World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Behind the resignation of CIA Director George Tenet:

The Bush administration begins to break up

சிஐஏ- இயக்குநர் ஜோர்ஜ் டெனட் ராஜினாமாவின் பின்னணியில்:

புஷ் நிர்வாகம் உடையத் தொடங்குகிறது

By Patrick Martin
7 June 2004

Back to screen version

CIA இயக்குநர் ஜோர்ஜ் டெனட் திடீரென்று ஆனால் எந்த வகையிலும் வியப்பபுக்குரியதாக இல்லாத வகையில் ராஜினாமா செய்திருப்பது ஈராக்கில் அமெரிக்க தோல்விக்கு காரணமாக இருக்கின்ற முன்னணி அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்குவதில் ஆரம்பித்திருக்கும், புஷ் நிர்வாகத்தின் மிகத்தீவிரமான நெருக்கடியின் சந்தேகத்திற்கிடமில்லாத அடையாளமாக இருக்கிறது. மறைமுக இரகசிய நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரிவின் தலைவராக CIA -வில் பணியாற்றிவரும் James Pavit ஓய்வுபெறுகிறார் என்று அறிவிக்கப்பட்ட பின் சில மணிநேரத்திற்குள் டெனட் ராஜினாமா தொடர்ந்தது. Pavit -ன் துணை அதிகாரியான Stephen Kappes அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டிருப்பதாக டெனட் அறிவித்தார்.

Normondy- ல் இரண்டாவது உலகப்போரின்போது நேசநாடுகள் படை இறங்கியதை குறிக்கும் 60-வது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புஷ், ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை ஆரம்பிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் டெனட் -ன் ராஜிநாமா அவசரமாக அறிவிக்கப்பட்டது. ஜூலை 11-அன்று இந்த ராஜிநாமா செயலுக்கு வரும்.

டெனட்டிற்கும், புஷ்ஷிற்கும் இடையே காரசாரமான மோதல்கள் நடைபெற்ற பின்னர்தான் இந்த பதவி விலகல் நடந்திருக்கிறது என்பதை மறைக்க முடியாது. ஜனாதிபதியுடன் காரசாரமான வாக்குவாதங்களை நடத்திய பின்னர் ஜூன் 2- புதன்கிழமை இரவுதான் CIA இயக்குநர் தனது ராஜிநாமா கடிதத்தை கொடுத்தார் என்று சில தகவல்கள் தெரிவித்தன. மறுநாள் காலைவரை ஜனாதிபதி தனது ஊழியர்களுக்கு இதைத் தெரிவிக்கவில்லை, அன்று பிற்பகல்தான் பதவி விலகல் பகிரங்கமாக வெளிவந்தது.

புஷ் அரை குறையாக நான்கு பந்திகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டார். டெனட்டிற்கு பதிலாக மற்றொரு அதிகாரியை செனட் உறுதிபடுத்துகின்ற வரை CIA துணை இயக்குநர் John Mc Laughlin தற்காலிக இயக்குநராக பணியாற்றுவார் என்று புஷ் அறிவித்தார். துணை ஜனாதிபதி ரிச்சார்ட் செனி-க்கும், டெனட்டிற்கும் நீண்ட மோதல்கள் நிலவின. CIA இயக்குநர் ''மிக அற்புதமான பணியை'' செய்தார் என்று செனி மூன்று வாக்கியங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டார்.

நாடாளுமன்ற உள் விவகாரங்களை அறிந்த குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த இரு தரப்பினருமே டெனட் பதவியிலிருந்து நிர்பந்தமாக வெளியேற்றப்பட்டார் என்பதில் உடன்பட்டனர். குடியரசுக் கட்சி செனட்டர் Richard Shelby அடிக்கடி டெனட்டை கண்டிப்பவர். அவர் வெள்ளை மாளிகை பற்றி கருத்துத்தெரிவிக்கும்போது ''அங்கு எவரும் கண்ணீர் சிந்துபவர் இல்லை, பதவியிலிருந்து அவர் ஓரளவிற்கு உந்தித்தள்ளப்பட்டார் என்று நான் சந்தேகிக்கிறேன்'' என்று கூறினார். செனட் புலனாய்வு குழுவின் முன்னாள் தலைவரான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த செனட்டர் Robert Graham, புஷ் தனது சொந்த அரசியல் நிலைப்பாட்டை பாதுகாப்பதற்காக டெனட்-ஐ நீக்கிவிட்டார் என்று குறிப்பிட்டார். "மிக விரைவாக முடிந்தவரை அவரே ஒரு குற்ற சூழ்நிலையில் சிக்குகின்ற நிலையின் கீழ்" இவ்வாறு செய்திருப்பதாகவும், அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

டெனட் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான உடனடி சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் நிர்வாகம் அடி வாங்கியிருக்கிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. பாஸ்டன் குளோப் விமர்சனம் செய்திருப்பதைப்போல்: ''ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 5-மாதங்ளே உள்ளன. ஜனாதிபதி புஷ் ஈராக்கிலும், உள்நாட்டிலும் பெருகிவரும் சவால்களை ஒரு தற்காலிக CIA இயக்குநரைக் கொண்டு சமாளித்தாக வேண்டும், பாதுகாப்புத்துறை செயலரும் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை சந்தித்து சமாளித்துக் கொண்டிருக்கிறார். வெளியுறவு செயலாளர் முக்கிய நிர்வாகக் கொள்கைகளிலிருந்து தன்னை தூரத்தில் இருத்திக்கொண்டுள்ளார், நடைபெற்றுவருகின்ற குற்றவியல் புலனாய்வுகளில் பல துறைகள் கண்டனத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றன."

நகைப்பிற்குரிய அட்டைப்படக் கதை

தனது இளம் வயது மகனுக்காக அதிக நேரத்தை செலவிடப்போவதாக டெனட் காரணம் கூறியிருக்கிறார். அந்தப் பையன் இப்போதுதான் உயர் நிலைப்பள்ளியில் உயர் வகுப்பு படித்துக்கொண்டிருகிறார், விரைவில் கல்லூரிக்குச் செல்ல வேண்டும், எனவே டெனட் தந்துள்ள விளக்கம் நமது சராசரி அறிவையே இழிவுபடுத்துவதாக இருக்கிறது. புஷ்ஷின் கொத்தடிமை நண்பரான பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் மட்டுமே அதை தழுவிக்கொண்டார். BBC- க்கு பேட்டியளித்த பிளேயர் ''CIA -தலைவர் சொந்தக் காரணங்களுக்காக பதவியிலிருந்து சென்றுவிட்டார் என்று நான் சொல்ல விரும்புகிறேன். இதை அவரே மிகமிக தெளிவாக கூறிவிட்டார். எனக்குத்தெரிந்தவரை CIA இயக்குநர் முடிவிற்கும், ஈராக் 9/11- அல்லது வேறு எதற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை'' என்று கூறியிருக்கிறார்.

ஒரு நொடிப்பொழுது இந்த அதீதமானக்கருத்து உண்மையென்றே வைத்துக்கொள்வோம் அப்படியென்றால் புஷ் நிர்வாகம் சர்தேச அளவில் பயங்கரவாதத்தின் மீது போரில் ஈடுபட்டிருப்பதாகவும், அந்தப்போர் முடிவில் தான் உலகின் தலையெழுத்தே அடங்கியிருப்பதாகவும் கூறிவந்தது முட்டாள்தனமாக ஆகிறது. புஷ்ஷின் அண்மைக்கால உரைகளில், இந்தப்போர் இரண்டாவது உலகப்போர் காலத்தில் அமெரிக்கப்படைகளைத் திரட்டியதற்கு சமமானது என்று விளக்கியிருக்கிறார். இப்படிப்பட்ட தலைவிதியை நிர்ணயிக்கும் நேரத்தில் ஐசநோவர் தனது பொறுப்பான பதவியிலிருந்து "எனது குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடப் போகிறேன்" என்று பதவி விலகுவார் என்பதை எவராவது கற்பனை செய்து பார்க்க முடியுமா?

அமெரிக்கா மீது அல்கொய்தா புதிய நாசம் விளைவிக்கும் தாக்குதலை நடத்தும் என்று எதிர்பார்ப்பதாக பரபரப்பூட்டும் எச்சரிக்கை ஒன்றை அட்டர்னி ஜெனரல் John Ashcroft, FBI டைரக்டர் Robert Mueller- ம், நாடுதழுவிய தொலைக்காட்சி செய்தியாளர் மாநாட்டில் விடுத்த சில நாட்களில் டெனட் பதவி விலகினார். பாக்தாத்தில் அமெரிக்கா நியமித்துள்ள "இறையாண்மை" கொண்ட ஈராக் அரசாங்கத்திடம் சம்பிரதாய முறையில் அதிகாரமாற்றம் நடப்பதற்கு மூன்று வாரங்கள் இருக்கும் நிலையில் டெனட் பதவி விலகல் அறிவிப்பு வந்திருக்கிறது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அந்த நாட்டில் உண்மையான அதிகாரத்தை அமெரிக்க இராணுவ, தூதரக மற்றும் புலனாய்வு அதிகாரிகள்தான் தங்கள் கையில் வைத்திருப்பார்கள்.

இத்தகைய சூழ்நிலைகளில் டெனட் பதவியை உதறித்தள்ளியிருப்பது தீப்பிடித்த நேரத்தில் கடமையிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக எளிதாக சித்தரிக்க முடியும். அப்டியிருந்தும் அமெரிக்க ஊடகங்களில் அத்தகயை விமர்சனங்கள் வரவில்லை. என்றாலும் கனடாவில் உள்ள Globe & Mail ஜனநாயகக்கட்சி புலனாய்வுக்குழு உறுப்பினரான செனட்டர் Dianne Feinstein-னை மேற்கோள் காட்டி, அவர் தெளிவான உண்மையைத் தெரிவித்திருக்கிறார் என்று சுட்டிக் காட்டியது. ''இன்னும் சில மாதங்களுக்குள் ஜனாதிபதி தேர்தலில் நாம் ஈடுபட்டிருப்போம், நமது சொந்த நாட்டின் மீது மற்றொரு தாக்குதல் நடைபெறக்கூடும் என்பது தொடர்பாக பெரிய எச்சரிக்கை செய்யப்பட்டிருப்பதற்கு நடுவில் நிற்கிறோம். இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் புலனாய்வு குழுவின் தலைவர் ராஜினாமா செய்திருப்பது மிக வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையாகும்''

இந்த அதிகாரபூர்வமான அட்டைப்படக் கதையில் மற்றொரு பொருத்தமற்ற தன்மை உள்ளது. குடும்பக்காரணங்களால், பதவி விலகுவதாக டெனட் கூறியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் ஈராக்கில் மற்றும் ஆப்கானிஸ்தானில் பணியாற்றுகின்ற இராணுவ வீரர்கள் அல்லது போர் பிராந்தியங்களில் பணியாற்றுவதற்கு கட்டுப்பட்டவர்களுக்கு எந்தவிதமான விடுப்பும் கிடையாது என்று பென்டகன் கட்டளையிட்டது. பணி முடிவு தேதிகளில் வீடுகளுக்குத்திரும்ப வேண்டிய பல்லாயிரக்கணக்கான போர்வீரர்களுக்கு அவர்களது சேவைக்காலம் 18-மாதங்கள் நீடிக்கப்படுகின்ற அளவிற்கு இராணுவ அவசியம் ஏற்பட்டுவிட்டதாக அந்தக் கட்டளை சுட்டிக்காட்டுகிறது. சாதாரண சிப்பாய்களின் வாழ்வே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களது திருமணங்களை தள்ளிவைத்துவிட வேண்டும், குழந்தைகள், பிறப்பதை பார்க்க முடியாது, கல்லூரிகளில் திரும்ப படிக்கச்செல்லும் திட்டங்களை கைவிட்டு விட வேண்டும், சிவிலியன் பணிகளை ஏற்றுக்கொள்வதைத் துறந்துவிட வேண்டும். அத்தகைய தண்டனைகள் எதுவும் டெனட்டுக்கு பொருந்தாது. கீழ்நிலையிலுள்ள இராணுவ வீரர்கள் தங்களது விருப்பத்திற்கு மாறாக ஈடுபட வேண்டிய, அமெரிக்கப்போர் முயற்சியை உருவாக்கிய பிரதான சிற்பிகளில் ஒருவர் டெனட். வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் புஷ் நிர்வாகம் இதே இரட்டை அளவுகோலைத்தான் பயன்படுத்துகிறது. ஒன்று சாதாரண மக்களுக்காக, மற்றொன்று நிர்வாகத்தின் தலைமையில் இருப்பவர்களுக்காக.

நெருக்கடியில் உள்ள ஆட்சி

புஷ் நிர்வாகத்திற்கு பல்வேறு அரசியல், இராணுவ மற்றும் புலனாய்வு தோல்விகள், ஏற்பட்டபின்னர் டெனட் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். அல்கொய்தா உறுப்பினர்கள், அமெரிக்காவிற்குள் நுழைவது பற்றி -2001- செப்டம்பர் 11-ல் நியூயோர்க் நகரத்திலும், வாஷிங்டனிலும் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் பங்கெடுத்துக்கொண்ட இருவர் உட்பட கிடைத்த தகவல்கள் இது CIA நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டது. போயிங் 747- ஜெட் விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி பெறுவதற்கு முயன்ற அல்கொய்தா ஆதரவாளர் Zacarias Moussaoui 2001- ஆகஸ்டில் கைது செய்யப்பட்டது பற்றி டெனட்டிற்கு தகவல் தரப்பட்டது. அவர் இதனை வெள்ளை மாளிகையில் பயங்கரவாதத்திற்கு எதிர் நடவடிக்கை எடுப்பதுபற்றிய விவாதத்தில் எழுப்ப தவறிவிட்டார்.

களத்தில் இருந்த CIA ஏஜெண்டுகள் விரைவாக ஆப்கானிஸ்தானை வென்றெடுப்பதற்கு முக்கிய பங்களிப்பு செய்தனர். மலைவாழ் இன போர் பிரபுக்களை லஞ்சம் கொடுத்து வளைத்தனர், முக்கிய இலக்குகள் மீது போர் விமானங்களைக்கொண்டு அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு கட்டளையிடுவதில் இராணுவ கேந்திர அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்கினர். இந்தச் சூழ்நிலையில் நிர்வாகத்திற்குள் டெனட்டின் செல்வாக்கு உயர்ந்தது. ஆனால் CIA ஒஸாமா பின்லேடன் அல்லது தலிபான் தலைவர் முல்லா உமரை கண்டுபிடிக்கவோ, அல்லது கொல்வதற்கோ இயலாத நிலைக்கு தள்ளப்பட்டது. அந்த இருவரும் மூன்றாண்டுகளுக்கு பின்னரும் கூட இன்றைக்கும் தலைமறைவாகவே உள்ளனர்.

2002- அக்டோபரில் வெளியிடப்பட்ட ஈராக் தொடர்பான CIA தேசிய புலனாய்வு மதிப்பீடு வெளிப்படையான அரசியல் ஆவணமாகும். ஈராக்கில் அணு ஆயுதங்களை தயாரிப்பது அல்லது இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டதற்கான, சான்றுகள் எதுவுமில்லை, புஷ்ஷின் வெள்ளை மாளிகை போர் முயற்சியை ஆதரிக்கிற வகையில் "ஆதாரத்தை" தேடுவதை திருப்திப்படுத்த முடியாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்த கவலைகளை அந்த ஆவணம் ''அமுக்கிவாசித்தது.'' CIA - அறிக்கைகள் தெளிவில்லாமல் இருக்கின்றன என்று உணர்ந்து, துணை ஜனாதிபதி டிக் செனி சிஐஏ தலைமை அலுவலகத்திற்கு விஜயம் செய்து, ஈராக் மீது முன்கூட்டியே தாக்குதல் நடத்துவதற்கு அதிக அளவில் திருப்தியளிக்கின்ற விவரங்களைத்தருமாறு கேட்டுக்கொண்டார்.

ஈராக் மீது போர் தொடுப்பதை அங்கீகரிக்கும் நாடாளுமன்ற தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்று வலியுறுத்தி அந்த மாதம் சின்சினாட்டியில் புஷ் ஆற்றிய உரையை தயாரித்த புஷ்ஷின் உதவியாளர்களை, ஈராக், ஆபிரிக்காவில் அணு பெருாட்களை தேடுகிறது என்று சந்தேகத்திற்குரிய குறிப்பை புஷ்ஷின் உரையில் சேர்க்க வேண்டாமென்று டெனட் எச்சரித்தார். ஆனால் மூன்று மாதங்களுக்குப் பின்னர் நாடாளுமன்ற கூட்டுக்கூட்ட ஆரம்ப உரையில் புஷ் கருத்துக்களில் அது சேர்க்கப்பட்டது.

அண்மையில் Bob wood ward எழுதிய நூலின்படி, அதே காலத்தில் டெனட், புஷ்ஷிற்கும் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கும், CIA - ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக அறிக்கையிட்டதற்கு பின்னர், ஈராக்கிடம் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக சொல்வது "தூக்கி வீசப்பட்டது" என்று கூறியிருக்கிறார்.

பெப்ரவரி 2003-ல் வெளியுறவு செயலர் கொலின் பவல் ஐ.நா- பாதுகாப்பு சபையில் ஈராக்கிற்கு எதிரான பலமான குற்றச்சாட்டு என்று அவர் அழைத்துக் கொண்ட இழிவான முன்வைப்பை அவர் செய்தபொழுது அவருக்கு அடுத்துப் பின்னால் டெனட் அமர்ந்திருந்தார். அப்படி அவர் அங்கு அமர்ந்திருந்தது ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்தது பற்றியும் பயங்கரவாதத்தோடு உறவுகள் வைத்திருந்தது பற்றியும் அமெரிக்கப்புலனாய்வு அமைப்பிடம் மறுக்க முடியாத ஏற்றுக்கொள்ளக் கூடிய சான்றுகள் உள்ளன மற்றும் அவை அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும் சமிக்கை காட்டுவதாக இருந்தது

அமெரிக்க இராணுவம் ஈராக்கை மிக விரைவாக வெற்றிகொண்டமை டெனட் இன் வீழ்ச்சிக்கு ஆரம்பமாக ஆகிவிட்டது. அமெரிக்க புலனாய்வாளர்கள் ஈராக் முழுவதிலும் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் மூலை முடுக்கெல்லாம் துருவித்துருவி சோதனையிட்ட பின்னர் இரசாயனவியல், அல்லது உயிரியல் ஆயுதங்களுக்கான ஒரு சான்றைக்கூட கண்டுபிடிக்க இயலவில்லை அல்லது எந்த அணு ஆயுத அல்லது இரசாயனவியல் உயிரியல் ஆயுதங்களுக்கான எந்தப் பொருளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தமது வாதத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் ஈராக்கிய விஞ்ஞானிகளை கைதுசெய்து விசாரித்தனர், ஆனால் அவர்கள் அனைவருமே அமெரிக்காவின் கூற்றை மறுத்தனர்.

அதேபோன்று, சதாம் ஹூசேனுக்கும் அல்கொய்தாவிற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக சான்றுகள் எதுவுமில்லை, மாறாக பாத்திஸ்ட் ஆட்சி அழிக்கப்பட்டதால் முதல் தடவையாக அல்கொய்தா ஈராக்கிற்குள் பெரிய அளவில் தனது நடவடிக்கைகளை முடுக்கிவிட முடிந்தது.

ஈராக்கின் அரசியல் நிலவரம் தொடர்பாக CIA முற்றிலும் தவறான முடிவிற்கு வந்தது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கண்ணோட்டத்தில் மிகக்கடுமையான தவறாக முடிந்துவிட்டது. புஷ் நிர்வாகம் முன்கணித்தவாறு ஈராக் மக்கள் அமெரிக்கப்படையெடுப்பாளர்களை தங்களை ''விடுவிக்க வந்தவர்கள்'' என்று வரவேற்பதற்கு மாறாக அவர்கள் அமெரிக்கர்களை அலட்சியப்படுத்தினர், பகைமை பாராட்டினர் மற்றும் இறுதியாக ஆயுதந்தாங்கிய எதிர்ப்பில் பதில்கொடுத்தனர். சதாம் ஹூசைனின் சர்வாதிகாரத்தை காத்து நிற்க சில ஈராக்கிய விரும்பினர். ஆனால் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் பலர் இறங்கிறனர்.

2003- ஜூனில் புஷ் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் ஆபிரிக்காவில் ஈராக் யுரேனியத்தை தேடிவந்தது என்ற குற்றச்சாட்டு பொய் என்று அம்பலப்படுத்தப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டு ஒரு ஐரோப்பிய அரசாங்கம் தயாரித்த இட்டுக்கடிய ஆவணங்களை அடிப்படையாகக்கொண்டது. யுரேனியம் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக CIA - வின் அதிகாரபூர்வமற்ற தூதரக முன்னாள் தூதர் ஜோசப் வில்சன், நைஜர் விஜயம் மேற்கொண்டார். அமெரிக்க ஜனாதிபதி தனது உரையில் சேர்த்திருந்த அந்தக்கூற்று பொய் என்று அவர் அறிவித்தார். இதுதான் டெனட்டிற்கும் வெள்ளை மாளிகைக்கும் இடையில், நடைபெற்ற முதலாவது பகிரங்க மோதலாகும். யுரேனியம் தகவல் தவறானது அதை பயன்படுத்த வேண்டாமென்று புஷ்ஷின் உதவியாளர்களை தான் எச்சரித்ததாக CIA இயக்குநர் உறுதிப்படுத்தினார்.

ஈராக்கில் பாதுகாப்பு நிலவரம் சீர்குலைந்து கொண்டு வருவதோடு சேர்ந்து புஷ் நிர்வாகம் செப்டம்பர் 11-பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னரும் அதற்குப் பின்னரும் அதன் ஆவணங்களை விசாரணைக் கமிஷனின் விரும்பத்தகாத ஆய்விற்கு தரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மிக அண்மையில் தேசியக் கமிஷன் புஷ் நிர்வாகப் பதிவேடுகளை ஆராய்ந்தது. அதன் நியமனத்தை ஆரம்பத்தில் புஷ் எதிர்த்தார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்த விசாரணை கமிஷனின் விசாரணை நிகழ்ச்சிகளில் டெனட்-ஐயும் இதர தலைமை தேசிய பாதுகாப்பு அதிகாரிகளையும் விசாரணை கமிஷனர்கள் கடுமையாகக் விமர்சித்தனர்.

9/11 கமிஷனின் இறுதி அறிக்கை ஜூலை26-ல் வரவிருக்கிறது. அந்த அறிக்கையில் அமெரிக்க அரசாங்கத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் நிலவிய ஆழமான தொடர்புகள் மூடிமறைக்கப்படும்- அல்கொய்தா அமைப்பே, 1980-களில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற சோவியத் படையெடுப்பிற்கு எதிராக அமெரிக்கா ஆதரித்த கொரில்லாப் படைகளிலிருந்து கிளைவேர்விட்ட அமைப்புத்தான். ஆனால் அந்த இறுதி அறிக்கையில் செப்டம்பர் 11-க்கு முந்திய நாட்களில் CIA செய்த தவறுகள் பற்றி மிகக்கடுமையான மதிப்பீடு நிச்சயம் இடம்பெறும்.

சில பத்திரிக்கை தகவலின்படி, டெனட்டின் பதவி விலகுதலுக்கான கடைசி துருப்புச்சீட்டு, போருக்கு முந்திய ஈராக்கில் அமெரிக்க புலனாய்வு மற்றும் ஆய்வு தொடர்பாக செனட் புலனாய்வுக் குழுவின் வரைவு அறிக்கை வெர்ஜினியா, லாங்லியில் உள்ள டெனட்டின் அலுவலகத்திற்கு வந்திருக்கலாம் என்பதுதான். வெள்ளை மாளிகை கேட்க விரும்பியதை சொல்வதற்காக, வெள்ளை மாளிகை போருக்கான தரப்பை நிலைநாட்டுவதற்காக CIA, ஈராக் பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய சான்றுகளை திரித்து தகவல் கொடுத்ததென இந்த வரைவு அறிக்கை குற்றம் சாட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CIA இன் முன்னாள் துணை இயக்குநர் Richard J.Kerr, CIA உள் மதிப்பீட்டுக் குழுவிற்கு தலைமை வகித்தார், போருக்கு முந்திய CIA இன் ஈராக் செயல்பாட்டை அந்தக்குழு ஆராய்ந்தது. செனட் அறிக்கை, டெனட் பதவி விலகியதற்கு நிர்பந்தம் கொடுத்த ஓர் அம்சமாக இருக்கலாம் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார். அந்த அறிக்கையை மறுப்பதற்கு இறுதி வாய்ப்பு தருவதற்காக வியாழனன்று செனட் குழுவின் இரகசிய விசாரணையில் டெனட் கலந்து கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பதவி விலகல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர்தான் அந்தக்குழு முன் ஆஜராகும் நிகழ்ச்சியை டெனட் இரத்து செய்தார். ஜூன் 17-ல் அந்த அறிக்கை வெளிவரவிருக்கிறது.

யார் இந்த ஜோர்ஜ் டெனட்?

51-வயதான டெனட், CIA இயக்குநர் பதவிக்கு முற்றிலும் வழக்கத்திற்கு மாறான பின்னணியிலிருந்து வந்தவர். அவர் ஒரு புலனாய்வு அதிகாரியல்ல. அவரது சேவைக்காலம் முழுவதிலும் CIA இல் அல்லது இராணுவத்தில் பணியாற்றியவர் அல்ல, மாறாக நாடாளுமன்றத்தில் அவர் ஊழியராக பணியாற்றியவர். அவருக்கு முந்திய பலரைப்போன்று - Dulles, Helms, மூத்த புஷ் போன்ற New England மேட்டுக்குடியில் பிறந்தவர் அல்ல. நியூயோர்க் க்வீன்ஸ் பகுதியில் கிரேக்க நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த ஒரு உணவக உரிமையாளரின் புதல்வராவர்.

அவர் 1980-களின் மத்தியில் பென்சில்வேனியா குடியரசுக் கட்சி செனட்டராக பணியாற்றிவந்த காலஞ்சென்ற John Heinz -க்கு உதவியாளராக பணியாற்றச் சென்றார். அதற்குப் பின்னர் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த Vermont Patrick Leahy தலைமையில் செனட் புலனாய்வு குழுவில் பணியாற்றினார். 1987-ல் அன்றைய தலைவர் பழமைவாத, Oklahma ஜனநாயகக் கட்சிக்காரர் David Boren தலைமையிலான செனட் புலனாய்வு குழுவின் அலுவலக டைரக்டராக நியமிக்கப்பட்டார். அவரை செனட்டில் முன்மொழிந்தவர் Boren. இன்றைய ஜனாதிபதியின் தந்தை ஜனாதிபதி «ஜார்ஜ் H.W. புஷ் தாக்கல் செய்த CIA -டைரக்டர் நியமன பதவியை ரொபேர்ட் கேட்ஸ் பெறுவதற்கு அவர் பிரதான பங்களிப்புச் செய்தார்.

1993-ல் கிளிண்டன் நிர்வாகம் பொறுப்பேற்றதும் டெனட் தேசிய பாதுகாப்பு கவுன்சில் பொறுப்பிற்கு உயர்த்தப்பட்டார். புலனாய்வு நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அவர் PDD 35- ஆவணத்தை தயாரித்தார். 1990-கள் முழுவதிலும் இந்த ஆவணம் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கைகளுக்கு அடிப்படையாக அமைந்தது. 1995 தொடக்கத்தில் அவர் CIA துணை டைரக்டராக நியமிக்கப்பட்டார். அந்த அமைப்பில் முதல் தடைவையாக நுழைந்து, இயக்குநர் John Deutch தலைமையில், இரண்டாவது இடத்தித்திற்கு வந்தார்.

ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியோடு செனட்டில் தொடர்புகள் இருந்ததால் டெனட்டிற்கு இரகசிய நடவடிக்கைகள் அல்லது புலனாய்வு ஆய்வுகளில் அனுபவம் இல்லாவிட்டாலும், அவர் எளிதாக இயக்குநர் பதவியில் நியமிக்கப்பட முடிந்தது. அமெரிக்க புலனாய்வு அமைப்பின் வரலாற்றில் இதற்கு முன்னர் இவ்வளவு வேகமாக பதவி உயர்வு பெற்று உச்சாணிக்கு சென்றவர் எவருமில்லை. அத்தகைய ஒரு நிலையை அவர் அடைவதற்கு அவருக்கு என்ன தெரியும் அல்லது யாரை அவர் அறிவார் என்ற விடையளிக்கப்படாத பல கேள்விகளை எழுப்புகிறது.

ஈராக்கில் சதாம் ஹூசைனுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பை தூண்டிவிடுகின்ற முயற்சியில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த ஏஜென்சியின் தலைமைப் பொறுப்பிற்கு அவர் வந்தார். அந்த ஏஜென்சி ஈராக்கிலிருந்து நாடு கடத்தப்பட்ட பலரை தங்களது முன்னணி உளவாளிகளாக பயன்படுத்தியது. அப்படி முதலில் CIA- ஆல் பயன்படுத்தப்பட்ட அகமது சலாபி, பாத்கட்சி ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்னர், ஈராக் மன்னர் ஆட்சியில் மேட்டுக்குடியில் பிறந்த அவர், பின்னர் ஜோர்தான் வங்கி மோசடியில் தண்டிக்கப்பட்டவர் ஆவார். சலாபி அமெரிக்க ஆதரவோடு ஈராக்கிய தேசிய காங்கிரஸ் (INC) ஐ- நிறுவியவராவர். ஆனால் பின்னர் மார்ச் 1995-ல் அவரது ஒரு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் கிளிண்டன் நிர்வாகத்தோடு மோதுகின்ற நிலைக்கு வந்தார்.

திடீரென CIA சலாபியை கைவிட்டுவிட்டு இயாட் அல்லாவிக்கு தனது ஆதரவை தந்தது. அவர் பாத் கட்சியின் முன்னாள் உறுப்பினர், பின்னர் ஈராக்கிலிருந்து தப்பி ஓடி சதாம் ஹூசைனோடு முறித்துக்கொண்டார். அதேநேரத்தில் இராணுவ அதிகாரிகள் வட்டாரத்தில் தனது தொடர்புகளை நிலைநாட்டிவந்தார். CIA, அல்லாவியை ஒரு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் நிலைக்கு கொண்டுவந்தது. ஆனால் 1996-ல் பாத் ஆட்சியின் இரகசியப் போலீசார் அந்த சதியைக் கண்டுபிடித்தனர். பாக்தாத்தில் அதில் கலந்துகொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். சல்லாபி, தோவியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை, தனது எதிரி அல்லாவியை இழிவுபடுத்துவதற்காகவும் தனது முந்திய CIA ஆதரவாளர்கள் ஆதரவைப் பெறுவதற்காகவும் விவரமாக பிரசுரித்தார்.

ஈராக்கில் பல்வேறு தோல்விகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து 1997- ஜனவரியில் Deutch பதவி விலகினார். டெனட் தற்காலிக இயக்குநரானார். கிளிண்டன் வெள்ளை மாளிகை, பதவிக் காலம் முடிந்து சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Anthony Lake-ä CIA இயக்குநராக நியமித்தது. அரவது நியமனத்தை குடியரசுக் கட்சிக்காரர்கள் எதிர்த்து வந்ததால் பல மாதங்கள் நியமனம் தாமதப்பட்டது. 1995-ல் சல்லாபி தலைமையில் ஆட்சிக்கவிழ்ப்பு நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தத் திட்டத்தை இரத்து செய்ததில் லேக்-ன் பங்களிப்பை கருத்தில் கொண்டு இந்த எதிர்ப்பு நிலவியது. நிர்வாகம் தனது நியமன முயற்சியை கைவிட்டது, லேக் வாபஸ் வாங்கிக்கொண்டார். டெனட் அவசரமாக அவருக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு மிகவிரைவாக நியமன அங்கீகாரத்தைப் பெற்றார். 1997- ஜூலை 11-ல் டெனட் பதவியேற்றார்.

கிளிண்டன் நிர்வாகத்தில் டெனட் குறிப்பாக இரண்டு குற்றங்களோடு சம்மந்தப்பட்டிருந்தார். சூடான் தலைநகர் கார்ட்டூமில், ஒசாமா பின்லேடனுக்குச் சொந்தமானது என்று கூறப்பட்ட இரசாயன ஆயுதங்கள் தயாரிப்பு தொழிற்சாலை மீது 1998- ஆகஸ்டில் CIA குறிவைத்தது. அமெரிக்க ஏவுகணை ராக்கெட் மூலம் அந்தக் கட்டடத்தை அழித்துவிட கிளிண்டன் கட்டளையிட்டார். Kenya- விலும், Tanzania விலும் அமெரிக்க தூதரகங்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடைபெற்ற பின்னர் அந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட பின்னர் அது சூடானின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு தொழிற்சாலையென்றும், பயங்கரவாதம் அல்லது இரசாயனவியல் ஆயுதங்களோடு அந்தத் தொழிற்சாலைக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லையென்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் யூகோஸ்லேவியாவிற்கு எதிராக விமானப்போர் நடைபெற்றபோது, அமெரிக்கப்போர் விமானங்கள் குண்டு வீச்சுத்தாக்குதல்களை நடத்துவதற்கு CIA- ஒருங்கிணைப்பு தகவல்களை வழங்கியது. இதன் விளைவு பெல்கிரேடில் சீன தூததரக அலுவலகம் சிதைக்கப்பட்டது. இந்தப்போர் முழுவதிலும் CIA- தேர்ந்தெடுத்த ஒரே இலக்கு அந்தத்தூதரகம், அது ''ஒரு தவறு'' என்று CIA- கூறிற்று. ஆனால் போருக்கு பிந்திய தகவல்கள், யூகோஸ்லாவியாவின் சொலோபோடன் மிலோசெவிக் ஆட்சிக்கு இராணுவ தந்திர முக்கியத்துவம் நிறைந்த தகவல்களை சீனா வழங்கிவந்ததால் அந்நாட்டை எச்சரிப்பதற்காக திட்டமிட்டு தூதரகம் தாக்கப்பட்டது என்று கூறுகின்றன.

1999-TM Langley- ல் உள்ள புதிய CIA தலைமை அலுவலகக் கட்டிடத்திற்கு H.W- புஷ் கட்டிடம் என்று டெனட் பெயர் சூட்டினார். அந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி கலந்து கொண்டார். இப்படி முன்னாள் ஜனாதிபதியை முகஸ்துதி செய்தமை பின்னர் அவருக்குப் பயன்பட்டது. ஜோர்ஜ் w. புஷ் ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் கிளிண்டன் நிர்வாகத்தில் இடம்பெற்றிருந்த டெனட் ஒருவர்தான் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டவராவர். டெனட் நியமனத்தை மூத்த புஷ் ஆதரித்ததாக கூறப்படுகிறது.

டெனட்டும் சலாபி விவகாரமும்

ஈராக்கில் பெருகிவரும் கிளர்ச்சி எழுச்சி மற்றும் போரை நியாயப்படுத்துவதற்கான எல்லா சாக்குபோக்குகளும் பொறிந்து போனமை அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பிற்குள் கடுமையான மோதல்களை தூண்டி விட்டன. வெளியுறவுத்துறை செயலர் கொலின் பவல் போருக்கு முந்திய தவறான புலனாய்வு மதிப்பீடுகளை தந்ததற்காக டெனட்டை கண்டித்தார். அபு கிரைப் சிறைச்சாலை சித்திரவதைகளுக்கு யார் பொறுப்பு என்பது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் டொனால் ரம்ஸ்பீல்ட் தந்த தகவலுக்கு முரண்பட்ட வகையில் அறிக்கைகள் கொடுத்தமை தொடர்பாகவும் மோதல்கள் எழுந்தன. அபு கிரைபில், CIA-ம், இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் கைதிகளை முறைகேடாக நடத்தினர். அஹமது சலாபியின் மோசமான விவகாரங்கள் தொடர்பாக துணை ஜனாதிபதி செனி மற்றும் பென்டகன்- சிவிலியன்கள் அதிகாரிகள் பலரோடு மோதுகின்ற நிலைக்கு டெனட் வந்தார்.

மூன்று வாரங்களுக்கு முன்னர் ஈராக்கிய போலீசார், அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்கள் Dyn Corp நிறுவனத்திலிருந்து வந்தவர்கள் தலைமை தாங்கிச்செல்ல ஆயுதந்தாங்கிய அமெரிக்கப்போர் வீரர்களின் பாதுகாப்போடு சலாபியின் வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். அவர்கள் INC உறுப்பினர்கள் திருட்டு மோசடி, ஆட்கள் கடத்தல் மற்றும் கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்டிருப்பது குறித்து தகவல்களை கண்டுபிடிப்பதற்காக சோதனை நடத்தினர். அதே நேரத்தில் வாஷிங்டனில் உள்ள புலனாய்வு அதிகாரிகள் ஈரானிலுள்ள அடிப்படைவாத ஆட்சிக்கு இரகசியத் தகவல்களை தெரிவித்ததாக சலாபி மீது விசாரணை நடைபெற்றுவருவதாக தெரிவித்தனர். ஈரானோடு சலாபி நீண்டகாலமாக நட்புறவு கொண்டிருப்பவர்.

சென்றவாரம் குற்றச்சாட்டுக்கள் மிகவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டன. வாஷிங்டன் சூழ்நிலை மிகவும் ஆபத்தானதாக சென்றது. CIA- அதிகாரிகள் சாலாபி மீதான குற்றச்சாட்டுக்களை விவரித்தனர். அமெரிக்க அரசாங்கம், பாக்தாத்திலிருந்து டெஹ்ரானுக்கு ஈரான் உளவாளிகள் அனுப்பிய இரகசிய குறிப்பு முறையை தெரிந்துகொண்டுவிட்டதாக ஈரானுக்கு சலாபி தெரிவித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். மேலும் இந்த இரகசியத் தகவல் வெளியானதற்கான மூலம் பென்டகனில் உள்ளது என்றும் நம்பப்பட்டது. மிக உயர்ந்த கணினிகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை நேரடியாக தெரிந்திருக்கிற ஒரு சில பென்டகன் அதிகாரிகளை FBI எதிர் உளவு பிரிவைச்சார்ந்த அதிகாரிகள் விசாரித்தனர்.

சலாபியும் அவரை ஆதரிப்பவர்களான Richard Perle போன்றவர்களும் 1990-களின் நடுவில் ஏற்பட்ட மோதல்களுக்காக சலாபியை அழித்துவிடுவதற்கு CIA- முயன்று வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். Perle பென்டகன் ஆலோசனை வாரியத்தின் முன்னாள் தலைவரும் முன்னணி புதிய கன்சர்வேட்டிவ் உம் ஆவார். தற்போது 2004-பாக்தாத்தில் பழைய தகராறுகள் ஒரு முடிவிற்கு வருகின்றன. CIA- இன் அன்பிற்கு பாத்திரமான அல்லாவி புதிய ஈராக் அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்த அரசாங்கத்திடம் ஜூன் 30-ல் அமெரிக்கா ஆக்கிரமிப்பு நிர்வாகம் இறையாண்மையை ஒப்படைக்கப் போவதாக கூறப்படுகிறது. ஈராக் ஆளும் கவுன்சில் கலைக்கப்பட்டுவிட்டது. அதில் அமெரிக்காவினால் சலாபி நியமிக்கப்பட்டார். இப்போது புதிய ஆட்சியில் அவருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. எனவே சலாபி வெளியேறுவதற்காக மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டிருக்கிறார்.

அல்லாவி நியமனம் மற்றும் சலாபி இழிவுபடுத்தப்பட்டது, CIA-இற்கு வெற்றி என்று கருதப்படுமானால், அதற்கடுத்து டெனட் பதவியிலிருந்து உடனடியாக விலகியிருப்பது அதிக விலைகொடுத்து பெறும் வெற்றி போன்றது அல்லது வாஷிங்டனில், பழைய காலத்து மன்னர்களது தர்பார் மண்டபங்களில் போர்ஜியாக்கள் (Borgias) அல்லது ரொமனோவ்கள் (Romanovs) காலத்தில் நடைபெற்ற சூழ்ச்சிகள், சூதுவாதுகளை எதிரொலிப்பவையாக இருக்கின்றனவே தவிர, ஒரு ஜனநாயகக் குடியரசின் தலைநகரில் நடக்கிற நிகழ்ச்சியைப் போன்று தோன்றவில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved