World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

European elections: debacle for the German SPD

ஐரோப்பிய தேர்தல்கள்: ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி தோல்வி

By Peter Schwarz
22 June 2004

Back to screen version

தேர்தல் முடிவுகளில் ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) வீழ்ச்சியடைந்திருப்பதை பரவலாய் தற்பொழுது விமர்சகர்கள் ''மிகப்பெரிய இழப்புக்கள்'' என்றும் ''பேரிடியான தோல்வி'' என்றும் வர்ணிக்கின்றனர். சமூக ஜனநாயகக் கட்சி பசுமை கட்சியுடன் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டு சேர்ந்து மத்திய கூட்டாட்சி அரசாங்கத்தில் நுழைந்தது, அந்தக் கட்சி மாநிலத் தேர்தல்களிலும் மற்றையவைகளிலும், அதேபோல பல்வேறு உள்ளாட்சி தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்து வருகிறது.

2002 கூட்டாட்சி நாடாளுமன்ற (Bundestag) தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்கவைத்தது விதிவிலக்காகும். அதன் வெற்றிக்கு பிரதான காரண நிகழ்வு, சமூக ஜனநாயகக் கட்சி ஈராக் போரை நிராகரித்ததாகும். இதற்கு மாறாக கிறிஸ்தவ ஜனநாயக கட்சி (CDU) மற்றும் கிறிஸ்தவ சமூக யூனியன் (CSU) ஈராக் போரை ஆதரித்தன. நான்கு மாதங்களுக்கு பின், Hesse சட்டசபைகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் சமூக ஜனநாயகக் கட்சி தோல்வியடைந்தது, Lower Saxony இல் நடைபெற்ற தேர்தல்களில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி தோல்வியடைந்தது.

இந்த இணையற்ற தோல்வியோடு ஒப்பிடும்போது கூட, ஜூன் 13இல் நடைபெற்ற ஐரோப்பிய தேர்தல்களில் சமூக ஜனநாயகக் கட்சியின் முடிவுகள் வேறுபட்ட தன்மைகளைக் கொண்டது. இரண்டாவது உலகப்போருக்குப் பின் ஜேர்மனி கூட்டாட்சி குடியரசு உருவாக்கப்பட்ட பின்னர் சமூக ஜனநாயகக் கட்சி நாடுதழுவிய வாக்குப்பதிவில் இவ்வளவு படுமோசமான தோல்வியை இதற்கு முன்னர் சந்தித்ததேயில்லை.

அக்கட்சிக்கு 21.4 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கிறது, 1953 நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி பெற்ற மிக்குறைந்த 28.8 சதவீத வாக்குகளை விட இது மிகக்குறைவாகும். மேலும் பெரும்பாலான வாக்காளர்கள் வாக்குசாவடிக்கு செல்வதில் கூட அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை--- 57 சதவீத வாக்காளர்கள் வாக்குப்பதிவை புறக்கணித்திருப்பது மற்றொரு புதிய சான்றாகும். ஒட்டுமொத்த தேர்தல் வாக்கு சீட்டு விழுந்ததில் சமூக ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்தது 9 சதவீதம்தான்.

கிடைத்த வாக்குளின் எண்ணிக்கையை பார்த்தால் இந்த தோல்வி மிகத் தெளிவாகத் தெரிகிறது. 2002 நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிடும்போது, சமூக ஜனநாயகக் கட்சி 13 மில்லியன் அல்லது மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்ட வாக்குகளை இழந்துவிட்டது. அக்கட்சி 5.5 மில்லியன் வாக்குகளைத்தான் பெற்றிருக்கிறது, இதை ஒப்பிடும்பொழுது 2002 தேர்தலில் 18.5 மில்லியன் வாக்குகளை பெற்றது. கிறிஸ்தவ ஜனநாயக கட்சி மற்றும் கிறிஸ்தவ சமூக யூனியன் மோசமாக பாதிக்கப்படுமளவிற்கு வாக்குகள் குறைவாக பெறவில்லை. 7 மில்லியன் வாக்குகளை இழந்தாலும், அந்த இரண்டு கட்சிகளும் ஒட்டுமொத்தமாக 6 சதவீத வாக்குகளால் அதிகரித்துள்ளன.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஐரோப்பிய தேர்தல்களோடு ஒப்பிடும்போது, இப்பொழுது சமூக ஜனநாயகக் கட்சிக்கு குறைந்த வாக்குகளும், மோசமான முடிவுகளும்தான் ஏற்பட்டுள்ளது, சமூக ஜனநாயகக் கட்சியினர் அப்போது 2.8- மில்லியன் வாக்குகளை இழந்தனர். 1999 ஐரோப்பிய தேர்தலை ஒப்பிடும்போது கிறிஸ்தவ ஜனநாயக கட்சியும், கிறிஸ்தவ சமூக யூனியனும் 1.7 மில்லியன் வாக்குகளை அல்லது 4சதவீதத்தை இழந்தன. இந்த மாதத் தேர்தல்களில் அவர்கள் 44.5 சதவீத வாக்குகளை பெற்றிருக்கின்றன. தாராளவாத ''சுதந்திர சந்தை'' யின் சுதந்திர ஜனநாயக கட்சி பெற்ற 6.1 சதவீத வாக்கையும் சேர்த்தால் அடுத்து நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சிகளின் கூட்டணிக்கு தெளிவான பெரும்பான்மை உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.

சமூக ஜனநாயகக் கட்சி வாக்காளர்களையும், உறுப்பினர்களையும் பெருமளவில் இழந்து, தோல்விக்கு வித்திட்ட காரணம், அனைவருக்கும் அறிந்த மத்திய கூட்டாட்சி அரசாங்கத்தால் செயல்படுத்திய நீண்ட கால ''சீர்திருத்த'' கொள்கைகளின் ஆழமான ஆத்திரம் மற்றும் அதிருப்தியின் விளைபயனாகும். அரசாங்கத்தின் ''செயற்திட்டம் 2010'' பொதுமக்களிடையே மிகப்பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. நலன்புரி அரசுத் திட்டங்களை இரத்துசெய்யும் இந்த ஏற்பாடு மில்லியன் கணக்கான சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னாள் வாக்காளர்கள் வாழ்வில் பேரழிவு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

சட்டபூர்வமான வேலையில்லாத்திண்டாட்ட உதவித்தொகைகள் நலன்புரி தொகைகளோடு இணைக்கப்பட்டுவிட்டதால் 4.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பலர் எந்தவிதமான உதவியும் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்கள் இப்போது சமூகநலன்புரி உதவித்திட்டங்களை கோரவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர், அவர்கள் தங்களது முதுமை காலத்திற்காக சேமித்துவைத்த தொகை முழுவதையும் செலவிட்டு விட்டனர் அல்லது தங்களது உறவினர்களது உதவியை நாடி நிற்கின்றனர்.

எந்த அளவிற்கு இந்த வெட்டுக்கள் வாழ்வை பாதித்துவிட்டது என்பதை அண்மையில் Der Spiegel வாரப் பத்திரிகை தெளிவுபடுத்தியுள்ளது. அரசாங்கம் மரணத்தின்போது வழங்குகின்ற உதவித்தொகைகளை சுகாதார ''சீர்திருத்தத்தின்'' ஒர் அங்கமாக ஒழித்துக்கட்டிவிட்டதால் தங்களது உறவினர்கள் மரணத்தின்போது இறுதி சடங்குகளுக்கு செலவு செய்ய பணம் இல்லாததால் சவப்பெட்டிகள் குவிந்து கிடக்கின்றன என்பதை அந்த சஞ்சிகை விவரித்திருக்கிறது. அதே நேரத்தில், இறுதி சடங்குகளுக்கான செலவுத் தொகையை வழங்குவதில் நலன்புரி அலுவலகம் தாமதப்படுத்தி வருகிறது.

சமூக ஜனநாயகக் கட்சிக்கு எதிர்ப்பை காட்டுகின்ற வகையில் வாக்காளர்கள் மிகப்பெருமளவில் வாக்குப்பதிவை வராமல் தவிர்த்துவிட்டனர். ஓர் ஆய்வின்படி, நாடாளுமன்றத்தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்த 11 மில்லியன் வாக்காளர்கள் ஐரோப்பிய தேர்தலில் கலந்துகொள்ளாமல் வீடுகளில் இருந்துவிட்டனர்.

ஜேர்மனியின் மேற்கு பகுதியில் பசுமைகட்சியும், கிழக்கு பகுதியில் ஜனநாயக சோசலிச கட்சிகளும் (PDS-Party of Democratic Socialism), சமூக ஜனநாயகக் கட்சியின் தோல்வியால் பயனடைந்துள்ளனர். ஐரோப்பிய தேர்தலில் தாராளவாத ஜனநாயக கட்சியும் கணிசமான அளவிற்கு வாக்குளை பெற்றிருந்தாலும், 2002 நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிடும்போது வாக்கு விகிதாசாரம் அடிப்படையில் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது, முழுமையான அர்த்தத்தில் இல்லையென்றாலும், ஒப்பீட்டளவில் 7.4ல் இருந்து 6.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது.

முன்னாள் கிழக்கு ஜேர்மனியில், ஜனநாயக சோசலிச கட்சி, சமூக ஜனநாயகக் கட்சியை விட அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. சமூக ஜனநாயகக் கட்சி மூன்றாவது வலுவான கட்சியாக வந்திருக்கிறது. Brandenburg மாநிலத்தில் 30.8சதவீத வாக்குகளைப் பெற்று ஜனநாயக சோசலிச கட்சி கிறிஸ்தவ ஜனநாயக கட்சியை விட உயர்ந்த மட்டத்தில் உள்ளது, சமூக ஜனநாயகக் கட்சி உடன் கூட்டணி சேர்ந்து கிறிஸ்தவ ஜனநாயக கட்சி அந்த மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிறது. நாடு முழுவதிலும் மிகக்குறைந்த அளவான 27 சதவீத வாக்குகள் தான் அந்த மாநிலத்தில் பதிவாகி உள்ளன.

''சமூக நீதி'' அறைகூவலை முன்னிறுத்தி ஜனநாயக சோசலிச கட்சி பிரச்சாரத்தை நடத்தியது. அந்தக் கட்சியே பேர்லினிலும், Mecklenburg Pomerania மாநில சட்டசபைகளில் கூட்டணி சேர்ந்து நலன்புரி வெட்டுத் திட்டங்களை செயற்படுத்திகொண்டிருந்தாலும், பல வாக்காளர்கள் மத்திய அரசாங்கத்தின் மீது தங்களது வெறுப்பை காட்டிக்கொண்டார்களே தவிர மாநில அரசாங்கங்களை அவ்வளவு முக்கியமாக கருதவில்லை, முன்னாள் மேற்கு ஜேர்மனியில் ஜனநாயக சோசலிச கட்சி 1.7 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது.

மேற்கு ஜேர்மனியில் பல பெரிய நகரங்களில் பசுமை கட்சிகள் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது, சமூக ஜனநாயகக் கட்சியை முந்திக்கொண்டு கிறிஸ்தவ ஜனநாயக கட்சி-கிறிஸ்தவ சமூக யூனியனுக்கு பின்னால் வந்தன. மூனிச்சில் (23.3 சதவீதம்), பிராங்பேர்ட் இல் (25-சதவீதமும்) பேர்லினில் (22.7- சதவீதம்), கொலோன், பொண் மற்றும் ஆகன் இல் இதேபாணியில்தான் வாக்குபதிவு நடந்தது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பசுமைக்கட்சி 11.9சதவீத வாக்குகளை பெற்றிருக்கின்றனர். நாடுதழுவிய வாக்குப்பதிவில் இதுதான் இதற்கு முன்னர் இல்லாத தலைசிறந்த முடிவாகும். என்றாலும் ஒட்டுமொத்த வாக்குகள் 3.1 மில்லியன், இது நாடாளுமன்றத் தேர்தல்களில் அவர்கள் பெற்ற 4.1 மில்லியன் வாக்குகளைவிட குறைவாகும்.

சமூக ஜனநாயகக் கட்சியின் சரிவினால் பசுமைகள் பயனடைந்திருப்பது, மேலெழுந்தவாரியாக போர்க்கும்போது முரண்பாடாக தோன்றும், மத்திய அரசாங்கத்தில் சமூக ஜனநாயகக் கட்சியோடு கூட்டு சேர்ந்து ஆறு ஆண்டுகளாக பசுமைகளும் நலன்புரி வெட்டுவதற்கு பலமாக கோரி வருகின்றன. அப்படியிருந்தும் அவர்கள் ஆதரவு சற்றுமாறுபட்ட சமூகத்தட்டிலிருந்து வருகிறது. அவர்களது கோட்டைகள் என்று கருதப்படுகிற நகரங்களில் பல மாணவர்கள், பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள் பொதுத்துறை ஊழியர்கள் வாழ்ந்து வருகின்றனர். சமுதாயத்தில் ஒரளவிற்கு வசதியோடு வாழ்ந்து வருகின்ற இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த வாக்காளர்கள் பொருளாதார மற்றும் சமூக முறையை ''நவீன மயமாக்குவதற்கு'' ''சீர்திருத்தங்கள்'' ஒரு அவசியமான நடவடிக்கை என்ற பிரச்சாரத்தை அதிக அளவில் ஏற்றுக்கொள்கின்றனர்.

ஐரோப்பிய தேர்தல்களோடு கிழக்கு ஜேர்மனி மாநில Thuringia இன் சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவு முடிவு சமூக ஜனநாயகக் கட்சியின் இழப்புக்கள் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள் போக்கால் பாதிக்கப்படவில்லை என்பதை காட்டுகின்றன. 14.5 சதவீத வாக்குகளை சமூக ஜனநாயகக் கட்சி பெற்றிருப்பது, அந்தக் கட்சியின் வரலாற்றில் மத்திய தேர்தல்களில் அது சந்தித்த இரண்டாவது படுமோசமான தோல்வி இது, இந்த மாநிலத்தில் தான் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமூக ஜனநாயகக்கட்சி நிறுவப்பட்டது. சமூக ஜனநாயகக் கட்சியின் ஆரம்பக்காலத்தில் திட்டங்களுக்கு தங்களது பெயர்களை தந்து உதவிய Erfurt மற்றும் Gotha நகரங்கள் Thuringia வில்தான் உள்ளன.

மாநில தேர்தலில் 54 சதவீத வாக்குப் பதிவு நடந்திருக்கிறது, கடந்த நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிடும்போது சமூக ஜனநாயகக் கட்சி நான்கில் மூன்று பங்கு வாக்குகளை இழந்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் 75 சதவீத வாக்குப்பதிவு நடந்தது. Thuringia வில் 579,000 பேருக்கு பதிலாக 147,000 பேரே சமூக ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கு Thuringia வில் வாக்களித்தனர்.

சமூக ஜனநாயகக் கட்சியின் தோல்வியிலிருந்து ஜனநாயக சோசலிச கட்சி பயனடைந்துள்ளது. மத்திய தேர்தலில் மிகச்சிறப்பாக 26.1 சதவீத வாக்குகளை ஜனநாயக சோசலிச கட்சி பெற்றிருக்கிறது. சென்ற நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிடும்போது கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் பங்கு சற்று அதிகரித்துள்ளது. (அப்போது அக்கட்சி படுமோசமான அளவிற்கு வாக்குகளைப்பெற்றது), சென்ற மாநில தேர்தலோடு ஒப்பிடும்போது 8 சதவீத வாக்குகளை இழந்தது. தாராளவாத ஜனநாயக கட்சியும் பசுமைக் கட்சியினரும் 5 சதவீத எல்லைக்கோட்டை எட்டுவதற்கு தவறிவிட்டதால் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி மாநில சட்டசபையில் அறுதிப்பெரும்பான்மையை நிலைநாட்ட முடிந்திருக்கிறது.

தேர்தல் சரிவிற்கு பதிலளிக்கின்ற வகையில் சமூக ஜனநாயகக் கட்சி விட்டுக்கொடுக்காத அறிவுரையை கூறியுள்ளது. மத்திய கூட்டாட்சி அதிபர் ஷ்ரோடர் தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்ளப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். ''இந்தக் கொள்கைகளை நாம் நீடித்தாக வேண்டும் ஏனென்றால் அவை புறநிலைரீதியாக அவசியமானவை'' எனவே ''நான் மற்றொரு கொள்கைக்காக வாதிடமுடியாது'' என்று ஷ்ரோடர் குறிப்பிட்டார்.

கட்சித் தலைவர் Franz Müntefering உம் கட்சியின் ''சீர்திருத்த'' நடவடிக்கையில் எந்த அடிப்படை மாற்றமும் செய்யப்போவதில்லை என்று அறிவித்தார். ''நான் நம்புகிறேன் நமக்கு அவகாசம் தேவை,'' என்று விளக்கினார். ஜேர்மன் குடிமக்கள் அந்த வெற்றியை ''இன்னும் உணரவில்லை''. வெற்றிகரமான சீர்திருத்தம் அளிப்பதை எடுத்துக்காட்டாக சுகாதார சேவையை புரிந்துகொள்ள அவகாசம் தேவை'' என்று குறிப்பிட்டார்.

சமூக ஜனநாயகக் கட்சித் தலைமையில் மாற்று அரசாங்க கொள்கையை எவரும் கோரவில்லை. கட்சியில் இடம்பெற்றுள்ள இடதுகள் என்று கூறிக்கொள்பவர்கள் அதிக கட்டுப்பாட்டை வலியுறுத்தினர். இளம் சோசலிஸ்டுக்கள் பிரிவின் முன்னாள் தலைவர் Andrea Nahles நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது மிகப்பெரும்பாலான அமைச்சர்கள் தங்களது துறைகளின் விவகாரங்களை பற்றியே கவலைப்படுகிறார்களே தவிர சமூக ஜனநாயகக் கட்சி நிலைப்பற்றி கவலைப்படவில்லை.'' என்று கூறினார். அதுபோன்ற கட்சித்தலைவர்கள் ஷ்ரோடரை விட தலைசிறந்த அதிபர் இல்லை என்று கருதுகின்றனர். ஆனால் ஷ்ரோடரின் ''அணி செயல்பாடு'' சமூக ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கை மேம்படுத்தவில்லை என்றால் கட்சியில் அணியை மாற்றுவதற்கு ''கூக்குரல்'' எழும் என்றும் கூறினார்.

ஷ்ரோடருக்கு ஊடகங்களும் ஜேர்மன் மத்திய தொழிலதிபர் அமைப்பும் (Federal Association of German Industry -BDI) ஆதரவு தெரிவித்தன.

அரசியல் வார இதழான Die Zeit ல் தலையங்கம் எழுதிய Michael Naumann, சமூக ஜனநாயகக் கட்சியும், அதிபரும் ''புயலுக்கு எதிராக பயணத்தை செய்யவேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு முன்னர் அந்த அரசாங்கத்தில் இடம் பெற்றிருந்த Naumann ''சீர்திருத்த நடவடிக்கைகள் கைவிட்டார்கள் என்றால், அவர்கள் முழுமையாக இழந்து விடுவார்கள்'' என்று எச்சரித்தார். ''ஷ்ரோடர் அரசியல் வாழ்வே பொதுமக்கள் அவரது திட்டங்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் அடங்கியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

தொழிலதிபர்கள் சங்கத்தலைவர்கள் Michael Rogowski ''உங்களை நம்பியிருக்கிறோம்'' என அதிபருக்கு உறுதியளித்தார். தேர்தல்கள் முடிந்து இரண்டுநாட்களுக்கு பின்னர் ஜேர்மன் மத்திய தொழிலதிபர் அமைப்பின் ஆண்டு மாநாடு நடைபெற்றது, அவர் அரசாங்கத்தை புகழ்ந்துரைத்தார், ''செயற்திட்டம் 2010'- போன்ற சீர்திருத்தத்திட்டத்தை ''கூட்டாட்சி குடியரசில் நீண்டகாலமாக கண்டதில்லை'' என்று குறிப்பிட்டார். சமூக ஜனநாயகக் கட்சி, பசுமை அரசாங்கம் தொடர்ந்து நடைபோட வேண்டியது மிக முக்கியமாகும். துன்பம் ஏற்பட்டாலும், விடாப்பிடியாக தொடர்ந்து நடைபோட்டாக வேண்டும், இடையில் நிறுத்திக்கொள்வது தோல்வியாகும், அத்தகைய தோல்வியை சந்திக்க வேண்டுமென்று நாங்கள் விரும்பவில்லை,'' என்று அந்க்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிபரை நோக்கி குறிப்பிட்டார்.

Brecht போன்ற பெரிய நாடக ஆசிரியர்களே கூட இன்றைய ஜேர்மனியின் அரசியல் நடப்புக்களில் காணப்படுகின்ற இதுபோன்ற காட்சிகளை இதைவிட அற்புதமாக சித்தரித்துவிட முடியாது. மில்லியன் கணக்கான வாக்காளர்களும், பல்லாயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்களும் சமூக ஜனநாயகக் கட்சியை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறனர். ஏனெனில் அவர்கள் சமூக ஜனநாயகக் கட்சியின் அரசியலை புறக்கணிக்கின்றனர். ஆனால் சமூக ஜனநாயகக் கட்சியின் பதில் என்ன? ''எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து நடைபோடுவோம்'' என்று அறிவிக்கிறது. இதில் ஆளும் ஸ்தாபனங்கள் முழுவதும் மிகப்பெரிய வர்த்தக அமைப்பு உட்பட ''உங்களைச் சார்ந்திருக்கிறோம்'' என்று ஷ்ரோடருக்கு உறுதியளித்துக் கொண்டிருகின்றன.

வெகுஜன பொதுமக்களுக்கும் அதிகாரபூர்வமான அரசியலுக்கும், இடையில் நிலவுகின்ற மகத்தான இடைவெளி இப்போது தெளிவாகத்தெரியாமல் இருக்கலாம்.

சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் எதிர்காலத்தைவிட மிக முக்கியமான பிரச்சனைகள் இதில் தொக்கி நிற்பதை Die Zeit பத்திரிகை புரிந்து கொண்டிருக்கிறது. 2005 மே இல் நடைபெறவிருக்கிற North-Rhine Westphalia மாநிலத்தில் நடைபெறவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் அந்த அரசாங்கம் வீழ்ந்துவிடும், வாக்காளர்கள் மிகப்பெருமளவில் வாக்குப்பதிவை புறக்கணித்துக் கொண்டு வருவது'' கூட்டாட்சி குடியரசின் சட்டபூர்வ தன்மைய குறித்து ஊர்ந்துவருகிற நெருக்கடியை காட்டுவதாக'' Die Zeit எழுதியிருக்கிறது. அரசியல் போக்கின் காரணமாகத்தான் நலன்புரி அரசு ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டது என்ற எண்ணம் வாக்காளர்களிடையே உருவாகியிருப்பதால் அரசாங்கத்தின் சட்டபூர்வமான நிலைப்பாடே நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. நாடு ஆட்சி செய்ய இயலாத அளவிற்கு சென்றுகொண்டிருக்கிறது. என்பதை சமுதாயத்தின் அச்ச உணர்வுகள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன வாக்காளர்கள் அதிருப்தி பெருகிக் கொண்டிருப்பதால் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி-கிறிஸ்தவ சமூக யூனியன் தலைமையிலான அரசையும் அது பாதிக்கும்'' எனறு Die Zeit சுட்டிக்காட்டுகிறது.

Naumann இன் அகங்கார தொனியை புறக்கணித்துவிட்டாலும், Die Zeit வார இதழில் அதிக ஊதியம்பெறும் பாதுகாப்பான தலையங்க எழுத்தாளர்களாக பெரும்பாலும் முன்னாள் அமைச்சர்களும் முன்னாள் மேலாளர்களும்தான் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். சமூக சீரழிவை வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது ''நாடு ஆட்சி செய்ய முடியாத'' அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது என்று காட்டுவதாக அவர் கூறிக்கொண்டிருக்கிறார். தனது நடவடிக்கையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமென்பதை ஒவ்வொரு அரசாங்கத்தின் கடமையாகும் என்பதை அவர் சந்தேகத்தில் விட வில்லை.

இப்படி பொதுமக்கள் மீது போர் பிரகடனம் செய்யப்பட்டிருப்பது, தொழிலாள வர்க்கம் உண்மையான சோசலிச புரட்சிகர அரசியல் முன்னோக்கை நோக்கி திரும்பவேண்டிய பணியை எதிர்நோக்குகின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved