World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan military's intrigues with LTTE rebel faction threatens ceasefire

தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிரணியினருடனான இலங்கை இராணுவத்தின் சதியாலோசனைகள் போர் நிறுத்தத்தை அச்சுறுத்துகின்றன

By K. Ratnayake
8 July 2004

Back to screen version

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற, அதன் முன்னால் கிழக்குப் பிராந்திய தளபதியான கருணா என்றழைக்கப்படும் வி. முரளீதரன் தலைமையிலான குழுவுக்கு இலங்கை இராணுவம் உதவியது அம்பலத்துக்கு வந்ததை அடுத்து, யுத்த நிறுத்த உடன்படிக்கை மேலும் மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகின்றது. கிழக்கில் இந்த இரு கோஷ்டிகளுக்கும் இடையிலான மோதல்கள் தொடரும் அதேவேளை, கருணாவுடனான இராணுவத்தின் கூட்டு தொடருமானால் மீண்டும் யுத்தத்திற்கு திரும்பும் நிலை ஏற்படும் என விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.

வன்னியை தளமாகக் கொண்ட வடக்கு தலைமைத்துவம், உயர் பதவிகளிலும் மற்றும் 2002 பெப்ரவரியில் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் இலாபங்களிலும் ஏகபோக உரிமை கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய கருணா குழு, கடந்த மார்ச் மாதம் விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து சென்றது. ஏப்பிரல் நடுப்பகுதியில் தீவின் மட்டக்களப்பு - அம்பாறை பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை விடுதலைப் புலிகள் துரிதமாக கைப்பற்றிய போதிலும், அது முதல் அந்தப் பிரதேசத்தின் இருளடர்ந்த மற்றும் தெளிவற்ற சூழ்நிலைகளின் கீழ் தொடர்ச்சியான படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

ஏப்பிரல் கடைப் பகுதியில் இருந்து, கருணாவிற்கு நம்பிக்கையான ஏழு பேர் உட்பட குறைந்த பட்சம் 21 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பல பொலிஸ் மற்றும் இராணுவப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு தகவல் கொடுப்பவர்கள் கொல்லப்பட்டதை போன்று, அரசாங்க கட்டுப்பாட்டிலான பிரதேசங்களில் ஆறு அரசாங்க உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கருணா போராளிகள் இலங்கை இராணுவத்தினதும் அதன் புலனாய்வுத் துறையினதும் உதவியுடன் தமது காரியாளர்களை படுகொலை செய்வதாக வன்னி தலைமைத்துவம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களை இராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் மீண்டும் மீண்டும் நிராகரித்து வந்துள்ளன.

எவ்வாறெனினும், ஜூன் 21ல், கிழக்கில் விடுதலைப் புலிகளின் மகளிர் அணிக்கு தலைமை வகிக்கும் கருணா அனுதாபியான நிலாவினி, வன்னி நகரமான கிளிநொச்சியில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் தோன்றினார். அவரும் கருணாவும் மற்றும் ஏனைய மூன்று மகளிர் அணி உறுப்பினர்களும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க) பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலான சியாத் என்பவரால் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக நிலாவினி விளக்கினார்.

ஆரம்பத்தில் நகரின் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான ஜே.ஏ.ஐ.சீ ஹில்டன் ஹோட்டலில் தங்கியிருந்த பின்னர், அவர்கள் இராணுவத்தின் பாதுகாப்பு மனை ஒன்றுக்கு மாற்றப்பட்டனர். நிலாவினி கூறியதன்படி, உயர் மட்ட இராணுவ புலனாய்வுத்துறை அலுவலர்கள் தொடர்ச்சியாக கருணாவை சந்தித்துள்ளனர். ஜூன் 13ம் திகதி கருணா நாட்டை விட்டு வெளியேறுவதாக அந்தப் பெண்ணுக்கு கூறியதை அடுத்து, அவர்கள் உறவினர் ஒருவருடன் தொடர்புகொண்டு வன்னிக்கு பயணித்த அவர்கள் மீண்டும் விடுதலைப் புலிகளுடன் இணைந்துகொண்டனர்.

இந்தக் கதையின் நோக்கங்கள் இன்னமும் தெளிவாகவில்லை. ஆனால், அலிஸார் மெளலான இந்தக் குழுவை கொழும்புக்கு அழைத்து வந்ததை ஏற்றுக்கொண்டதோடு, அதை தொடர்ந்து எழுந்த எதிர்ப்பின் மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். இராணுவத்தினரது மறுப்புக்கள் ஒருபுறம் இருக்க, கருணாவையும் மற்றும் பெண்களையும் "பாதுகாப்பான இடத்தில்" வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் குவிந்துவருகின்றன.

நிலாவினியின் பத்திரிகையாளர் மாநாட்டை அடுத்து, பீ.பீ.சீ சிங்கள ஒலிபரப்பில் பேசிய பாதுகாப்பு செயலாளர் சிறில் ஹேரத், "குற்றச்சாட்டுக்களை ஆணித்தரமாக நிராகரித்தார்." ஆனால் அவரது கருத்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரின் கருத்துடன் முரண்பட்டிருந்தது. ஜூன் 24 அமைச்சரவை ஊடகவியலாளர் மாநாட்டில், இராணுவத்தின் ஒரு பிரிவினர் கருணா குழுவினருக்கு ஆதரவளித்துவந்துள்ளனர் என்பதை ஏற்றுக்கொண்ட தகவல்துறை அமைச்சர் மங்கள சமரவீர, இது அரசாங்கத்தின் அனுமதியின்றி நடந்ததாக குறிப்பிட்டார்.

பீ.பீ.சீ அறிக்கையின் படி, "ஐயத்திற்கிடமின்றி இராணுவ அதிகாரிகள் இதில் தலையீடு செய்துள்ளனர். எங்களால் அதை மறுக்க முடியாது போனாலும், அரசங்கத்திற்கு தெரியாமலேயே இது நடந்துள்ளது," என சமரவீர பிரகடனம் செய்தார். இந்த விவகாரத்தையிட்டு அரசாங்கம் விசாரணை செய்யும் என விளக்கிய அவர், கருணாவுக்கு உதவுவதிலும் சமாதான முன்னெடுப்புகளுக்கு தடங்கல் ஏற்படுத்தவும் "மோசடியில்" ஈடுபட்டதாக ஐ.தே.மு தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை குற்றம்சாட்டியதன் மூலம் கவனத்தை திசை திருப்ப முயன்றார். விக்கிரமசிங்க எந்தவொரு தலையீட்டையும் நிராகரித்தார்.

ஊடக அறிக்கைகளை "திருத்துவதற்காக" சமரவீர அதே தினம் மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். "குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவாறு கருணா விடயத்தில் இலங்கை இராணுவத்தின் அதிகாரபூர்வமான தலையீட்டை தான் அனுமதிக்கவில்லை," என அவர் வலியுறுத்தனார். ஆயினும், இராணுவத்தில் உள்ள பிரிவுகள் சம்பந்தப்பட்டிருப்பதை அவர் நிராகரிக்கவில்லை. "கருணா தப்பிச் செல்ல உதவிய விடயத்திலும் அல்லது அதற்குப் பின்னரும் கூட இராணுவத்திற்கு எந்த தொடர்பும் இருக்கவில்லை" என பிரகடனம் செய்த பிரதி பாதுகாப்பு அமைச்சர் ரட்னசிறி விக்கிரமநாயக்க, இந்த விவகாரத்தை மூடிவிட முயற்சித்தார். "அரசாங்கத்திற்கு எதிரானவர்களின்" "பொய் பிரச்சாரம்" என அவர் குற்றஞ் சாட்டினார்.

எவ்வாறெனினும், ஜூன் 27 அன்று இராணுவ நிர்வாகத்துடன் நெருக்கமான தொடர்புகள் உள்ள சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பாதுகாப்பு பகுதி நிருபரான இக்பால் அத்தாஸ், அவர் தொடர்ச்சியாக எழுதும் பத்தியில்: "இராணுவம் கேனல் கருணாவுக்கும் அவரது குழுவினருக்கும் பாதுகாப்பு வழங்கியுள்ளதை இன்று சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு வெளிப்படுத்தக் கூடியதாகவுள்ளது. அவருக்கும் அவரது குழுவினருக்கும் அத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது என்ற உண்மை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை சண்டே டைம்ஸ் பத்திகையின் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அவர்கள் மிகவும் கவனமாக உள்ளனர்," என குறிப்பிட்டுள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டீ.பி) தலைவரும் அமைச்சரவை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கருணாவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தமை வெளிப்படுத்தப்பட்டதை அடுத்து அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் குற்றமற்ற மறுப்புக்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. தேவானந்தா, தான் பிளவுபட்ட விடுதலைப் புலி தலைவருடன் உரையாடியது மட்டுமன்றி, ஒரு அரசியல் கட்சியை அமைப்பது எப்படி என்பதையிட்டும் அவருக்கு ஆலோசனை கூறியதாக ஏற்றுக்கொண்டுள்ளார். ஈ.பீ.டீ.பி, தீவின் வடக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்துடன் நெருக்கமாக செயற்படுவதன் மூலம் பிரசித்தி பெற்ற ஒரு தமிழ் கட்சியும் ஆயுதக் குழுவுமாகும்.

ஒரு அபாயகரமான போட்டி

கருணாவுடனான இராணுவத்தின் கொடுக்கல் வாங்கல்களின் உண்மையான நோக்கம் தெளிவற்றதாக இருந்தாலும், என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பது பற்றி இராணுவ உயர் மட்டத்தினர் அறிந்திருக்கவில்லை என்பதை நம்பமுடியாது. கருணாவின் போராளிகள் வன்னியைத் தளமாகக் கொண்ட விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தின் காரியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்ற அதே சமயம், மிகக் குறைந்தபட்சத்திலேனும் இராணுவம் அல்லது அதன் ஒரு பிரிவு அவருக்கு "பாதுகாப்பு" அளித்துள்ளது.

இராணுவத்தின் நடவடிக்கைகள், தற்போதைய யுத்த நிறுத்தத்தையும் மற்றும் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளையும் கீழறுக்குமளவுக்கு ஐயத்திற்கிடமின்றி தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழ் மக்களின் "ஏக பிரதிநிதிகள்" என்ற உரிமைகோரலை சவால் செய்வதோடு, தமது போராளிகளையும் அலுவலர்களையும் படுகொலை செய்யும் ஒரு எதிர்க் குழுவுடன் இராணுவம் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ள இந்த சூழ்நிலையை விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தால் வரையறையற்று பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்பது தெளிவானதாகும்.

இலங்கையை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளும் ஆற்றல்கொண்ட "கருணா விவகாரத்தை" பற்றி தெளிவாக அக்கறைகொண்ட நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹெயிம், கடந்த வாரம் ஒரு நான்கு நாள் விஜயத்திற்காக தீவிற்கு மீண்டும் வருகைதந்தார். ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அவரது சுதந்திரக் கூட்டமைப்பு ஏப்பிரல் 2 தேர்தலில் ஐ.தே.மு வை தோற்கடித்ததை அடுத்து, ஏப்பிரல் கடைப்பகுதியில் பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளில் மத்தியஸ்தம் வகிக்கும் நோர்வேயின் பாத்திரத்தை மீளத்தொடங்குவதற்காக அழைப்புவிடுத்தார்.

ஜூன் 30ம் திகதி விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வனை சந்தித்த சொல்ஹெயிம், புதிய சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான அடித்தளத்தை அமைப்பதற்கான தடைகள் அகற்றப்பட்டிருக்கவில்லை என பிரகடனம் செய்தார். அது ஏன் என்பதை மூடி மறைக்காது விளக்கிய தமிழ்செல்வன், தனது ஊடக அறிக்கையில்: "இலங்கை ஜனாதிபதியும் அரசாங்கமும் யுத்தநிறுத்த உடன்படிக்கை பற்றியும் சமாதானப் பேச்சுக்கள் பற்றியும் கடும் அக்கறை கொண்டிருப்பார்களேயானால், அவர்கள் கருணாவுக்கு புகலிடம் கொடுப்பதையும் மற்றும் மட்டக்களப்பில் உள்ள சில வஞ்சகர்களை திருப்திபடுத்தும் வகையில் கொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் ஆதரவளிப்பதையும் நிறுத்த வேண்டும்... இந்த நிலைமை தொடர்வதற்கு அனுமதிக்கப்படுமாயின், அது யுத்த நிறுத்தத்தையும் முழு சமாதான முன்னெடுப்புகளையும் ஆபத்துக்குள் தள்ளிவிடும்," என பிரகடனப்படுத்தினார்.

ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், கடந்த வார சண்டே டைம்ஸ் பத்திரிகையில், விடுதலைப் புலிகளின் பிரதிபலிப்பு முற்றிலும் எச்சரிக்கையானது என குறிப்பிட்டிருந்தார். விடுதலைப் புலிகள் கருணாவை கையளிக்குமாறு கோரவில்லை. "விடுதலைப் புலிகளின் பிரதான முறைப்பாடு, தாக்குதல்களை மேற்கொள்வதில் கருணா குழுவுடன் இராணுவத்திற்கு உள்ள கூட்டைப் பற்றியதாகும். விடுதலைப் புலிகள் சுட்டிக்காட்டியுள்ளவாறு, இது மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் வழமைநிலமையை உருவாக்குவதில் தடைகளை ஏற்படுத்தியுள்ளது," என அவர் எழுதியுள்ளார்.

அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நட்பைப் புதுப்பிக்க சொல்ஹெயிம் முயற்சித்து வருகின்ற அதே வேளை, இரு சாராரும் சமாதான முன்னெடுப்புகளை பாதாளத்துக்குள் தள்ளாமல் பார்த்துக்கொள்வதை அமெரிக்கா விரும்புகிறது. விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த அமெரிக்க தூதர் ஜெப்ரி லன்ஸ்டட், "கிழக்கு நிலைமைகள் கட்டுப்பாட்டை மீற அனுமதிக்கக் கூடாது" என அவர்களை எச்சரித்தார். தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அதிகரித்துவரும் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை கீழறுக்க அச்சுறுத்தும் நாட்டின் 20 வருடகால யுத்தத்திற்கு முடிவுகட்ட அமெரிக்கா நெருக்கிவருகின்றது.

ஜூலை 1ம் திகதி சொல்ஹெயிம் உடனான பேச்சுவாத்தைகளின் பின்னர், "கிழக்கு மாகாணத்தில் கருணா குழுவுக்கு ஆதரவான இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் அதிகாரமளித்துள்ளது என்ற விடுதலைப் புலிகளின் பகிரங்க குற்றச்சாட்டுக்களை" நிராகரித்து மிகக் கவனமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தின் எந்தவொரு தலையீட்டையும் நிராகரிக்கும் இந்த அறிக்கை, சேதத்தை கட்டுப்படுத்தும் ஒரு ஊடுருவல் பயிற்சியாக இருந்த போதிலும், இராணுவத்துக்கும் கருணாவுக்கும் இடையில் தொடர்புகள் இருந்திருக்கலாம் என்பதை ஆணித்தரமாக ஒதுக்கித் தள்ளவில்லை.

தற்போதைய சூழ்நிலையில் இந்த சம்பவங்களில் குமாரதுங்கவின் துல்லியமான பாத்திரம் தெளிவாகவில்லை. ஆனால், முப்படைகளின் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் நடப்பது என்ன என்பதையிட்டு எதுவுமே தெரியாது என்பது சாத்தியமற்ற ஒன்று என்பது தெளிவு. உண்மையில், மே மாத பிற்பகுதியில் குமாரதுங்க வழமைக்கு மாறான நடவடிக்கை ஒன்றை எடுத்தார். "பாதுகாப்பு நிலைமைகளை அபிவிருத்து செய்வதற்காக" இராணுவ அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.எச்.எஸ் கோட்டேகொடவை கிழக்கு மாவட்டத்தில் அனைத்து நடவடிக்கைகளுக்குமான தளபதியாக நியமித்தார். இந்தப் பிராந்தயத்தில் உள்ள இராணுவ நிலைகளுக்கு உடனடியாக விஜயம் செய்த கோட்டேகொட, கடமையில் உள்ள அனைவரும் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு கட்டாயமாக கட்டுப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

குறிப்பிடத்தக்க வகையில், லெப்டினன்ட் ஜெனரல் எல்.பி பலகல்ல பதவியில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து கோட்டேகொட தளபதியாக பதிவியேற்றார். "லெப்ட்டினன்ட் ஜெனரல் சாந்த கோட்டேகொடவின் கட்டளைகளின் கீழ், இலங்கை இராணுவம் தொடர்ந்தும் யுத்த நிறுத்தத்திற்கு கட்டுப்பட்டிருக்கும்" என்ற குமாரதுங்கவின் அறிக்கையை, கொழும்பு ஊடகங்கள் பலகல்லவை இகழ்ந்துரைக்கும் விதத்தில் அர்த்தப்படுத்தின. அது பேனா நழுவியதிலும் பார்க்க அதிகமானது. இராணுவ புலனாய்வுத் துறையின் முன்னைய தலைவரும் 1980களின் பிற்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆயுதபாணிகளை இராணுவத்தின் பக்கம் இருந்து போராடுவதற்காக சேர்த்துக் கொண்டவருமான பலகல்ல, கிழக்கில் சதியில் ஈடுபட்டுள்ளார் என குமாரதுங்க தெளிவாக அறிந்திருந்தார் அல்லது சந்தேகித்தார்.

ஜூன் 30 அன்று, தனது பிரிவுபசார உரையில், விடுதலைப் புலிகளின் "குற்றச்சாட்டுக்களை" பலகல்ல முற்றாக நிராகரித்தார். ஆனால், மார்ச் மாதம் கருணா குழு பிரிந்து சென்றபோது, அவர் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவதற்காக இந்தப் பிளவை பயன்படுத்துவதில் அக்கறை செலுத்தினார். இந்தியாவைத் தளமாகக் கொண்ட ரெடிப் டொட் கொம் (rediff.com) வலைத் தளத்தில் ஏப்பிரல் 5 வெளியான பேட்டியில்: பிளவு தொடருமானால், அது அவர்களை பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகம் கிடையாது. கருணா பிரபாகரனை (விடுதலைப் புலி தலைவர்) தொடர்ந்தும் எதிர்ந்துவந்தால் நிச்சயமாக அது அவர்களுக்கு பிரச்சினையானதாக இருக்கும். நிச்சயமாக அவர்கள் பலவீனமான ஒரு சக்தியாக இருப்பார்கள்," என அவர் தெரிவித்தார்.

வெறுமனே கருணா குழு பற்றிய விடயத்தில் மட்டுமன்றி, சமாதான முன்னெடுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளையிட்டும் இராணுவத்தில் பிளவுகள் கூர்மையடைந்திருப்பதை இது அம்பலப்படுத்துகிறது. இந்த நிலைமையை உருவாக்குவதில் குமாரதுங்க பெரும் பங்காற்றியுள்ளார்.

குமாரதுங்க, ஏப்பிரல் 2 தேர்தல்களுக்கு முன்னதாக, 2002ல் முன்னைய ஐ.தே.மு அரசாங்கத்தால் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கீழறுப்பதற்காக, இராணுவத்துடனும், விசேடமாக பலகல்லவுடனும் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போன்ற சிங்களத் தீவிரவாதக் கட்சிகளுடனும் நெருக்கமாக செயற்பட்டுவந்தார். சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் நாட்டின் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்குவதோடு விடுதலைப் புலிகளுக்கு அளவுகடந்த சலுகைகளையும் வழங்குவதாக முன்னைய பிரதமர் விக்கிரமசிங்கவை அவர் மீண்டும் மீண்டும் குற்றஞ் சாட்டினார்.

கடந்த நவம்பரில் குமாரதுங்க அரசியலமைப்பு சதிக்கு சமமான ஒரு நடவடிக்கையை முதலாவதாக மேற்கொண்டார். இராணுவத்தினதும் ஜே.வி.பி யினதும் ஆதரவுடன், அவர் பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுக்களின் அதிகாரத்தை அபகரித்ததுடன், அவசரகால நிலைமையையும் பிரகடனப்படுத்த முனைந்தார். வாஷிங்டனதும் மற்றும் புது டில்லியினதும் நெருக்குவாரங்களை அடுத்து மட்டுமே அவர் பின்வாங்கினார். மூன்று மாதங்களாக தொடர்ந்த அரசியல் விட்டுக்கொடுப்பற்ற நிலைமையின் பின்னர், பெப்பிரவரியில் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தை பதவி விலக்கிய அவர், ஏப்பிரல் 2 புதிய தேர்தல்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க), ஜே.வி.பி மற்றும் பல சிறிய கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐ.தே.மு வை விட அதிகளவிலான ஆசனங்களை வென்ற போதிலும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தல் முடிந்தவுடன், சமாதான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்கக் கோரும் பெரும் வர்த்தகர்கள் மற்றும் பெரும் வல்லரசுகளின் நெருக்குவாரத்திற்கு குமாரதுங்க உடனடியாக முகம் கொடுத்தார். நாட்டுக்கு நிதி உதவி வழங்குபவர்கள், யுத்த நிறுத்தமும் சமாதான முன்னெடுப்புகளும் தொடர்ந்தால் மட்டுமே 4.5 பில்லியன் டொலர் நிதியுதவி கையளிக்கப்படும் என தெளிவாக குறிப்பிட்டனர்.

குமாரதுங்க தலைகீழாக மாறி நோர்வே மத்தியஸ்தர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவ்வாறு செய்ததன் மூலம், அவர் தனது முன்னைய கூட்டாளிகளான இராணுவம் மற்றும் சிங்கள பேரினவாத குழுக்களின் எதிர்ப்பை தூண்டிவிட்டுள்ளார். ஜே.வி.பி அரசாங்கத்தில் அங்கம் வகித்த போதிலும், அரசாங்கம் வடக்கு கிழக்குக்கு ஒரு இடைக்கால நிர்வாக சபையை அமைக்கும் விடுதலைப் புலிகளின் பிரேரணையின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை தொடங்குமானால் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும் என எச்சரித்துள்ளது. இராணுவத்தின் ஒரு பிரிவு யுத்த நிறுத்தத்தை பாதாளத்தில் தள்ள செயற்படுவதை கருணாவுடனான இராணுவத்தின் சதியாலோசனைகள் அம்பலப்படுத்துகின்றன.

கருணா விவகாரத்தை சூழவுள்ள நாசவேலைகளும் சதித்திட்டங்களும், இலங்கை ஆளும் கும்பலின் எந்தவொரு பகுதியினரும் வெகுஜனங்களின் தேவைகளையும் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யவதன் பேரில், ஒரு முன்னேற்றமான அடிப்படையில் நாட்டின் அழிவுகரமான உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவுகட்ட இலாயக்கற்றுள்ளனர் என்பதை வெளிப்படுத்துகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved