:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan government deeply mired in financial difficulties
இலங்கை அரசாங்கம் நிதி நெருக்கடியில் ஆழமாக மூழ்கியுள்ளது
By Saman Gunadasa
3 June 2004
Back to screen
version
இலங்கையில் புதிய சிறுபான்மை அரசாங்கம், ஏப்பிரல் 2 பொதுத் தேர்தலின் சற்றே இரண்டு
மாதங்களுக்குள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய
முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக தொழில் வாய்ப்பு, சம்பள அதிகரிப்பு மற்றும் விவசாயிகளுக்கான
மானியங்களை மீண்டும் வழங்கல் போன்ற ஒரு தொகை மக்கள் நலன்சார்ந்த வாக்குறுதிகளை அளித்தது. இப்போது அரசாங்கத்தில்
உள்ள சுதந்திரக் கூட்டமைப்பு அமைச்சர்கள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கடுமையான கோரிக்கைகளை
கடைப்பிடிக்க கோரும் பெரும் வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அரசாங்கத்தின் நிதி நிலைமை பற்றிய மே 16 சண்டே டைம்ஸ் பத்திரிகையின்
ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. "அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அதிகார சபைகளுக்கும் சம்பளம் கொடுப்பதற்கு
கூட நிதி இல்லை. திறைசேரி ஒதுக்கீடுகள் நிராகரிக்கப்பட்ட இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் செய்தது போல்,
இலங்கை மின்சார சபையும், அரச வங்கிகள் நிதியை அதிகரிக்க வேண்டும் என இந்த வாரம் கோரவுள்ளது."
சுதந்திரக் கூட்டமைப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்காமல் வைத்திருப்பதில்
பெரும் சங்கடங்களை எதிர்நோக்கும் அதே வேளை, மானியங்களை வழங்குவதிலும் அதிகரித்துவரும் பிரச்சினைகளுக்கு
முகம்கொடுக்கின்றது. ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 40 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதன் காரணமாக,
அரசாங்கம் அரசுக்குச் சொந்தமான பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம்
ஆகியவற்றுக்கு பில்லியன் கணக்கான ரூபாய்களை மானியங்களாக வழங்குகிறது. இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில்,
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அரசாங்கம் கொடுக்கவேண்டிய தொகை 2.5 பில்லியன் ரூபாய்களாக
இருக்கும் அதேவேளை, இலங்கை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு 650 மில்லியன் ரூபாய்களை வழங்கவேண்டும்.
அரசாங்கம், கோதுமை மா விற்பனையில் பிரத்தியேக உரிமை கொண்ட, சிங்கப்பூரை
அடிப்படையாகக் கொண்ட பிரிமா சிலோன் பல்தேசியக் கூட்டுத்தாபனத்தின் அழுத்தத்திற்கும் முகம்கொடுக்கின்றது. இந்தக்
கம்பனிக்கு 1.2 பில்லியன் ரூபாய்கள் மானியம் வழங்கப்படவேண்டியுள்ளதோடு, அது, நிலுவையை உடனடியாக
செலுத்தாவிடில் கோதுமை மாவின் விலயை 20 வீதத்தால் அதிகரிக்கப்போவதாக அண்மையில் அச்சுறுத்தல் விடுத்திருந்தது.
விலை அதிகரிப்பு பற்றிய பீதியில், பாவனையாளர் விவகார அமைச்சரான ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே, நுகர்வோர்
பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கோதுமை மாவை அத்தியாவசியப் பொருளாக பிரகடனம் செய்ததோடு சந்தையை
போட்டிக்காக திறந்துவிட்டார்.
அதே சமயம், அரசாங்கம் வருவாய் வீழ்ச்சிக்கும் முகம்கொடுக்கின்றது. இந்த ஆண்டின்
முதல் இரு மாதங்களுக்கான வருமானம் 11.41 வீதத்தால், அதாவது 45.8 பில்லியன் ரூபாய்கள் வரை
வீழ்ச்சியைடைந்துள்ள அதே வேளை, செலவானது 3.1 வீதத்தால், அதாவது 78.6 பில்லியன் ரூபாய்கள் வரை
அதிகரித்துள்ளது.
தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில், ஐ.தே.மு வால் வெட்டித்தள்ளப்பட்ட உர
மானியங்களை மீண்டும் வழங்குவது மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் இரு பங்காளிக் கட்சிகளான ஜனாதிபதி
சந்திரிகா குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க) மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி)
நான்கு மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்கொண்டுள்ளதால், இந்த நெருக்கடி விசேடமான தாக்கத்தைக்
கொண்டிருக்கும். இந்தத் தேர்தலில் கிராமப்புற வாக்குகள் மிகவும் தீர்க்கமானதாக உள்ளது. இந்த மானிய
மீள்வழங்களுக்கான அரசாங்கத்தின் செலவுத் தொகை 3 பில்லியன் ரூபாய்களாகும். ஆயினும், அது சிறு விவசாயிகள்
முகம்கொடுத்துள்ள நெருக்கடிகளைத் தீர்க்க சொற்பளவானதாகும்.
சுதந்திரக் கூட்டமைப்பு, 60,000 உயர் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக
பட்டதாரிகளுக்கு உடனடியாக தொழில் வழங்குவதாக வாக்குறுதியளித்தது. அரசாங்கம் உத்தேசமாக 27,00
வேலையற்ற பட்டதாரிகளுக்கு வெறும் 6,000 ரூபா சப்பளத்திற்கு (US$60)
அரசாங்க பயிலுனர்கள் பதவிக்காக விண்ணப்பங்களைக் கோரியது. இந்த வரையறுக்கப்பட்ட திட்டங்களும் இன்னமும் முழுமை
பெறாததோடு ஏனைய தொழில்களுக்கான திட்டங்கள் அடுக்கில் வைக்கப்பட்டுள்ளன. 60,000 அரசாங்கத்
தொழில்களுக்கான வருடாந்த செலவு 600 கோடி ரூபாய்களாகும்.
சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 75 வீதம் சம்பள உயர்வு
வழங்குவதாக வாககுறுதியளித்தது. இதற்கு ஒரு உத்தேசப்படி ஆண்டுக்கு 90 பில்லியன் ரூபாய்கள் செலவாகும். திறைசேரி
செயலாளர் பி.பி. ஜயசுந்தர ஒரு பேட்டியில், நவம்பரில் முன்வைக்கப்படவுள்ள அடுத்த வரவு செலவுத் திட்டத்திலேயே
எந்தவொரு சம்பள உயர்வு பற்றியும் அக்கறை செலுத்த முடியும் என சமிக்ஞை செய்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் வரவுசெலவுத் திட்டத்தில்
எந்தவொரு பற்றாக்குறைக்கும் எதிராக எச்சரிக்கை செய்துள்ளனர். வரவுசெலவுப் பற்றாக்குறை இந்தாண்டு மொத்த
தேசிய உற்பத்தியில் 7.3 வீதத்தை எட்டியுள்ளதாக முன்கூட்டியே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உலக வங்கியின்
இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பீட்டர் ஹெரால்ட், தமது நிறுவனம் அதிகரித்த சமூக செலவுகளை எதிர்க்காது என
அண்மையில் பிரகடனம் செய்தபோதிலும், அவர் மேலும் குறிப்பிடும் போது, "அதன் விளைவாக திறைசேரி பற்றாக்குறை
2-3 வீதத்தை எட்டுமானால் நெருக்கடி எத்தகையதாக இருக்கும்.... திறைசேரியை கட்டமைப்புக்குள் இருக்க
வேண்டுமானால் மேலதிக செலவுகள் மேலதிக வருமானத்தை கோரும்.... ஆனால், வருமானம் மிகவும் மோசமானதாக
இருப்பதோடு இந்தாண்டு அது முன்கூட்டிய மதிப்பீட்டையும் விட மிகவும் கீழ் நிலையிலேயே உள்ளது," எனத் தெரிவித்தார்.
அதிகரித்த செலவானது அழுத்தங்களை ஊதிப் பெருக்கச்செய்வதோடு உயர் வட்டி
வீதத்திற்கும் வழியமைக்கும் என வியாபார பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். நாட்டின் பிரதான வங்கிகளில் ஒன்றான ஹட்டன்
நஷனல் வங்கி: சந்தை தளர்வு நிலைக்கு உள்ளாக்க நெருக்கிவரும் ஒரு களியாட்ட செலவுகளுக்கு அரசாங்கம் எவ்வாறு
நிதி சேகரிக்கப் போகின்றது என்பது பற்றி தெளிவில்லை. இது வட்டி வீதங்கள் அதிகரிக்ப்பதற்கான சாத்தியத்தை
ஏற்படுத்தும்," என கடந்த வாரம் குறிப்பிட்டுள்ளது.
கடந்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் (ச.நா.நி)
குழு, மேலதிக பொருளாதார மறுசீரமைப்பு பற்றிய உறுதியற்ற நிலைக்கு அரசாங்கம் முடிவுகட்ட வேண்டும் என
வலியுறுத்தியது. ச.நா.நி பிரதிநிதிகளின் தலைவர் ஜஹான்கீர் அஸீஸ், குமாரதுங்க அரசாங்கம் ஒரு மாதத்திற்குள் நிதி
மற்றும் மின்சாரத் துறைகளை மறுசீரமைக்கும் திட்டங்களை அறிவிக்கும் என ராய்டருக்கு கடந்த வியாழனன்று
தெரிவித்தார். ச.நா.நி அதனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நிதிகளைத் தடுத்து நிறுத்துவதாக அச்சுறுத்தி
வருகின்றது.
கடந்த நவம்பரில், குமாரதுங்க ஐ.தே.மு அரசாங்கத்திடமிருந்து மூன்று முக்கிய
அமைச்சுக்களை ஒருதலைப்பட்சமாக அபகரித்ததன் மூலம் தோன்றுவிக்கப்பட்ட அரசியல் நெருக்கடியை அடுத்து, மூன்று
படிமுறைகளிலான 567 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திட்டத்தின் இரண்டாவது பங்கு இடைநிறுத்தப்பட்டது. அஸீஸ்
தனது கடைசி விஜயத்தை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்: "அடுத்த பங்கு கொடுக்கப்படுவதற்கு
முன்னதாக என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" எனத் தெரிவித்தார்.
அரசாங்கம் ஏற்கனவே மேலதிககடன்வாங்கத் தயாராகியுள்ளது. மத்திய வங்கி,
இந்தாண்டின் எஞ்சிய பகுதிக்கு அரசாங்க நிதியை ஈடுசெய்வதற்காக வெளிநாட்டு செலாவணி சந்தையில் 250 மில்லியன்
டொலர்களை தவணைமுறையில் கடனாகப் பெறத் தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சர் சரத் அமுனுகமவும் கூட, மே
நடுப்பகுதியில், ஸ்ரீலங்கா டெலிகொம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் ஏனைய கம்பனிகளில் உள்ள அரசாங்கத்தின்
பங்குகளை விற்றுத்தள்ளும் ஒரு பிரேரணையை முன்வைத்தார்.
சமாதான முன்னெடுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கான குமாரதுங்கவின் திடீர் முடிவில்
அவரது அரசாங்கத்தின் நிதி நெருக்கடி குறைந்தபட்ச அளவிலேனும் கட்டுண்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பல
ஐரோப்பிய நாடுகளும் வாக்குறுதியளித்த 4.5 பில்லியன் டொலர் நிதிப் பொதியும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான
சமாதானப் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதிலும் அதே போல் கொடூரமான மறுசீரமைப்பு மற்றும்
தனியார்மயமாக்கல் திட்டத்தின் தொடர்ச்சியிலும் தங்கியிருக்கின்றது.
உதவிவழங்கும் நாடுகளின் மாநாடொன்று தற்போது பிரசல்சில்
நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. செவ்வாயன்று, மாநாடு தொடங்குவதற்கு சற்று முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின்
பேச்சாளர் எம்மா உட்வின் வெளிப்படையாக தெரிவிக்கும் போது: "இலங்கைக்கான பணப்பொதியை திறந்துவிடுவதற்கான
வழி சமாதான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காண்பதே" என விளக்கினார். தற்போதைய யுத்த நிறுத்த
உடன்படிக்கை தொடர்வதை சுட்டிக்காட்டிய அவர்: "இலங்கை சமாதான முன்னெடுப்புகளை முன் நகர்த்துவதில் உறுதியாக
உள்ளது என்பதை காட்ட வேண்டும்," என மேலும் தெரிவித்தார். ஜப்பானிய விசேடத் தூதுவர் யசூசி அகாஷி இரண்டு
வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்தபோது, அவரும் இதே செய்தியையே வெளியிட்டார்.
புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து சில நாட்களின் பின்னர், வர்த்தக அமைப்புகளின்
ஒரு குழுவான, செல்வாக்குமிக்க கூட்டு வர்த்தக சம்மேளனம் ஒரு ஆவணத்தை வெளியிட்டது. அதன் நிகழ்ச்சி நிரலில்
முதலாவதாக யுத்தத்திற்கு முடிவுகட்டுவது இருந்தது. இதே போல், மத்திய வங்கியும் அதன் 2004ம் ஆண்டுக்கான
செலவுத் திட்டத்தில்: "திட்டமிடப்பட்டுள்ள சர்வபொருளாதார மற்றும் பணம் சம்பந்தமான அபிவிருத்திகளை
அடையவேண்டுமெனில் சமாதான முன்னெடுப்புகள் தொடர்வதும், நாட்டில் அரசியல் ஸ்திரநிலைமையும் அத்தியாவசியமானது"
என பிரகடனம் செய்துள்ளது.
எவ்வாறெனினும், சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான எந்தவொரு முயற்சியும்,
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தனியார்மயமாக்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பை எதிர்ப்பது, சமாதான
முன்னெடுப்புகளை கண்டனம் செய்வதன் மூலம் இனவாத உணர்வுகளைத் தூண்டிவிடுவது ஆகிய இரண்டு பிரதான திட்டங்களில்
தங்கியிருந்த சுதந்திரக் கூட்டமைப்பை நிச்சயமாக மேலும் ஸ்திரமற்ற நிலைமைக்குள் தள்ளும்.
ஐ.தே.மு அரசாங்கத்தின் கீழ் கடுமையாக வீழ்ச்சியடைந்த தமது வாழ்க்கை நிலமை சுதந்திரக்
கூட்டமைப்பு அரசாங்கத்தின் கீழ் மூன்னேற்றம் காணும் என எதிர்பார்த்துள்ள சாதாரண உழைக்கும் மக்களின் எதிர்ப்பையிட்டு
அரசாங்கம் பீதிகொண்டுள்ளது. அன்மையில் வெளியிடப்பட்ட 2004ம் ஆண்டுக்கான வருடாந்த மத்திய வங்கி அறிக்கை,
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வேண்டுகோளின்படி ஐ.தே.முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட
பொருளாதார மறுசீரமைப்பின் சமூக தாக்கத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
* பொதுத்துறை தொழில் உறைந்துபோயுள்ளதோடு, அரசாங்கத்தின் சம்பளப் பட்டியல்
2002ல் 5.6 பில்லியன் ரூபாய்களாலும் 2003ல் 5.2 பில்லியன் ரூபாய்களாலும் வெட்டப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
ஓய்வூதியத் திட்டத்தின் படி, ஊழியர்கள் தமது ஓய்வூதியத்தின் பேரில் தமது சம்பளத்தில் 8 சதவீதத்தை செலுத்தத் தள்ளப்பட்டுள்ளனர்;
இது ஒரு மேலதிக சம்பள வெட்டாகும்.
* கல்விக்கான செலவில், 2002ம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியின் 2.4 வீதம்
வெட்டப்பட்டதோடு 2003ல் மொத்த தேசிய உற்பத்தியின் 2.2 வீதம் வெட்டப்பட்டுள்ளது. சுகாதார சேவைக்கான
செலவில் மொத்த தேசிய உற்பத்தியின் 1.57 வீதம் 2002ம் ஆண்டிலும் 1.56 வீதம் 2003ம் ஆண்டிலும்
வெட்டித்தள்ளப்பட்டன. சமுர்தி எனக் குறிப்பிடப்படும் மட்டுப்படுத்தப்பட்ட நலன்புரி சேவை திட்டத்திற்கான செலவு,
2003ம் ஆண்டு 8.7 பில்லியன் ரூபாய்கள் வரை 12 வீதத்தால் வெட்டித்தள்ளப்பட்டது. இது 2002ல் 3 பில்லியன் ரூபா
வெட்டப்பட்டதற்கு அடுத்து இடம்பெற்ற பெரும் வெட்டாகும்.
* 2003ல் புகையிரத சேவை, பேருந்து கம்பனிகள், அஞ்சல் சேவை மற்றும் கூட்டுறவு
மொத்த விற்பனை நிலையம் போன்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான நிதி 29 வீதத்தால் வெட்டப்பட்டதன்
விளைவாக சேவைகளில் குறிப்பிடத்தக்க சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளது.
* பெரும் கம்பனிகளுக்கான கூட்டுத்தாபன வரிவீதம் 35 வீதத்திலிருந்து 30 வீதத்தால்
குறைக்கப்பட்டது. வெளிநாட்டு நேரடி முதலீடு 2002ல் 197 மில்லியன் டொலர்களில் இருந்து 2003ல்229 மில்லியன்
டொலர்கள் வரை அதிகரித்தமைக்கு இது ஒரு காரணியாக அமைந்தது.
ஐ.தே.மு அரசாங்கத்தின் கீழ், வரவுசெலவுப் பற்றாக்குறையானது 2001ல் மொத்த
தேசிய உற்பத்தியில் 10.8 வீதத்தில் இருந்து 2003ல் 8.0 வீதம் வரை குறைக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை மேலும்
குறைக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் வலியுறுத்திவருகின்றன. நிதி அமைச்சர் அமுனுகம
கடந்த மாதம் ஊடகங்களில் பேசியபோது: "வரவுசெலவை சமநிலைப்படுத்துவதில் எமக்கு பிரச்சினை இருக்கிறது.
அதாவது, நாடு எட்டாத இடத்தில் உள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.
சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம், வெகுஜனங்கள் முகம்கொடுக்கின்ற சமூக
நெருக்கடிகளை தணிப்பதற்கு பதிலாக, மக்களின் பெரும்பான்மையானவர்களின் சமூக நிலைமைகள் மீது மேலும்
படையெடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த நகர்வு, அரசியல் ஸ்திரமற்ற நிலைமையை மட்டுமே உக்கிரப்படுத்தும். |