:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு
Iran: Elections show political bankruptcy of the "reformers"
ஈரான்:
''சீர்திருத்தவாதிகளின்'' அரசியல் திவாலைக் காட்டும் தேர்தல்கள்
By Ulrich Rippert
25 February 2004
Back to screen
version
கடந்த வெள்ளியன்று நடைபெற்ற ஈரான் நாடாளுமன்ற தேர்தலின் மிக முக்கியமான முடிவு,
ஜனாதிபதி முஹமது கட்டாமியை சுற்றியுள்ள சீர்திருத்தவாதிகள் என்று அழைக்கப்படுபவர்களின் முழுத்தோல்வியைத்தான்
காட்டுகிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாமி மிகப்பெரும்பான்மையோடு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏனென்றால் ஈரான்
மக்களில் பெரும்பாலான பிரிவினர் முல்லாக்கள், மதத்தலைவர்களது பிற்போக்குத்தனமான ஆட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை.
எவ்வாறாயினும், எந்தக்கட்டத்திலும் அவரது அரசாங்கம் அரசு அதிகாரத்தின் அனைத்து நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும்
புரவலர்கள் மன்றம் (Council of Guardians)
என்ற தேர்ந்தெடுக்கப்படாத அமைப்பில் இடம்பெற்றிருக்கும் பழமைவாதிகளை கடுமையாக எதிர்கொள்ளவும் ஜனநாயக
உரிமைகளைப் பாதுகாக்கவும் தயாரிப்பு செய்திருக்கவில்லை.
அதற்கு மாறாக மத கடுங்கோட்பாட்டாளர்களுக்கு மக்களிடையே செல்வாக்கு குறைவாக
கொண்டிருக்கின்றனர் ஆனால் பொருளாதாரத்தின் பெரும்பகுதி, அரசு எந்திரம், நீதித்துறை மற்றும் தேசிய
தொலைக்காட்சி அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவர்கள் தங்களது ஒடுக்குமுறை ஆட்சியை விரிவுபடுத்தி உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில் ஒரு டஜனுக்கு மேற்பட்ட செய்தி பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டது மற்றும் அரசியல்
எதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். துணை இராணுவக் குழுக்கள் வேலை நிறுத்தங்கள் மற்றும் கண்டனப்பேரணிகளில் கலந்து
கொண்டவர்களை அச்சுறுத்தி பணியவைத்தனர். செமிட்டிச எதிர்ப்பு கிளப்புவதற்காக நாடக விசாரணைகள் நடத்தப்பட்டன.
இந்த அழுத்தங்களின் காரணமாக கட்டாமி மற்றும் அவரது குழுவினரான சீர்திருத்தவாதிகள்
நிரந்தரமாக பின்வாங்கி நின்றனர். ''அமைதியையும் ஒழுங்கையும்'', பேணிக்காக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு
வேண்டுகோள் விடுப்பதோடு தங்களது பணியை முடித்துக்கொண்டனர். அதே நேரத்தில் சமூகநிலை தொடர்ந்து சீர்குலைந்து
கொண்டே வந்தது. வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு பெருகிக்கொண்டே வந்தது. இந்தக் குழுவை (கன்னையை)
ஆட்சியில் அமர்த்தியவர்கள் ஆரம்பத்தில் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்து மக்களிடையே படிப்படியாக விரக்தி உருவாயிற்று
இந்த சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பு அடிப்படையில் சென்ற வியாழக்கிழமை நடைபெற்ற
தேர்தல்களில் மதகுருக்களின் பழமைவாதப்பிரிவு (கன்னை) பெரும்பான்மை பலம் பெற்றது. சீர்திருத்தவாதிகள் இதற்கு
முன்னர் நாடாளுமன்றத்தில் 290 இடங்களைப் பெற்றிருந்த அது இப்போது 25 ஆக குறைந்துவிட்டது.
தேர்தல் இரவில் மதத்தலைவர் அயத்துல்லா அலி காமேனி
(Ayatollah Ali Khamenei)
மிக பெருமையோடு ''மக்கள் தேர்தல்களில் வென்றுவிட்டார்கள்'' என்று கூறினார். இது உண்மைக்கு முற்றிலும்
மாறானது. கடந்த வாரங்களில் மத ஆட்சியாளர்களின் கருத்துக்களுக்கு சற்று வேறுபட்ட கருத்து கூறியவர்கள்கூட
கொடூரமாக ஒடுக்கப்பட்டனர். தேர்தல்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் எதிர்கட்சிக்காரர்களின் செல்வாக்கு மிக்க
இரண்டு செய்திப்பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு முன்னர் கூட புரவலர்கள் சபையில் சீர்திருத்தவாதிகளின்
2300-க்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு தடைவிதித்தது. இதைக்கண்டித்து மேலும் 1000-சீர்திருத்தவாதிகள் தேர்தல்
போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர்.
தலைநகர் டெஹ்ரான் பிராந்தியத்தில் தகுதியுள்ள 8-மில்லியன் வாக்காளர்களில் 2-மில்லியன்
வாக்காளர்கள் மட்டுமே வாக்குப்பதிவில் கலந்து கொண்டனர். இஸ்லாமிய குடியரசு 1979ம் ஆண்டு நிறுவப்பட்டதற்குப்
பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் தேசிய சராசரி அதன் மிகக் குறைந்த மட்டத்தை எட்டியது. நான்கு ஆண்டுகளுக்கு
முன்னர் 67.4-சதவீத வாக்குகள் பதிவாயின, தற்போது 50.5-சதவீத வாக்குகளாக அவை வீழ்ச்சியடைந்துவிட்டன.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் அடுத்து உடனடியாகவே காமேனி மேலும் அரசு ஒடுக்குமுறை
நடவடிக்கைகளை அறிவித்தார். மிகப் பெரும்பாலான சீர்திருத்த நோக்கம் கொண்ட எம்.பி-க்கள்
நாடாளுமன்றத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டதை எடுத்துக் கொண்டால், புரவலர்கள் சபை, புதிதாக
தேர்த்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்றம் "இஸ்லாத்தை வலுப்படுத்துவதில் ஊன்றி கவனம் செலுத்தும்" மற்றும்
"பொதுவாழ்வில் மத நம்பிக்கையையும் தார்மீக ஒழுக்கத்தையும் வலியுறுத்தும்'' வகையில் தீர்த்துவிட்டது என்று காமேனி
அறிவித்தார்.
ஜனநாயகத்திற்கு புறம்பாக இறுமாப்போடு மதத்தலைவர்கள் செயல்பட்டு வருவதாலும்
சீர்திருத்தவாதிகள் கோழைத்தனமாக பின்வாங்கி சென்றதாலும், ஆத்திரமுற்ற பொதுமக்கள் வாரக்கடைசியில் ஈரான்
நகரங்கள் பலவற்றில் தன்னியல்பாக முன்வந்து கண்டனப்பேரணிகளை நடத்தினர். பரந்த இயக்கம் எதுவும் தோன்றிவிடாது
தடுக்கும் நோக்கில் போலீசாரும், இணை இராணுவ துருப்புக்களும் ஆர்ப்பாட்டக்காரர்களை கொடூரமாகத் தாக்கினர்.
தென்மேற்கு மாகாணமான குஸஸ்தானிலுள்ள ஐசே தொகுதியில் உள்ளூர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக எழுந்த
மோதல்களில் குறைந்த பட்சம் நான்கு பேர் கொல்லப்பட்டனர். அங்கு நடைபெற்ற தேர்தல் ஒரு மோசடியாகப்
பார்க்கப்பட்டது.
அரசாங்க வட்டாரங்கள் தந்துள்ள தகவல்களின்படி ஏமாற்றமடைந்த வாக்காளர்கள்
அரசாங்க அலுவலகங்களை, நகர மண்டபத்தை, நீதிமன்ற கட்டிடத்தை மற்றும் வங்கிகளைத் தாக்கி இருந்தனர்.
அரசாங்க வாகனங்களை தீ வைத்துக் கொளுத்தினர். பாதுகாப்பு படைகள் ஆர்பாட்டகாரர்களை நோக்கி சுட்டன.
கண்ணீர்புகை குண்டுகளையும் வெடித்தன என்று
Süddeutsche Zeitung பத்திரிகை செய்தி வெளியிட்டது.
ஷிராஜிற்கு தெற்கில் சுமார் 100-கி.மீ. தொலைவிலுள்ள பிருஸ்ஸாபாத் நகரில் ஒரு போலீஸ்காரர் உட்பட மேலும்
நான்கு பேர் கொல்லப்பட்டனர். ஆவேசம் கொண்ட ஒரு கூட்டம் வாக்குகள் மறுஎண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று
கோரியது.
