World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக் Iraq: A convenient letter from an Al Qaeda terrorist ஈராக்: அல்கொய்தா பயங்கரவாதியின் ஒரு வசதியான கடிதம் By James Conachy ஜோர்டானில் பிறந்த இஸ்லாமிய அடிப்படைவாதியான அபுமூஸாப் அல்-சர்காவி எழுதியதாக கூறப்படும் கடிதமொன்று ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஈராக்கில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தவும், புதிய அரசாங்கத்தை உருவாக்க அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிகளை சீர்குலைக்கவும் ஒஸாமா பின்லேடனுக்கும், அல்கொய்தாவிற்கும் உதவிகோரி எழுதப்பட்டதாக அந்தக் கடிதம் அமைந்திருக்கிறது. அல்-கொய்தாவிற்கும் ஈராக்கிற்குமிடையே அல்-சர்க்காவிதான் தொடர்பு என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கள் தற்போது புதியவையல்ல. 2003 ல் ஐ.நா-வில் கொலின் பவல் ஆற்றிய உரையில் கணிசமான பகுதி ஈராக்மீது அமெரிக்கா முன்கூட்டி போர் தொடுப்பதை நியாயப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. அதில் அல்-சர்க்காவியின் பயங்கரவாத நடவடிக்கைகள் ஈராக்கின் வடகிழக்கு பகுதிகளில் சதாம் ஹூசேன் ஆட்சியின் ஊக்குவிப்போடும், ஆதரவோடும் நடைபெற்று வருவதாக விவரித்திருந்தார். ஐ.நா-வில் பவல் குற்றச்சாட்டுக்களை கூறிய சில நாட்களுக்குள், அவர் சர்க்காவி பற்றி கூறிய அனைத்துத் தகவல்களும் பகிரங்கமாக ஆட்சேபிக்கப்பட்டன. அல்லது அமெரிக்கப் புலனாய்வு சம்மந்தப்படாத அமைப்புக்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான நிபுணர்கள் அதனை பொய்யென்று மறுத்துவிட்டனர். அந்த நேரத்தில் WSWS விவரமாக ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. (see:"Powell's Al Qaeda-Baghdad link falls apart") ஈராக்கை அமெரிக்கா தன்கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பின்னர், அல்-சர்க்காவி பற்றி பவல் கூறியவற்றை அல்லது ஆக்கிரமித்துக்கொண்டுள்ள அமெரிக்க துருப்புக்களுக்கெதிராக அவர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்கு எந்தவிதமான ஆதாரத்தையும் தரவில்லை. அதற்கான ஆதாரம் எதுவும் அந்த நாட்டிலேயே இல்லை. ஈராக்கின் சன்னி மதபோதகரான ஹரேத்-அல்-தரி அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்தக் கடிதம் பற்றி கருத்துத் தெரிவிக்கும் போது, ''சர்க்காவி கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு நபர்தான்'' என்று வெளிப்படையாக கூறினார். அப்படியிருந்தும், அமெரிக்கப் புலனாய்வு பகிரங்கமாக அந்த மாயாவி சர்க்காவி எழுதியதாக தேதியில்லாமல், கையெழுத்து எதுவும் இடம்பெறாமல் 17 பக்க அரபு மொழி அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையின் தன்மை குறித்து ஒரு அதிகாரி வாஷிங்டன் போஸ்டுக்கு கருத்து தெரிவிக்கும் போது ''அந்த வாசகங்கள் மிகுந்த ஆவேச சொற்களாகவும்'' ''சிறந்த வர்ணனைகளாகவும்'' அமைந்திருப்பதால் ''சில பகுதிகளை துல்லியமாக மொழிபெயர்ப்பதில்'' சிரமமாக உள்ளதென்று தெரிவித்திருக்கிறார். இந்தக் கடிதம் பிப்ரவரி 8 ல் நியூயோர்க் டைம்ஸிற்கு மட்டுமே தரப்பட்டது. அந்தப் பத்திரிகை மறுநாள் முதல்பக்க செய்தியாக இந்தக் கடிதத்தை வெளியிட்டது. பாக்தாத்திலுள்ள வாஷிங்டனின் இடைக்கால நிர்வாக கூட்டணியின் இணையத் தளத்தில் இந்தக் கடிதத்தின் ஆங்கில வாசகங்களை வெளியிட்டிருக்கிறார்கள். ஈராக்கில் மிகக்குறைந்த அளவிற்கே இஸ்லாமிய தீவிரவாதிகள் உள்ளனர். மற்றும் அவர்களுக்கு ஈராக் மக்களிடம் ஆதரவு எதுவுமில்லை என்று அந்த ஆவணம் தெரிவிக்கிறது. ஈராக் ஷியாட்டுக்கள் ''அமெரிக்கர்களுக்கு ஆதரவு தந்தார்கள், உதவினார்கள் மற்றும் முஜாகிதீன்களுக்கு எதிராக நின்றார்கள்'' என்று அந்த கடிதம் குறிப்பிட்டது. சில மாதங்களுக்குள் அந்தக் கடிதத்தை எழுதியவர் ''அமெரிக்கா, அயோக்கியர்கள் (bastard) மற்றும் உள்ளூர் ஈராக் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படைகளை நம்பித்தான் ஈராக்கை அரசாள முடியுமென்று'' கூறியிருக்கிறார். இந்தக் கடிதம் தோல்வி மனப்பான்மையையும், எதிர்ப்பு கிளர்ச்சி வாய்ப்புகள் பற்றி உற்சாகமற்ற நிலையையும் காட்டுகிறது. ஈராக்கின் சன்னி மக்கள் ''தூங்கிக்கொண்டிருப்பதாக'' குறிப்பிடுகிறது. அமெரிக்கர்கள் ''முறையான சன்னிகளை முஜாகிதீன் தரப்பிலிருந்து வெற்றிகரமாக பிரித்துவிட்டதாகவும்'' கூறியுள்ளது. அத்துடன், ''நமது இயக்கத்தின் களம் சுருங்கிக்கொண்டு வருகிறதென்பதில் சந்தேகமில்லை. முஜாகிதீன் கழுத்தைச்சுற்றி பிடி இறுக துவங்கியிருக்கிறது. ஈராக் இராணுவமும், போலீசாரும் பரவலாக நடமாடும்போது நமது எதிர்காலம் மிகவும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது'' என்று இந்தக் கடிதத்தில் விரக்தி மனப்பான்மையோடு இக்கருத்தும் எழுதப்பட்டுள்ளது. அமெரிக்கா நியமித்துள்ள ஆட்சியை சட்டபூர்வமானதென்று ஈராக் மக்கள் ஏற்றுக்கொள்வார்களென்று அந்தக் கடிதத்தை எழுதியவர் கருதுகிறார். அந்த அரசாங்கத்தை எதிர்த்து போரிடுவதற்கு ''எந்தவிதமான சாக்குப்போக்குகளுமில்லை''. ''நமது மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு வேறுநாட்டிற்கு செல்வதைத்தவிர வேறு மார்க்கமில்லை'' என்று அவர் கூறுகிறார். புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதை தடுத்து ஈராக்கில் ஸ்திரமற்ற நிலை ஏற்படுத்தும் திட்டத்தை அந்தக் கடிதம் கோடிட்டுக்காட்டுகிறது. ஷியாட்டுகளுக்கும், சன்னிக்களுக்குமிடையே ''இனக்குழு போரில்'' ஈராக்கை மூழ்கடிப்பதற்கு அலையலையாக தற்கொலை குண்டுவீச்சுக்களை நடத்துவதற்கு உதவுமாறு அந்தக் கடிதம் கேட்டுக்கொள்கிறது. அதன் மூலம் அல்கொய்தா மக்கள் ஆதரவை பெறுவதற்கு சிறந்த சாத்தியக்கூறுகள் உருவாக முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தை சர்க்காவி அல்லது அல்கொய்தா தொடர்புடையவர் அல்லது தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதி அல்லது பிற்போக்கு இஸ்லாமியவாத கண்ணோட்டமுடையவர் எழுதியிருக்கக்கூடும். பின்லேடன் தொடர்பாக தெரிவித்திருக்கும் கருத்துக்களை ஒட்டியதாக கடிதத்தில் சில அம்சங்கள் அமைந்திருக்கின்றன. குறிப்பாக ஒடுக்குமுறைக்கு எதிராக சதாரண மக்கள் போராடுவார்கள் என்பதையும், பரந்த மக்கள் போராட்டத்தை பயங்கரவாதத்திற்கு வாதிட முடியுமென்றும், ஷியாட்டுகள் மத ரீதியான நோக்கில் வெறுப்புக் கொண்டிருப்பதை மற்றும் மனித வாழ்வை துச்சமாக மதிப்பதைப் பயன்படுத்திக்கொள்ள அந்தக் கடிதம் எதிரொலிக்கிறது. அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கள் அல்லது ஈராக்கிலுள்ள அமெரிக்க ஆதரவு குழுக்கள் பிரச்சார நோக்கில் இந்த ஆவணத்தை தயாரித்திருக்கும் என்பதற்கான சாத்திய கூறுகளும் உண்டு. அந்தக் கடிதத்தில் ஈராக் பற்றிய சித்திரம் - மக்களது ஆதரவு இல்லாத வெளிநாட்டு பயங்கரவாதிகள்தான் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்பது புஷ் நிர்வாகத்தின் கருத்தை அப்படியே எதிரொலிப்பதாக அமைந்திருக்கிறது. அத்துடன் ஈராக்கை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கொண்டிருப்பதற்கான சான்று இது என்று, ஈராக் மக்களுக்கும் அமெரிக்க மக்களுக்கும் சித்தரித்துக் காட்டுவதற்கு பாக்தாத்திலுள்ள CPA காலத்தை வீணாக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றும் அமைந்திருக்கிறது. எங்கு இந்த ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டது என்பது கூட தெளிவாக இல்லை. ஜனவரி நடுவில் ''பாக்தாத்திலுள்ள அல்கொய்தா இயக்கத்தினர் பதுங்கும் இல்லத்தில்'' பறிமுதல் செய்யப்பட்ட CD ல் இந்தக் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆரம்பத்தில் நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பத்திரிகையின் வலதுசாரி கட்டுரையாளர் வில்லியம்ஸ் சபையர் வடக்கு ஈராக்கில் அமெரிக்க ஆதரவு குர்து இராணுவம் கைப்பற்றிய தபாலில் இந்தக் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுகிறார். இதில் எந்தத் தகவல் சரியானதென்று கேட்கப்பட்டதற்கு இராணுவ அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் போல் கிம்மிட் (Paul Kimmitt) பாக்தாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது ''நாங்கள் அதைக்கண்டு பிடித்திருக்கிறோம், எப்படிக் கண்டுபிடித்தோம்? என்பது முக்கியமல்ல'' என்று பதிலளித்தார். இந்த ஆவணம் எந்தளவிற்கு சந்தேகமுள்ளதாக இருக்கிறதென்றால், புஷ் நிர்வாகம் ''பேரழிவுகரமான ஆயுதங்கள்'' தொடர்பாக கூறிய பொய்களை மனசாட்சியில்லாமல் பரப்பிய அமெரிக்க ஊடகங்களே கூட, சர்க்காவி இந்தக் கடிதத்தை எழுதினார் என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள தயக்கம்காட்டி வருகின்றன என்பதில் ஆகும். இந்த செய்தியை முதலில் தந்த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையாளர்களான டெக்ஸ்டர் மற்றும் டக்லஸ் (Dexter Filkins and Doughlas Jehl) ஆகியோர், ''இதர வகை விளக்கங்களையும் தரமுடியும்... வேறு யாராவது ஒரு கிளர்ச்சிக்காரர் உட்பட வேறு ஒருவர் கூட எழுதியிருக்கக்கூடும், ஆனால் அப்படி எழுதியவர் தனது பங்களிப்பை அளவிற்கதிகமாக விவரித்திருக்கிறார்'' என்று குறிப்பிட்டிருக்கின்றனர். நியூஸ்வீக்கின் கிருஸ்டோபர் டிக்கி என்பவர் பிப்ரவரி 13 ல் அப்பட்டமாக வெளியிட்ட தனது விமர்சனத்தில், ''புஷ் நிர்வாகம் தவறான புலனாய்வு தகவல்கள் மற்றும் படுமோசமான குற்றச்சாட்டுக்களை கூறுவதில் சாதனை படைத்ததாகும். அதை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்தக் கடிதமே முற்றிலும் போலியானதென்று நீங்கள் வியப்படையக்கூடும். இந்தக் கடித வாசகங்கள் உண்மையானவையென்று எப்படி நமக்கு தெரிய முடியும்? அது எப்படி பெறப்பட்டது? யாருடையது? எப்பொழுது எழுதப்பட்டது? அது சர்க்காவி எழுதியதுதான் என்று நமக்கு எப்படி தெரியும்? நமக்கு தெரியாது. நிர்வாகத்தின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கப்படுகிறோம்'' என்று குறிப்பிடுகிறார். இந்தக் கடிதம் உண்மையானதா இல்லையா என்பதைவிட, அதை பத்திரிகைகளுக்கு தருவதற்கு வெள்ளை மாளிகை தனக்கேற்ற வசதியான நேரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்று தான் வர்ணிக்கவேண்டும். கடந்த 3 வாரங்களாக புஷ் நிர்வாகம் குழப்பத்திலுள்ளது. அமெரிக்க ஆய்வுக்குழு தலைவரான டேவிட் கே (David Kay) ஈராக்கில் ''பேரழிவுகரமான ஆயுதங்கள்'' எதுவும் இருக்கின்றன என்பதற்கு எந்தவிதமான சான்றுமில்லை என்று அறிவித்துவிட்டார். சட்டவிரோதமான போரை நியாயப்படுத்துவதற்கு பிரதான சாக்குப்போக்கு ஈராக்கிடம் ''மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்கள்'' உள்ளது என்பதாகும். மிக அண்மைக்காலத்தில் ABC News மற்றும் வாஷிங்டன் போஸ்ட் நடத்திய மக்கள் கருத்துக்கணிப்பின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த 54 சதவிகிதம் பேர் ஈராக்கின் அச்சுறுத்தல் குறித்து திட்டமிட்டே வெள்ளைமாளிகை மிதமிஞ்சிய தகவல்களைத் தந்ததென்று இப்போது நம்புகின்றனர். 50 சதவிகிதம் பேர் இனி போர் பயனற்றது என்று கருதுகின்றனர். 42 சதவீதம் பேர் ஜனாதிபதி நேர்மையானவரல்ல அல்லது நம்பிக்கைகுரியவரல்ல என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தத் சூழ்நிலையில் சர்க்காவியின் கடிதத்தை நிர்வாகத்தை தாங்கி நிற்பவர்கள் உறுதியாக பிடித்துக் கொண்டுள்ளனர். ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்திருப்பதை நியாயப்படுத்துவதற்கு கூறப்பட்ட மற்றொரு பொய்யை உயிர்ப்பித்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 2001 செப்டம்பர் 11 ல் வாஷிங்டன் மற்றும் நியூயோர்க் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் சம்மந்தப்பட்டவர்களும் மற்றும் அல்-கொய்தாவும் ஹூசைன் ஆட்சியோடு தொடர்புள்ளவர்கள் என்ற கூற்றும் இதில் அடங்கும். எடுத்துகாட்டாக நியூயோர்க் டைம்ஸின் வில்லியம் சபையர் ஈராக் மீது போர்தொடுப்பதை ஆர்வத்தோடு ஆதரித்தவர். அவர் பிப்ரவரி 11 ல் எழுதியுள்ள கட்டுரையில் ''ஈராக் விடுதலைக்கான மூன்று சிறப்புக் காரணங்களில் ஒன்று கொசவோவில் நடந்ததைவிட அதிக ரத்தக்களறி படுகொலைகளைத் தடுப்பது. மற்றொன்று ஈராக்கில் நாம் பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக கல்லறைகளில் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடிப்பது. மற்றொறு காரணம், உலக பயங்கரவாதிகளுக்கும் சதாம் ஹூசைனுக்கும் தெளிவான தொடர்பு இருக்கிறதென்ற சந்தேகத்துடன் கூடவே, ஈராக்கில் ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்காக அல்கொய்தா இயக்கத்தினர் தாக்குதலுக்கும் உந்துவிசையாக உள்ளனர்'' என்று கூறியுள்ளார். சபையரின் கருத்துக்களுக்கு மாறாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்புக்களின் கருத்துக்கள் உள்ளன. அது, ஈராக்கிற்கும் உலக பயங்கரவாதத்திற்குமிடையே ''தொடர்பு இருப்பதாக எந்த சந்தேகமும்'' நிலவவில்லை. ஈராக்கில் ''மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்கள்'' உள்ளது என்பது எப்படி தவறான தகவலோ அதே அடிப்படையில்தான் இதுவும் அமைந்திருக்கிறது. சபையர் கூறுகின்ற 3 வது சிறப்புக் காரணத்தை எடுத்துக்கொண்டால், உண்மைக்கு மாறான விவரம்தான் தெரிகிறது. CIA யும் இதர ஏஜென்சிகளும் திரும்பத் திரும்ப புஷ் நிர்வாகத்திற்கு கூறிய ஆலோசனைகளில் அடிப்படைவாத அல்கொய்தாவுடன் மதச்சார்பற்ற ஹூசைனின் பாத்திஸ்ட் ஆட்சிக்கு உறவு எதுவும் இருப்பதாக எந்தவிதமான ஆதாரமும் இல்லையென்று விளக்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தை ''புகையும் துப்பாக்கி'' என்று எடுத்துக்காட்ட சபையர் முயற்சித்திருப்பது ஒரு சான்றே அல்ல. சர்க்காவி கூறியிருப்பதாக சொல்லப்படும் வார்த்தைகள், ஆக்கிரமிப்பிற்கு முன்னர் அல்கொய்தா அமைப்பு ஈராக்கில் இருந்தது என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் ஆகாது. அல்லது பாத்திஸ்ட் ஆட்சி பின்லேடனுடன் இணைந்து செயல்பட்டதற்கு ஆதரமாகாது. இதில் சர்க்காவியும் அல்கொய்தாவும் இப்போது ஈராக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்க கூடுமென்பதை கோடிட்டு காட்டுவதாகவே அமைந்திருக்குமானால், அது புஷ் நிர்வாகத்தின் நேரடி பொறுப்பாகும். அமெரிக்காவிற்கு எதிராக போர்புரிய விரும்புகின்ற ஈராக்கியர் மற்றும் இதர அரபு போராளிகளின் போர்க்களமாக ஈராக் இப்போது மாற்றப்பட்டு, அது குழப்பத்தில் மூழ்கிவிட்டது. சபையரின் நோக்கம் என்னவென்றால் வெள்ளை மாளிகை ஈராக்கில் உருவாக்கியுள்ள புதைசேற்றை, அமெரிக்க ஆக்கிரமிப்பை மற்றும் தொடர்ந்து ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதை நியாயப்படுத்துவதுதான் ஆகும். இவரோடு முன்னணி நிர்வாக தலைவர்களும் சேர்ந்து கொண்டனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலீசா ரைஸ் பிப்ரவரி 10 ல் News Hour க்கு அளித்த பேட்டியில்: ''இவர்கள் முக்கியமாக வெளிநாட்டு பயங்கரவாதிகளென்று நம்புவதற்கு எங்களுக்கு எல்லாவிதமான அடிப்படைகளும் உண்டு. இவர்கள் அல்கொய்தாவோடு சம்மந்தப்பட்டவர்கள் மற்றும் ஈராக் அரசாங்கம் நிறுவப்படுவதை தடுக்க விரும்புபவர்கள் ஆவர். ஈராக் செழிப்பு மிக்க ஜனநாயக நாடாகி ஸ்திரமானநிலை உருவாகுமானால், அவர்களது மிகப்பெரிய திட்டமான நாகரீகத்திற்கு தீங்கு விளைவித்து அந்த மண்டலத்தில் ஜனநாயகமே நிலவக் கூடாது என்ற நோக்குள்ளவர்கள் கவலையடைந்திருக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் தீட்டுகின்ற திட்டங்கள் நிலையான ஈராக்கினால் பெருமளவிற்கு பாதிக்கப்படுமென்று தெளிவாக கவலையடைந்திருக்கின்றனர்'' என்று குறிப்பிட்டார். பாக்தாத்தில் உள்ள CPA அதிகாரியான டானியல் செனோர் (Daniel Senor) பிப்ரவரி 11 ல் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது ''பயங்கரவாதம் ஈராக்கில் மட்டுமே தாக்குதல் நடத்துவதோடு நிறுத்திக்கொள்ளப் போவதில்லை. உலகலாவிய பயங்கரவாத போர் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. நியூயோர்க் நகரத்திலிருந்து, கஸா பிளாங்கா, ரியாத், இஸ்தான்புல் என்று பாலிவரை பரவியிருக்கிறது'' என்று கூறிய அவர் மறுநாள் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஈராக் மத்திய போர்க்களமாக மாறிவிட்டதென்றுதான் நாங்கள் இதுவரை சொல்லிக்கொண்டு வருகிறோம்'' என்று பிரகடனப்படுத்தினார். ஈராக் மீது வாஷிங்டன் ஆக்கிரமித்ததற்கான நோக்கங்கள் குறித்து தொடர்ந்து அமெரிக்க மக்களுக்கு பொய் கூறப்பட்டு வருகிறது. நீண்டகால பொருளாதார மற்றும் மூலோபாய அபிலாஷைகள் என்பன ஈராக்கில் அமெரிக்காவிற்கு இருந்து வந்தன. மற்றும் பரவலாக அந்த மண்டலத்திலும் இந்த அபிலாஷைகள நீடிக்கின்றன. அவற்றை நிறைவேற்றுவதற்காக பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதை ஒரு சாக்குபோக்காக கொண்டு புஷ் நிர்வாகம் ஆக்கிரமிக்க முடிவு செய்தது. அபு முஸாப் அல்-சர்க்காவி எழுதியதாக கூறப்படுகின்ற கடிதம் பழைய பொய்மூட்டைகளுக்கு உயிர்கொடுக்க மற்றொரு புதிய பொய்மூட்டைகளை உருவாக்குவதற்கான முயற்சிதான். |