அமெரிக்க இராணுவத்தில் பெருகிவரும் பரவலான பாலியல் முறைகேடுகள் பற்றிய கண்டுபிடிப்பு
அறிக்கை
By Joanne Laurier
10 June 2004
Back to screen
version
ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் குவைத்தில் பணியாற்றுகின்ற நூற்றுக்கு மேற்பட்ட அமெரிக்கப்
பெண் இராணுவத்தினர்கள், பாலியல் முறைகேடுகள் பற்றி ஆண் இராணுவத்தினர் மீது புகார் கூறியுள்ளனர். இராணுவ,
கடற்படை, விமானப்படை மற்றும் கடற்படையிலுள்ள தரைப்படையில் (Marine
Corps) பணியாற்றும் தங்களது சக இராணுவத்தினர் பற்றி இந்த
புகார்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இராணுவம் பெப்ரவரியில் ஒரு பணிக்குழுவை நியமித்தது.
அந்தப் பணிக்குழு மே மாதம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் முறைகேடுச்
சம்பவங்கள் படிப்படியாக உயர்ந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளது. இராணுவ குற்ற புலனாய்வுப் பிரிவு தனியாக வெளியிட்டுள்ள
புள்ளி விவரங்களில், அந்தப் பிரிவிற்கு 1999 முதல் 2003 வரை ஒவ்வொரு ஆண்டும் பாலியல் முறைகேடுகள் பற்றி
தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.
சுதந்திரமான தகவல் சட்ட கோரிக்கை அடிப்படையில், வாஷிங்டன் போஸ்ட்
இந்தப் புள்ளி விவரங்களை பெற்றிருக்கிறது. 1998 ற்கு பின்னர் முதலாவதாக, பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ள இராணுவ
ஊழியர்கள் பற்றிய விவரங்கள் இதுவாகும். இராணுவ ஊழியர்கள் சம்மந்தப்பட்ட பாலியல் முறைகேடுகள் பற்றி தாக்கல் செய்யப்பட்ட
வழக்குகள் 1999 லிருந்து 2002 வரை 19 சதவீதமாக அதிகரித்துள்ளது. --658 லிருந்து 783 ஆக உயர்ந்துள்ளது---
ஒவ்வொரு ஆண்டும் 2 முதல் 13 சதவீதமாக இந்த வழக்குகள் அதிகரித்துள்ளன. அதே காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட
பாலியல் வன்புணர்வு வழக்குகள் 25 சதவீதம் அதிகரிதுள்ளன. --356 லிருந்து 445-- ஆக உயர்ந்துள்ளது.
''இந்தப் புள்ளி விவரங்கள் பிரச்சனையின் அளவை குறைத்து மதிப்பிடுபவை என்று இராணுவம்
ஒப்புக்கொள்கிறது. பாலியல் முறைகேடுகள் பற்றிய புகார்கள் பெரும்பாலும் தெரிவிக்கப் படுவதில்லை. இதில் இராணுவ
விதிகள் தடையாக இருக்கின்றன என்று இது சம்மந்தமான சேவைக் குழுக்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்சனை குறித்து
மே மாதம் பாதுகாப்புத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 21 இராணுவ மையங்களுக்கு நேரில் சென்று விசாரித்த
பின்னர் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் 2002 லிருந்து 2003 வரை பாலியல் முறைகேடுகள் அதிகரித்து வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தாக்கல் செய்யப்பட்டுள்ள புகார்கள் நடைபெற்ற சம்பவங்களில் மிகக்குறைவானவைதான்
என்று ஒரு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்தார்'' என்று போஸ்ட் தெரிவிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் சட்டபூர்வமாகவும், உளவியல் அடிப்படையிலும் போதுமான அளவிற்கு
ஆதரவு காட்டப்படாத நிலையில் அத்தகைய குற்றங்கள் பற்றிய புலனாய்வுகள் வழக்கமாக தடுத்து நிறுத்தப்பட்டு
வருகின்றன. கொலராடோவிலுள்ள விமானப்படை பெண்கள் பயிற்சி கல்லூரியின் பயிற்சி அதிகாரிகள் தாக்கல் செய்கின்ற
புகார்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு விடுகின்றன என்ற புகார்கள் வந்ததைத் தொடர்ந்து பென்டகன் விசாரணையை
மேற்கொண்டது. இந்த விமானப்பயிற்சி கல்லூரி தொடர்பாக பாதுகாப்புத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஒருவர்
மற்றொரு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். பெண்களில் ஐந்தில் ஒரு பகுதியினர், குறைந்தபட்சம் பாலியல்
முறைகேடான முயற்சிகளை அனுபவித்ததாக தெரிவித்தனர் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Iowa நகர முன்னாள் படையினர்
விவகார மருத்துவ நிலையம் (Veterans Affairs
Medical Center) 2003 ல் மற்றொரு விசாரணையை
நடாத்தியுள்ளது. அந்த விசாரணையில் 558 முன்னாள் மகளிர் இராணுவப் பணியாளர்களிடம் நேரடியாக விசாரணை
நடாத்தப்பட்டது. தங்களது இராணுவ சேவைக் காலத்தில் தாம் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக அல்லது
அதற்கான முயற்சிகள் நடைபெற்றதாக 28 சதவீதம் பேர் தெரிவித்தனர். இதுபோன்ற புகார்கள் வரும்போது
தளபதிகள் பெரும்பாலும் அவற்றை புறக்கணித்துவிடுவதால், இராணுவ சேவையில் மகளிருக்கு எதிரான பாலியல் வன்முறைகள்
மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அந்த ஆய்வில் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
''இராணுவ சேவைகளில் பாலியல் தாக்குதல்கள் மற்றும் அவர்களது வீடுகளில் வன்முறைகள்
என்பன பரவலாக நடைபெற்றுக்கொண்டு வருகின்றன'' என்று சர்வதேச மன்னிப்புச் சபை, தனது வலைத் தளத்தில்
வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறது. ''பெண் இராணுவத்தினருக்கு எதிரான பாலியல் வன்முறை: தலைமறைவு
கிரிமினல்களின் நடவடிக்கைகள்'' என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது.
Denver Post
ல் வெளியிடப்பட்ட மூன்று பகுதிகளைக் கொண்ட கட்டுரைத் தொடருக்கான தலைப்பு ''இராணுவ பிரிவுகளில்
துரோகங்கள்'' என்று இருக்கிறது. இந்தத் தொடர் கட்டுரையை
Amy Herdy மற்றும்
Miles Moffeit
என்ற இரண்டு செய்தியாளர்கள் ஒன்பது மாதங்களாக விசாரித்து பிரசுரித்துள்ளனர்.
முதலில் இந்தக் கட்டுரைத் தொடர் 2003 நவம்பரில் கொலராடோ செய்திப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.
''சென்ற ஆண்டு விமானப்படை பயிற்சிக் கல்லூரியில் பாலியல் வன்முறை முறைகேடுகள்
நடைபெற்றதாகக் கூறப்பட்டது. இப்புகார்கள் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளைத்
தொடர்ந்து வந்திருக்கிறது'' என்று அந்த இரண்டு செய்தியாளர்களும் தெரிவித்தனர். (கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு
மேலாக அந்தக் கல்லூரியைச் சார்ந்த 142 பயிற்சி அதிகாரிகள் பாலியல் தாக்குதல்கள் பற்றி தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களில்
எவரும் தண்டிக்கப்படவில்லை என்ற நிலையைத் தொடர்ந்து, அந்த பயிற்சிக் கல்லூரியில் நடைபெறுகிற முறைகேடுகள்
அம்பலத்திற்கு வந்தன)
மேற்குறிப்பிட்ட இரண்டு செய்தியாளர்களும் 1991 ல்
Las Vegas ல்
நடைபெற்ற சம்பவத்தை சுட்டிக் காட்டுகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட கடற்படை அதிகாரிகள் டசின்கணக்கான
பெண்களை துன்புறுத்தி பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டதோடு, அந்த சம்பவம் பற்றிய புலன் விசாரணையையும்
சீர்குலைத்தனர். இதில் எவரும் தண்டிக்கப்படவில்லை. அத்தோடு, 1996 ல் இராணுவ உடற்பயிற்சி ஆசிரியர்கள் பயிற்சி
பெறும் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதாக கூறப்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை
அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர். ''இரண்டாண்டுகளுக்கு பின்னர், பொது நிர்வாக தேசிய பயிற்சிக் கழக
விசாரணைக்குழு ஒன்று பாலியல் குற்றங்கள் தொடர்ந்தும் பரவலாகக் காணப்படுவதாக'' குறிப்பிட்டிருந்ததை அந்த
இரண்டு செய்தியாளர்களும் சுட்டிக் காட்டுகின்றனர்.
தற்போது ஆயுதப்படைகளில் 200,000 திற்கு மேற்பட்ட பெண்கள் பணியாற்றி
வருகின்றனர். பாலியல் வன்முறை தொடர்பான சம்பவங்களை பென்டகன் அதிகாரிகள் பத்திற்கும் குறைவாகவே
குறிப்பிட்டிருக்கின்றனர். அப்படியிருந்தும் முன்னாள் படையினர் விவகாரங்கள் துறையைச் சேர்ந்த இரண்டு ஆய்வுகள் கடந்த
பத்தாண்டுகளில் நடாத்தப்பட்டன. அந்த ஆய்வில், 21 முதல் 30 சதவீதம்வரை சேவைக் காலத்தின்போது பெண்கள்
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக அல்லது அதற்கான முயற்சிகள் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில்
பொதுமக்கள் தரப்பில் 18 சதவீதம் என்று 2000 ல் நடத்தப்பட்ட பெடரல் அரசின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
1991 ல் நடாத்தப்பட்ட நாடாளுமன்ற விசாரணைகளில் ஏறத்தாழ 200,000 பெண்கள் இராணுவத்தினரால் பாலியல்
முறைகேடுகளுக்கு உட்படுத்தப்பட்டதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் எந்தக் காலகட்டத்தில் இவை நடைபெற்றன
என்பது தெளிவாக இல்லை.
இதற்கான தண்டனை வழங்கப்படுகிறபோது பொதுவாக மிகக்குறைந்த தண்டனைதான்
தரப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இராணுவத்தில் பாலியல் குற்றங்கள் புரிந்ததாக
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட
(non-judicial) நிர்வாக தண்டனைதான் வழங்கப்பட்டது.
தொடர்ந்தும் குற்றங்கள் புரிந்தவர்கள்கூட நிர்வாக அளவில் கண்டனத்தோடு ராஜினாமா
செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். எனவே, அவர்கள் பொதுவாக குற்றம்புரிந்த சான்று எதுவுமில்லாமல் சிவிலியன் உலகில்
புகுந்து பணிகளில் அமர்ந்து கொள்ள முடிகிறது.
மனித சாவு ஒலி
போஸ்ட் பத்திரிகையானது, 60 க்கும் மேற்பட்ட மகளிர் இராணுவ
சேவையாளர்களை பேட்டி கண்டபோது, தங்கள் மீது தொடுக்கப்பட்ட பாலியல் தாக்குதலை அவர்கள் வெளியில்
சொல்லவில்லை. அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பயந்து அல்லது தாம் சொல்வதை பிறர் நம்பமாட்டார்கள்
என்பதால் அவர்கள் புகார் எதையும் தாக்கல் செய்யவில்லை. (1988 ல் பென்டகன் நடத்திய ஓர் ஆய்வில்,
இராணுவத்தினரின் பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் அந்த
சம்பவங்கள் பற்றி புகார் எதுவும் தாக்கல் செய்யவில்லை)
அந்தக் கட்டுரையின் ஆசிரியர்கள் கூறுவதாவது: ''இது தனி மனிதர்களை வெகுவாக
பாதிக்கின்ற பிரச்சனைகளாகும். பாலியல் தாக்குதலுக்கு இரையான டசின் கணக்கான முன்னாள் பெண் படையினர்களது
பணிகளை சிதைத்து விடுவதுடன், அவர்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்கிறது. குடிவெறி, போதைப் பொருட்கள்
பழக்கம் மற்றும் தற்கொலை முயற்சிகள் கூட நடைபெறுகின்றன. பலர் வாழ்நாள் முழுவதும் அந்த வடுக்களோடு
நடமாடுகின்றனர். 'அமெரிக்க தேசியக் கொடியைப் பார்க்கும்போது அதில் நான் சிவப்பு, வெள்ளை மற்றும் நீல
வண்ணங்களை பார்த்தேன்' என்று கூட்டமாக சேர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் பெண்
சிப்பாயான Marian Hood
தெரிவித்தார். 'இப்போது நான் அதில் ரத்தத்தைப் பார்க்கிறேன். அந்த ரத்தம் நான் சிந்தியது. நீல வர்ணம் எனது
புண்படுத்தலை மற்றும் எனது முகத்தைக் காட்டுகிறது. நான் தாக்கப்பட்டேன். எனது நாட்டிற்காக பாலியல்
வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டேன். அதுவே போதும்'' என்று அப்பெண் கூறியதாக தெரிவித்தனர்.
1991 ல் தனது சக படையினர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட 33
வயதான Sharon Mixon
என்பவர் இதுபற்றி கூறியபோது: ''நான் எதிரிகளால் பிடிக்கப்பட்டால் அதற்கு ஏற்ற மனப்பக்குவத்தோடு தயாராக
இருப்பேன். நீங்கள் சுடப்பட்டால், உங்களுக்கு சிகிச்சையளிக்க, கவனிக்க ஒடிவருகிறோம்.
பாலைவனப் புயல் (Desert
Storm) நடவடிக்கையில் நான் பணியாற்றியபோது தீரத்திற்காக
எனக்கு விருது வழங்கப்பட்டது. நான் கோழையல்ல, நான் நல்ல வீராங்கனை'' என்று வருத்தத்தோடு தெரிவித்தார்.
ஒரு லாபநோக்கில்லாத ஒரு அமைப்பான
Miles என்ற
அறக்கட்டளையின் இயக்குனரான கிறிஸ்ரின் கென்சன் என்பவர் இதுபோன்று பாதிப்புக்கு இலக்கானவர்களுக்கு குரல்
கொடுப்பவர் ஆவர். அவர் போஸ்டிற்கு பேட்டியளிக்கும்போது ''இந்தப் பெண்கள் மீண்டும் மீண்டும்
மனோதத்துவ ரீதியில் தண்டனைக்காக பயந்து தங்களது கண்ணியம் பாதிக்கப்படுமோ என்று பயப்படுகிறன்றனர். நீ
பைத்தியக்காரி, பாற்புணர்ச்சிகாரி (lesbian)
என்று சொல்லிவிடுவார்களோ என்று பயப்படுகின்றனர். இதுபோன்ற பெரும்பாலான
வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவதில்லை'' என்று குறிப்பிட்டார்.
இதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற மற்றொரு அம்சமானது, பாலியல்
தொடர்பான அதிர்ச்சிக்கு உள்ளானவர்களுக்கு ஊனமுற்றவர்களுக்கான இழப்பீடு தகுதி, பெறுவதற்கு தகுதியில்லாதவர்கள்
என்பதாகும். இது சம்மந்தமாக தரப்பட்டுள்ள சட்ட விளக்கம் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
பொருந்தாது என்று சொல்லுகிறார்கள். ''ஒரு அதிர்ச்சி சம்பவத்தை அனுபவித்த பின்னர் ஏற்படும் மனோதத்துவ
அடிப்படையிலான குழப்பம் என்பது பாலியலில் வராது'' என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது.
''ஏனெனில் இதுபோன்ற பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்படுகிறவர்கள் அதுபற்றி
வெளியில் தெரிவிப்பதில்லை. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நிபுணர்கள்
கூறுவதாக 1998 ல் மேற்கொள்ளப்பட்ட VA
என்ற ஆய்வு தெரிவிக்கிறது. பலர் தங்களது துன்பத்தை மரத்துப்போகச்
செய்வதற்காக போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். அல்லது மதுவகைகளை நாடுகின்றனர். அத்தோடு, அவர்கள்
எவரையும் நம்ப முடியாமல் தனித்தே வாழ்வதுடன், தூங்குவதில், உணவு உட்கொள்வதில் சிரமப்படுகின்றனர். பலருக்கு
இதயம், அடிவயிறு, மற்றும் பிள்ளைப்பேறு தொடர்பான உடற்கோளாறுகள் ஏற்படுகின்றன'' என்று செய்தியாளர்களான
Herdy ம்
Moffeit ம்
தங்களது கட்டுரைத் தொடரை முடிக்கின்றனர்.
இராணுவத்தினரின் வீடுகளில் வன்முறை
மேற்குறிப்பிட்ட போஸ்ட் செய்தியாளர்கள் இராணுவத்தில் நடைபெறும் மற்றொரு
வகையான முறைகேட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியும் குறிப்பிடுகின்றனர். அது இராணுவத்தினரின் வீட்டில் நடக்கும்
வன்முறையாகும். தங்களது மனைவிகளை அல்லது காதலிகளை தாக்குகின்ற படையினர்கள் வழக்கமாக சிறைத்
தண்டனையிலிருந்து தப்பி விடுகின்றனர். 1997 முதல் 2001 வரையான ஒவ்வொரு ஆண்டும் இராணுவத்தினர் வீட்டில்
மனைவிக்கு எதிராக நடக்கும் முறைகேடுகள் பற்றி 10,000 திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 114 கொலைகள் நடைபெற்றுள்ளன என்று இராணுவ பதிவேடுகள் தெரிவிக்கின்றன.
''வீடுகளில் நடைபெறும் உடல் ரீதியான வன்முறை என்பதற்கு இராணுவம் தந்துள்ள
விளக்கம், உணர்வுபூர்வமான மற்றும் பாலியல் முறைகேடு என்பதாகும். இருந்தபோதிலும், புள்ளிவிவரங்களைக்
கருத்திற்கொண்டு, சாதாரணமாக பொது உலகிற்கு நேர்மாறான விதத்தில், இராணுவம் தமது துணைவியர் மீது
மேற்கொள்ளும் வன்முறையை பதிவேடுகளில் சேர்த்துக்கொள்வதில்லை.
''1997 முதல் 2001 வரை, இராணுவத்தினர் தமது துணைவியர்களை முறைகேடாக
நடத்தியவர்களின் எண்ணிக்கை 1000 பேருக்கு 22 என்றிருந்த புகார்கள், தற்போது 1000 பேருக்கு 16.5 ஆக
குறைந்துவிட்டது. 2001 ல் இப்படிக் குறைந்ததற்கு காரணம் இதுபோன்ற குற்றங்கள் பட்டியலிடப்படும்போது,
படையினர்களின் சேவை பாதிக்கப்படும் என்பதால் தளபதிகள் இதுபோன்ற சம்பவங்களை பதிவு செய்வதில்லை. இதற்கு
பென்டகன் அதிகாரிகள் வெளியிட்டுள்ள குறிப்புகளில் சான்றுகள் உள்ளன'' என்று அந்த இரண்டு செய்தியாளர்களும்
கூறுகின்றனர்.
2002 ல் கோடை காலத்தின்போது, 6 வாரங்களுக்குள் மிகவும் கொடூரமான இராணுவ
குடும்ப வன்முறைகள் வடக்கு கரோலினாவிலுள்ள போர்ட் பிராக் பகுதியில் நடந்துள்ளது. இந்த வன்முறையில் படையினரின்
நான்கு துணைவிமார்கள் கொலை செய்யப்பட்டனர். இந்தப் படையினர்களில் 4 பேரில் 3 பேர்கள் அண்மையில் ஆப்கானிஸ்தானிலிருந்து
திரும்பிய சிறப்புப் படைப் பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஆவர். இதே பகுதியில் ஜூலை மாதம் இராணுவக் குடும்பம் சம்மந்தப்பட்ட
5 வது கொலை நடந்திருக்கிறது. அதில், சிறப்புப்படை மேஜர் ஒருவர் தூங்கும்போது அவரை தலையிலும், மார்பிலும்
சுட்டுக்கொன்றதாக அவரது மனைவி குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
மனைவியை முறைகேடாக நடத்திய படையினர்கள் கெளரவமாக அவர்களது பணியிலிருந்து
விடுவிக்கப்படுகின்றனர். 1988 முதல் 1993 வரை, தமது மனைவிகளை கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட
நிலையில், இராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 முதல் 84 சதவீதமாகும்.
54 சதவீத பேர்களுக்கு
பதவி உயர்வு தரப்பட்டது என்று ஒரு பாதுகாப்புத்துறை ஆய்வு தெரிவிக்கிறது.
''விமானப்படைதான் எனது கணவருக்கு இடம்கொடுக்கிற முதல் ஆதரவாளராக உள்ளது.
அவருக்கு மேலுள்ள அதிகாரிகள் அவரது முறைகேடு ஒரு பிரச்சனையல்ல என்று கருதுகிறவரை மற்றும் எனது கணவரும்
அவ்வாறு நினைக்கின்ற வரை பிரச்சனை தான்'' என்று நிக்கோல் பெய்சி
தெரிவித்தார். அவரது கணவர் கண்ணியமான அடிப்படையில் விமானப்படையிலிருந்து
விடுவிக்கப்பட்டுள்ளார்.
வன்புணர்வை சாதாரண நடைமுறையாக்குதல்
இராணுவ தலைமை அதிகாரிகள், இராணுவத்தினரின் பாலியல் வன்முறைகளை குறைந்தபட்சம்
அனுமதிக்கின்றனர். 2001 ல் Cox
கமிஷன் கருத்துத் தெரிவிக்கும்போது, ''இராணுவ நீதிமன்றங்களுக்கு தளபதிகள் கட்டளையிடுவது என்பது, நியாயமான
கிரிமினல் நீதி நிர்வாக முறை செயல்படுவதற்கு மிகப்பெரிய தடைக்கல்லாக உள்ளது'' என்று விளக்கியிருக்கிறது.
தற்போது பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவும் குழுவிற்கு தலைமை
வகிக்கும் ஓய்வுபெற்ற விமானப்படை தளபதியான
டொரொத்தி மேக்கே (Dorothy
Mackey) என்பவர் இதுபற்றி கருத்துத் தெரிவிக்கும்போது ''எனது
கருத்துப்படி, இராணுவம் வன்புணர்வை சாதாரண நடைமுறையாக கருதுகிறது'' என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க இராணுவத்தில் தொண்டர் சேவைப்படைக்கு --மக்களில் மிகவும் ஒடுக்கப்பட்ட
தரப்பினரை சேர்ந்தவர்கள்தான் முக்கியமாக இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்-- அமெரிக்காவின் உலக
மேலாதிக்க முயற்சிக்கு ''இரும்புக்கர படையாக'' செயல்பட அழைப்பு விடுக்கப்படுகிறது. இதனுடைய விளைவு மனித
நேயம், கருணை உணர்வுகள் என்பன முடமாக்கப்பட்டு கொடுமைப்படுத்துவதும், பிறரது துன்பத்தில் இன்பம் காணும் சேடிச
நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. அத்தோடு கொடுமையான, மக்கள் வெறுப்பிற்கு இலக்காகும் இராணுவ
தலையீடுகளுக்கு படையினர்கள் தயாரிக்கப்படுகின்றனர். ஆகவே, அமெரிக்கப் படைகள் தங்களது பயிற்சியின் தார்மீகத்
தத்துவத்தை செயற்படுத்தும்போது, பலாத்காரம்தான் வெற்றிபெறும் என்கிறபோது, அதை பாலியல் உறவுகளிலும்,
குடும்ப வாழ்விலும் அவர்கள் ''செயற்படுத்தும்போது'' எவரும் அதிர்ச்சியடைந்துவிடக் கூடாது. |