WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ஸ்பெயின்
Spanish visit by Syria's Assad highlights differences between Madrid and
Washington
சிரியாவின் அசாட் ஸ்பெயின் பயணம், மாட்ரிட்டிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை
உயர்த்திக் காட்டுகின்றது
By Mike Ingram
8 June 2004
Use this
version to print |
Send this link by email |
Email the author
சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அதிகாரபூர்வமாக ஸ்பெயினுக்கு மேற்கொண்ட
பயணம் மாட்ரிட்டிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே ஈராக் ஆக்கிரமிப்பு பற்றியும் பொதுவான மத்திய கிழக்குக்
கொள்கை பற்றியும் உள்ள வேறுபாடுகளை உயர்த்திக் காட்டியுள்ளது.
அமெரிக்கா சிரியாவிற்கு எதிராக சுமத்தியுள்ள பொருளாதாரத்தடைகள், சிரியாவிற்கும்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே இருந்த அமைப்பு உடன்பாடு பிரிட்டன், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து நாடுகள்
தடைசெய்துள்ள பின்னணியில் இந்த வருகை நடைபெற்றது. அந்த ஒப்பந்தப்படி, சிரியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றிய
நாடுகளுக்கும் இடையே சுற்றுலாத்துறை, போக்குவரத்துத்துறை, சுங்கத்துறை, சுற்றுச் சூழல் இவற்றில் உடன்பாட்டிற்கு
இடம் வகுக்கப்பட்டிருந்தது. இறக்குமதி வரிகள் குறைப்பு, பொருட்கள், பணிகள், பொதுத் தேவைக்கான
வாங்குதல் இவற்றிற்கு வழிசெய்யப்பட்டிருந்தது. இரசாயன ஆயுதங்கள் கண்டனம் பற்றி ஒரு விதி சேர்க்கப்படவேண்டும்
என்ற கோரிக்கை எழுந்ததன் காரணமாக இந்த ஒப்பந்தம் வராது என்ற நிலையில் மே 1ம் தேதி வரை தள்ளிப்போடப்பட்டது.
ஏற்கனவே இவ்வொப்பந்தத்தில் பேரழிவு ஆயுதங்கள் பற்றி ஒரு கண்டனம் இருந்தபோதிலும், கடைசிநேரத்தில் மூன்று
நாடுகளும் இன்னும் கடுமையான சொற்களில் கண்டனம் இருக்கவேண்டும் என வலியுறுத்தின.
சிரிய அதிகாரிகள், ஐரோப்பிய ஒன்றியத்திடம் இக்கோரிக்கை தங்கள் நாட்டிற்கு
எதிராக உள்ளது எனப் புகார் கூறியுள்ளனர். இத்தகைய கோரிக்கை இஸ்ரேலுக்கு எதிராக முன்வைக்கப்படவில்லை
என்றும் அதனிடம் அணுவாயுதங்கள் இருப்பதாகக் கூட பரந்த அளவில் நம்பப்படுவதாகவும் கூறினார். இந்த ஒப்பந்தம்
டமாஸ்கசுக்கு மிகவும் முக்கியத்துவத்தைக் கொண்டது என்றும் அது ஐரோப்பிய முதலீடு சிரியாவிற்கு கிடைக்க வகை
செய்யும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் சிரியப் பொருட்கள் மீது நிறைய வரிகுறைப்பு
ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஒப்பந்தத்தைப் பொறுத்தவரையில் சிரியாவிற்கு முக்கியமான மற்றொரு காரணி அது
ஐரோப்பாவுடன் கூடுதலான உறவுகளைக் கொள்ள உதவும் என்றும் இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ
அச்சுறுத்தல்களுக்கு ஒரு மாற்றாக அமையும் என்றும் கருதப்படுகிறது.
ஜூன் 2000ல், தனது தந்தையாரின் மரணத்திற்குப் பின் பதவிக்கு வந்த, சிரிய
ஜனாதிபதியான ஹபிஸ் அல்-அசாத், ஸ்பெயின் நாட்டுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கிறார்; பலமுறை
தொலைபேசி மூலம் முன்பு பிரதம மந்திரியாக இருந்த ஜோஸ் மரிய அஸ்நருடனும் பேசியுள்ளார். இந்த உறவு
இன்னும் கூடுதலான முறையில் ஜோஸ் லூயி ஜாபடேரோவின் தலைமையின்கீழ் உள்ள சோசலிஸ்ட் கட்சி தேர்தலில்
வெற்றி பெற்றதை அடுத்துத் தொடரும் என்று சிரியா எதிர்பார்க்கிறது. ஸ்பானிய சோசலிச தொழிலாளர் கட்சி
(PSOE)
மார்ச் மாதம் அதிகாரத்திற்கு வந்தது; வலதுசாரி மக்கள் முன்னணி
(PP)
யின் பால் இருந்த பரந்த வெறுப்பும் போர்
எதிர்ப்பு உணர்வும்தான் இதற்குக் காரணம்.
PP
இன் ஆதரவு ஈராக்கில் அமெரிக்கத் தலைமையிலான
படையெடுப்பு, ஆக்கிரமிப்பு ஆகியவை நடந்ததற்கு மக்கள் விரோதமாக இருந்ததை நன்கு உணர்ந்ததால், விரைவில்
1400 பேர் அடங்கிய ஸ்பெயினின் படைப்பிரிவை விலக்கிக் கொள்ளுவதாக ஜாபடேரோ உடனடியாக அறிவித்தார்.
ஜாபடேரோ, வெளியுறவுக் கொள்கை அஸ்நர் கொண்டிருந்தது போல் அமெரிக்காவுடனான நெருங்கிய உறவுக்கு
எதிராக ஐரோப்பாவுடன் கூடுதலான உறவை வலியுறுத்தும் என்று தெளிவுபடுத்தினார்.
ஜாபடேரோவின் ஈராக்கிலிருந்து
படைகளை விடுவித்துக் கொண்டது, ஐக்கிய நாடுகளின் தலமையின்கீழ் ஆக்கிரமிப்பு இருக்க வேண்டும் என்ற
கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டது ஆகும். புதிய அரசாங்கம் பிரான்ஸ், ஜேர்மனிய அரசாங்கங்களுடன்
விவாதங்களை தொடங்கி ஈராக் ஆக்கிரமிப்பு பற்றி ஒரு திட்டம் வகுக்க ஆலோசனை செய்தது; இது உள்நாட்டு
அழுத்தத்தை குறைத்து, புஷ் நிர்வாகத்தின்மீது அழுத்தத்தை அதிகரித்து, ஐரோப்பிய சக்திகள் தங்கள் பங்கை
ஈராக்கிய எண்ணெய் அளிப்பிலும், மற்ற வணிக ஒப்பந்தங்களில் பெறவும் வசதியாக இருக்கும். "ஸ்பெயின்,
பிரான்ஸ், ஜேர்மனி, ஆகியவை அமெரிக்காவிற்கு உதவி ஈராக்கிலிருந்து அது வெளியேற வகைசெய்து, ஒரு
சர்வதேச முறையின்படி படைகள் அங்கு இருக்கமுடியுமா என ஆய்ந்து, அங்குள்ள பெரும்பான்மையான மக்களால் அது
ஒரு ஆக்கிரமிப்பு எனக் கருதாமல் இருக்க வகை செய்யமுடியுமா" என விவாதித்து வருவதாக அரசாங்க வட்டார
தகவல் தெரிவித்தது. வெளியுறவு அமைச்சர்
Miguel Angel Moratinos
அரேபியப் படைகள் ஈராக்கிற்கு அனுப்பப்பட முடியுமா எனப் பரிசீலிக்கப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பாவிற்கும் மத்திய கிழக்கிற்கும் இடையே, பெருகிய முறையில் ஓர் இணைப்புப்
போல் ஸ்பெயின் செயல்பட்டு அப்பகுதியில் தன்னுடைய பணிகள்மூலம் ஒரு பெரும் தூதரகப்பணியைச் செய்துவருகிறது.
ஸ்பானிய படைகள் விலகலுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும், அமெரிக்கா தூதரகப் பிரிவில் அதன் உதவியை
வரவேற்றுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அமைச்சரான மோராடினோஸ், மத்திய கிழக்கில் நெடுநாட்கள்
தூதரகப்பணிகளில் ஈடுபட்டவராவார். அவர் ரபாட்டிற்கு 1984ல் அனுப்பப்பட்டிருந்தார், 1991 அவர்
Institute for Cooperation
with the Arab World எனப்படும்
அமைப்பிற்கு இயக்குனர் தலைவராக உயர்ந்தார். இஸ்ரேலில் ஸ்பெயினின் தூதராகச் சிறிது காலம் இருந்த பின்,
இவர் EU
வின் சிறப்புத் தூதராக மத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு 1996 லிருந்து 2003 வரை இருந்தார்.
2002ல் பெத்தலஹெமில்
Basilica of the Nativitiy
முற்றுகை நிறுத்தத்தை நிறுத்தும் பேச்சுவார்த்தைகளில் மோராடினோஸ் இடம் பெற்றிருந்ததுடன், பாலஸ்தீனிய முதலாளித்துவ
வட்டங்களிலும் பெரும் மதிப்பைப் பெற்றவராகவும் இருந்தார். இந்த வரலாற்றுப் பின்னணியில், அமெரிக்க அரசுத்துறை
செயலாளர் கொலின் பவலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான கொண்டலீசா ரைசும் அவரை மே மாதம்
வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே அமைதிப்பேச்சை வளர்க்க
உதவுமாறு கேட்டனர். தன்னுடைய பணியை விவரித்து மோராடினெளோஸ் கூறினார்: "காசாவிலிருந்து (இஸ்ரேலிய
பிரதம மந்திரி ஏரியல் ஷரோன்) வெளியேறுவதற்கான முன்முயற்சிகளில் ஈடுபடுவதுடன் ஆரம்பிக்கும் இப்புதிய செயல்திறன்
கொண்ட பங்கை உருவாக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஸ்பெயின் பங்களிப்புச்செய்ய வேண்டும்."
மோரடினோஸ், ஷரோனின் முடிவான மேற்குக் கரையின் பாதிக்கு மேலான பகுதியை
நிரந்தரமாக இணைத்தலை, காசாப் பகுதிக்குள் வேறுநாட்டால் சுற்றி வளைக்கப்பட்ட ஒரு பாலஸ்தீனிய பகுதியை
தோற்றுவித்தலை "ஒரு வாய்ப்பாக" வரவேற்றுள்ளார் -இந்த நிலைப்பாடுதான் ஐரோப்பிய ஒன்றியத்தாலும்
எடுக்கப்பட்டிருக்கிறது. ஷரோனுடைய திட்டத்தை பாலஸ்தீனியர்களின் முன்னேற்றத்திற்கு ஒரு நல்ல நடவடிக்கை என
அறிவித்து, வாஷிங்டனுக்கு ஒரு முக்கியமான பணியை மொராடினோஸ் செய்து கொடுத்துள்ளார்.
ஜூன் 1ம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மோராடினோஸ் கூறுகிறார்: மத்திய
கிழக்கில் சிரியா ஒரு முக்கியமான நாடு ஆகும். அப்பகுதியின் பாதுகாப்பு, உறுதித்தன்மை இவற்றிற்கான
காரணங்கள் பலவற்றையும் தீர்த்துவைக்கும் ஆற்றலை அது கொண்டுள்ளது." சிரிய - ஐரோப்பிய சங்க
உடன்பாட்டைப் பற்றி மோரடினோஸ், இந்த உடன்பாடு விரைவில் கையெழுத்தாவதற்கு ஸ்பெயின் தன்னால்
இயன்றதைச் செய்யும் என்று கூறியுள்ளார். சிரியாவிற்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகள்
விதித்துள்ளதற்கு ஸ்பெயினுடைய எதிர்ப்பை தெரிவிக்கையில், மோராடினோஸ் கூறுகிறார்: "இந்தப் பொருளாதாரத்
தடைகள் பேச்சு வார்த்தைகளுக்கு ஆதரவாக இல்லை; அவை சிரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள
தடைகள், கருத்து வேறுபாடுகளை தீர்த்துவைக்க தக்க சூழ்நிலையை உருவாக்காது.
ஈராக்கைப் பற்றிக் கூறுகையில், மோராடினோஸ், அங்குள்ள நிலைமை பற்றி சிரியா
கொண்டுள்ள கவலைகளைத்தான் ஸ்பெயினும் கொண்டுள்ளது என்றும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் பாதுகாப்பு,
ஸ்திரத்தன்மை இவை ஈராக்கிய மக்களுக்கு திரும்புவதற்கு ஸ்பெயின் தன்னால் "இயன்ற அனைத்தையும்" செய்யும்
என்றும் குறிப்பிட்டார்.
ஜாபெடெரோவுடன் பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் ஒரு கூட்டுச் செய்தியாளர்
கூட்டத்தில் பேசியபோது, அசாத் அனைத்து விவகாரங்களும் நல்லமுறையில் விவாதிக்கப்பட்டது என்றும் ஈராக்கில்
இருந்து ஸ்பானியப் படைகள் திரும்பப் பெறப்பட்டவுடன், நேரடியான முறையில் ஒரு சர்வதேச அங்கீகாரமே
அதற்குக் கிடைத்துள்ளதாகவும் கூறினார். சமீபத்திய ஸ்பானிய நடவடிக்கை சர்வதேச அளவில் ஒரு சமநிலைகொண்டு
வந்தது போல் ஆயிற்று என்றும், ஐரோப்பாவிற்குள் ஒரு சமநிலையும் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும்
கூறினார்.
"ஸ்பெயினுடைய சமீபத்திய நிலைப்பாடு ஈராக்கில் அதன் கெளரவத்தையும், நிலைப்பாட்டையும்
உயர்த்தியுள்ளது.... இது ஈராக்கிய மக்களால் பாராட்டப்படும், அப்பகுதி மக்கள் மற்றும் உலகெங்கும் இதற்கு
மதிப்பு கிடைக்கும்.... இப்பொழுது கூடுதலான நல்ல பங்கை ஈராக்கிய பிரச்சினையில் ஸ்பெயின் காட்ட முடியும்;
மேலும் (மத்திய கிழக்கில்) தேக்கத்தில் சிக்கியுள்ள அமைதிப் பேச்சு வார்த்தைகளுக்கும் ஸ்பெயின் நல்ல பங்கைக்
காட்ட முடியும்." என்று அசாத் கூறினார்.
"இந்த ஸ்பெயினுடைய பங்கு அடுத்த சில மாதங்களில் ஏற்பட்டுவிடும் எனக் கூறமுடியாது;
ஏனென்றால் சர்வதேச சூழ்நிலை அமைதிப் பேச்சு முன்னேற்றம் காணும் வகையில் சென்று கொண்டிருக்க பாதை
அமைக்காமற் போகலாம், ஆனால் ஸ்பானிய நண்பர்களுடன் இப்பொழுது நடத்திய பேச்சுக்கள்.... ஸ்பானிய
அரசாங்கத்துடன் காணும் கூட்டுக் கருத்துக்கள் இந்த வழிவகையை முன்னேற்றுவிக்க வெகு விரைவில் ஏற்பாடு செய்யுங்கால்...
சர்வதேச நிலைமைகள் மாறலாம்.... அப்பொழுது பேச்சுவார்த்தை வழிவகைகள் மறுபடியும் தொடக்கப் பெறலாம்."
இவர் குறிப்பிடும் சர்வதேச நிலைமை என்பது அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலும், ஒருவேளை குடியரசுக் கட்சி
தோல்வியைத் தழுவக்கூடும் என்பதும்தான்.
அசாத் ஸ்பெயினுக்குச் சென்று வந்த பின், சிரியாவின் வெளியுறவு அமைச்சர் பரூக்
அ-ஷாரா ஒரு குவைத் செய்தித் தாளுக்கு சிரிய அமெரிக்க உறவுகள் மோசமான நிலையில் உள்ளன என்றும் இதற்குக்
காரணம் வாஷிங்டன் குருட்டுத்தனமாக இஸ்ரேலை ஆதரிப்பதுதான் என்றும் கூறினார். "சிரியா பொறுப்புக் கூறும்
சட்டம் எனபது சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானது என்றும் இஸ்ரேல் கொடுத்த அழுத்தத்தின்பேரில் இயற்றப்பட்டது."
என்றும் ஷாரா கூறினார்.
ஜாபாடெரோ அதன் "நம்பிக்கைத்தன்மை" மத்திய கிழக்கு பகுதியின் தூதரகச் செயல்பாடுகளில்
பயன்பாடு உடையதாக இருக்கும் என்று அமெரிக்காவை நம்பவைக்கப் பார்க்கிறார். இம்மாதிரியான முயற்சிகள்
புஷ் நிர்வாகத்தால் வரவேற்கப்பட்டாலும், அப்பகுதியில் தனக்கு இருக்கும் ஆதிக்கத்தைக் குறைக்கும் முயற்சிகளுக்கு
அது உடன்படாது. ஸ்பெயின் அசாதிற்கு அளித்த வரவேற்பு அதை அமெரிக்காவுடன் மேலும் மோதல் போக்கிற்கு
இடம் கொடுக்கும்; அதேபோல் ஐரோப்பாவிற்குள்ளே புஷ்ஷின் சிரியா மீதான தாக்குதல்களுக்கு மறைமுகமாக
ஆதரிப்பவர்களிடத்தும் மோதல் கொள்ள வைக்கும்.
Top of page |