World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Liberal philistinism and Michael Moore's Fahrenheit 9/11

தாராண்மை பிளின்ஸ்டைன் வாதமும் (கலை இலக்கியங்களை புரியாத வெறுக்கின்றபோக்கு) மைக்கல் மூரின் பாரென்ஹீட் 9/11ம்

By David Walsh
9 July 2004

Back to screen version

ஜூலை 7 வரை, அமெரிக்காவில் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் மைக்கல் மூரின் ஆவணப் படமான பாரென்ஹீட் 9/11 ஐப் பார்த்துள்ளனர். அமெரிக்க அரசாங்கம் உலகை ஆதிக்கம் செய்து அதைச் சூறையாடவேண்டும் என்ற பேரவாக் கொண்டுள்ள ஒரு கோணல்புத்தியுடைய கூட்டத்தால் ஆளப்படுகிறது என்ற உண்மையை, ஜூன் 25ற்கு முன் தெரிந்திருந்தவர்களைவிட இப்பொழுது மில்லியன் கணக்காக கூடுதலான மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.

மூரின் படத்தில் சில குறைபாடுகள் உள்ளன; ஆனால் அது புஷ், செனி, ரம்ஸ்பெல்ட், பவல், வுல்போவிட்ச் இன்னும் பலரும் பொய்கூறுபவர்கள், போர்க் குற்றவாளிகள், பொதுவாக பெரு வர்த்தகத்துடனும் குறிப்பாக எண்ணெய் தொழில் துறையுடனும் நெருக்கமான நட்பு உடையவர்கள் என்பதை நம்பும் வகையில் வாதிட்டுள்ளது. மக்கள் தொகையின் அதிகரித்துவரும் பரந்த தட்டினருக்குள்ளே இந்த உண்மைகள் பற்றி இனி எந்தவிதமான விவாதமும் சாதாரணமாக இல்லை.

பாரென்ஹீட் 9/11 திரைப்படத்தின் வெற்றி அமெரிக்கச் செய்தி ஊடகத்தின் முக்கிய பிரமுகர்களுக்கு ஆழ்ந்த உளைச்சலை கொடுத்துள்ளது; இவர்கள் அனைவருமே, ஏதேனும் ஒருவிதத்தில், ஈராக்கில் ஹுசைன் ஆட்சியை பற்றிய சில உண்மைகளை மறைப்பதற்கு உதவியவர்கள் ஆவர் -- அதனிடத்தில் பேரழிவு ஆயுதங்கள் இல்லை, அதற்கு அல்-கொய்தாவுடன் எந்தத் தொடர்பும் இல்லை, செப்டம்பர் 11 தாக்குதல்களில் அதற்கு எந்தப் பொறுப்பும் கிடையாது என்பவற்றை அமெரிக்க மக்களிடமிருந்து இவர்கள் மறைத்தவர்களாவர்.

ஏகாதிபத்திய தலையீட்டிற்கான இக்கட்டுரையாளர்களின் பொய்கள் அல்லது பரிந்துபேசல்கள் அம்பலமானதை அடுத்து, அவற்றை மறைக்கும் ஒரு பகுதியாக பாரென்ஹீட் 9/11 மீது விஷப்பார்வையைக் கக்குவது இயற்கையே.

வாஷிங்டன் போஸ்டின் ரிச்சர்ட் கோஹென், நியூ யோர்க் டைம்ஸின் நிகோலஸ் கிரிஸ்டோப் போன்றோருடன் சேர்ந்து சமீபத்தில் மூரீன் ஆவணப்படத்தின் மீது கடுமையான தாக்குதலை நடத்தியிருக்கிறார்.

ஈராக்கிய போரை பொறுத்தவரை, கோஹென் குறிப்பிடத்தக்க இழிமுறையில் நடந்து கொண்டுள்ளார். பாரசீக வளைகுடாவில் அமெரிக்கத் தலையீடு பற்றி தயக்கங்களை தெரிவித்தபின்னர், டமாஸ்கசிற்குச் செல்லும் பாதை போல், இந்த போஸ்டின் கட்டுரையாளர், 2003 பெப்ரவரி 5 ம் தேதி, ஐ.நா. பாதுகாப்புக் குழுவில், இழிவான முறையில், வெளியுறவு அமைச்சர் கொலின் பவெல் தோன்றியதை, ஒளிப்பிழம்பாகக் கண்ணுற்றார்.

ஈராக்கியர்கள் ஆயுதங்களைக் களையும் முயற்சியைக் கொள்ளவில்லை, உண்மையில், "பேரழிவு ஆயுதங்களை மறைத்து வைக்கும் முயற்சிகளில்" ஈடுபட்டுள்ளனர் என்ற பவெலின் உரையின் நோக்கம் அமெரிக்காவில், போருக்கான உந்துதல் பற்றி ஆழ்ந்து மாறுபட்ட கருத்துக்கள் கொண்டிருந்த மக்களிடையே பொதுக்கருத்தை ஏற்படுத்துவதில் செல்வாக்கு செலுத்துவதாகும். உண்மையில் பத்து நாட்களுக்குப் பின்னர் நூறாயிரக் கணக்கான அமெரிக்கர்களும், உலகெங்கிலும் மில்லியன் கணக்கிலும் மக்கள் போர் அச்சுறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அமெரிக்க மக்களிடையே இருந்த இந்த அவநம்பிக்கையை முறியடிக்கும் வகையில், ஒரு முழு உரிமை பெற்ற நாட்டின் மீது, தாக்குதல் நடத்துவதற்காக, பாதுகாப்பு குழுவின் இசைவு தேவை என்று அரசாங்கம் கருதியது.

பெப்ரவரி 5 ல் பாதுகாப்புக் குழுவில் பவெல் தோன்றியதே, ரஷ்ய மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள், மற்றும் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள், அமெரிக்காவில் உள்ள பல செய்தி ஊடக நிபுணர்கள், பவெல் காட்டிய இத்தகைய "கட்டாயமான", "நம்பும்படி உள்ள" சான்றுகளின் ஆதாரத்தில், தங்கள் முந்தைய அரை மனதான ஆட்சேபனைகள் கைவிடப்படவேண்டும் என்பதற்குத்தான்.

கோஹெனைப் பொறுத்தவரையிலாவது, இந்த உத்தி மந்திரம் போல் செயலாற்றியது.

பவெலுடைய பேச்சு ஈராக்கியரின் இரசாயன, உயிரியல், அணுவாயுத ஆயுதங்கள், பயங்கரவாதத்துடனான அவர்களுடைய தொடர்புகள் ஆகியவற்றைப் பற்றிக் கூறியிருந்தது; இவை ஒன்றுகூட அந்த நேரத்தில் சரிபார்க்கப்படவில்லை, அனைத்துமே பின்னர் தவறு என்று நிரூபிக்கப்பட்டன. தனக்கு உறுதியாகத் தெரியும் என வெளியுறவு அமைச்சர் கூறியிருந்த இரகசிய ஆயுதக் கிடங்குகள், பின்னர் கண்டே பிடிக்கப்படவில்லை; ஏனென்றால் அவை இருந்ததே இல்லை.

ஆனால், கோஹெனுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. "A Winning Hand for Powell" என்ற பெப்ரவரி 6ம் தேதி கட்டுரையில் அவர் எழுதினார்: "அவர் [பவெல்] ஐ.நா.விற்கு அளித்த சான்றுகளில், சில சூழ்நிலையை ஒட்டி இருந்தாலும், சில எலும்புகளையும் உறையவைக்கும் விவரங்களை கொடுத்துள்ளன; ஈராக் எவருக்கும் தன்னுடைய பேரழிவு ஆயுதங்கள் பற்றிய கணக்கை கொடுக்கவில்லை என்பதை நிரூபிப்பதுடன், ஐயத்திற்கு இடமின்றி அவற்றை இன்னும் கொண்டுள்ளன என்பதையும் தெரிவிக்கின்றன. ஒரு முட்டாள்தான் --அல்லது ஒரு பிரெஞ்சுக்காரர்தான்-- வேறுவிதமான கருத்தை முடிவெடுக்க முடியும்."

இத்தகைய இழிசொற்களில், கோஹென் அவருக்கு உறுதியளித்தது எந்தக் குறிப்பிட்ட சான்றும் இல்லை, (அதைப்பற்றி அவர் கோடிட்டுக் காட்டவோ, காப்பதற்கோ முற்படவில்லை), ஆனால், "கொடுக்கப்பட்டுள்ள சான்றுகளின் மொத்த நிலையும், பவெலே அதை அளித்திருப்பதும்தான். ... இங்கு ஒரு நியாயமான மனிதர், நியாயமான நிலையைக் கூறியுள்ளார்."

போஸ்டின் கட்டுரையாளர், "உயிரியல், இரசாயன ஆயுதங்கள் பற்றிய பவெலின் வாதம் மிக ஆணித்தரமாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் இருக்கின்றன; அணுவாயுதங்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் வர இருந்தாலும் பரவாயில்லை, ஆண்டவனுக்கு நன்றி கூறுவோம் ஆக." என்ற கருத்தை அடித்துக் கூறினார்.

இன்னும் அதிகமான திட்டுக்களை "இதுகாறும் இத்தகைய தர்க்கத்திற்கு செவிடர்களாக இருக்கும்" பிரெஞ்சு அரசாங்க அதிகாரிகள் மீது செலுத்தியபின், கோஹென் முடிவாகக் கூறுகிறார்: "எவருக்கேனும் ஏதேனும் சந்தேகம் இருக்குமானால், அது (ஈராக்) சர்வதேச சட்டத்தை மீறியுள்ளது, மனித உரிமைகள் பற்றிய சர்வதேச நெறிகளை மீறியுறள்ளது என்று பவல் நிரூபித்துள்ளார்; மேலும் அது ஐ.நா.வை இதை ஏற்றுக்கொள் அல்லது வாயை மூடிக் கொண்டு இரு எனவும் கூறியுள்ளது. வேறு வழியில்லை. வேறு விருப்பமும் இல்லை."

தன்னுடைய கட்டுரையை நேரத்திற்குள் முடிக்கவேண்டும் என்பதற்காக ஒருவேளை கோஹென் "பவெல் பேசி முடிப்பதற்குள் தட்டச்சில் அடித்துக் கொண்டிருக்கிறார் போலும்" என்று WSWS அப்பொழுது குறிப்பிட்டிருந்தது. பாதுகாப்புக் குழுவிற்கு பவெல் கொடுத்த அறிக்கையை அவர் நன்கு படித்தோ, ஆராய்ந்தோ இருக்க முடியாது. கோஹெனும் மற்றவர்களும் அவரோடு போஸ்ட் -ல் இருந்த சக கட்டுரையாளர் Mary Mc Grory போன்றவர்கள், தங்களுடைய மன உறுத்தல்களையும், அசெளகரியமான நினைப்புக்களையும், அவசரமாக உதறிவிட்டு போர் ஆயத்தத்திற்கான வண்டியில் குதித்து ஏறிக்கொண்டனர்.

பவெலுடைய குற்றச் சாட்டுக்கள் பற்றிய உண்மை பெப்ரவரி 2003 ல் கிடைத்தது. ஒரு சிலர் மட்டும் காணக்கூடிய ஏதோ பதுங்கு அறையில் அது ஒன்றும் மறைத்து வைக்கப்படவில்லை. WSWS ஐ.நா.வின் தலைமை ஆயுத ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் ஹன்ஸ் பிளிக்ஸ், மற்றும் பழைய இன்ஸ்பெக்டர்களான Scott Ritter, பல அமெரிக்க, பிரிட்டிஷ் உளவுத்துறை அமைப்புக்கள், BBC, மற்ற செய்தி ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில், வெளியுறவு அமைச்சரின் கூற்றுக்களை, போஸ்ட், கோஹெனுடைய கட்டுரையை வெளியிட்ட அன்றே, இப்பாசங்கை அம்பலப்படுத்தியது.

எந்த அரை- நலஞ்சார்ந்த அரசியல், அறிவார்ந்த சூழ்நிலையில், கோஹென் தன்னுடைய பெப்ரவரி 6ம் தேதி கட்டுரைக்காக தீண்டத்தகாதவராக ஆகியிருப்பார். ஆனால் கோஹெனோ வெட்கம் கெட்டவர். அமெரிக்கவில் ஏராளமான மக்களுக்குச் செய்தி அளிக்கும் ஊடகத்தில், இவர்களில் பலரும் ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்குத் துணை நின்றவர்கள், இவரிடம் எவர் கணக்குக் கேட்கப்போகிறார்கள்?

"Baloney, Moore or Less" என்ற கோஹெனுடைய சமீபத்திய பாரென்ஹீட் 9/11 மீதான தாக்குதலில் அவர் திரைப்படத்தில் குறிப்பு எடுக்கத் தொடங்கியதாகவும், "பின்னர் படத்தின் பெரும் முட்டாள் தனத்தினால் அம்முயற்சியில் தோல்வியுற்றதாகவும்" எழுதியுள்ளார்.

மூரின் வழிவகை இழிவானது என்ற கூற்றிற்கு உதாரணமாக, கோஹென், ஜோர்ஜ் டபுள்யூ, மற்றும் (புளோரிடாவின் கவர்னர்) ஜெப் புஷ்ஷின் ஒன்றுவிட்ட சகோதரர், ஜோன் எல்லிஸ் பற்றிய குறிப்பை எடுத்துக்கொள்ளுகிறார்; அவர்தான் நவம்பர் 2000 தேர்தல் இரவன்று Fox News உடைய முடிவெடுக்கும் குழுவின் தலைவராக அன்று இருந்தவர். எல்லிசும், Fox ம் தான், துணை ஜனாதிபதி அல் கோர் மாநிலத்தில் வெற்றி அடைந்து விட்டார் என்ற முந்தைய கணிப்பிற்கு எதிராக புஷ்ஷிற்குத்தான் புளோரிடா வாக்குகள் கிடைத்துவிட்டதாக முதலில் அறிவித்தன, புஷ்ஷின் புறம் வெற்றியை மாற்றிவிட்டன.

இந்தக் குறிப்பை கோஹென் ஏளனப்படுத்துகிறார்; "எல்லிஸ் ஒரு புஷ்ஷின் சொந்தக்காரர்தான். நெருங்கிய சொந்தக்காரரா? நமக்குக் கூறப்படவில்லை. அத்தை ரிவ்காவின் திருமணத்திற்கு அழைப்பு கொடுக்கப்படாத குடும்பத்திலிருந்து வந்த ஒன்று விட்ட சகோதரரா? இருக்கலாம். ஒரு குடும்ப ஒன்றுகூடலில் அவமானப் படுத்தியதை மறக்காத உறவினர்; மலிவான அன்பளிப்பு, நேரம் கழித்து வருகை, ஒரு செவிட்டு சிற்றப்பாவிற்கு அருகில் இடம்? தகவல் இல்லை."

இத்தகைய வர்ணனை அமெரிக்கச் செய்தி ஊடகம் மூலம் எதிர்கொள்ளப்படும்போது, இது நனவுபூர்வமான ஏமாற்று முறையா அல்லது பெரும் அறியாமையா என புலப்படாமல் போய்விடுகிறது. அல்லது இரண்டின் இணைப்பும்தானா?

எல்லிஸ் விவகாரம் அக்காலத்தில் நன்கு அறியப்பட்டிருந்தது. தூரத்து உறவினர் என்றில்லாமல், எல்லிஸ் புஷ் சகோதரர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்; மேலும் New Yorker என்ற ஏட்டின்படி, அவர்களோடு தேர்தல் இரவன்று தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார். சில தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடக்கத்தில் புளோரிடாவில் கோர் வெற்றி அடைந்துவிட்டதாகக் கூறியபின்னர், புஷ் பிரச்சாரம் தீவிர முயற்சியுடன் தொலைக் காட்சி நிறுவனங்களை தங்கள் முடிவுகளை மாற்றிக்கொள்ளுமாறு வற்புறுத்த தலைப்பட்டனர். சந்தேகத்திற்குரிய Fox உடைய கருத்தான புளோரிடா புஷ்ஷிற்குத்தான் என்பது வெளிவந்த உடன் மற்ற வலைப்பின்னல் அமைப்புக்களும் இக்கோஷத்தில் சேர்ந்துகொண்டது அப்பிரச்சாரத்தின் ஒரு கூறுபாடு ஆகும். அம்முயற்சியில் அவர்கள் விரும்பிய விளைவு ஏற்பட்டது.

புஷ்ஷின் "வெற்றி" நள்ளிரவில் நிராகரிக்கப்பட்டாலும், புளோரிடா வாக்குகள் மிகவும் நெருக்கமாக இருந்தது என்பதால், ஒரு நெருக்கடி பல வாரம் நீடிக்கக் கூடும் என்பதால், எல்லிஸ், பாக்ஸ் ஆகியோருடைய முயற்சியில் மக்களிடையே புஷ் புளோரிடா, மற்றும் தேசியத் தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட்டார் என்ற உணர்வு ஏற்பட்டுவிட்டது. கோரின் தொடர்பு இயக்குனரான மார்க் பேபியானி அப்பொழுது குறிப்பிட்டார்: "Fox போன்ற வலைப்பின்னல் அமைப்பு ஒன்றைக்கூறுவதும், அதை மற்ற அனைவரும் ஏற்றுக்கொண்டதும் பெரும் தீமையை விளைவித்துவிட்டது. கோர்தான், மக்கள் வாக்குகளில் வெற்றிபெற்றுவிட்டார் என்பதை நம்பவைக்க கிட்டத்தட்ட 24 லிருந்து 48 மணிநேரம் வரை ஆயிற்று."

தன்னுடைய கட்டுரை முழுவதிலும் கோஹென் தன்னை அடக்கிக் கொள்ள முடியவில்லை. ஈராக்கியப் போரின் காரணத்தை மூர் விவரித்ததை "சதித்திட்டங்களின் தொகுப்பு" என்று கூறியுள்ளார். புஷ் குடும்பத்தின் பேரவாக்கள், பேராசைகள் இவற்றின் குறுகிய வடிவமைப்புக்கள் போரை அடக்க திரைப்படத்தயாரிப்பாளர் கொண்ட முயற்சி நல்ல இலக்கல்ல என்றாலும், எண்ணெய் மற்றும் பணத்தின் பங்கு பற்றிய அவருடைய வலியுறுத்தல் முற்றிலும் பொருத்தமானதேயாகும்.

முற்றிலும் முட்டாள்தனமான அல்லது ஒன்றுமே அறியாதவர்தான் "சதித்திட்டம்" என்ற கருத்தை கூறுவர்; ஒரு பெரும் வல்லரசான அமெரிக்கா, அதுவும் புஷ்-செனி குழுவின் தலைமை இருந்தபோதிலும், உலகின் இரண்டாம் பெரிய எண்ணெய் இருப்புக்கள் இருக்கும் இடத்தை வெற்றிகொள்ளும் முயற்சியில் புவிசார்-அரசியல் நலன்களை கொண்டுள்ளது என்பது அறியப்பட்டதுதான். உலகின் ஒவ்வொரு பகுதியிலும், அலட்சியப் போக்குடனும் கொள்ளை முறையுடனும் அமெரிக்க தலையீடுகள் உள்ள வரலாற்று பின்னணியில், ஈராக்கின்மீது அமெரிக்கா படையெடுத்தது பரந்தமனப்பான்மை மற்றும் அருளிரக்கம் கொண்ட நோக்கங்களுக்காக என கொஹென் நம்மை நம்ப வைக்கப் பார்க்கிறார்.

போஸ்ட் கட்டுரையாளரின் கருத்தின்படி, ஏற்கனவே நம்பிவிட்டவர்களுடைய உணர்வைத்தான் மூரின் திரைப்படம் மேலும் உறுதிப்படுத்தி, "புஷ்-எதிர்ப்பு சக்திகள் தமக்குள்ளே பேசும் முறையிலேயே மற்றவர்கள் செயலற்றுப் போகும் வகையை" ஊக்குவிக்கும் முறையில் படம் உள்ளது. ஒன்பதரை மில்லியன் மக்கள் கொள்ளும் உரையாடல் சிலருக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கலாம்; ஆனால் கோஹெனுக்கு அத்தகைய கருத்து கிடையாது.

எப்படிப் பார்த்தாலும், இத்தகைய வழிவகை போருக்கு முன்பு இருந்ததைப் பற்றி கோஹென் குறைகூறுகிறார்; "நான் கூடுதலான நேரத்தையும், ஆற்றலையும் போர்க் காரணம் பற்றி வாதிட்டே செலவழித்தேன்; எண்ணெய் (இல்லை), இஸ்ரேல் (இல்லை); ஈராக் படையெடுப்பிற்குக் கூறப்பட்ட காரணங்கள் அவ்வளவு முட்டாள்தனமானவை அல்ல; பேரழிவு ஆயுதங்கள், ஹுசைனுடைய, ஒசாமா பின் லேடனுடனான தொடர்பு என கேள்விக் கணைகளை தொடுத்தேன். இது முட்டாள்தனமானதுதான், ஆனால் மனித இயல்பு இதுதான்."

மனித இயல்பிற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. தன்னுடைய சமூக அந்தஸ்து, வரலாறு, சியோனிச ஆட்சியை தொடர்ந்து ஆதரித்த இவருடைய பங்கு, இவை அனைத்தும் கோஹனால் கொண்டுவரப்பட்டது; போரில் அவருடைய அறிவுப் பார்வையின்படி முன்கூட்டியே அவ்வாறு செய்யவைத்தது. பவெலுடைய புளுகு மூட்டைகள், தகவல்கள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் இவற்றையெல்லாம் நம்புவதற்கு, அவரிடம் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தால்தான் முடியும்.

இதே தகவலை அடைவதற்கு, மற்றவர்கள் போலவே வாய்ப்பு இருந்தும், இவர் மூர் மீது சீறுகிறார்; ஏனென்றால் மூர் தன்னுடைய திறனாயும் திறனைப் பயன்படுத்தி, புஷ் நிர்வாகம் போலியாக கொண்டிருந்த போருக்கான காரணத்தை நிராகரித்து விட்டார். ஒரு குறிப்பிடத் தகுந்த தர்க்க முறையில், நிகழ்வின் பொதுத் தன்மையினால், அன்றைய அடிப்படை அரசியல் பிரச்சனையில், பெரும் தவறான முறையைக் கொண்டிருந்தார் என நிரூபிக்கப்பட்ட முறையில், புஷ் அரசாங்கத்தின் கூற்றுகள் தவறு எனச் சரியாகக்கூறியவர்களை "இடது கிறுக்கர்கள்" எனக்கூறுவதின் மூலம் தன்னுடைய தொடர்ந்த தாக்குதலை செய்கிறார். உண்மைகளினால் அவர் தன்னுடைய குருட்டுத்தனத்தை மாற்றிக் கொள்ளப்போவதில்லை.

கோஹென், கிறிஸ்டோப் (Boston Globe உடைய எல்லென் குட்மன் உடன், புஷ்ஷை மற்றும் அவருடைய குற்றஞ் சார்ந்த போக்குடைய போர் இவற்றிற்கு விராதப் போக்கு காட்டும் இடதுசாரி, மக்கள் எதிர்ப்பு இவற்றை வலதுசாரியினர் கிளின்டனுக்கு காட்டும் வெறுப்புடன் சமன்படுத்துபவர்), இன்னும் பலரும் மூரையும், பாரென்ஹீட் 9/11 ஐ வெறுக்கின்றனர்; ஏனெனில் திரைப்படம், அதற்கான மக்கள் வரவேற்பு இரண்டுமே எவரும் சொல்லிக்கொடுத்து நிகழவில்லை.

தேர்தல் கடத்தப்பட்ட பின்னரும், செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னும், அரசியல், செய்தி புஷ் நிர்வாகத்திற்காக இறைவனே உதவிக்கு வந்தது போன்று, ஆளும் செல்வந்தத் தட்டினர் கட்டுப்பாட்டை தாங்களே நிலைநிறுத்திக் கொள்ளவில்லையா? அமெரிக்க பொதுமக்கள் முடிவில்லாமல் "பயங்கர வாதத்தின் மீதான போர்" என்ற அறிவிப்பில் பயந்து இருப்பதும், ஈராக்கிய மக்கள் அமெரிக்க இராணுவ வலிமையை எதிர்க்க மாட்டார்கள் என்ற நினைப்பிலும், வாஷிங்டனில் உள்ள அதிகாரத் தலைமை ஒரு கொள்ளைமுறையிலான போரை மிகவும் அற்ப காரணம் கூட இல்லாத நிலையில் தொடுக்க நம்பிக்கையைக் கொண்டனர்.

கோஹெனும் மற்றவர்களும் தங்கள் பங்கைப் புரிந்தனர்; ஈராக் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் நடக்கவிருக்கும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் எவரும் அவர்களுடைய ஆக்கிரமிப்பிற்கான வருத்தம் தெரிவிப்பதை நினைவிற் கொள்ளமாட்டார்கள் என்று தங்களுக்கே உறுதி கூறிக் கொண்டனர்.

மூரின் படத்தின் மீதான தாக்குதலின் வன்மைக்கு இன்னும் ஓர் ஆழ்ந்த காரணமும் உண்டு. தன்னைப் பற்றி எவரும் எதுவும் கூறார் என்றிருந்த செய்தியாளருக்கு பாரென்ஹீட் 9/11 மற்றும் அதன் குற்றச்சாட்டுக்கள் பற்றிய அதற்கான வலுவான வரவேற்பு மக்களிடத்தில் இருந்து வந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. ஈராக்கிய போர் ஒரு குற்றஞ்சார்ந்த செயல், அமெரிக்க அரசாங்கம் விடாமல் பொய்களை கூறிவருகிறது, மில்லியன் கணக்கான மக்கள் புஷ் நிர்வாகத்தையும் முழு அரசியல் நடைமுறையையும் ஒரு அடிமட்ட வெறுப்புத் தன்மையில் விரோதப் போக்கு காட்டுகிறார்கள் என்பதை எல்லாம் ஒப்புக்கொள்ளுவது, கோஹென்கள், கிறிஸ்டோப்புக்கள், குட்மன்களுக்கு பெரும் அதிர்ச்சியும், அழிவுமாக இருக்கும்..

இத்தகைய பெரும் வகையில் குற்றங்கள் நடந்து வருகின்றன என்பது உண்மையாக இருக்க முடியாது; ஏனெனில் அது அமெரிக்காவில் ஏதோ மிகப்பெரிய கொடூரமான அளவில் தவறு என்று சுட்டிக்காட்டும். மக்களுடைய வெறுப்பு உணர்வு உதறித் தள்ளப்பட வேண்டும்; ஏனென்றால் அமெரிக்கா ஒரு வெடிமருந்துக் கிடங்கு போன்றது என்ற அதன் உட்குறிப்பும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நபர்கள் எழுதும் ஒவ்வொரு கட்டுரையும் மயக்கம் கொடுப்பது போல், "எல்லாம் நன்றாகவும் நலமாகவும் உள்ளன", "அனைத்தும் கட்டுப் பாட்டிற்குள் உள்ளன" என்ற செய்திகளைக் கொடுக்கின்றன.

போர் பயங்கரமாக இருக்கலாம், ஆனால் அது முடிந்துவிடும். புஷ் நிர்வாகம் கெடுதல் மிகுந்ததாக இருக்கலாம், ஆனால் அதுவும் போய்விடும். ஆபத்துக்கள் உள்ளன, ஆனால் அவை எப்பொழும் எங்காவது இருக்கத்தான் செய்யும்; அவை ஏதானும் வெளி ஆதராத்தில் இருந்ததுதான் எப்போதும் வெளிப்படும், சில "தீய நபர்கள்" எங்கோ தொலைவில் இருக்கத்தான் இருப்பர்.

மாறாக, அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டைப் பற்றி மூர் பாரென்ஹீட் 9/11 ல் அறுதியிட்டுக் கூறுவது உண்மையென்றால், இந்த திரைப்படம் பற்றி மக்கள் கொண்டுள்ள கருத்து மக்கள் நனவின் நிலை கொதிக்கும் தன்மையுடையது என்பதின் துல்லியமான பிரதிபலிப்பானால், இது ஒரு வித்தியாசமான, மனத்தை உலுக்கும் திரைப்படம் ஆகும். செய்யப்பட்ட நிகழ்வுகளை மாற்றுவதற்கில்லை; அமெரிக்க வரலாற்றின் போக்கு திரும்பப் பெறமுடியாத முறையில் மாற்றப்பட்டு விட்டது. இத்தகைய எண்ணம் வளரவிடப்படக் கூடாது. இதிலிருந்து கிடைக்கும் படிப்பினைகள் தாராளமான மேம்போக்காளருக்கு பெரும் அதிர்வைத் தரும். ஆடவரோ, பெண்டிரோ, அத்தகைய நபர் திகைப்புடனும், நச்சு உணர்வுடனும்தான் எதிர்விடை கொடுப்பர்.

இவர்கள் யார், அமெரிக்கச் செய்தி ஊடகத்தின் பண்டிதர்கள் எனக் கூறப்படும் இவர்கள் யார்? 1976 லிருந்து கோஹென் Post ல் ஒரு கட்டுரையாளாக இருந்து வருகிறார் என்று அறிகிறோம். அமெரிக்காவின் தலைசிறந்த செய்தித் தாள்கள் ஒன்றில், கடந்த 30 ஆண்டுகளாக இருந்தும், எந்தக் குறிப்பிட்ட வகையிலும், இவர் சிறந்து விளங்கிவிடவில்லை. இவருடைய கட்டுரைகள் ஒரு பயனற்ற பார்வையில் உதிர்ந்த கதம்பச் சொற்கள்; சில இன்றைய அமெரிக்க அரசியல் நிறுவனத்திற்கு சற்றே இடதுபுறம் உள்ளது (அதுவோ, கடந்த முப்பதாண்டுகளில் தீவிரமான ஒரு வலது பாய்ச்சலில் ஈடுபட்டுவிட்டது), சில வலது புறம் உள்ளது.

பொதுமக்களுடைய கருத்தை செல்வாக்கிற்கு உட்படுத்தும் நோக்கத்தை கோஹெனின் கட்டுரைகள் கொள்ளவில்லை; கொள்ளவும் முடியாது. அவருடையது ஒரு ஒதுக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட உலகம்; அவர் கூறுவதைக் கேட்பவர்கள் அவரைப் போலவே ஒரு மேம்போக்கான நம்பிக்கையற்ற தன்மையைக் கொண்டவர்கள் ஆவர். அவர் எழுதும் எதிலும் ஆழ்ந்த தன்மை, உணர்வு இருக்காது. மரபு மறை அறிவையோ, இருக்கும் நிலையையோ எதிர்க்கும் முறையில் எந்தக் கருத்தும் கூறப்படாது. கோஹெனுடைய எந்த பத்திக்கட்டுரையிலும் பொருளுரையைத் தொடர்ந்து இருக்கும் ஒரே தன்மை, ஆழ்ந்த சுய திருப்திதான்.

கோஹென், கிறிஸ்டோப், இன்னும் பழைய தாராளவாத, அரைகுறைத் தாராளவாத, கால்பகுதி தாராளவாத செய்தியாளர்கள் இருந்தும் பயன் அற்றவர்களே; பொருட்களின் உயர்ந்த தன்மை அளவில், இவர்கள் வெறும் கூடு போன்ற மனிதர்கள்தாம். அவர்கள், நியாயமான, மனத் தேர்ச்சி காட்டுபவர்களாக, தாங்கள் நினைத்துக் கொள்ளுவது போல இராஜதந்திரிகளாக நினைவிற் கொள்ளப்பட மாட்டார்கள்; மாறாக இழிந்த முறையில் அதிகாரத்திற்கு நிபந்தனையற்ற சரணடைந்தவர்கள் என்றும் பிற்போக்காளர்களுக்கு தேர்ந்த முறையில் ஒத்துழைப்பாளர்கள் என்று மட்டுமே நினைக்கப்படுவர்.

See also:
Michael Moore's contribution
Fahrenheit 9/11, written and directed by Michael Moore


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved