World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காOpen Letter to the workers and students of Champaign-Urbana, Illinois, from SEP candidate Oppose the Democratic Party's attack on voters' rights இல்லினோய் சாம்பைன்- உர்பானாவை சேர்ந்த தொழிலாளர் மற்றும் மாணவர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளரிடமிருந்து பகிரங்கக்கடிதம் வாக்காளர்களின் உரிமைகள் மீதான ஜனநாயகக் கட்சியின் தாக்குதலை எதிர்! 24 July 2004 சாம்பைன்- உர்பானா பகுதி தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு SEP வேட்பாளர் ரொம் மக்கமனும் அவரது ஆதரவாளர்களும் வெளியிட்டுள்ள அறிக்கை விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதன் விவரம் வருமாறு: எனது பெயர் ரொம் மக்கமன், நான் 103-வது மாவட்டத்திலிருந்து சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர். என்னை வாக்குப்பதிவில் இடம்பெறச் செய்யும் வகையில் மனுக்களில் 2000-த்திற்கும் மேற்பட்ட குடிமக்கள் கையெழுத்திட்டனர். அவர்களில் பலர் ஈராக்கில் போருக்கும், வாழ்க்கைத்தரம் சிதைக்கப்படுவதற்கும், எதிராக உறுதியான விட்டுக்கொடுக்காத எங்களது எதிர்ப்போடு உடன்படுபவர்கள். தேர்தல்களின்போது விரிவான அடிப்படையில் அரசியல் விவாதங்கள் நடைபெறவேண்டும் என்பதற்காக வாக்குப் பதிவில் இருகட்சி ஏகபோக ஆதிக்க முறையை மற்றவர்கள் எதிர்த்து நிற்கின்றனர். உங்களது ஆதரவிற்காக அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது உங்களில் பலருக்கு ஒன்று தெளிவாகத்தெரியும், நாங்கள் உங்களது கையெழுத்துக்கள் பெற்ற மனுக்களை தாக்கல் செய்து ஒருவாரத்திற்கு பின்னர், 1000-த்திற்கு மேற்பட்ட கையெழுத்துக்களின் சட்டப்பூர்வமான தன்மை குறித்து ஆட்சேபனைகளை கிளப்பி என்னை வாக்குப்பதிவில் கலந்துகொள்வதை தடுப்பதற்கு ஜனநாயகக்கட்சி திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொண்டது. சாம்பைன் கவுண்டி ஜனநாயகக்கட்சி துணைத்தலைவர் Geraldine Parr உங்களது கையெழுத்துக்களில் 1000 த்திற்கு மேற்பட்டவற்றிற்கு ஆட்சேபனை மனுக்களை தாக்கல் செய்தார், உண்மையிலேயே நீங்கள் சாம்பைன் மற்றும் உர்பானா பகுதிகளில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் அல்ல என்று கூறினார். கவுண்டி தேர்தல் அலுவலகத்தில் இந்த ஆட்சேபனைகளை பூர்வாங்கமாக ஆராய்ந்ததில் மிகப்பெரும்பாலான ஆட்சேபனைகள் தவறானவை என்று வெளிப்படுத்தி இருக்கிறது. வாக்குப்பதிவில் இடம்பெறுவதற்கான தகுதியை பெறுவதற்கு தேவையானதற்கு மேல், கையெழுத்துக்களை பெற்றிருக்கிறேன். அப்படியிருந்தும் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தொடர்ந்து இந்த கையெழுத்துக்களின் செல்லுபடியாகும் தன்மை குறித்து தொடர்ந்து ஆட்சேபனைகளை எழுப்புகின்றனர். இந்த கையெழுத்துக்கள் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு உரியவை என்று சந்தேகத்திற்கிடமின்றி சான்றுகள் காட்டப்பட்ட பின்னரும் கூட இந்த ஆட்சேபனைகளை அவர்கள் எழுப்புகின்றனர். ஆரம்பத்திலிருந்தே ஜனநாயகக் கட்சிக்காரர்கள் என்னை வாக்குப்பதிவில் இருந்து நீக்கிவிடுவதற்கு கெட்ட எண்ணத்தோடு வழிமுறைகளை மேற்கொண்டிருக்கின்றனர். ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தள்ளுபடி செய்ய விரும்பிய வாக்காளர்களது வாக்குப்பதிவு அடையாள அட்டைகளைக் கூட சரிபார்க்காமல் மூல ஆட்சேபனைகளை தெரிவித்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஜனநாயகக் கட்சிக்காரர்கள் எனது கையெழுத்தையே ஆட்சேபித்தார்கள், எங்கு வாழுகிறேனோ அங்கு நான் வாக்காளராக பதிவு செய்யப்படவில்லை என்று கூறினார்கள்! எனது வாக்காளர் பதிவு அட்டை சரியான முகவரியில் சரியாகத்தான் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் கையெழுத்துக்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள County Clerk அலுவலக ஊழியர் ஒருவரின் கையெழுத்தை, அவரை நேரில் அழைத்து சரிபார்க்கும் நிலையிருந்தும் கூட ஆட்சேபித்திருக்கின்றனர். உண்மையிலேயே ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தடைக்கல்லாக செயல்படுவதற்கு அப்பாலும் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சட்டவிரோதமாக செயல்படுகிறார்கள். அண்மையில் கையெழுத்துக்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த Kristen Bauer எனது எதிராளியான சட்டசபை உறுப்பினர் Naomi Jakobsson- க்கு சட்டமன்ற உதவியாளர், அந்த வகையில் அவர் சட்டசபை ஜனநாயகக் கட்சி ஊழியராவார். ஆரம்பத்தில் எனது மனுக்களை கோரிப்பெற்று பிரதி எடுத்தவர்கள்கூட சட்டசபை ஜனநாயகக் கட்சி ஊழியர்கள்தான், அவர்களுள் இல்லினோய்சில் மிகுந்த செல்வாக்குள்ள ஜனநாயகக் கட்சித்தலைவரும் அவையின் சபாநாயகருமான Michael Medigan- இன் ஊழியரும் ஒருவர். அவர்கள் அரசு ஊழியர்களாக வரிசெலுத்துவோரின் பணத்தில் சம்பளம் பெறுகின்றவராக கடமைகளை ஆற்றுவதற்கு எதிர்பார்க்கப்படும் சமயத்தில் அவர்களின் வேலை மேற்கொள்ளப்பட்டது. மாநில மற்றும் மத்திய அரசு சட்டம் ஒரு கட்சி சார்ந்த அத்தகைய அரசியல் வேலை அரசாங்க ஊழியர்களால் செய்யப்படுவதை தடுக்கிறது. இந்த நவடிக்கைகளுக்கு எதிரான புகாரை நாம் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்திற்கு மனுச்செய்து விசாரிக்குமாறு கேட்டிருக்கிறோம். சோசலிச சமத்துவக் கட்சியை வாக்குப்பதிவிலிருந்து நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி எனது ஜனநாயக உரிமை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் மட்டுமல்லாமல், எமது மனுக்களில் கையெழுத்திட்டுள்ள 103 வது மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் அனைவரது உரிமைகள் மீதுமான தாக்குதலாகும், அதை விரிவுபடுத்தினால் நாட்டிலுள்ள அனைத்து வாக்காளர்கள் உரிமைகள் மீதும் நடத்தப்படும் தாக்குதலுமாகும். ஜனநாயகக் கட்சிக்காரர்கள் ஜனாதிபதி புஷ்ஷையும் குடியரசுக் கட்சிக்காரர்களையும் எதிர்ப்பதாக கூறிக் கொள்கின்றனர். ஆனால் Champaign- Urbana வாக்காளர்களது உரிமைகளை பறிப்பதற்கு அவர்கள் பயன்படுத்தி வருகின்ற ஜனநாயக விரோத நடைமுறைகள் என்னை வாக்குப்பதிவிலிருந்து நீக்குவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், 2000 தேர்தல்களில் குடியரசுக்கட்சி பல்லாயிரக்கணக்கான புளோரிடா வாக்காளர்களின் உரிமைகளை மிதித்து நசுக்கிவிட்டு தேர்தலையே களவாடிய நடைமுறையிலிருந்து வேறுபட்டதல்ல, மேலும் ஜனநாயக கட்சிக்காரர்கள் எனது மனுவில் கையெழுத்திட்டுள்ள வாக்களர்களை மிரட்டவும் வாக்குரிமையை பறிக்கவும் மேற்கொண்டுள்ள முயற்சிகள் ''Jim Crow'' தெற்கில் கருப்பின வாக்காளர்கள் அவர்களது மிக அடிப்படையான வாக்குரிமையை பயன்படுத்த முடியாமல் தடுத்த கொடூரமான வழிமுறைகளை நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது. இல்லினோய் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் எனது தேர்தல் பிரச்சாரத்தை மட்டுமே குறிவைத்திருக்கவில்லை. ரால்ஃப் நாடர் தாக்கல் செய்துள்ள 35,000- கையெழுத்துக்களில் 20,000 கையெழுத்துக்களை தள்ளுபடி செய்யவும் முயன்றுவருகிறார்கள். நியாயமான தேர்தலில் வாக்காளர்கள் முடிவு செய்வதற்கு விட்டுவிடாமல் இப்படி ஜனநாயகக் கட்சிக்காரர்கள் கெட்ட எண்ணத்தோடு சட்டவிரோதமான நடவடிக்கைகளை எடுப்பது ஏன்? உண்மை என்னவென்றால் குடியரசுக் கட்சிக்காரர்களைப் போல் அவர்களும் செல்வந்தத் தட்டினருக்காகவே குரல்கொடுக்கிறார்கள். சோசலிச சமத்துவக் கட்சி உழைக்கும் மக்களின் நலன்களை முதலில் முன்நிறுத்தி செயல்படுவதன் காரணமாக எனது பிரச்சாரத்திற்கு ஜனநாயகக் கட்சியினர் அஞ்சுகின்றனர். ஈராக்கில் நடைபெற்றுவரும் குற்றகரமான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் மற்றும் பில்லியன் கணக்கான டாலர்கள் விரயமாவதையும், எண்ணெய் கம்பெனிகளின் லாபத்திற்காக தொழிலாள வர்க்க இளைஞர்களை உயிர்ப்பலி கொடுப்பதையும் தடுத்து நிறுத்தவேண்டுமென்று நாங்கள் அழைக்கிறோம். சமுதாய ஏற்றத்தாழ்வுகளுக்கு முடிவு கட்டுகின்ற வகையில் பொருளாதாரம் ஒழுங்கமைக்கப்பட வேண்டுமென்றும் அனைவருக்கும் கல்வி, வீட்டுவசதி, சுகாதார வசதி, கண்ணியமான ஊதியம் பெறுகின்ற வேலைவாய்ப்பிற்கு உறுதிசெய்து தரவேண்டுமென்று கோருகிறோம். அத்தகைய கொள்கைகள் இந்த நாட்டை நடத்திகொண்டிருக்கிற ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற செல்வந்தர் ஆட்சியின் நலனுக்கு அச்சுறுத்தலாகும். என்னை வாக்குபதிவில் கலந்துகொள்ளாது தடுப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சி என்னை மட்டுமே அடக்குவதை நோக்கமாகக் கொண்டதல்ல, மாறாக உழைக்கும் மக்களை எதிர்நோக்கியுள்ள மிக நெருக்கடியான அரசியல் பிரச்சனைகளைப் பற்றி எந்தவிவாதமும், நடக்காமல் தடுப்பதற்குத்தான். நவம்பர் தேர்தலில் அமெரிக்க வாக்காளர்களுக்கு கிடைக்கின்ற மாற்று என்ன? களத்திலுள்ள கெர்ரி - எட்வர்ட்ஸ், புஷ் - செனி ஆகிய நால்வருமே கோடீஸ்வர வேட்பாளர்கள், ஈராக் போரை ஆதரிப்பவர்கள் மற்றும் அமெரிக்க கம்பனிகளின் நலன்களை ஆதரிப்பவர்கள். இந்த காரணங்களால்தான், நவம்பர் வாக்குப்பதிவில் SEPஐ சந்திப்பதை விட, ஜனநாயகக் கட்சிக்காரர்கள் பொதுமக்களது மிக அடிப்படையான சுதந்திரத்தை - தாங்கள் விரும்புகிற கட்சிக்கு வாக்களிக்கிற உரிமையை மறுப்பதற்கு மிக மோசடியான தந்திரங்களைக் கையாண்டு வருகிறார்கள். அமெரிக்கா ஒரு சுதந்திர மற்றும் ஜனநாயக நாடு என்று நினைப்பவர்கள் இந்த அனுபவத்திலிருந்து படிப்பினைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அரசு அதிகாரிகள் நூற்றுக்கணக்கான வாக்காளர்களை வாக்களிக்க தகுதியில்லாதவர்கள் என்று பிரகடனப்படுத்த முடியுமென்றால் அமெரிக்காவில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இப்போது, ஆளும் செல்வந்த தட்டிற்குள்ளேயே பயங்கரவாத அச்சுறுத்தல் என்ற போர்வையில் அமெரிக்க தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென்று கடுமையாக ஆலோசனை நடத்தவேண்டும் என்ற குரல் எழுந்துள்ள பொழுது, ஜனநாயகத்தை தற்காத்து நிற்பது மிக அவசரமான முக்கியத்துவத்தை எடுத்திருக்கிறது. SEP வாக்குப்பதிவில் இடம்பெறுவதற்கான உரிமையை ஆதரிப்பதன் மூலமும் அதனை வாக்குப்பதிவிலிருந்து அகற்றுவதற்கு ஜனநாயகக் கட்சியின் முயற்சிகளை எதிர்ப்பதன் மூலமும் உங்களது உரிமையை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.ஜனநாயகக் கட்சிக்காரர்களின் ஆட்சேபனைகளை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வலியுறுத்தும் கடிதங்களை, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்: mail@champaigncountyclerk.com, அதன் நகலை editor@wsws.org எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். |