மயிலாசனம் கவிழ்க்கப்பட்ட 25 ஆண்டுகளுக்கு பின்னர்
இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் 25-ஆண்டுகள் கடந்து விட்டன, இந்த 25-ஆண்டுகள்
தொடர்பாக இறுதிநிலைக் கணக்கைப்பார்த்தால், இந்த தேர்தல்களில் சீர்திருத்தக்காரர்களின் தோல்வி முழுமையாக
தெளிவாகிவிட்டது, அதில் முக்கியமான அரசியல் படிப்பினைகள் அடங்கியுள்ளன.
மக்களது வெறுப்பிற்கு இலக்கான மன்னர் முகமது ரெசா பஹ்லவியின், ஷா ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு
அடிப்படையாக அமைந்த புரட்சிகர எழுச்சியியே அடிப்படை முரண்பாட்டால் பண்பிடப்பட்டது. சமுதாயத்தின் எதிர்ப்பையும்,
புரட்சிப்போக்குகளையும் உருவாக்குகின்ற மூலாதாரம், தொழிற்சாலைகள், தொழிற்சாலை மையங்கள் மற்றும் வறுமைபீடித்த
விவசாய பிராந்தியங்களில் இருந்தபோது அந்த இயக்கம் ஆயத்துல்லா கொமேனியை சுற்றியிருந்த மதகுருமார்கள் குழுவால்
நடத்தப்பட்டது. சமுதாய அளவில் சோசலிச மாற்று எதுவும் இல்லாததால் கொமேனி அரசியலில் உயர்ந்து நின்றார்.
அவரது சொந்தபலம் அல்லது அரசியல் ஞானத்தால் அந்த பதவி அவருக்கு கிடைக்கவில்லை. கம்யூனிச டுடே
கட்சி மாஸ்கோவை சார்ந்திருந்தது. மற்றும் அதேபோல மக்கள் முஜாஹிதீன் அமைப்பு கொமேனியை ஆதரித்தது அல்லது
"இஸ்லாமிய குடியரசின்" ஆரம்ப ஜனாதிபதி பானி ஸதர் ''இஸ்லாமிய சோசலிசம்'' என்று கூறிக்கொண்டதிலும் எந்தவிதமான
மாற்றுத்திட்டமும் இல்லை.
அப்படியிருந்தும் கொமேனி முதலாளித்துவ தேசிய நலன்களை காப்பதில் மிக தீவிரமாக
எந்தவிதமான வளைந்து கொடுப்பும் இல்லாமல் செயல்பட்டுவந்தார். பல்லாயிரக்கணக்கான இடது சாரியினரைக் கொன்று
குவித்தார். தொழிலாள வர்க்கம் எழுப்பிய சுதந்திரமான கிளர்ச்சிகளை இரத்தக்களரி மூலம் ஒடுக்கினார். கலாச்சார
தன்னாட்சி (குர்து மக்களால் எடுக்கப்பட்ட) முயற்சியை கொடூரமாக ஒடுக்கினார். எண்ணெய் பெருநிறுவனங்கள் உட்பட
முக்கிய தொழிற்சாலைகளையும், வங்கிகளையும், அரசுடமையாக்கினார். தேசிய பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக
மூடிவிட்டார். ஓரளவிற்கு உள் கட்டமைப்பை உருவாக்கினார் அதுவும் மிக முக்கியமாக கல்வியில் பரந்த தட்டு மக்களுக்கு
பயன்படுகின்ற வகையில் அதைச்செய்தார்.
இஸ்லாமிய குடியரசின் தொடக்கத்திலிருந்தே, ஆளும் வட்டாரங்களிடையே பொருளாதார
வாழ்வில் அரசின் பாத்திரம் பற்றியும் உலக பொருளாதாரத்திற்கு நாட்டை திறந்து விடுவது பற்றியதிலும் கடுமையான
மோதல்கள் நிலவின. ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையே நடைபெற்ற போர் இந்த மோதல்களை சில ஆண்டுகளுக்கு
தள்ளிப்போட்டது. இந்தப் போரினால் நாசமடைந்துவிட்ட பொருளாதார நிலைக்குப் பின்னர் இந்த மோதல்கள் மீண்டும்
தோன்றின.
ஈரானின் குழப்பத்திற்கும், ஸ்திரமற்ற நிலைக்கும் அடிப்படையாக அமைந்தது இன்றைய
ஈரானிய முதலாளித்துவ வர்க்கத்தின் பலவீனம்தான், இது பெருகிவரும் பூகோளமயமாக்கப்பட்ட உலகப் பொருளாதார
சூழ்நிலைகளில் நிரந்தரமான தேசிய வளர்ச்சிப்போக்கை உருவாக்க முடியாத நிலையின் விளைவாகும். இந்த நாட்டை
பூகோளப்பொருளாதாரத்தோடு மீண்டும் இணைப்பதற்கு எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளும், ஆளும் பிரிவைச் சார்ந்த
மதபோதகர்களும், bazaris
என்று அழைக்கப்படும் பாரம்பரிய தேசிய முதலாளித்துவ வர்க்கமும் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற பாரம்பரிய
சலுகைகள் உரிமைகள் மற்றும் இலாபங்களை சீர்குலைப்பதாகவே அமைந்துவிடும். அதேநேரத்தில்
பூகோளப்பொருளாதாரத்தில் ஒருங்கிணைக்கப்படுவதால், ஈரான் உழைக்கும் மக்களது வாழ்க்கைத்தரத்தின் மீது தீவிரமான
தாக்குதல்களைத் தொடுக்கவேண்டியிருக்கும். எந்த அளவுகோலின்படி பார்த்தாலும் ஏற்கனவே ஈரானின் உழைக்கும்
மக்களது வாழ்க்கைத்தரம் மிகத்தாழ்வாகவே உள்ளது.
இந்த சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு சீர்திருத்தக்காரர்கள் எந்த நேரத்திலும் மத
ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் சலுகை மிக்க அந்தஸ்தை சவால் செய்வதற்கு தயாராக இல்லை.
அடிமட்டத்திலிருந்து பொது மக்கள் இயக்கம் ஒன்று தோன்றுவதற்கு ஆதரவாக செயல்பட்டு நடவடிக்கை மேற்கொண்டால்
அது ஆளும் செல்வந்த தட்டிற்குள் நிலவுகின்ற மோதலை அதிகரித்து ஒட்டுமொத்த அரசையே பலவீனமாக்கிவிடும் என்று
அவர்கள் அஞ்சினர். எனவேதான் அரசு எந்திரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு எடுக்கப்பட்ட எல்லா
நடவடிக்கைகளுக்கும் அவர்கள் திரும்பத்திரும்ப அடிபணிய வேண்டி வந்தது.
ஏகாதிபத்திய நலன்கள்
சீர்திருத்தக்காரர்களின் திவாலோடு ஜேர்மன் அரசாங்கம் மற்றும் பசுமைக் கட்சியைச்
சார்ந்த வெளியுறவு அமைச்சரான ஜோஸ்கா பிஷ்ஷர் பங்கை ஒப்புநோக்கி பார்க்க வேண்டும். ஈரானில் அரசாங்க
ஒடுக்குமுறைகள் வளர்ந்து கொண்டிருக்கின்ற நிலையிலும் ஆட்சியுடன் அவர்கள் நெருக்கமான பொருளாதார மற்றும் அரசியல்
உறவுகளை வளர்த்துக் கொண்டார்கள். 2000 கோடை காலத்தில் ஜனாதிபதி கட்டாமி பெரிய பொருளாதார
திட்டங்களுக்கு இறுதி வடிவம் தருவதற்காக பேர்லினுக்கு விஜயம் செய்திருந்தார், அப்பொழுது பிஷ்ஷர் ''ஜனநாயக
சீர்திருத்தப் போக்கை'' எல்லையில்லாமல் புகழ்ந்தார்.
Süddeutsche Zeitung பத்திரிகைக்கு
அப்போது பசுமைகட்சியின் வெளியுறவு அமைச்சர் பேட்டியளித்தார்: ''ஜனாதிபதி கட்டாமி தலைமையில் நடைபெற்றுவரும்
ஜனநாயக சீர்திருத்த நடைமுறைகள் இந்த ஆபத்துக்கள் நிறைந்த பிராந்தியத்தில் மனித உரிமைகள், ஜனநாயகம்,
சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஒரு பெரிய வாய்ப்பாகும். அதில் நமக்கு குறைவான ஆபத்தும் இல்லை'' என்று
குறிப்பிட்டார். ஈரானின் ஒட்டுமொத்த அரசியல் முறையின் சின்னமாக கட்டாமி விளங்கவில்லை என்று பேட்டி கண்டவர்
குறிப்பிட்டபொழுது, அதற்கு பிஷ்ஷர் பதிலளிக்கும்போது ''மக்களில் மிகப்பெரும்பாலோர் அவருக்கு ஆதரவு தருகின்றனர்.
சீர்திருத்தவாதிகளை ஆதரிக்காமல் இருப்போமானால் அது பெரிய தவறாகிவிடும்." இப்படி ஆதரிப்பது அறிவுக்கு
பொருத்தமானது மட்டுமல்ல, ''ஜேர்மனியின் சிறந்த நலன்களுக்கும் ஏற்றது'' என்று குறிப்பிட்டார்.
ஜனநாயகம், மனித உரிமைகள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வந்த நேரத்தில் ஈரானில்
வர்த்தகம் செழிப்புற்றது. பெப்ரவரி தொடக்கத்தில் பசுமைக் கட்சியினர் உருவாக்கிய நிபுணர் குழுவான
Heinrich-Böll-Stiftung கடந்த இரண்டாண்டுகளில் ஈரானில்
வெளிநாட்டு முதலீடுகளின் அளவு 400-சதவீதம் உயர்ந்துள்ளது என்று தெரிவித்தது. அதே அறிக்கை ஜேர்மனியின் சீமன்ஸ்
கார்பரேஷன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தொழில்கள் கூட்டமைப்பு டெஹ்ரானில் புதிய வடிகால் திட்டத்திற்கு
ஒப்பந்தங்களைப் பெற்றிருப்பதாக தெரிவித்தது.
ஈரானின் மிக முக்கியமான வெளிநாட்டு வர்த்தக பங்குதாரராக ஜேர்மனி பல ஆண்டுகளாக
இருந்து வருகிறது. ஜேர்மனியின் தொழிற்சாலைகள் இயந்திரசாதனங்கள், வாகனங்கள் மற்றும் தொழில் நுட்ப வசதிகளை
வழங்கிக் கொண்டிருப்பதால் ஏற்றுமதிகள் நிரந்தரமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. ''2003ம் ஆண்டு ஒரு புதிய
சாதனை அளவை குறிப்பதாக அமையும்'' என்று
Financial Times Deutschland, ஜேர்மன் -
ஈரானிய வர்த்தக சபை தலைவர் மைக்கல் டோக்கசை மேற்கோள்காட்டி சென்ற டிசம்பரில் செய்தி வெளியிட்டது.
அந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில் ஜேர்மனியின் ஏற்றுமதிகள் 24 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.
மொத்த வியாபார அளவு 3 பில்லியன் யூரோக்களுக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜேர்மனியில் ஈரான் முதலீடுகள் அதைவிட அதிகமானதாகும். அண்மைக்காலம் வரை ஐரோப்பாவின் பிரதான எஃகு
கார்பரேஷன்களில் ஒன்றான குரூப் திஸ்ஸன் நிறுவனத்தில் டெஹ்ரானுக்கு 8 சதவீத பங்குகள் இருந்தன என்றாலும் இது
அமெரிக்காவின் நிர்பந்தத்தால் 5-சதவீதமாக குறைக்கப்பட்டது.
OPEC-ன் மொத்த எண்ணெய் உற்பத்தியில் ஈரானின்
பங்களிப்பு சுமார் 14-சதவீதமாகும். உலகின் இயற்கை எரிவாயு வளங்களில் 16-முதல் 18-சதவீதம் வரை கிடைக்கின்ற
பகுதிகள் ஈரான் எல்லைக்குள் இருக்கின்றன. இது தவிர வடக்கில் காஸ்பியன் கடலை ஒட்டியும், தெற்கில் பாரசீக
வளைகுடா மற்றும் அரபிக்கடலை ஒட்டியும், உலக எரிபொருள் அளிப்பினை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கான
போராட்டத்தில் ஈரான் முக்கிய இடம்பெறுகின்றது. காஸ்பியன் எண்ணெயை உலக சந்தைக்கு கொண்டு வருவதற்கான எளிதான
வழித்தடம் ஈரானின் குறுக்காக செல்லும்.
ஈராக் போருக்கு பின்னர், அமெரிக்க அரசாங்கம் டெஹ்ரான் மீது தனது நிர்பந்தங்களை
குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருகிறது. அந்த நாடு உண்மையில் சுற்றி வளைக்கப்பட்டு இருக்கிறது. அதன் மேற்கு
எல்லையில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் ஈராக் உள்ளது, கிழக்கில் ஆப்கானிஸ்தானுடன் ஈரான் நீண்ட எல்லையைக் கொண்டிருக்கிறது.
ஈரான் முல்லாக்கள் அமெரிக்காவை முதல் எதிரி என்று ஆவேச குரல் கொடுப்பது அனைவரும்
அறிந்த ஒன்றுதான் என்றாலும் முல்லாக்களின் சில பிரதிநிதிகள் ஒத்துழைப்பதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக தெளிவாக
சமிக்கை காட்டியுள்ளனர். ஜனவரி இறுதியில்
heraldonline வெளியிட்டுள்ள தகவலின்படி அமெரிக்க நாடாளுமன்ற
அலுவலர் தூதுக்குழு ஒன்று பெப்ரவரியில் 1979-க்கு பின் முதல் தடவையாக உயர் அதிகார பேச்சு வார்த்தைகளை நடத்தப்போவதாக
தெரிவித்தது.
பிரிட்டிஷ் கார்டியனில் சென்ற வாரம் மார்ட்டின் உல்லாகாட் ஒரு தத்துவத்தை
முன் வைத்திருக்கிறார். புஷ் நிர்வாகம் பிற்போக்கு புரவலர் சபையுடன் ஒத்துழைக்க தயாராக இருக்கிறதென்று கூறியிருக்கிறார்.
''அமெரிக்கா உதவுமானால் - ஈரானின் கடுங்கோட்பாட்டாளர்கள் ஜனநாயகத்தை குப்பைத்தொட்டியில் போடுவார்கள்''
என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், ''அந்த எச்சமாமன்ற (பலர் வெளியேற்றப்பட்ட பிறகு இருக்கும்
மன்றம்) குடியரசோடு பேரம்பேச வாஷிங்டன் தயாராக இருக்கிறது'' என்று எழுதினார்.
அவர் தொடர்ந்து தனது கட்டுரையில் கூறியிருப்பதாவது: ''ஈரானின் சர்வதேச அளவிலான
தனித்திருக்கும் போக்கு குறைந்து கொண்டு வருகின்ற நேரத்தில் அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது. அணு விவகாரங்களில்
ஈரானின் நேர்மையை சந்தேகிப்பதற்கு வழியிருந்தாலும் அதை நேற்று வியன்னாவில் பார்த்தோம். ஒரு குறிப்பிட்ட அளவில்
அமெரிக்கா மற்றும் ஈரானிய அக்கறைகள் இணைகின்றன என்பது தெளிவாக தெரிகிறது. ஈராக்கில் மற்றும் ஆப்கானிஸ்தானில்
அமெரிக்காவிற்கு உள்ள பிரச்சனைகளைப் பார்க்கும் போது இதற்கு முன்னர் இருந்ததைவிட டெஹ்ரானின் தயவு வாஷிங்டனுக்கு
அதிகம் தேவைப்படுகிறது''
அத்தகைய ஊகம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம்: நாடாளுமன்ற
தேர்தல்களைத் தொடர்ந்து மற்றும் சீர்திருத்தவாதிகளின் அரசியல் வெற்று தன்மையை தொடர்ந்து ஈரானில் அரசியல்
ஸ்திரமின்மை அதிகரிக்கும். கடந்த நாட்களில் மடிந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் ஒரு கூர்மையான சமூக மற்றும்
அரசியல் பதட்டங்களை கோடிட்டுக்காட்டுவதாக அமைந்திருக்கின்றனர். இவை இந்த பிராந்தியம் முழுவதிலும் தொழிலாள
வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்டுவரும் அனைத்து தேசிய இனங்களையும் மற்றும் மதங்களை சேர்ந்தவர்களையும் ஐக்கியப்படுத்தும்
ஒரு சோசலிசக் கட்சியின் தேவையின் மாபெரும் அவசியத்தை விளக்கிக் காட்டும். |