World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிEuropean election: SEP won 25,824 votes ஐரோப்பிய தேர்தல்: சோசலிச சமத்துவக் கட்சி 25,824 வாக்குகளை பெற்றது By Ludwig Niethammer கடந்த13 யூன் நடந்த ஐரோப்பிய தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி கடந்தகாலங்களிலும் பார்க்க இதுவரையில் சிறந்த முடிவுகளை பெற்றுள்ளது. அது 16 மாநிலங்களுக்குமான பொதுவான பட்டியலில் 25,824 வாக்குகளை பெற்றுள்ளது. இது 2கோடி 58 இலட்சம் (25,8 Million) செல்லுபடியான வாக்குகளில் சரியாக 0.1% ஆகும். 1994ம் ஆண்டின் ஐரோப்பிய தேர்தலினதும், 1998 ஜேர்மன் பாராளுமன்ற தேர்தலினதும் வாக்குகளுடன் ஒப்பிடுகையில் இது அண்ணளவாக 3 மடங்கால் அதிகரித்துள்ளது. 1994 இல் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பான சோசலிச தொழிலாளர் கழகம் 10,678 வாக்குகளை பெற்றது. 1998 ஜேர்மன் பாராளுமன்ற தேர்தலில், 60% வாக்காளர்களை உள்ளடக்கிய 6 மாநிலங்களில் சோசலிச சமத்துவக் கட்சி முதல் தடவையாக போட்டியிட்டபோது 6,226 வாக்குகளைப்பெற்றது. இந்த வாக்குகளின் அதிகரிப்பானது மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இது, முன்னேறிய தொழிலாளர்களும், புத்திஜீவிகளும், இளைஞர்களும் அரசியல்கேள்விகள் தொடர்பாக தீவிரமான விவாதத்தில் ஈடுபடுவதையும், ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கை ஆதரிப்பதன் ஆரம்பத்தையும் எடுத்துக்காட்டுகின்றது. சமூக ஜனநாயகக் கட்சியையும், பசுமைக்கட்சியையும் அழுத்தத்திற்கு உள்ளாக்குவதோ அல்லது எதிர்ப்புவாக்குகளை பெற்றுக்கொள்வதோ எமது நோக்கமல்ல என சோசலிச சமத்துவகட்சி தனது தேர்தல் பிரசாரத்தின்போது தெளிவாக எடுத்துக்காட்டியது. தனது தேர்தல் அறிக்கையின் ஆரம்பத்தில் ''இத்தேர்தலில் கலந்துகொள்வதின் நோக்கம் தொழிலாள வர்க்கத்தினதும், ஓய்வூதியம் பெறுவோரினதும், வேலையற்றோரினதும், இளைஞர்களினதும் நலன்களை பிரநிதித்துவப்படுத்தும் ஒரு புதிய கட்சிக்கான அடித்தளத்தை இடுவதே'' என குறிப்பிட்டிருந்தோம். இக்கட்சிக்கான அடித்தளமாக சமூக ஜனநாயக கட்சியிலிருந்து முற்றுமுழுதாக வித்தியாசப்படும் ஒரு முன்னோக்கை சோசலிச சமத்துவக் கட்சி முன்வைத்தது. அதன் மத்திய புள்ளிகள், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியமும், சோசலிச அடித்தளத்தில் பொருளாதாரத்தை மறு ஒழுங்கமைப்பதும், பரந்துபட்ட தொழிலாள வர்க்கத்தின் அரசியல் உணர்வுமிக்க ஒரு இயக்கத்தை கட்டியெழுப்புவதுமாகும் என குறிப்பிட்டிருந்தது. மேலும், ''சோசலிசம் அதிகாரத்துவ தீர்மானங்களுடன் எவ்விதமான உடன்பாடுமற்றது, உண்மையான சமுதாய முன்னேற்றம் சமூக அமைப்பினை மாற்றியமைப்பதில் பரந்த மக்களின் தீவிரமாக ஈடுபாட்டினாலும், அதனை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்துவதாலுமே சாத்தியமாகும்'' எனவும், எமது தேர்தல் பிரச்சாரத்தின் நோக்கம் இக்கேள்விகள் தொடர்பான ஒரு பரந்த விவாதத்தை ஆரம்பிப்பது எனவும் குறிப்பிட்டிருந்ததோம். தேர்தல் முடிவுகள் இவ் அழைப்பு ஆதரவைப்பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததும், கூடியளவு வாக்குகள் அதிகரிப்பும் சமூக ஜனநாயக கட்சி தனது பாரம்பரிய வாக்காளர்களை கொண்ட மேற்கு ஜேர்மன் மாநிலங்களில் நிகழ்ந்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி தனது அதிகூடிய வாக்குகளான 3828 இனை வடக்குரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் பெற்றுள்ளது. (1994 ஐரோப்பிய தேர்தலில்-1146). ஏனைய மாநிலங்களான பாடன் வூட்டன்பேர்க் (2637 வாக்குகள்), பயர்ன் (1853 வாக்குகள்) இலும் சோசலிச சமத்துவக் கட்சி தனது வாக்குகளை இரட்டித்துள்ளது. பல சிறிய நகரங்களிலும் நடுத்தர நகரங்களிலும் விகிதாசாரத்திற்கு அதிகமாக, உதாரணமாக றாவன்ஸ்பேர்க் இல் 157 உம் ஹனோவரில் 249 வாக்குகளும் பெற்றுள்ளது. புதிய மாநிலங்களிலும் சோசலிச சமத்துவக் கட்சி தனது வாக்குகளை அதிகரித்துள்ளது. சக்ஸன் அன்கால்ட் இல் 2339 (0.3%) வாக்குகள் வீழ்ந்துள்ளது. அதிக வேலையற்றோரைக்கொண்ட முன்னாள் தொழிற்துறை நகரங்களில் சோசலிச சமத்துவக் கட்சி அண்ணளவாக 0.5% வாக்குகளை பெற்றுள்ளது. உதாரணமாக, டெஸொவ் இல் 97 (0.4%), ஹால இல் 191 (0.3%) பெற்றுள்ளது. சமூக ஜனநாயகக் கட்சியும் ஜனநாயக சோசலிச கட்சியும் (PDS) ஆட்சியிலிருக்கும் தலைநகரான பேர்லினில் சோசலிச சமத்துவக் கட்சி 1404 (0.2%) வாக்குகளை பெற்றுள்ளது. அங்கு 1994ல் 635 வாக்குகளும், 1998ல் 298 வாக்குகளுமே கிடைத்தன. இவ்வாக்குளின் அதிகரிப்பான மூர்க்கமான சமூக வெட்டுகளை நடைமுறைப்படுத்தும் சிவப்பு-சிவப்பு கூட்டு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வேறு ஒரு அரசியலை தீர்மானித்துள்ளார்கள் என்பதையே காட்டுகின்றது. தொலைத்தொடர்பு சாதனங்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை பகிஸ்கரித்ததின் மத்தியிலும் இத்தொகையான வாக்குகளை சோசலிச சமத்துவக் கட்சி பெற்றுள்ளது. ஒரு சில வானொலி மற்றும் தொலைக்காட்சி பிரச்சாரத்தை தவிர, சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் ஆயிரக்கணக்கில் வினியோகிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையையே அடித்தளமாக கொண்டிருந்தது. உலக சோசலிச வலைத்தளத்திலும் மற்றும் தனது தேர்தல் பிரச்சார வலைத்தளத்திலும் ஐரோப்பா, அமெரிக்க மற்றும் உலகளாவிய முக்கிய அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக வெளிவந்த பல கட்டுரைகள் வாக்காளர்களுக்கு ஒரு அரசியல் வழியை காட்டின. யூன் 13 தேர்தலில் கலந்துகொண்ட ஏனைய சகல கட்சிகளிலும் இருந்து சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கு அடிப்படையாக வேறுபட்டதாகும். பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய கட்சிகளைவிட, பூகோளமயமாக்கலின் விளைவிற்கு தேசிய எல்லைகளால் பிரிக்கவேண்டும் என்பதை பல வலதுசாரி, தீவிர வலதுசாரி கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்தின. அவற்றிற்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி ஐக்கிய சோசலிச அரசுகள் என்பதை முன்வைத்தது. அது தனது தேர்தல் முன்னோக்கில், குடியேறியவர்களினதும், அகதிகளினதும் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்கு முக்கிய இடத்தை வழங்கியது. சமூக ஜனநாயக கட்சிக்கும் சோசலிச சமத்துவக் கட்சிக்கும் இடையில் தேர்வாக ஜனநாயக சோசலிச கட்சியும் (PDS) ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியும் (DKP) இருந்தன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொஸ்கிச இடது எதிர்ப்பின் பாரம்பரியத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகையில், இவ்விரு கட்சிகளும் ஸ்ராலினிசத்தின் பாரம்பரியத்தினை கொண்டிருந்தன. ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் (DDR) அரச கட்சியான ஜேர்மன் ஐக்கிய சோசலிச கட்சியிலிருந்து (SED) நேரடியாக உருவாகிய ஜனநாயக சோசலிச கட்சி (PDS) முதலாளித்துவ அமைப்பு முறையை எவ்விதத்தடையுமின்றி பாதுகாப்பதற்கு தன்னை அர்ப்பணித்துள்ளது. அது தற்போது 3 மாநிலங்களில் அரச பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளதன் மூலம் மக்களுக்கு எதிரான மோசமான சமூகவெட்டுக்களில் ஈடுபட்டுள்ளது. ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு ஜேர்மனியில் ஐக்கிய சோசலிச கட்சியின் (SED) கிளையாக இருந்ததுடன், அதனால் நிதி மற்றும் அரசியல் ரீதியாக ஆதரவளிக்கப்பட்டது. இதுவும் இம் முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாப்பதில் சகலவிதத்திலும் முன்னின்றது. இது 70ம் ஆண்டுகளில் ட்ரொஸ்கிஸ்டுகளுக்கும் ஏனைய எதிரிகளுக்கும் மீதான தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் தாக்குதலுக்கான கையாட்களாக இயங்கிவந்தது. 80ம் ஆண்டுகளில் சகல விதத்திலும் அமைதியாகிபோனதுடன், உத்தியோகபூர்வமான சமாதான இயக்கத்தில் இணைத்துக்கொண்டது. ஜேர்மன் ஜனநாயக குடியரசின் (DDR) உடைவின் பின்னரும் தமது ஸ்ராலினிச நிலைப்பாட்டை தொடர்ந்தும் கைப்பிடிப்பதுடன், ஜனநாயக சோசலிச கட்சி (PDS) இனுள் இணைந்து கொள்வதை நிராகரித்தது. இந்த தேர்தல் முடிவுகளுடன், கடந்த காலங்களில் ஒரு கட்சிக் கட்டமைப்பையும், நிதி வசதிகளையும், தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனான உறவையும் கொண்டிருந்த ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த வாக்குகளை சோசலிச சமத்துவக் கட்சி முதல் தடவையாக அண்மித்துள்ளது. சக்ஸனில் 3472 வாக்குகளைப்பெற்று சோசலிச சமத்துவக் கட்சி ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பார்க்க சாதகமான முடிவைப்பெற்றது. அத்துடன் பவுற்சன், மைசன் மற்றும் லோபெள-ஷற்றவ் போன்ற தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பார்க்க அதிகமான வாக்குகளை சோசலிச சமத்துவக் கட்சி பெற்றுள்ளது. இவ் எண்ணிக்கைகள் ஒரு எடுத்துக்காட்டான முக்கியத்துவம் வாய்ந்தவை. பல பத்தாண்டுகளாக ஸ்ராலினிசம் பாரிய கட்டமைப்பையும், எல்லையற்ற நிதிவளங்களையும் கொண்டு உண்மையான மார்க்சிச கருத்துக்களை ஒடுக்கியது. அத்தகைய காலகட்டம் ஐக்கிய சோசலிச கட்சியின் உடைவுடனும், சமூக ஜனநாயக கட்சியின் வீழ்ச்சியுடனும் முடிவிற்கு வந்துள்ளது. மொத்த வாக்காளர்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் குறைவானதாக தோன்றலாம். ஆனால், இம்முடிவுகள் ஒரு சோசலிச மாற்றீட்டை நோக்கி அரசியல் உணர்மையான மக்கள் திரும்பும் ஒரு வரவேற்கக்கூடிய ஒரு தெளிவான அரசியல் போக்கினை எடுத்துக்காட்டுகின்றது. |