World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French riot police dispatched to Tahiti following election upset

தையித்தி தேர்தல் முடிவின் அதிர்ச்சியால் பிரெஞ்சு கலவரம் அடக்கும் போலீஸ் விரைந்துள்ளது

By John Braddock
21 June 2004

Back to screen version

மே 23 ல் பிரெஞ்சு பொலினேஷியன் (French Polynesian) பிரதேச தேர்தல்களில் தையித்தி தீவில் ஆளும் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்த மாதத் தொடக்கத்தில் பிரெஞ்சு அரசாங்கம் அந்த பசிபிக் சமுத்திர தீவிற்கு நடமாடும் அதிரடிப்படைப் பிரிவுகளைச் சேர்ந்த 300 கலவரம் அடக்கும் போலீசாரை அனுப்பியுள்ளது. இத்தீவில் 20 ஆண்டுகளாக இருந்த கோலிஸ ஆட்சியின் ஜனாதிபதி கெஸ்டோன் புளோஸ் தலைமையிலான மக்கள் யூனியன் கட்சி (Popular Union, THP - Tahoeraa Huiraatira) தேர்தலில் தனது பெரும்பான்மையை இழந்துள்ளது. இந்தக் கட்சி தீவின் சட்டசபையில் விரிவாக்கப்பட்ட 57 ஆசனங்களில் 28 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. தீவில் ''சட்டம் ஒழுங்கை'' நிலைநாட்டவும், தேர்தல்கள் நடைமுறைகள் ''அமைதியாக'' நடக்கவும் போலீசார் அனுப்பப்பட்டிருப்பதாக பிரெஞ்சு அரசாங்கம் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளது.

கெஸ்டோன் புளோஸ் தேர்தலில் தோல்வியடைந்ததானது பாரிஸில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிநாட்டு ஆட்சிப் பரப்பு மற்றும் பிரதேசம் தொடர்பான பிரெஞ்சு அமைச்சர் பிரெஜிட் ஜிராடன் (Brigitte Girardin) தேர்தல் நடைமுறைகள் ''இன்னும் முற்றுப் பெறவில்லை'' என்று அறிவித்தார். அத்தோடு, சுதந்திர கோரிக்கையை வலியுறுத்தும் ஜனநாயகத்திற்கான யூனியன் (Union for Democracy - UPD) கட்சித் தலைவரான ஒஸ்கார் தெமரூ (Oscar Temaru) இத் தேர்தலில் வெற்றிபெற்றிருப்பது குறித்து அதிக ''வேகத்தோடும், அதிவிரைவிலும் மகிழ்ச்சியடைய வேண்டாம்'' என்று பிரெஞ்சு எதிர்க்கட்சி சோசலிஸ்ட்டுக்களை எச்சரித்தார். UPD க்கு பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி தந்துவரும் ஆதரவுபற்றி குறிப்பிட்ட ஜிராடன், சோசலிஸ்டுகள் ''குடியரசை முடமாக்கும்'' கொள்கையை கடைபிடித்து வருவதாக மிகக்கடுமையாக கண்டனம் செய்ததோடு, அவர்கள் பிரான்சிற்கு வெளியிலுள்ள பிராந்தியங்களை கைவிட்டுவிட விரும்புவதாகவும், வெளிநாட்டிலுள்ள 2.5 மில்லியன் பிரெஞ்சு மக்களை வெளியெற்ற விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

கெஸ்டோன் புளோஸ் தனது எதிராளிகளை அச்சுறுத்தி ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொள்வதற்காக கலவரம் அடக்கும் போலீசார் இந்த தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து கெஸ்டோன் புளோஸ் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றியபோது, UPD தலைமையில் புதிய கூட்டணி அரசாங்கம் உருவாக்கப்படுவதை கண்டித்தார். இந்தக் கூட்டணியானது ஆட்சி புரிகின்ற வல்லமையில்லாதது என்று குற்றம்சாட்டினார். பாப்பெத்தில் (Pape'ete) உள்ள பிரெஞ்சு உயர் ஸ்தானிகர் அலுவலகம், அச்சுறுத்தும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் முடிவு தொடர்பாக நடுநிலையோடு இருக்க கடமைப்பட்டபோதிலும் அமைதியை நிலைநாட்ட தேவைப்படுகிற அனைத்தையும் செய்யும் என்று குறிப்பிட்டுள்ளது.

கெஸ்டோன் புளோஸ் தொடக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், தேர்தலில் தோல்வி ஏற்பட்டாலும் நாடாளுமன்றம் மற்றும் இப்பிராந்திய ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்தார். இந்த இரண்டு பதவிகளுமே நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் முடிவு செய்யப்படுவதால், பதவியில் நீடிக்க ''இறுதிவரை தாம் போராடப்போவதாகவும்'' அவர் அறிவித்தார். மேலும், பாரீசிலுள்ள அரச சபை (Council of State - பிரெஞ்சு தலைமை நிர்வாக நீதிமன்றம்) இந்தத் தேர்தல்களை செல்லாது என்று அறிவிக்ககோரி மேல் முறையீடு செய்யப்போவதாகவும், Windward தீவுகளில் சில கட்சிகள் பயன்படுத்திய வாக்குச்சீட்டில், அளவு முறைகேடுகள் நடந்திருப்பது தொடர்பாக முறையிடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அரசியல் முட்டுக்கட்டை நிலையானது மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடித்தது. அரசாங்கம் அமைப்பது தொடர்பாக ஒஸ்கார் தெமரூ சிறிய கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தார். அதே நேரத்தில் அறுதிப் பெரும்பான்மைக்கு இரண்டு ஆசனங்கள் குறைவாக, UPD கூட்டணியின் நான்கு சிறிய கட்சிகள் சேர்ந்து 27 இடங்களை கைப்பற்றிக்கொண்டன. ஆதலால், ''தன்னாட்சி'' உரிமைகோரும் இரண்டு எதிர்க்கட்சிகளான, நிக்கோல் பூத்தோவின் (Nicole Bouteau) தலைமையில் உள்ள இந்த நாடு உங்களுடையது (This Country is Yours) என்ற கட்சி மற்றும் Phillip Schyle ன் தலைமையில் உள்ள புதிய நட்சத்திரம் (Fetia Api) என்ற கட்சி ஆகியவற்றின் ஆதரவை ஒஸ்கார் தெமரூ பெற்றுக் கொண்டார். இக் கட்சிகளின் தலைவர்கள் இருவரும் ஒஸ்கார் தெமரூவின் கட்சியை ஆதரித்தனர். இந்த இரு கட்சிகளும் ஒரு ஆசனம் வீதம் பாதுகாத்துக் கொண்டன. ஆளும் தட்டுகளுக்குள் ஏற்பட்ட பிரிவினால் நிக்கோல் பூத்தோ தனது சுற்றுலா மற்றும் சுற்றுப்புற சூழல் அமைச்சர் பதவியிலிருந்து அண்மையில் விலகி, தேர்தலுக்கு முன்னர் புதிய கட்சி ஒன்றை தொடக்கினார். அத்துடன், புதிய அரசாங்கத்தை அமைக்கும் புளோஸின் முயற்சியை ஆதரிக்க முடியாது என்றும் அறிவித்தார்.

தையித்திக்கு கலவரம் அடக்கும் போலீசார் வந்து சேர்ந்தது பொதுமக்களது விரோதத்தை உருவாக்கியுள்ளது. ''புளோஸின் முறைக்கு'' பின்னர் பொலினேசியா (Polynesia) ''ஒரு மாற்றத்திற்கு வருகின்ற நேரத்தில்'' பிரெஞ்சு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையானது அளவிற்கு அதிகமானது என்று நிக்கோல் பூத்தோ மேலும் கண்டனம் செய்தார். பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் பொலினேசிய பிராந்தியங்களுக்கு பிரான்ஸ் நிதியுதவி உறுதிமொழிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று ஜிராடன் கூறியிருப்பது குறித்து அவர் கவலை தெரிவித்தார். காலனித்துவ அரசு அதன் நிதியுதவி ''குழாயை'' திறந்தே வைத்திருக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். தேர்தல் முடிவை ரத்துசெய்யும் முயற்சியில் புளோஸ் வெற்றிபெறுவாரானால் ''சமூகக் கொந்தளிப்பு'' மிகக்கடுமையாக எழும் என்று நிக்கோல் பூத்தோ எச்சரித்தார்.

ஜூன் 4 ல் சட்டமன்ற கூட்டம் நடைபெற்ற பொழுது UPD ன் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதுடன். கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அரசு ஊழியருமான Antony Geros, THP ன் Emile Vernaudon ஐ விட ஒரு வாக்கு அதிகம் பெற்று சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனடியாக புளோஸ் பிராந்திய ஜனாதிபதி போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். இதனால், ஒஸ்கார் தெமரூ ஒருமனதாக நியமிக்கப்படுவதற்கு அதன் மூலம் வழி பிறந்தது. இருந்தபோதிலும், புளோஸ் தேர்தல் முடிவுகளை சட்டப்பூர்வமாக ஆட்சேபிக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்தார். அத்துடன், சபாநாயகர் தேர்தல் செல்லுபடியாகாது என்று அறிவிக்ககோரி உடனடியாக அவர் மனுச் செய்ததோடு, புதிய சட்டமன்றத்திற்குள் பதவி வழங்கல்கள் உண்மையான விகிதாசார அடிப்படையில் அமையவில்லை என்று ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால், அரச கவுன்சில் புளோஸுக்கு எதிராக உடனடியாக தீர்ப்பளித்தது.

புளோஸின் ஆட்சி குறித்து மக்களின் கருத்துக்கணிப்பாகவே இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. வாக்குப்பதிவு நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தலைநகர் பாப்பெத்தில், 2,500 பேர்கள் பிரதான எதிர்க்கட்சிகளை ஆதரித்து அரசாங்கத்தை மாற்றக்கோரியும், பல்வேறு முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் பேரணி ஒன்றை நடத்தினர். அண்மையில் பிரெஞ்சு வாக்காளர்கள் தமது பிராந்திய தேர்தல்களில் செய்ததைப்போல் ''அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்'' என்று தெமுறு கேட்டுக்கொண்டார்.

இந்தத் தேர்தலின் முக்கியமான அம்சம் என்னவென்றால் 76 முதல் 85 சதவீதமான வாக்குப்பதிவுகளாகும். தையித்தி தீவுகளிலேயே மிக அதிக மக்கள் தொகையை கொண்ட Windward மற்றும் மொரோ ஆகிய தீவுகளில் புளோஸுக்கு மிக மோசமான பின்னடைவு ஏற்பட்டது. புளோஸினுடைய THP கட்சி 37 ஆசனங்களில் 11 ஆசனங்களைத்தான் பிடித்தது. UPD கட்சியானது 24 ஆசனங்களையும் மற்றும் சிறிய எதிர்க்கட்சிகள் தலா ஒரு சீட்டையும் பெற்றன. முன்னணி சுற்றுலா தளங்களான Bora, Raiatea, Tahaa மற்றும் Huahine ஆகியவற்றைக் கொண்டுள்ள Leeward தீவுகளில் தான் புளோஸ் அதிக வாக்குகளைப் பெற்றார். அங்குள்ள 8 ஆசனங்களில் 6 ஐ புளோஸ் கைப்பற்றினார். இத்தேர்தலில் ஒட்டுமொத்தமாக UPD கட்சி 41 சதவீதமும், THP கட்சி 40 சதவீதமும், Fetia Api என்ற கட்சி 7 சதவீதமும், இந்த நாடு உங்களுடையது என்ற கட்சி 6 சதவீத வாக்குகளையும் பெற்றன.

இந்தத் தேர்தல் முடிவுகளானது, பிரெஞ்சு பொலினேசியாவில் வலதுசாரி கோலிச அரசியலுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தலைகீழ் மாற்றம் அடைந்திருப்பதைக் காட்டுகிறது. இரண்டாண்டுகளுக்கு முன்னர், பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்றில் சிராக் இந்த பசிபிக் பகுதிகளில் (88 சதவீத) அதிக வாக்குகளைப் பெற்றார். அந்த நேரத்தில் பிரான்சிலுள்ள பெரும்பாலான தொகுதிகளில் அவர் பெற்ற வாக்குகள் 82 சதவீதம் தான். அதே தேர்தலில் தீவிர வலதுசாரி வேட்பாளரான லூ பென் பொலினேசியன் வாக்குகளில் 12 சதவீதத்தை பெற்றார்.

பொருளாதார நெருக்கடி

இந்தத் தேர்தல் முடிவுகள் புளோஸினுடைய நிர்வாகத்தின் கொள்கைகள் மீது பொதுமக்களுக்கு நிலவுகின்ற மிகப்பெரும் வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. பொருளாதார நெருக்கடி மிக மோசமாக முற்றிக்கொண்டு செல்வதுடன் வாழ்க்கைத் தரம் குறைந்துகொண்டு வருகிறது. சமூக ஏற்றத்தாழ்வுகள் பெருகிவருகின்றன. தையித்தியின் வர்க்க அமைப்பு காலனி ஆட்சியின் படுமோசமான அம்சங்களை எதிரொலிப்பதாக அமைந்திருக்கிறது. வசதிமிக்க ஆளும் குழு பிரெஞ்சு அரசு மானியத்தைக்கொண்டு மிகுந்த சலுகைமிக்க வாழ்வை நடத்தி வருகிறது. பிரான்சின் முன்னாள் சிவில் ஊழியர்கள் எடுத்துக்காட்டாக, பிரான்சிலுள்ள சிவில் ஊழியர்களை விட 84 சதவீதம் கூடுதலாக ஊதியம் பெறுகின்றனர். அவர்கள் வருமானவரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இதற்கிடையில் 20,000 ஏழை வேலையற்ற தையித்தி மக்கள் தலைநகர் பாப்பெத்திற்கு வெளியில் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மொத்த உள்நாட்ட உற்பத்தியில், கால்பகுதி சுற்றுலா தொழில் மூலம் கிடைக்கின்ற அன்னிய செலவாணியாக இருக்கிறது. 70,000 பேர்கள் சுற்றுலா தொழிலையும், சேவைப் பிரிவையும் சார்ந்திருக்கிறார்கள். கிடைக்கின்ற வேலை வாய்ப்புக்களில் 68 சதவீதம் சுற்றுலா மூலம் வருகிறது. அமெரிக்காவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சுற்றுலாத் தொழிலில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தையித்தியில் ஒட்டல்களில் தங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இரண்டு விமான நிறுவனங்கள் தங்களது விமான சேவையை நிறுத்திக்கொண்டன. புளோரிடாவிலிருந்து செயல்படும் கம்பெனி ஒன்று 700 பயணிகளைக்கொண்ட இரண்டு கப்பல்களை பொலினேசியன் தீவுகளுக்கிடையில் செய்துவந்த பயனமும் வெற்றிபெறவில்லை. 2001 ல் கறுப்பு வர்ண முத்துக்கள் ஏற்றுமதிகளில் 81 சதவீதமாக இருந்தது. செப்டம்பர் 11 க்குப் பின்னர் கறுப்பு முத்துக்களின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதே நேரத்தில், இந்த நெருக்கடியானது விரைவில் தீருமென்று புளோஸ் அரசாங்கம் பாவனை செய்து வந்தது.

இந்தப் பிராந்தியமானது தனது நிதி தேவைக்கு பிரான்சை நம்பியுள்ளது. உற்பத்தியில், பிரதானமாக விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இதன் விளைவாக இந்தப் பிராந்தியம் தனது ஏற்றுமதிகளைவிட ஐந்து மடங்கு கூடுதலாக இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இறக்குமதிகளில் 50 சதவீதத்திற்கு மேல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருகிறது. எனவே, பசிபிக் வட்டாரத்திலேயே இங்குதான் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளது. 1996 ல் மொரோரோ அட்டோல் பகுதியில் பிரான்சின் அணு சோதனை தளம் மூடப்பட்டதால், பொருளாதாரத்தின் இராணுவ அம்சம் மிகக்கடுமையாக வீழ்ச்சியடைந்தது. பிரான்ஸ் அணு சோதனைகளை நடத்திக் கொண்டிருந்தபோது உள்ளூர் மக்களில் 12 சதவீதத்திற்கு மேட்பட்டவர்களுக்கு வேலை கிடைத்ததோடு, 55 சதவீதமான நிதி வந்துகொண்டிருந்தது. இறக்குமதிகள் 28 சதவீதமாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 22 சதவீதமாகவும் இருந்தது.

நிதியுதவி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் ஏற்கெனவே நிலவிவந்த ஏறத்தாழ 12 சதவீத வேலையில்லாத் திண்டாட்டம் மிக வேகமாக வளர்ந்துள்ளது. ஏற்கெனவே வர்க்க முரண்பாடுகள் மோதலாக உருவாகிக் கொண்டிருப்பதுடன் சமூக மற்றும் பொருளாதார நிலைகள் மேலும் சீர்குலைந்துள்ளது. 1987 ல் துறைமுக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை நசுக்குவதற்காக பிரான்சின் உயர் ஸ்தானிகர் பாரிஸிலிருந்து கலகம் அடக்கும் போலீசாரை அழைத்தார். இந்தக் கலகத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித்தவித்த இளைஞர்களும் ஈடுபட்டனர். இந்தக் கலவரத்தால் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு சேதம் ஏற்பட்டது. 1991 ல் பெட்ரோல், மதுபானம் மற்றும் புகையிலை போன்ற ஏழைகள் பயன்படுத்தும் பொருட்கள் மீது வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற கலவரத்தால் அந்த வரி உயர்வை அரசாங்கம் ரத்துச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பட்ஜெட்டில் துண்டுவிழும் தொகையை ஈடுகட்ட 73.4 மில்லியன் டாலர்களை திரட்டுவதற்காக ஏழைகள் பயன்படுத்தும் நுகர்பொருட்கள் மீது வரி உயர்த்தப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சமூக கொந்தளிப்புக்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. 2003 மார்ச்சில் 2500 சுகாதார அதிகாரிகள் நடத்திய கண்டனப் பேரணியைத் தொடர்ந்து மே மாதம் முன்கண்டிராத அளவிற்கு அரசாங்க மற்றும் தனியார்துறை மருத்துவர்கள் மூன்றுவார பொது வேலைநிறுத்தம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் திருப்பித்தரப்படும் மருத்துவச் செலவுகளுக்கு உச்சவரம்பு விதிப்பதற்கான திட்டத்தை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது. இத்தகைய மாற்றம் சுகாதார சேவைத்திட்டத்திற்கே ஆபத்தை உண்டாக்கிவிடும் என்று வேலைநிறுத்தம் செய்த டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் புளோஸ் டாக்டர்களை வேலைநீக்கம் செய்தார். அவர்களுக்கு ''மக்கள் கட்டளையிடவில்லை, சுகாதாரத் திட்டத்தை ஆட்சேபிப்பது அவர்கள் வேலையல்ல'' என்று அவர் கூறினார். மேலும், வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் கருதியதுடன், சுகாதார ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கட்டளையிட்டது. இனி நடக்கும் எந்த வேலைநிறுத்தமாக இருந்தாலும் வேலைநிறுத்தம் நடக்கும் ஒவ்வொரு நாளுக்கும் அதை முன்னின்று நடத்தும் யூனியன் ஒரு மில்லியன் பிரெஞ்சு பசிபிக் பிராங்குகள் வீதம் (10,000 டாலர்கள்) அரசிற்கு செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் கட்டளையிட்டது.

இதற்கிடையில் 2002 ல் பாரிஸ் மேல்முறையீடு நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பினால் புளோஸ் ஊழல் விசாரணைகளிலிருந்தும் மயிரிழையில் தப்பினார். தனது மனைவிக்கு பணம் ஒதுக்கியது தொடர்பான குற்றச்சாட்டுக்களில், முன்னர் அவர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக அரசுத்தரப்பு மேல்முறையீடு செய்வதற்கு அண்மையில் பிரெஞ்சு அரசாங்கம் இயற்றிய பொதுமன்னிப்புச் சட்டத்தால் அவர் தப்பினார். இந்த வழக்கு, புளோஸ் 1993 முதல் 1996 வரை பொலினேஷியா ஜனாதிபதியாகவும், பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் தையித்தியின் இரண்டு உறுப்பினர்களில் ஒருவராகவும் பணியாற்றிய காலத்தில் தனது மனைவி பெயருக்கு பணத்தையும் சொத்துக்களையும் மாற்றியது தொடர்பானதாகும். அரசாங்கம் ஒப்பந்தங்களை வழங்குவதில் 1990 களின் கடைசியில் அவருக்கு ''திருவாளர் 10 சதவீதம்'' என்ற பட்டத்தை பிரெஞ்சு செய்திப் பத்திரிகை லிபிரேசன் வழங்கியது. அவருக்கு பொருத்தமான விதத்தில், பிரெஞ்சு ஜனாதிபதியினுடைய உயர் ஆலோசகராக இருந்தவரே புளோஸினுடைய சட்டத்தரணியாக இதன்போது இருந்துகொண்டார்.

ஆகவே, தேர்தல் முடிவுகளுக்கு அப்பாற்பட்ட அவசர உணர்வோடு பிரெஞ்சு அரசாங்கம் தனது போலீஸ் படையை அனுப்பியிருக்கிறது. பசிபிக் பகுதியில் நிலவுகின்ற கொந்தளிப்புக்களை எடுத்துக் காட்டுவதாக இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது. நியூ கலிடோனியா மாகாண தேர்தல்கள் சென்ற மாதம் நடைபெற்றபோது அந்தப்பகுதி சுதந்திர இயக்க எதிர்ப்பு அணி (anti-independence Rally for Caledonia in the Republic - RPCR) தனது பொரும்பான்மையை இழந்தது. பல வர்த்தகர்கள் மற்றும் RPCP ன் முன்னாள் உறுப்பினர்களைக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட AE (Future Together) என்ற கட்சியோடு RPCR கட்சி கூட்டணி சேர்ந்தபோதும் இந்த தோல்வி ஏற்பட்டது. சென்ற வாரம் புதிய நிர்வாகம் பொறுப்பேற்று மூன்று மணிநேரத்தில் கவிழ்ந்துவிட்டதால், நாடாளுமன்றம் மற்றொரு அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பிரான்சின் மூலோபாய நலன்கள்

இந்தச் சம்பவங்கள் பசிபிக் பிராந்தியத்தில் பிரான்சின் நீண்டகால மூலோபாய நலன்களுக்கு அச்சுறுத்தலாக தோன்றியுள்ளது. நீண்ட காலமாக நிலைபெற்றுவரும் காலனித்துவத்திற்கு, ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போட்டிகள் திரும்ப உருவாகிக் கொண்டிருக்கிற இந்தக் கட்டத்தில் இந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. பிரான்ஸ் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளுகின்ற முயற்சியில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றின் திட்டங்களை வெட்டி முறிப்பதை கொண்டிருக்கிறது.

சென்ற ஆண்டு ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆக்கிரமிப்புக்களுக்கு பின்னர் ஆஸ்திரேலிய அரசாங்கம் சாலமன் தீவுகளில் ஆக்கிரமிப்பு முறையில் தலையிட்டது. ஆனால், இதில் பிரான்சின் தலையீட்டை அது குறிப்பாக ஏற்க மறுத்தது. ஆஸ்திரேலிய பிரதமர் ஹோவார்ட் தனது நடவடிக்கைளை துவங்கிய நேரத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி சிராக் பிரான்சினுடைய பசிபிக் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். 1995 ல் பாலினேசியாவில் அணுகுண்டு சோதனைகள் மீண்டும் துவங்குவதற்கு கட்டளையிட்ட பின் பிரெஞ்சு ஜனாதிபதி இந்தப் பிராந்தியத்தில் இப்போதுதான் தனது முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிந்தார். தற்போது அவர் இப்பகுதிகளுக்கு விஜயம் செய்தபோது அணுக்குண்டு சோதனைகளுக்கு தாம் கட்டளையிட்டதற்கு காரணம் என்ன என்பதை விளக்கினார். ''பொலினேஷியா இல்லாமல் பிரான்ஸ் ஒரு பெரிய அரசாக இருக்க முடியாது. உலக நாடுகளில் சுதந்திரமான, கண்ணியமான ஒரு நிலைப்பாட்டை பொலினேஷியா இல்லாமல் பிரான்ஸ் எடுத்துவைக்க முடியாது'' என்று சிராக் குறிப்பிட்டார். அத்தோடு, பசிபிக் தீவு நாடுகளுக்கிடையே ''ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், பேச்சுவார்த்தைகளுக்கு மறுதெம்பு ஊட்டவும்'' பாப்பெத்தில் ''France-Oceania" என்ற உச்சி மாநாட்டையும் நடத்தினார்.

வரலாற்று அடிப்படையில் பசிபிக்கில் பிரான்ஸ் ஒரு முன்னணி காலனித்துவ அரசாகும். 19 வது நூற்றாண்டில் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் துவங்கிய காலத்திலிருந்து மூன்று பிரதான பசிபிக் பிராந்திய தீவுகளை --பிரெஞ்சு பொலினேஷியா, நியூ கலிடோனியா, வலிஸ் மற்றும் புட்டுனா தீவுகள்-- பிரான்ஸ் ஆட்சிபுரிந்து வருகிறது. அதன் மூலம் தெற்கு பசுபிக் சமுத்திரத்தில் பெரும்பாலான பகுதிகள் அதன் கட்டுப்பாட்டில் உள்ளன. 1960 களில் பிரிட்டனும், நியூசிலாந்தும் Samoa, Cook தீவுகள் மற்றும் இதர தீவுப் பகுதிகளுக்கு சுதந்திரம் வழங்கியபோது பிரான்ஸ் அதனை எதிர்த்தது. தன்னாட்சி உரிமைகோரி இயக்கங்கள் நடந்ததைத் தொடர்ந்து அந்த மூன்று தீவுகளுக்கும் சில குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்பட்டாலும், அந்த மூன்று தீவுகளும் பிரான்சின் வசமே தற்போதும் உள்ளன. 1980 களில் ஒரு பத்தாண்டு நியூ காலிடோனியா தீவில் உள்நாட்டுப்போர் நிலவரங்கள் வெடித்தன. பிரான்சுவா மித்திரானுடைய சோசலிச அரசாங்கம் 1981 ல் தந்த தேர்தல் உறுதிமொழிகளை நிறைவேற்ற மறுத்துவிட்ட காரணத்தினால் உள்நாட்டு போர்போன்ற நிலவரம் தோன்றியது. அந்த உறுதிமொழியில், இந்தத் தீவுப் பகுதியைச் சார்ந்த Kanaks என்ற பூர்வகுடிகளுக்கு சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்பதாக இருந்தது .

பிரான்சிற்கு நியூ கலிடோனியா ஒரு முக்கியமான கச்சாப் பொருள் கேந்திரமாகும். அங்கு உயர்தர நிக்கல் கிடைக்கிறது. பிரான்சில் அதிக லாபம் தரும் ஆயுதத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்ற முக்கியமான மூலப்பொருள் நிக்கல் ஆகும். பிரெஞ்சு அரசாங்கம் அதை ''மூலோபாய'' உலோகம் என்று பிரகடனப்படுத்தி அந்த உலோகத்தை எடுப்பது மற்றும் பயன்படுத்துவதை மிக கவனமாக தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருக்கிறது. நிக்கல் சுரங்கத்தை வெட்டுவதற்கு சிறப்பு அனுமதி தேவை. அந்த பகுதியில் வெளிநாடுகள் முதலீடு செய்யும்போது 50 சதவீதமான முதலீடுகள் பிரான்சிலிருந்தே செல்வதால், அதன் வர்த்தக நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன.

பிரெஞ்சு பொலினேஷியா பசுபிக் சமுத்திரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளதால், அது, வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்காவிற்கு அருகில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. அல்ஜீரியா சுதந்திரம் பெற்ற பின்னர் பிரான்சினுடைய அணு ஆயுத சோதனைகள் இந்தப் பகுதியில் நடத்தப்பட்டன என்பது அந்தப் பகுதியின் பூகோள முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இரண்டாவது உலகப்போர் முடிந்த பின்னர் பசுபிக் பிராந்தியத்தில்தான் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியன அணு சோதனைகளை நடாத்தி வந்தன. இதில் பிரான்ஸ் Moruroa atoll பகுதியில் மிக விரிவாகவும், ஆழமாகவும் அணு குண்டு சோதனை ஏற்பாடுகளை செய்தது. 1966 ல் துவங்கி 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்ஸ் தரைக்குமேலே 46 அணுக் குண்டுகளையும், பூமிக்கடியில் 147 அணுக் குண்டுகளையும் வெடிக்க வைத்து சோதனைகளை நடாத்தி வந்தது. இதற்கான பொதுமக்களது எதிர்ப்பிற்கு பிரெஞ்சு அரசாங்கம் தனது அரச பயங்கரவாத நடவடிக்கைகளையே பதிலாக தந்தது. 1985 ல், Rainbow Warrior என்ற கிறீன் சமாதான (Greenpeace) கப்பல் Auckland துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சியிருந்தபோது, பிரெஞ்சு உளவு அதிகாரிகள் அதனை வெடிவைத்து தகர்த்தனர். அதில் ஒரு மாலுமி மாண்டார்.

பிரான்ஸ் தனது எல்லைகளை விரிவான அரசியல் நடவடிக்கைகளுக்கான தளமாகவும், பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பிஜி தீவுகளில் இரண்டு ஆட்சி கவிழ்ப்புக்களில் 1987 ஆம் ஆண்டு கேர்னல் Sitiveni Rabuka ஈடுபட்டபோது, அந்நாட்டோடு பிரான்ஸ் தனது உறவுகளை நிலைநாட்டி வந்தது. ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் தமது உதவிகளை பிஜிக்கு நிறுத்திவிட்டன. இந்த இரண்டு ஆட்சிக் கவிழ்ப்புகளுக்குப் பின்னரும் இடைக்கால அரசாங்கங்கள் அமைக்கப்பட்டதற்கு பிரான்ஸ் தனது ஆதரவைக் காட்டி நின்றது. அத்துடன், உதவித் திட்டங்களை விவாதிப்பதற்கு புளோஸையும் பிரான்ஸ் அங்கு அனுப்பியதோடு, 1987 ம் ஆண்டு இரண்டு பிரெஞ்சு ரோந்துப் படகுகள் சுவா (Suva) துறைமுகத்தில் தங்கி பிஜி கடற்படையோடு பயிற்சிகளிலும் ஈடுபட்டது. பிஜி இராணுவம் பயன்படுத்திக் கொள்வதற்காக, 1988 ல் 8 மில்லியன் டாலர் மதிப்புள்ள டிரக்குகள், ஹெலிகாப்டர்கள் உதவிகளை பிரான்ஸ் வழங்கியது. 1993 ல் பிரான்சும், பிஜியும் இராணுவ பரிவர்த்தனைகளை தொடக்க சம்மதித்தன.

1990 ல் தனது தனி பொருளாதார மண்டலத்தில் கடற் கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு பிஜி பிரான்சை கேட்டுக்கொண்டது. அத்தகைய கடற் கண்காணிப்பை அதற்கு முன்னர் நியூசிலாந்து விமானப்படை செய்து வந்தது. இதே போன்று பிரான்ஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குக் தீவுப் பகுதிகளில் தனது கடற்படை நடமாட்டத்தை அதிகரித்திருப்பதுடன், அடிக்கடி இத்தீவுகளின் கடல் எல்லைப் பரப்புகளை பிரான்ஸ் கண்காணித்து வருகிறது. இந்த 2.2 மில்லியன் சதுர கிலோ மீட்டர் கடற்பரப்பில் பாரம்பரியமாக நியூசிலாந்தின் செல்வாக்கு நிலைநாட்டப்பட்டு வந்தது. இத் தீவுகளுக்கு நியூசிலாந்தின் நிதியுதவி 1976 களில் 44 சதவீதமாக இருந்து, 1990 களின் தொடக்கத்தில் 14 சதவீதமாக குறைந்துவிட்டதை ஈடுகட்டுவதற்கு குக் தீவுகள் அரசாங்கம் பிரெஞ்சு அரசாங்கத்தின் கடன்களையும், உதவிகளையும் நாடியுள்ளது.

புளோஸுக்கும் ஆளும் செல்வந்த தட்டிற்கும் எதிராக வளர்ந்துவரும் உணர்வுகளை சுரண்டிக்கொண்டு பழைய எதிர்கட்சிகள் இப்போது புதிய அரசாங்கத்தை அமைத்து ஆட்சிக்கு வந்திருக்கின்றன. இருந்த போதிலும், இந்தக் கட்சிகள் மிக கவனமாக திட்டவட்டமான உறுதிமொழிகள் எதையும் தரவில்லை. அணு சோதனை திட்டங்களால் பாதிக்கப்பட்ட 15,000 பொலினேஷியத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு கோரிக்கையை மையக் கருத்தாகக் கொண்டு UPD தனது பிரச்சாரத்தை நடத்தி வந்தது. இந்தக் கட்சி, சென்ற ஆண்டு இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தலைநகரில் பேரணியை நடத்தியதோடு, பிரான்சிலிருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தியது. இந்த சுதந்திர கோரிக்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட தலைவராக பல ஆண்டுகளாக தெமுறு தன்னை நலைநாட்டிக்கொண்டு வருவதுடன், பிரெஞ்சு பொலினேஷியா ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்றும் வாதிட்டும் வருகிறார்.

அப்படியிருந்தும் தேர்தலுக்கு முன்னர் தனது கட்சியின் தொடக்க விழாவில் உரையாற்றிய பூத்தோ (Bouteau) தனிநாடு சாத்தியமில்லை என்றும், ''பிரான்ஸ் நமது நாடு, நமது நடவடிக்கைகளை கொண்டு செலுத்த பிரான்ஸ் நமக்குத் தேவை'' என்றும் குறிப்பிட்டார். பொலினேஷியா, ''நவீனவாத பூகோளமயமாக்கல்'' தாக்கங்களுக்கு உள்ளாவதால், சர்வதேச சூழ்நிலையில் நீண்டகால அடிப்படையில் அது வளரவேண்டுமென்ற பிரதான குறிக்கோளுடன் அவரது கட்சி செயல்பட்டு வருகிறது. அரசுத்துறையில் குறைந்தபட்ச மாத ஊதியம் 1,158 டாலர்களிலிருந்து 1579 டாலர்களாகவும், தனியார் துறையில் 850 டாலர்களாகவும் உயர்த்தப்படும் என தெமுறு மேற்கொண்டுள்ள முயற்சிபற்றி கருத்து தெரிவித்த பூத்தோ, அத்தகைய உயர்வுக்கு பின்னரும் போதுமானதாக இருக்காது என்று குறிப்பிட்டார். ஆனால், அத்தகைய உயர்வு ''முரட்டுத்தனமான'' அடிப்படையில் நிலைநாட்டப்படக் கூடாது, படிப்படியாக கொண்டுவரப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தப் புதிய அரசாங்கத்தை பாரிஸ் தன்வசம் கொண்டு வருவதற்கு, ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதற்கான அடையாளம் தான் 300 கலகம் அடக்கும் போலீசாரின் நடமாட்டமாகும். ஏற்கெனவே தெமுறு சுதந்திரக் கோரிக்கை தனது திட்டத்தில் இடம்பெற்றிருக்கவில்லை என்று பிரெஞ்சு அதிகாரிகளுக்கு உறுதியளித்திருக்கிறார். பொலினேஷியா நாடாளுமன்றத்திற்குதான் தேர்தல் நடந்தது என்றும் ''சுதந்திர நாடு கோரிக்கைக்காக பொது வாக்கெடுப்பு நடாத்தப்படவில்லை'' என்றும் அவர் அறிவித்தார். அத்தோடு, தையித்தி இறுதியாக ''சுதந்திரம் பெறுவதற்கு பொருளாதார அடிப்படையை தயாரித்தாக வேண்டும்'', அதற்கு பின்னர்தான் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்படும், அப்படி நடாத்தப்படுவதற்கு குறைந்தபட்சம் 10 முதல் 15 ஆண்டுகளாகும் என்றும் தெமுறு குறிப்பிட்டார்.

(1) பசுபிக் தீவுகள் 1996 வரலாறு

(2) தெற்கு பசுபிக் கையேடு 1993

(3) தெற்கு பசுபிக்கில் பிரான்சின் உறவுகள்

(4) இணையத் தளங்கள்: நியூஸிலாந்து வெளிவிவகாரங்கள் மற்றும் வர்த்தக அமைச்சகம்

(5) East -West Centre ஹவாய் பல்கலைக்கழகம் Tahiti- Presse


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved