World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா Millions of Indian government employees to go on strike today மில்லியன் கணக்கான இந்திய அரசாங்க ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் By Arun Kumar பொதுத்துறை ஊழியர்களுக்கு வேலைநிறுத்தம் செய்யும் உரிமையில்லை என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டிக்கும் வகையில் பெப்ரவரி 24-ல் ஒருநாள் தேசிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெறவிருக்கிறது. அதில் 10- மில்லியனுக்கும் மேற்பட்ட மத்திய அரசு, மாநில அரசு பல்வேறு அரசு நிறுவனங்கள், அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் உட்பட பல்வேறு நிதி அமைப்புக்களின் ஊழியர்கள் பங்கெடுத்துக் கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மாநில அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (AIADMK) அரசாங்கம் தூண்டிவிட்ட ஒரு தொழிற்தகராறு காரணமாக தொழிலாளர்களுக்கு எதிரான இந்த தீவிரமான தீர்ப்பு வந்தது. முதலமைச்சர் ஜெயராம் ஜெயலலிதா ஒருதலைப்பட்சமாக வெட்டிவிட்ட பென்ஷன்கள் இதர சலுகைகளை மீண்டும் வழங்கக்கோரி சென்ற ஜூலை மாதம் 2-ந்தேதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் 200,000 பேர் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தபோது வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக்கும் அவசரசட்டத்தை இயற்றி, அதற்குப் பின்னர் ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டு, வேலை நிறுத்தத்தை உடைப்பவர்களை பணியில் அமர்த்த முதலமைச்சர் கட்டளையிட்டார். மாநில அரசாங்கம் விடாப்பிடியாக தீவிர நடவடிக்கைகளில் உறுதியாக இருப்பதை எதிர்த்து நிற்பதற்கு எந்தவிதமான முன்னோக்குத் திட்டத்தையும் எடுத்துவைக்க இயலாத தொழிற்சங்கங்கள், ஜூலை-12-ந் தேதி வேலை நிறுத்தத்தை கைவிட்டன. நீக்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு இந்திய உச்சநீதிமன்றத்திற்கு முறையீடு செய்தன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு அ.இ.அ.தி.மு.க அரசாங்கம் வேலை நிறுத்த உரிமையை ரத்து செய்தது, மற்றும் பணி நீக்கம் செய்தது கூட சரிதான் என்று தீர்ப்பளித்தது. தொழிற்சங்கங்களின் நடவடிக்கைக்கு எதிராக வசைமாரி பொழிந்து, அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு அழிவை எற்படுத்தும், பாதிப்பைத் தரும் என்றும் அரசாங்க ஊழியர்களுக்கு வேலைநிறுத்தம் செய்வதற்கு சட்டரீதியாகவோ அல்லது "தார்மீக உரிமை" யோ இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா வேலை நிறுத்தத்தை உடைப்பதை அங்கீகரித்துவிட்டு அது இதர அரசாங்கங்களை உண்மையிலேயே ஊக்குவித்து தொழிற்சங்க அடிப்படை உரிமைகளை பறிப்பதாக அமைந்து கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுவிடும் என்று கருதி அந்த கொந்தளிப்பை தணிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் வேலை நிறுத்தம் செய்தவர்களில் மிகப்பெரும்பாலோரை அவர்கள் தலைகுனிவான மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து அரசாங்கம் சலுகைகளை ரத்து செய்ததை ஏற்றுக்கொண்டால் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று ஆலோசனை கூறியது. நீதிமன்றத்தின் ஆலோசனையை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார் அதற்குப்பின்னர் இந்திய பெரும் நிறுவன செல்வந்தத் தட்டினர் உழைக்கும் மக்களுக்கு கடுமையான அடி கொடுத்ததாக முதலமைச்சரை பாராட்டினர். தொழிற் சங்கங்களும் ஸ்ராலினிச கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) (CPI (M)) ஆகியவை அதிர்ச்சியில் நிலைகுலைந்து நின்றன. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஏழுமாதங்களுக்குப் பின்னர் இன்றைய தினம் முதலாவது கண்டன நடவடிக்கையாக அந்தத் தீர்ப்பை எதிர்த்து ஒருநாள் வேலைநிறுத்தம் நடக்கிறது. இன்றைய நடவடிக்கையை ஆதரிக்கின்ற தொழிற்சங்க கூட்டமைப்புக்களான இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU), அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) மற்றும் தொழிற்சங்கங்களின் மைய அவை (AICCTU) ஆகியவை மற்றும் அவை முறையே சார்ந்துள்ள (CPI(M), CPI மற்றும் மாவோயிஸ்ட், சோசலிச யூனிடி சென்டர் ஆகியவை, ஹிந்து மேலாதிக்க குறுகிய வெறிகொண்ட, வலதுசாரி அணியின் தலைமை நடைபெற்று வருகின்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் "வேலை நிறுத்தம் செய்யும் உரிமையை ரத்து செய்கின்றவகையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் தாக்கத்தை" ரத்து செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளன. NDA அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளுக்கும் கூட தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவை "வேலையில்லாத் திண்டாட்டம் மிகப்பெருமளவில் வளரவும், வறுமை பெருகவும் முறையற்ற தனியார்மயம் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்படும் நடவடிக்கைகள் அதிகரிக்கவும்" வழிவகுத்திருப்பதாக தெரிவித்தன. NDA- அரசாங்கம் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு எட்டுமாதங்களுக்கு முன்னரே மறுதேர்தலுக்கு உத்தரவிட முடிவு செய்ததற்கு முன்னர் எதிர்ப்பு நாளுக்கான திட்டங்களை தொழிற்சங்கங்கள் வகுத்தன. ஆனால் இந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தை, சிதைந்துவிட்ட தனது செல்வாக்கை மீட்பதற்கு ஸ்ராலினிஸ்டுகள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. முதலாளித்துவ பூகோளமயமாக்கல் ''மனிதநேயத்தோடு'' நடைபெற வேண்டும் என்று கூறுகின்ற, இந்தியாவின் பாரம்பரிய முதலாளித்துவ கட்சியான காங்கிரஸ் கட்சியோடு தங்களது தேர்தல் உடன்படிக்கைகளை வளர்ப்பதற்கும் பயன்படுத்திக் கொள்வார்கள். NDA கூட்டணியில் முன்னணி கட்சியான பாரதீய ஜனதாக்கட்சி (பி.ஜே.பி-) யோடு இணைந்துள்ள வங்கி தொழிற்சங்கங்கள், பி.ஜே.பி-யின் இணைப் புரவலர்களான ஹிந்து மேலாதிக்க RSS மூலம் வேலை நிறுத்ததத்தை ''அரசியல் நோக்கம் கொண்டது" என்று கண்டித்திருப்பதும் தங்களது உறுப்பினர்கள் அதில் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளதும் வியப்பல்ல. காங்கிரஸ் கட்சியோடு இணைந்த இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) இந்த வேலை நிறுத்தத்திலிருந்து விலகிக்கொண்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிரொலிக்கின்ற வைகயில் ''பொறுப்பற்ற தொழிற்சங்க" நடவடிக்கைகளால் தொழிலாள வர்க்கத்திற்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் "பாதிப்பு'' ஏற்படுத்துவதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால் நேரடியாக பாதிக்கப்பட்ட தமிழ்நாடு அரசாங்க ஊழியர்கள் இன்றைய தேசிய வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள். அரசாங்கம் பழிவாங்குகின்ற நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்பதால் மாலையில் நடக்கிற பேரணியில் மட்டும் அவர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஜூலை வேலை நிறுத்தம் தோல்வியடைந்த பின்னர் அ.இ.அ.தி.மு.க அரசாங்கம் தொடர்ந்து அரசு துறை ஊழியர்கள் மீது தாக்குதல்களை நீடித்துக் கொண்டிருக்கிறது, விடுமுறை நாட்களை வெட்டியிருக்கிறது. மற்றும் வேலை நிலைகளை பாதிக்கின்ற நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. சென்ற கோடைகாலத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொழிலாளர் அடிப்படை உரிமைகளை ரத்து செய்துவிட்டு இந்த நாட்டை வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுக்கின்ற காந்தமாக மாற்றவேண்டும் என்று இந்தியாவின் பெருநிறுவன மற்றும் அரசியல் செல்வந்தத்தட்டினர் மேற்கொண்டுள்ள முயற்சிகளில் ஒரு புதிய கட்டமாகும். அரசாங்க பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்கிற உரிமையை பறிப்பதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கத்தினர் இரண்டு வகையில் நடவடிக்கைகளை எடுக்க முயன்றுவருகின்றனர். அரசாங்க தொழில்களையும் சேவைகளையும், அரசு சார்பு நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவதற்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்பை நசுக்குவது அதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியாவின் தொழிலாளர் நிலைப்பாடு தீவிரமாக மாறிவிட்டது என்று காட்டுவது, இந்த இரண்டையும் செய்து கொண்டிருக்கிறார்கள். தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கம் தொடக்கிய "இரண்டாவது கட்ட" சீர்திருத்தங்களின் உயிர்நாடியான அம்சம் என்னவென்றால் அவற்றை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று பெருவர்த்தக நிறுவனங்கள் கோருகின்றன. கதவடைப்பு, ஆலைமூடல் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் நியமனத்திற்கான சட்டபூர்வக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு கோரிவருகின்றனர். |