ஐரோப்பா
:
பிரான்ஸ்
Lutte Ouvrière festival in Paris
Silence on the Iraq war and defence of
the headscarf ban
பாரிஸில் லூத் ஊவ்றியேரின் விழா
ஈராக் போர்பற்றி அமைதியும் தலையணி தடைக்கு பாதுகாப்பும்
By Peter Schwarz
10 June 2004
Back to screen
version
லூத் ஊவ்றியேர் (LO)
தனது ஆண்டு விழாவை மே 28 முதல் 30-வரை பாரிஸ் புறநகர் பகுதிகளில் நடத்தியது.
தன்னை ட்ரொட்ஸ்கிஸ்ட் என கூறிக்கொள்கின்ற அவ்வமைப்பு பிரான்சிலுள்ள பிரதான இடது தீவிர போக்குள்ள அமைப்புக்களில்
ஒன்றாகும். 2002 தேர்தலில், அக்கட்சியின் ஜனாபதி வேட்பாளர் ஆர்லட் லாகியே
(Arlette Laguiller) பதிவான வாக்குகளில் 6-சதவீதத்தை பெற்றார்.
LO ஜூன்
13-ல் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்துடன் (LCR)
கூட்டு சேர்ந்து போட்டியிடுகிறது.
இந்த மூன்று நாள் சம்பவங்களில், பல்லாயிரக்கணக்கான
LO- உறுப்பினர்களும்,
ஆதரவாளர்களும் ஈர்க்கப்பட்டனர். உவாஸ் பள்ளத்தாக்கில் (Oise
Valley) பிரதானமாக பொழுது போக்கிற்காக ஒதுக்கப்பட்ட பூங்காவின்
ஒரு சிறிய அரண்மனையில் இந்த விழா நடைபெற்றது. விழாவில் பல்வேறு பிராந்தியங்களைச் சார்ந்த சிறப்பு உணவு சிறுகடைகள்
முக்கிய இடம் பெற்றன, ரொக் இசைக் கச்சேரிகளும், கலாச்சார கூட்டங்களும், இதர பொழுது போக்குகளும் நடைபெற்றன.
ஒரு சிறிய ஓதுக்குப்புறம் அரசியல் விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டது. இங்கு பல்வேறு அரசியல் அமைப்புக்களும் தங்கள்
சிறு கடைகளை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். மூன்று கூட்டங்களில்,
LO ஏற்பாடு செய்த
அல்லது அதனால் அழைக்கப்பட்ட குழுக்கள் பல்வேறு தலைப்புக்களில் ஒரு மணிநேர விவாதங்கள் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டன.
ஒவ்வொரு நாள் பிற்பகலிலும், எல்லா நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு அரை மணிநேரம்
ஆர்லட் லாகியே (Arlette Laguiller)
முக்கிய அரங்கிலிருந்து உரையாற்றுவார். இந்த விழாவின் அரசியல் உயர்ந்த புள்ளி இந்த வடிவம்தான் மற்றும்
LO-வின் ஐரோப்பிய
தேர்தல் பிரச்சாரமும் இதில் அடங்கியிருந்தது. ஞாயிறன்று,
LCR-ன் ஒலிவியே பெசன்சனோ,
ஆர்லட் லாகியே உடன் இணைந்து உரையாற்றினார், அந்த நிகழ்ச்சியை
தொகுத்து வழங்குவதற்காக பல தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் தங்களது வெளிப்புற ஒலிபரப்பு
குழுக்களை (Outside broadcast teams)
அனுப்பியிருந்தன. பத்திரிகை நிருபர்களும் திரளாகக் கூடியிருந்தனர்.
ஆர்லட் லாகியே, ஒலிவியே பெசன்சனோ-வும், ஆற்றிய உரையில் நடப்பு அரசியல்
பிரச்சனைகள் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, அவர்கள் கடந்த ஓராண்டிற்கு
மேலாக சர்வதேச ஊடகங்களிளெல்லாம் தலைப்பு செய்தியாக இடம்பெற்றுவரும் ஈராக் போர் பற்றி எதுவும்
குறிப்பிடவில்லை. அவர்களது இருவர் பேச்சிலும் சராசரி தொழிற்சங்க அலுவலர் மே தின பேரணியில் என்ன
கூறுவார்களோ அதற்கு மேல் அவர்கள் கூறவில்லை.
லாகியே இன் முதலாவது உரை முதலாளிகளுக்கும் அரசாங்கத்திற்கும் எதிரான
புகார்களோடு நின்றுவிட்டது ''இதற்கெல்லாம் மேலாக, உழைக்கும் மக்கள் மீது முதலாளிகளும், அத்தகைய பெரிய
முதலாளிகளின் சார்பில் செயல்படுகின்ற தொடர்ந்துவரும் அரசாங்கங்களும் திணித்துள்ள நிலவரத்தை கண்டிக்க நாங்கள்
விரும்புகிறோம்'' என்று அவர் கூறினார்.
இதற்கு ஒரே தீர்வு, சமூக போராட்டத்தை தீவிரப்படுத்துவதுதான், என்று லாகியே
முடித்தார். ''இந்த தாக்குதலை [முதலாளிகளுடைய]
தடுத்து நிறுத்துவதற்கு வாக்களிப்பதற்கு மேல் அதிகமாக நாம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அதற்கு என்ன
தேவையென்றால், தொழிலாளர்கள் மறுபடியும் சமூக போராட்டத்தை எடுக்க வேண்டும். தங்களது அதிகமான கூட்டு
வலிமையை பயன்படுத்திக்கொள்வது அவசியமாகும். பரந்த அடிப்படையில் போராடுவதற்கு என்ன அவசியமென்றால்
தனிப்பட்ட வேலைவாய்ப்புத் துறைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கப்பால், கோளத்தில் வாழும் சக்தியின் அனைத்து
தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்தும் பரந்த போராட்டம், பெரிய வேலை நிறுத்தங்கள், பொது வேலைநிறுத்தங்கள்
அவசியமாகும்'' என்று அவர் கூறினார்.
லாகியே-ன் வார்த்தையைப் பின்பற்றுவதென்றால், மீண்டும் சமூக சீர்திருத்த
கொள்கைகளுக்கு திரும்புவதற்கு எதுவும் தடையாக இல்லை. இதில் ஒரே ஒரு விதிவிலக்கு தொழிலாள வர்க்கம்
போராடுவதற்கு தயாராக இல்லையென்பது தான். ''இந்த கம்பெனிகளின், இலாபங்கள், செழுமையடைந்து வருகின்றன,
இவர்கள் தொழிலாளர்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு இயலவில்லை என்று கூறுவதை யார் நம்ப முடியும்? என்று
அவ்வம்மையார் கேட்டார். ''அவர்கள் செய்ய முடியும், ஆனால் அவ்வாறு அவர்கள் செய்வதற்கு நிர்பந்தம்
கொடுத்தால்தான் நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றும் அவர் கூறினார். பின்னர் அவர் பேசும்போது, ''பெருமளவில்
ஆட்குறைப்புச் செய்வதை தடுக்கின்ற வகையில் வர்த்தகங்கள் போதுமான இலாபம் சம்பாதிக்கின்றனர்'' என்று அவர்
கூறினார்.
தனது உரைமுடிவில்தான் ஐரோப்பா பற்றி லாகியே
குறிப்பிட்டார். தொழிலாளர்கள் எல்லா இடங்களிலும் அதே பிரச்சனைகளைத்தான்
எதிர்கொள்கின்றனர், அவர்கள் மேலும் அதிக போராட்டத்தில் ஈடுபட்டாக வேண்டும் என்று மட்டுமே அவர் குறிப்பிட்டார்.
''ஐரோப்பிய ஒன்றிய மட்டத்தில், இந்த நாட்டைப்போல், எதிர்காலத்தில் தொழிலாள வர்க்கம் தங்களது
தன்னம்பிக்கையை திரும்ப பெறுவதற்கு, பொருளாதாரத்தில் முதலாளிகளின் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை பறித்துக்கொள்வதற்கு
துணிச்சலுடன் போராடுவதற்கு முன்வரவேண்டும்'' என்று அவர் குறிப்பிட்டார்.
ஞாயிறன்று, அவர் தமது உரையில் அதே கருத்துக்களை தெரிவித்தார். "அனைத்து
வேலையில்லா திண்டாட்டம், வறுமை, முதலியவற்றை தொழிலாளர்கள் கூட்டாகச் சேர்ந்து நடவடிக்கையில்
இறங்கினால்தான் தடுத்துநிறுத்த முடியும். முதலாளிகளின் தாக்குதல்களை அரசாங்கம் எடுக்கின்ற தொழிலாளர் விரோத
நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு கூட்டாகச் சேர்ந்து நடவடிக்கையில் இறங்குவதை தவிர வேறு வழியில்லை'' என்று
அவர் கூறினார்.
64-வயதான லாகியே, அவரின் இளமைக்காலம் முதல் அரசியலில் செயலூக்கத்துடன்
ஈடுபட்டிருப்பவர். எனவே அவர் அரசாங்கத்தின் தாக்குதல்கள், மற்றும் முதலாளிகளின் தாக்குதல்களை எதிர்த்து
முறியடிப்பதற்கு தொழிற்சங்க போராட்டத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று கூறுவதை அரைவேக்காட்டுதனம் என்று
தள்ளிவிட முடியாது. அவர் நனவுபூர்வமாக, தொழிலாள வர்க்கம் உருவாக்கும் ஒரு அரசியல் அபிவிருத்தியை தடைசெய்ய
முயற்சிக்கிறார்.
அண்மைக்கால சம்பவங்களைக் கொண்டு பார்க்கும்போது,
அவரது அறிக்கை ''சமூக'' தாக்குதல் மூலம் வறுமையையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் சமாளித்துவிட முடியும்
என்று கூறுவது தெளிவான நகைப்புக்கிடமானது. ஏனென்றால் பல ஆண்டுகளாக தொழிலாளர்கள் தங்களது உரிமைகளையும்,
இதுவரை சாதித்துள்ளவற்றையும் தற்காத்து நிற்பதற்கு முயலுகின்றபோது இரண்டு அடிப்படை தடைகளை சந்திக்கின்றனர்:
ஒன்று நவீன தொழில்களின் சர்வதேசத்தன்மை, இந்தத் தன்மை தேசிய தொழிற்சங்க அழுத்தங்களைப்
பொருட்படுத்துவதில்லை. மற்றொரு தடைக்கல் அதிகாரபூர்வமான தொழிலாளர் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்ளின்
துரோகச் செயல். பிரான்சில், சிறப்பாக சமூகப் போராட்டங்களுக்கு பஞ்சமில்லை. மில்லியன் கணக்கான
தொழிலாளர்கள் தங்களது சமூக உரிமைகளையும், சாதனைகளையும், தற்காத்து நிற்பதற்காக பேரணி நடத்தினார்கள்.
ஆனால் அதிகாரபூர்வமான இடது கட்சிகளும், தொழிற்சங்கங்ளும் வேலை நிறுத்தங்களையும், கண்டனங்களையும்,
தோல்வியடையச் செய்வதற்கு இடைவிடாது முயன்றன, அவற்றை புறக்கணித்தன அல்லது தொழிலாளர்களை முட்டுச்சந்துக்கு
இட்டுச்சென்று அங்கேயே நிறுத்திவிட்டன.
ஆகையால் இத்தகைய சீர்திருத்தவாத அமைப்புக்களோடு அரசியல்ரீதியாக
முறித்துக்கொள்வது எந்தவிதமான வெற்றிகரமான தாக்குதலுக்கும் முன்நிபந்தனையாகும். தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு
சர்வதேச, சோசலிச மூலோபாயம் தேவை, முதலாளித்துவத்தின் பெருகிவரும் தாக்குதல்களை முறியடிப்பற்கு வேறுவழி
எதுவுமில்லை. LO
-ம், LCR-
ம் அது போன்ற அரசியல் முறிவை தடுக்க முயலுகின்றன. முதலாளிகளின் தாக்குதலை ''சமூக'' (தூய்மையான
தொழிற்சங்கத்தில்) போராட்டத்தின் மூலம் தடுத்துவிட முடியுமென்று லாகியே கூறுவது தொழிற்சங்கங்களும்,
அதிகாரபூர்வமான இடதுசாரிக் கட்சிகளும் மேற்கொள்ளும் சீர்திருத்தவாதத்தை மீண்டும் நிலைநாட்டும் முயற்சியாகத்தான்
அமையும். என்னதான் முன்னாள் இடதுசாரி அரசாங்கத்தின், ''நவீன-தாராளவாத அரசியலை'' அவர் விமர்சித்தாலும்
இதுதான் முடிவு.
அண்மைய வருடங்களில் பாரிய வேலைநிறுத்த இயக்கங்கள் நடந்தபோது
LO -ம்,
LCR- ம் எப்போதுமே
தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பின்னால் நின்றார்கள், அதன்பாதையிலான எந்த விமர்சனத்தையும் தடுத்தார்கள்.
கடந்த வசந்த காலத்தில், பழமைவாத அரசாங்கம் கொண்டுவந்த ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக மில்லியன்
கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களிலும் கண்டனப் பேரணிகளிலும் ஈடுபட்டபோது,
LO பொதுவேலை
நிறுத்தக் கோரிக்கையை தீவிரமாக ஒதுக்கித்தள்ளியது.
உலகம் முழுவதும் ஈராக் போரைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறபோதிலும், இந்த
மனோபாவம் கூட லாகியே அல்லது பெசன்சேனோ இருவரும் ஈராக் போர்பற்றி எதுவுமே குறிப்பிடாத விநோதமான
நிலையை விளக்குகிறது. இந்தப் போருக்குப் பின்னால் மாறிய உலக சூழ்நிலை- அமெரிக்காவின் உலக மேலாதிக்க
முயற்சிகள்; பகிரங்க காலனித்துவம் திரும்பத் தோன்றியிருப்பது, உலகை மீண்டும் மறு பிளவு செய்வதற்கு நடைபெற்றுக்
கொண்டுள்ள போர், ஆகியவை ஒரு தேசிய கட்டமைப்பிற்குள் படிப்படியாக சமூகத்தை மேம்படுத்தலாம் என்ற இந்த
அடிப்படை முன்னோக்கையே மாற்றிவிட்டது. ஐரோப்பிய அரசுகள் வலதுகளும், இடதுகளும் அமெரிக்காவின் பெருகிவரும்
அழுத்தங்களுக்கு பதிலளிகின்ற வகையில் தங்களது சொந்த இராணுவச் செலவுகளை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன,
தொழிலாள வர்க்கத்தின் மீது தங்களது தாக்குதல்களை அதிகரித்துக்கொண்டுள்ளன.
லாகியே பேசி முடித்ததும், அவரிடம் அமெரிக்க அரசாங்கத்தின் நெருக்கடி, ஐரோப்பிய
அரசியல் நிலவரத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் கேட்டோம். அந்தக் கேள்விக்கு என்ன பதில்
சொல்வது என்றே அவருக்குத் தெரியவில்லை. முதலில் அவர் சொன்னது ''அந்தக் கேள்விக்கு உண்மையிலேயே நான் பதில்
சொல்ல முடியாது''.
அதற்குப் பின்னர் அந்தக் கேள்வியை ஈராக் போர் எப்படி பொதுமக்களை ''அணி
திரட்டுவதற்கு'' பங்களிப்புச் செய்தது என்ற அம்சத்திலிருந்து அணுகினார். சில நாடுகள் அந்தப்போரை ஆதரித்தன
அதனால் உள்நாட்டு அரசியலில் தாக்கம் ஏற்பட்டது. ''என்றாலும் ஈராக்கில் நேரடியாக பங்கெடுத்துக்கொள்ளாத
ஐரோப்பிய நாடுகளில் இந்த பாதிப்பு குறைவாக உள்ளது. ஏனென்றால் அந்த மக்கள் தொடர்ந்து பேரணிகளை
நடத்துவதற்கு குறைவான காரணங்களே உள்ளன. ஐரோப்பிய அளவில் ஒரே மாதிரியான கருத்து நிலவவில்லை. அது
நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது'' என அவர் பதிலளித்தார்.
இந்த பதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அதற்கு ஏற்பட்ட நெருக்கடியால்
ஐரோப்பாவின் உள் சம நிலையில் (Equilibrium)
ஏற்பட்டுள்ள அதிரடி விளைவுகளை முழுமையாக அவர் புரிந்து கொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றது. அது மட்டுமல்ல
சிராக்கின் வெளிநாட்டுக் கொள்கை மீது LO-
விற்கு அடிப்படை ஆட்சேபனைகள் எதுவுமில்லை என்பதையும் காட்டுகிறது. பிரெஞ்சு அரசாங்கம் ஈராக்போரை
ஆதரிக்கவில்லை, ஆனால் மத்திய கிழக்கிலும், உலகின் இதர பகுதிகளிலும் தனது சொந்த நலன்களை எப்படி சிறப்பாக
பேணிக்காப்பது என்ற பிரெஞ்சு ஏகாதிபத்திய கண்ணோட்டத்தில் அதன் அணுகுமுறை ஆரம்பத்திலிருந்தே அமைந்திருக்கிறது.
LO- வின் இயல்பிற்கு ஏற்ப ஐரோப்பிய
ஒன்றியம் கிழக்கு நோக்கி விரிவடைவதையும் ஆதரிக்கிறது. இது பிரெஞ்சு (மற்றும் ஜேர்மன்) ஏகாதிபத்தியத்தின்
மற்றொரு ஏகாதிபத்திய வெளிநாட்டு கொள்கை செயல்திட்டமாகும். ''விரிவாக்கத்தைக் கண்டு அஞ்ச வேண்டாம்''
என்ற தலைப்பில் LO-
விரிவான துண்டு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. ''ஐரோப்பிய யூனியன் விரிவடைவது அதன் எல்லா மட்டுப்பாடுகளுக்கு
அப்பாலும் மறுக்க முடியாத முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாகும்'' என்று அந்த துண்டு அறிக்கையில் ஒரு வாசகம்
அடங்கியிருக்கிறது. அந்த அறிக்கையின் இதர பகுதிகளில் தெளிவான எந்த அறிவிப்பும் இல்லை, ஒன்றுக்கொன்று
சம்மந்தமில்லாத சம்பவங்களை பெரும்பாலும் சேர்த்திருக்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியம் விரிவடைந்து வருவது முக்கியமாக பெரிய தொழிற்சாலைகளின்
நலன்களுக்கு பயன்படுவது என்று LO
ஒப்புக்கொள்கிறது. ''இந்த ஒன்றுபடுத்தல் தற்போது இன்னும் முழுமையடையவில்லை, இன்னும் சில ஆண்டுகளில்
முற்றுப்பெறும் ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கம் மற்றும் தொழிலாளர்களின் பலம் பொதுவாக அதிகரிக்கும், அதன்
மூலம் அவர்கள் அரசாங்க அதிகார வட்டாரங்களிலும் நிதி, நிர்வாக தலைமை அளவிலும் அதிக அழுத்தங்களை கொண்டுவர
முடியும்'' என்று LO
கூறியிருக்கிறது.
தற்போது தொழிலாள வர்க்கத்தினது சமூக மற்றும் அரசியல் உரிமைகள்மீது தாக்குதல்களை
தொடுப்பதற்கு தலைமைதாங்கி நிற்கின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்புகளுக்கு எதிரான அரசியல்
போராட்டத்தில்தான் சோசலிச ஐரோப்பா அபிவிருத்தியடைய முடியும் என்ற உண்மையை
LO- முற்றிலுமாக புறக்கணிக்கிறது.
ஒரே ஒரு அரசியல் பிரச்சனை மட்டுமே
LO- நிகழ்ச்சியில் காரசாரமாக
விவாதிக்கப்பட்டது. பள்ளிக்குச் செல்லும் முஸ்லீம் பெண் குழந்தைகள் தலை முக்காட்டு துணிகள் எதையும் கட்டிக்கொள்ளக்
கூடாது என அண்மையில் இயற்றப்பட்ட சட்டம் பற்றி காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
இந்தச் சட்டத்தை நான் இதுவரை கண்டிராத மிக பிற்போக்கான ஓர்
அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது என்று லாகியே சலுகைபோல் குறிப்பிட்டிருப்பினும், எந்தவிதமான ஆட்சேபனையும்
இல்லாமல் இந்தச் சட்டத்தை LO
ஆதரித்திருக்கிறது.
இந்தச் சட்டத்தை அவர் ஏன் ஆதரித்தார் என உலக சோசலிச வலைத் தளத்தால்
கேட்கப்பட்டபோது, இந்த சட்டம் இயற்றப்பட்ட நேரத்தில் சிராக்கின் அரசுத்துறை செயலாளர்
Nicole Guedj உடன்
லாகியே நின்றார். இதற்கு பதிலளித்த அவர் தான் ''பெண்ணுரிமைகளின் பக்கம்'' நின்றதாக பதிலளித்தார். பள்ளிகளில்
மதச்சின்னங்கள் அணிவதை தடைசெய்யும் இந்தச் சட்டத்திற்கான ஆதரவை கருக்கலைப்பு உரிமைக்கான போராட்டத்தோடு
லாகியே ஒப்பிட்டார். ஒரு அடக்குமுறைச் சட்டமும் சிவில் உரிமைகள் வழங்கும் சட்டமும் ஒன்றுபோல் பாவனை செய்து
கருத்துத்தெரிவித்தார். தான் பழமைவாத அரசியல்வாதி,
Simone Weill- உடனும் கலந்துகொண்டு ஆர்பாட்டம் செய்திருப்பதாக
சுட்டிக்காட்டினார்.
தலை முக்காட்டு துணிகள் பற்றிய விவாதத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
அதிகாரபூர்வமான LO
பெண் பிரதிநிதி ஒருவர் தலை அணியை பெண்கள் அடக்குமுறையின் ஒட்டுமொத்த சின்னம் என்பது போன்று கூக்குரலிட்டார்.
மத சின்னங்களை தடுத்துவிட்டால் மகளிருக்கெதிரான எல்லா பாரபட்சப்போக்குகளுக்கும் தீர்வு ஏற்பட்டுவிடும்
என்பதுபோல் அந்தப் பெண் பிரதிநிதி கருத்துத் தெரிவித்தார்.
LO வில் புதிதாக சேர்ந்த ஒரு இளம் அல்ஜீரியக்காரர் இந்தப்
பிரச்சனை சமுதாயப் பிரச்சனையல்ல, "இளம் ஆண்கள்" பெண்களை நடத்தும் விதம் சம்மந்தப்பட்டது என்று
குறிப்பிட்டார். இந்த தடைக்கு எதிராக நிற்பவர்களை, மக்கள், விரோத உணர்வோடு நடத்துவார்கள் என்றும்
குறிப்பிட்டார்.
40-ஆண்டுகள் வட ஆபிரிக்க புலம்பெயர்ந்தோர் மத்தியில் பணியாற்றிய மூத்த சமூக ஊழியர்
ஒருவர் இந்த சட்டத்தின் விளைவால் "அழிவு ஏற்படும்" என்று எச்சரித்த பின்னர்தான் அங்கே அமைதி ஏற்பட்டது. எப்படி
இந்த சட்டம் முஸ்லீம் குடும்பங்களை பாதித்து முஸ்லீம் பெண், குழந்தைகள் கல்விகற்கும் நிலையை மோசமடையச்
செய்திருக்கிறது, என்பதை அவர் விளக்கினார். அப்படியிருந்தும்
LO- தொடர்ந்து அந்த சட்டத்தை ஆதரித்தது.
LO தெளிவாக வலதுசாரி பக்க திருப்பம்
எடுத்துக்கொண்டிருக்கிறது என்பது இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் தெளிவாயிற்று. அரசியல் பிரச்சனையை தவிர்த்தார்கள்,
ஈராக் போர் பற்றி மூச்சுவிடவில்லை, சுத்த தொழிற்சங்க முன்னோக்கு மட்டுமே போதுமானது என்றார்கள்,
ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கத்தை ஆதரித்தார்ககள், பிற்போக்குத்தனமான ஜனநாயக விரோத சட்டத்தை
ஆதரித்தார்கள். உலகம் முழுவதிலும் சமூக மற்றும் அரசியல் மோதல்கள் உருவாகிக்கொண்டிருக்கும் நிலையில்
LO பிரெஞ்சு அரசின்
பக்கம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. |