World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Trotskyism in postwar USSR: the record of an anti-Stalinist youth group in the early 1950s

போருக்குப் பிந்தைய சோவியத் ஒன்றியத்தில் ட்ரொட்ஸ்கிசம்: 1950 களின் முற்பகுதிகளில் ஒரு ஸ்ராலினிச-எதிர்ப்பு இளைஞர் குழுவின் பதிவுச்சான்று

By Vladimir Volkov
5 June 2004

Back to screen version

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய சகாப்தம் முழுவதும், ஸ்ராலினிச எதிர்ப்புக் குழுக்கள், அதிகாரத்துவ ஆட்சியை எதிர்த்து இடதுபுறத்திலிருந்து தொடர்ந்து வெளிப்பட்டன; அக்டோபர் 1917 புரட்சியைத் தொடர்ந்து முதல் சில ஆண்டுகளில் சர்வதேசியத்தையும் சோவியத் ஜனநாயகத்தையும் அதேபோல போல்ஷிவிக் கட்சியில் நிலவிய கட்சி வாழ்க்கை முறை நெறிகளைப் புதுப்பித்தலின் தேவையைக் கருத்தில் கொண்டும் அவை தோன்றின.

ஜேர்மனியில் வெளியிடப்படும் ரஷ்ய மொழிப் பத்திரிகை Evreiskaia gazeta (யூதச் செய்தித்தாள்). ஜனவரி 2004 பதிப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள, 1950 முற்பகுதிகளில் எழுச்சியுற்ற ஸ்ராலினிச எதிர்ப்புக்குழுவின் சுருக்கமான வரலாறு, இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது.

பண்பாட்டை வியந்து பாராட்டல்

இக்கட்டுரையின் ஆசிரியரான Michail Zaraev தன்னுடைய பள்ளி நாட்களில், கிரோவ்ஸ்கயா மெட்ரோ நிலையத்தின் அருகில் இருந்த இரண்டு பழைய சிறப்புரிமைக்குரிய கட்டிடங்களில் இயங்கி வந்த முன்னோடி (Pioneer) (கம்யூனிஸ்ட் கட்சியினால் நடத்தப்பட்ட குழந்தைகள் அமைப்பு) யின் மாஸ்கோ இல்லத்தில் நடாத்தப்பட்ட இலக்கிய வட்டத்தில் பங்குபற்றியிருந்தார். இந்த இலக்கிய வட்டத்தில் பங்குபெற்றவர்கள் இறுதியில் ஒரு எதிர்ப்பு அமைப்பை "புரட்சிக்கான போராட்டத்தின் ஒன்றியம்" ("The Union of Struggle for the Revolution") என்ற பெயரில் தோற்றுவித்தனர். செப்டம்பர் 1950 லிருந்து ஜனவரி 1951ல் மிகக் கருணையற்ற முறையில் NKVD (ஸ்ராலினிச இரகசியப் போலீஸ்) யால் நசுக்கப்படும் வரை, இது மாஸ்கோவில் செயலாற்றியது.

இந்த இளம் ஆடவர் பெண்டிரின் உள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளுவதற்கு, இவர்கள் எவ்வாறு தங்களைச் சுற்றியுள்ள உலகில் முழுமையான தொடர்பு கொண்டிருந்தனர், அது எவ்வாறு அவர்களை ஈர்த்து, ஆழ்ந்த ஆர்வத்தைக் கொடுத்தது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

1940 களிலும் 1950 களிலும் சோவியத் வாழ்வு கடுமையான சிக்கனம் நிறைந்து, ஏராளமான அன்றாட கஷ்டங்களைக் கொண்டிருந்தது. போருக்குப் பின் முதல் சில ஆண்டுகள் மோசமான அறுவடைகளை கொண்டிருந்தன; கிராமங்கள் பட்டினி கிடந்தன, நகரங்கள் உணவுப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறையைச் சந்தித்தன. தொழில்துறை இன்னமும் சீரமைக்கப்படவேண்டியிருந்தது; அடிப்படை நுகர் பொருட்களிலும் பற்றாக் குறைதான் பெரிதாக இருந்தது. ஸ்ராலினிச கம்யூனிசக் கட்சி தோற்றுவித்திருந்த சிந்தனைச் சூழ்நிலையானது, கேடுவிளைக்கும் வகையில் பிற இனபழிப்பையும், செமிட்டிய எதிர்ப்பையும் கொண்டிருந்தது.

முக்கியமான அரசியல் பிரச்சினைகள் மற்றும் சமீப காலத்திய வரலாறு இவைதொடர்பாக ஒரு இரகசிய மற்றும் தடைசெய்யும் போக்கு மிகப்பெரிய முறையில் இருந்தது என்பதை இளைய தலைமுறைகள் உணர்ந்திருந்தன.

"எங்களைச் சூழ்ந்திருந்த வாழ்வைத் தொடாமல் இருந்தால் நல்லது என்று நாங்கள் உள்ளுணர்வின் மூலம் அறிந்தோம். அது பழகிச் சலித்து விட்டதாகவும், சலிப்பாகவும், கற்பனையின் களிப்பிற்குரிய தெருவிளக்குகள் தங்கள் ஒளியைச் செலுத்தித் தெரியாத தொலைநாடுகளைப் பற்றி முற்றிலும் விளக்கமும் தராமல் இருந்தது மட்டும் இதற்குக் காரணம் இல்லை. ஆபத்தான, பயம் நிறைந்த இரகசியங்கள், காரணம் தெரியாத தடைகள், இவைதான் எங்கள் வாழ்வை நிரப்பியிருந்தன. ...போரைப் பற்றியும், புரட்சியைப் பற்றியும் ஒருவர் தெரிந்து கொண்டிருக்க வேண்டியது அனைத்தையும் (நாங்கள்) அறிந்திருந்தோம். ஆசிரியர்கள், வானொலி, புத்தகங்கள் ஆகியவை எங்களுக்குத் தேவையானதைக் கூறியிருந்தன. ஆனால் (மாஸ்கோ நகர மையப் பகுதிகளில் இருந்த) பல Arbatsky அல்லது Kirovsky வீடுகளில், பழைய தூசிபடிந்த நூல்கள் சிதைந்த நிலையில் கிடைக்கும். உங்கள் நண்பர் உங்களிடம் அதைப் படிப்பதற்குக் கொடுப்பார். ஒரு பக்கத்திலிருந்து தடுக்கப்பட்ட, பயங்கரமான பெயர் ஒன்று திடீரென்று தோன்றும். அது Bukharin. கட்சி வரலாற்றில் கண்டனப்படுத்தப்படும் மக்கள் விரோதி அல்ல, மாறாக ஒரு தலைவர், களிப்புடனுள்ள மக்கள் கூட்டத்தால் சூழப்பட்டுள்ள பெரும் பேச்சாளர். யாரோ ஒருவருடைய தந்தை டால்ஸ்டாய் பற்று உடையவர்; இது ஏதோ ஒரு காரணத்திற்காக மறைக்கப்பட்டது. ஒருவருடைய பாட்டனார் -- ஒரு மென்ஷிவிக், நாட்டின் டுமா உறுப்பினர்" என்று இக்கட்டுரையில் எம்.ஜாரேவ் தெரிவிக்கிறார்.

ஆனால் இத்தனை இரகசியங்களும் தடைகளும், தொடர்ந்த படைப்பாற்றல் மிகுந்த சுய - அறிவொளி முயற்சிக்கு உலகப் பண்பாட்டில் சிறந்த உதாரணங்களை பேரார்வத்துடன் அறிய விரும்பிய சோவியத் இளைஞர்களை தடை செய்ய முடியவில்லை என்று எம். ஜாரேவ் தொடர்கிறார்.

