World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Chalabi, Iranian spies and the crisis of the Bush administration

சலாபி, ஈரான் உளவாளிகள் மற்றும் புஷ் நிர்வாகத்தின் நெருக்கடி

By Peter Symonds
8 June 2004

Back to screen version

ஒரு காலத்தில் வாஷிங்டனின் நேசத்திற்கு உரியவரான ஈராக் தேசிய காங்கிரஸ் (INC) தலைவர் அஹமெட் சலாபி தொடர்பாக சென்ற வாரம் கிளம்பிய குற்றச்சாட்டுக்கள் புஷ் நிர்வாகத்திற்குள் நிலவுகின்ற மறைக்க முடியாத ஆவேசமான மோதல்களை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.

சென்ற மாத இறுதியில் அமெரிக்க மற்றும் ஈராக்கிய பாதுகாப்புப்படைகள் பாக்தாத்திலுள்ள அவரது வீட்டிலும் INC அலுவலகங்களிலும் நடத்திய திடீர் சோதனைகளைத் தொடர்ந்து சலாபி மீது பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவருகின்றன. திடீர் சோதனைகள், சித்ரவதை, கொள்கை, கொலை மற்றும் ஆட்கள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்மந்தப்பட்டது. என்றாலும் சென்றவாரம், அமெரிக்க ஊடகங்களில் ஈரானிலுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சிக்கு, அமெரிக்காவின் முதன்மை இரகசிய தகவல்களை சலாபி கொடுத்தாரென்று விவரங்கள் கசிய ஆரம்பித்தன.

சென்ற புதனன்று நியூயோர்க் டைம்ஸ் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் சலாபி மீது கூறிய குற்றச்சாட்டுக்களை பற்றிய குறிப்பை வெளியிட்டிருக்கிறது. ஈரான் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாக்தாத் நிலைய தலைவருக்கு, அமைச்சகத்தின் இரகசிய மொழிக் குறியீட்டை அமெரிக்கா உடைத்து அதன் அனைத்து செய்தித் தொடர்புகளையும் அறிந்து வருவதாகத் தெரிவித்ததாக சலாபி மீது அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். ஈரானின் பாக்தாத் நிலையத் தலைவர் சலாபி பற்றி தனது ஈரான் மேலதிகாரிகளுக்கு அதே இரகசிய மொழியைப்பயன்படுத்தி தகவல் தந்ததிலிருந்து அமெரிக்கா அறிய வந்திருந்தது.

இந்தக் குற்றச்சாட்டு அரசியல் அடிப்படையில் சலாபிக்கு அதிக தீங்கு செய்யாவிட்டாலும், அவரது மிக நெருக்கமான அமெரிக்க சகாக்ககளுக்கும்--- பென்டகன் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் வலதுசாரி நவீன பழமைவாதிகளுக்கும் அதிக தீங்கு செய்வதாக அமைந்து விட்டது. நியூயோர்க் டைம்ஸில் வியாழனன்று பிரசுரிக்கப்பட்ட மற்றொரு கட்டுரையில் சலாபிக்கு அந்த தகவலை தந்தது யார் என்று முடிவு செய்வதற்கான புலன்விசாரணையை FBI ஏற்கனவே தொடக்கிவிட்டதாக தெரிவித்தது. FBI புலனாய்வாளர்கள் பென்டகனில் உள்ள சிவிலியன் ஊழியர்களை விசாரித்து வருவதாகவும் அவர்கள் பொய் சொல்வதை கண்டுபிடிக்கும் கருவிகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

டைம்ஸ் தந்துள்ள தகவலின்படி, ஈரானின் குழு உட்குறியை (code) அமெரிக்கா புரிந்து கொண்டது என்ற தகவல் நேரடியாக மூத்த அதிகாரிகளில் ஒரு சிறிய குழுவினருக்குத்தான் தெரியும். ஈரானின் இரகசியத் தகவல்களை வாஷிங்டன் தெரிந்து கொண்டு வருகிறது என்பதை சில விரிவான அதிகாரிகள் மட்டுமே அனுமானித்திருக்க முடியும். இதில் குற்றம் செய்தவர் எவரும் அடையாளம் காட்டப்படுகிறாரா இல்லையா என்பதைவிட கடைசியாக அம்பலத்திற்கு வந்திருக்கிற தகவல்கள் பென்டகன் தலைமையை மேலும் சேதப்படுத்தவே உதவும், ஈராக் கைதிகள் திட்டமிட்டப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டது தொடர்பாக ஏற்கனவே பென்டகன் தலைமை முற்றுகையிடப்பட்ட நிலையில் உள்ளது.

இந்தக் கட்டத்தில், அந்தக்குற்றச்சாட்டுக்கள் உண்மையா என்பதை முடிவுசெய்ய இயலாது. சம்மந்தப்பட்ட முகவாண்மைகள் (Agencies) எதுவும் அறிக்கை வெளியிடவில்லை. எவர் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை. சலாபியே அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கிறார், அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைக்கு உட்பட சம்மதித்திருக்கிறார். ''இந்தக்கதை அடிப்படையிலேயே பொய்யானது'' என்று மூத்த ஈரான் அதிகாரி ஹஸன் ரொஹானி தெரிவித்தார். ஈரான் புலனாய்வு அதிகாரிகள் தங்களது இரகசிய கோடுகளை அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பாதகவும், சலாபியுடன் எந்தவித சிறப்பு உறவு அல்லது சிறப்பு புலனாய்வு நடவடிக்கையிலும் தொடர்பு இல்லை என்றும் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்தார்.

இப்போது என்ன தெளிவாகிறதென்றால், சலாபிக்கு எதிரான முயற்சிகள் ஈராக் தொடர்பாக புஷ் நிர்வாகத்தில் நிலவுகின்ற ஆழமான நெருக்கடியோடு முடிச்சு போடப்பட்டிருக்கிறது என்பதுதான். திங்களன்று டைம்ஸ் வார இதழிலில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரைக்குத் தலைப்பு ''Inside the Takedown" சலாபியின் செல்வாக்கை சீர்குலைப்பதற்கு அமெரிக்க தலைமை வட்டாரங்களில் முடிவு எடுக்கப்பட்டது என்பதை அந்தக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது. ஏப்ரல் கடைசியில் வெள்ளை மாளிகைக் கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட்டு அந்தக்கூட்டத்தில் ''சலாபியை ஓரங்கட்டுவது'' என்று தலைப்பில் நீண்ட குறிப்புத் தயாரிக்கப்பட்டது.

வாஷிங்டனில் நிலவிய கவலைகள் பேரழிவுகரமான ஆயுதங்கள் (WMD) பற்றிய INC தந்த தவறான தகவல்கள் மற்றும் சலாபி மீது கூறப்படுகின்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் அவருக்குள்ள ஈரான் தொடர்புகள் ஆகியவற்றிலிருந்து எழுந்ததாக டைம்ஸ் வார இதழ் கூறியது. ஆனால் இந்தக் குறைபாடுகள் அனைத்தும் அமெரிக்க தலைமையில் ஈராக் மீது படையெடுப்பு நடத்துவற்கு ஓராண்டிற்கு முன்னரே வாஷிங்டனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அந்த நேரத்தில் ஈராக்கை அடிமைப்படுத்த தனது நீண்ட காலத்திட்டத்தை, நியாயப்படுத்த ஏதாவது ஒரு சாக்குபோக்கு கிடைத்தால் போதும் என்று புஷ் நிர்வாகம் மிகுந்து ஆவலாக இருந்தது. எனவே சலாபி தந்த போலித் தகவலை விருப்பத்தோடு பயன்படுத்திக்கொண்டது. அவர் மோசடிக் குற்றத்தில் தண்டிக்கப்பட்டவர் என்ற உண்மையை புறக்கணித்துவிட்டது. ஈரானுடன் அவருக்குள்ள உறவுகளில் இரகசியம் எதுவுமில்லை, டெஹ்ரானில் INC அலுவலகத்திற்கு வாஷிங்டன் நிதி கூட வழங்கியிருக்கிறது.

பல்லூஜாவிலும், ஈராக்கிலும் தெற்கு ஷியைட்டுகள் பகுதிகளிலும் அமெரிக்காவிற்கு எதிராக நடந்த ஆயுதந்தாங்கிய எழுச்சியை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக வாஷிங்டன் மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கை மாற்றத்தோடு சலாபியின் செல்வாக்கு இழப்பு சம்மந்தப்பட்டிருக்கிறது. ஏப்ரல் கடைசி வாக்கில் ஒன்று தெளிவாயிற்று. பல்லூஜா போன்ற நகரங்களில் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியை நசுக்குவதற்கு அந்த நகரங்களையே தரைமட்டமாக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஈராக்கிலும் அந்த பிராந்தியத்திலும் கொந்தளிப்பான நிலை ஏற்படும் இதற்கு மாறாக அமெரிக்க கூட்டணி இடைக்கால ஆணையம் (CPA) ஈராக்கில் பொம்மை ஆட்சியை நிறுவுவதற்கு எதிர்பாளர்களை சமாளிப்பதற்கும் ஈராக்கிய இராணுவம், போலீஸ் மற்றும் புலனாய்வு சேவைகளை மீண்டும் உருவாக்குவதற்கும், அவகாசம் எடுத்துக்கொள்வதற்காக அந்த பகுதிகளில் தற்காலிக சமாதானத்திற்கு வந்தது.

இந்த தந்திரோபாயமுறை முன்னாள் பாத் கட்சி உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்வதை உள்ளடக்கியதாகும். இந்த முறையை கடைப்பிடிக்க வேண்டுமென்று CIA-வும், அரசுத்துறையும் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தன. பென்டகனின் நவீன பழமைவாதிகளும் சலாபியும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஈராக் மக்களது கடுமையான எதிர்ப்பை அமெரிக்கப்படையெடுப்பு சந்திக்க வேண்டிவராது என்று இவர்கள் கூறினார்கள். சலாபிக்கு தரப்பட்ட இதர பதவிகளுடன் "பாத்கட்சியை அகற்றல்" எனப்படும் குழுவின் தலைவர் பதவியும் தரப்பட்டது. ஹூசேன் ஆட்சியின் முன்னாள் தளபதிகளையும், புலனாய்வு அதிகாரிகளையும் பயன்படுத்திக்கொள்ளும் முயற்சியை சலாபி கண்டித்தார்.

''சலாபியை ஓரங்கட்டுவதற்கான'' குறிப்பை தயாரித்தவர் அமெரிக்கத்தூதர் ரொபேர்ட் பிளாக்வில் (Robert Blackwill) என்பது குறிப்பிடத்தக்கது. டைம்ஸ் கட்டுரையில் அவரை ''ஈராக் தொடர்பான நிபுணர்'' என்று விளக்கம் தரப்பட்டிருக்கிறது. அவர் தேசிய பாதுகாப்பு சபையில் (NSC) பணியாற்றியவர். பிளாக்வில் ஈராக் தொடர்பான திட்டவட்டமான பல்கலைக்கழக ஆய்வு மட்டத்திலோ அல்லது வேறுவகைகளிலோ நிபுணத்துவம் படைத்தரவல்ல. மூத்த புஷ் நிர்வாகத்தில் ஐரோப்பிய மற்றும் சோவியத் விவகாரங்கள் தொடர்பான சிறப்பு அதிகாரியாக பணியாற்றினார். ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்ஷின் 2000-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் அவருக்கு வெளிவிவகார ஆலோசகராக பணியாற்றிவந்தார், சென்ற ஆண்டு மார்ச் வரை இந்தியாவில் அமெரிக்கத் தூதராக பணியாற்றி வந்தார், புதுதில்லியுடன் மூலோபாய உறவுகளை நெருக்கமாக ஒருங்கிணைக்கின்ற பணி அவருக்கு கொடுக்கப்பட்டது.

CIA மற்றும் அரசுத்துறையுடன் தொடர்புள்ள பிளாக்வில் சென்ற ஆண்டு புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலீசா ரைஸ் ஆதரவோடு வெள்ளை மாளிகையில் ஒரு ''பொருத்துபவராக" (fixer) நியமிக்கப்பட்டார். பல பத்திரிகைகளின்படி சென்ற வாரம் பாக்தாத்தில் புதிய இடைக்கால அரசாங்கத்தை முடிவு செய்ததில் பிளாக்வில் பிரதான பங்களிப்புச் செய்தார், ஐ.நா- சிறப்புத்தூதர் Lakhdar Brahimi பங்களிப்புச்செய்யவில்லை. அதில் முக்கிய நியமனம் பிரதமர் இயாத் அல்லாவி, அவர் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் புலனாய்வு அமைப்புக்களின் நீண்டகால ''சொத்து', சலாபியின் கூற்றுக்கு எதிராக இயாத் அல்லாவி முன்னாள் பாத்கட்சி அதிகாரிகளையும், இராணுவ அதிகாரிகளையும் பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்காவிற்கு எதிரான எதிர்ப்பை நசுக்க வேண்டும் என்று கூறிவருபவர் ஆவார்.

பிளாக்வில்லின் குறிப்பு செயற்படுத்தப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. ஒரு மாதத்தில் சலாபிக்கு பென்டகன் வழங்கிவந்த நிதி நிறுத்தப்பட்டுவிட்டது. அவரது வீடு, மற்றும் அலுவலகங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. பல்வேறு கடுமையான குற்றங்கள் புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு உளவாளி என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். INC- தலைமை அலுவலங்களில் போலீஸ் சோதனைகளுக்கு இடையூறாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்களின் மீது சலாபியின் உதவியாளரும் அதிகாரபூர்வமற்ற அவரது ஆதரவாளர்களுமான (lobbyist) Francis Brooke மீது இந்த வாரக்கடைசியில் ஒரு ஈராக் நீதிபதி பிடிவாரண்டு பிறபித்திருக்கிறார்.

மூத்த பென்டகன் அதிகாரி எவரும் சலாபிக்கு ஆதரவாக வரவில்லை. ஒரு காலத்தில் அவருக்காக வாதாடிய பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் போல் வொல்போவிட்ஸ் மிக கவனமாக தன்னை அவரிடமிருந்து விலக்கிக்கொண்டார். New Yorker-க்கு பேட்டியளித்த அவர், ''பாதுகாப்புத் துறையின் அன்பிற்கு பாத்திரமானவர் அவர் என்ற வகையில் சந்து முனைகளில் இப்போது சிந்துபாடப்படுகிறது. அவரை ஈராக் தலைவராக நாங்கள் நியமித்தபோது நாங்கள் சில கருத்துக்களை கொண்டிருந்தோம்'' என்று குறிப்பிட்டிருந்தார். அதே கட்டுரையில் அரசுத்துறை அதிகாரி ஒருவர் ''போருக்குப்பிந்திய ஈராக்கில் அரசாங்கப் பதவிகளில் நியமிக்கப்படுவதற்கான ஒவ்வொரு ஈராக்கியர் தொடர்பான பட்டியலிலும் சலாபியும், அவரது அமைப்பின் எல்லா உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டிருந்தனர்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

மிகத்தீவிரமான வலதுசாரி சிந்தனையாளர்கள் மட்டுமே சலாபியை தாங்கி நிற்கின்றனர். சென்ற மாதக்கடைசியில் மிக வியப்பூட்டும் ஒரு சிறிய கண்டனக்குழு ஒன்று பென்டகன் முன்னாள் அதிகாரி Richard Perle- தலைமையில் ரைசின் அலுவலகத்திற்கு வந்தது. சலாபி நடத்தப்பட்ட விதம் குறித்து கண்டனம் தெரிவித்தது. CIA- வும், ஈராக்கிலுள்ள அமெரிக்க ஆளுநர் Paul Bremer III ம் போலீஸ் திடீர் சோதனைகளை தூண்டிவிட்டதாக குற்றம்சாட்டியது. சென்ற வாரம் மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்ட Perle சலாபிக்கும், ஈரான் புலனாய்விற்கும் இடையே நிலவுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ''எள்ளி நடையாடுவதற்கு கூடத்தகுதியில்லாதவை'' என்று குறிப்பிட்டார்.

சலாபியும் அவரது ஆதரவாளர்களும் வெளியில் நிற்கின்ற அதேவேளை, எதுவும் முடிவு செய்யப்படவில்லை. சென்றவாரம் நியூஸ் வீக்கில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையின் தலைப்பு ''இறுதியாக நிதானத்திற்கு திரும்பியிருக்கிறது'' என்பதில், இது ஈராக் கொள்கை, பென்டகனிடமிருந்து பறித்துக்கொள்ளப்பட்டு ரொபேர்ட் பிளாக்வில்லினால் கட்டளையிடப்பட்டு வருகிறது என்று அந்தக்கட்டுரை குறிப்பிடுகிறது. ரொபேர்ட் பிளாக்வில் ''மிக சாதுர்யமாக பிரச்சனைகளை தீர்த்துவைப்பதில் தீவிர பயனுள்ளவர்'' என்று வர்ணித்துள்ளது. விரும்பாத விரோதம் கொண்ட ஈராக் மக்கள் மீது புதிய காலனி ஆட்சியை திணிப்பதற்கு அவருக்கு முந்தியவர்களை போன்றே பிளாக்வில்லினாலும் இயலாது. அமெரிக்க ஆட்சிக்கு எதிர்ப்பு நீடித்துக்கொண்டிருக்கிறது, எனவே புஷ் நிர்வாகத்திற்குள்ளேயே சகோதரத்துவப் போரும் எதிர் குற்றச்சாட்டுக்களும் தீவிரமடைவது நிச்சயம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved