World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா :
கனடா Toronto SEP meeting discusses Canadian, US elections சோசலிச சமத்துவ கட்சியின் டோரன்டோ கூட்டத்தில், கனேடிய அமெரிக்க தேர்தல்கள் பற்றிய கலந்துரையாடல் By our correspondent ''கனடா, அமெரிக்கத் தேர்தல்களும், தொழிலாள வர்க்கத்தின் பணிகளும்'' என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) ஜூன் 27 அன்று டோரன்டோவில் பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்தியது. கனடாவின் கூட்டாட்சித் தேர்தலையொட்டி நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் டோரன்டோ, மொன்றியல் மற்றும் அமெரிக்காவிலிருந்து பல தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் பலர் உலக சோசலிச வலைத் தளத்தினை வாசித்து, பின்பு அதனூடாக கூட்டம் நடப்பதை அறிந்துகொண்டனர். கனடா சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும், WSWS ன் சர்வதேச ஆசிரியர்குழு உறுப்பினருமான கீத் ஜோன்ஸ் கூட்டத்தில் தொடக்க உரையை நிகழ்த்தினார். அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொங்கி எழுந்துள்ள நிலையிலும், மக்களில் பரவலான தட்டினர் தீவிரமயமாக்கலில் சென்று கொண்டுள்ள நிலையிலும் கனடா தேர்தல் இடம்பெறுகிறது என்று தனது ஆரம்ப உரையில் ஜோன்ஸ் தெரிவித்தார். எப்படி இருந்தபோதிலும், கனடா தேர்தலானது, அதன் பாரம்பரிய குறுகிய நோக்கில் அமைதியாக நடந்துகொண்டிருப்பதாக ஜோன்ஸ் சுட்டிக்காட்டினார். அரசியல் நிறுவனங்களில் அடங்கியுள்ள எல்லாக் கட்சிகளிலிருந்தும் பரந்தளவிலான மக்கள் மிகவும் ஆழமாக அந்நியமாகியுள்ள நிகழ்சிப்போக்கு குறித்து பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் வருந்தியுள்ளன. ஆனால், தேர்தல்களைப்பற்றி அலட்சியமாக இருப்பதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்த கீத் ஜோன் அவர்கள், ''தேர்தல்கள் முக்கியமான அரசியல் சம்பவங்கள் ஆகும். தொழிலாள வர்க்கம் தனது சொந்த நிலைப்பாட்டில் இதனை ஆய்வு செய்ய வேண்டும். சமுதாயம் அடிப்படையிலேயே இரண்டு வர்க்கங்களாகப் பிரிந்து நிற்கிறது என்பதை அங்கீகரிக்கவேண்டும். உண்மையான அதிகாரம் நாடாளுமன்றத்தில் இல்லை. ஆனால், சமுதாயத்தை மிகப்பெரிய செல்வந்தர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்'' என்று அவர் சுட்டிக்காட்டினார். தாராளவாதிகள் ஈராக் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டிப்பது போல் நாடாகமாடிய மோசடியையும் ஜோன்ஸ் அம்பலப்படுத்தினார். அமெரிக்காவின் படையெடுப்பு ஆரம்பித்து ஈராக்கைப் ஆக்கிரமித்துக் கொள்வது வரை கிறித்தியன் (Chrétien) அரசாங்கம் ஈராக்கிற்கு துருப்புகளை அனுப்பத் தயாராக இருந்ததோடு, அதன்பின்னர் துருப்புக்களை ஆப்கானிஸ்தானிற்கு திருப்பிவிட்டது. உலக ஆதிக்கத்தில் உள்ள பெரிய வல்லரசுகளை தனது தேர்ந்தெடுக்கப்பட்ட மூலோபாயமாக நீண்ட காலமாக கருதிவரும் கனடா முதலாளித்துவ வர்க்கத்தின் ஒருபகுதி, ஈராக் மீதான ஆக்கிரமிப்பின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடு சீர்குலையும் என்று கவலைப்பட்டதாகவும், இந்தக் கணிப்பிற்கான பின்னணியையும் ஜோன்ஸ் விளக்கினார். தொழிலாள வர்க்கம் வலதுசாரிப் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறது என்ற கருத்தை ஜோன்ஸ் மறுத்தார். தாராளவாத கட்சிக்கு இருந்த வந்த மக்களின் செல்வாக்கு, இடதுசாரிகள் என்று கருதிய புதிய ஜனநாயகக் கட்சி (NDP), Bloc Québécois (BQ) மற்றும் பசுமைக் கட்சி ஆகியனவற்றின் பக்கம் திரும்பிவிட்டதென்று சுட்டிக்காட்டினார். புதிய ஐக்கிய வலதுசாரிக் கட்சியான கனடா பழமைவாதக் கட்சிக்கு உள்ள செல்வாக்கானது, முற்போக்கு பழமைவாதிகள் மற்றும் கனடா கூட்டு ஆகியவற்றைவிட குறைவுதான். ஏனெனில் பெரிய நிறுவனங்களுக்கு மேலும் வரிகளைக் குறைப்பது, மருத்துவ உதவிகளை இல்லாதொழிப்பது, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான உறவுகளை வைத்துகொள்வது போன்றவற்றை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைப்புரிந்து கொண்டே தங்களது வேலைத்திட்டத்தை வாக்காளர் கவனத்திலிருந்து வலதுசாரிகள் மறைத்து செயல்படுகின்றனர் என்று ஜோன்ஸ் மேலும் தெரிவித்தார். NDP சிறுபான்மை தாராளவாத அரசாங்கத்திற்கு ஆதரவு தருவதன்மூலம் உழைக்கும் மக்களுக்காக சில சீர்திருத்தங்களை பெற்றுத்தர முடியும் என்ற கூற்றை 1972-74 ஆண்டு சம்பவங்களோடு ஜோன்ஸ் விவரித்தார். அப்போது NDP யானது, தாராளவாத சிறுபான்மை அரசாங்கத்தை ஆதரித்தது. அப்போது அந்த அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டு ஆய்வு அமைப்பையும் (FIRA) பெட்ரோ-கனடாவையும் உருவாக்கியது. இந்த அமைப்புக்கள், ''கனடாவின் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும், கனடாவின் பெரு வர்த்தக அமைப்புக்களுக்கு ஆதரவாகவும், செயல்பட்டன.'' துருடோ (Trudeau) தாராளவாதிகள், பெரும்பான்மை அரசாங்கத்திற்கு NDP தமக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் தந்துவிட்டதாக எடுத்துக்கொண்டு தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பெரும் எதிர்த் தாக்குதலைத் தொடுத்தனர். அது இன்றைக்கும் நீடித்துக்கொண்டிருக்கிறது என்று ஜோன்ஸ் குறிப்பிட்டார்.''கனடாவின் மதிப்பு'' என்று கூறப்படுவதை மோசடி என்று ஜோன்ஸ் குறிப்பிட்டார். அரசோடு தொழிலாளர்களைப் கட்டிப்போட்டு, அவர்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் மிகவும் சக்திவாய்ந்த படைப்பிரிவான (battalion) அமெரிக்கத் தொழிலாளர்களிடமிருந்து பிரித்துவைக்க இந்த மோசடியை தயார்செய்து பயன்படுத்தி வருகிறார்கள். NDP மற்றும் BQ ஆகிய இரண்டும் தேசியவாத வடிவத்தை வளர்த்தெடுப்பதன் மூலம் அது சர்வதேச தொழிலாள வர்க்கத்தை பிளவுறச் செய்கிறது. ''கனடா தொழிலாளர்கள் அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோ தொழிலாளர்களோடு ஐக்கியப்பட்டு போராட்டத்தை மேற்கொள்ளவேண்டும்'' என்று இறுதியாக ஜோன்ஸ் கேட்டுக்கொண்டார். அதற்குப்பின்னர், WSWS ன் கலை ஆசிரியரும், அமெரிக்க SEP யின் உறுப்பினருமான டேவிட் வோல்ஸ் தனது அறிக்கையை சமர்ப்பித்தார். உலகம் முழுவதிலும் சோசலிச சமத்துவக் கட்சி நடத்திவந்த தொடர் கூட்டங்களின் ஒரு பகுதிதான் டோரன்டோ பொதுக்கூட்டம் என்று ஆரம்பத்தில் வோல்ஸ் குறிப்பிட்டார். ''பொதுவான முன்னோக்கை வைத்துக்கொண்டு, ஒரே கொள்கை அடிப்படையில் ஒழுங்கமைத்து, இது போன்று தொடரான கூட்டத்தை நடத்த இந்த பூமியில் வேறு எந்த ஒரு போக்கும் கிடையாது: இன்றைய தினம் உலக ஏகாதிபத்திய முறையினால் சர்வதேச அளவில் அச்சுறுத்துகின்ற நெருக்கடிகள் ஆழமாகிக்கொண்டே போவதற்கு பதில் வழங்கும் வகையில் தொழிலாள வர்க்கம் அனைத்து பழைய கட்சிகளிலிருந்தும், அமைப்புகளிலிருந்தும் வெளியேறி சர்வதேச ரீதியாக சோசலிச வேலைத்திட்டத்தை மேற்கொள்வது அவசியமாகும்'' என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவில் நிலவுகின்ற சமூக நெருக்கடியை சுருக்கமாக பண்புருப்படுத்தி, அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் முன்கண்டிராத மட்டத்திற்கு ஒருவரையொருவர் அழிக்கின்ற போராட்டத்தைபற்றி வோல்ஸ் குறிப்பிட்டார். ''காலனித்துவ-பாணியில் ஈராக்கினுள் ஆக்கிரமிப்பு மற்றும் படையெடுப்பின் பேரழிவு நடவடிக்கையானது செல்வந்த தட்டினருக்குள்ளேயே கொழுந்துவிட்டு எரியும் மோதலை உண்டுபண்ணியுள்ளது. நிர்வாகத்திற்குள்ளேயே இருக்கின்ற அதிகாரிகள், புலனாய்வு ஏஜென்டுகள் புஷ் நிர்வாகக் கொள்கைகயை மக்கள் வெளிப்படையாக பழித்துரைப்பதால் அதை கண்டிக்க தள்ளப்படுகின்றனர். அத்துடன், புஷ்ஷின் தன்னிச்சையான, கவனக்குறைவான கொள்கைகள் என்பன ஈராக்கில் கொலை, சித்திரவதைகளை தூண்டிவிட்டதால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாடு மோசமடைந்துள்ளதாகவும் நட்பு நாடுகளை அது பகைத்துக்கொண்டு விட்டதாகவும், பலதலைமுறைகளாக அமெரிக்க நலன்களை காப்பாற்றிவந்த, பயன்பட்டுவந்த பழைய உறவுகளை இழந்துவிட்டதாகவும், இப்போது ஈராக்கை இழந்துவிட்டதாகவும், அந்த தரப்பினர் நம்புகின்றனர்'' என்று வோல்ஸ் குறிப்பிட்டார். இந்த ''சண்டைகள், அரசியல் மற்றும் செய்தி ஸ்தாபனங்களுக்குள்ளேயே தற்போது நடந்துகொண்டிருக்கின்றது. இதில் பரந்த மக்கள் தட்டினர் தலையிடுவது எப்படி? 2004 தேர்தல்களில் போருக்கு எதிரான வெகுஜனங்களை, தேர்தல் உரிமை இல்லாது விலக்கி வைத்துவிட்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதை ஜனநாயகக் கட்சி நியமனத்திற்காக டீன் முயன்ற போது, அவருக்கு எதிரான நடத்தப்பட்ட நாசவேலைகள் தெளிவுபடுத்தின. தற்போது ஜோன் கெர்ரி முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறார். அவர் ஏகாதிபத்திய மற்றும் போர் ஆதரவு வேட்பாளராக இருப்பதுடன், இடைவிடாது வலதுசாரி பாணியில் பிரச்சாரத்தை நடாத்தியும், அமெரிக்க அரசாங்க கட்டுக்கோப்பில் இடம்பெற்றுள்ள சக்திகளுக்கு தான் மிகவும் சிறப்பாக பணியாற்ற முடியும் என்று கூறியும் வருகிறார். இப்படி அமெரிக்க பூகோள மேலாதிக்க மூலோபாயமனது, ஆளும் செல்வந்த தட்டின் பொதுக்கருத்து கொள்கையாக உள்ளது'' என்று வோல்ஸ் சுட்டிக்காட்டினார். இந்த சூழ்நிலையில், குடியரசுக் கட்சிக்காரர்களும், ஜனநாயகக் கட்சிக்காரர்களும் ஈராக் போருக்கான எதிர்ப்பு எதுவும் தேர்தல் கட்டமைப்பில் இடம்பெற்றுவிடக்கூடாது என்று உறுதியாக நிற்கின்றனர். இந்தக் கட்டத்தில் மக்களும் சினிமா டிக்கட்டுகளுக்கூடாக தமது எதிர்ப்பை காட்டினர். மைக்கேல் மோரின் பாரன்ஹிட் 9/11 என்ற திரைப்படத்தை மேற்கோள்காட்டிய வோல்ஸ், ''அந்த திரைப்படம் பலவேறு கற்பனைகளை சிதைத்துள்ளதை பிரதிபலிக்கிறது: புஷ்ஷிற்கு மக்களின் ஆதரவு, போருக்கான ஆதரவு, அமெரிக்க மக்களை தரமான திரைப்படங்களினூடாக நெருங்கமுடியாது, அவர்களின் மனநிலையில் வெல்ல இயலாத வலதுசாரி சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன'' போன்ற பல கற்பனைகளை சிதைத்துள்ளதாக வோல்ஸ் குறிப்பிட்டார். (பசுமைக்கட்சி போன்ற அமைப்புக்கள்) அமெரிக்க முதலாளித்துவத்தை தாங்கிநிற்க ''இடது'' கண்ணோட்டத்தில் முயலுவது குறித்து வோல்ஸ் எச்சரிக்கை விடுத்ததோடு, ''புஷ்ஷை தவிர வேறு எவரும்'' என்று வலியுறுத்திக் கூறும் வாதத்தை SEP எதிர்க்கிறது என்று குறிப்பிட்டார். ''இதில் மிகவும் விமர்சன ரீதியான பிரச்சனை என்னவெனில் புஷ்ஷை தோற்கடிப்பது அல்ல. மாறாக, அழுகி நாற்றம் கண்டுபோன முதலாளித்துத்தின் அடித்தளம் முழுவதையும் இல்லாதொழிக்கின்ற ஒரு இயக்கத்தை கட்டியெழுப்புவது தான் மிக முக்கியமான நோக்கமாகும்'' என்று வோல்ஸ் குறிப்பிட்டார். இறுதியாக அமெரிக்கத் தேர்தல்களில் SEP யின் தலையீட்டைப்பற்றி அவர் குறிப்பிடுகையில், ''எமது பிரச்சாரமானது, கொள்கைகள் மற்றும் கருத்து அடிப்படையிலேயே தவிர எத்தனை வாக்குகள் கிடைக்கும் என்பதற்காக அல்ல'' என்று வலியுறுத்தியும், எனவே இதுபோன்ற கூட்டங்களுக்கு வருபவர்கள் SEP இயக்கத்தில் சேர வேண்டும் என்றும் வோல்ஸ் கேட்டுக் கொண்டார். வோல்ஸின் அறிக்கைக்குப் பின்னர், கேள்விகளும் மற்றும் கருத்துக்களும் வெளிப்படையாக கலந்துரையாடப்பட்டன. WSWS வாசகர் ஒருவர், அமெரிக்கப் படையினர்கள் புரிந்துள்ள அட்டூழியங்கள் என்பன, நீடித்த மிகவும் பின்தங்கிய நிலைமையை எடுத்துக்காட்டுவதால் சமுதாயத்தில் சோசலிச மாற்றத்திற்கு தடைக்கல்லாக அது எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிந்துகொள்ள விரும்பினார். இதற்கு வோல்ஸ் பதிலளிக்கையில், பரந்த அடிப்படையில் அமைக்கப்படும் தொழிலாளர் இயக்கம் இதுபோன்ற ஆரோக்கியமற்ற போக்குகள் ஏற்படாது போராடும் என்றும், மற்றும் இராணுவம் உளவலிமை இழந்து இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியதோடு, வியட்நாம் போர்க்காலத்தின் அனுபவத்தை சுருக்கமாக மறு ஆய்வு செய்தார். போருக்கு எதிரான தங்களது ஆத்திரத்தையும், விரக்தியையும், அரசியல் வெளிப்பாடாக எடுத்துரைப்பதற்கு ஓர் இயக்கம் இல்லாததால், பல்லாயிரக்கணக்கான அமெரிக்க முன்னாள் படையினர்கள் போதைப்பொருட்களுக்கு இலக்கானதையும், தற்கொலை புரிந்துகொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். மூரின் திரைப்படம் குறித்து மேலும் விவாதம் நடத்தப்பட்ட பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு மாணவர் ஒருவர், ஈராக்கில் அமெரிக்கப் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தங்களது பல்வேறு வர்த்தக நலன்களை ஈராக்கில் காப்பாற்றுவதற்காக சீனாவும், ஐரோப்பிய வல்லரசுகளும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேட்டார். இக்கேள்விக்கு பதிலளித்த ஜோன்ஸ், பிரான்சும், ஜேர்மனியும், தொடக்கத்தில் தங்களது ஏகாதிபத்திய நலன்களின் மீது கவலை கொண்டு போரை எதிர்த்தபோதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஐரோப்பிய வல்லரசுகளை பிரித்து வைப்பதில் வெற்றியைக் கண்டது. ஆனால் இறுதி ஆய்வில், ஐரோப்பிய வல்லரசுகள் தனது அமெரிக்க எதிராளியை விட மிகவும் அச்சுறுத்தலாக போர் எதிர்ப்பு இயக்கத்தை கண்டு கொண்டது. மேலும், போரை எதிர்ப்பதற்காக ஏகாதிபத்தியத்தின் இன்னொரு கன்னையின் பக்கம் அணிவகுத்து நிற்பதும் பயனற்றது. ''பிரான்ஸ் அல்லது ஜேர்மன் அரசாங்கங்களை சார்ந்து நின்று ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட முடியாது. அல்லது ஐ.நா வை சார்ந்தும் இந்தப் போராட்டத்தை நடத்த முடியாது. மாறாக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இயக்கத்தின் மூலம்தான் இத்தகைய போராட்டத்தை நடாத்தமுடியும் என்றும், அது ஒன்றுதான் உண்மையான சக்தியாகும்'' என்றும் ஜோன்ஸ் விளக்கினார். கூட்டம் முடிந்ததும், கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் WSWS ற்கு தாராளமான நன்கொடைகளை வழங்கினர். மற்றும் 125 டாலருக்கு சோசலிச வெளியீடுகளை வாங்கியும் சென்றனர். |