A review of Alex Callinicos's An Anti-Capitalist
Manifesto
பிரிட்டனின் சோசலிச தொழிலாளர் கட்சியும் தேசிய சீர்திருத்தவாதத்தை பாதுகாத்தலும்
அலெக்ஸ் காலினிகோஸ் இன் ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு அறிக்கை பற்றிய
மதிப்புரை
பகுதி-1
By Chris Marsden
5 July 2004
Back to screen version
அலெக்ஸ் காலினிகோசின் ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு அறிக்கை, போலிட்டி
பிரஸ், லண்டன், ISBN 0-7456-2904-0
மேற்கண்ட புத்தகத்தைப் பற்றிய மூன்று-பகுதி ஆய்வுக் கட்டுரையின் முதல் பகுதி கீழே பிரசுரிக்கப்படுகிறது.
அலெக்ஸ் காலினிகோஸ் (Alex
Callinicos), உலகெங்கிலுமுள்ள பல நாடுகளில் கிளைத்
தொடர்புடைய பிரிட்டனின் சோசலிச தொழிலாளர் கட்சியின் முக்கியமான தத்துவவாதியாவார். உலக சமூக அரங்கம் (World
Social Forum), மற்றும் அதன் கிளையான ஐரோப்பிய சமூக
அரங்கம் (Europen Social Forum),
பொதுவாக பெரும்பாலான முன்னாள் இடது தீவிரவாத குழுக்களிலும் உள்ள அரசியல் ரீதியாக ஊழல்மிக்க தட்டினரை
நோக்கி தமது நிலைநோக்கை நியாயப்படுத்தும் வகையில் அவர் கொண்டுள்ள நிலைப்பாடு இப் புத்தகத்தைப் பற்றி
அக்கறை கொள்ளவைக்கின்றது.
முதலாளித்துவ-எதிர்ப்பு அறிக்கை என்ற போர்வையில், காலினிகோஸ் இந்த திட்டவரைவு,
போலியான வகையில் தொழிலாள வர்க்கத்தை அடித்தளமாக கொண்டு ஒரு புரட்சிகர அரசியலை முன்னெடுத்துச்
செல்வதையும் கைவிட்டுள்ளது. தேசிய அரசுதான் சீர்திருத்தவாத வேலைதிட்டத்தை செயல்படுத்த ஓர் அடிப்படையாக உள்ளது
என்று இவர் அறிவிக்கிறார், இவ்விலக்கை அடைவதற்காக சோசலிச தொழிலாளர் கட்சி தொழிலாள வர்க்கத்தை
அடித்தளமாக கொண்டிராத ஓர் அரசியல் இயக்கத்தை இணைத்து, அதில் பல எதிர்ப்பு இயக்கங்கள், சிந்தனைக் குழுக்கள்
(Think Tanks)
மற்றும் இடதுசார்புற நினைக்கும் அமைப்புக்களை இணைக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
இத்தகைய கூட்டுக்களின் மூலம்தான் சோசலிச தொழிலாளர் கட்சி முதலாளித்துவ அரசியல்
ஸ்தபானங்களின் மிக உயர்ந்த மட்டங்களில் தனக்கென ஒரு இடத்தை ஸ்தாபித்துக்கொள்ள முற்பட்டுள்ளது.
கார்ல் மார்க்சும், பிரெடெரிக் ஏங்கெல்ஸும் 1848-ல் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி
அறிக்கை, யை திருத்தியமைக்கும் முயற்சியாக காலினிகோஸ் மேற்கொண்டுள்ளார். மார்க்ஸ், ஏங்கெல்ஸின்
படைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை நினைவுறுத்தும் வகையில் இவருடைய நூலின் கடைசிச் சொற்றொடர் "முன்
எப்பொழுதும் இல்லாத முறையில், நாம் வெற்றி கொள்ளுவதற்கு ஓர் உலகம் இருக்கிறது." எனக் கூறுகிறது.
ஆனால் இரு அறிக்கைகளுக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடு மிகப் பெரியளவில்
உள்ளது. ஒரு புரட்சிகரமான சர்வதேச சோசலிச முன்னோக்கை பிரபலப்படுத்துவதற்காகவும், தொழிலாள வர்க்கத்தின்
அரசியல் சுயாதீனத்தை, முதலாளித்துவத்தையும், அதன் இலாப முறையை பாதுகாக்கும் அனைத்துப் பிரதிநிதிகளிடமிருந்தும்
பாதுகாத்துகொள்ளுவதற்கும் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் வெளியிட்ட அறிக்கை தனது இலக்கை கொண்டிருந்தது.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தொழிலாள வர்க்கத்தின் முற்போக்கான பிரிவுகள், அறிவுஜீவிகள் ஆகியோருக்கு
அழைப்புவிடும் வகையில் முடிவுரை சொற்களைக் கொண்டுள்ளது.
மார்க்ஸ்: "தங்களுடைய கருத்துக்களையும், இலக்குகளையும் மறைப்பதை கம்யூனிஸ்டுகள்
வெறுத்தொதுக்கிறார்கள். இருக்கும் சமூக நிலைமைகளை பலாத்காரமாக தூக்கிவீசுவதன் மூலமாகத்தான் தங்களுடைய
இலக்குகள் அடையப்படமுடியம் என்று அவர்கள் வெளிப்படையாக பிரகடனம் செய்கின்றனர். ஒரு கம்யூனிச புரட்சியை பற்றி
ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளி வர்க்கம் தங்களுடைய அடிமை தளைகளை தவிர இழப்பதற்கு வேறு
ஒன்றுமில்லை ஆனால் வெற்றி கொள்ள அவர்களுக்கு ஓர் உலகம் உள்ளது. உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்!"
என பிரகடனப்படுத்தினார்.
தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ அரசை பாதுகாப்பதை அடித்தளமாக கொண்டு ஒரு
முன்னோக்கிற்கும் மற்றும் இலாப முறையை அரசியல் ரீதியாக பாதுகாக்கும் பல விதமான அரசியல் குழுக்களின்
தலைமைக்கும் தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதே காலினிகோஸின் படைப்பின் நோக்கமாகும். இந்தக்
காரணத்தினால்தான் அவர் தன்னுடைய இலக்குகளை வெளிப்படையாகக் கூறமுடியாமல், போலிவாதங்கள், அரைகுறை
உண்மைகள், பொய்கள் இவற்றில் ஈடுபடவேண்டியுள்ளது.
ஓர் உண்மையான முதலாளித்துவ-எதிர்ப்பு அறிக்கை, முன்னேறிய தொழிலாளர்கள்,
இளைஞர்கள் ஆகியோருக்கு தற்காலத்திய முதலாளித்துவம் பற்றிய அடிப்படை தன்மைகளை எச்சரிக்கும் பணியை
முதன்முதலாகக் கொள்ளவேண்டும், இதற்காக ஒரு சோசலிச உலகிற்கான போராட்டத்தை ஆரம்பிப்பதற்கான
முன்னோக்கை எடுத்துக்காட்ட வேண்டும்.
கடந்த இருபத்தி ஐந்து ஆண்டு காலத்தில் வளர்ந்துள்ள, பூகோளமயமாக்கல்
உற்பத்திமுறையின் புறநிலை முக்கியத்துவம், வர்க்கப் போராட்டத்தில் அதன் தாக்கம் என்ன ஆகியவை பற்றி
விளக்கவேண்டியது அத்தகைய ஒரு முன்னோக்கில் இன்றியமையாதது ஆகும்.
இன்றைய உலகப் பொருளாதாரத்தின் முன்கண்டிராத இணைப்பும், ஒன்றையொன்றை
பிணைந்துள்ள தொடர்பும், முதலாளித்துவம் அடிப்படையாகக் கொண்டுள்ள தேசிய அரசின் முறையுடன் பொருந்தியிராத
தன்மையை கொண்டுள்ளன. இதனால் உலகம் முழுவதும் அனைத்து சமூக, அரசியல் உறவுகளில் அடிப்படை தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டைப் பொறுத்தவரையில், தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமை அனைத்து
நாடுகளிலும் மாபெரும் அளவில் அரிக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கங்கள் எப்படிப்பட்ட அரசியல் வண்ணத்தை
கொண்டிருந்தாலும், மலிவான மூலப்பொருட்கள், குறைந்த ஊதிய தொழிலாளர்ளை தேடும் சர்வதேச அளவில் இயங்கும்
இராட்சத
நாடுகடந்த நிறுவனங்களின் முதலீட்டை ஈர்ப்பதற்காக ஒன்றோடு ஒன்று போட்டியிடுகின்றன.
ஒரு தேசிய முன்னோக்கை அடித்தளமாககொண்டு அரசின் நிர்வாக இயந்திரத்தை
பயன்படுத்தி குறைந்தபட்சமாயினும் சமூக சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த விரும்பிய பழைய கட்சிகள்,
தொழிற்சங்கங்கள் ஆகியவற்றிற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே இருந்த உறவை இந்நிலை அடிப்படையிலேயே
மாற்றிவிட்டது.
தேசிய தொழிற்துறை வளர்ச்சி, பாதுகாப்பு இவற்றிற்கு பாடுபடுவது அதிக ஊதியம்,
சிறந்த வேலை நிலைமைகள் இவற்றிற்கு பாதுகாப்பாக இருக்கும் என்ற மூலக்கூற்றை கொண்ட பாரம்பரிய நிலைநோக்கை
கொண்டு சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் ஸ்ராலினிச கட்சிகள் நிறுவப்பட்டிருந்தன---- இவை ஒன்றாக இணைந்து
முதலாளிகளின் மீது அழுத்தம் கொடுத்து, பாராளுமன்றத்தின் மூலம் சில சமூக சீர்திருத்தங்களை கொண்டுவர முடியும் என்ற
கருத்தைக் கொண்டிருந்தன.
பூகோளரீதியாக இணைக்கப்பட்டுள்ள உற்பத்தி முறை மற்றும் அதன் விளைவான முன்கண்டிராத
மூலதனத்தின் நகரும் தன்மை, மேற்கூறிய கருத்தின் தன்மையை மிகப்பெருமளவில் இல்லாதொழித்துள்ளது. இத்தகைய
உலகந்தழுவிய மூலதன நகரும் தன்மைக்கு பழைய தொழிலாளர்கள் அமைப்புக்களின் பிரதிபலிப்பு தங்களுடைய சீர்திருத்த
திட்டங்களை கைவிட்டுவிட்டு, தங்களை ஐயத்திற்கிடமின்றி முதலாளித்துவ முறைக்கு இணங்கிய வகையில் அறிவித்துக் கொண்டது
ஆகும்.
தொழிலாளர் அதிகாரத்துவத்தின் சரிந்துகொண்டிருக்கும் எஞ்சியபிரிவின் ஒரு மிகச்சிறிய
பிரிவுதான் சீர்திருத்தக் கொள்கைகளை முன்வைக்கவேண்டும் என்ற பாசாங்கையாவது காட்டி வருகின்றன. ஆனால் அவை
தேசிய வேலைத்திட்டத்துடன் தொடர்ந்தும் பிணைந்திருக்கும் நிலைமையானது தொழிலாள வர்க்கம் இட்டுச்செல்லப்பட்டுள்ள
அரசியல் முட்டுக்கட்டையிலிருந்து மீள்வதற்கு வழியையோ அல்லது தங்கள் பழைய கட்சிகள் பாடுபட்டுப் பெற்றிருந்த கடந்த
கால சமூக, அரசியல் நலன்களின் மீது நடாத்தப்படும் தாக்குதல்களை எவ்வாறு எதிர்ப்பது என்பதற்கோ வழியை
காட்டுமுடியாதுள்ளது. பழைய அமைப்புக்கள், கட்சிகள் இவற்றிடமிருந்து பிளவுட்டுள்ள "இடது'' சாரிகள், இன்றைய
வர்க்கப் போராட்டத்தின் யதார்த்தத்திற்கு ஒத்திருக்கும் ஒரு சோசலிச சர்வதேச வேலைத் திட்டத்தின் அடித்தளத்தில்
தொழிலாள வர்க்கம் அரசியல் ஒழுங்கமைவதற்கு தடையாக இருக்கின்றன.
ஏகாதிபத்தியத்தின் கீழ், பூகோள உற்பத்திமுறை, விரோதப்போக்குடைய தேசிய
அரசுகளுக்கிடையேயான மோதல், உள்நாட்டில் வர்க்கப் போர் நடவடிக்கையை தோற்றுவிப்பதுடன், உலகின் வளங்கள்,
சந்தைகள் இவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான இரக்கமற்ற போராட்டத்தில்தான் முடிவடைகிறது.
உலகச்சந்தை, வளங்கள் இவற்றில் வன்முறை மூலம் நிறுவும் அமெரிக்க மேலாதிக்க முயற்சிதான், அமெரிக்க இராணுவ
வாதம் ஈராக்கை இரத்தக்களரி மூலம் வெற்றி கொண்டு ஆக்கிரமிக்கும் நிலையாக பிரதிபலித்து நிற்கின்றது.
தொழிலாள வர்க்கம் இந்த அபிவிருத்திக்கு எதிராக தேசிய மண்ணிற்கு திரும்புவதின் மூலம்
போராட முடியாது. பூகோள உற்பத்திமுறை தொழிலாளர் இயக்கத்தின் சர்வதேசிய நிலைநோக்கையும் புதிய
புரட்சிகரமான அடிப்படையும் கொண்டதாக இருக்கவேண்டும். அறிவார்ந்த முறையில் இணைத்து, உலக உற்பத்தி சக்திகளை
விரிவாக்குவதற்கும், வறுமையை அகற்றி, அனைவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு மட்டும் பூகோளமயமாக்கல்
வாய்ப்புக்களை ஏற்படுத்தவில்லை. அத்தோடு அது, தொழிலாள வர்க்கம் சர்வதேச அரசியல் போராட்டங்களை
ஐக்கியப்படுத்துவதற்கு ஒரு புறநிலை அடிப்படையையும் தோற்றுவித்துள்ளது.
இங்குள்ள பிரச்சனை பூகோளமயமாக்கலை எதிர்ப்பதல்ல, மாறாக உலகின் உற்பத்தி
சக்திகளை தமது கட்டிப்பாட்டிற்குள் கொண்டுவந்து, அவற்றை இலாப நோக்கிலிருந்து விடுவித்து, சமூக தேவைக்கு
உகந்ததாக உற்பத்திமுறையை அமைப்பதேயாகும். அத்தகைய போராட்டத்திற்கு இன்றியமையாத வகையில், முதலாளிகளின்
நலன்களுக்கு கீழ்ப்படியும் முறையில் உள்ள அனைத்துவிதமான தேசிய பொருளாதார, பாதுகாப்பு வாதங்களை தொழிலாள
வர்க்கம் புறக்கணிக்கவேண்டும்.
முதலாளித்துவத்தின் கருவியாக செயல்பட்டு தொழிலாள வர்க்கத்தை உள்நாட்டில்
அடக்குகின்ற, தேசிய அரசு என்ற கருவியின் மீது விழிப்புணர்வுடன் கூடிய விரோதப் போக்கை கொள்ளவேண்டும்
--அதுதான் தொழிலாள வர்க்கத்தை மற்றைய நாடுகளிலுள்ள அதன் சகோதர சகோதரிகளுடன் இணையாமல் பிரித்து
வைக்கப் பார்க்கிறது-- மேலும் அதுதான் உலக மக்கள், வளங்கள், இவற்றைச் சுரண்டி அதில் பங்கு கொள்ளும் தேசிய
முதலாளித்துவத்தின் உரிமையை பாதுகாக்கும் இயந்திர அமைப்பாகவும் இருக்கிறது.
தேசிய அரசையும் சீர்திருத்தவாதத்தையும் பாதுகாத்தல்
இதற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டைத்தான் காலினிகோஸ் கொண்டிருக்கிறார்.
அரசு, தொடர்ந்து செயலாற்றும் முறையில் இருக்கவேண்டும் என்றும், அதன் அதிகார
வரம்பின் விரிவிற்கு உட்பட்டுத்தான் தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் அடையாளம் காணப்படவேண்டும் என்றும் வலியுறுத்திக்
கூறுவதுதான் அவருடைய வேலைதிட்டத்தின் ஆரம்பப்படியாக இருக்கிறது.
தன்னுடைய கோரிக்கைகள்/விதிமுறைகள் ஆகியவற்றின் பட்டியல் பற்றி அவர் கூறுவதாவது:
"முதலில், மேலே கூறப்பட்டுள்ள கோரிக்கைகள் அனைத்துமே தனித்து இயங்கும் அல்லது
இணைந்து செயலாற்றும் அரசுகளின் பொறுப்பில் வைக்கப்படுகின்றன. இது பூகோளமயமாக்கலின் விளைவுகள் எப்படி
இருந்தாலும், உடன்பாடு காணப்பட்டுள்ள இலக்குகளை அடைவதற்கு தேசிய அரசுகள்தான் இன்னும் உலகில் இப்பொழுதுள்ள
மிகத் திறமையான கருவிகள் என்பதை பிரதிபலிக்கின்றது. பூகோள முதலாளித்துவத்திற்கு முக்கிய எதிர் சக்தியாக தேசிய
அரசை அடையாளம் கண்டு கூறப்பட்டுள்ள அரசியல் மூலோபாயத்தின் மட்டுப்படுத்தப்பட்ட தன்மையை நான் தள்ளிவிடுகிறேன்
என்று புரிந்து கொண்டுவிடக் கூடாது. முதலாளித்துவத்தின் பகுதிகளாகத்தான் அரசுகள் உள்ளன, அவை அதற்கு எதிர்த்து
செயலாற்றும் சக்தியாக செயல்படமாட்டா. ஆனால், தங்களுடைய மக்களின் விருப்பத்திற்கேற்ப ஓரளவேனும்
நடக்கவேண்டிய கட்டாயத்தில் அரசுகள் உள்ளதால், கீழ்மட்டத்தில் இருந்து வரும் அரசியல் அழுத்தத்திற்கு அவை இணங்க
வேண்டிய கட்டாயம் உண்டு. எனவே, வெகுஜன இயக்கங்கள், அவற்றிடம் இருந்து சீர்திருத்தங்களை
கறந்தெடுக்கப்படமுடியும்."(p.
139)
மூலதன கட்டுப்பாடுகளை அவர் நியாயப்படுத்தும் முறையும் இதேபோல் தெளிவாகத்தான்
உள்ளது.
"சர்வதேச நாணய நிதியம்,
உலக வங்கி இவற்றை நிறுவிய 1944 பிரிட்டன் வூட்ஸ் ஒப்பந்தத்தின்படி
(Bretton Woods agreement),
சர்வதேச சட்டம் அரசுகளை இன்னும் மூலதனக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது.... அச்சட்டங்களை
மீண்டும் அறிமுகப்படுத்துவது அரசாங்கங்களை மூலதனத்தின் உட்பாய்ச்சலையும், வெளிப்பாய்ச்சலையும் ஓரளவு
கட்டுப்பாட்டைக் கொள்ள வகை செய்யும். ரொபின் வரி
(Tobin tax), (பல முற்போக்கு குழுக்கள் ஆதரவுடைய,
சர்வதேச மூலதன நடவடிக்கைகள் மீதான திட்டமிடப்பட்டுள்ள வரி), மூலதனக் கட்டுப்பாடுகள் ஓரளவிற்கு நிதிச்
சந்தைகள்மீது அரசியல் கட்டப்பாடு ஏற்படுத்த அனுமதிக்கும்; இவ்விதத்தில் தேசிய அளவில் அது பயன்படுத்தப்படும். "(p.
133).
தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி தேசிய-அரசு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், உலகந்தழுவிய
முறையில் ஒரு சோசலிச திட்டத்தை ஆரம்பிக்க முற்படாமல், காலினிகோஸ் அரசுகள்மீது அழுத்தம் கொடுத்து சீர்திருத்தம்
கொண்டுவருவதைதான் விரும்புகிறார். "அரசியல் தந்திரோபாயம் என்ற முறையில் சீர்திருத்தவாதத்தின் தெளிவின்மை,
இருக்கும் முறைக்கு ஒரு சவாலாகவும், அதேநேரம் சவாலின் வேகத்தைக் குறைக்கும் வகையையும் அது கொண்டுள்ளது.
இந்த பிரச்சனையை கடக்க எளிதான வழி ஒன்றும் கிடையாது," என்று கூட அவர் அறிவிக்கிறார்.
பழைய சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் சிதைந்த பகுதிகளை
நோக்கித்தான் இவருடைய அரசியல் சார்பு உள்ளது. தன்னுடைய கோரிக்கைகளை பற்றி கூறுகையில் அவை "இப்பொழுதுள்ள
இயக்கங்களால்" தோற்றுவிக்கப்பட்டவைதான் என்று கூறுகிறார். ஒரு போலியான இடதுசாரிப் போர்வையின் உதவியுடன்
இவருடைய புத்தகம் பல முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவத்தின் தேவைகளை தொகுத்து இணைத்த ஒரு திட்டமாகத்தான்
இருக்கிறது. இக்கோரிக்கைகள் அவர்களின் சொந்த தனிச் சலுகைகளை முதலில் காக்கும்வகையிலும், இரண்டாம் பட்சமாக
முதலாளித்துவத்திற்கு எதிராக புரட்சிகரப் போராட்டம் வரும் வாய்ப்பை தவிர்க்கும் வகையில், பூகோளரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட
மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராக இன்றியமையாத சில குறைந்த தன்மையுடைய நலன்களை காப்பதற்கான அழைப்பை
விடுகின்றது.
பழைய கட்சிகள் தொழிலாள வர்க்கத்திடையே பெற்றிருந்த ஆதரவை தங்கள் வலது
திருப்பம் மூலம் பெரிதும் இழந்துள்ள நிலையில், இத்தாலியிலுள்ள
Communist Refoundation-(PRC) போன்றவை போலியான
இடது அமைப்புகளாகி முழு தொழிலாள அதிகாரத்துவத்திற்கும் போர்வையாக அமைந்துள்ளன. புதிய கட்சிகளை அமைத்திடல்,
அல்லது புதிய கட்சிகளைப் பற்றி அவை பேசுதல் ஆகியவற்றினால் அந்த நோக்கம் சிறிதளவேனும் மாறவில்லை. ஏனெனில்
இந்தக் கட்சிகள் முற்றிலும் தொழிலாள வர்க்கத்தை அதன் பழைய கட்சியின் பின் கொண்டுவரவேண்டும் என்ற
பார்வையைத்தான் கொண்டிருக்கின்றன.
இவற்றிற்கு உதவிய ஏராளமான அரசாங்க-சார்பற்ற அமைப்புக்கள் (NGOs),
அறக்கட்டளைகள், சிந்தனைக் குழுக்கள் ஆகியவை செயல்பட்டு, அவற்றின்
முக்கிய நோக்கம் முக்கிய கட்சிகளையும் தேசிய அரசாங்கங்களையும், வர்க்கப் போராட்டம் தவிர்க்கப்பட்டு புரட்சிகர
வடிவங்களை அது கொள்ளாமல் இருக்கவேண்டும் என்றால், ஒரு குறுகிய சீர்திருத்த சட்டத்தை இயற்றி முதலாளித்துவத்தின்
கொடுமையான தீவிரங்களை குறைத்தல் தேவையென வலியுறுத்தும் இலக்கை கொண்டுள்ளன. பிரான்சில் உள்ள அற்றாக் (Attac)
போன்ற இந்தக் குழுக்கள் தொழிற்கட்சிக்கும், தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் ஆலோசனை கூறுபவர்களாக
மட்டுமல்லாது, அவையே முதலாளித்துவத்திற்கும் அவ்வாறு செயல்படுகின்றன.
காலினிக்கோஸ், சோசலிச தொழிலாளர் கட்சி,
மற்றும் தீவிர இடது இக்கூட்டத்தில் எனக் கூறிக்கொள்ளும் தன்மை வாய்ந்தவர் அனைவருமே, இந்த இயக்கங்களுக்கு
அவ்வப்பொழுது மார்க்சிச சொற்றொடர்களை வண்ணம் தீட்டி, உலக சமூக அரங்கம், ஐரோப்பிய சமூக அரங்கம்
எனப்பெயரிட்டு தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பின் புதிய கருவாக தம்மை காட்டுகின்றனர்.
இவ்விதத்தில் இத் தீவிரப் போக்கினர்கள், முதலாளித்துவ அமைப்பினை இறுதியில் பாதுகாக்கும் இடத்தில் தங்களுக்காக ஓர்
உயரிடத்தை பாதுகாத்துக்கொள்ள வழிவகை செய்து கொண்டுள்ளனர்.
தொடரும் |