World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : ஈராக்Inside Fallujah: An insightful report on US atrocities against Iraqi civillians பல்லூஜாவிற்குள்ளே: ஈராக் மக்களுக்கு எதிரான அமெரிக்க அட்டூழியங்கள் பற்றிய தெளிவான அறிக்கை By Mike Ingram ஒரு சுதந்திரமான பத்திரிகை நிருபரான டாரா சட்டனால் (Tara Sutton) தயாரிக்கப்பட்ட சிறப்பு செய்தி விவரணம் ஒன்று அண்மையில் Channel Four News ல் ஒளிபரப்பாகியது. பல்லூஜா நகரை அமெரிக்கப்படைகள் முற்றுகையிட்டிருந்த நிலை முடிவிற்கு வந்ததும், ஏப்ரல் 30 ல் பல்லூஜாவிற்கு நுழைந்த பத்திரிகையாளர்களின் முதல் அணியில் சட்டனும் ஒருவராக இருந்தார். அதற்குப் பின்னர் சட்டன் பலமுறை அந்த நகருக்கு சென்று வந்துள்ளார். இந்த சிறப்பு செய்தி ஒளிபரப்பை அறிமுகப்படுத்திய அறிவிப்பாளர் ஜோன் ஸ்நோ (John Snow) இதுபற்றிக் கூறியபோது: ''இந்த வார துவக்கத்தில் ஜனாதிபதி புஷ் தனது முக்கிய உரையில் பல்லூஜா போரின் முக்கியத்துவத்தை உணர்ந்து அமெரிக்க துருப்புக்களை பாராட்டினார். அங்கு அவர்கள் 'மிகப்பெருமளவில் தாக்குதல்கள்' நடத்துவதை தவிர்த்து கிளர்ச்சியைச் சமாளித்ததாகவும், அப்படி தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தால் உள்ளூர் மக்களிடம் மனமுறிவை ஏற்படுத்தியிருக்கும் என்று புஷ் குறிப்பிட்டார். ஆனால், அங்கு நாங்கள் கண்ட உண்மைகள் அவர் கூறிய கருத்துக்களுக்கு ஆதாரமாக இல்லை''. சட்டனின் சிறப்பு செய்தி அறிக்கையானது, நான்கு அமெரிக்க இராணுவ ஒப்பந்தக்காரர்களின் மரணத்தில் தொடங்குவதுடன், பல்லூஜா நகரத் தெருக்களில் மகிழ்ச்சிக் கூத்தாடிய ஈராக்கியர்கள் பின்னணியில் காட்டப்படுகின்றது. அந்தக் கொலைகள் மற்றும் பொது இடங்களில் அந்த சடலங்கள் காட்டப்பட்டதை, ஒரு சாக்குப்போக்காக உடனடியாக எடுத்துக்கொள்ளப்பட்டு அந்த நகரத்தின் மீது மிகப்பெருமளவில் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. மற்றும் அமெரிக்க கடற்படையினர் நடாத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஈராக்கிய மக்கள் கொல்லப்பட்டபோதும், இறுதியில் அங்கிருந்து அமெரிக்க இராணுவம் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ''இந்த சாவுகள் நடந்து சில மணிநேரத்திற்குள், இந்த நகரத்தின் பெயரே காட்டு மிராண்டித்தனத்தின் மறுபெயர் என்று கருதப்பட்டது. சிலமணி நேரத்திற்குள் அமெரிக்க இராணுவத்தின் சீற்றம் முழுவதும் இந்த ஈராக் போராளிகள் மீது திரும்பியது'' என்று சட்டன் கூறினார். ஈராக்கை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியுமா என்ற அமெரிக்காவின் உண்மையான சோதனைக் களமாக, பல்லூஜா நகரத்தின் தோல்வி எடுத்துக்காட்டியது என்று இந்த நிருபர் கூறுகிறார். ''அந்த 26 நாள் சண்டையில் வெளியில் தெரியாத சிறிய சம்பவங்களை சேகரிப்பதற்காக Channel Four News பல்லூஜாவிற்கு சென்றது'' ''இத்தகைய அடிப்படை வெறுப்பிற்கு சிலரை இட்டுச்சென்றதற்கான காரணம் என்ன?'' என்று அவர் மேலும் கேட்டார். பல பல்லூஜா நகர மக்களின் உறவினர்கள் அபு கிரைப் சிறைச்சாலையில் சித்தரவதை மற்றும் முறைகேடுகளுக்கு உள்ளாகிய சம்பவங்கள் 2003 ஆகஸ்ட் ஆரம்பத்திலேயே பரவியது என்ற உண்மையை அவர் கூறுகிறார். அத்தோடு, சென்ற ஆண்டு ஏப்ரலில் அமெரிக்காவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது, அமெரிக்கத் துருப்புக்கள் சுட்டதில் 17 பல்லூஜாவின் மக்கள் பலியானதையும் அந்த நிருபர் நினைவுபடுத்துகிறார். ''இந்த உள்ளடகத்தில்தான் மார்ச் 31 ல் நடைபெற்ற சம்பவங்கள் எடுத்துக்காட்டின. இந்தக்காட்சிகள் அமெரிக்க மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது'' என்று அவர் கூறுகிறார். இந்த சிறப்பு செய்திப்படம் அமெரிக்காவில் உண்மையான மக்கள் கருத்து என்ன என்பதை தெளிவுபடுத்த தவறிவிட்டது. அந்தக்கொலைகளை காட்டுமிராண்டி செயல் என்று கண்டித்த பாக்ஸ் நியூஸ் (Fox News) மற்றும் இதர அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களை குவிமையப்படுத்தித்தான் இந்த செய்திப்படம் ஒளிபரப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற செயல்கள் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் ஈராக்கில் புரிந்த அட்டூழியங்களை மிகக்கொடூரமாக கண்டிப்பதாக அமைந்திருகின்றன. அந்த காட்சிகளுக்கு நடுவே அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகளும் வெளியிடப்பட்டன. பிரிகேடியர் மார்க் கிம்மிட் (Mark Kimmitt) இக்கொலைகள் நடந்த மறுநாள் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் பொதுமக்களுக்கு உரிய மரியாதை தரப்படும் என்று கூறியிருந்தார். ''இப்படி கிம்மிட் பேசிக் கொண்டிருக்கும் போதே 13,000 கடற்படையினர் இந்த நகரை சுற்றி வளைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. அத்துடன் 300,000 மக்களைக் கொண்ட இந்த நகரம் வெளி உலக தொடர்புகளிலிருந்து துண்டிக்கப்பட்டது'' என்று சட்டன் தெரிவித்தார். ஈராக் மக்கள் மீது கவலை கொண்டிருக்கிறோம் என்ற கிம்மிட்டின் கூற்றை மறுக்கின்ற வகையில் ஏப்ரல் 5 ல் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட தாக்குதல்களை சட்டன் மேலும் விவரிக்கிறார். ''இந்த நகரத்தின் மீது குண்டு வீசுவதற்காக ஹெலிகாப்டர் மற்றும் F16, F18 ரக போர் விமானங்களும் பயன்படுத்தப்பட்டன.... அமெரிக்காவிற்கு எதிரான போராளிகள் பதுங்கியிருப்பதாக நம்பப்பட்ட வடமேற்கு விளிம்பிலுள்ள புறநகரான ஜூலனில் (Julan) மக்கள் நெரிசலாக வாழ்ந்து வரும் பகுதியில் குறிவைத்து இத்தாக்குதல்கள் நடைபெற்றன. ''நாங்கள் திரும்ப பல்லூஜாவிற்கு சென்றபோது அமெரிக்க இராணுவத்தின் உறுதிமொழிக்கு முரணான கலவரமூட்டும் சான்றுகளைக் கண்டோம். ஜூலனில் நடைபெற்ற குண்டுவீச்சானது குறிப்பிட்ட இலக்கிற்கு என்று நடத்தப்படவில்லை'' என்று சட்டன் கூறினார். புறநகர் பகுதியில் ஆறு குழந்தைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிற முட்டகா மற்றும் அலி அபாஸ், என்பவர்கள், இத் தாக்குதல்களின் துயரமிக்க சம்பவங்களை விவரித்துள்ளனர். ''எமது வீட்டிற்கு பின்னால் ஒரு சந்தை இருக்கிறது..... அங்குதான் குண்டுவீச்சு துவங்கியது. ஒரு கார் அங்கே சுற்றி வந்து கொண்டிருந்தது. அமெரிக்கர்கள் மீது அந்த காரில் இருந்தவர்கள் சுட்டபோது, அமெரிக்கர்கள் வீடுகள் மீதும், பள்ளிக்கூடங்கள் மீதும் குண்டு வீசினார்கள். அது மனம்போனபோக்கில் நடத்தப்பட்ட தாக்குதல்'' என்று முட்டகா கூறினார். ''நகரம் சுற்றி வளைக்கப்பட்டுவிட்டது. பல்லூஜா மக்களும், போராளிகளும் இப்போது ஒரே தெருக்களில் சிக்கிக்கொண்டனர்'' என்று சட்டன் கூறினார். இதனைத் தொடர்ந்து கிம்மிட் தெரிவிக்கையில் ''இதில் எங்களது வழி முறைகளுக்கு மாறாகவே ஒவ்வொரு நடைமுறையையும், ஒவ்வொரு தொழில்நுட்ப, தந்திர நடவடிக்கைகளையும் ஈராக் மக்கள் மற்றும் கூட்டணிப் படைகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிராக ஒருங்கினைத்தோம். அத்துடன் போரில் கலந்து கொள்ளாதவர்கள் முடிந்தவரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற வகையிலேயே நடவடிக்கை எடுத்து வந்தோம்'' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அலி அபாஸ் இந்தக் கூற்றை மறுத்தார். ''ஒரு போராளி சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அவர் எங்கே போவார்? குடியிருப்புப் பகுதியில்தான் அவர் தஞ்சம் புகுவார். அதை அமெரிக்கர்கள் தெரிந்து கொண்டு அங்கு குண்டுவீசி தாக்கினர்'' என்று அவர் கூறினார். அமெரிக்காவின் குண்டுவீச்சினால் ஏற்பட்ட பயங்கர விளைவுகள் பற்றிய இதர விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்கர்கள் வீதித் தடைகளில் வெளியேறிச்செல்ல முயன்ற பல்லூஜா மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, மீண்டும் அவர்களது வீடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டதால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ''அமெரிக்கர்கள் வீதிகளை அடைத்துவிட்டனர். எனவே நாங்கள் வெளியேறிச் செல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறையும் எனது கணவர் வெளியேறிச் செல்ல முயன்றபோதும் அவரை அமெரிக்கப்படைகள் அனுமதிக்கவில்லை'' என்று முட்டகா அபாஸ் கூறினார். நகரத்தின் இரண்டு பிரதான பாலங்களையும் அமெரிக்க துருப்புக்கள் மூடிவிட்டார்கள். இதனால் மக்கள் நகரின் பிரதான மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டனர். இப்படிச் செய்ததன் மூலம் ''அமெரிக்கர்கள் நான்காவது ஜெனீவா ஒப்பந்தத்தை நேரடியாகவே மீறுகின்ற வகையில் செயல்பட்டனர். இதனால் கொடூரமான விளைவுகள் ஏற்பட்டதுடன் மடிந்தவர்களின் தொகையும் அதிகரித்தது'' என்று சட்டன் குறிப்பிட்டார். அமெரிக்க கூலிப்படையினர் கொலை செய்யப்பட்ட பின்னர் வெளியூருக்கு சென்றிருந்த பல்லூஜா பொதுமருத்துவமனை தலைமை சத்திரசிகிச்சை மருத்துவர் டாக்டர் கமால் அல் அனி திரும்பி வர முயன்றார். ஆனால், மூன்று நாட்கள்வரை வீதித் தடைகளால் அவர் திரும்ப முடியவில்லை. அதற்குப்பின்னர் அவர் மருத்துவமனையின் பொது இயக்குநருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமைகளைக் கேட்டார். அது படுபயங்கரமான தகவலாகும். மருத்துவமனைக்குள் எங்களை நுழைவதற்கு அவர்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்றும், மருத்துவமனையின் எந்தக் கருவியையும் மாற்றுவதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். ''இந்த விளைவுகளை எனது வாழ்க்கையில் எந்தக்காலத்திலும் மறக்க முடியாது'' என்று டாக்டர் கமால் கூறினார். இப்படி தொடர்புகள் துண்டிக்கப்பட்ட மருத்துவமனையில் முற்றிலும் நான்கு கருவிகள் பொருத்தப்பட்ட தயார் நிலையிலிருந்த அறுவை சிகிச்சை பிரிவுகள் காலியாகக் கிடந்தன. அதே நேரத்தில் கடுமையாக காயம்பட்டவர்களை தற்காலிகமாக உருவாக்கப்பட்ட மூன்று மருந்தகங்களில் சிகிச்சையளிக்குமாறு அமெரிக்க இராணுவத்தினர்களால் டாக்டர்கள் நிர்பந்திக்கப்பட்டனர் என்று சட்டன் தெரிவித்தார். ''இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு மிருகத்தைக் கூட அறுவை சிகிச்சை செய்வதற்கு டாக்டர்கள் சம்மதிக்கமாட்டார்கள். ஆனால் நாங்கள் செய்தோம். அங்கு செய்ய வேண்டும். அல்லது வெளியில் நிறுத்தியிருந்த ஒரு வண்டியில் மயக்க மருந்து கூட இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்'' என்று டாக்டர் கமால் கூறினார். ஈராக்கிலிருந்து குறிப்பாக அரபுத் தொலைக்காட்சியான அல் ஜெசீரா விலிருந்து கிடைத்த படுபயங்கரமான தகவல்கள் குறித்து அமெரிக்க நிர்வாகத்தின் அணுகுமுறையை இந்த செய்தி அறிக்கை அம்பலப்படுத்துகிறது. அந்த நேரத்தில் பல்லூஜா நகரில் அல் ஜெசீரா ஒளிபரப்பு நிலையம் ஒன்றுமட்டுமே செயல்பட்டு வந்தது. எனவே வெளி உலகிற்கு அங்கு நடப்பது என்ன? என்பதே தெரியாமல் இருந்தது. ஏப்ரல் 7 ல் அந்த ஒளிபரப்பு நிலையம் அமெரிக்க குண்டுவீச்சினால் ஏற்பட்ட கலவரமூட்டும் காட்சிகளை ஒளிபரப்பியது. தற்காலிகமாக உருவாக்கப்பட்ட மருத்துவ நிலையத்தின் முன் டசின் கணக்கில் உடல்கள் கிடப்பதைக்காட்டியது என்று சட்டன் விளக்கினார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 26 பேர் இந்த குண்டுவீச்சில் பலியானார்கள். இப்படி மக்கள் பலியாவது குறித்து கிம்மிட்டிடம் கேட்கப்பட்டபோது, அது அல் ஜெசீரா செய்தி ஸ்தாபனத்தின் பிரச்சாரம் என்று அவர் தள்ளுபடி செய்தார். அதற்குப்பின்னர் சிறப்பு அறிக்கையில் கிம்மிட் பத்திரிகையாளர்களை நோக்கி ''அந்த அலைவரிசையை மாற்றுங்கள். நியாயமான, அதிகாரப்பூர்வமான, நேர்மையான, செய்தி தருகின்ற தொலைக்காட்சியைப் பாருங்கள்'' என்று கூறினார். கிம்மிட் இவ்வாறு குறிப்பிட்டது ஈராக்கியர்களின் கோபத்தை கிளறுவதாகவே அமைந்துவிட்டது. ஏனெனில் அந்த மக்கள் படுபயங்கரத்தை நேரில் கண்டவர்கள். ''அந்த நகரத்து மக்களை சமாதானப்படுத்துவதற்கு பதிலாக, அமெரிக்கர்கள் நாடு முழுவதையுமே கொழுந்துவிட்டு எரிய வழியமைத்துவிட்டனர்'' என்று சட்டன் கருத்து தெரிவித்தார். பாக்தாத்தில் ரத்ததானம் கொடுப்பதற்காக ஈராக் மக்கள் திரண்டு நிற்பது காட்டப்பட்டபோது, வரிசையில் நின்ற ஒரு பெண் கூறினார். ''பல்லூஜா மக்களுக்காக, அவர்களுக்கு உதவுவதற்காக நான் எனது ரத்தத்தைக் கொடுக்கிறேன். அவர்களுடன் சேர்ந்து எதிரியான அமெரிக்கர்களை எதிர்த்துப் போர் புரிவதற்கு நானும் விரும்புகிறேன்'' என்று கூறினார். நாடு முழுவதிலும் மசூதிகளில் தொழுகைக்கு திரண்டிருந்த மக்கள் பல்லூஜா மக்களுக்காக வழிபட்டதை, அந்த மக்களோடு தங்களை ஒன்றுபடுத்திக்கொண்ட காட்சியை சித்தரிக்கும் படங்கள் காட்டப்பட்டன. ''இந்தப் போர் மிகப் பிரமாண்டமாக உருவாகும் அடையாள சக்தியாக விளங்கியது''. ஷியாக்கள், மற்றும் சன்னிக்கள் ஆகிய இரண்டு தரப்பினருமே ஆத்திரமூட்டல் காரணமாக ஐக்கியப்பட்டு நிற்கின்றனர்'' என்று சட்டன் குறிப்பிட்டார். ''தற்போது கடற்படையினர் தெருவுக்குத் தெரு, நகர்ப்புற போரில் ஈடுபட்டுள்ளனர். ஈராக்கிற்குள் அவர்கள் அடியெடுத்து வைக்கும்போதே இப்படி நடந்துவிடுமோ என்றுதான் பயந்தனர்'' என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த செய்தி விவரணத்தில் அப்சர்வர் நிருபர் பாட்ரிக் கிரஹாமின் சிறிய பேட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. அவர் தாக்குதலுக்கு இலக்கான கடற்படையினரை நேருக்குநேராக சந்தித்தார். ''நாங்கள் ஒரு சோதனைச்சாவடியின் மத்தியில் நின்றோம். அங்கு எட்டு கடற்படையினர்கள் நடுங்கிக்கொண்டு நின்றனர். வியட்நாம் திரைப்படங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் இப்படி அமெரிக்கப் படையினர் நடங்குவதை நான் எப்போதும் பார்த்ததில்லை'' என்று குறிப்பிட்டார். ''நாங்கள் எங்கள் அதிகாரிகளிடம் இந்த இடத்திலிருந்து அனுப்பிவிடுமாறு கூறினோம். அவர்கள் எங்களை இங்கிருந்து வெளியே அனுப்பவில்லை. நாங்கள் இங்கே சிக்கிக்கொண்டுள்ளோம். முதல் இரவில் அவர்கள் மூன்று முறை பீரங்கிக்குண்டுகளால் எம்மை நோக்கி சுட்டார்கள். சென்றிரவு 12 முறை சுட்டார்கள் அவர்கள் நாளுக்குநாள் தமது திறமையை வளர்த்துக்கொண்டே வருகிறார்கள்' என்று படையினர் பயந்து நடுங்கியபடி கூறியதாக பாட்ரிக் கிரஹாம் தெரிவித்தார். கிளர்ச்சிக்காரர்கள் வீசிய ராக்கெட் அமெரிக்க டாங்கியை தாக்கியது என்ற செய்தி கிடைத்ததும் செனட்டர் எட்வர்ட் கென்னடி ஈராக், ஜனாதிபதி புஷ்ஷின் வியட்நாம் என்று குறிப்பிட்டார். இதுதான் ஏப்ரல் 9 சண்டை நிறுத்தத்தின் பின்னணியாகும். என்றாலும் சண்டை நிற்கவில்லை என்பதை சட்டன் தெளிவாக தெரிவித்தார். அமெரிக்கா விதித்துள்ள போர் நிறுத்தம் சம்மந்தமான கட்டளை வாஷிங்டனிலிருந்து வந்ததற்கான காரணங்களில் ஒன்று அல் ஜெசீரா நிருபர் ''பல்லூஜாவில் மாண்டுவிட்ட குழந்தைகளின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களை உலகிற்கு ஒளிபரப்பியதால் ஆகும்'' என்று சட்டன் குறிப்பிட்டார். இடைக்கால ஆணையத்தின் பேச்சாளரான டானியல் செனோர் இந்த செய்தி விவரணத்தில் இடம்பெற்று ''பல செய்தி ஏஜென்ஸிகள் உண்மையான செய்திகளைத் தரவில்லை, இதை உங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்'' என்று குறிப்பிட்டார். கடற்படையினர்களுக்கும், போராளிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடக்கும் பின்னணியில் ''இந்தப் போர்நிறுத்தம் என்பது பெயருக்காகத்தான் உள்ளதே தவிர, பல போராளிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை'' என்று சட்டன் குறிப்பிட்டார். நகரத்தைவிட்டு வெளியேற முயன்ற பொதுமக்கள் அமெரிக்கப் படையினர்களால் சுடப்பட்டார்கள். ''மக்கள் மீது அமெரிக்க இராணுவத்தினர் குறிபார்த்து சுடும் துப்பாக்கித் தாக்குதலை (sniper fire) மேற்கொள்ளுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும். வீட்டைவிட்டு அடியெடுத்து வைத்தவர்களையெல்லாம் மீண்டும் மீண்டும் சுட்டார்கள்'' என்று சட்டன் தெரிவித்தார். இதன்பின்பு, இந்த நகரத்தை விட்டு வெளியேற முயன்றபோது அலி அப்பாஸ் சுடப்பட்டார். பின்பு அந்த இடத்திற்கு இந்தத் விவரணக் குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர். ''அந்தப் பகுதி வெறிச்சோடியும், ஆனால் காலியாக பாதிக்கப்பட்ட வீடுகள் மட்டுமே அங்கு பரவலாக காணப்பட்டன. அதில் ஒரு வீட்டிற்குள் நாம் நுழைந்தோம். அதற்குள்ளே கடற்படையினர் இருந்தார்கள் என்பதற்கான அடையாளங்கள் காணப்பட்டன'' என்று சட்டன் கூறும்போது காமிரா தரையில் கிடந்த ஒரு துப்பாக்கிக் குண்டை நோக்கி நகர்ந்தது. அப்போது அதைச்சுட்டிக்காட்டி இங்குதான் அப்பாசின் கார் நின்றிருக்கிறது. எரிந்து விட்ட அந்தப் பகுதியில் ஒரு எந்திரத் துப்பாக்கி காணப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். ''தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர்களும், இப்படி துப்பாக்கி சூட்டு நிகழ்ச்சிகளை பார்த்திருக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய சட்டன், மருத்துவர் சலாம் அல் அவுதியை அறிமுகப்படுத்தினார். அவர் ''தலையில் சுடப்பட்ட ஒரு குழந்தையைக் கண்டேன், 18 வயது இளைஞன் சுடப்பட்டான். 75 வயது முதியவர் அவரது இதயத்தில் நேரடியாக சுடப்பட்டார்'' என்று குறிப்பிட்டார் பெயரளவிற்கு செயல்பட்டுவந்த போர் நிறுத்தம் ஏப்ரல் 27 ல் அதிகாரப்பூர்வமாக முடிவிற்கு வந்தது. பல்லூஜாவிற்கு உள்ளே கடுமையான தாக்குதலுக்கு இலக்கான கடற்படையினர்கள் விமானப்படை ஆதரவிற்கு அழைப்பு விடுத்தனர். ''அந்த நகரத்திலிருந்து அமெரிக்கர்களை விடுவிப்பதற்கு ஏற்கெனவே பல திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தன. ஆனால் அவர்கள் வெளியேறும் மூலோபாயம், பொதுமக்களுக்கு தெரிவதற்கு முன்னர் முற்றுகையிடப்பட்ட அந்நகர் மீது இறுதியாக ஒரு அதிரடித் தாக்குதலை அமெரிக்கர்கள் நடத்தினர். இந்த தாக்குதலை தொலைக்காட்சியில் உலகம் முழுவதும் நேரில் கண்டது. ஓராண்டிற்கு முன்னர் முடிந்துவிட்ட போருக்குப்பின்னர் ஈராக்கில் மிகத்தீவிரமான குண்டுவீச்சு இது என்று அமெரிக்கத் தளபதி ஒப்புக்கொண்டுள்ளார்'' என்று சட்டன் இதுபற்றி மேலும் தெரிவித்தார். இரண்டு நாட்களுக்கு பின்னர் ஒரு சமாதான பேரம் உருவாக்கப்பட்டது. அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு இது மிகக்கடுமையான பின்னடைவாகும். இந்த செய்திப்படத்தின் முடிவில் Channel Four News குழுவினர் பல்லூஜா நகருக்குள் அதே நாளில் நுழைந்தனர். ''நகரத்தின் கால்பந்து மைதானம் தற்போது கல்லறையாக மாறிவிட்டது. மாண்டவர்களை புதைப்பதற்கு வேறு எங்கும் இடமில்லை. அந்த மைதானத்திலுள்ள 248 கல்லறைகளை எண்ணினேன்'' என்று சட்டன் குறிப்பிட்டார். அந்த நகரத்தைவிட்டு அமெரிக்கப் படையினர்கள் வெளியேறிய நேரத்தில் 36 பேர் பலியானதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் நூற்றுக்கணக்கான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர். அந்த நகரத்தின் கட்டுப்பாடு ஒரு ஈராக்கிய தளபதி வசம் ஒப்படைக்கப்பட்டது. சிலமணி நேரத்திற்குள் அவரும் மாற்றப்பட்டார். ஏனென்றால் அவர் பாத்திஸ்ட் ஆட்சியோடு உறவு வைத்திருந்தவர் என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. என்றாலும் அவருக்குப் பதிலாக மற்றொரு தளபதி பொறுப்பேற்றார். அவரும் பழைய ஆட்சியோடு தொடர்புள்ளவர்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் ''எந்த ஆட்சியை கவிழ்ப்பதற்காக அமெரிக்கர்கள் ஈராக்கிற்கு வந்தார்களோ அதே ஆட்சியைச் சேர்ந்த ஒரு அதிகாரிதான்'' பல்லூஜாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதுதான் உண்மையென்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஈராக் மீதான ஆக்கிரமிப்பும், இந்தப் போரும் சதாம் ஹூசைன் ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்டதல்ல. ஆனால் நாட்டின் எண்ணெய் வளத்தை அபகரித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது என்பதுதான் உண்மை. எனவே ஈராக் மக்கள் அனைவரையும் அடிபணிய வைக்கவேண்டும் என்று கோருவது தவிர்க்க முடியாதது. எனவேதான் தற்போது நடைபெற்றுவரும் ஆக்கிரமிப்புக்கு அந்நாட்டு மக்களிடையே ஆத்திரமூட்டும் விரோதபோக்கை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதத் தளவாடங்கள் எவ்வளவு உயர்ந்தவையாக குவிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்க இராணுவம் தன் மதிப்பை இழந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதற்கு இக்காரணம் தான் அடிப்படையாக இருக்கிறது. ''பல்லூஜா நகரத்தின் பெரும்பகுதி சிதைந்து கிடக்கிறது. ஆனால் அந்த மக்கள் பெருமையோடு தலைநிமிர்ந்து நிற்கின்றனர். அவர்கள் அமெரிக்கர்களை எதிர்த்து போர் புரிந்தார்கள். அவர்கள் கண்முன்னே அந்த மக்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள்'' என்று சட்டன் தனது விவரணத்தை முடிக்கிறார். இந்த ஆய்வின் பலவீனங்கள் எதுவாக இருந்தாலும், ஈராக் பற்றிய செய்திகளில் பெரும்பகுதி கொத்தடிமை பிரச்சாரமாக இருப்பதிலிருந்து இது சற்று உற்சாகமளிக்கும் மாறுதலாக உள்ளது. சட்டனை, அவரது நேர்மைக்காக பாராட்ட வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈராக்கிலிருந்து நடுநிலையான சம்பவ தொகுப்புகளுக்கு நிலவுகின்ற கடுமையான பகை உணர்வைப் பார்க்கும்போது, இத்தகைய ஒரு சிறப்பு அறிக்கையை சட்டன் வெளியிட முடிவு செய்தது துணிச்சலான ஒரு செயலாகும். |