WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
Divisions predominate despite agreement on European constitution
ஐரோப்பிய அரசியலமைப்பில் உடன்பாடு ஏற்பாட்டாலும் பிளவுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன
By Chris Marsden
21 June 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் கண்டத்தை ஐக்கியப்படுத்துவதற்கு முக்கிய
ஐரோப்பிய வல்லரசுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளல்
என்பது ஒரு புதிய கட்டத்தை அறிவிப்பதாக கருதப்படுகின்றது. மாறாக, கடந்த வாரம் பிரஸ்சல்சில் 25 நாடுகளின்
தலைவர்கள் கூடிய இரண்டு நாட்கள் நடந்த உச்சி மாநாட்டில் ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே எவ்வளவு தீவிரமான
பிளவுகள் உள்ளன என்பதும், ஐரோப்பிய அரசாங்கங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றிய திட்டங்களுக்கும் மக்கள் ஆதரவோ,
சட்டரீதியான ஜனநாயகமோ இல்லாத சமரசநிலைப் போக்குத்தான் உள்ளது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
அரசியலமைப்பு தொடர்பாக உடன்பாடு காணவேண்டும் என்பதில் ஐரோப்பாவின் ஆட்சியாளர்கள்
அனைவருமே பாரிய அழுத்தத்திற்கு உட்பட்டிருந்தனர். கடந்த டிசம்பர் மாதம் பேச்சுவார்த்தைகள் மனக் கசப்புடன்
நிலைமுறிந்துபோயின, இந்த மாத ஐரோப்பிய தேர்தல்கள் அநேகமாக கண்டத்திலுள்ள ஆளும் கட்சிகள் அனைத்திற்குமே
பெரும் தோல்விகளை கொடுத்துள்ளன. அத்தோடு, தேர்தல்களில் பரவலாக வாக்காளர்கள் பங்கு பெறவில்லை.
இவற்றைத் தவிர ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வலதுசாரிக் கட்சிகள், குறிப்பாக பிரித்தானிய
சுதந்திரக் கட்சி (UK Independence Party)
போன்றவை பிரிட்டனில் குறிப்பிடத்தக்க வாக்குகளையும் பெற்றன.
ஓர் அரசியலமைப்பை உருவாக்குவதில் இரண்டாம் முறை தோல்வி ஏற்பட்டால் அது
உலகின் ஏனைய பகுதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தை "வெடித்து சிதறக் கூடியதாக உள்ளது" என வெளிப்படுத்திக்
காட்டும் என்று Financial Times
எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதன் விளைவாக ஜேர்மனியும் பிரான்சும் பிரிட்டனின் பிரதம மந்திரி டோனி பிளேயர்
மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிய நாட்டுத் தலைவர்களுடைய ஆட்சேபனைகளுக்கு சமாதானம் செய்யும் முறையில்
கூடுதலாகவே சென்றன----அதிலும் குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவிலிருந்து மே 1 ம் தேதி சேர்ந்துள்ள 10 புதிய
நாடுகளின் கருத்துக்களையும் ஏற்க முற்பட்டன.
ஐரோப்பிய ஒன்றியத்தை
எதிர்க்கும் பிரித்தானிய சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டிற்கு
மட்டுமில்லாமல், அமெரிக்காவில் இருக்கும் சக்திவாய்ந்த குரல்களின் ஆதரவைக் கொண்டிருக்கும் இன்னும் கூடுதலான
முறையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கு எதிர்ப்புக் காட்டும் பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் ஆபத்தான
பிரிவுகளின் பிரச்சாரத்தையும் சமாளிப்பதற்கான தன்னுடைய நிலையை பிளேயர் கடினமாக்கிக் கொண்டுள்ளார்.
ஐரோப்பா கண்டத்தில் ஜேர்மனி மற்றும் பிரான்சின் மேலாதிக்கம் இணையாமல்
இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என்ற வற்புறுத்தலுக்கும் பிளேயர்
கட்டாயப்படுத்தப்பட்டார். புதிதாகச் சேரும் நாடுகளுக்குத் தலைமை தாங்கி அமெரிக்க ஆதரவுடைய நாடுகளின்
கூட்டாகச் செயலாற்றவேண்டிய பணியைப் பிளேயர் பெற்றிருந்ததுடன், அக்கூட்டு ஐரோப்பிய ஒன்றியத்தை
அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராணுவ ஆதிக்கத்திற்கு சவாலாக உருவாகுதலையும் தடுக்கவேண்டும் என்பதற்குத்
தன்னை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டியும் இருந்தது.
இக்காரணத்தை ஒட்டி, இறுதியில் நல்ல முடிவு வரவேண்டும் என்ற கருத்து
இருந்தாலும், பேச்சுவார்த்தைகள் மிகவும் கசப்பானதாக அமைந்திருந்தன.
பிரஸ்ஸல்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்பே, பிளேயர், வெளியுறவு அமைச்சர் ஜாக்
ஸ்டிரோ மற்றும் சான்சலர் கோர்டன் பிரெளன் ஆகியோர் சீற்றத்துடன் கூடிய அறிக்கைகளைத்தான் வெளியிட்டு
வந்திருந்தனர். அவர்கள் தங்கள் "சிவப்புக் கோடுகளை" காப்பாற்றுவதாகவும், சுதந்திரமான பிரிட்டிஷ்
வெளியுறவுக் கொள்கையை பாதுகாப்பாதாகவும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோவை கீழறுப்பதற்கு எந்த
நடவடிக்கைக்கும் தடை செய்வதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு பொது வரிக் கொள்கையை ஏற்படுத்தாமல்
இருக்கவும், முந்தைய பழமைவாத அரசாங்கம் கொண்டு வந்திருந்த வேலைநிறுத்த உரிமையை இல்லாதொழிக்கும்
தொழிற்சங்க விரோத சட்டங்களை இல்லாமல் செய்வதையும் தடுப்போம் என உறுதியளித்தனர்.
"தன்னுடைய வர்த்தக கொள்கையைத் தானே கட்டுப்படுத்தும் உரிமையை இழக்காமல்
இருக்க பிரித்தானியா உறுதியாக இருக்கவேண்டும்" என்று பிரிட்டிஷ் தொழில்துறை கூட்டமைப்பின் இயக்குனர்-தலைவர்
டிக்பி ஜோன்ஸ் எச்சரித்திருந்தார். மற்ற 24 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்பின் ஒரு
பகுதியாக உள்ள, அடிப்படை உரிமைகளின் சாசனத்தை வெளிப்படையாக ஏற்காவிட்டால், தேசிய நாடுகளின்
கொள்கைகளை மாற்றும் உரிமை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கிடையாது எனத்திட்டவட்டமாக கூறாவிட்டால், புதிய
அரசியலமைப்பை தடுப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவர இயலாது என்று பிளேயர் குறிப்பாக
தெரிவித்திருந்தார். சாசனத்தின் முன்னுரை அதனுடைய திட்டங்கள் அலங்கார சொற்களேயன்றி சர்வதேச
சட்டங்களை அகற்றாது என்று தெளிவாக்கியும், பிளேயர் தன்னுடைய முயற்சியில் எளிதாக வெற்றி அடைவார் என்று
வெளியுறவு அலுவலகம் கூறிய பின்னரும் கூட இந்நிலைப்பாடு கொள்ளப்பட்டது. ஏனெனில் உண்மையில் அவருடைய
"சிகப்புக் கோடுகள்" அரசியலமைப்பு ஒப்பந்தத்தை நேரடியாக சவாலுக்கு உட்படுத்தவில்லை.
லண்டன் நகரத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை திருப்திப்படுத்தும் வகையில்
கையாளப்பட்ட பிளேயரின் இந்த உத்தி, அக்டோபர் முதல் ரோமனோ போடி புதிய ஐரோப்பியக் குழுவின்
தலைவராக இருக்கவேண்டும் என பிரான்சும் ஜேர்மனியும் முன்மொழிந்ததற்கு மாறாக பெல்ஜிய பிரதம மந்திரி
வெர்கொப்ஸ்டாட் (Verhofstadt)
இருக்கவேண்டும் என்பதை மத்தியப்படுத்தியும் இருந்தது.
பெல்ஜிய பிரதம மந்திரி கடந்த ஆண்டு ஐரோப்பிய பாதுகாப்பிற்கான ஒரு சிறிய
உச்சி மாநாட்டை கூட்டியதன் மூலம் பிரித்தானிய, அமெரிக்காவின் புஷ் நிர்வாகம் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு
நாடுகளான இத்தாலி, போலந்து போன்றவற்றின் கோபத்திற்குள்ளானார், அதில் ஈராக் போரை
எதிர்த்தவர்களான ஜேர்மனி, பிரான்ஸ் ஆட்சியாளர்களையும் அழைத்திருந்தனர்.
பிரான்சின் ஜனாதிபதி ஜாக் சிராக் தன்னுடைய எரிச்சலை அடக்கிக் கொள்ள
முடியாமல், பிரித்தானியா தான் விஷேடமாக கவனிக்கப்படவேண்டும் என்ற மிக அதிகமான கோரிக்கைகளை
முன்வைப்பதாக அவர் குற்றம்சாட்டினார். உச்சி மாநாட்டின் முதல் நாளன்று அவர் செய்தியாளர்களிடம்,
ஐரோப்பிய ஒன்றியம் "தனி நாட்டினால் தடை செய்யப்படுவதை தவிர்க்க" வேண்டும் என்றும், அரசியலமைப்பை
நீர்க்கும் தன்மையுடையதாக பிரிட்டன் ஆக்க விரும்புவதாகவும் கூறினார். அரசியலமைப்பின் அபிலாசைகள் பெரிதும்
"குறிப்பாக வரிவிதிப்பிலும், சமூக பாதுகாப்பு துறைகளிலும் குறைந்துவிட்டன" என்று தெரிவித்தார்.
பிரிட்டிஷ் பழமைவாத ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் கிறிஸ் பற்றன் புதிய
ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுத் தலைவராகும் திட்டத்தையும் சிராக் எதிர்த்தார்; "அனைத்து ஐரோப்பிய
கொள்கைகளிலும் பங்கு பெறாமல் இருக்கும் ஒரு நாட்டிலிருந்து வரும்" ஒருவரை குழுத் தலைவராக கொள்ளவது
உகந்தது அல்ல என்ற கருத்தை அவர் தெரிவித்தார். ஆணைக்குழுத் தலைவர் பிரெஞ்சு மொழி பேசுபவராகவும்
ஐரோப்பிய பகுதியிலுள்ள உறுப்பு நாட்டிலிருந்து வரவேண்டும் என்றும் ஷெங்கன் (Schengen)
பாஸ்போர்ட் தடையற்ற பகுதியிலிருந்து வருபவராக
இருக்கவேண்டும் என்றும் மேலும் அவர் வலியுறுத்தினார். இது தற்பொழுது போட்டியில் இருந்து விலகிவிட்ட பற்றனை
மட்டுமின்றி, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து உட்பட, பெரும்பாலான மற்ற வேட்புத் திறனுடையவர்களையும்
விலக்கிவைக்கச் செய்தது
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சிராக்கின் தந்தரோபாயங்கள்
"வருந்தத்தக்கது" என்று பிளேயர் அரசாங்கம் கூறியதுடன், ஜேர்மனியின் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர்
அரசியலமைப்பு மற்றும் தலைவர் பதவியை இணைப்பது பற்றியும் குறைகூறியுள்ளது. ஐரோப்பாவில், பிரிட்டனின்
பெருகிவரும் செல்வாக்கை வலியுறுத்தி, --இது அமெரிக்க செல்வாக்கின் விரிவாக்கம் என கொள்ளலாம்-- பழைய
ஸ்ராலினிச கிழக்கு ஐரோப்பிய அரசுகள் ஐரோப்பாவில் இணைந்துள்ளதற்கு நன்றி தெரிவித்து, பிளேயரின்
அதிகாரபூர்வமான பேச்சாளர் அறிவித்தார்; "நாம் 25 நாடுகள் உடைய ஐரோப்பாவிற்காக
செயல்படுகிறோமே ஒழிய இரண்டு அல்லது ஆறு அல்லது ஒரு நாட்டிற்காக அல்ல".
கடைசி நேரத்தில் ஒரு அரசியலமைப்பு ஏற்கப்பட்டது; இது பெரும்பாலும் பிரிட்டன்,
மற்றும் புதிதாகச் சேர்ந்துள்ள நாடுகள், வாக்களிக்கும் உரிமை உள்ள சிறு அரசுகள் ஆகியவற்றின் கோரிக்கைகளை
உள்ளடக்கியுள்ளது
ஐரோப்பிய பாராளுமன்றம் தன்னுடைய சட்டமன்ற இணை-முடிவு எடுக்கும்
அதிகாரத்தை இருமடங்காக ஆக்கி, அதையொட்டி விவசாயப் பண்ணை உதவி, மீன்துறை, மற்றும் ஒன்றியத்தின் 75
பில்லியன் பவுண்டுகள் கொண்ட ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் முக்கிய செல்வாக்கையும் பெருக்கியுள்ளது.
அரசியலமைப்பு 30 புதிய பகுதிகளில் பெரும்பாலானவற்றிற்கு வாக்குரிமை கொடுக்கிறது; அதில் புகலிடம்,
புலம்பெயர்ந்தோர், சக்தி மற்றும் குற்றச் சட்டவியல் கூறுபாடுகளும் அடங்கியுள்ளன.
ஆனால், பிரிட்டன் தன்னுடைய தேசிய தடுப்பதிகாரத்தை பாதுகாப்பு, வெளிநாட்டுக்
கொள்கை இவற்றில் தக்கவைத்துக் கொண்டுள்ளதுடன் "நெருக்கடித் தடைகள்" சிலவற்றையும், அவற்றின்
நடைமுறைகளையும் கொண்டுள்ளது. இவற்றின் விளைவாக அது சமூக பாதுகாப்பு, பொதுக் காவல் ரோந்து
போன்றவற்றில் தனக்கு உடன்பாடில்லாத பொருட்களை அது தடுப்பதிகாரம் பயன்படுத்தி நிறுத்திவிட முடியும். மிக
முக்கியமாக வரிவிதிப்பில் பெரும்பான்மை வாக்கெடுப்பு என்ற அதிகார வரம்பு கிடையாது. வெளியுறவுக்
கொள்கையில், எந்த ஆரம்ப மூலோபாய முடிவுகள் அனைத்து 25 நாடுகளாலும் எடுக்கப்பட்டாலும், பின்னர்
அவற்றை செயல்படுத்த பெரும்பான்மை வாக்குகள் போதும்.
கடந்த டிசம்பர் மாதம் அரசியலமைப்பு பற்றிய பேச்சுவார்த்தைகள் உடன்பாடு
இல்லாமல் நிலை முறிந்து போனதற்கு வாக்களிப்பில் வலிமை முக்கிய பிரச்சினையாக இருந்தது. ஸ்பெயினும்
போலந்தும் பெரும்பான்மை வாக்கிற்கு 50 சதவீத உறுப்புநாடுகளின் ஆதரவு போதும் என்ற திட்டத்தை எதிர்த்து,
அது 60 சதவிகிதம் ஐரோப்பிய மக்கட் தொகையை பிரதிபலிக்க வேண்டும் என்று கூறியிருந்தன. இது பெரிய
நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் போன்றவற்றிற்கு உறுதியான முடிவெடுக்கும் நிலையை கொடுத்தது.
பின்னர் ஒரு சமரச முடிவின்படி விகிதங்கள் 55 சதவிகிதமாகவும், 65 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டன.
அதாவது --குறைந்தபட்சம் 15 ஐரோப்பிய ஒன்றிய அரசுகள்---- இவ்விதத்தில் சிறு நாடுகள் ஒன்று சேர்ந்தால்
தாங்கள் விரும்பும் சட்டவரைவை எதிர்த்து தடுத்துவிட முடியும்.
குழுத்தலைவர் பதவி பற்றிய பிரச்சினையில் கொண்டுவரப்பட்ட சமரசம் சற்று கூடுதலான
தன்மையை கொண்டிருந்தது. அமைச்சர்கள் இப்பொழுது மீண்டும் கூடி, ஒரு புதிய நபரை மூன்று வார காலத்தில்
தேர்ந்தெடுப்பார்கள். சிராக் தன்னுடைய வெளியுறவு அமைச்சரான மைக்கேல் பார்னியர், புஷ்ஷின் ஈராக்கிய
போருக்கு மற்றும் ஒரு முக்கிய நட்பு நாடாக இருந்த போர்த்துக்கலின் தலைமை மந்திரி ஜோஸ் மானுவல் டுராவ்
பரோசோவிற்குப் பதிலாக இருக்கலாம் என்று கூறுகிறார். பிரிட்டன் தான் யாரை ஆதரிக்கிறது என்பது பற்றி கூற
மறுக்கிறது, இதற்குக் காரணம் அந்நபர் பிரான்ஸ், ஜேர்மனியின் விரோதப் போக்கிற்குட்பட்டுவிடுவார் என்பது அதன்
கருத்தாகும்.
தேசிய அரசுகளின் ஐரோப்பா
பேர்லின், பாரிஸ் இவற்றின் கூடுதலான பேரவாவல் திட்டங்களை தகர்த்ததில் தனக்கு
இருந்த திறமையை பற்றி பிரிட்டனுக்கு தெளிவான மகிழ்ச்சியே உண்டாயிற்று. பிளேயர் செய்தியாளர்களிடம்
பின்வருமாறு தெரிவித்தார்: "இது மிகவும் முக்கியம். ஏனெனில் ஒரு புதிய ஐரோப்பா உருவாகிக்
கொண்டிருக்கிறது. இதில் பிரிட்டன் நட்புகளை உள்நாட்டிலும் கட்டியெழுப்பமுடியும் என்று உணர்கிறது. இந்த
ஐரோப்பாவில் எவரும் ஆதிக்கப் பார்வையுடன் செயல்படமுடியாது. இந்த ஐரோப்பா வளைந்து கொடுக்கும்
தன்மையையும் பலவிதங்களில் முன்னேற்றப்போக்கையும் கொண்டிருக்கும்.
"இந்த ஒப்பந்தத்தை தீவிரமாக பார்ப்பவர்கள் இது ஒரு கூட்டமைப்பு முறையில்
நேர்த்தியான அரசு கொண்டுள்ள அமைப்பு வந்துள்ளது எனக்கூறவியலாது. இது ஒரு புதிய ஐரோப்பா. இந்த
மேசையை சுற்றி அமர்ந்துள்ள புதிய நாடுகளைக் கொண்டு இந்த வேறுபாட்டை உணரமுடியும். எத்தகைய ஐரோப்பா
இருக்கவேண்டும் என்பது பற்றிய பூசல்களை இதுகாறும் கண்டோம். வரிகள் இணைந்த முறையில் இருக்கவேண்டும் என்று
விரும்பியவர்கள், வெளிநாட்டுக் கொள்கையில், பாதுகாப்புத்துறையில் தடுப்பு அதிகார உரிமையைக் கைவிட்டுவிட
வேண்டும் என்று கூறியவர்கள் இருந்தனர். ஆனால் அதெல்லாம் நடக்கவில்லை.... மாறாக ஒரு பொதுநிலையை
அடைந்துள்ளோம்; பொது நட்பு நாடுகளை ஐரோப்பா, தேசிய அரசுகளின் இணைப்பாக ஐரோப்பாவாக இருக்க
உறுதி செய்யும் வகையில் உள்ளோம்" என்று பிளேயர் தெரிவித்தார்.
இதேபோன்ற முடிவுரைகள்தான்
Daily Mirror
பத்திரிகையிலும் பிரதிபலித்தன. "பழைய ஐரோப்பா பழைமையை கடந்து
விட்டது. ஒரு பெரிய அதிகார மாற்றத்தில், ஆரம்பத்தில் ஆறு உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பியக் குழுவில்
இருந்த பிரான்சும், ஜேர்மனியும் இப்பொழுது ஆதிக்கம் செலுத்த முடியாது... தனிப்பட்ட முறையில், பிரிட்டிஷ்
அதிகாரிகள் பழைய சகாப்தமான பிரான்சின் 'அச்சுறுத்துதல், மிரட்டல்' முடிந்து விட்டது எனக் கூறுகின்றனர்" அது
ஆணவத்துடன் கூறியது.
ஜேர்மனி, பிரான்ஸ் மீது தன்னுடைய கோரிக்கைகளைச் சுமத்தும் பிளேயரின் திறமை
ஐரோப்பிய வல்லரசுகள் எதிர்கொண்டுள்ள பெரும் கஷ்டங்களில் ஒன்றாகும். போருக்கு பிந்தைய காலகட்டத்தில்,
ஜேர்மனியும் பிரான்சும் தங்களுடைய இணைந்த கட்டுப்பாட்டை பெரும்பாலும் ஐரோப்பாவில் செலுத்தி வந்தன.
ஏனென்றால் ஐரோப்பிய ஒன்றிணைப்பு என்ற கருத்திற்கு வாஷிங்டனுடைய ஆதரவு இருந்தது. அத்தகைய அமைப்பு
சோவியத் ஒன்றியத்தை பனிப்போர்க் காலத்தில் எதிர்த்தும், கட்டுப்படுத்தும் என்று அது கருதியிருந்தது.
சோவியத்தின் சரிவு அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கையில் ஒரு புதிய மாற்றத்தைக்
கொண்டு வந்தது. அது இன்னும் கூடுதலான முறையில் புஷ் நிர்வாகத்தில் அமெரிக்கா தடையற்ற முறையில் உலக
மேலாதிக்கத்தை தன்னுடைய இராணுவ வலிமையினால் செலுத்த முயலுகிறது. இதன் விளைவாக, அமெரிக்க தன்னுடைய
முந்தைய ஐரோப்பியக் கொள்கையைக் கைவிட்டு, தன்னையே பெரும் ஐரோப்பிய சக்தியாக பறைசாற்ற
முற்படுகிறது. இதற்காக அது பிரிட்டன், போலந்து போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஓரளவு இத்தாலி,
போர்த்துக்கல் போன்ற நாடுகளுக்கு, ஜேர்மனிய, பிரெஞ்சுச் செல்வாக்கைக் குறைக்கும் வகையில் ஆதரவு
கொடுத்து வருகிறது.
வாஷிங்டனுடைய மெளனமான ஆதரவும், தன்னுடைய கிழக்கு ஐரோப்பிய
நாடுகளுடனான நட்பும் பிளேயரை அரசியலமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என வற்புறுத்த பெருமளவில் வகை
செய்துள்ளது. ஆனால், அமெரிக்க முதலாளித்துவத்தில் அவர் கொண்டுள்ள நம்பிக்கை அவருடைய சொந்த அரசியல்
பிரச்சனைகளுக்கும் பெரும் மூலவளமாக உள்ளது.
தன்னுடைய சக்தியில் உள்ள அனைத்தையும் திரட்டி, பிளேயர் ஐரோப்பிய எதிர்ப்பு
பிரிவான ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளார். இதில் ரூபார்ட் மூர்டோக்கும் அடங்குவார். அரசாங்கம்
அவருடைய ஆதரவை நம்பித்தான் உள்ளது. ஆனால், அவர்களுக்கு இவர் போட்டுள்ள தீனி, அவர்களை மேலும்
இரையைக் கேட்க வைத்துள்ளது.
மூர்டோக்கினுடைய சண் செய்தித்தாள், பிரித்தானிய சுதந்திரக் கட்சி
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு நீங்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஆனால், பிளேயர்
அரசியலமைப்பில் கையெழுத்திடுவதற்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பைக் காட்டி வருகிறது. அவரை "பிரிட்டனைக்
காட்டிக் கொடுத்துவிட்டவர்" என்று சித்தரிக்கிறது.
ஒரு தலையங்கத்தில் அது கூறியது: "பிரஸ்ஸல்ஸிலிருந்து வெற்றியாளர் என அவர்
வரவேற்கப்படுவார் என்று டோனி பிளேயர் நினைத்தால், அத்தகைய எண்ணத்தை அவர் மறந்துவிடலாம்.
பிரான்சுடன் எத்தகைய போராட்டம் நடத்தியிருந்தாலும், ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு ஒரு பங்குதாரராக
இந்நாடு இருக்கும் என்ற உடன்பாட்டை அவர் ஏற்றுள்ளார்."
"நமக்கு இதன் விளைவைப் பொறுத்தவரை சந்தோசம் இல்லையென்றாலும், இந்த
உச்சி மாநாட்டில் இருந்து சில உறுதியான விளைவுகள் நிகழ்ந்துள்ளன. புதிய ஐரோப்பாவிற்கும் பழைய ஐரோப்பாவிற்கும்
இடையே உறுதியாகப் பிளவு உள்ளது. போலந்து தலைமையில், பழைய கம்யூனிஸ்டு நாடுகளின் எழுச்சி, அவர்களுடைய
புதிதாக வந்துள்ள வளைந்து கொடுக்கும் பொருளாதாரங்கள் பிரான்சும் ஜேர்மனியும் விரும்பும் இரும்புத் தளைக்குள்
அகப்பட்டுக்கொள்ளுவதை விரும்பவில்லை. அது ஐரோப்பிய ஒன்றியத்தின் வருங்காலத்திற்கு நல்ல அறிகுறியாகும்''
என்று சண் பத்திரிகை பிளேயருடன் உடன்பட்ட முறையில் கூறியது.
ஐரோப்பிய ஒன்றிய திட்டத்திற்கு சட்டரீதியான தன்மை இல்லாமை
இந்த அறிக்கைகள் ஐரோப்பாவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளின் ஆழத்தையும், இவற்றின்
மூலம் அமெரிக்கா உலகத்தைத் தன் விருப்பத்திற்கேற்ப கொண்டுவர வேண்டும் என்ற உந்துதலையும் குறிக்கின்றன.
இதன் விளைவாக, ஐரோப்பிய விரிவாக்கமும் ஒன்றிணைப்பும், ஒரு புதிய அரசியலமைப்பினால் வரவேற்கப்பட்டது
என்று கூறுவதைக் காட்டிலும், பிளவுகளையும் மோதல்களையும்தான் அதிகரித்துள்ளது.
இன்னும் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டம் ஐரோப்பிய மக்களிடையே
எந்த விதமான அரசியல் ஆதரவு அல்லது சட்டரீதியான தன்மையோ பெற்றிருக்கவில்லை என்பது
குறிப்பிடப்படவேண்டும். ஐரோப்பிய அரசாங்கங்கள் அனைத்துமே வெகுஜன சமூக அடித்தளத்தை
கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களை பிளேயர் அல்லது
ஷ்ரோடர் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சிகள் என்று இனம்பிரித்துக் காணவில்லை. அதுபோல்
மரபுவழியிலான வலது கட்சிகளோடும் தங்களை இனம் கண்டு கொள்ளவில்லை. இக்கட்சிகள் அனைத்துமே பெரு
வர்த்தகத்தின் அரசியல் பிரதிநிதிகளாகத்தான் அவர்களால் காணப்படுகின்றன. அவை முக்கிய நலன்புரி சேவைகளை
அழிக்கவேண்டும் என்ற உறுதியுடனும், தொழிலாளர் வர்க்கத்தை, பெரிய நிறுவனங்கள் நலன்களுக்காகப் பெருமளவு
சுரண்ட வேண்டும் என்ற கருத்தைத்தான் கொண்டிருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.
ஆளும் செல்வந்த தட்டினருக்கு எதிரான இந்த அரசியல் விரோதப்போக்கு மிகவும்
அதிகமான முறையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான நிலைப்பாடாகப் பரந்த அளவில் வெளிப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் இப்பொழுது சரியான முறையில் ஜனநாயகமற்ற முதலாளிகள் வட்டமாகத்தான்
கருதப்படுகிறது. ஆளுவோருக்கும் ஆளப்படுவோருக்கும் இடையே உள்ள இடைவெளியின் தன்மை உள்ள நிலை எப்படி
உள்ளது என்றால், ஐரோப்பியத் தேர்தல்கள் நடந்த சில நாட்களுக்குள், அதுவும் 45.3 சதவிகித வாக்காளர்கள்
மட்டுமே வாக்களிப்பில் கலந்துகொண்ட தேர்தலில், அதிலும் பெரும்பாலோர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிர்ப்புத்
தெரிவிக்கும் கட்சிகளுக்கு ஆதரவாகப் போட்டிருக்கும் நிலையில், புதிதாகச் சேர்ந்துள்ள நாடுகளில், மிகக்
குறைவான வாக்குப்பதிவு சராசரியாக 26 சதவீதம் ஆகவுள்ளபோது ஐரோப்பிய ஒன்றிய
சக்திகள் புதிய அரசியலமைப்பை ஏற்றுள்ளன. அதுவும் இந்த
நாடுகளின் சேர்க்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் இன்றைய சாதனைகளில் மிகப் பெரியது என்று கூறப்படுகிறது.
மிக உடனடியான முறையில், இந்த அரசியலமைப்பில் கையெழுத்திடப்பட்டது ஒரு தற்காலிக
வெற்றியாகத்தான் இருக்க முடியும். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு கொடுக்கும்
Guardian
கூட பிளேயரைப்பற்றிக் கீழ்க்கண்ட கருத்தை ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது:
"இப்பொழுதுள்ள பணி, மனத்தை உறைய வைக்கும் சோர்வுடைய ஒரு கருத்தாய்வு ஆவணத்தை, சாதாரண மக்கள்
வாழ்வில் அதிக பாதிப்பைக் கொடுக்காத ஒரு ஆவணத்தை, ஒரு விரோதப் போக்குடைய நாட்டை ஏற்குமாறு செய்தல்
ஆகும்." அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுமே பெருவர்த்தக சார்புடைய கொள்கைகளுக்காக வெறுக்கப்படும்
ஒர் அமைப்பின் அரசியலமைப்பிற்கு ஆதரவு தேடும் பணியில் உள்ளன. பிரிட்டன் உட்பட ஒன்பது நாடுகள், வாக்கெடுப்பு
நடத்துவதற்கு உறுதிமொழி கொடுத்துள்ளன. 2006 வரை இவ்வாக்கெடுப்பு நடைபெறுவதற்கில்லை என பிளேயர்
கூறியிருப்பது அவருடைய மனப் போக்கைக் காட்டுகிறது. அதாவது 25 உறுப்பு நாடுகளும் இணக்கம் தெரிவிப்பதற்கான
காலகெடு சில மாதங்களே இருக்கும் நிலையில் இத்தகைய ஆலோசனையை அவர் தெரிவித்துள்ளார்.
தங்களுடைய கொழுத்த செல்வந்த ஆதரவாளர்களுக்காகத் தங்கள் மக்களை வறியவர்காளாக்கும்
முக்கிய நோக்கத்தை உடைய அரசாங்கங்கள் மக்களிடத்தில் அதற்காக ஒப்புதல் பெறுவது என்பது முடியாத செயல்
ஆகும். ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பா முழுவதும் உழைக்கும் மக்களால் விரோதப் போக்கு உடையதாகத்தான்
கருதப்படும். ஆனால் இதுவே முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு முன்னேற்றமான மாற்றீடை வழங்குவதற்கு இயலாது.
ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் தங்களுடைய நலன்களை உறுதிப்படுத்துவதற்கு கண்ட ரீதியாக இணைந்து கொள்ளுவதற்கு
ஒரு முன்னோக்கைப் பெறுதல் இன்றியமையாதது ஆகும்.
பிரித்தானிய சுதந்திரக் கட்சி போன்ற பிற்போக்கு அமைப்புகளின் முயற்சியான
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான விரோதப் போக்கைப் பயன்படுத்தி தேசியவாதம், இனவாதம் போன்றவற்றில்
திசை திருப்பும் முயற்சிகளைத் தொழிலாளர்கள் எதிர்க்கவேண்டும்.
கண்டத்தின் ஒன்றிணைப்பிற்காக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை
உருவாக்குவதை தன் பணியாக தொழிலாள வர்க்கம் கொள்ளவேண்டும். அது ஒன்றுதான் உழைக்கும் மக்கள் ஒன்றாக
இணைந்து அமெரிக்க மற்றும் தமது சொந்த நாட்டு ஆட்சியாளர்கள் மேற்கொண்டுள்ள இராணுவவாத உந்துதலை எதிர்க்க
உதவுவதோடு, தாங்கள் போராடிப் பெற்ற சமூக நலன்கள், ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றை பன்னாட்டு
நிறுவனங்கள் மற்றும் பெருவர்த்தக அரசியல்வாதிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
Top of page |