World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

The NSSP, the "peace process" and the Sri Lankan elections

நவ சமசமாஜக் கட்சியும் "சமாதான முன்னெடுப்புகளும்" இலங்கைத் தேர்தலும்

By the Socialist Equality Party
8 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கைத் தேர்தலில் நவ சமசமாஜக் கட்சி (ந.ச.ச.க) முற்றிலும் மானக்கேடான பாத்திரத்தை இட்டுநிரப்ப முன்வந்துள்ளது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவி தட்டினரும் இரு பிரதான கட்சிகளையிட்டும் ஆழமாக அதிருப்திகண்டுள்ள ஒரு நிலைமையின் கீழ், ந.ச.ச.க மற்றும் அதன் "இடது" கூட்டணியும், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும் மற்றும் அவரது கூட்டணியையும் விட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது வலதுசாரி ஐக்கிய தேசிய முன்னணியும் "குறைந்து கெடுதி" கொண்டது என அவர்களை ஊக்குவிக்கின்றன.

ந.ச.ச.க, குமாரதுங்க ஐக்கிய தேசிய முன்னணியை (ஐ.தே.மு) பதவி விலக்கியதும் மற்றும் சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உடனான அவரது கூட்டணியும் நாட்டை மீண்டும் உள் நாட்டு யுத்தத்திற்குள் தள்ளும் என்ற பரந்த பீதியை சூறையாடி வருகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, பாராளுமன்ற விதிமுறைகளை பகிரங்கமாக தகர்த்தெறிந்துள்ள குமாரதுங்க, அதிகரித்தளவில் அதிகாரங்களை தனது சொந்தக் கைகளுக்குள் கொண்டுவரும் அபாயம் இருந்துகொண்டுள்ளது. ந.ச.ச.க, தனது நடவடிக்கை மூலம், சிதைவடைந்துவரும் உத்தியோகபூர்வ அரசியல் மாளிகையை தூக்கிநிறுத்த முண்டுகொடுப்பதுடன், எல்லாவற்றுக்கும் மேலாக, தொழிலாளர்கள் ஒரு புரட்சிகர சோசலிச பதிலீட்டை நோக்கி திரும்புவதையும் தடுக்கிறது.

பெப்ரவரி 7 அன்று குமாரதுங்க ஐ.தே.மு அரசாங்கத்தை வெளியேற்றி சற்றே நான்கு நாட்கள் ஆனவுடன், புதிய இடதுசாரி முன்னணி (பு.இ.மு) என்ற புதிய கூட்டணியை அமைப்பது பற்றி அறிவிப்பதற்காக, ந.ச.ச.க கொழும்பில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தியது. ந.ச.ச.க தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன பிரதான பேச்சாளராக இருந்தார். 1994ல் ந.ச.ச.க வில் இருந்து பிரிந்து சென்ற, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவும், லங்கா சமசமாஜக் கட்சியில் (ல.ச.ச.க) இருந்து அன்மையில் பிரிந்து சென்ற, லங்கா சமசமாஜக் கட்சி மாற்றுக் குழுவில் இருந்து சந்திரா குமாரகேயும் அங்கு வருகைதந்திருந்தனர். இந்த மூன்று கட்சிகளும் தம்மை சோசலிஸ்டுகள் என போலியாக கூறிக்கொள்கின்றன.

நான்கு பந்திகளடங்கிய புதிய இடதுசாரி முன்னணியின் (பு.இ.மு) ஊடக அறிக்கை இரு பிரதான கட்சிகளையும் விமர்சிக்கின்றது. குமாரதுங்க, "இனவாதிகள், மதவாதிகள் மற்றும் இராணுவத்தினதும்" அழுத்தங்களுக்கு சரணடைந்து விட்டார். மறுபக்கம், விக்கிரமசிங்க "இந்த வளைந்துகொடுக்காத நகர்வுகளை தடுக்கத் தவறிவிட்டதுடன்" "பூகோள முதலாளித்துவத்திற்கும் தலைவணங்குகின்றார்". மக்கள் "ஒரு ஆபத்தான இனவாத/முதலாளித்துவ முகாமுக்கும்" "பூகோள மூலதனத்தின் தாளத்திற்கு ஆடும் இன்னுமொரு முதாளித்துவ முகாமுக்கும்" இடையில் அகப்பட்டுப்போயுள்ளனர், என அந்த அறிக்கை பிரகடனம் செய்கின்றது.

பு.இ.மு "மக்களைத் துயரத்திலிருந்து காப்பாற்றும் ஒரு சக்தியைக்" கட்டியெழுப்ப அர்ப்பணித்துக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கை பிரகடனம் செய்கிறது. எவ்வாறெனினும், அந்த "சக்தி" மக்கள் அல்ல. தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான பாத்திரத்தையும் ஐயத்திற்கிடமின்றி நிராகரிக்கும் கருணாரட்ன, பத்திரிகையாளர் மாநாட்டில், "சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காக அடுத்துவரும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதே" பு.இ.மு வின் குறிக்கோள், என தெரிவித்தார். ஜனநாயக இடதுசாரி முன்னணியின் (ஜ.இ.மு) தலைவர் வாசுதேவ நாணயக்கார, "சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதே" முன்னணியின் இலக்கு என பிரகனப்படுத்தினார்.

உண்மையில், "சமாதான முன்னெடுப்புகளை" பாதுகாத்தல் எனும் பெயரால், ந.ச.ச.க மற்றும் ஜ.இ.மு வும் மேலும் மேலும் விக்கிரமசிங்கவிற்கு இணங்கிப் போவதோடு, ஜே.வி.பி மற்றும் குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் (ஸ்ரீ.ல.சு.க) இடையிலான கூட்டணிக்கு ஒரு விரும்பத்தக்க மாற்றீடாக ஐக்கிய தேசிய முன்னணியை (ஐ.தே.மு) முன்னேறச் செய்கின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம், இந்த இரு கட்சிகளும், தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களை அந்த முதலாளித்துவ வர்க்கத்திற்கும் மற்றும் பூகோள மூலதனத்திற்கும் அடிபணியச் நேரடியாக செய்கின்றனர்.

அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக எழும் வேலை நிறுத்த மற்றும் எதிர்ப்பு அலைகளை நசுக்குவதற்காக அரசாங்கத்திற்கு உதவி செய்வதில் ந.ச.ச.க மற்றும் ஜ.இ.மு வின் பாத்திரம் இங்கு தெளிவாகியுள்ளது. ந.ச.ச.க மற்றும் ஜ.இ.மு தலைவர்கள், குமாரதுங்கவுடனான முரண்பாட்டில் தமது ஆதரவை வழங்கவும், வேலை நிறுத்த இயக்கங்களை கையாள்வது எப்படி என்பதையிட்டு ஆலோசனை வழங்கவும் ஜனவரி 5 அன்று விக்கிரமசிங்கவை சந்தித்ததோடு, சில சிரேஷ்ட அரசாங்க அமைச்சர்களையும் பல சந்தர்ப்பங்களில் சந்தித்தனர்.

ஜனவரி பிற்பகுதியில், புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக்குவதற்கு எதிராக 17,000 புகையிர ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்த போது, ந.ச.ச.க தலைமையிலான சிறிய தொழிற்சங்கமான தொழில்நுட்ப சங்கமானது, ஏனைய ஐ.தே.மு சார்பு தொழிற்சங்கங்களோடு சேர்ந்து அரசாங்கத்துடன் ஒரு உடன்படிக்கையை கைச்சாத்திட்டதன் மூலம் தனது திட்டங்களை ஒத்திவைத்ததுடன் சகல தொழிற்சங்க நடவடிக்கைகளையும் நிறைவுபெறச் செய்தது. இந்த முடிவை பாதுகாத்த ந.ச.ச.க தலைவர் கருணாரட்ன, அரசாங்கம் "சமாதான நடவடிக்கைகளை" முன்னெடுத்துச் செல்வதை அனுமதிப்பதற்காக வேலை நிறுத்தங்களை நிறுத்துவது தமது கட்சியின் "கடமையாகும்" என ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் பிரகடனம் செய்தார்.

கருணாரட்ன, மார்ச் 2 நடந்த ஒரு கூட்டத்தில், அவர் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதை நியாயப்படுத்துவதற்காக, "நாம் சமாதானத்தை நிலைநிறுத்துவதற்காக பிசாசுடனும் கூட கூட்டுச் சேர வேண்டும்," எனப் பிரகடனம் செய்தார். இடதுசாரி அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாவிட்டால், மக்கள் சமாதானத்திற்காக செயற்படும் அரசாங்கத்தை அமைக்க வேண்டும். "நாம் சமாதானத்தை விரும்பும் அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு, சமாதானத்தை நிலைநிறுத்துவதற்காக முன்செல்லுமாறு ரணில் விக்கிரமசிங்கவிற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.

சமாதான முன்னெடுப்புகள்

சுமார் இரு தசாப்தங்களாக, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தொழிலாளர்களை யுத்தத்திற்காக அர்ப்பணிக்குமாறு கோரின. இப்போது, புதிய இடதுசாரி முன்னணி, விக்கிரமசிங்கவையும் ஐ.தே.மு வையும் (பிசாசு) ஆதரிப்பதை தவிர வேறு பதிலீடு கிடையாது என தொழிலாளர்களுக்கு கூறுவதுடன், அவர்களின் வாழ்க்கை நிலைமையை "சமாதானத்திற்காக" அர்ப்பணிக்குமாறும் கூறுகின்றது.

ஐ.தே.மு வின் "சமாதான முன்னெடுப்புகளில்" விமர்சனமின்றி சமாதானத்தை அடையாளப்படுத்தும் பு.இ.மு யின் நடவடிக்கையில் ஒரு சிடுமூஞ்சித்தனமான மாயவித்தை இருந்துகொண்டுள்ளது. விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க), உள்நாட்டு யுத்தத்தை ஆரம்பித்திருந்தும் கூட, அது வாழ்க்கை நிலைமைகளை சீரழிப்பதிலும் மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதிலும் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்தும் கூட, பு.இ.மு, குமாரதுங்கவின் ஜே.வி.பி-ஸ்ரீ.ல.சு.க கூட்டணியால் தோற்றுவிக்கப்பட்டுள்ள ஆபத்துக்களுக்கான ஒரே பதிலீடாக ஐ.தே.மு வை ஊக்குவிக்கின்றது. பு.இ.மு வை பொறுத்தவரையில், பெரும் வல்லரசுகளாலும் மற்றும் பெரும் வர்த்தகர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், தொழிலாளர் வர்கக்த்திற்கு யுத்தத்திற்கு தனது சொந்த தீர்வை அபிவிருத்தி செய்வது சாத்தியமற்றதாகும்.

பு.இ.மு ஆர்வத்துடன் ஆதரிக்கும் "சமாதான முன்னெடுப்பு" என்ன?

பல்லாண்டுகளாக அரசாங்கத்தை ஆதரிக்கும் வெளிநாட்டு ஆதரவாளர்களான, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும், இலங்கையில் இரத்தக் களரியையிட்டு அக்கறைகொள்ளாமல் இருந்தன, அல்லது, இனவாத யுத்தத்தில் அரசாங்கப் படைகளை நடைமுறையில் ஆதரித்தன. அவர்கள் "சமாதானத்திற்கு" ஊக்கமளிப்பது இலங்கை மக்கள் மீதான மனிதாபிமான அக்கறையினால் அல்ல. மாறாக, அது இந்தியத் துணைக்கண்டத்தின் பொருளாதார மற்றும் மூலோபாய முக்கியத்துவத்தில் இருந்தே தோன்றுகிறது. 1990களில், பூகோள முதலீட்டாளர்கள், இந்தியாவில் உள்ள மலிவான மற்றும் அறிவுசார்ந்த உழைப்பின் அனுகூலத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பரந்தளவிலான அலுவலகம், கணினி மற்றும் தொழில்நுட்ப சேவையின் மூலம், ஒரு சமயம் "உலகின் அலுவலகம்" என பெயர் குறிப்பிடப்படும் நிலைமைக்கு அந்த நாட்டை மாற்றியமைப்பதற்காக இந்தியாவிற்கு கூட்டமாக வந்துசேர்ந்தனர்.

புஷ் நிர்வாகம் பதவிக்கு வந்ததையடுத்தும் மற்றும் விசேடமாக அமெரிக்கா மீதான செப்டெம்பர் 11 தாக்குதல்களை அடுத்தும் அமெரிக்கா இலங்கையில் மிகவும் நேரடியாக தலையீடுசெய்தது. அமெரிக்கா, "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்ற பதாகையின் கீழ், ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததோடு, புது டில்லியில் உள்ள இந்து மேலாதிக்க அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்து, வளம் நிறைந்த பிராந்தியங்களான மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கும் அருகில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் கொண்ட பிராந்தியம் பூராவும் தமது திட்டங்களை அமுல்படுத்துவதற்காக முயற்சிக்கின்றது.

காஷ்மீரிலும் நேபாளத்திலும் நடைபெறுகின்ற கிளர்ச்சிகளைப் போல், இலங்கையில் நடைபெறும் உள்நாட்டு யுத்தமும் இந்தப்பிராந்தியத்தில் தனது நோக்கங்களுக்கு தடையாக இருப்பதாக அமெரிக்கா கருதுகின்றது. புஷ் நிர்வாகம் "சமாதான முன்னெடுப்புகளுக்கு" ஆதரவு வழங்குவதானது, ஏற்கனவே ஸ்திரமற்ற நிலையிலுள்ள பிராந்தியம், குறிப்பாக கணினி தொழில் நுட்பத்திலும், சேவையிலும், பூகோள முதலீடு குவிந்துள்ள தென் இந்தியா மேலும் உறுதியற்ற நிலைக்குள் விழுவது தவிர்க்கப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகும். அமெரிக்க நலன்கள் பாதுகாக்கப்படும் வரை வெள்ளை மாளிகை சமாதான பேச்சுக்கு ஆதரவு கொடுக்கும். அமெரிக்கா தமிழீழ விடுதலைப் புலிகளை "பயங்கரவாத இயக்கமாக" தொடர்ச்சியாக வகைப்படுத்துவதில், அவர்கள் அடிபணிய மறுக்கும் நிலையில் இலங்கை இராணுவத்தினால் மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கப்படுமானால் அதற்கு வாஷிங்டன் ஆதரவு வழங்கும் தெளிவான ஆபத்து இருந்துகொண்டுள்ளது.

கொழும்பில் உள்ள முதலாளிகளும், நிதி தலைவர்களும் "சமாதான முன்னெடுப்புகளை" ஆதரிக்கின்றனர். இவர்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பங்கள் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், யுத்தத்தின் காரணமாக இலங்கை அதிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருப்பது பற்றி அதிருப்தி அடைந்துள்ளார்கள். அவர்களின் தூண்டுதலால், விக்கிரமசிங்க, சமாதான பேச்சுவார்த்தைகளுடனும் மற்றும் நாட்டை பூகோள மூலதனத்தின் பிராந்திய தளமாக --தெற்காசியாவின் சிங்கப்பூராக-- மாற்றுவதை இலக்காகக் கொண்ட விரிவான பொருளாதார மறுசீரமைப்பு வேலைத் திட்டத்துடனும் முன்சென்றார். விடுதலைப் புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளரான அன்ரன் பாலசிங்கம், 2002ம் ஆண்டு முதற்சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, இலங்கையை "ஒரு புலிப்பொருளாதார" நாடாக மாற்றுவதற்கு தமது இயக்கம் உற்சாகமான ஆதரவு கொடுப்பதாக பிரகடனப்படுத்தினார்.

ஆகவே, "சமாதான முன்னெடுப்புகள்" ஆரம்பத்திலிருந்து பெரும்பான்மையான மக்களின் தேவைகளுக்கும், அபிலாஷைகளுக்கும், எதிராகவே வழிநடத்தப்பட்டது. அதிகாரப் பரவலாக்கலை அடிப்படையாகக் கொண்ட தீர்வை அடைவதற்காக, இலங்கையின் போட்டி ஆளும் பகுதியினருக்கு --சிங்கள தமிழ் முஸ்லிம்-- இடையில் மூடிய கதவுக்குள் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. பேச்சுவார்த்தையின் கட்டமைப்பானது இலங்கையின் உத்தியோகபூர்வ அரசியலின் எல்லா பகுதியிலும் ஊடுருவியுள்ள இனவாதத்தின் ஒரு வெளிப்பாடாகும்.

இறுதி உடன்பாடு இன்னும் முன்மொழியப்படவில்லை. இது சம்பந்மான இணக்கப்பாடும் இல்லை. ஆனால் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாகசபை சம்பந்தமான பலவித திட்டங்களும், பேச்சுவார்த்தைகளைப் போலவே ஜனநாயக விரோத மற்றும் இனவாத தோற்றங்களைக் கொண்டிருக்கின்றது. அரசாங்கமும் விடுதலைப் புலிகளும், அந்தந்த சமூகத்தவரின் தொகையை பிரதிபலிக்கும் வகையில் தெரிவுசெய்யப்படும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சபையை ஸ்தாபிப்பதை பிரேரிக்கின்றன. முன்மொழியப்பட்டுள்ள நிர்வாகம் மக்களின் வாக்கெடுப்பின்றி திணிக்கப்படும். அத்தகைய ஒழுங்குகள், இனவாத பதட்ட நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பதிலாக இன, மத வேறுபாடுகளை ஸ்தாபனப்படுத்துவது மட்டுமல்லாமல், சமாதானத்திற்கு அன்றி எதிர்கால மோதல்களுக்கே வழிவகுக்கும்.

புதிய இடதுசாரி முன்னணியின் "மக்கள் படை"

புதிய இடதுசாரி முன்னணி கடந்த மாதம் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில், "சமாதான முன்னெடுப்புகளை பாதுகாக்கவும் முன்னெடுக்கவும்" "ஒரு மக்கள் படையை" அமைப்பதற்கு "எல்லா முற்போக்கு இடதுசாரி கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும்" அழைப்பு விடுத்திருந்தது. "மக்களின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கும்" மற்றும் "வெளிநாட்டு சக்திகளின் இரும்புப் பிடியிலிருந்து மக்களின் வாழ்க்கை நிலைமைகளை காப்பதற்கும் மக்கள் படை தேவை."

புதிய இடதுசாரி முன்னணி யாருக்கு அழைப்பு விடுக்கின்றது? "மக்கள் படை" என்றால் என்ன? புதிய இடதுசாரி முன்னணியின் பத்திரிகை அறிக்கை, "லங்கா சமசமாஜக் கட்சியும் (ல.ச.ச.க) இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த முன்னணியில் இணையும் என நாம் எதிர்பார்க்கின்றோம்," என பிரகடனம் செய்துள்ளது. எவ்வாறெனினும், சில நாட்களில், இந்த பழைய "தொழிலாளர்" கட்சிகள், "ஆபத்தான இனவாதிகள்/ முதலாளித்துவ முகாம்" என புதிய இடதுசாரி முன்னணியால் வகைப்படுத்தப்பட்ட ஜே.வி.பி - ஸ்ரீ.ல.சு.க கூட்டணியில் சேர்ந்துகொண்டன.

கடந்த காலத்தில் ந.ச.ச.க வும் மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணியும் தமது பிரச்சாரத்துக்கான ஆதரவை அதிகரிப்பதற்காக தங்களுடைய தொழிற்சங்க வளங்களை உபயோகப்படுத்தியிருக்கலாம். ஆனால், ஏனைய நாடுகளில் போலவே இலங்கையிலும், அரசாங்கம் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் தனியார்மயமாக்கத்தை அமுல்படுத்துவதற்கு தொழிற்சங்கங்களின் உதவி தீர்க்கமானது. பல ஆண்டுகளாக இடம்பெற்று வந்த காட்டிக்கொடுப்புகள் தொழிலாளர் மத்தியில் பரந்த அதிருப்திக்கு வழிவகுத்துள்ளது. ந.ச.ச.க மற்றும் புதிய இடதுசாரி முன்னணியினதும் சொந்த இழிவான பாத்திரம் காரணமாக, அவர்களது முன்னைய கணிசமான தொழிற்சங்க அடித்தளம் பொறிவடைந்துள்ளது.

புதிய இடதுசாரி முன்னணியின் "மக்கள் படைக்கான" அழைப்பு வேறு ஒரு தகவமைவைக் கொண்டதாகும்: அது இலங்கையில் அண்மைக்காலமாக மிதமிஞ்சிய முறையில் தோன்றியுள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் அல்லது "என்.ஜீ.ஓ" க்களை நோக்கியதாகும். இந்த என்.ஜி.ஓ க்கள், குறிப்பாக பழைய அரசியல் பாதுகாப்பு வால்வுகளான தொழிற்சங்கங்கள், முதலாளித்துவ தேசியவாத மற்றும் சீர்திருத்தவாத கட்சிகள் தேய்ந்துபோன நிலையில், விசாலமான சர்வதேச வலையமைப்பின் ஒரு பாகமாக மூன்றாம் உலக நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகள் பூராவும் தோன்றின. என்.ஜீ.ஓ க்கள் தொழிலாளர் அமைப்புக்களாக காட்டிக்கொள்ள முயற்சிப்பதில்லை. ஆனால் இந்த அமைப்புகளுக்கு, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, உள்ளூர் முதலாளித்துவ பிரிவுகளும் மற்றும் ஏகாதிபத்திய மையங்களும் நிதி வழங்கி ஆதரவழிக்கின்றன. என்.ஜீ.ஓ க்கள் பல்வேறுபட்ட பரந்த தேவைகளுக்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ள போதிலும், அவர்களது பிரதான இயக்கமானது இலங்கை போன்ற நாடுகளில் சமூக மற்றும் வர்க்க பதட்ட நிலைமைகளின் வெடிப்பு ஒரு வெளிப்படையான புட்சிகர வழியில் நகர்வதை தடுப்பதாகும்.

ந.ச.ச.க வுக்கும் மற்றும் புதிய இடதுசாரி முன்னணிக்கும், விசேடமாக "சமாதான முன்னெடுப்புகளை" விநியோகிப்பதற்காக அமைக்கப்பட்ட பல என்.ஜி.ஓ க்களுடன் தொடர்பு இருக்கின்றது. உள்ளூர் வர்த்தகக் குழுக்கள் உட்பட, பரந்தளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஸ்தாபனங்களுடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள இலங்கை தேசிய சமாதானப் பேரவை மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆகியவையும் இதில் அடங்கும். தேசிய சமாதானப் பேரவையானது அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசாங்க உதவி முகவர்களிடம் இருந்து நிதியை பெறுகின்றது. கிராமப்புற விவகாரங்களில் மட்டும் ஈடுபடும் சர்வோதயம் போன்ற ஏனைய என்.ஜி.ஓ க்களும் தனது சொந்த சமாதான திட்டங்களை ஆரம்பித்துள்ளன. சர்வோதயம் அமெரிக்கா ஐரோப்பா உட்பட 35 நாடுகளிடம் இருந்து நிதியைப் பெறுகின்றது.

இலங்கையில் சிறியதும் பெரியதுமாக 400 என்.ஜீ.ஓ க்களை உள்ளடக்கிய, அண்மையில் உருவாக்கப்பட்ட சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான தேசிய இயக்கத்தில் ந.ச.ச.க வும் புதிய இடதுசாரி முன்னணியும் முக்கிய அமைப்புகளாக இயங்குகின்றன. ந.ச.ச.க தலைவர் கருணாரட்னவும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் அங்கத்தவர் நிமல்கா பெனான்டோவும் அதன் அமைப்பு செயலகத்தின் பகுதியாக உள்ளனர். இதன் பிரதான நோக்கம், சமாதான முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்கின்ற வலதுசாரி ஐ.தே.க உட்பட சகலருக்கும் பொது மேடை வழங்குவதாகும். பெப்ரவரி இறுதியில் நடந்த சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான தேசிய இயக்கத்தின் பகிரங்கக் கூட்டத்தில், கருணாரத்னவும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் நாணயக்காரவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒரே மேடையில் தோன்றி, சமாதானத்துக்கான மனிதன் என்று கூறிக்கொள்ளும் விக்கிரமசிங்கவுக்கு முண்டுகொடுப்பதற்காக தமது "இடது" நற்சாட்சி பத்திரத்தை வழங்கினர்.

ஒரு அழிவுகரமான வரலாறு

தொழிலாள வர்க்கத்திற்கு அழிவுகரமான விளவுகளை வழங்கிய சந்தர்ப்பவாத நடவடிக்கைளில் ந.ச.ச.கவுக்கு நீண்ட வரலாறு உண்டு. அதன் கொள்கையற்ற அரசியலின் அடிச்சுவடு, 1964ல் ட்ரொட்ஸ்கிச அடிப்படையை வெளிப்படையாக கைவிட்டு, குமாரதுங்கவின் தயாரான ஸ்ரீமா பண்டாரநாயக்க தலைமையிலான முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்துகொண்ட ல.ச.ச.க வில் இருந்தே தோன்றுகிறது.

ந.ச.ச.க வை ஸ்தாபித்த கருணாரத்னவும் நாணயக்காரவும், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ல.ச.ச.க வுக்குள் இருந்தார்கள். 1971ம் ஆண்டு கிராமப்புற இளைஞர்களின் கிளர்ச்சியை கொடூரமான முறையில் நசுக்கிய, 1972ல் சிங்கள மொழியை அரச மொழியாகவும் மற்றும் பெளத்த மதத்தை அரச மதமாகவும் ஆக்கி, இனவாத அரசியலமைப்பை அமுல்படுத்திய 1970ம் ஆண்டு பண்டாரநாயக்கவின் இரண்டாவது கூட்டரசாங்கத்தில் ல.ச.ச.க இணைந்தகொண்ட போதும் அவர்கள் அதில் இருந்தார்கள். 1976ம் ஆண்டு பண்டாரநாயக்க ல.ச.ச.க வை ஆளும் கூட்டரசாங்கத்தில் இருந்து வெளியேற்றிய பின்பே அவர்கள் பிரிந்தார்கள்.

எப்படியிருந்த போதும், ந.ச.ச.க லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்து வெளியேறியது கொள்கை அடிப்படையில் அல்ல. ந.ச.ச.க ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே ல.ச.ச.க வின் காட்டிக்கொடுப்புக்கு வழிவகுத்த அடிப்படை அரசியல் தகவமைவையே பின்பற்றியது. ந.ச.ச.க, பிரதான முதலாளித்துவ கட்சிகளான ஐ.தே.க, அல்லது ஸ்ரீ.ல.சு.க வுக்கு அழுத்தம் கொடுக்கும், இனவாத சேற்றில் மூழ்கிப்போன இலங்கையின் உத்தியோகபூர்வ அரசியலை முழுமையாக ஏற்றுக்கொண்டது.

1983ம் ஆண்டு உள்நாட்டு யுத்தத்தை தூண்டியதற்கு பொறுப்பான ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஐ.தே.க அரசாங்கம், 1986ல் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு முகம் கொடுத்ததுடன், மோதலை நிறுத்துமாறு கோரி இந்தியா திணித்த அழுத்தத்தையும் சந்தித்தது. சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் வேலை நிறுத்தங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் நசுக்குவதற்கும், பெயரளவிலான தொழிலாளர் கட்சிகளான சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நவசமசமாஜக் கட்சிக்கும் ஜயவர்தன அழைப்பு விடுத்தார். இந்த மூன்று கட்சிகளும், 1986 ஜூனில் கூட்டப்பட்ட வட்டமேசை மாகாநாட்டில் பங்குபற்றியதுடன் 1987 ஜூலை இந்திய- இலங்கை உடன்படிக்கைக்கு வழிவகுத்த ஒருமாத காலம் நீடித்த கலந்துரையாடலிலும் பங்குபற்றினர். அந்த சமயம் ந.ச.ச.க தலைவர் கருணாரத்ன, அந்த ஒப்பந்தத்தை ஒரு "முற்போக்கு படி" எனவும் "மேற்குலக சக்திகளுக்கு எதிரான ஒரு அடி" எனவும் புகழ்ந்தார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப்பகிர்வினை புதிய மாகாணசபை கட்டமைப்புக்கு வழங்குவதையும், விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்குவதையும் மேற்பார்வை செய்யவதற்காக "அமைதி காப்பவர்கள்" என்ற பெயரில் இந்திய துருப்புக்கள் வடக்கு கிழக்குக்கு அனுப்பிவைக்கப்பட்டன. வடக்கில், இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட விடுதலைப் புலிகள், விரைவில் இந்தியத் துருப்புக்களுடன் மோதலுக்குச் சென்றதுடன், அது நீடித்த இரத்தக் களரிமிக்க மோதலுக்கு வழிவகுத்தது. இந்த ஒப்பந்தம் தெற்கில் அரசியல் நிறுவனத்துக்குள் கூர்மையான வேறுபாடுகளுக்கும் ஜே.விபியின் வெறித்தனமான பேரினவாதப் பிரச்சாரத்திற்கும் வழிவகுத்தது. "இந்திய ஏகாதிபத்தியம்" என கண்டனம் செய்த ஜே.வி.பி, அரசாங்கம் ராஜதுரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டியது.

தனது சொந்த அங்கத்தவர்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ச்சி கண்டுவந்ததால், ஐ.தே.க அதற்கு ஒத்துப் போக நிர்ப்பந்திக்கப்பட்டது. ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கீழான அரசாங்கம், முற்றிலும் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக ஜே.வி.பி யுடன் மறைமுகமாக கூட்டுச் சேர்ந்த அதே சமயம், வடக்கில் இந்திய இராணுவத்தை வெளியேற நிர்ப்பந்திக்கும் நிலைமைகளை உருவாக்க விடுதலைப் புலிகளுக்கு மறைமுக ஆதரவை வழங்கியது. தெற்கில், தமது "தேசப்பற்று" பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுக்க மறுப்பவர்களுக்கு எதிராக பயங்கரவாத ஆட்சியை கொண்டு நடத்துவதற்காக இராணுவம் ஜே.வி.பி யுடன் கைகோர்த்துக்கொண்டது. 1980களின் இறுதிப் பகுதியல் ஜே.வி.பி ஆயுதக் கும்பல்கள் தொழிலாள வர்க்கத்தை பயமுறுத்துவதற்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களையும் தொழிற்சங்க தலைவர்களையும் கொடூரமான முறையில் கொலைசெய்து இரத்தக் களரியை உருவாக்கின.

தொழிலாளர்களை தாக்குவதற்காக ஜே.வி.பி யை உபயோகித்த பின்பு, கொடூரமான முறையில் தனது முந்தைய பங்காளிக்கு எதிராக திரும்பிய பிரேமதாச, ஜே.வி.பி யின் உயர் மட்ட தலைவர்களையும் மற்றும் அங்கத்தவர்களையும் படுகொலை செய்தார். பின்னர், முழு கிராமப்புற மக்களுக்கும் எதிரான கொடூரமான பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக ஜே.வி.பி யை ஒரு சாட்டாகப் பயன்படுத்தினார். இந்தக் காலகட்டத்தில் 60,000 இளைஞர்கள் இராணுவத்தினரால் நேரடியாகவோ அல்லது அவர்களின் கொலைகாரப்படைகளினாலோ படுகொலை செய்யப்பட்டார்கள். அச்சமயம், இன்றைய பிரதமர் மூத்த பராளுமன்ற தலைவராகவும் தொழிற்துறை அமைச்சராகவும் இருந்தார் என்பதை ஞாபகப்படுத்த வேண்டும். அவர், பிரேமதாசவின் படுகொலை பிரச்சாரத்திற்கு இவர் நடைமுறையில் ஆதரவு வழங்கினார் என பரந்தளவில் குற்றம் சாட்டப்பட்டவராகும்.

1990 களின் ஆரம்பத்தில், யுத்தத்தை மீண்டும் தொடர்வதற்கு எதிராகவும், ஐ.தே.க அரசாங்கத்திற்கு எதிராகவும் எதிர்ப்பு வளர்ச்சிகண்டபோது, ந.ச.ச.க, ல.ச.ச.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து, 1994ம் ஆண்டு தேர்தலில் குமாரதுங்கவுக்கும் அவரது ஸ்ரீ.ல.சு.க வுக்கும் ஆதரவளித்தது. இந்த எல்லா "இடதுகளும்" சமாதானம், ஜனாநாயகம் மற்றும் சிறந்த வாழக்கைத் தரம் பற்றிய குமாரதுங்கவின் வாக்குறுதிகள் மீது நம்பிக்கை வைக்க முடியும் என்ற மாயையை தூண்டிவிட்டனர். அச்சமயம், ந.ச.ச.க சிறிய தந்திரோபாய வேறுபாட்டின் அடிப்படையில் பிளவடைந்தது. நாணயக்காரவின் தலைமையிலான ஒரு குழு குமாரதுங்கவின் பொதுஜன முன்னணியில் இணைந்தது. பின்னர் வெளியேற்றப்பட்டதை அடுத்து, இந்தக் குழு ஜனநாயக இடதுசாரி முன்னணியை உருவாக்கியது. எதிர் குழுவான கருணாரத்ண தலைமையிலான ந.ச.ச.க அதிலிருந்து விலகியிருக்கவே விரும்பியது.

குமாரதுங்க அவரது வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததும், அவர் "சமாதானத்திற்கான யுத்தம்" என்ற மூலோபாயத்தை முன்வைத்தார். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், யுத்தத்தை உக்கிரமாக்குவதன் மூலம் ஒன்று விடுதலைப் புலிகளை அழிப்பது, இல்லையேல் தனது திட்டத்தின் கீழ் பேச்சுவார்த்தை மேசைக்கு வரச்செய்வதாகும். 1994-2001 இடைப்பட்ட காலத்தில் பொதுஜன முன்னணி ஆட்சியில் இருந்தபோது, முந்தைய தசாப்தத்தில் ஐ.தே.க அரசாங்க காலத்திலும் பார்க்க கூடுதலான மக்கள் கொல்லப்பட்டனர். குமாரதுங்க யுத்தத்தை உக்கிரமாக்கியது மாத்திரமன்றி, சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மறுசீரமைப்பு கொள்கையை அமுல்படுத்தியதுடன், ஜனநாயக உரிமைகளையும் நசுக்கினார்.

1998ல் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு அதிகரித்தபோது, கருணாரட்னவின் ந.ச.ச.க இன்னுமொரு கூட்டணியை அமைத்தது. இம்முறை, 1980களின் இறுதிப்பகுதியில் ந.ச.ச.க அங்கத்தவர்களையே படுகொலை செய்த ஜே.வி.பி யுடன் கூட்டுச் சேர்ந்தது. கருணாரத்ன ஜே.வி.பி யின் குண்டுத் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பினார். ஆயினும், ந.ச.ச.க வைப் பொறுத்தவரையில் ஜே.வி.பி அடிப்படையில் மாற்றம் கண்டுள்ளது. "இனவாத, மத குழுவாத மற்றும் இராணுவாத சக்திகளது அங்கமாக" ந.ச.ச.க வால் விமர்சிக்கப்பட்டவர்கள், "சோசலிஸ்டுகளாக" தூக்கி நிறுத்தப்பட்டதுடன், கொழும்பு தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் தொழிற்சங்கம் அமைக்கவும் ஜே.வி.பி க்கு ந.ச.ச.க உதவியது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்துக்கு தொடர்ச்சியான அழிவுகரமான தோல்விகளை ஏற்படுத்திய பின்னர், 2000 ஆண்டு ந.ச.ச.க-ஜே.வி.பி கூட்டு முறிவடைந்தது. தனது இராணுவ மூலோபாயம் கந்தலாய் போனதும், குமாரதுங்க விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க முயற்சித்தார். பேச்சுவார்த்தைகளுக்கான அடித்தளத்தை அமைப்பதன் பேரில், வடக்கு கிழக்குக்கு அதிகாரத்தை பரவலாக்குவதை அனுமதிக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை அவர் பிரேரித்தார். ஜே.வி.பி, விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் ஒரு யுத்தத்தைக் கோரும் பேரினவாத பிரச்சாரத்தில் இணைந்துகொண்டது. ந.ச.ச.க ஆளும் கட்சிகளை சமாதானத்திற்கு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டது.

தற்போதைய "சமாதான முன்னெடுப்புகள்" எந்த காரணத்தால் தோல்வி அடைந்துகொண்டிருக்கின்றதோ அதே காரணத்தால் குமாரதுங்கவின் திட்டமும் பொறிந்தது. பொதுஜன முன்னணியின் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆரம்பத்தில் ஆதரவு வழங்கிய விக்கிரமசிங்கவும் ஐ.தே.கவும், இந்த பிரேரணைகள் சிங்கள தேசத்தை காட்டிக்கொடுப்பதாக கண்டனம் செய்த ஜே.வி.பி யினதும் மற்றும் ஏனைய சிங்களத் தீவிரவாதிகளினதும் அழுத்தத்திற்கு உள்ளானார்கள். பாராளுமன்றத்தில் அதிகாரப் பரவலாக்கல் பொதியை அதிகளவில் எதிர்த்த ஜே.வி.பி.யின் வாய்வீச்சுக்களோடு ஐ.தே.க வும் இணைந்துகொண்டது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காததால் குமாரதுங்க பொதியை விலக்கிக்கொண்டார்.

தொழிலாள வர்க்கத்தை பிரதான கட்சிகளுக்கு கீழ்ப்படுத்தும் ந.ச.ச.க வின் முயற்சியானது, குறிப்பாக இன்று கோமாளித்தனமான தோற்றத்தை எடுத்துள்ளது. எனென்றால், அதன் தேசிய சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கான பொருளாதார அடித்தளம் முற்றாக பொறிந்து போயுள்ளதாலாகும். ந.ச.ச.க இணைந்துகொள்ள முயற்சிக்கும் எல்லா முதலாளித்துவ கட்சிகளும் மக்களின் நலன்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டனவாகும். இலங்கையில், பாராளுமன்றத்தையும் இரண்டு பிரதான கட்சிகளையும் சுற்றி சுழலும் முதலாளித்துவ அரசியலின் முழு கட்டமைப்பும், உடைந்து நொருங்கும் நிலையில் உள்ளது.

ஒவ்வொன்றும் தமது சொந்த வழியில் அரசியல் நிறுவனத்திற்கு முண்டு கொடுக்க முயற்சிக்கும் நிலையில், சந்தர்ப்பவாத "தொழிலாளர்" கட்சிகளுக்கிடையில் உழைப்பு பிரிவினை உள்ளது. ஐ.தே.க தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளை ஆதாள பாதாளத்தில் தள்ளிய போதும், விக்கிரமசிங்கவை "குறைந்த கெடுதியாக" சித்தரிக்கும் ந.ச.ச.க வும் புதிய இடதுசாரி முன்னணியும் அவருக்கு ஆதரவு வழங்குமாறு தொழிலாளர்களுக்கு உற்சாகம் ஊட்டுகின்றன. அதே நேரம், ல.ச.ச.க வும் கம்யூனிஸ்ட் கட்சியும், நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் மூழ்கடிக்கும், குமாரதுங்கவினதும் ஜே.வி.பி-ஸ்ரீ.ல.சு.க வினதும் வெளிப்படையான இனவாதப் பிரச்சாரத்துடன் இணைந்து கொண்டுள்ளன.

தொழிலாள வர்க்கம் ந.ச.ச.க வின் சந்தர்ப்பவாத போக்கிலிருந்து சாத்தியமான படிப்பினைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய அதே சமயம், ஆளும் வர்க்கத்தின் சகல பிரிவினருக்கும் மற்றும் அதன் அடிவருடிகளுக்கும் எதிராக, தனது வர்க்க நலன்களுக்காக போராடுவதன் பேரில் தனது சொந்த சுயாதீனமான கட்சியையும் சோசலிச வேலைத் திட்டத்தையும் அபிவிருத்தி செய்யவேண்டும். இலங்கையில் அத்தகைய சோசலிச பதிலீட்டுக்காக போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) மட்டுமேயாகும். ல.ச.ச.க வின் காட்டிக் கொடுப்புக்கு எதிரான அரசியல் தத்துவார்த்த போராட்டத்தின் விளைவாக, சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி இயக்கமான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க), நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பகுதியாக 1968ல் ஸ்தாபிக்கப்பட்டது. பு.க.க/சோ.ச.க இனவாத யுத்தத்தை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்ததுடன் எல்லா வகையான இனவாதத்தையும் வகுப்புவாதத்தையும் எதிர்க்கின்றது. இந்திய உபகண்டத்திலும், உலக ரீதியாகவும் சமுதாயத்தின் சோசலிச மாற்றத்தின் ஒரு பாகமாக, அதிகாரத்தைக் கைப்பற்றி ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளை அமைப்பதற்கான அடித்தளமாக தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக தொடச்சியாக போராடி வருகின்றது.

Top of page