World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Green Party convention rejects Nader-Camejo ticket

பசுமைக் கட்சி மாநாடு நாடெர்-காமெஜோ வேட்புமனுவை நிராகரிக்கிறது

By Patrick Martin
28 June 2004

Back to screen version

உலக சோசலிச வலைத் தளம் செய்திகள் சேகரிக்கும் குழு ஒன்றை விஸ்கான்சினில் உள்ள மில்வாகீ இல் நடைபெற்ற பசுமை கட்சி மாநாட்டிற்கு அனுப்பியுள்ளது. மாநாட்டின் அரங்கில் இருந்தே அனுப்பப்பட்ட முதல் அறிக்கை சனிக்கிழமை, ஜூலை 5 அன்று (தமிழில்) வெளிவந்தது. மாநாடு பற்றிய விபரங்கள் வரக்கூடிய நாட்களில் தொடர்ந்து வெளியிடப்படும்.

பசுமைக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளரை உறுதிப்படுத்துவதற்காக நடைபெற்ற நெருக்கமான போட்டியில், கலிபோர்னியாவிலுள்ள வழக்குரைஞரும், கட்சியில் தீவிரமாக இருப்பவருமான டேவிட் கோப், சனிக்கிழமையன்று கட்சியை தன்பால் ஈர்க்க முற்பட்ட சுயேச்சை வேட்பாளரான ரால்ப் நாடெரை விட சிறிதளவு வாக்குகளாால் வெற்றியடைந்தார். மொத்தம் இருந்த 769 பிரதிநிதிகளின் வாக்குகளில் பெரும்பான்மையாக கோப்பிற்கு 408 வாக்குகள் இரண்டாம் வாக்கெடுப்பில் கிடைத்தன. 308 வாக்குகள் ஒருவருக்கும் இல்லை என்ற நாடெருடைய ஆதரவாளர்கள் கொண்டிருந்த நிலைக்குப் போடப்பட்டன, எஞ்சியிருந்த பிரதிநிதிகளின் வாக்குகள் மற்ற இரு வேட்பாளர்களுக்கு சென்றன.

பசுமைக் கட்சியின் வேட்பாளர் என்று கோப் அறிவிக்கப்பட்ட பின்னர், அவருடன் துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு மைனில் உள்ள பசுமைக் கட்சியின் தலைவரான பாட்ரீசியா லாமார்ஷ் (Patricia LaMarche) மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்டார். பாட்ரீசியா லாமார்ஷ் ஒரு வானொலிக் கருத்தாய்வாளர், அவர், 1998ல் மைன் மாநில ஆளுனராக பசுமை கட்சி வேட்பாளராக நின்றபோது 7 சதவிகித வாக்குகளைப் பெற்றார்.

இந்த முடிவு நாடெரின் பிரச்சாரத்திற்குக் கடுமையான தாக்குதல் ஆகும், இது பசுமை கட்சியின் வகையில் வாக்குச்சீட்டு அந்தஸ்து உள்ள 23 மாநிலங்களை பயன்படுத்தலாம் எனக்கருதி, மனு அனுப்புவதன் மூலம் வாக்குச்சீட்டில் இடம் பெறும் அந்தஸ்திற்கான சுமையைக் குறைத்திருக்கும். உதாரணமாகக் கலிபோர்னியாவில், வாக்குச் சீட்டில் இடம் பெறும் தகுதிக்காக நாடெருக்கு 165,000 பதிவான வாக்காளர்களின் கையெழுத்துக்கள், பசுமைக் கட்சி நிலையிலிருந்து சுதந்திரமாக நிற்க தேவைப்படும்.

பசுமைக் கட்சியில் அவர் ஒருபோதும் சேர்ந்ததில்லை என்றாலும், நாடெர்தான் அதன் ஜனாதிபதி வேட்பாளராக 1996, 2000 தேர்தல்களில் இருந்திருக்கிறார். நாடெருடைய புகழையும் தகுதியையும் பயன்படுத்த பசுமை கட்சி அப்பொழுது ஆவலுடன் இருந்தது, பொதுமக்களிடையே தன்னுடைய கெளரவத்தை உயர்த்த முற்பட்டிருந்தது. நீண்ட காலமாக நுகர்வோருக்காக வாதிடும் அவர் இம்முறை பசுமை கட்சி சார்பில் வேட்பாளராக நிற்காமல் சுயேச்சையாக நிற்க விரும்பினார். இவர் வலதுசாரி சீர்திருத்த கட்சியுடைய ஒப்புதலுக்கும் அங்கீகாரம் கொடுத்தார். அக்கட்சி 1990களில் பில்லியனரான ரோஸ் பெரொட் நிறுவியிருந்த பிரச்சாரக் கட்சிகளின் எஞ்சிய அமைப்பு ஆகும்; அதற்கு எட்டு மாநிலங்களில் வாக்குச்சீட்டுத் தகுதி உள்ளது.

ஆரம்பத்தில் நாடெர் பசுமை கட்சியின் இசைவை துச்சமாக மதித்தாலும், நாடெர் பிரச்சாரத்தை அமைப்பவர்களில் 2000ல் முக்கியமானவரும் கட்சியில் பொது ஆலோசகருமான டேவிட் கோப் தன்னுடைய வேட்புநிலையை அறிவித்ததோடு, பெரும்பாலான மாநிலங்களில் ஆரம்பத் தேர்தல்களிலும் மாநாட்டுத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். கலிஃபோர்னியா கவர்னர் தேர்தலில் 2002-லும் 2003-லும் கட்சி வேட்பாளராக இருந்த பீட்டர் காமெஜோ தனக்கு வேட்புரிமை வேண்டும் எனக் கோரியதோடு அந்த மாநிலங்களில் ஆரம்பக்கட்டத்திலும் வெற்றியைப் பெற்றார்.

மாநாடு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்பு, நாடெர் காமெஜோவுடன் ஒரு உடன்பாாட்டினை அறிவித்து துணை ஜனாதிபதி வேட்பாளராக இருக்கலாம் எனக் கூறினார், ஆனால் இன்னும் நாடெர் முறையாகக் கட்சியின் சார்பில் போட்டியிட மறுத்து பசுமைகள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தக் கூடாது என்றும் நாடெர்-காமெஜோ கூட்டிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கூறினார். பசுமைகளுடைய கட்சியில் சேராமல் கட்சி வாக்குகளை நாடெர் நாடினார்; இதனால் அவருக்கு பசுமை கட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை, கட்சியை பொறுத்தவரை அவருடைய பிரச்சாரத்தில் எந்தச் செல்வாக்கும் இருக்காது.

இந்த அணுகுமுறை பசுமை கட்சியில் செயலூக்கத்துடன் உள்ள ஏராளமான உறுப்பினர்களின் விரோதத்தை சம்பாதித்தது; சில மாநிலங்களில் நாடெரைக் கட்சி சார்பாக நிறுத்தாமல் கட்சி வாக்குகளுக்கு மட்டும் உடன்படுவது கட்சியின் வாக்குகளுக்கே ஆபத்து ஏற்படும் என்ற உணர்வை ஏற்படுத்தியது. இந்த உணர்வை நல்ல முறையில் காப் பயன்படுத்தினார்; முதன் முறையாக தன் உறுப்பினர்களில் ஒருவரையே வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்று அவர் வாதாடினார்; இந்த முறையில் ஒரு சுயேச்சைக்கு ஆதரவு என்பதற்குப் பதிலாக கட்சி அமைப்பை கட்டியெழுப்புவதற்கு பிரச்சாரம் பயன்படும் என்றும் வாதிட்டார்.

ஜனநாயகக் கட்சியுடனான மோதலைத் தவிர்த்தல்

எவ்வாறிருந்தபோதிலும் அமைப்புமுறை கவனங்களுக்கும் அப்பால், காப்-லாமார்ஷ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டது பசுமைக் கட்சியின் ஒரு முக்கியமான அரசியல் முடிவான இந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியுடன் உடன்பட்டு இருப்பதையும் காட்டுகிறது. "பாதுகாப்பான மாநில" மூலோபாயம் என்ற முறையை காப் எடுத்துரைக்கிறார், இதன்படி பசுமை கட்சியினர் தங்களுடைய வெற்றிபெறும் வாக்குகளை கெர்ரி அல்லது புஷ் அதிக வாக்குகள் கொண்டுள்ள கலிஃபோர்னியா, டெக்சாஸ் போன்ற மாநிலங்களில் குவித்துப் போடுவர். இன்னும் நெருக்கமான போட்டி இருக்கும் இடங்களில், ஓகியோ, புளோரிடா "போர்க்களம் போன்ற மாநிலங்களில்" காப் குறைந்த முறை பிரச்சாரத்தை மேற்கொண்டு பசுமைகள் "கெடுப்பவர்கள்" என்ற பெயரை பெற்றுக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுவர், அத்தகைய குற்றச்சாட்டைத்தான் நாடெர் மீது ஜனநாயகக் கட்சியினர் 2000 வாக்குகளில் புளோரிடா மாநிலத்தைப் பொறுத்தவரை சுமத்தியிருந்தனர்.

புளோரிடாவில் குடியரசுக்கட்சி அரசியல் கவிழ்ப்பு செய்ததற்கு ஜனநாயகக் கட்சி அடிப்பணிந்தது என்பதை என்பதை கோப் ஒப்புக் கொண்டுள்ளார்; மேலும் அக்கட்சி அமெரிக்க உச்ச நீதிமன்றம் தலையிட்டதற்கும் மூடுதிரையாய் இருந்தது எனக் கூறியுள்ளார், இருந்தாலும் கூட பசுமைகள் வருங்காலத்திலும் ஜனநாயகக் கட்சியை தாக்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் போர்க்களத்திற்கு ஒப்பான மாநிலங்களில் வாக்குகளை சேகரிக்க தீவிரமாக முயலவேண்டாம் என்றே வலியுறுத்துகிறார்.

பசுமைகளின் மாநாட்டில், நாடெர்-காமெஜோ ஆதரவாளர்கள் இந்த "பாதுகாப்பு மாநிலங்கள்" அணுகுமுறையை விமர்சித்துள்ளனர், அவர்கள் புஷ்ஷின் வெற்றியை பற்றிய அச்சம் அல்லது ஜனநாயகக் கட்சியில் பதில் தாக்குதல் பற்றிய அச்சம்தான் இத்தகைய முறைக்குக் காரணம் எனக் கூறுகின்றனர். ஆனால் நாடெரே இதே கருத்தை சற்று மாற்றித்தான் முன்மொழிந்துள்ளார், கெர்ரியை சந்தித்தல், அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு வெற்றி காணவேண்டும் என்ற அறிவுரை கொடுத்ததோடு, ஜூன் 23 தேசிய பொது வானொலிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், அவர் முக்கிய மாறுதல்களை கொடுக்கக் கூடிய மாநிலங்களில் தந்திர முறையில் ஜனநாயக வேட்பாளருக்கு வாக்குகளும் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

காப், லாமார்ஷ் இருவருமே கெர்ரி பிரச்சாரத்திற்கான தங்களுடைய சமரசப் போக்கை, சனிக்கிழமை அன்று தங்கள் வேட்பு மனு ஒப்புக்கொள்ளப்பட்ட பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்கள். தன்னுடைய ஆரம்ப உரையில் காப் முற்போக்கு கருத்துக்கள் நிறைந்த தீவிரவாத சொற்றொடர்களான "புரட்சியை ஒத்த வன்முறை தவிர்த்த இயக்கம் இந்நாட்டிற்குத் தேவை" அமைக்கப்படவேண்டும் என்றெல்லாம் கூறினார். இப்பொழுதுள்ள அமெரிக்காவிலிருந்து மாறுபட்டு, "முதல் பதின்மூன்று காலனித்துவங்கள் அமெரிக்காவை ஏற்படுத்தியதிலிருந்து பின்னர் அடிமை முறை அகற்றப்பட்டதற்கு மாறியதுபோல்" புதிய அமெரிக்கா ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார். ஆனால் இந்த மாற்றங்களில் மிகப்பெரிய சமூக அணிதிரட்டப்பட்டிருந்ததுடன், வன்முறையும் கையாளப்பட்டது, அமெரிக்கப் புரட்சியும் பின்னர் உள்நாட்டுப் போருமே அவையாகும்.

"பாதுகாப்பு மாநிலங்கள்" மூலோபாயம் பற்றிய கேள்விகளுக்குப் பதில் வழங்குகையில், பசுமைகள் ஜனநாயகக் கட்சியுடனும் கெர்ரியுடனும் நேரடி மோதலைத் தவிர்க்க முற்படுகின்றனர் என்ற கருத்தை கோப் மறுத்தார். "இது கெர்ரி பிரச்சாரத்திற்கு வெற்றியல்ல; டேவிட் கோபும் பாட் லாமார்ஷேயும் இந்நாட்டில் பிரச்சாரங்களை மேற்கொள்ளுகின்றனர், ஜோன் கெர்ரியின் பெரு நிறுவன இராணுவவாதக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடுவர். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் போருக்கான ஆதரவைக் கெர்ரி கொடுத்தவர். ஜோன் கெர்ரி தேசபக்த சட்டத்திற்கு வாக்களித்தவர். ஜோன் கெர்ரி பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட தரப்படுத்தல் சட்டத்திற்கு (இதனை நடமுறைப்படுத்தாத பாடசாலைகள் நிதிவெட்டை எதிர்நோக்கேண்டும்) வாக்களித்தார். ஜோன் கெர்ரி NAFTA விற்கு ஆதரவாளர். ஜோன் கெர்ரி அனைத்து பெரு நிறுவன செயற்பட்டியலுக்கும் ஆதரவு அளிப்பவர். அந்த விமர்சனங்கள் முற்றிலும் எடுத்துக் கூறப்படும். ஆனால் நாங்கள் அமெரிக்க மக்களிடம் நேர்மையாக ஜோர்ஜ் புஷ், ஜோன் கெர்ரியைவிட ஆபத்து நிறைந்தவர் என்பதையும் எடுத்துரைப்போம். இப்பொழுது அது ஒரு நேர்மையான மதிப்பீடு ஆகும்."

பசுமைகள் வேறுவிதமான "செய்தியைத்தான்" "பாதுகாப்பான மாநிலங்கள்" என்று கூறும்போது தெரிவிப்பார்கள்; அது எங்கு ஜனாதிபதித் தேர்தல் வெகு நெருக்கமாக நடைபெறுமோ அங்கு இருக்கும் என்று கோப் கூறினார். "கலிபோர்னியாவில், காப்-லாமர்ஷின் தகவல், "முற்போக்குவாதிகளே உங்கள் வாக்குகளை வீணடிக்காதீர்கள்" என்போம்; ஏனெனில் ஒரு முற்போக்காளர் பெரு நிறுவன இராணுவ வாதியான ஜோன் கெரிக்கு வாக்கு அளித்தால் அது புஷ் தேர்வுசெய்யப்படாமல் போக உதவாது; நீங்கள் உண்மையிலேயே ஆதரிக்காத கொள்கைகளுக்குத்தான் உதவும். அது ஒரு வீணடிக்கப்படும் வாக்கு ஆகும். எளிய செய்தியான, முற்போக்காளர்கள் உங்கள் வாக்குகளை வீணடிக்காதீர்கள். மற்ற மாநிலங்களில் எங்கு நெருக்கமான போட்டி, ஆழ்ந்து ஜனநாயக, குடியரசுக் கட்சி இரண்டுமே தீவிர விமர்சனத்திற்க்குள்ளாகியுள்ளதோ, அங்கு நாங்கள் "சிந்தித்து உங்களுடைய வாக்குகளை போடுவீர் எனக்கூறி முடிப்போம்". இதுதான் வாக்களாரை முற்றிலும் மதிக்கும் செயல் ஆகும்; அது வாக்களார்களை நாம் ஏன் ஒரு குறிப்பிட்ட முறையைக் கொண்டுள்ளோம் என்பதை சிந்திக்கவைக்கும்; நான் ஏன் விரும்புவதை ஆதரிக்கிறேன் என்பதை நான் ஏன் எதிர்த்து வெறுக்கிறேன் என்பதைவிட, சிந்திக்க வைக்கும்."

பாட்ரிஷியா லாமார்ஷே இன்னும் கூடுதலான முறையில் கெர்ரி பிரச்சாரத்திற்காக வெளிப்படுத்தினார். "மக்கள் தங்களுடைய வருங்காலம் எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றி தாங்களே முடிவு செய்யவேண்டும் என்றுதான் நான் உண்மையில் கருதுகிறேன். இந்த ஆண்டு மக்கள் பயத்தில் உள்ளார்கள் என்பது எனக்கு கவலையளிக்கக் கூடிய பல விஷயங்களில் ஒன்றாகும்; ஏனெனில் என்னுடைய கருத்தில் நாம் இப்பொழுது அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதியை கொண்டுள்ளோம்; மக்கள் அதற்கு அச்சமுற்றால், தாங்கள் அச்சமுறுகிறோம் என்பதற்காக இழிவுபடுத்தப்பட்டால், அவர்கள் தாங்கள் வேறு ஒரு தேர்தலில் கொள்ளும் முடிவிற்கு மாறாக இதில் வாக்களிப்பர். நீங்கள் ஒரு போலியை உங்கள் அறையில் கண்டீர்கள் என்றால், நாங்கள் போலி இல்லை என உங்களிடம் கூறப்போவதில்லை." என்று இந்த அம்மையார் கூறினார்.

இதை ஒட்டி பசுமை வேட்பாளருக்கும் WSWS நிருபருக்கும் கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டது.

லாமார்ஷே: "ஒரு வாக்காளர் தன் விருப்பப்படி வாக்களிக்கும் நிலையைப் பற்றித்தான் இது; தனக்கு நிறைவு அளிக்கும் முறையில் அவருடைய வாக்கு இருக்கவேண்டும் ... ஒரு வாக்காளர் வாக்குப் போட்டு ஓர் அரசாங்கத்தை அமைத்து ... அது முழு உலகிற்கும் ஓர் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது..."

WSWS: "உலகம் முழுவதற்கும் கெர்ரி அரசாங்கம் ஓர் அச்சுறுத்தலாக இருக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?"

லாமார்ஷே: "அமெரிக்க வரலாற்றில் கார்ல் ரோவ், ஜோர்ஜ் புஷ்ஷை தவிர வேறு எந்த ஜனாதிபதியும் கூடுதலான அச்சுறுத்தல் என்று நான் கருதவில்லை. அந்த மனிதர் வெளியேற்றப்படவேண்டும். அவர் தன்னுடைய பதவியைவிட்டு நீங்க வேண்டும். அவர் வீட்டிற்குச் சென்று அங்கேயே தங்கவேண்டும்."

இந்த நிலைப்பாட்டின் தர்க்கம் என்ன என்றால் ஜனாதிபதித் தேர்தல் வெகு நெருக்கமாக உள்ளது என்பதும், மைன் ஒரு போர்க்களத்திற்கொப்பான மாநிலம் என்பதும் திருமதி லாமார்ஷே தன்னுடைய மாநிலத்தின் பசுமை வேட்பாளருக்கு வாக்குகள் சேகரிக்க முயலமாட்டார் என்பதும் ஒருவேளை தன்னுடைய வாக்கையே கெர்ரிக்குப் போடுவார் என்பதும் ஆகும்.

உள்ளுர்வாதமும் "கூட்டணி-கட்டியெழுப்புதலும்"

இம்முறையிலான ஜனநாயகக் கட்சிக்கு நிபந்தனையற்ற சரணாகதியின் பின்னணியிலுள்ள சிந்தனைப் போக்கு, அரசியல் பிரச்சினைகள் மட்டும் அல்ல; உறுதியாக சடத்துவ நலன்கள் அமைந்துள்ளன. பசுமை கட்சியை பொறுத்தவரை முக்கியமான உண்மை உள்ளூர் தேர்ந்தெடுத்த அதிகாரிகளில் குறிப்பிடத்தக்க தட்டுக்களை அது கொண்டுள்ளது; 1996ல் 40 இலிருந்து 2004 ஆரம்பித்தபோது அது 205 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் மின்னியாபொலீஸ், மாடிசன், விஸ்கான்சின், இன்னும் பல கல்லூரி நகரங்கள், மைன் மாநிலச் சட்ட மன்றத்தில் ஒரு உறுப்பினர், கணக்கிலடாங்கா கலிஃபோர்னிய நகரமன்ற அதிகாரிகள், டசின் கணக்கில் மற்ற அலுவலர்கள் இவர்கள் எல்லோரும் அடங்குவர். இந்த ஆண்டு ஆரம்பத்தில், பசுமைக் கட்சி வேட்பாளர் Matt Gonzalez என்னும் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட மேற்பார்வையாளர் நகர மேயர் பதவிப் போட்டியல் மிகக் குறைவான வாக்கில்தான் தோற்றார்.

இந்த உள்ளூர் அதிகாரிகளில் கிட்டத்தட்ட அனைவருமே கோப் (Cobb) பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள் ஆவர். அவர்களில் பலர் ஆரம்பத்தில் போர்க்களத்தை ஒத்த மாநிலங்களில் மட்டுமல்லாது கெர்ரியின் பிரச்சாரத்துடன் ஒரு மோதலை தவிர்த்துக்கொள்வதற்கு பசுமைகள் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தவேண்டாம் என்றே கூறியவர்கள். "வேட்பாளர் நியமனமும் வேண்டாம், ஒப்புதல் கொடுத்தலும் வேண்டாம்" என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் ஒரு சிறுகுழுக் கூட்டம் மாநாட்டிற்கு முன் கூட்டப்பட்டபோது அதற்கு 50 பிரதிநிதிகள் வந்திருந்தனர், அவர்கள் அதிக விளம்பர முறையில் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம், உள்ளூர்த் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியின் தாராளவாதிகளுடனான கூட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றனர்.

இந்த நிலைமையை ஆதரித்து ஒரு துண்டுப் பிரசுரமும் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது, இது எத்தகைய சமூக, அரசியல் அழுத்தங்களுக்கு பசுமைகள் உட்படுகின்றனர் என்பதை உறுதிப்படுத்தியது. தேசிய வேட்பாளர் ஒருவருக்கு ஒப்புதல் அளித்தல் என்பது மற்ற கட்சி உறுப்பினர்களுடன் அடிமட்டத்தில் சேர்ந்து உழைப்பதற்கு தடைகளை ஏற்படுத்தும் என்றும் உள்ளூர் போட்டிகளிலிருந்து கவனத்தை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு திசை திருப்பிவிடும் என்றும் அடிமட்ட அளவில் விரோதப்போக்கை தூண்டிவிடும் என்றும் கூறியது. "எந்த வேட்பாளரையும் நிறுத்தாவிட்டால், பசுமை கட்சியின் வலிமையை அடிமட்டத்தில் வலுப்படுத்த உதவும், தேசிய செய்தி ஊடகத்தில் நாம் வெற்றி காணமுடியாத தேர்தலில், கடுமையான போட்டியும் தவிர்க்கப்படும்" என்று துண்டுப் பிரசுரம் வாதிட்டது. "நமக்குச் சிறந்த வழி, தேசிய செல்வாக்கை அடைவதற்கு, உள்ளூர் மட்டத்தில் அதிகாரத்தை கட்டுயெழுப்புவதுதான்."

"எந்த வேட்பாளரும் வேண்டாம்" என்ற கருத்தின் செய்தித் தொடர்பாளர் மாநாட்டில் வேட்பிற்கான வாக்களிப்பிற்கு முன் உரையாற்றினார். வரவிருக்கும் உள்ளூர் தேர்தல் பிரச்சாரங்கள் பசுமைகளை பொறுத்தவரையில் ஜனாதிபதித் தேர்தலைவிட முக்கியமானது என்றும் பசுமைகள் ஜனநாயகக் கட்சியினரை பகைத்துக் கொள்ளுவதை தவிர்க்கவேண்டும் என்றும் அவர்களுடைய ஒத்துழைப்பு உள்ளூர் தேர்தல்களில் இன்றியமையாதது என்றும் அவர் கூறினார். "நீங்கள் "கெடுப்பவர்கள்" என்ற குற்றச்சாட்டை பற்றி என்ன நினைத்தாலும், பல வாக்காளருக்கும் மனத்தில் அறிதல்தான் உண்மை. அரசியல் எல்லாமே மக்களை உங்களுக்காக வாக்களிக்க வைத்தலேயாகும்."

"வெற்றி வாய்ப்பு இருக்கக் கூடிய உள்ளூர் தேர்தல்களின் வேட்பாளர்களின் வளங்களை, வெற்றி காண முடியாத தேசிய வேட்பாளர்களுடன் இணைத்து பிளவுபடுத்தி விடாதீர்கள். வெறுமே, வெற்றி வாய்ப்பு இல்லாமல் தேர்தலில் நிற்க விரும்புகிறீர்களா அல்லது சில பதவிகளையாவது கொள்ளவேண்டும் என்று விரும்புகிறீர்களா?' என அவர் கூறிமுடித்தார்.

சில பசுமை தலைவர்களும் WSWS உடன் பேசுகையில், வேட்பாளர்களாக காபும் லாமார்ஷேயும் ஏற்கப்பட்ட பின்னரும்கூட, இத்தகைய வெளிப்படையான சந்தர்ப்பவாதத்தைத்தான் வலியுறுத்தினர். ஆஸ்டின் கிங் என்னும் விஸ்கான்சினுலுள்ள மாடிசன் நகர ஆல்டர்மென் வெளிப்படையாக வாக்குச் சாவடியில் "குறைந்த தீமைக்கு" வாக்களிப்பதே உகந்தது என்று தெரிவித்தார்.

பசுமைக் கட்சியின் நிறுவன உறுப்பினரும், மைனிலுள்ள பெளடோயின் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்ற பேராசிரியருமான ஜோன் ரென்சன்பிரங்க், சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் Gonzales, மைன் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஜோன் எடர், இன்னும் பல தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்கள் தாங்கள் உள்ளூர் தேர்தல்களில் வெற்றி பெறுதல், அல்லது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளுதல் என்பதுபோல நாடெர் கட்சியின் உயர்ந்த வேட்பாளராக நிறுத்தப்பட்டால் முடியாது என்று கருதுவதாகத்தான் கூறினார்.

எடெர் மாநாட்டிற்கு கொடுத்த அறிக்கையில், கோபிற்காக வாக்குப் போட அழைப்புக் கொடுத்தபின் "கெடுக்கும் பங்கில் வலிமை இருப்பதில் நான் களிப்பு அடைந்தாலும், இந்த மூலோபாய புள்ளியின் வளர்ச்சிக் கட்டத்தில் இந்தக் கடுமையான ஆயுதத்தை பயன்படுத்துவதை தவிர்த்தல் நலம் எனக் கருதுகிறேன்." என தெரிவித்தார்.

தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினரும், Rhode Island இருந்து வருபவரும், பசுமை கட்சியின் சர்வதேச உறவுகள் குழுவின் தலைவரும், பசுமை கட்சியிலேயே நீண்ட காலாமக உழைக்கும் Tony Affigne, கோபை நாடெருக்கு எதிராக ஆதரித்தார், ஏனெனில், ஜனாதிபதி தேர்தலின் பின்விளைவுகளினால் அவர்களுக்கு "ஒவ்வொரு பகுதியிலும் ஜனநாயக வாதிகளுடன் கொண்டுள்ள உறவிற்கு" ஊறு ஏற்படுத்தும் என அவர் பயந்தினாலாகும். பெரும்பாலான உள்ளூர் தேர்தலில் வெற்றிபெற்ற பசுமைகள் தாராளவாத ஜனநாயவாதிகளின் ஆதரவை நம்பி இருப்பவர்கள் என்றும் அதை இழந்துவிடுவோமோ என்ற கவலையில் அவர்கள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved