World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய அமெரிக்கா, கரிபியன்Mexico summit: Europe seeks to challenge US domination of Latin America மெக்சிகோ உச்சி மாநாடு: இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு ஐரோப்பா சவால் விட முயல்கிறது By Paul Mitchell ஐரோப்பிய ஒன்றியம் (EU), இலத்தீன் அமெரிக்க மற்றும் கரிபியன் (LAC) பகுதிகளைச் சேர்ந்த 58 நாடுகளின் தலைவர்கள் சமீபத்தில் மெக்சிகோவில் ஒர் உச்சி மாநாட்டில், "தாங்களாகவே நடவடிக்கை எடுக்கும் நாடுகள்" என்று மறைமுகமாக அமெரிக்காவை விமர்சனம் செய்துள்ளன. மே 28-29 தேதிகளில் குவாடலஜரா நகரத்தில் நடந்த உச்சி மாநாடு, "ஈராக்கியக் கைதிகளை சிறைச்சாலைகளில் தவறாக நடத்தியது பற்றிய வெறுப்புணர்வை" வெளிப்படுத்தியதுடன், ஐக்கிய நாடுகள் மன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் அமெரிக்கா கையெழுத்திட மறுக்கும் சுற்றுச் சூழல் பற்றிய க்யோடோ ஒழுங்குமுறை உள்பட ஏனைய பலர் பங்கேற்கும் அமைப்புக்களை வலுப்படுத்தவேண்டியும் அழைப்பு விடுத்துள்ளது. LAC நாடுகள் நேரடியாக அதன் ஒருதலைப்பட்ச கொள்கைகளுக்காக அமெரிக்காவை நேரடியாக பெயரிட்டு அழைக்கவேண்டும் என்றும், கியூபாவில் நிறுவனங்களுக்கு பண உதவி கூடாது என்று கூறும் அமெரிக்க ஹெல்ம்ஸ் - பேர்ட்டன் திருத்தத்தைக் கண்டனம் செய்யவேண்டும் என்றும் விரும்பின; ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் இத்தகைய திட்டங்களை நிராகரித்துவிட்டது. கியூப அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு ஆட்டுமந்தை போல், வாஷிங்டனுக்கு அடிபணிந்து நிற்கும் அமைப்பு" என்று ஒப்பிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டது.ஆயினும்கூட, தங்கள் நலன்களை அமெரிக்க நலன்களுக்கு எதிராக உறுதிசெய்யவேண்டும் என்ற முயற்சி ஐரோப்பிய நாடுகளால் மேற்கொள்ளப்பட்டது. ஸ்பெயினின் பிரதம மந்திரி ஜோஸ் லூயி ஜாபெடெரா, ஐரோப்பாவும் இலத்தீன் அமெரிக்காவும், அதிகமாய் "சிதைந்து வரும் உலகில்" இணைந்து "ஒரு பொது அணியை" ஏற்படுத்திக் கோள்ளவேண்டும் என்று கூறினார். மெக்சிகோ அரசாங்கத்தை, ஈராக்கியப் போருக்கு ஆதரவு கொடுக்க "துணிவாக" மறுத்ததற்கும் அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்ததற்கும் அவர் பாராட்டினார்; இப்பாராட்டு பல நாட்டுத் தலைவர்களாலும் எதிரொலிக்கப்பட்டது. பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக்: "பல நாடுகளும் இணைந்து செயல்படுவது நம்முடைய காலத்தின் கட்டாயம். தோல்வியுற்ற நாடுகள் ஒருதலைப் பட்சமாக நின்று உலகின் சமநிலைக்கோ பேச்சுப் பின்னடைவுகளுக்கோ ஏதும் செய்ய முடியாமல் அச்சுறுத்தப்பட்டுள்ள நிலையை ஒருவர் நன்கு கவனிப்பது மட்டும் தேவை ஆகும்" எனக் கூறினார். அயர்லாந்தின் பிரதம மந்திரி பெர்டி ஆஹ்ரென் செய்தியாளரிடம்: "பல நாடுகளும் இணைந்து செயலாற்றுவது சரியான வழி மட்டும் அல்ல, திறமையான வழியும் அதுதான் என்பதைப் போற்றும் வகையில் நாம் நடந்து கொள்ளவேண்டும்" எனக் கூறினார். பல நாடுகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற அழைப்பு ஐரோப்பிய நாடுகளால் வற்புறுத்துவதற்குக் காரணம் அமெரிக்கா உலக ஆதிக்கத்திற்கு உந்துதல் பெற்று செய்யும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் இலத்தீன் அமெரிக்காவில் தங்களுடைய அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை வளர்த்துக்கொள்ளுவதற்கும்தான். முதல் EU, இலத்தீன் அமெரிக்க மற்றும் கரிபிய (EU-LAC) உச்சி மாநாடு 1999ல் ரியோ டி ஜெனிரோவில் நடந்தது; மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் அத்தகைய இரண்டாவது உச்சி மாநாடு மாட்ரிட்டில் நடைபெற்றது. மாட்ரிட் உச்சி மாநாட்டில் EU உடைய விருப்பங்களைத் தெரிவிக்கும் வகையில் ஐரோப்பிய கமிஷனர் கூறியிருந்தார்: "சமீப காலத்தில் இலத்தீன் அமெரிக்காவும் கரிபியனும் அடையாளம் காணமுடியாதபடி, பெரிதும் மாறிவிட்டன. கடந்த பத்து ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியமும் மாறியுள்ளது. யூரோ வெளியிடப்பட்டது. பொதுவான வெளிநாட்டுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் கொள்கை. இராணுவத் திறனிலும் சுயாட்சித்திறம் இருப்பதற்கு இவையெல்லாம் முதற்படிகள்." LAC பகுதிக்கு முன்னணி கொடையாளியாகவும், முக்கிய வெளிநாட்டு முதலீட்டு அமைப்பாகவும் EU மாறியுள்ளதற்கு ஒரளவு அடையாளமாக இந்த உச்சி மாநாடுகள் உள்ளன. 1990 லிருந்து 2000 வரையிலான ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்காவிற்கு மிகப் பெரிய முதலீட்டு ஆதாரமாக வந்துள்ளது; புதிதாக வரும் சந்தைகளுள் இலத்தீன் அமெரிக்கா, ஐரோப்பாவின் நேரடி வெளி முதலீட்டிற்கு முக்கிய இலக்காக உள்ளது. இலத்தீன் அமெரிக்காவில் EU வின் முதலீடு 13 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 42 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய நிறுவனங்கள், குறிப்பாக, ஸ்பெயினிலிருப்பவை, இலத்தீன் அமெரிக்க அரசாங்கங்களால் தொலைபேசித்துறை, நிதி நிறுவனங்கள், விமானப் போக்குவரத்து என்று பயன்பாட்டு சேவைகள் தனியார் மயமாகி இருப்பதைப் பயன்படுத்தி மிக சாதகமாக எடுத்துக் கொண்டுள்ளன.1990 களில் இருந்து 2000 வரையிலான காலத்தில் இலத்தீன் அமெரிக்காவுடனான வணிகம் இருமடங்காகியுள்ளது; ஆயினும் ஐரோப்பிய முதலாளித்துவம் ஒப்பீட்டு அளவில் இதன் வணிகம் 20 லிருந்து 15சதவீதத்துக்குக் குறைந்து விட்டதைப்பற்றிக் கவலைப்படுகிறது; இந்த அளவு நன்மை போட்டியாளரான அமெரிக்காவிற்குச் சென்றுவிட்டது. அமெரிக்கா ஒரு அமெரிக்க தடையற்ற வர்த்தக பகுதி ஒன்றை (Free Trade Area of the Americas -FTAA) தோற்றுவிக்க திட்டத்தைக் கொண்டுள்ளதால் இதுவும் கூட அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. அதற்கான திட்டம் OAS இனால் 1994ல் தற்காலிகமாக ஏற்கப்பட்டுவிட்டது; இது வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு (NAFTA) அமெரிக்கா, கனடா மெக்சிகோ ஆகியவற்றிற்கு இடையில் அதற்கு முந்தைய ஆண்டில் கையெழுத்தானதை மாதிரியாக உடையது. FTAA தோற்றுவிக்கப்பட்டதின் மூலம், அமெரிக்க பெரு வர்த்தகம், கனடிய மூலதனத்தின் உதவியுடன் மரபுவழியில் இலத்தீன் அமெரிக்கா மீதான தங்கள் பொருளாதார ஆதிக்கத்தை வலுப்படுத்தி, சமூகநிலைமைகளையும் ஊதியத்தரங்களையும் குறைப்பதன் மூலம் இன்னும் கூடுதலான மூலதனப் பெருக்கத்திற்கு ஏற்பாடு செய்யவும் நம்பிக்கை கொண்டுள்ளது. NAFTA வின்படி, மெக்சிகோவில் வெளிநாட்டு முதலீடு பெருமளவு உயர்ந்து விட்டது. இது நாட்டின் உயர் செல்வந்த தட்டை கொழுத்த பணம் உடையவர்களாகச் செய்துவிட்டது, ஆனால் பாமர மக்களுடைய நிலை இன்று 1980களில் ஆரம்பத்தில் இருந்ததைவிட மோசமாகிவிட்டது.கடந்த ஆண்டில், புஷ் நிர்வாகம், "அலாஸ்காவிலிருந்து டியரா டெல் ப்யூகோ வரை" திட்டங்களில் இருந்நு ஒரு குறுகிய வர்த்தக உடன்பாட்டிற்கு இறங்க வேண்டியதாயிற்று; இதன்படி, தனி நாடுகள் உடன்பாட்டில் எப்பகுதியைப் பின்பற்றும் என்பதை மட்டும் குறிக்கவேண்டும். உலக வர்த்தக அமைப்பின் பேச்சு வார்த்தைகள் கான்குனில் கடந்த ஆண்டு முறிந்ததை அடுத்து, அமெரிக்காவின் தலைமை வர்த்தகப் பேச்சு வார்த்தையாளர் ரொபேர்ட் ஜோலிக், இலத்தீன் அமெரிக்க நாடுகள் சில பிரேசில் தலைமையில் "செய்யாதே" என்றழைக்கப்படும் நோக்கை வலியுறுத்திவிட்டதால் அம்மோதலிலிருந்து இப்பின்வாங்கல் எழுந்தது என்று தெரிவித்தார். தனியார் மயமாக்குதல், வெளிநாட்டு ஆதிக்கம் இவற்றிற்கு எதிரான எதிர்ப்புக்கள் இலத்தீன் அமெரிக்காவை உலுக்கிக் கொண்டு சமூக வெடிப்பாக இருப்பதுதான் இத்தகைய தயக்கமான எதிர்விளைவு வந்துள்ளது. பொலிவிய அரசாங்கம் தன்னுடைய எரிவாயு இருப்புக்களை அமெரிக்க நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வைத்தபின் வீழ்ச்சியடைந்தது சமீபத்திய உதாரணமாகும். இதன் விளைவாக அமெரிக்க வர்த்தக அமைச்சர்களும் நிகரகுவா, எல் சால்வடோர், ஹோண்டுராஸ், குவாதிமாலா, கோஸ்டாரீகா ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய அமெரிக்கப் பொதுச்சந்தை பிரதிநிதியும் (CACM) இருதரப்பு முறையிலான மத்திய அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டை விரைவில் மேற்கொண்டனர். இந்த உடன்பாடு அமெரிக்க தேசிய சட்டமன்றத்திடம் இவ்வாண்டு பிற்பகுதியில் "விரைவான பரிசீலனைக்காக" சமர்ப்பிக்கப்படும். ஒரு சில மணி நேர விவாதம், ஒரே ஒரு வாக்கு, முழு உடன்பாட்டையும் ஏற்க அல்லது மறுக்க என்று மட்டும்தான் நடவடிக்கை இருக்கும். திருத்தங்கள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டா. இலத்தீன் அமெரிக்க முதலாளித்துவம் தான் தொடர்ந்து பொருளாதார முறையியில் ஒதுக்கிவைக்கப் படுவதற்கு ஈடாக ஐரோப்பாவுடன் நெருங்கிய தொடர்பைக் கொள்ள விரும்புகிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அடுத்தடுத்து வரும் இலத்தீன் அமெரிக்க அரசாங்கங்கள் அரசாங்கத் தொழில்கள், இறக்குமதி பதிலீடு மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட சமூக நலத் திட்டங்கள் ஆகியவற்றையெல்லாம் மாற்றி வருகின்றன. அரசாங்கம் நடத்திவந்த நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்போது, ஊதியங்களில் பெரும் குறைவு, வெளிநாட்டு மூலதன வரவு ஆகியவை பொருளாதார வளர்ச்சியில் தீவிர முன்னேற்றத்தை, குறைந்த காலத்திற்கு என்றாலும், ஏற்படுத்தி மத்தியதர வர்க்கத்தின் உயர்தட்டுக்களுக்கு செல்வத்தைக் கொழிக்க வைத்துள்ளது. குவாடலஜாரா உச்சி மாநாட்டுச் செயற்பட்டியலில் ஏற்றுள்ளபடி, "வளர்ச்சியில் நன்மைகள் பெரும்பாலான மக்களுக்குச் சென்றடையவில்லை." இப்பகுதி உலகிலேயே சமத்துவமற்ற தரங்களில் உயர்ந்தவையில் ஒன்றாகக் காணப்படுகிறது; செல்வப் பெருக்கு உடைய 20 சதவீத மக்கள் நாட்டின் 60 சதவீத தேசியவருமானத்தைக் கொண்டுள்ளனர்; மிக ஏழைகள் அனைவரையும் கொண்டுள்ள 20 சதவிகிதத்தினர் 4 சதவீதத்தையே வருமானமாகக் கொண்டுள்ளனர். ஐரோப்பாவின் தலைவீத வருவாய் 24,582 அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது இலத்தீன் அமெரிக்காவின் வருமானத் தரங்கள் தலைவீத வருவாய் ஆண்டு சராசரி 3,207 அமெரிக்க டாலர்கள் இருக்கிறது. உலகின் 12வது பெரிய பொருளாதராம் எனத் தரமிடப்பட்டுள்ள, பிரேசில் இன்னும் தன்னுடைய மக்கட்தொகையில் 22 சதவிகிதத்தினரை வறுமைக் கோட்டிற்குக் கீழ் கொண்டுள்ளது. ஒப்பீட்டளவில் வருமானம் குறைவாக உள்ள செக்கோஸ்லேவியா குடியரசுக்கு நிகராகத்தான் Sao Puolo மாநிலத்தில் தலைவீத வருவாய் இருக்கிறது. ஆனால் மரன்ஹாவோவில் இது கிட்டத் தட்ட பாகிஸ்தான் அளவிற்கு இருக்கிறது. 1995 அளவில், இலத்தீன் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி பெரிதும் தளர்ந்துவிட்டது; 2001 ல் ஆர்ஜன்டினா தன்னுடைய 132 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுக் கடன்களை கிட்டத் தட்டத் திருப்பித்தர மறுத்து அச்சுறுத்தியது. இதன் விளைவாக ஏற்பட்டுள்ள வேலையின்மையும், ஒரு காலத்தில் பெற்றிருந்த சமூக நலன்கள் அழிப்பும் பகுதி முழுவதும் சக்திவாய்ந்த எழுச்சிக்கு வகை செய்துள்ளன. ஆனால் இவை அனைத்தும் தேர்தலில் "முதலாளித்துவ-எதிர்ப்பு" தலைவர்கள் என்று கூறப்பட்ட பிரேசிலின் ஜனாதிபதி லூயி இனாஷியோ லூலா ட சில்வா மற்றும் ஆர்ஜன்டினாவின் நெஸ்டர் கிர்ஷ்னெர் ஆகியோர்பால் திசை திருப்பப்பட்டன. தொழிலாள வர்க்கத்திற்கு, அவர்கள் பொருளாதாரச் சமத்துவத்திற்கும், தூய்மையான அரசாங்கம் அமைப்பதற்கும் ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொண்டு, சர்வதேச நிதி அமைப்பிற்கும், வங்கிகள் இவற்றிடம் வெளிநாட்டு மூலதனம் பாதுகாக்கப்படும் என்றும் கூறினர். ஸ்ராலினிச, நடுத்தர வகுப்பின் "இடது" குழுக்கள் இவற்றின் ஆதரவினால், தொழிலாள வர்க்கத்துடன் வெளிப்படையான மோதல் இல்லாமல் பாரம்பரிய முதலாளித்துவக் கட்சிகள் செயல்படுத்த முடியாத வலதுசாரிக் கொள்கையை மேற்கூறிய அரசாங்கங்கள் செயல்படுத்துகின்றன. சர்வதேச வங்கிகளின் கோரிக்கைகள், ஆர்ஜர்டின, பிரேசிலிய தொழிலாளர்கள் இவர்களின் கோரிக்கைகளுக்கிடையே அகப்பட்டுக் கொண்டாலும், லூலாவும் கிர்ஷ்நெரும் ஒரு வலுவான பொருளாதார ஒன்றியத்தின் முலம் பொருளாதார அரசியல் நிலைப்பாட்டை, இருநாடுகள் மற்றும் பரகுவே, உருகுவே இவற்றையும் இணைத்துக் கொண்டுவந்து Mercosur பொதுச்சந்தை என்ற பெயரில், அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே சமன்படுத்தும் கலையில் ஈடுபட்டுள்ளன இந்த EU-LAC உச்சி மாநாட்டின் விளைவு Mercosur மற்றும் EU விற்கும் இடையே தடையற்ற வர்த்தகம் என்ற முக்கியமான கருத்து வரப்போவதாக அறிவித்தது ஆகும்; இது இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைமுறைக்கு வரும். மெர்கோசுர் என்பது இலத்தீன் அமெரிக்காவில் பெரும்பாலும் ஐரோப்பாவின் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதியாகும்; அதன் இறக்குமதிச் சதவிகிதத்தில் பெரும்பகுதியை EU விலிருந்து பெறுகிறது. EU மெர்கோசுர் உடைய பெரும் ஏற்றுமதிச் சந்தையும் ஆகும்; EU வின் விவசாய இறக்குமதிகளில் இப்பகுதியில் இருந்து வருபவை 16 சதவிகிதம் ஆகும். ஐரோப்பிய ஒன்றியம் CACM மற்றும் மூன்றாம் இலத்தீன் அமெரிக்க வர்த்தக முகாம்- ஆண்டியன் சமூகம் என பொலிவியா, கொலம்பியா, ஈக்வடார், பெரு, வெனிசுலா இவற்றைக் கொண்டதுடனும்- இலத்தின் அமெரிக்க நாடுகள் பொருளாதார ஒத்துழைப்பையும், வர்த்தகத்தையும் தம்மிடையே பெருக்கியவுடன்தான் கையெழுத்திடப்பட முடியும் என்று கூறியிருக்கிறது. CACM நாடுகளுக்கிடையே சுங்க ஒன்றியத்தைக் கொண்டு வரும் திட்டம், "ஏராளமான வர்த்தகப் பேச்சு வார்த்தைகள், மூன்றாம் அமைப்புக்கள் அதிலும் குறிப்பாக சமீபத்தில் அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள தடையற்ற வர்த்தகம் (CAFTA) போன்றவற்றால், செயல்படுத்த இயலாமல் இருப்பதாகக்" குறைகூறியுள்ளது. மெக்சிகோவும், சிலி நாடும் எந்தக் குறிப்பிட்ட பகுதிக்குழுக்குள்ளும் இல்லாததன் காரணமாக அவை இருபுறத்து பொருளாதார, அரசியல் உடன்பாடுகளை EU உடன் 1997 லிலும், 2002 லும் முறையே கொண்டுள்ளன. ஆயினும், EU-LAC நிறுவப்பட்டது தடையற்ற வர்த்தக பகுதிகளை ஆபத்திற்கும் உட்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடப்படவேண்டும். கடந்த ஆண்டு உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகள் கான்குனில் தோல்வியுற்றபின், பிரதிநிதிகள், வர்ணனையாளர்கள் கொடுத்த கருத்தாய்வு ஏழை மற்றும் பணக்கார நாடுகளுக்கு இடையே பெரும் விரோதப்போக்கு இருப்பதைத் தெரிவித்தும், இப்பொழுதுள்ள பலநாட்டு ஒப்பந்தங்களுக்குப் பதிலாக இருபுறத்து ஒப்பந்தங்களும் வர்த்தக முகாம்களும் அமைக்கப்பட்டால் நல்லது என்ற கருத்தையும் தெரிவித்தன. Financial Times குறிப்பிட்டுள்ளது; "பல வர்த்தக வல்லுனர்களையும் திகைக்க வைக்கும் தோற்றம் கொண்டு, நாடுகள் கூடுதலான உற்சாகத்துடன் பகுதி, உள்வட்ட உடன்பாடுகளுக்கு செல்வர்; ஏற்கனவே உலகு எங்கிலும் இத்தகைய உடன்பாடுகளுக்கு கூடுதலான வரவேற்பு உள்ளது. இது அரசியல் கவனத்தை WTO விலிருந்து திருப்புவதுடன், காலப்போக்கில் பலநாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்களின் விதிமுறைகளுக்கான மதிப்பை கீழறுத்துவிடும் " என்று குறிப்பிட்டுள்ளது. பன்முறை ஒப்பந்தங்களுக்குத்தான் மதிப்பு எனக்கூறியபோதிலும், EU மற்றும் LAC இரண்டுமே இரு புறத்து வர்த்தகக் கூட்டுக்களின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயலுகின்றன. கடந்த ஆண்டு ரியோ குழு நடத்திய வழிகாட்டும் கூட்டம் ஒன்றில், EU - LAC உச்சி மாநாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகளுக்கு வழிகாட்டியது, "வர்த்தக பாதுகாப்பு முறையில் அதிகரித்த தொல்லை பற்றி, குறிப்பாக தொழில் வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் கூடுதலான அக்கறை இருக்கும் போக்குத்தான் உள்ளது" என்று குறிப்பிட்டது. குவாடலஜாராவில், LAC நாடுகள் EU நாடுகளால் விவசாய உதவித் தொகையாக 45 பில்லியன் டாலர்கள் ஆண்டு ஒன்றுக்கு கொடுத்ததை பற்றி விவாதிக்க விரும்பின; ஆனால் EU பிரதிநிதிகள் இதற்கு ஒப்பவில்லை. மெக்சிகோ நாட்டு வெளியுறவு அமைச்சர் லூயி எர்னெஸ்டோ டெர்பெஜ் கூறினார்: "எங்களுக்கு அது பிடிக்கவில்லை; எனக்கு அது பிடிக்கவில்லை". இலத்தின் அமெரிக்க நாடுகள் மீண்டும் ஐரோப்பாவை இதுபற்றிச் சிந்திக்க வற்புறுத்தவேண்டும். அதிகரித்துவரும் ஸ்திரமின்மை காரணமாக EU ஆண்டியன் சமூகத்துடன் (Andean Community) எந்தவித உடன்பாடு கொள்ளவும் கவலை காட்டுகிறது. பொலிவியா, அதன் பழைய ஜனாதிபதி Sanchez de Lozada ராஜிநாமா செய்தபின்னரும் "நெருக்கடியான நிலையில்" இருக்கிறது மற்றும் வெனிசூலா ஜனாதிபதி ஷேவேஜ் உடைய ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையிலான பூசலினால் பிளவுற்றிருப்பதாகவும் அது குறித்துள்ளது. ஈக்வடோரின் ஜனாதிபதி குடிரெஜ், "நாட்டின் பழங்குடி மக்களின் ஆதரவை இழந்துவிட்டதாகவும்", கொலம்பியாவில் அரசாங்கம், கொரில்லாக்கள், போதைக் கும்பல் இவற்றிற்கிடையே நடக்கும் "பூசல்கள்" உறுதியற்ற தன்மையைக் கொண்டிருப்பதாகவும் குறித்துள்ளது. EU-LAC தடையற்ற வர்த்தக பகுதி என்ற கருத்துப்படிவமே இப்பொழுது அடிப்படை சிக்கலினால் - உலகளாவிய, ஒன்றுபட்ட உற்பத்திமுறையின் தன்மைக்கும் மற்றும் பூசலிடும் போட்டி மிக்க தேசிய அரசுகளாக உலகம் பிளவுற்றிருப்பதற்கும் இடையிலான முரண்பாடு- பாதிப்பு அடைந்துள்ளது. உலகின் பல பகுதிகளுக்கு இடையே பொருளாதார உறவுகள் மேலும் வளர்ச்சியடையும் போது, உலகச் சந்தை கூடுதலான முறையில் தனித்தனி நாடுகள் தங்களின் சொந்த சுய நலன்களை பின்பற்றும் பகுதி கூட்டுக்களாக சிதையும் போக்குகளுக்கு ஆளாகும் ஆபத்தும் உள்ளது.பலரும் பங்குகொள்ளும் பன்முகத்தன்மை அடிப்படையிலான உலகைப் பற்றிப் பேசும்போழுதே, ஒவ்வொரு நாடும் உச்சிமாநாட்டை தன்னுடைய நலனைப் பெருக்குவதற்குப் பயன்படுத்துகிறது. ஜாபடெரோ, ஸ்பெயின் தன்னை ஐரோப்பிய முகாமிற்கும் இலத்தின் அமெரிக்காவிற்கு ஒரு "பாலம்" போல் பார்க்கிறது என்றும் தேவையானால் ஹைட்டிக்குப் படைகளை அனுப்பும் திட்டத்தைப் பரிசீலனை செய்வதாகவும் கூறினார். ஜேர்மன் அதிபர் ஷ்ரோடர் உச்சி மாநாட்டில் சீர்திருத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் ஒரு நிரந்தர இடம் பெறும் ஜேர்மனியன் ஆவலுக்கு பரந்த ஆதரவு இருப்பதாகக் கூறினார்; இது "சர்வதேச விவகாரங்களில் ஜேர்மனி எவ்வாறு பொறுப்புணர்வுடனும், அக்கறையுடனும் நடந்து வருகிறது" என்பதற்கு சான்றாக இருப்பதாக அவர் கூறினார். பிரேசில் நாடும் பாதுகாப்புக் குழுவில் ஒரு நிரந்தர உறுப்பினராவதற்கான பேரவாவை கொண்டுள்ளது. |