World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்The politics of opportunism: the "radical left" in France Part six: the demoralised politics of Lutte Ouvrière சந்தர்ப்பவாத அரசியல்: பிரான்சில் "தீவிர இடது" பகுதி 6: லூத் ஊவ்றியேர் இன் மனச்சோர்வடைந்த அரசியல் By Peter Schwarz பிரான்சில் "தீவிர இடது" எனக் கூறிக்கொள்ளும் கட்சிகளின் அரசியல் பற்றிய ஏழு பகுதி கட்டுரை தொடரின் ஆறாம் பகுதி கீழே பிரசுரமாகியுள்ளது. முதல் பகுதி மே 15ம் தேதியும், இரண்டாம் பகுதி மே 17 அன்றும், மூன்றாம் பகுதி மே 19 அன்றும், நான்காம் பகுதி மே 22 அன்றும், ஐந்தாம் பகுதி மே 25 அன்றும் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்டன. லூத் ஊவ்றியேர் (Workers Struggle -- LO) இன் 33ம் மாநாடு டிசம்பர் 2003 ல் நடைபெற்றது; இதில் அவ்வமைப்பு மேற்கொண்டிருந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துடன் (LCR) இணைந்து தயாரிக்கப்பட்டிருந்த கூட்டுப்பட்டியலைப் பற்றிய முடிவு உறுதிசெய்யப்பட்டது. இந்தப் பிரச்சினை பற்றிய தீர்மானம் லூத் ஊவ்றியேர் (LO) இன் அடிப்படைப் பார்வையை பற்றி நிறையவே தெரிவிக்கின்றது.(1) இதன் புரட்சிகர சொல் அலங்காரத்தின் பின்னணியில் இதன் ஐயுறவாதம், எதிலுமே கெட்டதைக் காணும் தன்மை, பெருமளவு வருங்காலம் பற்றிய இருண்ட கருத்துக்களை இவையே அதிகமாகக் காணப்படுகின்றன. LO இன் கூற்றின்படி, வாக்களர்கள் உறுதி தளர்ந்துள்ளனர் என்றும், "இடது தீவிரவாதிகள்" தனித்தனிப்பட்டியலை வெளியிட்டால் இன்னும் கூடுதலான முறையில் உள்ளத் தளர்ச்சியை கொள்ளுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "உள்ளத்தளர்ச்சி", "ஏமாற்றம்" போன்ற சொற்கள் பத்து பத்திகள் அடங்கிய சுருக்கமான அறிக்கையில் பலமுறையும் வந்துள்ளன. கடந்த இலையுதிர்காலத்தில் நடந்த தேர்தல்கள் பற்றிய சந்தேகங்களுடன் இத்தீர்மானம் தொடங்குகிறது. அது ஜனாதிபதித் தேர்தல்கள் 2002 ல் நடைபெற்றது போலவே, ஒரேமாதிரியான வாக்குகளை, மொத்தம் 10 சதவிகிதத்தை வென்ற LO, LCR பட்டியலை வழங்கின. "2004 தேர்தல்கள் பற்றிய நிலைமையின் அபிவிருத்திக்கு வாக்காளர்கள் பதில் செயற்பாட்டைக் கணிப்பது இயலாது" என்று தீர்மானம் குறிப்பிட்டாலும், "அரசியல் கருதிப்பார்த்தல்கள்" கட்சியை கிட்டத்தட்ட 3 சதவிகித வாக்குகளை எதிர்பார்க்கலாம் என்று எண்ண வைத்துள்ளது. "இது புதிர்போல் தோன்றினாலும், இத்தகைய பரிசீலனைகள், கடந்த ஜூன் மாதம் ஒரு தேர்தல் கூட்டணியை கழகத்துடன் திட்டமிட வைத்தன. தேர்தல் முடிவுகள் வாக்காளர்களை உள்ளத் தளர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது பற்றி நாம் கவனம் செலுத்தாமல் இருக்கக் கூடாது. இது சமூக, பொருளாதார நிலைமையினாலும், பகிரங்கத் தாக்குதல்களினாலும் சிராக்-ரஃபரன் அரசாங்கத்தின் சிடுமூஞ்சித்தனமான பேச்சினாலும் விளைந்தது ஆகும்" என்று தீர்மானம் தொடர்ந்து கூறியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் இரண்டு காரணிகள் முக்கியம் என தீர்மானம் கருதுகிறது: "முதலாவதாக, தேசிய முன்னணிக்கு [FN] கிடைக்கும் வாக்குகள் அதே அளவுதான் இருக்கும் அல்லது சற்று உயரலாம், 20 சதவிகித வாக்குகள் அல்லது கூடுதலாக சில தனிப்பட்ட பகுதிகளில் வந்தாலும், கட்சி நிச்சயமாக பிராந்திய தேர்தல்களில் எல்லா இடங்களிலும் இரண்டாவது சுற்றை அடையும்." மிக வறிய நிலையில் உள்ள தொழிலாளர்களில் பலர், இடது வலது என்று இரண்டிலுமே ஏமாற்றத்தையும் கசப்பையும் கொண்டிருப்பவர்கள் FN க்காக வாக்குகளை அளிப்பார்கள். இரண்டாவது வாய்ப்புள்ள காரணி சோசலிஸ்ட் கட்சி (PS) ஐ வலுப்படுத்துவதாகும். தற்போதுள்ள அரசாங்கத்தின் மீதான வெறுப்பு, மிகக் கடுமையாக இருப்பதால் "பல வாக்காளர்களும் கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சியினர் அல்லது தீவிர இடதிற்கு ஜனாதிபதித் தேர்தல்களில் முதல் சுற்றில் வாக்கு அளித்தமை தவறென கருதக்கூடும்; ஏனெனில் இவ்வாறு பிளவடைந்த வாக்குகள்தாம் ஜொஸ்பனின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று. எனவே, வாக்காளரிடையே PS க்கு வாக்குப் போடலாம் என்ற வலுவான போக்கு ஏற்படாம்; ஏனென்றால் அத்தகைய செயல் வலதுசாரிக்கு ஒரு அதிரடியை கொடுத்து சோசலிஸ்டுகளை அதிகாரத்திற்குத் திருப்பி அனுப்பவதாக அமையும்." LO வினால் ஒரு நடக்கக் கூடிய வாய்ப்பு நடக்காது எனக் கைவிடப்பட்டது: அது தன்னுடைய வாக்கில் எவ்வித முன்னேற்றமும் இருக்காது என்பதேயாகும். மேலே கூறப்பட்ட இரு இயல்நிகழ்ச்சியும், "அதி தீவிர இடதை அச்சுறுத்த இயலும்" என்று அது கூறுகிறது. LCR உடனான தேர்தல் உடன்பாடு, இந்த பாதிப்பைக் குறைக்கும் வகையில் ஒரு தற்காப்பு நடவடிக்கையாக நியாயப்படுத்தப்படுகிறது. LCR இடத்தில் இருந்து தனியாக நின்றால், லூத் ஊவ்றியேர் (LO) "உறுதியாகக் குறைந்த வாக்குகளைப் பெறாது.... ஆனால் இந்த எண்ணிக்கை மிகக் குறைந்தால், நம்முடைய ஆதரவாளர்கள் நமக்கு வாக்கு அளிக்கும்போதே, நம்மிடையே ஒற்றுமை இல்லாததால் நாம் ஏராளமான வாக்காளர்களை இழந்தோம் எனக் கூறக்கூடும். ஆயினும், நாம் ஒன்றாக இணைந்து நின்றால், நம்முடைய பரிதாபமான முடிவு ஒரு புறநிலை உண்மையாகக் கொள்ளப்படுமே ஒழிய, நம்முடைய சொந்த நடவடிக்கையினால் விளைந்தது எனக் கூறுவதற்கில்லை." "நம்முடைய ஒற்றுமையின்மையின் விளைவாக மோசமான முடிவு கிடைத்தபோதிலும், அது நம்முடைய வாக்காளர்களின் உள்ளத் தளர்ச்சிக்குக் கூடுதலான இடம் அளிக்கும்; ஏனெனில், அதிகாரபூர்வமான இடது அல்லது தீவிரமான இடதிற்குப் பெரும் கஷ்டங்களுக்கு இடையே வாக்களித்தாலும் அவற்றிடமிருந்து எதுவும் கிடைக்காது என்ற முடிவைத்தான் அது அவர்களிடம் தூண்டிவிடும்" என்று தீர்மானம் மேலும் எச்சரிக்கிறது என்பதை இங்கு மறக்காமல் குறிப்பிட வேண்டும். இத்தகைய இருண்ட நிலைமைக்குப் பின்னரும் ஏதேனும் உற்சாகம் இருக்குமானால், வாசகரின் உணர்வுக்கு இறுதி ஆர்வம் கெடுக்கும் ஒரு கருவியை வைத்து தீர்மானம் முடிக்கிறது: "நம்முடைய நிலை மக்களிடமிருந்து ஆளுவதற்கு உத்தரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஊக்குவிக்கப் படவில்லை; மாறாக, மிகப்பெரிய முறையில் எதிர் விளைவுகளை எப்படித் தவிர்க்க முடியும் என்பதைத்தான் கருதுகிறது." சந்தர்ப்பவாதத்தின் பண்பாடு இத்தீர்மானம் இருவிதங்களில் குறிப்பிடத்தக்கது ஆகும். முதலில், தொழிலாள வர்க்கத்திற்குள்ளே உள்ள மனப்பான்மை பற்றிய அதன் மதிப்பீடு பெரிதும் பிழையானது. இரண்டாவதாக, அது அரசியல் முயற்சி எதையும் காட்டவில்லை. LO, தன்னுடைய செயல்பாட்டினால் எந்த முக்கியத்துவமும் வந்து விடாது என்றும், LO நன்கு அறிந்துள்ள சந்தர்ப்பவாத தன்மை பொருந்திய LCR உடன் சேர்ந்தால்தான் கூடுதலான "சோர்விழத்தல்" தவிர்க்கப்பட முடியும் என்றும் கருதுகிறது. தொழிலாள வர்க்கம் உள்ளத்தளர்ச்சி அடைந்து வலது புறம் சாயத் தொடங்கியிருக்கிறது என்பது தெளிவாகவே தவறான கூற்றாகும். தொழிற்சங்கங்களதும் அதிகாரபூர்வ இடது கட்சிகளதும் இழிவான பங்கு இருந்தபோதிலும், சமீபத்திய ஆண்டுகளில், பிரெஞ்சுத் தொழிலாளர்கள் பல முறையும், தாங்கள் இடது, வலது அரசாங்கங்கள் இரண்டையும் தாக்குவதற்குத் தயார் என்று நிரூபித்துள்ளனர்; இது நவம்பர்-டிசம்பர் 1995 வேலை நிறுத்த இயக்கத்திலிருந்து ஆரம்பித்து சமீபத்திய 2003 வசந்தகால இயக்கம் வரை நன்கு புலனாகியுள்ளது. மேலும், 2002 ஜனாதிபதித் தேர்தலில் "தீவிர இடது" வாக்காளர்களுக்கு கிடைத்த முன்று மில்லியன் வாக்குகள் சோர்வடைதல் என்ற விளக்கத்திற்கு இடம் அளிக்கவில்லை. இந்த ஆண்டு பிராந்திய தேர்தல்களில்கூட, LO தோல்வி மனப்பான்மையில் இருந்தபோதிலும், எதிர்பார்த்ததைவிட கூடுதலான சாதகத்தைத்தான் அது கண்டது. LO, LCR இன் கூட்டுப் பட்டியல் கூடுதலாக ஒரு மில்லியன் வாக்குகளைப் பெற்றது; இது தேசிய சராசரியில் 4.6 சதவிகிதம் என்ற நிலையில் உள்ளது. புதிய 10 சதவிகிதத் தடை இருந்தபோதிலும், LO-LCR வேட்பாளர்கள் இரண்டாம் சுற்றுக்கும், உண்மையில் வெற்றி பெறுதலுக்கும் குறைந்த வாய்ப்பைத்தான் பெறுகின்றனர் என்பதையும் காட்டுகிறது. LO அதிகமாக விவரிக்கும் உள்ளத்தளர்ச்சி, வெளிப்படையான வர்க்கப் போராட்டங்கள் வெடிப்பதினால் நம்பிக்கை இழந்த தொழிற்சங்கங்கள், ஸ்ராலினிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகளின் சூழலில் நிலவுவது போல் தொழிலாள வர்க்கத்திடையே அந்த அளவு இல்லை. இந்த சமூக தட்டுக்களை நோக்கியே LO தன்னை தகவமைத்துள்ளது. LO சந்தர்ப்பவாதம் வேறுபட்ட வடிவங்களை எடுத்தபோதிலும் கூட, இவ்விதத்தில் LCR ஐ விட LO வேறுபட்டிருக்கவில்லை. வெளிப்படையாக தொழிலாள வர்க்கத்துடன் தான் "நெருக்கமாக இருப்பதாக" LO காட்டிக்கொண்டு தொழிலாளர் தன்மையை (workerism) உண்மையாய் வழிபடுவதில் ஈடுபடுகிறது. "உழைக்கும் சகோதர, சகோதரிகளே" என்று LO இன் தலைவி Arlette Laguiller தன்னுடைய ஒவ்வொரு உரையையும் ஆரம்பிப்பது அமைப்பின் அடையாளச் சின்னம்போல் ஆகியுள்ளது. பல LO உறுப்பினர்களும் தங்கள் பல்கலைக்கழகப் படிப்பை நிறுத்திவிட்டு எத்தனையோ தசாப்தங்களாக தொழிலாளர்களுடன் "நெருக்கமாக இருப்பதற்காக", ஆலைகளில் பணியாற்றுகின்றனர். தொழிற்சாலைகள் பாலான இந்த நோக்குநிலை தொழிற்சங்க நனவின் மிகவும் புராதன வடிவங்களை ஏற்றுக் கொள்வதுடன் உடன் செல்கிறது. ஆலைகளின் செய்தித்தாள்களும், துண்டுப் பிரசுரங்களும், கடந்த 50 ஆண்டுகளில் LO உடைய பணியின் சாரமாக உள்ளன; இவை எந்த அரசியல் பிரச்சினை பற்றியும் பேசுவதில்லை. குறிப்பிட்ட ஆலையைப் பற்றிய தகவலையும் ஒரு பொதுத் தலையங்கம் Laguiller ஆல் எழுதப்பட்டிருப்பதையும்தான் அவை கொண்டுள்ளன. இந்தத் தலையங்கம் தொழிலாளர்களுக்கு ஓர் இகழ்வான தொனியில் எவ்வாறு அவர்கள் முதலாளிகளால் சுரண்டப் படுகின்றனர் என்றும் அரசாங்கத்தால் காட்டிக்கொடுக்கப்படுகின்றனர் என்றும் மிகப்பெரிய ஊழலாக அரசாங்கம் எவ்வாறு முதலாளிகள் பக்கம் இருக்கிறது என்பதையும் கூறுகிறது. சர்வதேச நிகழ்வுகளோ, அரசியல் பிரச்சினைகளோ, "தொழிலாளர் உலகின்" உடனடிப் பார்வைக்கு அப்பாற்பட்ட எதுவுமே பொதுவாகக் குறிப்பிடப்படுவதில்லை. அமைப்பின் அதிகாரபூர்வ வார ஏடான Lutte Ouvriere, இதைவிட மேலதிகமாக எதுவும் எழுதுவதில்லை. பெரும்பாலான கட்டுரைகள் சுவையற்ற நடையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றிக் கூட முழுமையாக ஆராய்வதில்லை. நல்ல தகவலை ஆழமாக அறியவேண்டும், அதையொட்டித் தங்கள் அரசியல் கருத்துக்களை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்கும் தொழிலாளிகளுக்கு இந்த செய்தித்தாளால் எந்தப் பயனும் கிடையாது. LO உடைய வெளியீடுகளிலும், அறிக்கைகளிலும் தொழிற்சங்கங்களை பற்றிய விமர்சனத்தை தேடினாலும் கிடைப்பதில்லை. 1995 நவம்பர்-டிசம்பர் வேலை நிறுத்த இயக்கத்தின்போது, உலக சோசலிச வலைதளத்தின் பண்பாட்டுத்துறை ஆசிரியர் டேவிட் வால்ஷ், சில வேலைநிறுத்த அணிவகுப்புக்களில் LO செயல்வீரர்களை நேரடியாகக் காணும் வாய்ப்பைப் பெற்றார். வேலைநிறுத்த இயக்கத்தை தொழிற்சங்க அதிகாரத்துவம் கழுத்தை நெரிக்க முற்பட்டுக் கொண்டிருந்தபோது, LO ஆதரவாளர்கள் அவர்களுடைய விசுவாச ஊழியர்கள்போல்தான் நடந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் வோல்ஷிடம்: "உடனடிப் பிரச்சினைகளுக்கு அப்பால் தொழிலாளர்கள் செல்வதில்லை. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை விட முன்னுக்கு உள்ளன; அவை வழிநடத்துகின்றன." எனக் கூறினார். அந்நேரத்தில் LO பற்றியும் மற்ற அமைப்புக்கள் பற்றியும் வால்ஷ் தன் மனத்தில் கொண்டிருந்த கருத்துக்களைச் சுருக்கமாகக் கூறியதாவது: "இந்த வட்டங்கள் பற்றிய உண்மையான முக்கியத்துவம் வாய்ந்த தன்மை சந்தர்ப்பவாதப் பண்பாடு எனக்கூறலாம். LO, LCR அல்லது அவர்களைச் சார்ந்தவர்களில் ஒருவராவது பிரச்சினையை எழுப்பக்கூடியவராகவோ, தொழிலாளர்களால் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்ட கொள்கையைப் பற்றி விளக்கக் கூடியவராகவோ தென்படவில்லை." (2) சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்நிலை, 2002 ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன்பு, Laguiller ஆல் WSWS க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் உறுதி செய்யப்பட்டது; அந்த அம்மையாரை, LO ஏன் அரசியல் தாக்குதல்முறைக்குப் போகவில்லை, WSWS ஆல் கொடுக்கப்பட்ட இரண்டாம் சுற்றுத் தேர்தல்களைத் தீவிரமாகப் புறக்கணிக்கும் திட்டத்தை எடுத்துக் கொள்ளவில்லை என கேட்டதற்கு, அவர் விடைகூறினார்: "ஒரு குறிப்பிட்ட நாட்டில் உழைக்கும் மக்கள் எதைச்செய்யத் தயாராக இருக்கிறார்களோ, அந்த சக்திகளின் உறவுமுறையை ஒட்டித்தான் நாங்கள் எப்பொழுதும் திட்டங்களை வகுக்கிறோம்." (3) இந்த சூத்திரம் நிலவும் உறவுமுறைகளைப் பற்றி புனிதப்படுத்துகிறது. ஏற்கனவே பெரும்பாலான தொழிலாளர்களால் ஏற்கப்பட்ட அந்தக் கோரிக்கைகளுக்கு தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளும் அமைப்பு ஒரு புரட்சிகர அமைப்பு அல்ல; இன்னும் சொல்லப்போனால், அச்சொல்லின் உண்மையான பொருளில் ஒரு பழைமை விரும்பும் அமைப்பு ஆகும். ஒரு தைரியத்துடன் கூடிய, வருங்காலத்தைப் பார்க்கும் முன்னோக்கு தொழிலாள வர்க்கத்திடமிருந்து விளைவைக் காணும் என்ற நம்பிக்கை LO விற்கு இல்லை; எனவே புறநிலைத் தன்மையையே அது மாற்ற முற்படுகிறது. தன்னுடைய செயலற்ற மற்றும் மந்தமான தன்மையை, மக்களின்பால் முதிர்வின்மை இருப்பதாகக் கூறி நியாயப்படுத்தப்பார்க்கிறது. "உறவுமுறைகள் சாதகமாக இல்லை" , "போராட்டங்கள் வடிவில் தொழிலாள வர்க்கம் திரட்டப்படவில்லை", "நம்முடைய அமைப்பு மிகவும் வலுவற்றது" -- இத்தகைய விடைகள்தாம் LO விடமிருந்து தங்களுடைய முயற்சிகளைப் பற்றிக் கேட்கும்போது பதிலாக வெளிவருகின்றன. "சக்திகளின் உறவுமுறைகளைக்" குறிப்பிட்டு தன்னுடைய செயலற்ற தன்மையை நியாப்படுத்திய முயற்சிகள் பற்றி ட்ரொட்ஸ்கி இகழ்வைத்தான் கொண்டிருந்தார். அத்தகைய வாதங்கள் பற்றிப் பேசும் ஒரு கட்டுரையில் அவர் கூறினார்: "புரட்சியின் வளர்ச்சி பாட்டாளி வர்க்கத்தின் நனவில் ஏற்படும் மாற்றத்தின் தாக்கத்தின் கீழ், பின்தங்கிய தட்டினர் முன்னேறிய பகுதிக்கு ஈர்க்கப்படல், அதன் சொந்தப் பலத்தில் வர்க்கத்தின் வளரும் உறுதிப்பாடு ஆகிய இத்தகைய தாக்கத்தின் கீழ், சக்திகளின் உறவில் இடைவிடாத மற்றும் விரைவான மாற்றத்தை துல்லியமாகக் கொண்டிருக்கிறது. இந்த வழிவகையில் முக்கிய ஆதாரமாக இருப்பது கட்சிதான்; கட்சியின் இயங்குமுறைகளில் முக்கிய தன்மையைக் கொண்டிருப்பது எவ்வாறு தலைமையோ, அதேபோல்தான் இதிலும் இத்தகைய தன்மை உண்டு. ஒரு புரட்சிகர சகாப்தத்தில் தலைமையிடத்தின் பங்கும் பொறுப்பும் மகத்தானவை ஆகும்...."(4) LO இந்த தலைமையின் பங்கையும் பொறுப்பையும் முழுமையாக நிராகரிக்கிறது. இப்போக்கின் முழு வரலாற்றிலும் இந்த சிவப்பு ஆபத்து இழை ஓடுகிறது மற்றும் அதன் ஆவணங்கள் பலவற்றிலும் பிரதிபலிக்கிறது. இவ்வாறு, "நம்முடைய கொள்கைகளின் வேலைத்திட்ட அடிப்படைகள்" என்ற தீர்மானம் கட்சியின் 2003 டிசம்பர் மாநாட்டில் ஏற்கப்பட்டது, "தொழிலாளர்களின் வெகுஜனக் கட்சி" என்பதை அமைக்கும் கருத்தை முற்றிலும் நிராகரித்து, அதை நியாயப்படுத்தும் வகையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறது: "தொழிலாள வர்க்கமே அரசியல் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியத்தை நம்பினால்தான், சமுதாயத்தை புரட்சிகரமாக மாற்றவேண்டும் என்று வாதிடும் கட்சி புரட்சிகர எழுச்சியுடன் தொடர்புடைய ஒரு வெகுஜனக் கட்சியாக ஆக முடியும். சாதாரண காலங்களில், பெரும்பாலான தொழிலாளர்கள் புரட்சிகரமாக இருப்பதில்லை. மாறாக, வெகுஜனங்கள் சீர்திருத்தத்தைதான் விரும்புகின்றனர்; ஓரு தீவிர அரசியல் மாற்றத்திற்கான தேவை அவர்களிடையே ஒரு நெருக்கடிக் காலத்தில்தான் ஏற்படுகிறது. அத்தகைய காலக்கட்டங்களுக்கு வெளியே ஒரு சிறுபான்மைப் பிரிவு தொழிலாளர்களைத்தான் புரட்சிகர கருத்துக்கள் பால் ஈர்ப்பதில் வெற்றி காணமுடியும்." (5) மீண்டும், அனைத்து விஷயங்களும் தலைகீழாக நிறுத்தப்பட்டு, கட்சியின் சொந்தப் பொறுப்பும் மறுக்கப்படும் நிலைதான் இருக்கிறது. புரட்சி என்னும் உயிர்ப்புடைய வழிவகைக்குப் பதிலாக "புரட்சிகரமான எழுச்சி" இல்லாத ஒரு அருவத்திற்கு ஊகம் கொடுக்கப்படுகிறது; கட்சியின் இயலாமை, செயல்படாத தன்மை, "சீர்திருத்த" சிந்தனை மக்கட்தொகுப்பிடையே நிறைந்துள்ளது என்ற வாதத்தால் நியாயப்படுத்தப்படுகிறது. LO, ஒரு புரட்சிகர வெகுஜனக் கட்சி என்ற முன்னோக்கை நிராகரிக்கிறது; இதை வலியுறுத்துவதற்காக தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை ஏற்கவேண்டும் என்ற தேவையில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்று சுட்டிக் காட்டுகிறது. ஒரு புரட்சிக் கட்சி வெளிப்படையாக அதற்காக உழைக்காவிட்டால், அப்படிப்பட்ட தேவையின் கட்டாயத்தைப் பற்றி எவ்வாறு தொழிலாளர்கள் புரிந்துகொள்ளமுடியும்? ஆனால் LO "புரட்சிக் கருத்துக்களுக்கு" தன்னுடைய முழு ஆதரவை அறிவிக்கிறது. சுரண்டல் அடக்குமுறை, போர் ஆகியவை இல்லாத ஒரு சோசலிச சமுதாயம் அமைக்கப்படவேண்டும் என்று இது வாதிடுகிறது; LCR போல் இல்லாமல், இது முறையாக "தொழிலாளர் வர்க்கத்தின் சர்வாதிகாரம்" என்ற கருத்தை ஏற்கிறது. ஆனால் இந்த அதிகபட்ச திட்டத்திற்கும் இதன் அன்றாட நடவடிக்கைகளுக்கும் இடையே எவ்வித உள் தொடர்பும் காணப்படவில்லை. சோசலிசம் என்பது வெகு நாட்களுக்குப் பின் வரவிருக்கும் சமுதாயம் பற்றிய முன்னோக்கு என நினைக்கப்பட்டு, கட்சியின் அன்றாடப்பணி "மக்கள் சீர்திருத்தவாதிகள்" என்ற ஊகித்தலின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றது; மேலும் "உழைக்கும் மக்கள் பின்பற்றத் தயாராக இருக்கும்" கோரிக்கைகள் மட்டுமே ஏற்கப்படவேண்டும் என்று கருதுகின்றது; அதாவது முற்றிலும் தொழிற்சங்கவாத, சீர்திருத்தவாத கோரிக்கைகள் ஆகும். இந்த முன்னோக்கின் பயனற்ற தன்மை இன்னும் தெளிவான முறையில், தொழிற்சங்கங்கள், சீர்திருத்த அமைப்புக்கள் ஆகியவற்றின் பொதுச் சரிவில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பில் தீவிரமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது, சமூக சீர்திருத்தங்களை முதலாளித்துவ அமைப்பு செயல்படுத்துவதற்கான திறனை நீக்கியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, தனியார் துறையில் உள்ள தொழிலாளர்கள் குறிப்பாக சிறிய அளவு பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு கூடப் போராடத் தயாராக இல்லை; ஏனெனில் அத்தகைய போராட்டங்களில் உள்ள தியாகங்கள், ஊறுகள் இவற்றை நியாயப்படுத்தும் வகையில் கிடைக்கக் கூடிய ஆதாயங்கள் இருப்பதில்லை; மேலும் அவை தொழிற்சங்கங்களை நம்புவதும் இல்லை. ஆனால் இன்னும் கூடுதலான அரசியல் முயற்சிகளை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றனர் என்பது மிகப்பெரிய முறையில் தேசிய முன்னணிக்கும், ஈராக்கியப் போருக்கும் எதிராக நடத்திய ஆர்ப்பாட்டங்களின் மூலம் தெரியவருகிறது. வர்க்கப் போராட்டதை பற்றிய எண்ணக்கருவை, தன்னுடைய மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார வடிவங்களில், LO இந்த வளர்ச்சியை மனச்சோர்வு என விளக்குகிறது. மக்கள் போராட்டங்களை நாசம் செய்யும் அல்லது முடக்கும் சீர்திருத்தக்கட்சிகள், தொழிற்சங்கங்கள் இவற்றைக் குறை கூறாமல், சீர்திருத்தத்தின் தோல்விக்கு பரந்த மக்களைக் காரணம் காட்டுகிறது. இதுதான் LO இன் தீயதேநடக்கும் என்ற தன்மைக்கு ஆதாரமாக உள்ளது. இது வாக்காளர்களின் மனச்சோர்வு பற்றி பேசும் பொழுது, தன்னுடைய மனச்சோர்வு பற்றித்தான் பேசுகிறது. வர்க்க சமரசத்தின் முடிவு, இதன் சந்தர்ப்பவாத கருத்துருக்களுக்கு அரசியல் ஆதரவை கீழறுத்துவிட்டது. அரசை நோக்கி நகர்ந்து செல்லல் LCR உடன் சேர்ந்து, LO சமூக சீர்திருத்தத்தின் தோல்வி, சமூக சமரசங்களின் உடைவு இவற்றைக் காரணங்காட்டி அரசினை நோக்கிச் செல்ல முயற்சிகளை மேற்கொள்ளுகிறது. கடந்த சில மாதங்களாக பிரான்சின் உள்நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் பிரச்சினையான, பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் பெண்கள் தலை முக்காட்டு துணிகள் அணிவதை தடை செய்யும் புதிதாக இயற்றப்பட்ட சட்டத்தில், இதன் நிலைப்பாடு மிகத்தெளிவாக வெளிப்படுகிறது. இந்தச் சட்டத்தை LO வெளிப்படையாக ஆதரிக்கிறது. பல கட்டுரைகளிலும் தலையங்கங்களிலும் இந்த தடைக்கு ஆதரவு தெரிவித்திருப்பதுடன் இதை செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளுக்காக அரசாங்கத்தை குற்றமும் சாட்டியுள்ளது. மார்ச் 6ம் தேதி, சர்வதேச மகளிர் தினத்தின்று Laguiller தலை மறைப்புத்துணிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்; வலதுசாரி UMP உறுப்பினரும், ரஃபரன் அரசாங்கத்தின் அதிகாரியும் 2002 ஜனாதிபதி தேர்தல்களில் சிராக்கிற்கு இளைஞர் துறையில் ஆலோசகராக இருந்தவருமான Nicole Guedj என்பவருடன் சேர்ந்து அந்த ஊர்வலத்தில் அவர் இருந்தார். "புறப் பகட்டுத்தனமான" மத அடையாளச் சின்னங்கள் பள்ளிகளில் தவிர்க்கப்படவேண்டும் என்ற சட்டம் பாராளுமன்றத்தில் பெப்ரவரி 2004ல் அதிகப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது, செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வரும்; இது அரசின் அடக்குமுறை அதிகாரங்களை வலுப்படுத்தி சமய சுதந்திரத்தையும் குறைப்பது ஆகும். அரசாங்கம் இந்தச் சட்டத்தை மதசார்பற்ற தன்மைக் கொள்கையைக் காக்கும் நடவடிக்கையாக காட்டுகின்றது; அதாவது, அரசும் மதமும் தனித்தனியே இயங்கும் என்ற கொள்கையின் அடிப்படையைக் காப்பது அதன் நோக்கம் என்பதுபோல. இந்த முயற்சி கேலிக்குரியது; அரசாங்கமே மத அமைப்பை சமுதாயக் கட்டிப்பாட்டிற்கு ஒரு கருவியாக வலுப்படுத்திவரும் முயற்சியில் தீவிரமாக உள்ளது என்பதால் மட்டும் கேலிக்குரியது அல்ல. கடந்த ஆண்டு உள்துறை அமைச்சர் நிக்கோலா சார்க்கோசி இவரே ஒரு தீவிர கத்தோலிக்கர், தேசிய முஸ்லிம் குழு (Conseil Français du Culte Musulman) என்ற அமைப்பின் மூலம் இஸ்லாமிய மதத்தை அரச அமைப்புக்களுள் நெருக்கமாகக் கொண்டுவர முயன்றார். தனியார் பள்ளி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தும் கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்தின் முழு ஆதரவையும் பெற்றுள்ளது. நாம் தலை மறைப்புத் துணி பற்றிய பூசலின் அடிப்படையில் இருக்கும் சமுதாயப் பிரச்சினைகளை பகுத்தாய்ந்தால், இச்சட்டத்தின் பிற்போக்குத் தன்மை நன்கு வெளிப்படும். புறநகர்ப்பகுதிகளில் விரக்தியான நிலைமைகளில் பல புலம் பெயர்ந்தோர் வாழ்கின்றனர்; அதிகாரபூர்வமான தொழிலாளர்கள் அமைப்புக்களினால் அவர்கள் கிட்டத்தட்ட கைவிடப்பட்டவர்கள் ஆவர்; அவர்களில் இதையொட்டி ஒரு பிரிவு, இருக்கும் சமுதாய அமைப்பிற்குத் தக்க முன்னேற்றமான மாற்றாக இருக்கும் என்ற தவறான கருத்தில் இ்ஸ்லாம் மதத்தின் புறம் திரும்புகிறது. இவர்களில் சிலர் இளம் பெண்களை இஸ்லாமிய நடவடிக்கைகள், உடை விதிகள் இவற்றைப் பின்பற்றுமாறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் தலை மறைப்புத் துணிகளை அணியாவிட்டால் அச்சுறுத்தலுக்கும் வன்மையான தாக்குதல்களுக்கும் உட்படக்கூடும்; இந்த உண்மையும் இதைப் பற்றிய விவாதத்தின்போது மக்கள் கவனத்திற்கு வந்தது. ஆனால், இத்தகைய பின்தங்கிய மதத் தப்பெண்ணங்களை அரச அடக்கு முறை நடவடிக்கைகள் மூலம் வென்றுவிட முடியாது; அதிலும் அந்த அரசாங்கமே கடுமையான முறையில் புறநகரங்களில் நிலவும் மக்களுடைய மோசமான சமுதாய நிலைக்கு காரணமாக இருக்கும் வரை. போலீஸ் அச்சுறுத்தலுலையும் அரசாங்க அடக்குமுறையையும் அன்றாடம் எதிர்கொள்ளும் இளைஞரிடம், ஒரு பாரபட்சம் காட்டும் சட்டம் எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும். சமயப் பிற்போக்குத் தன்மையும் தப்பெண்ணங்களும் தொழிலாள வர்க்கத்தினால் ஒரு சோசலிசத் தாக்குதல் நடத்துவதின் உள்ளடக்கத்தில்தான் வெற்றி கொள்ளப்படமுடியும். எப்படியிருந்தபோதிலும், அரசாங்கத்தின் உண்மையான அக்கறை தீவிரமதப்பற்றுக்கு எதிரான போராட்டம் அல்ல. இது தலை மறைப்புத்துணி சட்டத்தை தன்னுடைய பிற்போக்கான சமூகக் கொள்கைகளிலிருந்து திசைதிருப்புவதற்கும், எதிர்ப்பை வேறு புறங்களில் திருப்புவதற்கும், குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக கொள்ளவைத்தல் என்ற கருத்தைக் கொண்டுள்ளது. இந்தவகையில் அது ஒரளவு வெற்றியையே அடைந்துள்ளது. பாராளுமன்றத்தில், கிட்டத்தட்ட அனைத்து சோசலிசக் கட்சி மற்றும் பல கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் , 2002 ல் ஜனாதிபதித் தேர்தலில் சிராக்கின் அபரிமிதமான ஜனாதிபதித் தேர்தல் வெற்றியில் "குடியரசு முன்னணி" யின் உயிர்த்தெழுதலில் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். பாராளுமன்றத்திற்கு வெளியே பல தாராளவாத கொள்கை உடைய, மற்றும் மகளிர் உரிமை குழுக்களும் அரசாங்க சட்ட வரைவிற்கு ஆதரவும் தெரிவித்து அதுதான் பெண்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் என நியாயப்படுத்தி ஆர்ப்பரித்தனர்; இக்குழுக்களில் முக்கியமான ஒரு பிரிவாக LO இருந்தது. செப்டம்பர் 2003ல் அதனுடைய கட்சிச் செய்தித் தாளில் ஒரு கட்டுரை: "இங்கே உள்ள பிரச்சினை சிலர் தலை மறைப்புத் துணியை அணிவது "உரிமையா" என்பது பற்றியது அல்ல, மாறாக பல்லாயிரக்கணக்கான சிறுமிகளும், இளவயதுப் பெண்களும் தலை மறைப்புக் கட்டு தடையைப் பயன்படுத்தி, தங்கள் சூழ்நிலை கட்டாயப்படுத்தும் பிற்போக்குக் கட்டுப்பாடுகளை எதிர்க்கும் பொருட்டு உரிமை பெறுவது என்பதே ஆகும்." (6) என அறிவித்தது. அடுத்த மாதத்தில் LO இச்சட்டம் "வெளிப்படையாகத்" தெரியும் சமய அடையாளங்களைத் தடை செய்வதில் போதுமான அளவு இயங்கவில்லை என்ற கருத்தைத் தெரிவித்தது. "ஆயினும், ஒரு 'தனியான' தலைமறைப்புக் கட்டு என்பது என்ன? முடியையோ தலையையோ காதுகளையோ மறைக்காத சிறிய தலை மறைப்புக்கட்டுத் துணி என்பது கூட மகளிரை அடக்குவது பற்றிய அடையாளம்தான்." LO ஒரு முழுத்தடையை வலியுறுத்தியது. "உண்மையில் பள்ளிக் கூடங்களில் தலைமறைப்புக் கட்டுக்களை அணிவது தடைசெய்யப்படவேண்டும்." "சிறிய அளவிலோ, அல்லது 'தனியாக' மறைப்பதோகூட, பள்ளிக் கூடங்கள், கல்வி இடங்களில், தடை செய்யப்படவேண்டும்" ஆசிரியர்கள் அதை செயல்படுத்துமாறு கட்டாயப்படுத்தவேண்டும் என்று LO எழுதியது. "அனைத்து ஆசிரியர்களும் இந்தத்தடை செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவேண்டும், இது ஒரு கட்டாயமாக கடைப்பிடிக்கவேண்டிய நெறி என்று வெளிப்படையாக வலியுறுத்தப்பட வேண்டும்."(7) சிராக் அரசாங்கத்திற்கும் அதன் அடக்குமுறைச் சட்டத்திற்கும் இதைவிடத் தெளிவான ஆதரவு கொடுக்கும் விளக்கம் தேவையில்லை. ஈராக்கிய மக்கள் அமெரிக்க, பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடத்தும் எதிர்ப்பிற்கும் LO இன் பதில்விளைவு தலைக்கட்டுத் துணி விவாதத்தை ஒத்தநிலையில்தான் உள்ளது. வாஷிங்டனிலும், லண்டனிலும் பெருகிவரும் மக்கள் எதிர்ப்பு அரசாங்கங்களை ஆழ்ந்த நெருக்கடியில் தள்ளி உள்ள போது, LO அதன் ஒரு அடையாளமான ஷியைட்டுக்களின் சமய குரு Moqtada al Sadr ஐ ஈராக்கிய மக்களின் "மோசமான விரோதி" என்று வர்ணித்துள்ளது. ஏகாதிபத்தியத்தின் கொள்கை "மக்களை அல் சதர் போன்ற ஒரு பிற்போக்கு இமாமின் கைகளுக்குள், அதாவது அவர்களுடைய மோசமான விரோதியிடத்தில் அவர்களைத் தள்ளுகிறது" என்று LO எழுதியுள்ளது. (8) இதே சிந்தனையோட்டம்தான் அனைத்து LO அறிக்கைகளிலும் இப்பிரச்சினை பற்றி வெளிப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புப் படைகளும் எதிர்ப்பு சக்திகளும் ஒரே மாதிரியான கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பாளர்களை பற்றி LO இன் முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால், அவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை வலிமைப்படுத்துகின்றனர் என்பதே ஆகும். ஒரு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது: "மேற்கின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தாலும், தொடராவிட்டாலும், ஈராக்கிய மக்கள் இரண்டு அணிகளுக்கு இடையே அகப்பட்டுள்ள அபாயத்தில் இருக்கின்றனர் -- ஒரு புறம் ஏகாதிபத்தியத்தின் ஆயுதமேந்திய வெறிக்குழு, மறுபுறம் அதன் அடிப்படைவாத விரோதிகள் குழு." (9) ஈராக்கியர்களின் எதிர்ப்பு பற்றிய இத்தகைய எதிர்விளைவானது LO இன் அரசியல்சார்பு பற்றி கூடுதலான முறையில், சோசலிசம் பற்றி உதட்டளவில் பேசும் அத்தனையையும் விடக்கூடுதலாக வெளிப்படுத்திக் காட்டுகிறது. ஈராக்கிய மக்கள் ஏகாதிபத்தியப் போரின் குற்றஞ்சார்ந்த தன்மைக்கு கொடுத்துள்ள விடை வீரம் பொருந்திய எதிர்ப்பை ஆக்கிரமிப்பிற்குக் காட்டியிருப்பது ஆகும். இம்முறையில், அவர்கள் தங்களிடத்தில் உள்ள சிந்தனை, அரசியல் போக்கைக் கையாண்டிருக்கின்றனர். தேசியவாத பாத் கட்சியின் நீண்ட தசாப்த காலத்தின் எதேச்சாதிகார ஆட்சியும், ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டிக் கொடுக்கும் பாத்திரத்தின் ஆதரவு அதற்கு இருந்ததையும் கருத்திற்கொள்ளும்போது, ஷியைட்டுக்களின் தீவிரப்போக்குப் பிரிவின் மேலாதிக்கம் இருப்பது வியப்பானது அல்ல. இந்த மாற்றத்திற்கு LO இன் எதிர்விளைவு புரட்சியாளர்கள் கொள்ளுவதுபோல் அல்லாமல், கிலி அடைந்த தாராளவாதிகள் கொள்ளுவதுபோல்தான் இருக்கிறது. புரட்சியாளர்கள் ஈராக்கியரின் எதிர்ப்பிற்கு ஆதரவு கொடுக்கின்றனர்; அவர்கள் உடனடியான, நிபந்தனையற்ற ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களின் படைகள் திரும்பப் பெறவேண்டும் எனக் கோருகின்றனர்; அவர்கள் இந்த நோக்கத்திற்காக, அமெரிக்கர்கள் உட்பட, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்: இவ்விதத்தில் இதில் தவிர்க்கவியலாததும், அரைகுறையானதுமான, இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செல்வாக்கைக் கீழறுக்கின்றனர். இதற்கு மாறாக, LO வன்முறையாக வெடித்துள்ள எதிர்ப்பையும் அதன் தலைவர்களையும் கண்டனத்திற்கு உட்படுத்தி, ஈராக்கிய மக்களுக்கு "மேலை நாடுகளின் ஆக்கிரமிப்பு தொடர்கிறதா இல்லையா என்பது ஒரு பிரச்சினை அல்ல" என்று அறிவிக்கிறது. இப்பொழுதுள்ள ஆக்கிரமிப்பு படைகளுக்குப் பதிலாக ஐ.நா. படைகள் வரவேண்டும் என்று கோராவிட்டாலும், LO அத்தகைய நிலைப்பாட்டிற்கு வெகு அருகில்தான் இருக்கிறது. இத்தகைய கிலி அடைந்த தாராளவாத கொள்கை தன்மைதான் தலைக்கட்டுத் துணி விவாதத்திலும் இவர்களால் காட்டப்படுகிறது. ஓரளவு பிற்போக்கு வடிவங்களை மேற்கொண்டிருக்கும் புறநகர்ப்பகுதிகளில் இருக்கும் சமூக விரோத போக்குகளின் வெடிப்புத் தன்மைக்கு விடையிறுக்கும் வகையில், கடந்த காலத்தில் சேசஷலிஸ்ட் கட்சிகள் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி இதேபோன்ற பணியைத்தான் செய்துள்ளன, LO ஒரு வலுவான அரசு தேவை என்ற கருத்தைக் கூறுகின்றது. இந்த வகையில், Laguiller இன் UMP அரசியல்வாதி Guedj உடனான ஐக்கிய முன்னணி, ஒரு குறியீடாகும். இங்கும் ஒரு தைரியமான அரசியல் தாக்குதல் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் செல்வாக்கை கீழறுத்துவிடும், அதனால் சமுதாய நெருக்கடிக்கு எந்த விடையையும் கொடுக்க முடியாது. LO இன் வலதுபுறத்தை நோக்கிய நகர்வு தற்செயல் நிகழ்வு அல்ல. LCR ஐ போலவே, இதன் சமூக அரசியல் சிறப்புப்பண்பும் பல பத்தாண்டுகளில் இத்தகைய வளர்ச்சியைத்தான் கொண்டிருக்கிறது. இது பற்றி இத்தொடரின் கடைசி, முடிவுக் கட்டுரையில் காண்போம். தொடரும் Notes: |