்கத்தை சிபிஐ(எம்)-ன் பேச்சாளரான சீதாராம் எச்சூரி விளக்கும்போது, "வகுப்புவாத சக்திகளுக்கு உதவும் வகையில் மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குகள் பிரிவதை மட்டுப்படுத்துவதே" நோக்கமென்று விளக்கினார்.

தொழிலாள வர்க்கத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் கடும்பகை அமைப்பு BJP என்பதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை. ஆனால் கடந்த 20-ஆண்டுகளுக்கு மேலாக அந்தக்கட்சி வளர்ந்து வருவது சுட்டிக்காட்டுகின்ற அம்சம் என்னவென்றால் இந்திய CPI மற்றும் CPI(M) ஆகிய கட்சிகளின் முதலாளித்துவ ஆதரவு அரசியலிருந்து தொழிலாள வர்க்கம் வெட்டி முறித்துக்கொண்டு வந்துவிட வேண்டும் என்ற அவசரத்தை உணர்த்துகின்றன. இந்தக் கட்சிகள் சோசலிச சொற்றொடர்களை இந்திய தேசியவாதத்தோடு இணைத்துவிட்டிருப்பதுடன், இந்திய முதிலாளித்துவக் கட்சிகளோடு ஒத்துழைத்து வருகின்றன. முதலில் தேசிய முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை கடைப்பிடித்தன. இப்போது வெட்கமில்லாமல் தொழிலாளர்களுக்கு எதிரான ஏற்றுமதி அடிப்படையிலமைந்த வளர்ச்சி மூலோபாயத்தை ஆதரிக்கின்றன.

Top of page