World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSRNew law on Russian referendums: crude attack on democratic rights ரஷ்ய பொது வாக்கெடுப்புக்களை பற்றிய புதுச்சட்டம்: ஜனநாயக உரிமைகள்மீது கொடூரமான தாக்குதல் By Vladimir Volkov பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத் தொடரில் ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கும் உரையைப் போல் சமீபத்தில் கொடுத்த உரையில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், "ஒரு சுதந்திரமான மக்களின், சுதந்திரமான சமுதாயத்தை" தோற்றுவிப்பதற்கு குறிப்பிட்ட முக்கியத்துவம் அளித்தார். ஆனால் அவருடைய அரசாங்கத்தின் உண்மை நடவடிக்கைகள் இதற்கு நேர் எதிரிடையாகத்தான் இலக்கைக் கொண்டுள்ளன. இவ்விதத்தில், ரஷ்ய குடிமக்கள் அரசியல் சட்டபூர்வமாக பெற்றிருக்கும் தங்களின் விருப்பை வெளிப்படுத்தும் உரிமையைப் பறிக்கும் வகையில் பொதுவாக்கெடுப்பு தேர்தல் பற்றி ஒரு புதிய சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் ஏராளமான நிர்வாக மற்றும் அதிகாரத்துவ தடைகள் இருப்பது பொது வாக்கெடுப்பு அரசாங்கத்தின் முழு இசைவையும் ஆதரவையும் பெற்றால்தான் சாத்தியம் என்ற நிலையை ஏற்படுத்துகிறது. இந்தச் சட்டத்தின்படி கொள்ளப்பட வேண்டிய தேவைகள், மத்திய தேர்தல் குழு (Central Election Commission - CEC) வினால் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தின் கீழ்பிரிவினால் ஜூன் 2ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது; இது ஜனநாயக செயல்முறையின் சாராம்சத்தையே கேலிக் கூத்தாக்கியிருக்கிறது. இச்சட்டத்தின்படி, அரசியல் கட்சிகள் இனி பொதுவாக்கெடுப்பு (Referendum) முயற்சியில் ஈடுபடமுடியாது. தனிப்பட்ட நபர்களும், அரசு அதிகாரத்தின் கூட்டாட்சி அங்கங்களும்தான் இவ்வுரிமையைப் பயன்படுத்த முடியும். இவ்வழிவகை கீழ்க்கண்ட முறையில் ஏளனத்திற்குரியதாகிறது. ஒரு வாக்கெடுப்புப் பிரச்சாரத்தை ஆரம்ப அனுமதி வாங்குவதற்கு, அதன் ஆதரவாளர்கள் குறைந்தது நாட்டின் 45 பகுதிகளில் இருந்து 4,500 கையெழுத்துக்களைத் திரட்ட வேண்டும் (ஒவ்வொரு பகுதியில் இருந்தும் குறைந்தது 100 குடிமக்கள் தேவை). கையெழுத்திடும் ஒவ்வொருவரும் சான்று அலுவலர் (Notary public) தனித்தனியே பதிவு செய்யவேண்டும். இதன் பின், ஒரு மாத காலத்திற்குள், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கையெழுத்திட்டோர் ஒரு குழுவாகத் தங்களை அப்பகுதி தேர்தல் அலுவலகத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். இதன்பின் இந்தப் பகுதிக் குழுக்கள் கொடுத்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு தலைமை தேர்தல் அதிகாரியினால் எடுத்துக் கொள்ளப்படும். இந்த விதிமுறைகள் எல்லாம் நன்கு பின்பற்றப்பட்ட பின்னர், பகுதிக் குழுக்கள் பதிவுசெய்யப்பட்ட பின்னர் அவர்கள் தங்கள் முயற்சிகளுக்குப் பணம் திரட்ட அனுமதிக்கப்படுவர். இதற்கு அதிகபட்ச நிதியாக 250 மில்லியன் ரூபிள்கள் ($30 மில்லியனுக்கும் குறைவு) நிர்ணயிக்கப்படுகிறது. அந்தக் கணத்தில் இருந்து குழுக்கள் கையெழுத்தை சேகரிக்கலாம். இரண்டு மில்லியன் கையெழுத்துக்கள் இருந்தால் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும். கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி வாக்கெடுப்புத் தேவை பற்றிய கேள்வி (அல்லது கேள்விகள், அவற்றின் அளவு, ஜனநாயக "உணர்வின்படி" அளவு வரம்பிற்கு உட்படுத்தப்படவில்லை) யை அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு (Constitutional Court CC) அனுப்பிவைக்கிறார். அது இவை அடிப்படை சட்டநெறிக்கு உட்பட்டதா என்று அறியும். முடிவில் CC தன்னுடைய ஒப்புதலைக் கொடுத்தபின்னர் வாக்கெடுப்புக்கான ஆதரவு பிரச்சாரம் தொடங்கும்; இதற்கு ஒரு மாதகால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதேநேரத்தில் கருத்திற்கு எதிராக பிரச்சாரமும் அனுமதிக்கப்படும். ஆயினும், இவற்றை தவிர இன்னும் சிறிது கட்டுப்பாடுகளும் உள்ளன. பொதுவாக்கெடுப்பின்மூலம் தீர்க்கப்பட இயலாத பிரச்சினைகள் என சட்டம் பலவற்றைத் தொகுத்துக் கூறியுள்ளது. இவை குடிமக்கள் பாதுகாப்பு, தனியார் நிலங்கள், வரிகள் மற்றும் குடிமக்களுக்கு அரசாங்கத்தின் பணப்பொறுப்பு பற்றிய முறைகள் ஆகியவற்றை அடக்கியுள்ளது. ஜனாதிபதி தன்னுடைய பதவிக்காலத்தை முடிப்பதற்கு முன் அவரை திருப்பியழைத்தலும் தடை செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்திலுள்ள பிரதிநிதிகளை திருப்பியழைத்தல் பிரச்சினையும் வாக்கெடுப்பு முறையினால் உள்ளடக்க முடியாது என்று சட்டம் குறிப்பிட்டுப் பேசுகிறது. இந்தச் சட்டம் 2002 இலையுதிர்காலத்தில் இயற்றப்பட்டு, கடந்த ஆண்டு அரசியலமைப்பு நீதிமன்றத்தின் இசைவினைப் பெற்றது; வாக்கெடுப்புக்கள் ஒரு ஜனாதிபதி அல்லது பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற முதல் இரண்டு ஆண்டுகளுக்குள்தான் நடத்தப்படவேண்டும் எனக் கட்டாயமாகக் கூறியுள்ளது. இறுதியாக, வாக்கெடுப்புக்கள் 50 சதவிகிதம் வாக்குப் போடும் உரிமை உடையவர்கள் வாக்களித்தால்தான் செல்லுபடியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. (உதாரணமாக ரஷ்ய பகுதிகள் பலவற்றில் கவர்னர் தேர்தல்கள் 25 சதவிகிதத்தினராவது கலந்து கொண்டால்தான் செல்லுபடியாகும் என்று உள்ளன; சில முனிசிபல் தேர்தல்கள் ஒரு வாக்காளர் வாக்குப் போட்டாலும் அதிக வாக்கு என்று எடுத்துக்கொள்ளுகின்றன.) இப்புதிய சட்டம் வெளிப்படையாகவே தடைசெய்யும் சட்டமாகத்தான் இருக்கிறது. இப்பொழுதுள்ள நிலைமையை சட்டபூர்வமாக ஆக்கும் வகையில் இது இருக்கிறது; தந்திரோபாய காரணங்களுக்காக கிரெம்ளின் தற்காலிகமாக செப்டம்பர் 2002ல் வாக்கெடுப்புக்களை நிறுத்திவைத்திருந்தது. ரஷ்ய கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சி (CPRF) நான்கு பிரச்சினைகளான நிலவிற்பனை, பயன்பாட்டுச் சட்டங்களின் வரம்பு, குறைந்த ஊதியம், ஓய்வு ஊதியம் இவற்றைப் பற்றி வாக்கெடுப்பு நடத்த முயன்றபின் இத்தடை வந்தது. CPRF தொழிலாள வர்க்கத்தினிடம் பெருகி வரும் சரிவுநிலை பற்றிய அதிருப்தியைக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடும் வகையில் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு முன்பு இதைப் பயன்படுத்த முற்பட்டது. ஒரு பெரிய வகையில் இது ஒரு கண்துடைப்பு; ஏனென்றால் CPRF எத்தனையோ காலமாக கிரெம்ளினுடைய கொள்கைகளைத்தான் பின்பற்றி வருகிறது; ரஷியாவில் நடந்துவரும் சமுதாய அழிவிற்கு அதுவும் பொறுப்பு ஏற்கவேண்டும். CPRF மிகுந்த தாழ்மையுடன் செப்டம்பர் 2002 ல் புட்டின் அரசாங்கம் வாக்கெடுப்பு பற்றிய தடைகள் கொண்டுவந்தவுடன் அதனை ஏற்றது தற்செயல் நிகழ்வு அல்ல. இதையொட்டி CPRF நாட்டின் பாராளுமன்றத் தேர்தலில் கடந்த ஆண்டு மிகக் குறைந்த வாக்குகள் பெற்றது என்பது கருத்திற்கொள்ளப்படவேண்டும்.வாக்கெடுப்பு பற்றி புதிய விதிகளைப் புகுத்தியதை நியாயப்படுத்தி, அதன் ஆதரவாளர்கள் பேசுகையில், பல "சந்தேகத்திற்குரிய வழக்கங்கள்" இதனால் வந்துள்ளதாகக் கூறுகின்றனர். இது முற்றிலும் ஒரு போலி சாக்குப்போக்காகும். Nezavsisimaya Gazeta அதன் மே 24 பதிப்பில் குறிப்பிட்டுள்ளது போல், "தனித்த ரஷ்ய கூட்டாட்சி சுதந்திரமாக இயங்கும் 13 ஆண்டுகளிலும் நாம் இரண்டு வாக்கெடுப்புக்களைத்தான் கண்டிருக்கிறோம் -- ஏப்ரல், டிசம்பர் 1993ல் இவை இரண்டுமே மத்திய அரசால் முயற்சியெடுக்கப்பட்டவை. தனித்த முயற்சிகள் என்று ஏதேனும் இருக்குமாயின் அவை இரண்டும்தான் இருந்தன... இரண்டுமே வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுவிட்டன." உண்மையில், இப்புதுச்சட்டத்தின் நோக்கம், வாக்கெடுப்பின் மூலம் இப்பொழுதுள்ள அல்லது வரக்கூடிய திறனுடைய அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களை செயலிழக்குமாறு செய்து எந்த முக்கியமான பிரச்சினையையும் ஒரு தேசிய விவாதத்திற்கு உட்படுத்தி, குறிப்பிட்ட சக்திகள் தேவையின்றி மக்கள் ஆதரவு பெறாமல் பார்த்துக் கொள்ளுவது ஆகும். சட்டத்தைக் குரூரமான முறையில் வளைப்பதன் மூலம் அத்தகைய ஆபத்திலிருந்து காத்துக் கொள்ள எடுக்கப்படும் புட்டின் அரசாங்கத்தின் முயற்சியே இது. நாட்டின் அரசியல் அமைப்பு குடிமக்களுக்கு தெளிவாக பொதுவாக்கெடுப்பு உரிமையை அளித்துள்ளது; இந்த உரிமையின் முக்கியத்துவம் பாராளுமன்றத் தேர்தலுக்கும் (ஜனாதிபதித் தேர்தலுக்கும்) ஒப்பானதாக இருந்தது. அரசியலமைப்பு கூறுகிறது: ரஷ்ய கூட்டமைப்பின் இறைமை மக்களிடம் உறைகிறது. இந்த அதிகாரம் நேரடியாக நாட்டின் அதிகாரம் மற்றும் தல சுய ஆட்சி அரசாங்கங்கள் மூலம் அடையப்படும். "மக்களின் மிக உயர்ந்த உடனடியான இவ்வதிகார வெளிப்பாடு பொதுவாக்கெடுப்பு மற்றும் சுதந்திரமான தேர்தல்களின் மூலம் வெளிப்படும்" (விதி 3). வேறு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது: "ரஷியக் கூட்டமைப்பின் குடிமக்கள் அரசு அதிகார உறுப்புக்களுக்கும், உள்ளாட்சி அமைப்புக்களுக்கும் தேர்ந்து எடுக்கவும், தேர்ந்து எடுக்கப்படவும், மற்றும் வாக்கெடுப்புக்களில் பங்கு பெறுவதின் மூலம் உரிமையைக் கொண்டுள்ளனர்." (விதி 32, புள்ளி 2). இப்புதிய சட்டம் திறமையுடன் பொதுவாக்கெடுப்புக்களை நடத்தமுடியாமல் செய்வதன் மூலம் நாட்டின் அரசியலமைப்பின் மீது ஒரு தாக்குதலாக உள்ளது. ஒரு சட்ட அர்தத்தின்படி, இது சுதந்திரமான தேர்தல்களைப் பொதுவாக சட்டப்பாதுகாப்பிலிருந்து விலக்கி வைக்கும் சூழ்நிலைமைகளுக்கு நகருவதைக் கொண்டிருக்கிறது. தற்போதைய கிரெம்ளின் அரசாங்கத்தின் நடவடிக்கைகள், ரஷ்ய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை இல்லாமற் செய்வதற்கான வழியில் சில தடைகள் இருக்கின்றன, அவை அதனது குறிக்கோள்களை அடைவதற்குத் தடையாக அதிகரித்த அளவில் உணரப்படுகிறது என்பதை விளக்கிக் காட்டுகிறது. |