World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

New Indian ministry to continue right-wing policies

புதிய இந்திய அமைச்சரவை வலதுசாரி கொள்கைகளையே தொடரும்

By Deepal Jayasekera
29 May 2004

Back to screen version

சென்ற சனிக்கிழமையன்று பதவி ஏற்றுள்ள இந்திய அமைச்சரவை, காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கம் அதன் முந்திய அரசாங்கத்தைப்போல் அதே வலதுசாரி கொள்கைகளையே அடிப்படையில் பின்பற்றும் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

தனது பல்வேறு கூட்டணி கட்சிக்காரர்களுக்கும் பதவிகளை தருவதற்காக காங்கிரஸ் 68- அமைச்சர்களை - 28 காபினெட் அமைச்சர்களையும் மீதமுள்ளவர்கள் இணையமைச்சர்களாகவும் நியமித்துள்ளது. 545- உறுப்பினர்களைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் காங்கிரசிற்கு 145- உறுப்பினர்களே உள்ளனர், மற்றும் இது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் (United Progressive Alliance-UPA) இடம் பெற்றுள்ள பல்வேறு வகையான பிராந்திய கட்சிகளின் ஆதரவை அதிகம் சார்ந்திருக்கிறது. ஞாயிறன்றுதான் முழு அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது, அதன் மூலம் பின்னணியில் நடைபெற்ற பேரங்களின் தன்மை தெளிவாயிற்று.

பெரும்பாலான உயர்ந்த பதவிகளில், 28 காபினெட் அமைச்சர்களில் 18 காங்கிரசை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது, இவர்கள் 1970-களிலும், 1980-களிலும் இந்திராக காந்தி மற்றும் அவரது புதல்வர் ராஜீவ் காந்தி அரசாங்கத்தில் முன்னர் அமைச்சர்களாக பணியாற்றியவர்களாவர். ராஜீவுடைய மனைவி சோனியா காந்தி, மன்மோகன் சிங் பிரதமராக ஆவதற்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டார், அவர் எந்த அமைச்சர் பதவியையும் பெறாவிட்டாலும் காங்கிரஸ் கட்சித்தலைவர் என்ற முறையில் கணிசமான அரசியல் செல்வாக்கைப் பெறுகிறார்.

''பெரிய நான்கு'' அமைச்சகங்களான நிதி, வெளிவிவகாரங்கள், பாதுகாப்பு மற்றும் உள்துறை ஆகியவை காங்கிரசின் மூத்த பழம் பெரும் தலைவர்களுக்கு தரப்பட்டிருக்கிறது.

பழனியப்பன் சிதம்பரம் முக்கியத்துவம் வாய்ந்த நிதியமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது பெரு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்கின்ற மற்றொரு முயற்சியாகும். பிரதமர் மன்மோகன் சிங்கைப்போல் இவரும் IMF மற்றும் உலக வங்கியின் பொருளாதார மறுசீரமைப்பு கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நீண்ட நிலைச்சான்றைக் கொண்டவர். 1991-முதல் 96 வரை நரசிம்மராவ் அரசாங்கத்தில் வர்த்தக அமைச்சராக பணியாற்றி வந்த சிதம்பரம் இந்திய பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்துவிடுவதில் சிங்குடன் ஒத்துழைத்தார்.

வேலையிழப்பு மற்றும் வாழ்க்கைத்தரம் சீர்குலைவின் காரணமாக 1996-தேர்தலில் நரசிம்மராவ் அரசாங்கம் தோல்வியடைந்ததும், 1996-முதல் 98-வரை ஐக்கிய முன்னணி அரசில் (United Front-UF) நிதியமைச்சாரக சிதம்பரம் பணியாற்றிவந்தார். 1997-ல் அவர் கொண்டுவந்த, இன்றைக்கும் நிதி நிபுணர்கள் வர்த்தகத்திற்கான ''கனவு பட்ஜெட்'' என்று குறிப்பிடுபவையால், பெரிய நிறுவனங்களின் வரிகள் குறைக்கப்பட்டன, பணக்காரர்களுக்கு வருமானவரி குறைக்கப்பட்டது, காப்புவரி விகிதங்கள், இதர வரி விதிப்புக்கள் சீரமைக்கப்பட்டன. இவர் பெயர் குறிப்பிட்டவுடன் இந்திய பங்குச் சந்தை மிகுந்த உற்சாகத்தோடு செயல்பட தொடங்கியது, ஒரு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் சிதம்பரத்தை ''ஆசியாவின் தலைசிறந்த நிதியமைச்சர்'' என்று பாராட்டியது.

ஐக்கிய முன்னணி (UF) அரசியலில் சிரம்பரத்தின் அனுபவம் மற்றொரு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. ஐக்கிய முன்னணியைப்போல் இன்றைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சிறுபான்மையாக உள்ளது, ஸ்ராலினிச இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI-M) தலைமையிலான இடதுசாரி அணியின் ஆதரவை நம்பியிருக்கிறது. CPI(M) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப்பெற்று, பொருளாதார மறுசீரமைப்பை மேலும் முன்னெடுத்து செல்வதற்கு சிரம்பரத்துக்கு உள்ள திறமை மற்றொரு கூடுதல் அம்சம் என்று சந்தைகள் கருதுகின்றன.

RGP Foundation- ன் மூத்த பொருளாதார ஆய்வாளர் D.H. Panandikar: ''இது இந்தியாவோடு வர்த்தகங்கள் வைத்துக்கொள்வதற்கு வழிதிறந்துவிடப்படுகிறது, என்பதன் சமிக்கைதான்'' என்று அறிவித்தார். ஆக்கபூர்வமாக (சந்தைகளுக்கு) இயங்குவதற்கு ஊக்குவிப்பாக அமையும். அவர் மிகவும் கூர்மையான ஆற்றல் உள்ள அரசியல்வாதி எனவே இடதுகளை கட்டுப்படுத்திச் செல்வார் என எதிர்பார்க்கிறேன்''.

புதிய அரசாங்கம் பொருளாதார சீரமைப்பு திட்டத்தை தொடர்ந்து கடைபிடிக்கும் என்றும் நிதிநிர்வாக பொறுப்புணர்வு செயல்பாட்டில் உறுதியோடு இருப்பதாகவும் இந்த வாரம் சிதம்பரம் அறிவித்தார். திங்களன்று ''தொடரும் (பொருளாதார சீர்திருத்தங்கள்) என்பது மிகத்தெளிவாக உள்ளது ஏனெனில் மூல சீர்திருத்தக்காரரிடமே (சிங்) திரும்ப செல்கிறோம்'' என்று சிதம்பரம் உறுதியளித்தார். பங்குச்சந்தைகள் அவரது நியமனத்தை வரவேற்றன. திங்களன்று பம்பாய் பங்குச்சந்தையில் பங்குகள் விலை 162 புள்ளிகள் அல்லது 3.26 சதவீதம் உயர்ந்தன.

நட்வர் சிங், புதிய வெளிவிவகார அமைச்சர், பாரதிய ஜனதாக் கட்சி (BJP) தலைமையில் நடைபெற்ற அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கைப்போக்கிலிருந்து அடிப்படை மாற்றம் எதுவும் இருக்காதென்று ஏற்கனவே ஊடகங்களுக்கு உறுதியளித்திருக்கிறார். ''வெளியுறவுக் கொள்கை பரிணாம வளர்ச்சியாக இருக்கவேண்டுமே தவிர புரட்சிகரப் போக்கில் அமைவதாக இருக்காது. எந்தக் கொள்கை அல்லது தத்துவத்தோடும் எங்களது கொள்கை முடிச்சுப்போட்டுக் கொண்டிருக்கவில்லை. எங்களது மிக முக்கியமான தேசிய நலன்களைக் கருத்தில் கொண்டு நாங்கள் முடிவு செய்வோம்'' என்று இந்தவாரம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

சிங் இராஜதந்திரியாக நீண்டகால அனுபவம் உள்ளவர், சீனா, பிரிட்டன், மற்றும் பாக்கிஸ்தான் உள்பட இவற்றில் இந்திய தூதராக பணியாற்றியவர், ராஜீவ்காந்தியின் அமைச்சரவையிலும் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றியவர்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை BJP-ன் அனுகுமுறைப்போக்கு அமெரிக்காவுடன், நெருக்கமான ராஜதந்திரத்துறை, இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதை மையமாகக் கொண்டிருந்தது, இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய, இந்தியாவின் பாரம்பரிய ''அணி-சேராக் கொள்கை'' யிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது சிங் இந்திய தேசியவாதத்தை கிளறிவிடுகின்ற வகையில் ''பாதுகாப்பு செயற்திட்டம்: நாட்டின் முன்னுள்ள பிரச்சனைகள்'', என்ற தலைப்பில் ஒரு ஆவணத்தை வெளியிட்டார். அமெரிக்க உறவில் இந்தியாவை கீழ்படியும் நிலைக்கு தள்ளிவிட்டதாக சிங், BJP -மீது குற்றம் சாட்டினார், காஷ்மீரில் ''பாக்கிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதத்தை'' சமாளிக்க தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

என்றாலும், திங்களன்று புஷ் நிர்வாகத்தோடு உள்ள உறவில் கடுமையான மாற்றம் இருக்காது, என்பதை சிங் தெளிவுபடுத்தினார். ''நாங்கள் இருவரும், இரண்டு பெரிய ஜனநாயகங்கள். இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே உறவுகள் சீராகச்செல்ல வேண்டும். சம்பவங்கள் அடிப்படையில் அமையக்கூடாது என்பதில் நமது நலன்களும், அவர்களது நலன்களும் சர்வதேச நலன்களும், சம்மந்தப்பட்டிருக்கின்றன'' என்று கூறினார்.

சிங் மேலும் கூறினார்: ''எங்களுக்கு கருத்துவேறுபாடுகள் [வாஷிங்டனுவுடன்] உண்டு, ஈராக் தொடர்பாக எங்களுக்கு வேறுபாடுகள் உண்டு. துருப்புக்கள் அங்கே செல்வதை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.'' இப்படி ''வேறுபாடுகள்'' என்று கூறப்படுவது மிகவும், மந்தமானது. புஷ் நிர்வாகம் இந்திய துருப்புக்களை ஈராக்கிற்கு அனுப்ப வேண்டுமென கேட்ட நேரத்தில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் எழுப்பிய ஒரே ஆட்சேபனை ஐ.நா- மேற்பார்வையில் அவை அனுப்பப்பட வேண்டும் என்பதுதான். உள்நாட்டில் எதிர்ப்பு வளர்ந்து கொண்டிருந்ததாலும் ஈராக்கில் புதை சேற்றில் நெருக்கடி முற்றிக்கொண்டிருந்ததாலும் முந்திய அரசாங்கம் துருப்புக்களை அனுப்புவதில்லை என்று முடிவு செய்தது.

''பாக்கிஸ்தானுடன் நட்புறவு, நல்லுறவு அமைவதற்கான பேச்சுவார்த்தைகள் நீடிக்குமென்று'' சிங் அறிவித்தார். பிஜேபி-யை போன்று, காங்கிரஸும் இந்த பிராந்தியத்தில் தனது முதன்மை நிலையை நிலைநாட்ட இராணுவ வலிமையைவிட பொருளாதார வலிமையையே சார்ந்திருக்க வேண்டும் என்று கருதுகிறது, இதன் மூலம்தான் தனது பாரம்பரிய எதிரி நாட்டிற்கு மேல் முன்னேறிச் செல்லமுடியும் என்று கருதுகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் ''பாங்கிஸ்தானுடன் போர் என்ற பேச்சை மாற்றுவதற்கு ஒரு வழி கண்டாக வேண்டும்.... இந்தப் போக்கின்மூலம் நமது முழு பொருளாதார வலிமை வாய்ப்புக்களையும் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை'' என்று International Herlad Tribune க்கு தெரிவித்தார். அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிரச்சனையில் பாக்கிஸ்தானுக்கு எந்தவிதமான சலுகையும் காட்டப்படமாட்டாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிந்துசெல்ல அல்லது இன்றைய காஷ்மீர் எல்லைகளை மாற்றியமைக்க எந்த வழியும் இல்லை என்று மன்மோகன் சிங் அறிவித்தார்.

பிரணாப் முகர்ஜி, நீண்டகால காந்தி குடும்ப விசுவாசி, பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்திராகாந்தி அமைச்சரவையில் நிதியமைச்சராக பிரதமருக்கு அடுத்தப்பொறுப்பில் பணியாற்றிவந்தார். 1970-களில் தொடங்கி, 1990-களின் நடுபகுதிவரை வர்த்தகம், எஃகு மற்றும் சுரங்கங்கள் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் காங்கிரஸ் அரசாங்கங்களில் பணியாற்றி வந்திருக்கிறார். இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு என்பதை நிலைநாட்டுவதற்கு குறிப்பாக வாஷிங்டனுடன் இராணுவ உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதப்படுவதால் பாதுகாப்புத்துறை முக்கியத்துவம் மிகுந்ததாக கருதப்படுகிறது.

இந்திய இராணுவப்படைகளை நவீனமயமாக்குவது நீடிக்குமென்றும் ஆயுத படைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று முகர்ஜி இந்தவாரம் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது தெரிவித்தார். முந்திய BJP தலைமையிலான நிர்வாகத்தில் இராணுவ செலவினங்கள் மிகக்கடுமையாக உயர்ந்தன. பிரதான பாதுகாப்பு தளவாட பேரங்களை தொடர்ந்து செயல்படுத்த நமது சம்மதத்தை புதிய அமைச்சர் தெரிவித்து, இவற்றில் பிரான்சுநாட்டு Scorpion ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் இடம்பெறுகின்றன, இவற்றின் செலவு 2- பில்லியன் அமெரிக்க டாலர்களாகும், புதிய பன்முக செயற்பாட்டுப் போர் விமானமும் இந்த பேரத்தில் இடம்பெற்றிருக்கிறது.

BJP தலைமையிலான ஆட்சியில், இந்தியா இஸ்ரேலுடன் நெருக்கமான இராணுவ உறவுகளை வளர்த்துக்கொண்டது, இராணுவத் தளவாடங்கள் விற்பனையில் இந்தியாவில் இரண்டாவது இடத்திற்கு இஸ்ரேல் வந்தது. அதிநுட்ப Phalcon ரக போர்விமானங்கள் முன்கூட்டி எச்சரிக்கை செய்யும் நுட்ப சாதனங்கள், ஆளில்லா விமானங்கள், ground sensors, துப்பாக்கிகள் ஆகியன இவற்றுள் அடங்கும். இஸ்ரேல் உறவுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று முகர்ஜி அறிவித்தார், கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள எல்லா கட்சிகளுமே பாதுகாப்பு பிரச்சனையில் கருத்து ஒற்றுமையுடன் செயல்படும் என்று அவர் அறிவித்தார்.

சிவராஜ் பட்டீல் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் அவர் தோல்வியடைந்துவிட்டதால் அவர் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது குறித்து ஊடகங்கள் வியப்படைந்தன. அவர் இந்தியாவின் நாடாளுமன்ற மேல்சபை அல்லது ராஜ்ஜிய சபையில் நியமிக்கப்பட வேண்டும். இந்திரா காந்தி குடும்பத்தோடு நீண்டகாலமாக தொடர்புடையவர் மற்றும் முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்களில் பல பதவிகளில் பணியாற்றி வந்திருக்கிறார்.

உள்நாட்டுப்பாதுகாப்பு மற்றும் மாநில உறவுகளை கண்காணிப்பது ஆகிய இந்த உள்துறை, முதலில் முகர்ஜிக்கு ஒதுக்கப்பட்டது. அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர், இடதுசாரிகளின் கோட்டை மேற்குவங்காளம், எனவே தங்களது அரசியல் போட்டித்தலைவர் வலுவான அரசியல் அமைச்சகத்தில் நியமிக்கப்படுவதற்கு இடதுசாரித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கலாம் என்று பல விமர்சகர்கள் கருதுகின்றனர்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் நாட்டின் மிகக் கொடூரமான "பயங்கரவாத எதிர்ப்பு" பொடா (POTA) சட்டத்தை ரத்துச்செய்வதாக உறுதியளித்திருக்கிறது, அது விசாரணை எதுவுமில்லாமல் கைது செய்து காவலில் வைப்பதற்கு போலீசாருக்கு விரிவான அதிகாரங்களை தருகிறது. ஆனால் பட்டீல் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது தற்போது நடைமுறையிலுள்ள குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளே ''நாசம் விளைவிக்கும்'' நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு போதுமானது, பயனுள்ளது என்று விளக்கினார்.

இந்திய பாதுகாப்புப்படைகள் மனித உரிமைகளை மிகக் கொடூரமாக மீறிவரும் காஷ்மீரில் ஆயுதந்தாங்கிய இஸ்லாமிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தளர்த்துவதற்கில்லை என்று அறிவித்தார்.

காங்கிரஸ் வசமுள்ள இதர முக்கியமான அமைச்சகங்கள்: மனிதவள மேம்பாடு- (அர்ஜூன் சிங்) வர்த்தகம் மற்றும் தொழிற்துறை (கமல்நாத்), மின்சாரம்- (பி.எம்.சையீது), நீர்வளம் (பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி), உள்நாட்டு விமானப்போக்குவரத்து (பிரபுல் பட்டேல்) ஆகியனவாகும். இவர் பதவியேற்றவுடனேயே புதுதில்லி- மும்பை விமான நிலையங்கள் திட்டமிட்டபடி தனியார் மயமாக்கப்படும் என்று முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்திருக்கிறார்.

முக்கியமான பதவிகளுக்கு அமைச்சர்களை நியமிப்பதில் நிலவிய போட்டி சிறுபான்மை அரசாங்கத்தின் நிலையற்றத் தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

பீகார் மாநிலத்தைத் தளமாகக் கொண்டிருக்கும் ராஷ்ரிடிய ஜனதா தள கட்சி (RJD) தலைவர் லல்லுபிரசாத் யாதவ் உள்துறை அமைச்சர் பதவியை விரும்பினார் அவரது மாநிலத்தில் 9.5- பில்லியன் ரூபாய்கள் அரசு நிதி சம்மந்தப்பட்ட கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்களை அவர் சந்தித்துக் கொண்டிருக்கிறார். அவரை உள்துறை அமைச்சாரக நியமித்தால், அரசியலில் சங்கடங்கள் உருவாகும். இறுதியாக அவர் ரயில்வே அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சம்மதித்து தனது RJD கட்சியின் 21 M.P-க்கள் ஆதரவை தருவதற்கு உறுதியளித்தார். இந்திய ரயில்வே முறை மிகபிரமாண்டமான வர்த்தக அமைப்பாகும், எனவே நாடாளுமன்றத்தில் ரயில்வேத்துறைக்காக தனிபட்ஜெட் தேவைப்படுகிறது.

லோக் ஜனசக்தி (LJP) தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் ரயில்வே அமைச்சகத்தை குறிவைத்தார். இறுதியில் எஃகு, உர வகைகள், இரசாயனப்பொருட்கள் தொடர்பான துறைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சம்மதித்தார். முன்னாள் பிரதமர் V.P- சிங் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் அஹமது பட்டேல் ஆகியோருடன் நீண்ட விவாதங்களை நடத்தியபின்னர் இறுதியாக பதவியேற்பு விழா தொடங்குவதற்கு 20-நிமிடங்களுக்கு முன்னர்தான் அமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு சம்மதித்தார் என்று கூறப்படுகிறது.

வாரக்கடைசியிலேயே எல்லா விவகாரங்களும் முடிந்துவிடவில்லை. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தமிழ் நாட்டின் திராவிட முன்னேற்றக் கழக (DMK) தலைவர் மு. கருணாநிதி தமது அமைச்சர்கள் அவர்களுக்குரிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மனநிறைவு கொள்ளவில்லை, ''தவறுகள் திருத்தப்படும் வரை'' பொறுப்பேற்க மாட்டார்கள் என்று அறிவித்தார். உறுதிமொழி தரப்பட்ட துறைகள் தமது கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை என்று வலியுறுத்திக்கூறினார். இந்த சிறிய நெருக்கடி செவ்வாய்க்கிழமையன்று தீர்த்துவைக்கப்பட்டது. தெலுங்கான, ராஷ்டிரிய சமிதி (TRS) தலைவர் K. சந்திரசேகர் தமது கப்பல் போக்குவரத்து அமைச்சர் பொறுப்பை தி.மு.க-விற்கு தந்தார்.

பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளின் தாக்கத்தால் பொதுமக்களிடையே நிலவிய ஆவேச உணர்வை பயன்படுத்தி எதிர்பாராத வகையில் பதவிக்கு வந்துவிட்ட காங்கிரஸ் அரசாங்கம், முந்திய கொள்கைகள் நீடிக்குமென்று எந்தவிதமான ஐயப்பாட்டிற்கும் இடமில்லாமல் பெரு வர்த்தக நிறுவனங்களுக்கு சமிக்கைக்காட்டியுள்ளது. புதிய அமைச்சர்கள் பொருளாதார செயற்திட்டங்களை செயற்படுத்த தொடங்கும்போது எதிர்ப்பு வளர்வது நிச்சயம், அதன் மூலம் ஏற்கனவே நிர்வாகத்தில் வெளிப்படையாக நிலவுகின்ற கொந்தளிப்புக்கள் முற்றவே செய்யும். இந்நிலைமையானது, இந்த அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை உறுதி செய்து கொள்ளவும், தனது கொள்கைகளுக்கு உழைக்கும் மக்களிடமிருந்து எழும் தவிர்க்க முடியாத எதிர்ப்பை நீர்த்துப் போகச்செய்யவும் ஸ்ராலினிஸ்டுகள் தலைமையில் இயங்கும் இடது முன்னனியை சார்ந்திருத்தலை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved