:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan president resorts to another extra-constitutional measure
இலங்கை ஜனாதிபதி மேலுமொரு மிகை அரசியலமைப்பு நடவடிக்கையை நாடுகிறார்
By K. Ratnayake
19 June 2004
Back to screen
version
இலங்கை அரசியலமைப்பின் கீழ், நாட்டின் ஜனாதிபதி, ஒவ்வொரு ஆறு வருட காலப்பகுதியினதும்,
மற்றும் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் பாராளுமன்ற கூட்டம் ஆரம்பிக்கும்போது பாராளுமன்றத்தில் கொள்கைப்
பிரகடன அறிக்கையை வெளியிடுபவராக எதிர்பார்க்கப்படுவார். அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கான திட்ட வரைபடமாக
கருதப்படும் இந்தப் பேச்சு, விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் அதை ஏற்றுக்கொள்வதா நிராகரிப்பதா
என்பதையிட்டு வாக்கெடுப்பும் நடத்தப்படும்.
எவ்வாறெனினும், கடந்த வாரம் பாரம்பரியத்தையும் அரசியலமைப்பையும் உடைத்தெறிந்த
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, "அரசாங்கத்தின் கொள்கை மற்றும் எதிர்கால நடவடிக்கைத் திட்டம்" பற்றி தேசிய
தொலைக்காட்சியில் பேசினார். பாராளுமன்றத்தை ஓரங்கட்டுவதன் மூலம் அவர் விவாதத்தையும் வாக்கெடுப்பையும் தவிர்த்துக்கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு பாராளுமன்றப் பெரும்பான்மை இல்லாத நிலையில், குமாரதுங்கவின் பேச்சு
அங்கீகரிக்கப்படுவதற்கு உத்தரவாதம் இருக்கவில்லை.
குமாரதுங்கவின் நடவடிக்கையானது, ஆட்டங்கண்டுபோயுள்ள அவரது சிறுபான்மை அரசாங்கத்தை
தூக்கிநிறுத்துவதன் பேரில் அரசியலமைப்பையும் பாராளுமன்ற ஒழுங்குமுறைகளையும் புறக்கணிப்பதில் அவரது தயக்கமின்மையை
மேலுமொருமுறை அம்பலப்படுத்துகிறது. பாராளுமன்ற ஒழுங்குகள் அமளிதுமளியான நிலையில் அவர் அதிகரித்தளவில் நேரடயாகவே
அதிகாரங்களை தனது கைக்குள் எடுத்துக்கொள்கின்றார்.
குமாரதுங்க, கடந்த பெப்ரவரியில் முன்னைய ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கம்,
விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களில் தேசிய பாதுகாப்பை கீழறுப்பதாக குற்றம் சாட்டி அதை பதவி விலக்கினார்.
அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க), ஏப்பிரல் 2 தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிங்களத் தீவிரவாத
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஏனைய சிறிய கட்சிகளையும் சேர்த்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை
ஸ்தாபித்தது. சுதந்திரக் கூட்டமைப்பு பெருமளவிலான ஆசனங்களை --105-- வென்ற போதிலும், 225 உறுப்பினர்களைக்
கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மையின்றி உள்ளது.
தேர்தல் முடிந்ததில் இருந்து பாராளுமன்றம் நான்கு நாட்கள் மட்டுமே கூடியது. இந்த
நான்கு அமர்வுகளும், சபாநாயகர் மற்றும் ஏனைய அலுவலர்களை நியமிக்கும் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை
மேற்கொண்டது. ஆனால், ஒவ்வொரு சந்தர்ப்பமும், எதிர்க்கட்சி பெரும்பான்மையை பெறுவதை தடுக்கும் முயற்சியில்
ஆளும் கூட்டணியின் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட குழப்பங்களிலேயே முடிவுற்றது. இந்த முரண்பாடுகள், நாட்டின் ஆளும்
கும்பல்களுக்கிடையிலான கூர்மையான பிளவுகளை உக்கிரமாக்க மட்டுமே சேவை செய்தன.
குமாரதுங்கவும் அவரது அமைச்சர்களும் ஏனைய கட்சிகளுடன் திரைக்குப் பின்னால்
வெறித்தனமான பேரம்பேசல்களில் ஈடுபட்டுவருகின்றனர். ஜூன் 8ம் திகதி நான்காவது அமர்விற்கு முன்னதாக, சபையில்
பெரும்பான்மையை நிரூபிப்பதாக அரசாங்கத் தலைவர்கள் பெருமை பேசிக்கொண்டார்கள். அவர்கள் ஐ.தே.மு வில்
கூட்டுச் சேர்ந்துள்ள வலதுசாரி ஜாதிக ஹெல உறுமயவின் (ஜே.எச்.யு) இரண்டு உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் (ஸ்ரீ.ல.மு.கா) நான்கு உறுப்பினர்களின் ஆதரவை கணக்கில் வைத்துக்கொண்டுள்ளனர்.
ஏப்பிரல் 2 தேர்தலில் முதல் தடவையாக 9 ஆசனங்களை வென்ற ஜாதிக ஹெல உறுமய
(ஜே.எச்.யு), தனது கட்சியைச் சார்ந்த அரசாங்க சார்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பதவி விலகுமாறு
நெருக்கிவருகின்றது. ஆயினும், சுதந்திரக் கூட்டமைப்பு, அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டவர் பாராளுமன்றத்தில்
பதவிப்பிரமாணம் செய்வதை தடுப்பதற்காக ஒரு நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்வதற்கு உதவியது. ஜூன் 8
அமர்வின்போது விவகாரம் பூதாகரமாகியது. நீதிமன்ற உத்தரவு விநியோகிக்கப்பட்டிராத நிலையில், எதிர்க்கட்சியால்
நியமிக்கப்பட்ட சபாநாயகர் ஜே.எச்.யு பாராளுமன்ற உறுப்பினர் பதவி பிரமாணம் செய்துகொள்வதை அனுமதித்தார்.
இதைத் தடுப்பதற்காக ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்கள் மல்லுக்கட்டல்களில் ஈடுபட முயற்சித்த
போது கைகலப்பு ஏற்பட்டது. பாராளுமன்றம் மீண்டும் ஜூலை 20 வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த அமளிதுமளிகள் பற்றிய கொழும்பு ஊடகங்களிலான பரந்த விமர்சனங்களுக்கு மத்தியில்,
குமாரதுங்க இந்த முறைகேடான செயலைக் "கண்டனம்" செய்திருந்த போதிலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக
எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பெரும்பான்மையின்றி இருந்த போதிலும், அமளிதுமளியான அமர்வின் நான்கு
நாட்களின் பின்னரும் ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுவதற்காக ஊடகங்களைப் பயன்படுத்தினார்.
அதன் உள்ளடக்கம் அவரது நிர்வாகத்தைச் சூழவுள்ள முரண்பாடுகளை வெளிச்சம்போட்டுக் காட்ட மட்டுமே பயன்பட்டது.
கடந்த இரு மாதங்களாக குமாரதுங்கவின் பிரச்சினைகள் தொடர்ந்தும் குவிந்துவருகின்றன.
நாட்டை ஸ்திரநிலைப்படுத்துவதன் பேரிலும் மற்றும் மலிவு உழைப்பு மேடையாக மாற்றவதன் பேரிலும், விடுதலைப்
புலிகளுடன் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு பெரும்
வல்லரசுகள் குமாரதுங்கவை நெருக்கிவருகின்றன. ஜூன் முற்பகுதியில் பிரசல்ஸில் சந்தித்த அமெரிக்கா, ஐரோப்பிய
ஒன்றியம் மற்றும் ஜப்பான் உட்பட நிதி உதவி வழங்கும் நாடுகள், "சமாதான முன்னெடுப்புகள்" மீண்டும்
ஆரம்பிக்கப்படுவதைப் பொறுத்தே 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கப்படும் என எச்சரித்துள்ளன.
பண நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு கடன்களும்
நிதி உதவியும் அவசியமாகியுள்ளது. ஆயினும், சமாதானப் பேச்சுக்கள் நோக்கிய அதன் தலைகீழ் மாற்றமானது, சற்றே
சில மாதங்களுக்கு முன்னர், விடுதலைப் புலிகளுக்கு நாட்டை விற்றுத்தள்ளுவதாக அரசாங்கத்தை கண்டனம் செய்த
கூட்டமைப்பிற்குள் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தைகள் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு இடைக்கால
தன்னாட்சி அதிகார சபையை ஸ்தாபிக்கும் பிரேரணையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற விடுதலைப்
புலிகளின் பிரதான கோரிக்கையை ஜே.வி.பி எதிர்க்கின்றது.
இதன் விளைவாக, சமாதான பேச்சுக்கள் பற்றிய குமாரதுங்கவின் பிரகடனங்கள்
நாடகபாணியிலான திரிபுக்களாலும் திருப்பங்களாலும் நிறைந்து போயுள்ளன. முன்னர் மத்தியஸ்தராக கடமையாற்றிய
நோர்வே, இப்போது "விடுதலைப் புலிகளுக்கு சார்பாக" இருப்பதாக குற்றம் சாட்டும் ஜே.வி.பி யினதும் மற்றும்
ஏனைய சிங்களத் தீவிரவாதக் குழுக்களினதும் எரிச்சலுக்குள்ளாகியுள்ளது. ஜே.வி.பி யினரின் விமர்சனங்களுக்கு
முகம்கொடுத்த குமாரதுங்க, நோர்வே அலுவலர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தியபோதிலும் நிகழ்ச்சி நிரலைத்
தயார்செய்யவும் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு திகதியை அறிவிக்கவும் அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார்.
ஜூன் 8 பாராளுமன்றத்திலான குழறுபடிகளை அடுத்து, விடுதலைப் புலிகளுடன்
அணிசேர்ந்துள்ள தமிழ் கட்சிகளின் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் குமாரதுங்க பேச்சுவார்த்தை
நடத்தினார். தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஜனாதிபதி விடுதலைப் புலிகளின் தன்னாட்சி அதிகாரசபை
கோரிக்கையையிட்டு அக்கறை செலுத்துவதாக வாக்குறுதியளித்தார் என ஊடகங்களுக்கு தெரிவித்தார். உடனடியாகக் கூடிய
ஜே.வி.பி யின் அரசியல் குழு, தன்னாட்சி அதிகார சபை பற்றிய பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டால் "கடுமையான
நடவடிக்கைகள்" எடுப்பதாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்தது.
குமாரதுங்க அவரது கடந்த வார பேச்சில் பின்வாங்கினார். எதுவும்
தீர்மானிக்கப்படவில்லை என அவர் பிரகடனம் செய்தார். "இரு கட்சிகளும் அடுத்த சுற்று சமாதானப்
பேச்சுவார்த்தைகள் எதைப்பற்றியதாக இருக்க வேண்டும் என்பதையிட்டு இன்னமும் திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன," என
அவர் தெரிவித்தார். அவரது அறிக்கை விடுதலைப் புலிகளின் ஆத்திரத்தை தூண்டியதோடு, அவர்கள் முன்னைய வாக்குறுதியை
கைவிட்டதற்காக குமாரதுங்கவை குற்றம்சாட்டியதுடன், அவரது "வஞ்சகத்தன்மையையும்" கண்டனம் செய்தனர். விடுதலைப்
புலிகள், பேச்சுவார்த்தைகள் முடிவின்றி தாமதப்படுத்தப்படுமானால் மீண்டும் யுத்தத்திற்கு திரும்பவேண்டி வரும் என
எச்சரித்ததோடு பேச்சுவார்த்தைக்காக கொழும்பு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு "சர்வதேச சமூகத்தை"
தூண்டியது.
விடுதலைப் புலிகள் தனது சொந்த தட்டுக்களில் பிரதான பிளவுக்கு முகம்கொடுக்கின்றது.
ஏப்பிரல் 2 தேர்தலுக்கு சற்று முன்னதாக, பதவி மற்றும் வளங்களில் ஏகபோக உரிமை கொண்டாடுவதாக "வடக்கு"
தலைமையை குற்றம் சாட்டிய விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்திய இராணுவத் தளபதியான கருணா என்றழைக்கப்படும்
வி. முரளீதரன், அதிலிருந்து பிரிந்து சென்றார். ஏப்பிரலில், விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு- அம்பாறை பிரதேசத்தை
மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அதேவேளை, படுகொலைகள் மற்றும் இரு குழுக்களுக்கும் இடையிலான
கீழ் மட்ட மோதல்கள் பற்றிய அறிக்கைகள் தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணமுள்ளன.
அதே சமயம், வாழ்க்கை நிலைமைகள் மீதான தொடர்ச்சியான வீழ்ச்சியையிட்டு
அதிகரித்துவரும் அதிருப்திக்கும் புதிய அரசாங்கம் முகம்கொடுத்துக்கொண்டிருக்கின்றது. கடந்த சில வாரங்களாக அரிசி
உட்பட அடிப்படைப் பொருட்களின் விலைகளில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்
மே மாதத்தில் மாத்திரம் 3,598 வரை 120 புள்ளிகளால் அல்லது 3.5 வீதத்தால் அதிகரித்தது.
தேர்தலின் போது, சுதந்திரக் கூட்டமைப்பு ஐ.தே.மு அரசாங்கத்தின் பொருளாதார
மறுசீரமைப்பை கண்டனம் செய்ததோடு அதன் கொள்கைகளை தலைகீழாய் மாற்றுவதாகவும் வாக்குறுதியளிப்பதன் மூலம்
வெகுஜனங்களின் அதிருப்தியை சுரண்டிக்கொண்டது. இப்போது அதிகாரத்திற்கு வந்த பின்னர், சுதந்திரக் கூட்டமைப்பிற்கு
தமது கொள்கைகளை அமுல்படுத்த நிதிப் பற்றாக்குறையாக இருப்பதோடு மற்றும் பொருளாதார மறுசீரமைப்பையும்
தனியார்மயமாக்கலையும் முன்னெடுக்கக் கோரும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அழுத்தங்களுக்கு
உள்ளாகிவருகின்றது.
சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள், கணிசமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்
இல்லாவிடில் தீவு பூராவுமான காலவரையறையற்ற வேலை நிறுத்ததுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என அரசாங்கத்திற்கு
இறுதிக் கெடு விதித்துள்ளன. பல்தேசிய பாட்டா கம்பனி உட்பட்ட தனியார் துறை ஊழியர்கள், வெளியேறும் ஊழியர்களுக்கு
வழங்கப்படும் நட்டஈட்டை குறைப்பதற்காக ஐ.தே.மு உருவாக்கிய சட்டத்தை திருத்தியமைக்குமாறு அரசாங்கத்தை
நெருக்குவதற்காக ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன.
வடக்கு நகரமான யாழ்ப்பாணத்தில், ஜூன் 17 அன்று சமாதானப் பேச்சுவார்த்தைகளை
மீண்டும் தொடங்குவது மற்றும் வடக்கு கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவது உட்பட 4 கோரிக்கைகளை
முன்வைத்து 50,000 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கணிசமான பிரதேசங்களை வளைத்துக்கொண்டுள்ள இராணுவத்தால்
அமைக்கப்பட்ட இந்த பாதுகாப்பு வலயங்களில் இருந்து தமது வீடுகள், நிலங்கள் மற்றும் வியாபார நிலையங்களை
கைவிட்டுச் செல்லத் தள்ளப்பட்டுள்ளனர்.
குமாரதுங்கவும் சுதந்திரக் கூட்டமைப்பும் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள ஆறு
மாகாண சபைகளுக்கான தீர்க்கமான தேர்தல்களை எதிர்கொண்டுள்ளனர். உறுதியான வெற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்களின்
ஆதரவைப் பெற உதவும். ஆனால் தோல்வி அழிவுகரமானதாக இருக்கும். குமாரதுங்கவின் பேச்சு, வெகுஜனங்களின்
கண்களைக் கட்டும் அதேவேளை, தேசிய பொருளாதாரத்தையும் சிறு வியாபாரத்தையும் அபிவிருத்தி செய்வது பற்றிய
வாய்வீச்சுக்கள் மூலம் தனது பேரினவாத கூட்டாளியான ஜே.வி.பி யை சாந்தப்படுத்துவதையும் இலக்காகக்
கொண்டிருந்தது. சுதந்திரக் கூட்டமைப்பின் பிரச்சினை என்னவென்றால், சாதாரண உழைக்கும் மக்கள் மத்தியில் முழு
அரசியல் நிறுவனத்தையிட்டு பரந்த அவநம்பிக்கை இருந்துகொண்டுள்ளதாகும்.
எதிர்க் கட்சியான ஐ.தே.மு அரசாங்கத்தின் பிரச்சினைகளை அதிகரிக்கச் செய்கின்றது.
அது பாராளுமன்றத்தில் உள்ள பூசல்களை ஜாதிக ஹெல உறுமயவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்காக
பயன்படுத்தியது. இப்போது எதிர்ப்பு இயக்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அது தனக்கு பெரும்பான்மை இருப்பதை
உறுதிப்படுத்துவதற்காக 117 கையொப்பங்களை பெற்றுள்ளது. இந்தப் பட்டியல் சபாநாயகருக்கு கையளிக்கப்படவுள்ளது.
ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்து அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக இல்லாத
போதிலும், குமாரதுங்கவும் சுதந்திரக் கூட்டமைப்பு அந்த அச்சறுத்தலுக்கு தொடர்ந்தும் முகம்கொடுக்கின்றனர்.
குமாரதுங்க அதிகாரத்தில் தொங்கிக்கொள்வதில் நம்பிக்கையின்றி உள்ளார். அவரது பேச்சு
மிகை பாராளுமன்ற மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான வழிவகைகள் ஊடாக ஆட்சி செலுத்துவதற்கான சமிக்ஞையை
சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்தியுள்ளது. "அரசாங்கமானது", மக்கள் சக்தி மற்றும் செயற்திறம், திறமையுடன்
அரசாங்கத்தை முகாமைப்படுத்துவதற்கு தேவையான தகுதியையும் கொண்டுள்ளது," என அவர் பிரகடனம் செய்தார்.
ஆயினும், "இருந்துகொண்டுள்ள தேர்தல் முறையால் மக்களின் வாக்கை ஒரு நியாயமற்ற முறையில் கையாள்வதன்
காரணத்தால் பாராளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மையை நிரூபிப்பதில் அக்கறை செலுத்துகின்றது," என அவர் மேலும்
தெரிவித்தார்.
எல்லா சர்வாதிகாரிகளையும் போலவே, குமாரதுங்க பாராளுமன்ற ஒழுங்குகளையும்
அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் நசுக்குவதை நியாயப்படுத்துவதற்காக "மக்கள் சக்திக்கு" அழைப்பு விடுக்கின்றார்.
பாராளுமன்ற அரசியலை திரிபுபடுத்தியும் கூட, ஜனாதிபதி "மக்களுக்காக" பேசுவதாக கூறுவது தெட்டத்தெளிவான
மோசடியாகும். நாட்டின் விகிதாசார தேர்தல் முறையின் கீழ், சுதந்திரக் கூட்டமைப்பு 225 பாராளுமன்ற ஆசனங்களில்
105 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது -- வெறும் 37.5 வீதமானது அதன் வாக்குகளை விட மிக அதிகமானதாகும்.
விகிதமாகும்.
ஜே.வி.பி பாராளுமன்றத்தில் வெளிப்படையாகவே வெறுப்புக்கிடமான வகையில் நடந்து
கொண்டதோடு ஜூன் 8 அமர்வின் போது இடம்பெற்ற பூசல்களின் மையமாகவும் இருந்துவந்தது. மா ஓ வாதம் மற்றும்
காஸ்ட்ரோவாதத்தினதும் கலவையின் அடிப்படையில் 1960களில் உருவாக்கப்பட்ட ஜே.வி.பி, 1980களின் பிற்பகுதியில்
தொழிலாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகள் மீது அது மேற்கொண்ட படுகொலைகளுக்காக பிரசித்திபெற்றது. 1990 களில்
மக்களின் வெறுப்பை குறைப்பதற்கான ஒரு வாயிலாக கருதி பதிவுசெய்யப்பட்ட ஜே.வி.பி க்கு, ஏப்பிரல் 2 தேர்தலில்
மக்கள் சார்பு வாய்வீச்சுக்கள் மற்றும் சிங்களப் பேரினவாதத்தின் ஒரு கலவையை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடத்தக்களவு
இலாபமடைந்துள்ளது.
முதல் முறையாக அரசாங்கத்திற்கு வந்த ஜே.வி.பி, தனது பேரினவாத முழக்கத்தை சிங்கள
பெளத்த மதகுருக்களின் அரசை ஸ்தாபிக்க பரிந்துரைக்கும் ஜாதிக ஹெல உறுமய தனதாக்கிக் கொண்டதை கண்டது. விடுதலைப்
புலிகளுக்கு நாட்டை விற்றுத்தள்ளுவதாக ஐ.தே.மு வை கண்டனம் செய்த ஜே.வி.பி வாய்வீச்சாளர்கள், ஜாதிக ஹெல
உறுமய பாராளுமன்ற உருப்பனர்களும் --அனைவரும் பெளத்த பிக்குகள்-- இதையே செய்வதாக குற்றம்சாட்டுகின்றனர்.
பாராளுமன்றத்தில் ஜே.வி.பி யும் ஆத்திரமூட்டல் மற்றும் குண்டர் நடவடிக்கைகளை காயாண்டது --இவை அனைத்தும் "மக்களின்"
பேராலேயே நடத்தப்பட்டன-- இவை அவர்கள் பற்றிய பாசிச புகைச்சலுக்கும் மேலானதாகும்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, சுதந்திரக் கூட்டமைப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட
ஜனாதிபதி முறையை அகற்றி பாராளுமன்ற முறைக்கு திரும்பும் என குமாரதுங்க பிரகடனம் செய்தார். இந்த பிரேரணை,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மீதான எதிர்ப்பை பயன்படுத்தி குமாரதுங்கவை ஒரு பாராளுமன்ற
பிரதமராக தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க அனுமதிப்பதற்கான ஒரு முறைகேடான முயற்சியாகும். தற்போதைய
அரசியலமைப்பின் கீழ் அவர் மூன்றாவது முறையாகவும் போட்டியிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
குமாரதுங்க கடந்த வார இறுதியில், அவரது பேச்சில் இந்த விவகாரத்தை எழுப்பினார்.
ஆயினும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையின்மையால், முன்வைக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு
பாராளுமன்றத்தை ஒரு அரசியலமைப்புச் சபையாக மாற்றும் திட்டத்தை அவரால் முன்நகர்த்த முடியவில்லை. ஒரு
சாதாரண பெரும்பான்மையுடன் அவ்வாறு செய்வதற்கான அவரது திட்டமும் கூட, மூன்றில் இரண்டு பாராளுமன்ற
பெரும்பான்மையை கோரும் அரசியலமைப்பை மீறுவதாக அமையும்.
அரசியலமைப்பை தவிர்ப்பதை நியாயப்படுத்துவதற்கு ஜே.வி.பி முயற்சிக்கின்றது. இந்தக்
கட்சி, (பாராளுமன்றத்தை சுட்டிக்காட்டி) "மக்கள் சக்தியை தியவன்னாவில் மூழ்கிப்போக இடமளிக்க முடியுமா?" என்ற
தொனிப்பொருளில் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
"மக்கள் சக்திக்கான" இந்த அழைப்பின் முக்கியத்துவத்தையிட்டு எவரும் எந்தவொரு
சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. குமாரதுங்கவோ அல்லது ஜே.வி.பி யோ இலங்கையின் தொழிலாளர்
வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யப் போவதில்லை. இந்த மிகை
பாராளுமன்ற நடவடிக்கைகள், பாராளுமன்றத்தில் ஏற்பட்ட இக்கட்டான நிலையில் ஆளும் வர்க்கத்தின்
பிரிவுகளுக்கிடையிலான பிளவுகளை பிரதிபலிக்கின்றது.
குமாரதுங்கவினதும் அவரது பங்காளிகளினதும் சர்வாதிகார ஆளுமையை நோக்கிய
எந்தவொரு நகர்வும் சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை நேரடி
இலக்காகக் கொள்ளும். |