World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக் US makes tactical retreat before Iraqi uprising ஈராக்கியர்களின் எழுச்சிக்கு அமெரிக்காவின் தந்திரோபாய பின்வாங்கல் By James Conachy அமெரிக்க இராணுவம் பல்லூஜா நகர தாக்குதலில் இருந்து பின்வாங்கி ஏறத்தாழ ஒரு மாதத்திற்குப் பின்னர், மே 27 ல் ஷியாட் மதபோதகரான முக்தாதா அல் சதாரின் மஹாதி இராணுவ போராளிகளுக்கிடையே நஜாப் நகரில் ஒரு சங்கடமளிக்கும் போர் நிறுத்த ஒப்பந்தம் உருவாகியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான கூட்டணி இடைக்கால ஆணையம் (CPA) இந்த உடன்படிக்கையைச் செய்துள்ளதோடு, இந்த பேரத்தை சிறப்பித்துக்காட்ட ஆணையம் முயன்று வருகிறது. ஆனால், ஈராக்கியர்கள் இது அமெரிக்காவின் தந்திரோபாய பின்வாங்கல் என்று பரந்தளவில் கருதுவதோடு, அல் சதாருக்கு இது ஒரு வெற்றி என்றும் கருதுகின்றனர். ஏப்ரலில் இருந்து ஈராக்கின் தென்பகுதியில் ஷியாட்டுகள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நஜாப்பில் உருவான உடன்படிக்கையானது சதார், பிரதான ஷியாட் மதபோதகர் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்கா நியமித்துள்ள ஈராக் ஆளும் குழுவின் (IGC) ஷியாட் உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் அன்புக்குரியவரான அஹமது சலாபி ஆகியோரிடையே உருவானது. ஷியாட்டுக்களின் புனித இமாம் அலியின் நினைவிடமுள்ள பகுதி உட்பட நகரத்தில் அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புவதில்லை என்பது உட்பட இந்த உடன்படிக்கையில் பல்வேறு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு கைமாறாக நஜாப்பை சேராத தனது போராளிகள் வெளியேற வேண்டும் என்பதற்கு சதார் சம்மதித்தார். மீதியிருக்கும் போராளிகள் தங்களது ஆயுதங்களை வைப்பதென்றும், ஈராக் போலீசார் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அனுமதிப்பதென்றும் உடன்படிக்கை ஏற்பட்டது. கர்பலாவிலிருந்து வந்துள்ள தகவலின்படி, இதே போன்ற ஏற்பாடுகள் மே 22 ல் சண்டைகள் முடிந்த பின்பு அங்குள்ள இரண்டு ஷியாட்களின் புனித நினைவிடங்களை சுற்றிலும் செய்யப்பட்டிருக்கிறது. இதானல் ஏறத்தாழ ஒரு வாரமாக அமெரிக்கத் துருப்புக்கள் கர்பலாவிற்கு நுழையவில்லை. இந்த மோதல் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருமானால் பல்லூஜாவைப்போல், கர்பலாவும், நஜாப்பும் ஈராக் ஆக்கிரமிப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்காது. அந்த நகரங்களில் ரோந்துப் பணியாற்றி வருகின்ற போலீசாரில் மிகப்பெரும்பாலோர் சதாரின் கிளர்ச்சியை பகிரங்கமாக ஆதரிப்பவர்கள் அல்லது பங்கெடுத்துக் கொண்டவர்கள் ஆவர். மஹாதி இராணுவ போராளிகள் அந்த நகரங்களில் நடமாடவில்லை. ஆனால், அவர்கள் தங்களது ஆயுதங்களோடு அழைக்கின்ற நேரத்தில் வருவதற்காக தயாராக உள்ளனர். கடந்த ஏப்ரலில் சதாரை கொன்றுவிட வேண்டும் அல்லது உயிருடன் பிடிக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது. மேலும், அவர் தனது போராளி இராணுவத்தைக் கலைத்துவிட்டு சென்ற ஆண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆதரவு மதபோதகர் கொலை வழக்கை சந்திக்க வேண்டும் என்று அமெரிக்கா கோருவதாக கூட்டணி இடைக்கால ஆணையம் தெரிவித்தது. ஷியாட் மதத் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திவந்த அமெரிக்க ஆதரவு ஷியாட் தலைவர் கொலையில் தனக்கு தொடர்பு இல்லை என்று சதார் அறிவித்ததோடு, தான் அதற்கு கட்டுப்பட முடியாது என்றும் குறிப்பிட்டார். ''என்றைக்குமே நான் ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன்'' என்று வெள்ளியன்று அல் ஜெசீராவிற்கு அவர் தெரிவித்தார். ஞாயிறன்று நடைபெற்ற ஒரு மோதலின்போது, நஜாப்பில் சதாரின் இராணுவம் மிக வலுவாக நிலைகொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. ஷிையட்டுகளின் பரந்து விரிந்த புனித நினைவிடம் உள்ள புறநகர்ப் பகுதிக்குள் அமெரிக்க ரோந்து அணியினர் நுழைய முயன்றபோது இந்த மோதல் ஏற்பட்டது. கூட்டணி இடைக்கால ஆணையத்தின் பிரதிநிதியான ஜெனரல் மார்க் கிம்மிட், இந்த மோதல்பற்றி கருத்துத் தெரிவிக்கும்போது சண்டை நிறுத்த உடன்படிக்கைபற்றி அறியாத போராளிகள் அல்லது சதாரின் கட்டுப்பாட்டில் இல்லாத ஈராக் போராளிகள் இதில் சம்மந்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். ஆனால், சதாரின் பிரதிநிதிகள் அமெரிக்கப் படைப்பிரிவொன்று மோதல் நிறுத்த ''உடன்படிக்கைக்கு விரோதமாக நஜாப் நகரை நோக்கி வந்ததாகவும்,'' மஹாதி இராணுவப் போராளிகள் RPG ராக்கெட்டுகள் மற்றும் துப்பாக்கிகள் மூலம் போரிட்டு அவர்களை பின்வாங்கச் செய்ததாகவும்'' தெரிவித்தனர். ''எந்த உடன்படிக்கையைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. மஹாதி இராணுவத்தினர் இன்னமும் துப்பாக்கிகளோடு தெருக்களில் சுற்றிக்கொண்டுதான் வருகின்றனர். அத்தோடு, அமெரிக்கப்படைகளும் இன்னும் சுட்டுக்கொண்டுதான் இருக்கின்றன'' என்று உள்ளூர்வாசி ஒருவர் நஜாப்பில் வாஷிங்டன் போஸ்டிற்கு ஞாயிறன்று தெரிவித்தார். நஜாப்பில் உடன்படிக்கை உருவான பின்னர் அருகாமையிலுள்ள குபா நகரத்தில் தினசரி மோதல்கள் நடந்துகொண்டு வருகிறது. குபாவிலுள்ள (Kufa) பிரதான மசூதியில் சதார் மத போதனைகளை செய்து வருகிறார். தனது உரைகளின்போது ஈராக்கிலுள்ள அனைத்து மத, இனக் குழுக்களை சார்ந்தவர்களும் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக போரிட ஒன்றுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கிறார். ஈராக்கியர்களின் போராட்டத்தை ஆதரிக்குமாறு அமெரிக்க மக்களுக்கும் அவர் வேண்டுகோள்களை விடுத்து வருகிறார். ஞாயிறு இரவில் 100 அமெரிக்கத் துருப்புக்கள் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களோடு நகர மத்திய பகுதியில் குவிந்தன. ஒரு மணிநேரம் பெரும் மோதல் நடைபெற்ற பின்னர் அமெரிக்கப்படைகள் தங்களது தளத்திற்கு பின்வாங்கிச் சென்றன. இம்மோதலில் இரண்டு அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர். கடந்த எட்டு வாரங்களில் ஈராக் வெகுஜனங்களிடையே சதாரின் மதிப்பும் செல்வாக்கும் அதிகரித்துள்ளது. அண்மையில் ஈராக் மூலோபாய ஆய்வு நிலையம் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில் சதாரின் செல்வாக்கு 68 சதவீதமாக உள்ளது. ஏப்ரலுக்கு முன்னர் அவரது செல்வாக்கு மிக குறைவாகத்தான் இருந்தது. நஜாப்பில் போர் நிறுத்த உடன்பாட்டை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதற்கான காரணங்களை முதலாவது அமெரிக்க கவச வாகனப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் மார்ட்டின் டெம்சே (Martin Dempsey) விளக்கினார். ஷியாட்டுகளின் மிகப்புனிதமான நினைவிடத்தில் தாக்குதல் நடாத்தப்பட்டால் மேலும் பல போராளிகள் சதாரின் பக்கம் திரண்டுவிடக்கூடும் என்று கருதியே இந்த உடன்படிக்கை செய்யப்பட்டதாக டெம்சே குறிப்பிட்டார். மேலும் இது பற்றி அவர் கருத்துத் தெரிவிக்கும்போது ''ஒரு சிறிய எழுச்சியை பெருமளவிற்கு விரிவுபடுத்தி பொதுமக்கள் கிளர்ச்சியாக மாற்றுவதற்கு சதார் முயன்று வருகிறார். அவரது இந்தத் திட்டம் நிறைவேறக்கூடாது என்பதுதான் எங்களது குறிக்கோள். ஷியாட் மக்களிடையே அவர் மிகப்பெருமளவிற்கு செல்வாக்கு பெறுவதற்கு எதையும் செய்துவிடக்கூடாது என்பதுதான் இந்த உடன்படிக்கையின் நோக்கம்'' என்று அவர் விளக்கினார். ஈராக்கின் பெரும்பாலான ஷியாட் மக்களின் அரசியல் குரலாக சதாரின் இயக்கம் மாறுவதைத் தடுப்பதற்கு பேரங்கள், முயற்சிகள் மேற்கொள்வதற்கான காலம் கடந்துவிட்டது. சதாரின் ஆதரவாளரான ஷேக் அகமட் ஷபானி என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்க்கு பேட்டியளிக்கும்போது ''ஈராக் மக்கள் தற்போது தங்களது ஒரே எதிரி அமெரிக்கர்கள்தான் என்று கருதுகின்றனர். அத்துடன் ஒரு ஷியைட்டு தலைமை உருவாவதற்கு அமெரிக்காதான் காரணம்'' என்று தெரிவித்தார். ஷியைட்டுகளில் உள்ள சதாரின் எதிரிகள் கூட்டணி இடைக்கால ஆணையத்தை ஆதரித்து, அதனுடன் ஒத்துழைத்து செயல்பட்டதன் மூலமும், இந்த எழுச்சியை ஆதரிக்காததாலும் தங்களது செல்வாக்கை இழந்துவிட்டனர். முன்னணி ஷியாட் மத போதகரான அயத்தொல்லா அலி அல் சிஸ்தானியும், ஷியைட்டுகளின் கட்சிகளும் பொதுமக்கள் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட வேண்டாம் என்று விடுத்த வேண்டுகோளும், ஈராக் ஆளும் குழுவுக்கு ஷியாட் கட்சிகள் விடுத்த வேண்டுகோள்களும் எந்த தாக்கத்தை உண்டுபண்ணவில்லை. வெள்ளிக்கிழமையன்று ஆக்கிரமிப்பு ஆதரவு ஈராக் இஸ்லாமியப் புரட்சி சுப்ரீம் சபையில் (Supreme Council for the Islamic Revolution in Iraq-SCIRI) உள்ள நஜாப் பிரதிநிதி ஒருவரை கொலை செய்வதற்கான முயற்சி நடைபெற்றது. இந்த சபை சதார் மீது பழிபோட்டதோடு, அவரைக் கண்டித்து நஜாப்பில் பேரணி நடத்த அழைப்பு விடுத்தது. இந்தப் பேரணியில் 100 க்கும் குறைவானவர்கள்தான் கலந்து கொண்டனர். புஷ் நிர்வாகமும், அமெரிக்க இராணுவமும் மார்ச் மாதக் கடைசியில் அல் சதாரின் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தொடங்கிய நேரத்தில், ஈராக் ஷியாட்டுக்களிடையே அமெரிக்கா ஆக்கிரமிப்பிற்கு எந்தளவிற்கு எதிர்ப்பும் பகை உணர்வும் நிலவுகிறது என்பதை மிகக்கடுமையாக குறைத்து மதிப்பிட்டன. மார்ச் 28 ல் சதாரின் செய்திப் பத்திரிகையான Al Hawza பாக்தாத் அலுவலகத்தின் மீது அமெரிக்கத் துருப்புக்கள் திடீர் சோதனை நடத்தி அந்தப் பத்திரிகை சட்ட விரோதமானது என்று பிரகடனப்படுத்தியது. முன்தணிக்கை முறைக்கு எதிராக பல நாட்கள் கண்டனப் பேரணிகள் வளர்ந்து கொண்டு வந்த சூழ்நிலையில் பாக்தாத்திலுள்ள சதாரின் முன்னணி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அத்தோடு, 2003 ஏப்ரலில் ஷியாட் மதபோதகர் கொலை செய்யப்பட்டதில் அவர் சம்மந்தப்பட்டிருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் கைது நடவடிக்கைகளுக்கு எதிராக நஜாப் நகரில் ஏப்ரல் 4 ல் நடைபெற்ற கண்டனப்பேரணியில் கூட்டணிப்படைகள் சுட்டதில் அதில் கலந்து கொண்ட 21 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் பின்பு சதாருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. மஹாதி இராணுவத்தோடு ரத்தக்களறி மோதலை தூண்டுவதன் மூலம் ஜூன் 30 ல் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அரசாங்கத்திற்கு ''இறையாண்மையை'' ஒப்படைப்பதற்கு ஷியாட்டுகள் தங்களது எதிர்ப்பை மட்டுப்படுத்திவிட முடியும் என்று வாஷிங்டன் நம்பியது. மாறாக, சதார் அமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு கிளர்ச்சிக்கு தூபம் போட்டுவிட்டது. ஷியாட் போராளிகளும், இளைஞர்களும், தொழிலாள வர்க்கம் வாழுகின்ற பாக்தாத்தின் புறநகரான சதார் சிட்டி, நஜாப், கர்பலா, குட் (Kut), நஸ்ரியா மற்றும் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமரா மற்றும் பாஸ்ரா ஆகிய நகரங்களில் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அரசாங்க கட்டடங்களை பிடித்துக்கொண்டனர். நகரத்தெருக்களை கைப்பற்றினர். இதனால் அமெரிக்கா மற்றும் கூட்டணிப்படைகள் பாதுகாப்பாக தங்களது முகாம்களுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த மோதல்களில் எத்தனை ஷியைட் போராளிகள் மடிந்தார்கள் என்பது தெரியவில்லை. அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் டாங்கிகள் மற்றும் ஹெலிகாப்டர் போர்விமானங்களோடு நேருக்குநேர் சண்டையிட்ட போராளிகளில் கிட்டத்தட்ட 1000 பேர் மடிந்திருக்கலாம் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்திருகக் கூடும். அப்படியிருந்தும் ஆயுதந்தாங்கிய எதிர்ப்பு முடிவிற்கு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. நஜாப் தொடர்ந்தும் மஹாதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. பாக்தாத்தின் புறநகரான சதார் சிட்டி இன்னமும் அவர்களது உண்மையான கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதனால், கவசவாகனங்களில்தான் அமெரிக்கப்படைகள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடிகிறது. அமாராவிற்கும், பாஸ்ராவிற்கும் இடையே உள்ள சதுப்பு நிலப்பகுதிகளில் மோதல்கள் அதிகரித்து வருவதால் பிரிட்டனின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு ஆக்கிரமிப்பு படைபலத்தை பெருக்குவதற்காக ஈராக்கிற்கு மேலும் 370 பிரிட்டிஷ் துருப்புக்களும், கூடுதலாக கவச வாகனங்களும் அவசரமாக அனுப்பப்பட்டு வருகின்றன. ''தற்போது சந்தித்துவரும் வன்முறையின் அளவு கண்டு பிரிட்டிஷ் துருப்புக்கள் அதிர்ச்சியடைந்துவிட்டதாக'' டெலிகிராப் தெரிவித்திருக்கிறது. தினசரி அவர்கள் தாக்குதலுக்கு இலக்காவதாக கூறப்படுகிறது. ஆகவே, புஷ் நிர்வாகமும், ஐ.நா.வும் தேந்தெடுக்கப்படாத பிரதிநிதிகளைக் கொண்டு, இடம்பெறாத பொம்மை ஆட்சியை ஈராக்கின் சட்டப்பூர்வமான ''இறையாண்மை'' கொண்ட அரசாங்கமாக சித்தரிக்க முயன்றாலும், மில்லியன்கணக்கான ஈராக் மக்களது அனுதாபம், ஆக்கிரமித்திருக்கும் படைகளை விரட்டியடிப்பதற்கு போரிட்டு வருபவர்கள் பக்கம்தான் உள்ளது. ஆதலால், இந்த போர்நிறுத்த உடன்பாடு நீண்டகாலத்திற்கு நீடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. |