World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US Army's expanded "stop-loss" program prevents thousands from leaving military

அமெரிக்க இராணுவத்தின் "இழப்பு-நிறுத்தம்" திட்டத்தின் விரிவாக்கம் ஆயிரக்கணக்கான வீரர்கள் இராணுவத்திலிருந்து நீங்குவதைத் தடுக்கிறது

By David Walsh
4 June 2004

Back to screen version

அமெரிக்க இராணுவத்தின், மனித வளம், இருப்புக்கள் துறையின் உதவிச்செயலர் ஜூன்1 ம் தேதி கையெழுத்திட்ட உத்தரவு ஒன்றின்படி, ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானத்தில் படைப்பிரிவுகளில் உள்ள ஆயிரக்கணக்கான வீரர்கள் அவர்கள் திட்டமிட்டிருந்ததை விடக் கூடுதலாக ஒராண்டு கட்டாயமாக அப்பகுதியில் பணியாற்றவேண்டும் என உள்ளது. மத்திய கிழக்கிலோ, மத்திய ஆசியாவிலோ, ஒரு வீரரின் பிரிவு 90 நாட்களுக்கும் குறைவாக போர் முனையில் இருந்திருந்தால், அவர் இராணுவத்தைவிட்டு நீங்கவோ அல்லது மற்றொரு பிரிவிற்கு மாறுவதோ 90 நாட்கள் போர்ப்பகுதியில் அவருடைய பிரிவு பணியாற்றும் வரை கேட்க முடியாது.

பலவிதமான "இழப்பு-நிறுத்தங்கள்" (பணியாற்றும் வீரர்கள் ஓய்வு பெறுதல் அல்லது குறித்தகாலத்தில் பணியிலிருந்து நீங்குதல் இவற்றைத் தடை செய்தல்), மற்றும் "மாற்ற-நிறுத்தங்கள்" (நிரந்தரமாக வேறு பகுதிக்கு மாற்றம் கேட்டலை தடுத்தல்) என்ற இரு திட்டங்களுமே ஈராக்கிய ஆக்கிரமிப்பின் ஆரம்பத்தில் இருந்து சிறிய முறையில் செயல்படுத்தப்பட்டு, காலனிய பாணி நடவடிக்கையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்பொழுது இழத்தல்/மாற்றம் தடுப்புவிதிகள் விரிவாக்கப்பட்டு எல்லா பகுதிகளுக்கும், அனைத்து ஈராக்கிய அல்லது ஆப்கானிஸ்தான் செல்ல உள்ள படைப்பிரிவுகளுக்கும், பொருந்துமாறு செய்யப்பட்டு, அவை அவ்விடத்தில் "பல ஆண்டுகள்" இருக்க வேண்டும் என்று படையின் தலைமை வீரர்கள் பணிப்பொறுப்பு தலைவரான மேஜர் ஜெனரல் பிராங் எல். ஹேகென்பெக் கூறியுள்ளார்.

இப்புதிய திட்டத்தை கோடிட்டுக் காட்டுகையில், ஹேகன்பர்க்கின் சொற்களிலேயே, இராணுவ செய்தித் தொடர்பாளர், இத்திட்டம் "ஒருமித்தமுறையில் போருக்குத் தயாராக இருக்கும் பிரிவுகளை தக்கவைப்பதை காக்கும். நாங்கள் அவற்றை நன்முறையில் அமைத்து, பயிற்சியளித்து ஒரு குழுவாக செயல்படுவேண்டும் என்று விரும்புகிறோம்" என்றார்.

ஈராக்கில் இப்பொழுது காணப்படும் எழுச்சி, ஆப்கானிஸ்தானில் புதுப்பிக்கப்பட்டுள்ள அமைதியற்ற நிலை, உலகெங்கிலும் மற்றும் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள், இவையனைத்தும் பென்டகன் திட்டத் தயாரிப்பாளர்களுக்கு வியத்தகு சவால்களை கொடுத்துள்ளன. அமெரிக்க இராணுவத்தில் சிரமம் மிகவும் அதிகமாகப் பெருகியுள்ளது, ஈராக்கில் 138,000 படையினரும், ஆப்கானிஸ்தானில் 12,000 படையினரும் கிட்டத்தட்ட காலவரம்பற்று தொடர்ந்திருக்கவேண்டும் என்று உள்ளது. படையின் தீவிரப் பிரிவுகளின் முக்கியத்துவம் வாய்ந்த பத்து கூறுபாடுகள் அனைத்துமே அப்பகுதியில் இருக்கின்றன, அல்லது அனுப்பப்பட இருக்கின்றன.

Stars and Stripes என்ற பெயருடைய இராணுவச் செய்தி ஏடு, அதன் ஜூன் 3ம் தேதி ஐரோப்பிய பதிப்பில், "இழப்பு/மாற்றம் நிறுத்துதல் பற்றிய அறிவிப்பில், "படைகள் பயன்படுத்துவது குறைக்கப்படும் என்று சொல்லவே முடியாத நிலையில், பலவிதமான பெரிய படைப்பிரிவுகள் வெவ்வேறு பகுதிகளில் இருக்க வேண்டிய கட்டாயத்தில், இராணுவம் அவற்றிற்கே தக்க வீரர்களை ஒதுக்குவதில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் வந்துள்ளது. செயலாற்றக் கூடிய ஒவ்வொரு பிரிவும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்தகாலத்தில் உபயோகமற்றவர்கள் அல்லது உயர்ந்த தகுதியுடையவர்கள் என்று காப்பாற்றப்பட்டவர்களும், இப்பொழுது பிரிவில் பணியிலிருக்கின்றனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்."

வாஷிங்டனின் சமீபத்திய முடிவான சில ஆயிரம் வீரர்களை தென் கொரியாவில் இருந்து அகற்றி அவர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்புவது என்பது, இராணுவம் எவ்வளவு அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. படைகளின் மூல அமைப்பான இரண்டாம் தரைப்படை பிரிகேட், மூத்த இராணுவ அதிகாரிகளால் "மிகப் புனிதமான பசுவின் இறுதி வடிவம்" என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. 11வது கவசக் குதிரைப்படைப் பிரிவு என, கலிபோர்னியாவில் உள்ள இர்வின் கோட்டை தேசியப் பயிற்சி மையத்திலிருந்து தயாரிக்கப்பட்ட புகழ்பெற்ற "எதிர்க்கும் படை", முன்னணிக்கு அனுப்பப்படுவது பற்றி "ஆலோசனை நடைபெற்று வருவதாக"வும் ஹேகன்பெக் ஜூன் 1ம் தேதி உறுதிப்படுத்தினார்.

கிட்டத்தட்ட 1000 அமெரிக்க வீரர்கள் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் கொல்லப்பட்டுள்ளனர்; அதேநேரத்தில் மார்ச் 2003ல் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, ஈராக்கிலிருந்து, இராணுவம் 21,000 வீரர்களை மருத்துவக் காரணங்களுக்காக அங்கிருந்து வெளியேற்றியுள்ளது (சில வீரர்கள் இந்த எண்ணிக்கையில் ஒருமுறைக்குமேல் சேர்க்கப்பட்டிருக்கலாம்).

இழப்பு-நிறுத்தத் திட்டம் பல வீரர்களுக்கும் அவர்களுடை குடும்பங்களுக்கும் பொருளாதாரக் கஷ்டங்களை ஏற்படுத்துவதோடு, ஈராக்கிய போர் பற்றியும் இராணுவத்தின் உயர் அலுவலர்க்கு எதிராக கசப்புணர்வையும் ஏற்படுத்தும். நியூயோர்க் டைம்ஸ் ஜூன் 2ம் தேதி பதிப்பில், ஆப்கானிஸ்தானில் பணியாற்றியிருந்த ஒரு பழைய இராணுவ காப்டனான ஆண்ட்ரூ எக்சம் ஆசிரியருக்கு கடிதம் பகுதியில், தன்னுடைய பழைய உட்பிரிவை பற்றிக் கூறுகிறார்: "ஆப்கானிஸ்தானிற்கு இருமுறை படைகள் அனுப்பப்பட்ட பின்னரும், தங்கள் கடமைக்காலம் அங்கு முடிவடையும் தறுவாயில் பலரும் இருக்கும்போது, இவ்வீரர்கள் இக்கோடையில் ஈராக்கிற்குச் சென்று குறைந்து அங்கு ஓராண்டாவது இருக்கவேண்டும். நான் அவர்களோடு நெருக்கத் தொடர்பு கொண்டுள்ளேன்; படை உட்பிரிவிற்கு அங்கு செல்லவேண்டும் என்ற கட்டளை வந்தபோது பலவீரர்களும் என்னை தொலைபேசியில் அழைத்துத் தங்கள் கசப்பு, காழ்ப்பு உணர்வுகளை வெளிப்படுத்தினர். இராணுவம் அவர்களை விடுவிக்கும் வரை, தங்கள் வருங்காலம் பற்றி அவர்கள் ஏதும் முடிவெடுக்கமுடியாது என்பதை அறிந்த நிலையில் அவர்கள் அனைவருமே ஒரு நம்பிக்கையற்ற தன்மையில் உள்ளனர்."

ஒரு இராணுவவீரர் "இராணுவத்திற்கு உத்தரவு வந்த இருநாட்களுக்குள் நீங்குபவராக இருந்தவர், இப்பொழுது பழையபடி கச்சை கட்டிக்கொண்டு ஒரு பாலைவனத்தில் 12 மாதங்கள் இருக்கவேண்டுமென்று பணிக்கப்பட்டுள்ளார். வீரர்களுக்கு எந்த அளவு மனத் தளர்ச்சியும் அழுத்தமும் இருக்கிறதோ, அதேபோல்தான் அவர்களுடைய குடும்பங்களுடைய நிலையும், கற்பனை செய்து பாருங்கள்" என எக்சம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓர் இராணுவ விவகாரங்களின் பகுப்பாய்வாளரான லோரென் தொம்சனுடைய கருத்தையும் நியூயோர்க் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது: "ஈராக்கின் நிலைமையில், முழு அர்ப்பணிப்புடன், தேவைப்படும் படைப்புத் திறன் மிக்க சிந்தனைகளை கொள்ள இராணுவத்தால் முடியவில்லை. ஈராக் போரில் உண்மை நிலை எவ்வளவு நீடித்தும், ஆழ்ந்த தன்மை உடையதாகவும் இருக்கும் என்பதைப் பற்றி, அடிப்படையிலேயே தவறான ஊகங்கள்தான் இருந்தன என்பது தெளிவாகிறது."

"ஆக்கபூர்வ சிந்தனைகளில்" ஒன்று, நான்கு ஆண்டுகள் தீவிரப் பணியை மேற்கோண்டிருந்த பழைய வீரர்கள், பின்னர் ஒரு குழுவாக, தீவிரப்பிரிவாக அமைக்கப்படலாம் அல்லது தனிப்பட்ட வீரர்கள் (Individual Ready Reserve (IRR)) தயார்நிலையில் உள்ள தனி வீரர் இருப்புப் பட்டியல் தயாரிக்கப்படலாம் என்பது ஆகும். எந்தப் பயிற்சியும், ஊதியமும் பெறாத இந்த ஆடவரும் பெண்டிரும், தங்களை அனைத்துவிதத்திலும் சாதாரணக் குடிமக்களாகத்தான் கருதிக் கொள்ளுகின்றனர்; ஆனால் சட்டப்படி இராணுவத்திற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் பணியாற்றக் கடமைப்பட்டுள்ளனர் அல்லது IRRல் இருக்கவேண்டும். Knight Rider செய்தித்தாள்களுக்கு இராணுவ நிருபராக மூத்த நிலையில் இருக்கும் ஜோசப் காலோவே, "அழுத்தத்திற்குட்டபட்ட அமெரிக்க இராணுவம் துடிதுடிப்பான வீரர்களுக்கு ஏங்குகிறது" என்ற தலைப்பில், "தாங்கள் இனி வீட்டில் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கிட்டத்தட்ட 6,500 வீரர்களுக்கு, தாங்கள் இனி இராணுவப் பணியாற்றவேண்டியதில்லை என நினைத்துள்ளவர்களுக்கு, அவ்விதம் இல்லை என இராணுவம் கூறக்கூடும்" என எழுதியுள்ளார்.

ஏஷியன் டைம்ஸில் எழுதும் கட்டுரையாளர் Erich Marquardt, அமெரிக்க வீரர்களின் படர்ந்த பகுதிகளில் செயல்படுத்தப்படவேண்டிய நிலையில், இராணுவம் கூடுதலான முறையில் இருப்புப் படைகள், மற்றும் தேசியப் பாதுகாப்புப்படைகளை போர்முனையில் நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. "இருப்பு, தேசியப் படைகள் அனுப்பப்படுதல், அவற்றில் காலவரம்பு, அதிலுள்ள ஆபத்து ஆகியவை இராணுவத்தின் பலபிரிவுகளை சீற்றத்திற்கு உட்படுத்தியுள்ளன; ஏனென்றால் இந்த வீரர்கள் அநேகமாக சாதாரண முழுநேர வேலையில் இருப்பவர்களாகவும், மாதத்திற்கு ஒரு வார இறுதி அல்லது கோடையில் இரண்டு வாரங்கள் மட்டுமேதான் இராணுவப் பயிற்சிகளைக் கொண்டவர் ஆவர்."

செய்தி ஊடகத்தில் இன்னும் கூடுதலான நேர்மையான வர்ணனையாளர்கள் கூட இராணுவத்தின் பரந்த அடுக்குகளில் எந்த அளவிற்கு விரோதமும், உள்ளத்தளர்ச்சியும் படர்ந்துள்ளன என்பதைத்தான் குறிப்பிடுகின்றனர்.

இன்னும் கூடுதலான இராணுவத் தேர்வு

ஈராக்கில் வன்முறையும், இறப்பும் உள்ளபோதிலும் இராணுவத்திற்கு ஆட்சேகரிப்பில் குறைவு ஏதும் வரவில்லை என்று இராணுவம் கூறிவருகிறது; ஆனால் ABCNEWS.com உடைய மார்த்தா ராட்டாட்ஸ், ஜூன் 2ம் தேதி பதிப்பில், "மனிதத் தேவையை பொறுத்தவரையில் பென்டகன் மற்றொரு சவாலைச் சந்திக்கிறது. ஆள்சேர்தல் குறைவாகியுள்ளது." என்று எழுதியுள்ளார். "விமான தேசிய பாதுகாப்புத் துறையில் ஆபத்தான அளவிற்கு சரிவு ஏற்பட்டுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக தேசிய பாதுகாப்புப் படையிலும், ஆயத்த படைகளுக்கும் தேர்வு குறைவாகவே உள்ளது". கிட்டத்தட்ட 23 சதவிகிதக் குறைவு உள்ளது என்று செனட் மன்றக் குழு ஒன்றிற்கு இராணுவத்தின் தலைமைத் தளபதிகளின் துணைத் தலைவரான ஜெனரல் பீட்டர் பேஸ் தெரிவித்துள்ளார்.

ஆட்சேகரிப்பு இன்னும் கூடுதலாகச் சரியவில்லை என்றால், பொருளாதாரக் காரணிகள் தங்கள் பங்கைக் கொண்டுள்ளன. St.Louis Post- Dispatch, அமெரிக்க மக்கள் எண்ணிக்கை புள்ளிவிவரங்களை ஆதாரமாகக் கொண்டு, மே 26 வரை ஈராக்கில் கொல்லப்பட்ட 800 வீரர்களில் கிட்டத்தட்ட 43 சதவிகிதம், சிறுநகரங்களில் இருந்து வந்தவர்கள் எனக் கூறுகிறது: "பெரும்பாலும் வருங்கால வாய்ப்புக்கள் அதிகமில்லாத, பொருளாதராத்தில் தாழ்ந்த சமூகங்களின் தன்மையிலிருந்து தப்பிக்கத்தான் அவர்கள் இராணுவத்தில் சேர்ந்திருந்தனர் என்று பகுதிவாழ் மக்களும் வல்லுனர்களும் கூறுகின்றனர்" என்று செய்தியாளர் Ron Harris தெரிவிக்கிறார்.

கட்டாய இராணுவ சேவை மூலம் இராணுவம் நிறைந்திருக்கவில்லை என்றாலும், "அதில் சேருபவர்கள் பலரும் பொருளாதார முறையில் கட்டயாய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்". 'அவர்கள் ஒன்றும் சிறப்பு இராணுவப்பணித் தேர்வுக்குழு (Selective Service System) வினால் தேர்ந்தெடுக்கப்படவில்லை; அவர்கள் பொருளாதாரத்தினால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்' என்று மேரிலாந்து பல்கலைக்கழக, இராணுவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குனரான டேவிட் ஆர். சேகல் குறிப்பிட்டுள்ளார்.

"அமெரிக்கா முழுவதும் இவ்வாறு தேசிய சராசரியைவிடத் தொடர்ந்து கூடுதலான வேலையின்மை விகிதம் நிலவும் சிறு நகரங்கள் அனைத்திலிருந்தும், நடுநிலை குடும்ப வருவாய் சாதாரண நிலையை விட மிகக் குறைவாக உள்ள, பள்ளி முடித்தவர்கள், அதிக வாய்ப்புக்கள் இல்லாதவர்கள், உள்ளூரில் கிடைக்கக் கூடிய வருமான வாய்ப்புக்களைவிட மிக அதிக அளவு கவர்ச்சியுடைய இராணுவத்தின் பொருளாதாரத்தால் அதில் பணியாற்ற ஈர்க்கப்படுகிறார்கள்."

இராணுவத்தின் ஆள் எடுப்புத் தலைவரான ஹேகன்பெக், புதிய வீரர்களை தேர்த்தெடுக்கும் திறனில் இராணுவம் கொண்டுள்ள திறன்பற்றி கவலையுடன் ஒப்புக்கொள்ளுகிறார். "இளைஞர்களை பணியில் சேரத் தூண்டும் செல்வாக்கைக் கொண்டுள்ள தாயார்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், எவ்விதமான கருத்தை இராணுவப் பணி பற்றிக் கொண்டுள்ளனர்" என்பதுதான் தன்னுடைய மிகப் பெரிய கவலை என்று அவர் கூறியுள்ளார். "ஒவ்வொரு நாளும் பெரும் சிரமத்துடன் நான் சிந்திப்பது இது பற்றித்தான்" என்றும் அவர் கூறினார். (வாஷிங்டன் போஸ்ட்.)

மீண்டும் கட்டாய இராணுவசேவையைப் பற்றிப் பேசாதிருத்தல் இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு முக்கிய, பெரிய தலைப்பாகிவிட்டது. GlobalSecurity.org என்னும் வாஷிங்கடனில் உள்ள சிந்தனைக் குழுவிலுள்ள ஜோன் பைக், ஒரு பத்திரிகை நிருபரிடம், "(இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் பீட்டர்) ஷூன்மேக்கர் ஒரு கட்டாய சேவையை விரும்பவில்லை; ஆனால் அது மேற்கொள்ளப்பட வேண்டுமா என்ற கவலையில்தான் உள்ளார். உண்மையிலேயே பெரும் முயற்சிகளை மேற்கொண்டு இராணுவத்திற்கு கூடுதலான வீரர்களை தேர்ந்தெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி ஊடகமும், இராணுவமும் ஈராக்கியப் போருக்கான வலுவான ஆதரவு, இளம் ஆண்களையும் பெண்களையும் இராணுவத்தில் சேர ஊக்கம் கொடுத்துள்ளது என்ற கூற்றுக்கள் கணிப்புக் கருத்துக்களால் பொய்யாக்கி உள்ளது, போருக்கான ஆதரவு பரந்த தன்மையில் குறைந்து உள்ளது, சொல்லப்போனால் அரசியல் எதிர்ப்பு இல்லை என்றாலும், இந்த நிலைதான் என்று காட்டுகின்றது.

அண்மையில் தேசிய பாதுகாப்பு படைக்கு வீரர்களை தேர்ந்தெடுப்பதில் முறைகேடாக மேற்கொள்ளப்பட்ட பழக்கங்கள் இதே போக்குக்களைத்தான் உறுதிப்படுத்தியுள்ளன. தேர்ந்தெடுப்பவர்களும், தரவரிசையில் இல்லாத அதிகாரிகளும் IRR இல் இருக்கும் வீரர்களிடம் மீண்டும் தேர்வுக்கு தயாராக இருக்கவேண்டும் இல்லாவிடில் "கட்டாயப்படுத்தக்" கூடும், அதாவது வேறுவழியின்றி ஈராக், ஆப்கானிஸ்தானிற்கு செல்ல உள்ள பிரிவுகளில் சேர்க்கப்படுவர் என்று தெரிவித்து வருகின்றனர்.

St. Louis இல் இருக்கும் மனித வளக் கட்டுப்பாட்டு வாரியத்தின் Lt.Col. Burt Masters, ஒரு இராணுவ வலைத் தளத்திற்கு கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்: "சில நேரம், தேர்ந்தெடுப்பவர்கள் 'பயமுறுத்தும் முறையைக்' கையாண்டு வீரர்களைத் தேர்வு செய்துள்ளனர். நீங்கள் தேசிய பாதுகாப்பு படையில் சேரவில்லை என்றால், ஈராக்கிற்குச் செல்ல நேரிடும் என்ற முறை பயன்படுத்தப்பட்டுள்ளது." (ஈராக்கில் கூடுதலான முறையில் தேசிய பாதுகாப்பு வீரர்கள் நிறுத்தப்படுவதால், அத்தகைய முறை ஈராக்கிற்கு அனுப்பப்படுவதை எவ்விதத்திலும் தடுக்காது.) இரண்டு ஓரேகான் தேசிய பாதுகாப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், மே மாதக் கடைசியில் இவ்விதத்தில் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டமை மேலதிகாரிகளுக்கு தெரியவந்ததும், நியமனம் அவர்களுக்கு இரத்து செய்யப்பட்டது.

இத்தகைய உத்திகள் நாடு முழுவதும் கையாளப்பட்டுள்ளன. தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக் கழக கார்பொன்டேல் ரேடியாலஜி துறையில் உள்ள கிரெக் டானியல் என்ற 25 வயது மாணவர், இல்லினாய்ஸ் மர்பிஸ்போரா புனித ஜோசப் நினைவு மருத்துவமனையில் உள்ள ஒரு எக்ஸ்ரே துறையில் வேலைபார்ப்பவர், ஒரு தெற்கு இல்லினாய்ஸ் செய்தித்தாளிடம் ஒரு 18 மாதப்பணிக்கான ஒப்பந்தத்தில் இத்தகைய "பயமுறுத்தும் உத்தி" கையாளப்பட்டதால் தான் ஒரு ஆயத்த படைப் பிரிவில் சேர கிட்டத்தட்ட கையெழுத்திட்டதாக தெரிவித்துள்ளார்.

"அக்கடிதம் கிட்டத்தட்ட என்னுடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. நான் என்னுடைய பள்ளி இயக்குனரை அழைத்து, எனக்கு பணியில் சேருமாறு உத்திரவு வந்துள்ளதால் படிப்பைவிட்டுவிட வேண்டிய நிலையில் உள்ளேன் எனக் கூறினேன். என்னுடைய மருத்துவமனையிலும் நான் வெளியேறப்போவதாகக் கூறினேன்." என்று டானியல் தெரிவித்தார்.

இராணுவத்திலேயே மனப் போக்கைப் பொறுத்தவரையில், ஓய்வு பெற்ற இராணுவ கேர்னல் டேவிட் ஹாக்வொர்த், பென்டகன், வெள்ளை மாளிகை பற்றி வெளிப்படையாகக் குறை கூறுபவர், மீண்டும் ஆட்தேர்வு எடுப்பது பற்றி அதிகாரிகள் கூறுவதற்கு உண்மைநிலை, "சரியாக 180 டிகரிகள் மாறி" இருப்பதாகத் தெரிவித்துள்ளார். "கடந்த சில வாரங்களில் என்னிடம் நூற்றுக்கணக்கான படையினர் கூறியுள்ளதைப் பார்க்கும்போது, படைவீரர்கள் தங்களுடைய கால்களினால் வாக்குப் போடுகின்றனர், இராணுவத்திலிருந்து அதிக அளவில் வெளியேறத் தயாராக உள்ளனர் எனக்கூறலாம்" என்று வலியுறுத்தியுள்ளார்.

ஒரு சிறப்புப்படைப் பிரிவின் படைத்துறை பதவி வகிக்காத அதிகாரி (Non Commissioned Officer- NCO) கூறவதாக ஹாக்வொர்த் மேற்கோள் இடுகிறார்: "இழப்பு-நிறுத்தம் என்பது ஓர் ஒப்பந்தம் மீறப்படுவது மட்டும் அல்ல; அது ஒரு வகையான அடிமை முறையும் ஆகும். அலைபோல் கொந்தளித்து ஏராளமானவர்கள் வெளியேறுகிறார்கள்.... மூத்த சிறப்புப்படைப் பிரிவின் படைத்துறை பதவி வகிக்காத அதிகாரிகள் வெளியேறுவது எண்ணிக்கையில் ஆச்சரியப்பட வைக்கிறது. எங்கள் பட்டாலியன் பிரிவில் ஐந்து சார்ஜென்ட் மேஜர்களில் முன்று பேரும், எங்கள் சகோதரப் பட்டாலியனில் ஐந்தில் இரண்டு பேரும் வெளியேறுகிறார்கள். மாஸ்டர் சார்ஜென்டுகளின் எண்ணிக்கை பத்தைவிட அதிகமாகும். அனுபவமும் உறுதித் தன்மையும் அதிகம் தேவைப்படும் நேரத்தில் இந்தப் பெரும் வெளியேற்றம் மூத்த NCO பிரிவுகளில் அழிவைத் தரும் ."

ஹாக்வொர்த் மேலும் கூறுகிறார்: "பென்டகனிடமிருந்து நல்லதை வெளிப்படுத்துங்கள் என்ற அறிவுரை வந்துள்ளபோதிலும், எனக்கு வருகின்ற நிகழ்வுக் கோவைகள் அனைத்தும், அதிலும் குறிப்பாக ஆயத்த படை, தேசியப் பாதுகாப்புப் பிரிவினரிடமிருந்து வருபவை, சிறப்புப்படைப் பிரிவின் சார்ஜன்ட் தெரிவிப்பதை ஏற்பதாக அமைந்த பெருமளவு வெளியேற்றம், 2005 நடுப்பகுதியில் இரத்தவெடிப்பு நிலை வரை வரக்கூடும்."

அமெரிக்க ஏகாபத்தியம் தன்னுடைய இராணுவ வலிமை மேன்மையை உலக ஆதிக்கத்தை நிறுவுவதற்கு பயன்படுத்தி வருகிறது. இது தவிர்க்கமுடியாமல் இதன் வழியின் குறுக்கே நிற்கும் ஈராக்கியர் போலன்றி, இதற்கான விலையை அவர்கள்தான் கொடுக்கவேண்டும் என்று கூறப்படும் அமெரிக்க மக்களின் பரந்த அடுக்குகளையும் தீவிரப்படுத்தும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved