World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைAttempts to restart Sri Lankan peace talks heighten political instability இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் அரசியல் ஸ்திரமின்மையை உக்கிரமாக்குகின்றன By Wije Dias இலங்கையில் புதிதாக பதவியேற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம், நாட்டின் 20 வருட உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இடைநிறுத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. ஒரு இராஜதந்திர நடவடிக்கைகளின் பரபரப்புக்களை அடுத்து, கொழும்பு அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான தமது விருப்பத்தை சுட்டிக்காட்டியுள்ளன. பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதற்கான அவசரத்தில், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் சமாதான முன்னெடுப்புகள் பற்றிய தமது முன்னைய கண்டனங்களை விரைவில் கைவிட்டனர். "விடுதலைப் புலிகளுக்கு" சார்பானதாக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டுவந்த நோர்வே மீண்டும் மத்தியஸ்தம் வகிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் "ஏக பிரதிநிதிகளாகவும்" அதன்படி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் ஒரே எதிர்தரப்பாகவும் ஏற்றுக்கொள்ள உடன்பட்டுள்ளது. குமாரதுங்க, கடந்த வருடம், ஒரு தனித் தமிழ் அரசை நிறுவுவதற்கான திட்டம் என தானே கண்டனம் செய்த, விடுதலைப் புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையை ஸ்தாபிப்பதற்கான பிரேரணை, பேச்சுவார்த்தைக்கு சாத்தியமானதாக அமையலாம் எனவும் சுட்டிக்காட்டினார். குமாரதுங்க, தற்போதைய யுத்த நிறுத்தத்தை பேணுவதிலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதிலும் கணிசமான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளார். தெற்காசியாவிற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் கிரிஸ்டினா ரொக்கா கடந்த வாரம் கொழும்பு வந்த போது, இலங்கை சாமாதான முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்குமாறு எல்லா கட்சிகளையும் வலியுறுத்தினார். இது உலகின் ஏனைய பாகங்களில் ஒரு எடுத்துக்காட்டாக நோக்கப்படும் என அவர் பிரகடனம் செய்தார். இலங்கை உள்நாட்டு யுத்தம் மற்றும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்ட நிலைமை போன்ற பிராந்திய மோதல்கள், தெற்காசியாவில் அதிகரித்துவரும் வாஷிங்டனின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு குறுக்கே நிற்பதால் அவற்றை தவிர்த்துக்கொள்வதில் அது அக்கறைகொண்டுள்ளது. ரொக்கா இலங்கையில் இருந்த அதே சமயம், இலங்கை வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், புஷ் நிர்வாகத்தின் உயர்மட்ட அலுவலர்களுடன் ஐந்து நாள் பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டனில் இருந்தார். ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பைச் சூழ்ந்துள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும், கதிர்காமர், பெயரளவிலான பயங்கரவாதம் மீதான யுத்தத்திற்கு கொழும்பின் ஆதரவை மீண்டும் உறுதிசெய்தார். அதற்குப் பிரதியுபகாரமாக, விடுதலைப் புலிகள் முழுமையாக நிராயுதபாணிகளாகும் வரை, வாஷிங்டன் அதை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்காது என்ற உத்தரவாதத்தை அவர் பெற்றுக்கொண்டார். அமெரிக்க மிலேனியம் கணக்கீட்டுத் திட்டத்தின் கீழ் மேலதிகமாக 100 மில்லியன் டொலர் உதவியைப் பெற்றுக்கொள்ள தகுதிவாய்ந்த 16 நாடுகளில் இலங்கையையும் சேர்த்துக்கொள்வதற்காக ஒரு சிறிய வைபவமும் இடம்பெற்றது. சமாதான முன்னெடுப்புகளை மீண்டும் தொடங்குவதற்காக சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தை முன்தள்ளும் பிரதான காரணிகளில் நிதி மற்றும் பொருளாதார சலுகைகளும் அடங்கும். இலங்கைக்கு நிதி உதவியளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 4.5 பில்லியன் டொலர்கள் பற்றி கலந்துரையாடுவதற்காக பிரசல்சில் ஜூன் 1 அன்று நிதி வழங்குபவர்களின் உயர் மட்ட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. உதவி வழங்கும் குழுக்களின் துணைத் தலைவரும் ஜப்பானின் விசேட தூதுவருமான யசூசி அகாஷி இந்தவாரம் கொழும்புக்கு விஜயம் செய்திருந்த போது, எந்நவொரு நிதி உதவியும் சமாதான முன்னெடுப்புகளோடு கட்டுண்டிருப்பதாக வலியுறுத்தினார். "பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கி ஒரு சாதகமான வழியில் நகரும் போது பொருளாதார உதவிகளும் சற்று முன்னேறும் என்பதில் எனக்கு சந்தேகம் கிடையாது," என அவர் தெரிவத்தார். மேலும், நிதி உதவிகள் எதுவும் உடனடியாக வழங்கப்படாததுடன், மீண்டும் உருவாகி வரும் இராணுவ மோதல்கள், முன்னைய ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்தால் 2002 பெப்ரவரியில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் இருந்து உருவான வரையறுக்கப்பட்ட பொருளாதார மீட்சி துரித கதியில் சரிந்துவிழும். சுதந்திரக் கூட்டமைப்பு யுத்த நிறுத்தத்தை கீழறுக்கும் என்ற பீதியில், ஏப்பிரல் 2 பொதுத் தேர்தலை அடுத்து உனடியாக பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டது. கடந்த வராம், சமாதான பேச்சுக்களுக்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது என்ற செய்தியின் ஊக்குவிப்பால் கொழும்பு சந்தையில் எல்லா பங்கு விலைகளும் 94 வீதத்தை அல்லது 7.7 வீதத்தை எட்டின. பொருளாதாரம் வலுவற்றுள்ளது. கடந்த வாரம் மத்திய வங்கி, முதற் காலாண்டில் விவசாயம் மற்றும் மின் உற்பத்தி மீதான வரட்சியின் தாக்கத்தின் காரணமாக உத்தேச வளர்ச்சி வீதத்தை 6 வீதத்தில் இருந்து 5 வீதமாக குறைத்துக் காட்டியது. அபெர்டீன் எசெட் மெனேஜ்மன்ட் ஏசியாவின் ஒரு முதலீட்டு முகாமையாளரான அட்ரியன் லிம், பெரும் வர்த்தகர் பிரிவினருக்காக டெயிலி மிரர் பத்திரிகைக்கு பேசும் போது: "சமாதானம் நிலைத்திருந்தால், பொருளாதாரம் 5 வீதத்தால் வளர்ச்சியடைய முடியும். சமாதானம் நிலைத்திருக்காவிட்டால் எல்லா பந்தயங்களும் ஒதுங்கிவிடும்," என்றார். குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க), சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் பல சிறு கட்சிகளின் கூட்டமைப்பான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது, சமாதான முன்னெடுப்புகள் சம்பந்தமாக இனவாத பதட்ட நிலைமைகளைத் தூண்டிவிடுவதன் மூலமும், ஐ.தே.மு வின் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிரான பரந்த அதிருப்தியை சுரண்டிக்கொண்டதன் மூலமும் ஏப்பிரல் 2 தேர்தலில் வெற்றி பெற்றது. எவ்வாறெனினும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பொருளாதார மறுசீரமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் நெருக்குதல்களுக்கு முகம்கொடுத்துள்ளது. அது, தமது வாக்குறுதிகளான உர மாணியம் மற்றும் சமூகநலத் திட்டங்களுக்கு செலவுசெய்யத் தள்ளப்பட்டுள்ளதோடு சர்வதேச ரீதியில் அதிகரித்துவரும் எண்ணெய் விலையையும் எதிர்நோக்குகிறது. புளூம் பேர்க் செய்தி ஏஜன்சிக்கு வழங்கிய ஒரு பேட்டியில், நிதி அமைச்சர் சரத் அமுனுகம, அரசாங்கம் வரவு செலவு பற்றாக்குறையை குறைக்கும் ஒரு முயற்சியாக, ஸ்ரீலங்கா டெலிகொம், ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸ் மற்றும் ஏனைய கம்பனிகளில் அதன் பங்கை விற்றுத்தள்ளவுள்ளதாக சுட்டிக்காட்டினார். சமாதான முயற்சிகளிலான எந்தவொரு பின்னடைவும், சர்வதேச உதவி, கடன் மற்றும் முதலீட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, அரசாங்கத்தின் நிதி நெருக்கடியையும் மோசமாக்கும். விடுதலைப் புலிகளின் உடன்பாடு தனது பங்கிற்கு விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கான தமது ஆதரவை உடனடியாக வெளிப்படுத்தினர். விடுதலைப் புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளரான அன்டன் பாலசிங்கம் கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலான வன்னி பிராந்தியத்தில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டின் போது, புதிய அரசாங்கத்தின் ஆரம்ப முயற்சிகள் "மிகவும் திருப்திகரமானது" எனத் தெரிவித்தார். அவரது கருத்துக்கள், பேச்சுக்களுக்கான கட்டமைப்பை உருவாக்க முயற்சித்துவரும் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜேன் பீட்டர்சன் உட்பட நோர்வே அலுவலர்களுடனான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே வெளியானது. விடுதலைப் புலிகள், குமாரதுங்கவுடனும் ஜே.வி.பி யுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது சம்பந்தமான தமது எதிர்ப்பை தேர்தலுக்கு முன்னதாகவே கைவிட்டுவிட்டது. பத்திரிகையாளர் மாநாட்டில் குமாரதுங்கவின் போலியின்மையைப் பற்றி பாலசிங்கத்திடம் கேட்டபோது: "ஜனாதிபதி சமாதானப் பேச்சுக்களை அவசரமாக தொடங்குவதில் அக்கறை காட்டுவது ஏன் என்பது எமக்கு நன்றாகத் தெரியும். மற்றும், அவரது நேர்மையைப் பற்றி கேள்வியெழுப்பும் அல்லது எமது நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் அல்லது அவரை பகிரங்கமாக கண்டனம் செய்யும் தேவை எமக்கில்லை," என பிரகடனப்படுத்தினார். 2002 இலும் மற்றும் 2003 இலும் முன்னைய ஐ.தே.மு அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், தீவின் வடக்கு கிழக்கில் ஒரு தனித் தமிழீழ அரசுக்கான விடுதலைப் புலிகளின் கோரிக்கையை அதன் பேச்சாளர் வெளிப்படையாக கைவிட்டார். விடுதலைப் புலிகள் நிராயுதபாணிகளாக வேண்டும் எனவும் கொழும்புடன் ஒரு வரையறுக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை அடைய வேண்டும் எனவும் வாஷிங்டனும் புது டில்லியும் நெருக்குகின்றன. இந்தியாவில் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அரசாங்கம் விடுதலைப் புலிகளின் அரசியல் நெருக்கடிகளை உக்கிரமாக்குவதாகத் தோன்றுகிறது. வாஷிங்டனில் கதிர்காமர் சுட்டிக்காட்டியது போல், இந்தியா, தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கணவரான இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆற்றிய பங்குக்காக அவரை நாடுகடத்த அழுத்தம் கொடுக்கும். கொழும்பு அரசாங்கத்தைப் போலவே, விடுதலைப் புலிகளும், நிதி நெருக்கடிகளையும் மற்றும் அடிப்படை வசதிகள், வடக்கு கிழக்கில் யுத்தத்தால் அழிவுற்றவற்றை மீண்டும் கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் நிலவும் தொடர்ச்சியான பற்றாக்குறைகளையிட்டு தமிர்களுக்கு மத்தியில் வளர்ச்சிகண்டுவரும் வெறுப்புக்கும் முகம் கொடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் வாக்குறுதியளிக்கப்பட்ட சில நிதி உதவிகளைப் பெறுவதில் நம்பிக்கையற்றுள்ள அதே வேளை, உள்ளூர் ஜனங்களின் மத்தியில் தமது சொந்த ஆதரவை பெரிதாக்கிக்கொள்வதன் பேரில் அது சிதறாமல் கட்டுப்படுத்த வேண்டியும் உள்ளது. அதன் பெறுபேறாக, எந்தவொரு பேச்சுவார்த்தையும் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலான ஒரு இடைக்கால நிர்வாகத்துக்கான பிரேரணைகளான இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையை அமைப்பதை இலக்காகக் கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறது. ஆயினும், இடைக்கால நிர்வாக சபைக்கான கோரிக்கை விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான தற்போதைய பிளவை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. விடுதலைப் புலிகள், சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தனது நிபந்தனைகளை கடந்த வருடம் வலியுறுத்தியது. அது முன்னைய ஐ.தே.மு அரசாங்கம் முன்வைத்த பல பிரேரணைகளை நிராகரத்ததோடு அக்டோபரில் தனது சொந்த தன்னாட்சி அதிகாரசபை திட்டத்தையும் முன்வைத்தது. இந்தப் பிரேரணைகள் ஒரு சுதந்திர தமிழ் அரசை ஸ்தாபிப்பதற்கான நகர்வு என குமாரதுங்க, ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஜே.வி.பி யும் உடனடியாக கண்டனம் செய்தனர். சில நாட்களின் பின்னர், குமாரதுங்க தனது ஜனாதிபதி அதிகாரங்களைப் பயன்படுத்தி மூன்று முக்கிய அமைச்சுக்களை பறிமுதல் செய்ததோடு, கொழும்பில் ஒரு நீண்ட அரசியல் விட்டுக்கொடுப்பற்ற நிலைமையையும் ஏற்படுத்தினார். இது அரசாங்கத்தை பதவிவிலக்குவதில் முடிவடைந்தது. தன்னாட்சி அதிகாரசபை பற்றிய பேச்சுக்களில் அக்கறை செலுத்தியதற்காகக் கூட ஐ.தே.மு வை துரோகிகளாக கண்டனம் செய்ததால், இந்த விடயம் தொடர்பாக குமாரதுங்கவால் வழங்கப்படும் எந்தவொரு சலுகையும் புதிய அரசாங்கத்துக்குள் பதட்டநிலைமைகளை உக்கிரமாக்கும். விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் முயற்சியில், தன்னாட்சி அதிகாரசபை பற்றி கலந்துரையாடுவதற்காக குமாரதுங்க விருப்பம் தெரிவித்த போதிலும், அது யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இறுதியான அரசியல் உடன்பாடுகள் சம்பந்தமான பேச்சுவராத்தைகளின் ஒரு பாகமாக மத்திரமே இருந்தது. குமாரதுங்கவின் பிரேரணைகளின் இறுதி விளைவு எந்தவொரு "இடைக்கால நிர்வாகசபையும்" அமைக்கப்படுவதை காலவரையறையற்று தாமதமாக்குவதாகவே அமையும். இதையே விடுதலைப் புலிகள் உடனடியாக நிராகரித்தனர். சமாதான பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதற்காக முயற்சிப்பதன் மூலம், குமாரதுங்க ஒரு நெருக்கடியான பாதையில் பயணிக்கின்றார். விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகையும் அண்மைய மாதங்களாக அவர் தங்கியிருக்கும் முக்கிய தட்டுக்களின் --இராணுவம் மற்றும் சுத்நதிரக் கூட்டமைப்பில் இப்போது அங்கம் வகிக்கும் ஜே.வி.பி போன்ற சிங்களத் தீவிரவாத குழுக்கள்-- எதிர்ப்பை உடனடியாக தூண்டிவிடும். அரசாங்கம் பாராளுமன்றப் பெரும்பான்மையின்றி இருப்பதோடு, ஒரு சிங்கள-பெளத்த மேலாதிக்க வேலைத்திட்டத்தின் அடிப்படையில் பெளத்த பிக்குகளை தேர்தலில் நிறுத்திய ஜாதிக ஹெல உறுமயவின் (ஜே.எச்.யூ) மெளன ஆதரவில் நம்பிக்கை வைத்துள்ளது. சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற சபாநாயகருக்கான வேடபாளர் தோல்வியடைந்ததை அடுத்து அதன் பலவீனம் அம்பலத்துக்கு வந்தது. குறிப்பிடத்தக்கவகையில், அதே தினம், சமாதான முன்னெடுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கையை குமாரதுங்க தொடங்கினார். எதர்கட்சியான ஐ.தே.மு வெற்றிபெறவிருந்த நிலையில், குமாரதுங்கவின் இலக்கு, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை நாடுவதும் அதன் மூலம் தனது அரசியல் பாதுகாப்பு ஜே.வி.பி மற்றும் ஜே.எச்.யூ வில் தங்கியிருப்பதை குறைத்துக்கொள்வதாகவும் இருந்தது. ஆயினும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்கவில்லை. ஐ.தே.மு பேச்சாளரும் முன்னைய அரசாங்கத்தின் பிரதான பேச்சுவார்த்தையாளருமான ஜீ.எல்.பீரிஸ், எதிர்க்கட்சி சுதந்திரக் "கூட்டமைப்பின் பாசாங்குகளை ஆதரிக்காது. அது பாராளுமன்றப் பெரும்பான்மையை அடைவதற்காக சமாதான முன்னெடுப்புகளை ஒரு சூழ்ச்சித் திட்டமாக பயன்படுத்துவதோடு, நிதி உதவியளிக்கும் நாடுகளிடமிருந்து மிகவும் அவசியமான நிதிகளைப் பெற்றுக்கொள்ளவும் பயன்படுத்துகிறது," என பிரகடனம் செய்தார். அரசியல் தீர்வு காண்பது பற்றிய விடயத்தில் ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஜே.வி.பி ஆகியவற்றுக்கிடையிலான கூர்மையான பிளவுகளை ஐ.தே.மு முதலில் சுட்டிக்காட்டியது. ஜே.வி.பி, வடக்கு கிழக்கில் மாகாண மட்டத்தில் வரையறுக்கப்பட்ட அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் ஸ்ரீ.ல.சு.க வின் திட்டத்தை தொடர்ச்சியாக எதிர்க்கின்றது. இந்த எல்லவிதமான பதட்டங்களும் விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களுக்கான எந்தவொரு தயாரிப்பும் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் நிச்சயமாக உக்கிரமடையும். கடந்த வருடம் தோன்றிய அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்குப் பதிலாக, குமாரதுங்க, முக்கிய கொள்கைகளை அமுல்படுத்த முயற்சிக்கும் ஒரு மிகவும் ஸ்திரமற்ற சிறுபான்மை அரசாங்கத்திற்கு தலைமை வகிக்கின்றார். இந்தக் கொள்கைகள் கடந்த இரு வருடங்களாக கடுமையான எதிர்ப்புக்குள்ளாகின. அது மேலதிக அரசியல் குழப்பத்திற்கான வழிமுறையாக அமையும். |