"நாங்கள் தேவையான கவிஞர்களை தேடிக்கொண்டோம். அறைகுறையாக தடைசெய்யப்பட்டிருந்த [செர்ஜி] எசேனின். பின், தடையே செய்யப்படவில்லை என்றாலும், [அலெக்சாந்தர்] பிளாக்கைப் பற்றி பற்களைக் கடித்துக் கொண்டுதான் குறிப்பிட்டிருந்தனர். முழுமையாக அறிந்து கொள்ளமுடியாத [போரிஸ்] பாஸ்டெர்நாக். தடை செய்யப்பட்டிருந்த [இவான்] புனின். தூக்கில் இடப்பட்டுவிட்ட [நிகோலாய்] குமிலேவ். நாங்கள் மிச்சம் இருந்த பகுதிகள் அனைத்தையும் ஆர்வத்துடன் பற்றிப் படித்தோம். மிகச்சாதாரணமான வாழ்க்கையைத்தான் கொண்டிருந்தோம் எனத் தோன்றியது; இந்நிலையிலிருந்து, சற்றே பிந்தைய காலத்தில் வரலாறும் பண்பாடும் இருந்தது என எங்களுககுத் தோன்றியது-- இப்பொழுது அவை கரைந்துவிட்டன, ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் அவை எங்கு போயின என்பது. இந்தப் பண்பாட்டின் நறுமணம் எங்கள் மூக்கிற்கு ஒரு குறுகுறுப்பைக் கொடுத்து ஒரு மயக்கத்தைத் தந்தது; அது மார்ச் மாதம் மாஸ்கோ தெருக்களில் நுகரப்படும் போதையான நறுமணம் போல் இருந்து, இரவில் வெகு நேரமும் நாங்கள் அனைவரும் ஒரு குழுவாகக் கூட்டம் முடிந்த பின்னரும் ஒன்றாக இருந்தோம். இறைவன் கொடுத்த மிக முக்கியமான அளிப்பு வலிமையோ, புத்திசாலித்தனமோ, அழகோ இல்லை, அது திறமைதான் என்று கருதினோம். திறமையினால்தான் ஒருவர் உலகில் புயல்போல நுழைய முடியும். நாங்கள் எங்களை ரஷ்ய இலக்கியத்தின் ஒரு பகுதியாகக் கருதிக் கொண்டோம். எங்களில் பலரும் ஒன்றும் இலக்கியவாதிகளாகப் போய்விடவில்லை, ஆனால் ஒரு பண்பாட்டைச் சார்ந்தவர்கள் என்பது எங்களுடைய உள்ளத்தில் அப்படியே காப்பாற்றப்பட்டிருந்தது."

இத்தகைய ஆழ்ந்த, பேராசையுடன் பண்பாட்டைப் பற்றிக் கொள்ளுதல், 1920 களின் சூழ்நிலையை நினைவு படுத்தியதுடன், பின்னர் புதிய வலிமையுடன், ("மென்மையாக்கும்" முறையில்) 1960 களின் புதுப்பித்தலிலும் இருந்து, தவிர்க்க முடியாமல் தடையற்ற சிந்தனைக்கும், சமுதாயப் பொறுப்பை பற்றிய உண்மையான உணர்விற்கும் வழிகோலியது. அக்காலக் கட்டத்தின் மிக படைப்பாற்றலும், சுதந்திரமும் நிறைந்திருந்த இளைஞர் பிரிவின் தட்டு, நாட்டின் விதி பற்றியும், சோவியத் சமுதாயத்தின் அரசியல் உண்மை பற்றியும் அசட்டையுடன் இருக்க முடியாது.

ஸ்ராலினிசத்திற்கு அறைகூவTM

எம். ஜாரேவ் பங்கு கொண்டிருந்த இலக்கிய வட்டத்தில், மூத்த தோழர்கள் இளவயது ஆடவரும் பெண்டிருமாகச் சமீபத்தில் பள்ளிப்படிப்பை முடித்தவர்களாக இருந்தவர்கள் ஆவர். அவர்கள் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறைக்கு விண்ணப்பித்திருந்து, அது கிடைக்காமல் போனதும் பெடகாகிகல் பல்கலைக் கழகத்தில் வரலாற்று துறைக்கு தேர்வு எழுதிய போரிஸ் ஸ்லட்ஸ்கி (Boris Slutsky) யின் இல்லத்தில் கூடினர்.

விளாடிமிர் ஃபுர்மன், எவ்ஜெனிய் குரேவிச், மற்றும் சூசன்னா பெச்சுரோ ஆகியோர் இக்குழுவில் மற்றய தலைவர்களாக இருந்தார்கள்.

1950ம் ஆண்டில் அவர்களுடைய இலக்கிய ஆர்வம் ஸ்ராலினிசத்திற்கு எதிரான முழு உணர்வுடன் கூடிய அரசியல் எதிர்ப்பாக வளர்ந்தது. போரிஸ் ஸ்லட்ஸ்கியுடன் நட்புறவு கொண்டிருந்த எஸ்.பெச்சுரோ அந்த ஆண்டு கோடையில் ஒரு நாள் போரிஸ் தன்னிடம் "ஒரு போராட்டம் இந்த அமைப்பில் திட்டமிடப்பட்டுள்ளது, ஒரு சர்வாதிகாரம், ஆனால் தொழிலாளர் வர்க்கத்துடையது அல்ல, ஒரு புதிய வல்லாட்சி, ஒருவிதமான போனபார்ட்டிசம். தலைவர்கள் கட்சியிலும், நாட்டிலும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, எதையும் செய்யாமல் இருப்பது என்பது அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் குற்றங்களில் பங்கு பெறுதல் என்று பொருளாகும்."

1950 இலையுதிர்காலத்தில், தலைவர்களில் நான்கு பேர் தலைமறைவு இயக்கம் ஒன்றை அமைத்தனர்; "புரட்சிக்கான போராட்டத்தின் ஒன்றியம்". இதற்குப் பின், ஒரு வேலைத்திட்டம் போரிஸ் ஸ்லட்ஸ்கியினால் இயற்றப்பட்டது.

"உரையின் வாசகங்களைப் படித்து மதிப்பிடுகையில், போர்யா (போரிசுக்குச் சுருக்கமான பெயர்) மீது ட்ரொட்ஸ்கி மாபெரும் செல்வாக்கைக் கொண்டிருந்தார் என்பது தெரிய வருகிறது. வேலைத்திட்டத்தில் வரும் அருஞ்சொற்கள் அனைத்தும், 'போனபார்ட்டிசம்', 'தேர்மிடோரியன் சீரழிவு' போன்றவை ட்ரொட்ஸ்கியிலிருந்து எடுத்துக் கையாளப்பட்டவை ஆகும்." என்று எம். ஜாரேவ் எழுதுகிறார்.

கட்டுரையாசிரியர் மேலும் கூறுகிறார்: "இந்த 18 வயது இளைஞரின் சிந்தனை, ஆம் ....ஒரு சோஷலிஸ்டுடையதுதான்." ஸ்லட்ஸ்கியின் குழுவினர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தீவிரமாக "வார்சா சேரிகளில் யூதத் தொழிலாளர் வர்க்கத்தின் விதியைப் பற்றி விவாதித்தவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் இவரைப் பொறுத்த வரையில், பெரும் சின்னங்கள் Herzl ஒ அல்லது மார்க்சோ அல்ல, லெனினும் ட்ரொட்ஸ்கியும் ஆகும்" என்று எம். ஜாரேவ் கருத்துக்கூறியுள்ளார்.

இந்த தலைமறைவு அமைப்பின் அளவு பற்றி தெரியவில்லை; ஆனால் இரகசிய தனி நீதிமன்ற விசாரணைக்கு 16 பேர் கொண்டுவரப்பட்டனர். தலைமறைவு இயக்கத்தில் இருந்தவர்கள் ஒரு hectograph உதவியுடன் 250 பிரதிகள் வரை குழுவின் சிறு பிரசுரங்களை அச்சடித்திருந்தனர். இவை வரம்பில்லாமல் வழங்கப்படவில்லை; நேரடியாக பள்ளியிலும், தொழில்நுட்பப் பயிலகத்திலும் வழங்கப்பட்டன.

இக்குழுவில் பங்கு பெற்றவர்கள் தத்துவம், வரலாறு இவற்றைப் படித்து, மார்க்ஸ், லெனின் பற்றிய சுருக்கக் கட்டுரைகளைத் தயார் செய்தனர். வாரத்திற்கு ஒரு முறை, அவர்கள் போரிஸ் ஸ்லட்ஸ்கியின் தலைமையில் அவர்கள் கற்றவற்றை விவாதிப்பதற்காக, ஒன்று கூடினார்கள்.

தன்னுடைய குறுகியகால வாழ்வில் இக்குழு ஒரு சிறிய பிளவையும் கண்டது. இப்பிளவின் மையக்கருத்தாக இருந்தது அச்சுறுத்தல் பயன்படுத்தப்படலாமா என்பதுதான். சோவியத் வாழ்வின் நிலைமைகள் இந்தக் கேள்வியைத் தீவிரத்துடன் எழுப்பின. எந்த எதிர்ப்பு நடவடிக்கையும் இடைவிடாமல் துரத்தியடிக்கப்பட்டது, மக்களின் பரந்த அடுக்குகளுக்கு முறையிட வாய்ப்பு இல்லாத சட்டபூர்வ நிலைதான் இருந்தது. ஸ்ராலினுடன் பல தலைவர்களும் சமுதாயத்தின் சமூக அரசியல் வாழ்வில் விகிதத்திற்கு மீறிய பெரும் பங்கைச் செலுத்தினர். அத்தகையவர்களை வன்முறையில் அகற்றுவது, குறிப்பாக சோவியத் சர்வாதிகாரியை அகற்றுவது, அதிகாரத்துவத்தின் ஆட்சித் தன்மையை திண்ணமாக உறுதியிழக்கச் செய்யும் என்று வாதிடப்பட்டது.

இது ஒரு முட்டுச்சந்துதான். ஆனால் ரஷ்யாவில் புரட்சிகர இயக்கத்தின் வரலாற்றைக் கருத்திற் கொள்ளவேண்டும். ஜார் மன்னர்களின் சர்வாதிகாரப் பின்னணியில் உருவாகியிருந்த, 1870களின் இறுதியில் "மக்களுடைய விருப்பம்" (விவசாயிகள் சார்புடைய ஒரு புரட்சிகர மக்கள் இயக்கம்) பயங்கரவாதத்தின் வழியில் கொண்ட மாற்றம், இத்தகைய வாதத்திற்கு ஒப்பாகத்தான் அமைந்திருந்தது.

மாஸ்கோ எதிர்ப்பு கொண்டிருந்த இளம் உள்ளங்களில் பயங்கரவாதத் தன்மை ஏன் இடம் பெற்றிருந்தது என்பதற்கான விடையை புறநிலைக் காரணிகளில்தான் பார்க்க முடியும். இந்தப் பிளவில் தொடர்புடையவர்கள், பயங்கரவாதம் அனுமதிக்கப்படவேண்டும் என்ற கருத்தை தெரிவித்தவர்கள், தங்களை போராட்டத்திற்கு முற்றிலும் தகுதி படைத்தவர்கள் என்று நினைத்திருந்தனர்.

இந்த உள்வாதத்தின் வெளிப்பாடு, பலாத்காரமுறையில் தடைப்பட்டது. 1951 ஜனவரி மாத நடுவில், குழுவில் பங்கு பெற்றிருந்தவர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். NKVD இந்த அமைப்பை அதன் ஆரம்பத்தில் இருந்தே கண்காணித்து வந்தது; இளைஞர்கள் கூட்டம் நடத்திய அடுக்கு இல்லம் முழுவதும் ஒற்றுக்கேட்கும் கருவிகளால் நிறைந்திருந்தது. கைது செய்யப்படுவதற்கு சற்று முன்பு, குழுவின் தலைவர்கள் ஒவ்வொருவரும் இரண்டிலிருந்து ஐந்து ஒற்றர்களால் பின்பற்றப்பட்டு வந்திருந்தனர்.

கைதானபின், இவர்கள் ஒருவரிமிருந்து மற்றவர் பிரிக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் தெரிந்த விவரத்தின்படி, NKVD இந்த அமைப்பு பற்றி ஆரம்பத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் அரசியல் நிலைமை இறுதியில் கணிசமாக மாறியது. NKVD உடைய தலைவரான Abakukov மற்றும் அவருடைய உள்வட்டம் வெளியே அனுப்பப்பட்டு, அதேநேரத்தில் மருத்துவர்கள் சதித்திட்டம் "Doctors Plot" (கிரெம்ளின் மருத்துவர்கள் குழு ஒன்று கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்களைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது) என்பதும் வெளிவந்தது. இத்தருணத்தில், செமிட்டிய எதிர்ப்பின் அடிப்படையில் "பரந்தநோக்குடன் போராட்டம்" என்ற திட்டத்தின்கீழ், 1930 களின் மாஸ்கோ விசாரணைகள் உணர்வுமுறையில் யூதர்களை பொதுவில் துன்புறுத்தி விசாரணை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. NKVD இன் புதிய தலைமை, ஸ்ராலினின் உத்தரவுகளின்படி, இந்தக் கைதுசெய்யப்பட்டிருந்த இளைஞர் குழுவை அத்தகைய பயங்கரவாத அச்சுறுத்தலுக்குச் சான்றாகப் பயன்படுத்த முடிவு செய்திருந்தது.

விசாரணை மேற்கொண்டவர்கள், குழுவின் உறுப்பினர்களை பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தயார் செய்து கொண்டிருந்தோம் என ஒப்புக்கொள்ளக் கட்டாயப்படுத்தினர். சில இளைஞர்கள் விசாரணை நடத்துபவர்களின் தந்திரங்களுக்குத் தாழ்ந்து போயினர். போரிஸ் ஸ்லட்ஸ்கியும் அவர்களில் ஒருவராவார். தன்னுடைய முடிவை நியாயப்படுத்தும் வகையில் அவர் கூறினார்: "இந்த விசாரணை விரைவில் முடிவதற்காக நான் இந்தப் பொய்யில் கையெழுத்திடுவேன்; பின்னர் ஒருகால் நான் ஏதேனும் ஒரு முகாமில் முடிவடைவேன். அங்கு பணியைத் தொடரும் வாய்ப்புடைய மக்கள், படிக்கக் கூடியவர்கள் இருக்கலாம்."

ஸ்ராலினிச ஆட்சியில் வன்முறை, இரக்கமற்ற தன்மை இவற்றின் முழு அளவையும் அவர் அறிந்திராததால், தான் சுட்டுக் கொல்லப்பட்டுவிடக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. 1952 பெப்ரவரி 7 லிருந்து 13 வரை, ஒரு வார காலம் நடைபெற்ற "புரட்சிக்கான போராட்டத்தின் ஒன்றியம்" பற்றிய விசாரணை தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பு மரணதண்டனையை மீண்டும் செயல்படுத்தும் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது.

Leftortovo சிறையின் அடித்தளத்தில் ஒரு பெரிய, நீண்ட அறையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. நான்கு வரிசைகளில், வரிசைக்கு நான்கு நாற்காலிகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்கு எதிராக ஒரு நீண்ட மேசைக்குப் பின் வயதான மூவர் ஜெனரல்களின் சீருடையில் அமர்ந்திருந்தனர் --USSR இன் தலைமை நீதிமன்றத்தின் போர்ப்பிரிவு உயரதிகாரிகளான அவர்கள் ஜெனரல் மேஜர் நீதிபதி டிமிட்ரீவின் தலைமையின் கீழ் அமர்ந்திருந்தனர்.

பெப்ரவரி 13-14 நள்ளிரவு வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், ஸ்லட்ஸ்கி, ஃபுர்மன் மற்றும் குரேவிச் மூவரும் "மிக உயர்ந்த தண்டனை" கொடுக்கப்பட்டனர். சூசன்னா பெச்சுரோவிற்கும் அதே தண்டனை என்றாலும் அது 25 ஆண்டுகள் சிறை என்று குறைக்கப்பட்டது. எஞ்சியுள்ள 12 பேரில் 9 பேர் 25 ஆண்டு சிறைத் தண்டனையும், 3 பேர்கள் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் பெற்றனர்.

மூன்று தலைவர்களுக்கும் கொடுக்கப்பட்ட மரணதண்டனை 1952 மார்ச் 26ம் தேதி, அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதன் மூலம், நிறைவேற்றப்பட்டது. மற்றவர்கள், இவ்விதியிலிருந்து தப்பி, 1956ம் ஆண்டு குருஷ்சேவின் ஆட்சியின் பொழுது நடந்த ஸ்ராலினிச வழிபாடு அகற்றப்படுதல் நெறியில், சிறைகளில் இருந்தும் முகாம்களில் இருந்தும் வெளியே வந்தனர். ஸ்ராலினிச எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கு பெற்றிருந்த தங்கள் நினைவை இயன்ற அளவு அவர்கள் பாதுகாத்து, தங்களால் முடிந்திருந்த அளவு இயல்பான வாழ்க்கையையும் மறுபடியும் தொடங்கினர்.

போருக்குப்பிந்தைய சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச எதிர்ப்பு

இத்தகைய ஸ்ராலினிச-எதிர்ப்புக் கருத்துக்கள் சோவியத் சமுதாயத்தில் தொழிலாளர்கள், மனித இயல் ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் சார்ந்த அறிவுஜீவிகள், இளைஞர்கள், பல்கலைக் கழக மாணவர்கள், பள்ளிமாணவர்களும் கூட என்று மிக வேறுபட்டிருந்த தட்டுக்களுள்ளும் அதிகமாகப் பரவியிருந்தன. பாசிசத்திற்கு எதிரான வெற்றி மாபெரும் விலை கொடுத்து அடையப் பெற்றிருந்தபோதிலும்கூட, சோவியத் குடிமக்களிடையே தங்கள் நாட்டின் விதியை தாங்கள் நிர்ணயிக்க முடிந்தது என்ற நம்பிக்கைக்கு வலுவூட்டியதில் முழு உணர்வைக் கொண்டிருந்தது.

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் நலன்களை இப்போக்குகள் நேரடியாகக் குறுக்கிட்டன; இந்த மக்கட்திரளின் கீழிருந்து வரும் ஆர்வத்தைத் தங்கள் பொருள் சார் சலுகைகளுக்கு ஓர் அச்சுறுத்தலாக அதிகாரத்துவம் கருதியது. 1940 களின் இறுதியில், ஸ்ராலினிச தலைமை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பெரும் அச்சுறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு, புதிய அடக்குமுறை நடவடிக்கைகளை எடுத்து, சலுகைபெற்றிருந்த சாதியின் ஆட்டம் கண்ட நிலைமையை வலுப்படுத்தும் முயற்சிகளை இலக்காகக் கொண்டது. இதன் விளைவு சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச எதிர்ப்புக் குழுக்கள் தொடர்ச்சியாகத் தோன்றியதும், கிழக்கு ஐரோப்பாவில் உழைக்கும் மக்களிடையே தோன்றிய அதிருப்தியின் வளர்ச்சியும் ஆகும். இறுதியில் இவை கிழக்கு ஜேர்மன் தொழிலாளர்கள் 1953ம் ஆண்டு கோடையில் கிளர்ச்சி செய்ததிலும், ஹங்கேரியத் தொழிலாளர்கள் 1956ல் கிளர்ச்சி செய்ததிலும் பிரதிபலித்தது.

1940 களிலும் 1950 களிலும் சோவியத்தில் எதிர்ப்புக்குழுக்களின் நடவடிக்கை பற்றிய பரந்த சித்திரம் இன்னும் வரையப்படவில்லை. நன்கு புலனாகியுள்ள சிந்தனையோட்டக் காரணங்களினால், சமீப காலத்தில் கவனம் "எதிர்ப்புப் பிரிவுகள் இயக்கங்கள்" பற்றி திரும்பியுள்ளது. ஆரம்பத்தில் இருந்து (1960 களின் நடுப்பகுதிகள்) இது கூடுதலான முறையில் முதலாளித்துவ ஜனநாயகத்தை நோக்கி நகர்ந்தது. இப்பாதையைப் பின்பற்றி, எதிர்ப்பு என்பது முதலாளித்துவ முறைதான் ஸ்ராலினிசத்திற்கு ஒரே மாற்று என்ற நிலையிலிருந்து, ஆரம்பத்திலிருந்தே ஸ்ராலினிசத்திற்கு வலது புறத்திலிருந்து விமர்சனமாக தானே மாற்றமடைந்தது. இத்தகைய நிலை பற்றிய வரலாறு சாகரோவ், சோல்ஜெனீட்சின் ஆகியோரின் வாழ்க்கைச்சரிதங்களில் காணப்படுகிறது; ஆனால் அதற்கு முந்தைய வரலாற்றளவில், ஸ்ராலினிசத்திற்கு சோசலிச எதிர்ப்பின் பொருள் பொதிந்துள்ள பெரும்பகுதிகள், பெரும்பாலும் சிதைந்த வடிவில், ஒரு பகுதி அளவில் மட்டுமேதான் கிடைக்கிறது.

உதாணமாக, "இளைஞர் கம்யூனிஸ்ட் கட்சி" என்று 1947ம் ஆண்டு Voronezh TM Chelyabinsk யில் நடந்த போருக்குப் பின் Y. Dinaburg தலைமையில் பள்ளி மாணவர்கள், இளைஞர்களைக் கொண்ட ஒர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய உதாரணங்களைப் பற்றி விரிவாக எழுதப்படவில்லை, அவற்றின் வரலாறு வருங்காலத்தல் ஒரு பணியாக உள்ளது.

பொதுவாக, இந்தக் குழுக்கள் அனைத்துமே நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை. ஸ்ராலினிச ஆட்சியின் கடும் அடக்குமுறை இவற்றை விரட்டியடித்து அதில் பங்கு பெற்றவர்களின் பணியை மிகக் குறுகியதாகச் செய்துவிட்டது. இருந்தபோதிலும், அத்தகைய முழு உணர்வுடன் மேற்கொள்ளப்பட்ட அமைப்புக்களின் முயற்சிகள் பல கருத்துக்களைத்தான் கூறுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, சோவியத் சமூகத்தில் உறுதியான நம்பிக்கையுடனும் தொடர்ந்தும் எதிர்ப்பு இருந்ததையும் நாட்டின் புத்துயிர்ப்பு அதிகாரத்துவத்தின் அதிகாரத்தை அகற்றுவதிலும், அக்டோபர் புரட்சியினால் இடப்பட்ட சமுதாயப் பொருளாதார அஸ்திவாரங்களைக் காப்பதிலும் இருந்தன என்பதை உணந்து இருந்தது தெரியவரும்.

1920களின் முதற் பகுதியிலிருந்து ட்ரொட்ஸ்கிச இயக்கம் பாதுகாத்துவத்த முன்னோக்கின் சாராம்சமாக இத்தகைய பார்வைகள், இயல்பாகவே சோவியத் மக்களிடம் இருந்திருந்தன. இந்த அர்த்தத்தில், ட்ரொட்ஸ்கிசம் என்று ஒருவர் பேசக்கூடியது நடைமுறை சமுதாய அரசியல் உண்மையுடன் தொடர்பு பெறாதிருந்த ஒரு கருத்துப்படிவம் அல்ல என்பதும், மாறாக சோவியத் மக்களின் ஆழ்ந்த நம்பிக்கைகளின் மிகத் துல்லியமான வெளிப்பாடாக இருந்தது என்பதும் தெரிய வருகிறது.

மாஸ்கோவில் இருந்த இந்த இளைஞர் குழுவின் தலைவிதி மிகவும் சோகத்திற்குரியது. ஆனால் அவர்கள் காட்டும் உதாரணம், ஸ்ராலினிசப் பிற்போக்கின் பெருந்துயரம் வாய்ந்த காலத்தில் கூட, சோவியத் இளைஞர்கள் தங்களிடையே உள்ள ஒர் தட்டின் மூலம் அதிகாரத்துவத்தின் ஆட்சியும், சோவியத் அதிகாரத்தின் சமுதாய அஸ்திவாரங்களும் இசைந்து செயல்படாதவை என்று அறிந்திருந்த தன்மையும், அத்தட்டு நாட்டை சோசலிசப் புதிப்பித்தலின் சாத்தியத்தில் தங்கள் நம்பிக்கையை உறுதியாகக் கொண்டு ஆட்சியை எதிர்ப்பதற்கும் அச்சப்படவில்லை என்பதையும் காட்டுகின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved