:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
India: government program gives assurances to big business
இந்தியா: அரசாங்க வேலைதிட்டம் பெரு வர்த்தகங்களுக்கு உறுதிமொழி வழங்குகிறது
By Deepal Jayasekera
14 June 2004
Back to screen
version
பிரதமர் மன்மோகன் சிங்கின் புதிய இந்திய அரசாங்கம் அதன் குறைந்த பட்ச பொது
வேலைதிட்டத்தை (Common Minimum Program-CMP)
சென்ற மாதக்கடைசியில் வெளியிட்டது, அதன் இலக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின்
நலன்களுக்கு மறு உத்திரவாதம் செய்து தருகின்ற வகையில் அது அமைந்திருக்கிறது. ஆளும் ஐக்கிய முற்போக்கு முன்னணி (UPA)
''பொருளாதார சீர்திருத்தங்களில் தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை'' தெரிவித்துக்கொண்டாலும், அது ''மனித
நேயத்தோடு'' செயற்படுத்தப்படும் என்று மேலும் குறிப்பிட்டிருக்கிறது.
இந்து, மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சியின் முந்திய கூட்டணி அரசாங்கம் தேர்தலில்
வியப்பளிக்கும் வகையில் தோல்வியடைந்ததும், சென்ற மாதம் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஒரு கூட்டணியில் பிரதமராக
சிங் பதவியேற்றார், அதில் பல சிறிய பிராந்திய தளத்தைக் கொண்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. பாரதிய ஜனதாவின்
தோல்விக்கு பிரதானமாக இருந்தது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டு
வாழ்க்கைத்தரம் குறைந்துவிட்ட, நகர்ப்புற மற்றும் கிராப்புற ஏழை மக்களின் குரோதம் ஆகும்.
தேர்தல் பிரச்சாரம் முழுவதிலும் காங்கிரஸ் கட்சி பெரு வர்த்தக அமைப்புகளுக்கு உறுதியளிக்க
முயன்று வந்தாலும், தேர்தல் முடிவு செய்திகள் வந்ததும் இந்திய பங்குகள் விலைகள் படு வீழ்ச்சியடைந்தன. காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்தி உடனடியாக விலகிக்கொண்டு சிங்கிற்கு ஆதரவளித்தார், அவர் 1990-களின் தொடக்கத்தில்
நிதியமைச்சர் என்ற முறையில் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதித்திருந்தார். பங்கு விலைகள் திரும்ப உயர்ந்தன
என்றாலும், மேலும் பொருளாதார மறுசீரமைப்புக்காக பெரு வர்த்தகங்களின் கோரிக்கைகளை திருப்திப்படுத்தியாக
வேண்டுமென்பதை சிங் அரசாங்கம் நன்கு உணர்ந்தே உள்ளது.
குறைந்த பட்ச பொது வேலைத் திட்டம் அரசாங்கத்தையும், ஆளும் வர்க்கம் முழுவதையும்
எதிர் நோக்கியுள்ள அடிப்படையான தர்ம சங்கடநிலையை - மிகப்பெரும்பாலான மக்களது நலன்களுக்கு விரோதமான செயற்திட்டத்தை
எப்படி நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றுவது என்பதை எடுத்துக்காட்டுவதாகவே அமைந்திருக்கிறது. அந்த
வேலைத்திட்டத்தில் பெரு வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை மூடி மறைக்கின்ற வகையில் தொடர்
வெற்று உறுதி மொழிகளையும், வாக்குறுதிகளையும் வெகுஜனங்களை சமாதானப்படுத்துவதற்காக தந்திருக்கிறார்கள். இந்த
மோசடியை நிலைநாட்டவும், சிறுபான்மை அரசாங்கத்தை தாங்கிப்பிடிக்கவும், சிங் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
(CPI-M)
தலைமையிலான இடது முன்னணியை நம்பி நிற்க வேண்டியுள்ளது. இடது முன்னணி ஆளும் கூட்டணியில் இடம்பெற்றிருக்காவிட்டாலும்
அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தித்தான் CMP
இறுதியாக நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆவணத்தின் கட்டமைப்புமுறையே அதன் நோக்கங்களை காட்டிக்கொடுப்பதாக
அமைந்திருக்கிறது. உழைக்கும் மக்களுக்கும் ஏழைகளுக்கும் உதவுவதாக நேர்த்திவாய்ந்த அறிக்கைகளும், உயர்ந்த சொல்
அலங்காரமும் ஆனால் தெளிவற்ற உறுதிமொழிகளும் நிரம்பி இருக்கின்றன. அதன் ''ஆறு அடிப்படைக் கொள்கைகள்'',
''ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பான கட்டுபடியாகும் வாழ்க்கைத்தரம்'', ''விவசாயிகள், பண்ணைத்
தொழிலாளர் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைநலன்களை மேம்படுத்த உறுதியளிக்கப்பட்டும்,'' பெண்களுக்கு
சமத்துவம், ஒடுக்கப்பட்ட சாதிகள் மற்றும் மத சிறுபான்மையினருக்கு சமத்துவம் வழங்குதல் ஆகியனவற்றை
உள்ளடக்கியுள்ளன.
குறைந்த பட்ச வேலைத்திட்டத்தில் கல்வி, சுகாதாரத்தில், வேலைவாய்ப்பு போன்ற
எல்லா அம்சங்களும் குறித்தும் நீண்ட பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் குறிப்பிட்ட வரையறைக்குட்பட்ட
உறுதிமொழிகள்கூட வெகுஜனங்கள் எதிர்நோக்கியுள்ள சமூக நெருக்கடியின் வரம்பற்ற தன்மையைக் கோடிட்டு காட்டுவதாக
அமைந்திருக்கிறது. ''ஒவ்வொரு கிராமப்புற, நகர ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு கீழ் உள்ள ஒவ்வொரு
குடும்பங்களிலும் உடல்வாகுள்ள, ஒருவருக்காவது ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்சம் 100-நாட்கள் வேலைவாய்ப்பு
தருவதாக'' UPA
உறுதிமொழி அளித்துள்ளது.
இந்தியாவில் மிகப்பெரும்பாலான மக்கள் கிராமப் பகுதிகளில்தான்
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், பரவலான வேலையில்லாத் திண்டாட்டத்தாலும், தகுதியான வேலை கிடைக்காததாலும்,
கிராப்புறங்களில் நிரந்தரமான வறுமை நிலவுகிறது, எனவே அத்தகைய உறுதிமொழி நிறைவேற்றப்பட்டால் கூட அது
ஆரம்பகட்ட நடவடிக்கையாகத்தான் இருக்கும். பொருளாதார சீர்திருத்தங்களால் விவசாய மானியங்கள் வெட்டப்பட்டு
விட்டன, சிறிய விவசாயிகளுக்கு கிடைத்து வந்தவைகளும், இதர கடுமையான நிதி நெருக்கடிகளும் தொடர்ந்து பல
தற்கொலைகளுக்கு வழிவகுத்துள்ளன.
அதேபோன்று, ''குறைந்தபட்ச ஊதியச்சட்டங்கள் விவசாயத் தொழிலாளர்களுக்காக
முழுமையாக செயல்படுத்தப்படும்'' என்றும் ''குழந்தை தொழிலாளர்களை நீக்கிவிட முயற்சி மேற்கொள்ளப்படும்''
என்றும் உறுதிமொழி தரப்பட்டிருக்கிறது. இதை வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால், பல விவசாய
தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச சட்டபூர்வ ஊதியம் கூட கிடைக்கவில்லை, குழந்தை தொழிலாளர் கட்டற்று
பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த மோசமான நிலையை மாற்றுவதற்கு புதிய அரசாங்கம் ''முயலும்'' ஆனால் அது
சம்மந்தமாக உத்திரவாதம் எதுவும் தரவில்லை.
உண்மையிலேயே, UPA
கூட்டணிக்கட்சிகள், இடது முன்னணி மற்றும் ஸ்ராலினிச CPI(M)
உட்பட அனைவரும் மிகத் தெளிவாகவே ஒன்றை அறிவார்கள், உறுதிமொழிகள் எவற்றையும் நிறைவேற்றமுடியாது என்று.
இந்த வேலைத்திட்டமே ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவே இருக்கிறது. கல்வி, பொது சுகாதாரம், விவசாயம்,
துறைமுகம், மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற உள் கட்டமைப்புக்கள் ஆகியவற்றிற்கான ஒதுக்கீடுகள் குறிப்பிடத்தக்க
அளவிற்கு உயர்த்தப்படும் என்றும், அந்த ஆவணம் அதே நேரத்தில் 90 நாட்களுக்குள் 2009 வாக்கில் அரசாங்க
வருவாய்க்கும், செலவினங்களுக்கும் இடையிலான பற்றாக்குறையை நீக்குவதற்கான திட்டம் அறிவிக்கப்படும் என்றும்
குறிப்பிடுகிறது.
தற்போது மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட் பற்றாக்குறை 25-பில்லியன் டாலர்கள் அல்லது
GDP -ல்
4.8- சதவீதம். இந்தப் பற்றாக்குறையை வெட்டுவதற்கு உள்ள ஒரேவழி நேரடி அல்லது மறைமுக வரிகளை
அதிகரிப்பது, அரசிற்கு சொந்தமான தொழில்களையும், சொத்துக்களையும் விற்பது, அதே போல தற்போதுள்ள
அரசாங்க செலவினங்களை அதிக அளவில் குறைப்பது, குறிப்பாக அத்தியாவசியத் தேவைகளான கல்வி, நலன்புரி,
சுகாதாரம் போன்றவற்றைக் குறைப்பதாகும்.
பொருளாதார மறுசீரமைப்பு
குறைந்த பட்ச வேலைத்திட்டத்தின் முக்கியமான பகுதிகள் அந்த ஆவணத்தின் கடைசி பகுதியில்
மறைக்கப்பட்டிருக்கின்றன, அங்கு தான் பொருளாதாரக் கொள்கை கோடிட்டுக்காட்டப்படுகிறது.
கடந்த தசாப்தங்களுக்கு மேலாக, நேரடி வெளிநாட்டு முதலீடுகளின் அளவு குறிப்பிடத்தக்க
அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் கல்விகற்ற, குறைந்த ஊதிய, தொழிலாளர்களை குறிப்பாக தகவல் தொழில் நுட்ப
சேவைகளில் பயன்படுத்துவதற்கு பெரிய நிறுவனங்கள்
(Corporations) மிகப்பெருமளவிற்கு முயன்று வருகின்றன,
இந்தியாவை ''உலகிற்கே அலுவலகம்'' என்றளவிற்கு மாற்றுவதற்கு ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால் பெரு
வர்த்தகங்களும் சிங் அரசாங்கமும், ஒன்றை அடையாளம் கொண்டுள்ளனர், இந்த முதலீடுகள் ஏதாவது ஒருவகையில்
நிறுத்தப்பட்டாலோ, அல்லது குறைந்தாலோ, இந்தியப் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகள் ஏற்படும்
என்பதையேயாகும்.
எனவே புதிய நிர்வாகத்தின் கொள்கைகள் பொருளாதார மறு சீரமைப்பு மேலும் கொண்டு
செலுத்தப்பட வேண்டுமென்ற வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுகின்ற அளவில் அமைந்திருக்கின்றன.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைப்போல் ''தொழிற்துறை வளர்ச்சியை புத்துயிர்ப்பு செய்வதற்கான அவசிய
நடவடிக்கைகள் அனைத்தையும் UPA
தொழிற்துறை வளர்ச்சியைப் புதுப்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் மற்றும் நெறிமுறைகளை
தளர்த்துவது உட்பட ஆரோக்கியமாக செயற்படுத்தும் கொள்கைகள் மூலமாக, தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக
தேவைப்படும் ஊக்கத்தொகைகளை எடுக்கும்''.
"FDI (வெளிநாட்டு நேரடி முதலீடு)
தொடர்ந்து ஊக்குவிக்கப்படும், செயலூக்கத்துடன் அவை வரவேற்கப்படும், குறிப்பாக உள் கட்டமைப்பு, உயர் தொழில்
நுட்பம் மற்றும் ஏற்றுமதிகளில் உள்நாட்டில் சொத்துக்களையும் வேலைவாய்ப்புகளையும் குறிப்பிடத்தக்க அளவிற்கு
உருவாக்குவதுமாகும்..... தற்போது நாட்டிற்கு வந்து கொண்டுள்ள FDI-
ஐ விட குறைந்த பட்சம் இரண்டு முதல் மூன்று மடங்கு முதலீடுகள் நாட்டிற்கு தேவைப்படுகின்றன, அவற்றை
பொருளாதாரம் எளிதாக ஈர்த்துக்கொள்ள முடியும்'' என்று CMP
அறிவிக்கிறது.
நிதித்துறையில், நீண்டகாலமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
கோருகின்ற நெறிமுறை தளர்வுகளைக் (Deregulation)
கொண்டு வரப்போவதாக புதிய அரசாங்கம் கோடிட்டுக்காட்டியுள்ளது. ''நிதித் துறையில் போட்டி விரிவாக்கப்படும்.
பொது வங்கிகளுக்கு முழுமையான நிர்வாக தன்னாட்சி உரிமை வழங்கப்படும்''.
நாட்டின் தொழிலாளர் சட்டங்களில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் போன்ற, மற்றொரு
முக்கியமான பிரச்சனை பற்றியதில், இந்த வேலைத்திட்டம் இதில் கவனமாக செயல்படுகிறது.
BJP அரசாங்கம் மாற்றம் கொண்டுவர முன்மொழிந்த திட்டமான,
கம்பெனிகள் தங்களது விருப்பப்படி தொழிலாளர்களை நியமிக்கவும், பணி நீக்கம் செய்யும்
(Hire and Fire)
கொள்கைக்கு தொழிலாளர்கள் இடையே பரவலான எதிர்ப்பு எழுந்தது. ''UPA
தன்னிச்சையான நியமனம் மற்றும் பணி நீக்கக் (Hire and
Fire) கருத்தை புறக்கணித்தது, தொழிலாளர் சட்டங்களில் சில
மாற்றங்கள் தேவைப்படலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறது'' என்றும் அந்த வேலைதிட்டம் அறிவிக்கிறது.
இத்தகைய மாற்றங்களை கொண்டு வருவதற்கும் எதிர்ப்பை அடக்குவதற்கும் சிங் அரசாங்கம்
தொழிற்சங்கங்களின் குறிப்பாக இடது முன்னணியால் ஆதிக்கம் செய்யப்படும் தொழிற்சங்கங்களின் சேவைகளை
பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது. ''தொழிற்துறை அதிபர்களுடனும், தொழிற்சங்கங்களுடனும் இந்தப் பிரச்சனை குறித்து
பேச்சுவார்த்தை முதலில் நடத்திவிட்டு பின்னர் UPA
திட்டவட்டமான முன்மொழிவுகளை முன்வைக்கும்'' என்று அந்த வேலைத்திட்டம் அறிவித்தது. அது அரசாங்கம்,
தொழிற்துறை, மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே ''முத்தரப்பு ஆலோசனைகள்'' நடைபெறும் என்று முன்குறித்துக்
காட்டுகிறது. ''தொழிலாளர்-நிர்வாகத்தரப்பு உறவுகள்... சந்தையின் ஆலோசனைகள், ஒத்துழைப்பு, பொதுக்கருத்து
அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர மோதல் போக்கில் இருக்கக்கூடாது'' என்று அழைக்கின்றது.
அதேபோன்று, தனியார்மயமாக்கல் பிரச்சனையிலும், புதிய அரசாங்கம் தனது திட்டத்தை
மிக கவனமாக சொற்களைத் தேர்ந்தெடுத்து தந்திருக்கிறது---- இதனால் வேலை வாய்ப்புக்கள், இழப்பு தொடர்பாக
எதிர்ப்பு எழுவது தவிர்க்க முடியாதது, ஆனால் அதே நேரத்தில் முக்கிய தொழிற்துறைகள் இந்தியர்கள், கையிலேயே
இருக்க உறுதியளிக்க வேண்டுமென்று பெரும் வர்த்தகங்களின் ஒரு பிரிவு அக்கறை கொண்டுள்ளது. ''நவரத்தினா
கம்பெனிகள் (மிகவும்
மதிப்பு வாய்ந்த கற்கள்)" ஒன்பது பெரிய நிறுவனங்கள்---- இது ஒன்பது பெரிய பொதுத்துறை நிறுவனங்களைக்
(Corporations)
குறிக்கும்--அவை அரசாங்கத்தின் உடைமையாகவே இருக்கும் என்றும்
கூறுகிறது.
ஆயினும், அதே நேரத்தில், அரசிற்கு-சொந்தமான கம்பெனிகளும், வங்கிகளும் ''மூலதனச்
சந்தைகளில் கலந்துகொள்ள ஊக்குவிக்கப்படும்'' தங்களது பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கவும், இலாபத்தில்
நடக்கும் தொழில்களை (Enterprises)
நடத்துவதற்கும், முழு தன்னாட்சி உரிமையும் வழங்கப்படுமென்று
CMP அறிவிக்கிறது. இதை வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால்,
இந்த பொதுத்துறை பெரிய நிறுவனங்கள் சமூகத் தேவைகளால் வழிகாட்டப்பட்டு இயங்குவதற்குப் பதிலாக முதலாளித்துவ
சந்தை மற்றும் இலாபத்தின் கட்டளைகளின்படி இயங்கும். இதர நாடுகளில் நடப்பதைபோன்று, இப்படி ''பெரிய
நிறுவனங்கள்'' மூலம் தவிர்க்க முடியாத விளைவுகள் ஏற்படும், கம்பெனிகளின் அளவு குறைக்கப்படும், தொழிலாளர்கள்
நிலமை பாதிக்கப்படும், இறுதியில் முழுமையாக தனியார்மயமாக்கப்படும்.
பெரு வர்த்தக நிறுவனங்கள் பொதுவாக அந்த வேலைத்திட்டத்தை வரவேற்றுள்ளன. ஹாங்காங்கை
தளமாகக் கொண்டு செல்படும் State Street Global
Advisors நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான
Vincent Duhamel ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது, ''CMP-ல்
எதிர்பாராதது எதுவும் இடம்பெறவில்லை, இங்கு வியப்படைவதற்கு எதுவுமில்லை'' என்று கூறினார். ''இந்திய பங்கு
சந்தை தரகர்களும், வர்த்தகத் தலைவர்களும் CMP-
ஐ ''ஊக்குவிப்பது,'' ''தீங்கு செய்வதல்ல'' என்று கூறினார்கள் என ஏசியா டைம்ஸ் எழுதியுள்ளது.
பிரிட்டனிலிருந்து செயல்படும் பைனான்சியல் டைம்ஸ் தனது தலையங்கத்தில், இடதுசாரிக்
கட்சிகளுக்கு சில சலுகைகளை காட்டுகின்ற ''கிச்சடி கூட்டு'' போன்று
CMP அமைந்திருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளது. ''என்றாலும்
திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு அருவருப்பூட்டுகின்ற வியப்புக்கள் எதுவுமில்லை, அல்லது பல நாட்களுக்கு முன்னரே சமிக்கை
காட்டப்படாத எதுவுமில்லை. பொருளாதார தாராளவாதிகள் முதலில் கருதியதைப் போன்று இந்தத் திட்டத்தில்
பயப்படுவதற்கு எதுவுமில்லை'' என்று குறிப்பிட்டுள்ளது.
அந்தச் செய்திப்பத்திரிகை சலுகைகள் பெரும்பாலும் அடையாள பூர்வமானவை என்று
சுட்டிக்காட்டியுள்ளது. ''தனியார்மயமாக்கலை எடுத்துக்கொள்வோம். இலாபம் தருகின்ற அரசு தொழில்களை
தனியார்மயமாக்குவதற்கு தடை வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சிங் நேற்று வெளிப்படையாக ஒன்றைக்
கூறினார், அத்தகைய கம்பெனிகளில் உள்ள சிறுபான்மை பங்குகள் விற்கப்படும் என்பதுதான்.... அவர் வெளிப்படையாக
அறிவித்தது, தனியார் மயத்திற்கென்று தனியாக செயல்பட்டுவந்த அமைச்சகம் ஒழித்துக்கட்டப்பட்டிருக்கிறது, அதற்குப்
பதிலாக நிதி அமைச்சகத்தில் முதலீடு களைப்புத்துறை உருவாக்கப்பட்டிருக்கிறது, இது இடதுகளை
சமாதானப்படுத்துவதற்கான அடையாள பூர்வமான சமிக்கைதான், அரசாங்க சொத்துக்களை விற்பதற்கு முற்றுப்புள்ளி
வைத்துவிட்ட நடைமுறை நடவடிக்கையல்ல'' என்று அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
இவை எதுவும் CPI(M)-
உற்சாகமாக சிங் அரசாங்கத்தை வரவேற்பதை தடுத்து நிறுத்தவில்லை. ''CMP-
ன் இறுதி வடிவம் குறித்து நாங்கள் மனநிறைவு அடைகிறோம், தற்போதுள்ள வடிவத்தில்
[CMP]
நிறைவேற்றப்படுமானால் இந்த அரசாங்கம் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கக் கூடாது என்பதற்கு எந்தக் காரணமுமில்லை''
என்று CPI(M)
பேச்சாளர் சீதாராம் எச்சூரி கருத்துத் தெரிவித்தார். இடது முன்னணியும்
CPI(M)-ம் அமைச்சரவையில் பதவி ஏற்க மறுத்துவிட்டன. ஆனால்
CPI(M)-
மக்களவை சபாநாயகர் பதவியை ஏற்றுக்கொண்டது, இது குறைந்த பட்ச பொது வேலைத்திட்டத்திற்கு மக்கள் ஆதரவு
முலாம் பூச உதவும் நடவடிக்கையாகும், இதை அமுல்படுத்துவதை கண்காணிப்பதற்கு ''ஒரு ஒருங்கிணைப்புக் குழு''
ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று CPI(M)
ஆலோசனை கூறியுள்ளது.
உழைக்கும் மக்களுக்கும், ஏழைகளுக்கும் தந்துள்ள குறைந்த உறுதிமொழிகளையும்
புறக்கணித்துவிட்டு சிங் அரசாங்கம் பொருளாதார மறு சீரமைப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடும்போது தவிர்க்க முடியாத
அளவிற்கு எதிர்ப்பு உருவாகும் நிலையில், இடது முன்னணியும்
CPI(M)-ம் சிங் அரசாங்கத்தின் அரசியலை பாதுகாக்கும் காப்பு
வால்வாக (Safety Valve)
செயல்படத் தங்களைத் தயாராக்கிக் கொள்கின்றனர். |